அத்தியாயம் 🌾 6 :
“ஹாய் வில்சென்.”
தனக்கு எதிரில் ஏமாற்றம் தந்த கோப முகத்தோடு நின்றிருந்தவனை ஆர்பாட்டமாய் அழைத்தான் பார்த்திபன்.
“இந்த முறையும் என்கிட்ட தோத்துட்டியே வில்லு…” என்று கேலியாக உச்சுக்கொட்டிய பார்த்திபன் நொடியில் தன் உடல் மொழியில் விறைப்புத் தன்மையையும், கண்களில் கடுமையையும் கொண்டு வந்திருந்தான்.
“என்கிட்ட மோதி ஜெயிக்க உன் அப்பனாலும் முடியாது. என் ஆளை விலைக்கு வாங்கி, என் முதுகில் குத்த பார்த்து நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட… இனி இந்த ஃபீல்டில் நீயெப்படி நிக்குறன்னு நான் பார்க்கிறேன்” என்று கடித்த பற்களுக்கிடையேக் கூறியவன் சற்று தள்ளி நின்றிருந்த டெல்வினை நோக்கி பார்வையை பதித்தான்.
பார்த்திபனின் பார்வைக்கான அர்த்தம் விளங்கிய டெல்வின் நான்கே அடியில் அவனை நெருங்கி கையில் சில காகிதங்களை அளித்தான்.
“உன் கம்பெனியில் உன்னைத்தவிர மற்ற ஷார்ஹோல்டர்ஸ் ஷார்ஸ் மொத்தமும் வாங்கிட்டேன். இப்போ உன்னைவிட டென் பெர்சன்ட் அதிகம். சோ, உன்னைவிட எனக்கு அங்கு அதிகாரம் அதிகம். இனி ஒவ்வொன்னும் என்னைக் கேட்டுத்தான் நீ முடிவெடுக்கணும். நீயா உன்னோட ஷார்ஸ்யையும் என்கிட்ட கொடுக்க வைக்கிறேன்” என்று ஒருவித பழிவாங்களுடன் கூறிய பார்த்திபன் அந்த காகிதங்களை வில்லின் முகத்திற்கு நேரே விசிறி எரிந்தான்.
வில் தனது பங்குதாரர்களுக்கு அழைத்து என்னை கேட்காது எப்படி பார்த்திபனுக்கு கொடுக்கலாமென்று சினம் கொள்ள அனைவரும் ஒன்று போல் பார்த்திபனை பகைத்துக்கொள்ள முடியாதென்று கூற, வில்லிற்கு தான் மொத்தமாக பார்த்திபனிடம் தோற்ற உணர்வு.
பார்த்திபனின் கார் நேராக அவனது மென்பொருள் அலுவலகத்திற்கு சென்றது.
வேங்கையின் வேகம்… எதிர்பட்ட ஊழியர்கள் யாரையும் கருத்தில் கொள்ளாது புயலென கடந்து சென்றான்.
தன்னுடைய அறையில் இருக்கையில் அமர்ந்தவன்…
“கால் ஹிம்.”
பார்த்திபனின் சீற்றத்தை கண்ட டெல்வின்…
“கொஞ்சம் பொறுமையா…”
“டூ… வாட் ஐ செட்.” சிங்கமென கர்ஜித்தான்.
அடுத்த நொடி பார்த்திபன் அழைக்கச்சொல்லிய நபரான நிகேத்தன் அவனின் முன்பு நின்றிருந்தான்.
எதற்காக அழைத்தான் என்பது தெரியாது நிக் பார்த்திபனையே பார்த்தவாறு இருக்க… அவனிடம் டெல்வின் ஒரு காகிதத்தை நீட்டினான்.
அதனை வாங்கி படித்த நிக்,
“சார் என்னதிது?” என்று அதிர்ந்து வினவினான்.
“வில்சன் உங்களுக்கு வேலை கொடுக்க ரெட் கார்பெட் போட்டு காத்திருக்கான்” என்று நக்கலாகக் கூறினான்.
தன் கையிலிருக்கும் டெர்மினேட் லெட்டரை ஒருமுறை பார்த்த நிக்…
“அம் சாரி சார்” என்று சொல்ல… அவனை தீயாக முறைத்தான் பார்த்திபன்.
“நீங்க செய்ததுக்கு பெயர் நம்பிக்கை துரோகம். அதுக்கு வெறும் சாரி மட்டும் போதாது” என்ற பார்த்திபன் டெல்வினிடம் கண் காட்ட… மற்றொரு காகிதத்தை நிகேத்தனிடம் டெல்வின் நீட்டினான்.
‘இதிலென்ன குண்டோ’ என்று வாங்கி பார்த்த நிக்கிற்கு இதயமே நின்று போனது.
“சார் இதெல்லாம் அநியாயம்.” குரலுயர்த்தினான்.
“எது அநியாயம்… நீ செய்ததைவிடவா? நியாயம் அநியாயம் பற்றி பேசவெல்லாம் உனக்கு தகுதி கிடையாது” என்று மேசையைத் தட்டி தன் கோபத்தை வெளிப்படுத்தினான் பார்த்திபன்.
“உனக்கு ஒன்னு தெரியுமா? அந்த புராஜெக்ட் என் கைக்கு வந்தாச்சு. அப்புறம் இருந்தும் உனக்கெதுக்கு இந்த நிலைன்னா, கோடிங் அமௌண்ட்டை அந்த வில்லிற்கு லீக் செய்தததுக்கு… சரியான நேரத்தில் உன்னை வில்லுடன் பார்த்ததை டெல்வின் என்கிட்ட சொல்லலன்னா முதல் முறையா நான் தோல்வியை பார்த்திருப்பேன்.
என் தோல்விக்கு காரணமான இடத்தில் நீ இருந்திருப்ப. அதுக்குத்தான் உனக்கு இந்த தண்டனை.”
அன்று அலுவலகத்தில் இருந்த பார்த்திபனுக்கு, லீனாவின் பிறந்தநாள் பார்டிக்கு செல்லும் முன்பு டெல்வின் அழைத்து சொல்லிய விஷயம் இதுதான்.
நிகேத்தன் வில்லினை நேரில் சந்தித்திருப்பதை டெல்வினே தன் கண்களால் கண்டான். அதனை உடனே பார்த்திபனுக்கு அழைத்து சொல்ல விடயம் என்னவாக இருக்குமென்று பார்த்திபன் எளிதில் யூகித்திருந்தான்.
அதன்படி தன் குழுக்களுடன் ஆலோசித்து கோட் செய்த மதிப்பை மாற்றி தானே தன் கைப்பட தயாரித்த பேப்பர்ஸை அனுப்பி வைத்தான்.
பார்த்திபன் கணித்தது போலவே வில் பார்த்திபன் முதல் கோட் செய்ய வைத்திருந்த மதிப்பை விட இரண்டு புள்ளிகள் குறைவாக கோட் செய்திருந்தான்.
அந்நேரம் டெல்வினிற்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துக்கொண்டான்.
வில் முதுகில் குத்த தீர்மானித்த பிறகு பார்த்திபனுக்கு இது தன்மான பிரச்சனையாக மாறிப்போனது. அதனால் தன்னை அழிக்க நினைத்தவர்களை தானே தன் கையால் அழிக்க முடிவு செய்தவன், வில்லைப்பற்றி ஆதி முதல் அனைத்தும் தெரிந்து… அவனின் தொழிலிலேயே கை வைத்தான்.
வில்லின் பங்குதாரர்களிடம் இருபது பத்து என பங்குகள் பிரிந்திருக்க… அனைத்தையும் மொத்தமாக கைப்பற்றி வில்லுடைய அலுவலகத்தையே தனக்கு கீழ் கொண்டு வந்து வில்லின் அதிகாரத்தை ஒன்றுமில்லாமல் செய்தான்.
அனைத்தையும் பார்த்திபனின் வாயினாலேயே தெரிந்துகொண்ட நிக்கிற்கு மூச்சு நின்று விடும் போலிருந்தது.
வில்லிற்கே இந்த நிலையென்றால் தனக்கும் இது ஏற்றத் தண்டனை தானென்று அவனின் மனம் கூறியது.
இருப்பினும் கையிலிருந்த காகிதத்தை ஒருமுறை பார்த்து பெருமூச்சு விட்ட நிக்,
“இதை கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே!” எனக் கேட்டான். அக்காகிதத்திலிருந்த விடயம் அப்படி. அவனுக்கு சுமக்க முடியா மலைப்பாக இருந்தது.
“இது இங்க வேலையில் ஜாயின் பண்ற எல்லாருக்கும் தான் நிகேத்தன். ஏன் உங்களுக்குத் தெரியாதா? ஜாயின் பண்ணும் போது டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் படிக்காமலா சைன் பண்ணீங்க?” பார்த்திபனின் குரலில் ஏகத்துக்கும் நக்கல்.
அவன் என்ன கண்டான். பெரிய கம்பெனியில் வேலையென்றதும் எதையும் படித்து பார்க்காமல் அல்லவா கையெழுத்திட்டிருந்தான்.
தவறிழைத்து வேலையை விட்டு நீக்கும் நிலை வந்தால், ஐந்து லட்சம் சிங்கப்பூர் டாலர் அபராதமாக நிர்வாகத்திற்கு அளிக்க வேண்டும். இதனை அடக்கிய காகிதம் தான் தற்போது நிக்கின் கையில் உள்ளது.
ஐந்து லட்சம் சிங்கப்பூர் டாலர் என்றால் சாதாரணமா என்ன? இந்திய மதிப்பிற்கு இரண்டு கோடி எழுபத்தி ஆறு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து நானூற்று அறுபத்தி ஒன்பது ரூபாய் நாற்பது பைசா(2,76,65,469.40). நிக்கிற்கு தலை சுற்றிக்கொண்டு வந்தது.
பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு நிக் பார்த்திபனை நோக்கி மன்னிப்பு வேண்டி நின்றான்.
“இந்த பணம் எனக்கு இமைக்கும் நேர வருமானம். நான் நினைத்தால் இது வேண்டாம்னு உன்னை விட்டுடலாம். ஆனால் உன்னை இப்படியே விட்டால் உனக்கு அடுத்து இன்னொருவன் முளைப்பான். இனி இங்கு வேலை செய்யும் யாருக்கும் உன்னை மாதிரி செய்யும் நினைப்புக்கூட வரக்கூடாது” என்றவன், “என்ன பணம் கொடுக்குறியா இல்லை வன் இயர் ப்ரிசன்ல ஸ்டே பண்ணப்போறியா?” என இரக்கமே இல்லாது வினவினான்.
டெல்வினிற்கு தான் பார்த்திபனின் இந்த முகம் கலவரமாக இருந்தது.
‘நல்லாத்தான் இருக்கான். அப்பப்போ இப்படி அரக்கனா மாறிடுறானே!’ பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான்.
“என்ன டெல்வின் ரொம்ப சூடா இருக்கப்போல… சில்லுன்னு ஜூஸ் ஏதும் வேண்டுமா?”
பார்த்திபனின் கேள்வியில் பதறிய டெல்வின்… “நானில்லை” என்று வேகமாக அவ்வறைவிட்டு வெளியேறினான்.
அதில் முகத்தில் தோன்றிய புன்னகையை இதழுக்குள் ஒளித்தான்.
“ம்ம்… சாய்ஸ் இஸ் யூர்ஸ்?”
பார்த்திபனின் குரலில் குனிந்திருந்த தலையை நிமிர்த்திய நிக்கின் கண்கள் கசிந்தன.
இரண்டு கோடிக்கு எங்கு போவான் அவன். நடுத்தர வர்க்கத்தில் சேர்ந்த அவனின் குடும்பம் அவனால் தான் சற்று மேலே வந்து கொண்டிருக்கிறது. மேலும் உயர்த்தவே வில்லின் சூழ்ச்சி வார்த்தைகளை நம்பி அவனுக்கு உதவியாக நடந்து கொண்டான். புராஜெக்ட் கைக்கு வந்த பின்னர் தான் உனக்கு பணம் என்று சொல்லியிருந்த வில், இந்நிலையில் நிக்கிற்கு பணம் கொடுப்பதும் சந்தேகம் தான். அத்தோடு இரண்டு கோடியெல்லாம் அவனால் தற்போது நினைத்துக்கூட பார்க்க முடியாது.
மௌனமாக நின்றிருந்தவன், “நான் ஜெயிலுக்கே போறேன் சார்” என்று உள்ளடங்கிய குரலில் கூறினான்.
“வெல்” என்ற பார்த்திபன், யாருக்கோ அழைப்பு விடுக்க, அடுத்த இரண்டு நிமிடங்களில் நிக் கைது செய்யப்பட்டான்.
அலுவலகத்தில் நிக்கின் பேச்சு அடங்க சில மணி நேரங்கள் ஆனது. அதனூடே பார்த்திபனின் மீதிருந்த பயத்தின் அளவும் ஊழியர்களிடையே அதிகமாகியிருந்தது.
பார்த்திபன் வேலையில் கவனம் பதித்திருக்க…
“சார்… நியோ உங்களை பார்க்க வந்திருக்கார்” என்று டெல்வின் வந்தான்.
“இப்போ இவன் எதுக்கு?” என்று யோசித்தாலும் நியோவை உள்ளே அனுமதித்தான்.
“வாங்க நியோ” என்று வரவேற்ற பார்த்திபனின் விழிகள் நியோவை ஆராய்ந்தது.
‘அப்போ இவன் வில்லிற்க்காக வந்திருக்கான்’ என்று நொடியில் யூகித்தான்.
“என்னை அழிக்க நினைத்தால்… அந்த நினைப்பு மூளைக்குள் உதிக்கும் முன்னவே நான் அவங்களை அழிச்சிடுவேன். அதற்கு நீதான் எக்சாம்பிள்” என்ற பார்த்திபன் நியோவை உட்காரவும் சொல்லவில்லை, அவன் வந்த விஷயம் என்னவென்றும் கேட்கவில்லை.
தன் யூகம் எப்போதும் சரியாக இருக்குமென்ற எண்ணம் பார்த்திபனிடம்.
“அப்போ நான் வந்த விஷயம் உனக்குத் தெரியும்?!” நியோவின் கேள்விக்கு பார்த்திபனிடம் பதிலில்லை.
“இதோட நிறுத்திக்கோ பார்த்திபன்.” மிரட்டும் தொணி நியோவிடம்.
“நீ போகலாம்.” அவ்வளவுதான் என்று நியோவை வெளியேறக் கூறினான் பார்த்திபன்.
“என் தம்பியை விட்டுடு.”
“அது… அப்படி கெஞ்சு. இது கேக்குறதுக்கு நல்லாயிருக்கே!
அதவிட்டுட்டு, கெஞ்ச வந்து மிரட்டுனா நாங்க பயந்திடுவோமா?
உனக்காகத்தான என் புராஜெக்ட்டை தட்டி பறிக்க நினைத்தான் உன் தம்பி. என்னை ரொம்ப சாதரணாமா எடை போட்டுட்டான். இதுதான் அவனுக்கு ஆரம்பம்” என்ற பார்த்திபன், “நீயென்னடா சின்னப்பையன் மாதிரி எங்கம்மாகிட்ட உன்னை அடிச்சிட்டன்னு கம்பலைன்ட் பண்ணியிருக்க” எனக்கூறி சிரித்தான்.
பார்த்திபனின் சிரிப்பு எரிகிற தீக்கு எண்ணெய் வார்ப்பது போலிருந்தது நியோவிற்கு.
‘இவனை ஒன்றுமே செய்ய முடியவில்லையே.’ மனம் குமைந்தான்.
“என்ன என்னை எதுவும் செய்ய முடியலன்னு கஷ்டமா இருக்கா?” நியோவை கேட்ட பார்த்திபன்,
“இதுக்கு அப்புறம் இன்னும் கஷ்டமா இருக்கும்” என்றான்.
பார்த்திபனின் கண்களில் தெரிந்த நெருப்பில் நியோ தானாக வெளியேறினான்.
“என்கிட்ட வந்து மூக்கு உடையுறதே இவனுக்கு வேலை” என்று சொல்லிக்கொண்ட பார்த்திபன் இருக்கையின் பின்னால் நன்கு சாய்ந்தமர்ந்து சற்று ஆசுவாசமாக கண்களை மூடினான்.
வழக்கம்போல் மூடிய அவனது விழிகளுக்குள் அவளின் விழிகள்.
படக்கென கண்களைத் திறந்தவன்,
“சீக்கிரம் இந்த கண்ணாட்டியை கண்டு பிடிக்கணும். கண்ணை மட்டும் காட்டி மனுசனை கொல்லுறா(ள்)” என்று புலம்பியவன் அடுத்து வேலையில் கவனம் செல்லாது வீட்டிற்கு புறப்பட்டான்.
பார்த்திபன் வீட்டிற்கு வந்த சமயம் மங்கை சோகமே உருவமகா அமர்ந்திருந்தார்.
காரணம் தெரிந்த தேவராஜன் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் நிலையை விடுத்து,
“இன்னமும் அவன் நினைப்பு அண்ணன்னு உன் மனசுல இருக்குல. என்னைவிட அவன் உனக்கு முக்கியமா போயிட்டான் அப்படித்தானே. அப்போ வேண்டா வெறுப்பாத்தான் என்னோட இருக்கியா?” என்று வார்த்தைகளை சிதற விட்டார்.
அன்னையின் முகத்தை பார்த்தபடியே உள் வந்த பார்த்திபன் தந்தையின் பேச்சில் அப்படியே நின்றுவிட்டான்.
“என்ன பேசறீங்க நீங்க… உங்களோட இருக்கேங்கிறதுக்காக என் கூடப்பொறந்த பொறப்பை நினைக்காம இருக்க முடியுமா? வருசத்துல ஒருநாள் என் அண்ணனை நினைச்சு வெசனப்படுறேன் அது உங்களுக்குப் பொறுக்கலையா?” என சினந்து கேட்ட மங்கை…
“எங்க அண்ணா பொறந்த நாளான இன்னைக்கு… நீங்க என்னென்னலாம் செஞ்சு கொண்டாடியிருக்கீங்கன்னு நினைச்சுப் பாருங்க. எப்பவோ செஞ்ச தப்பை வருஷங்கள் கடந்தும் தூக்கி சுமந்துக்கிட்டு திரிஞ்சா நமக்குத் தான் கனக்கும்” என்றார்.
தேவராஜிடம் அமைதி மட்டுமே.
புடவை தலைப்பால் தன் கண்களை ஒற்றிக்கொண்ட மங்கை…
“உங்க மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க உங்க வார்த்தையை மீறி என் அண்ணன் சொல்லியிருப்பாருன்னு நீங்க நினைக்கிறீங்களா?
என் அண்ணனை விடுங்க, உங்க ஃப்ரெண்ட் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?” என்று நலிந்த குரலில் வினவிய மங்கை…
“என் அண்ணனை விடவே நீங்க தான் எனக்கு முக்கியம். அதனால தான் இத்தனை வருஷமாகியும் என் அண்ணனைப் பற்றி தெரிஞ்சிக்காம இருக்கேன்” என்றார்.
அந்த வார்த்தை தேவராஜ்ஜிற்கு இதயத்தில் அடித்த வலியை கொடுத்தது.
அவர்களின் பேச்சின் அடி பார்த்திபனுக்கு புரியவில்லை என்றாலும்,
தன் அன்னையின் அண்ணனுக்கும் தன் தந்தைக்கும் ஏதோ பிரச்சனை. அதனால் சொந்த ஊரே வேண்டாமென்று தந்தை இருக்கின்றார். அத்தோடு அவர்களுக்கும் தங்களுக்கும் எவ்வித உறவும் தற்போதில்லை என்பதை அவர்களின் பேச்சுக்களின் மூலம் புரிந்துகொண்டான்.
‘அப்படியென்ன பிரச்சனையா இருக்கும்?’
‘அன்னையின் பேச்சினை வைத்து பார்க்கும்போது அவர்களும் நல்லவர்கள் தான் போலிருக்கு. அப்புறம் எதனால் இந்த பகை?’ அவனின் மனம் சிந்தித்தாலும் தற்சமயம் அதனை புறம் தள்ளினான்.
இருவரும் பேச்சற்று மௌனித்திருக்க… அப்போதுதான் வந்தவன் போல், “மாம் அண்ட் டாட்” என்று அழைத்துக்கொண்டே அவர்களை நெருங்கினான்.
அவர்கள் பேசியதை தான் கேட்டதுபோல் பார்த்திபன் காட்டிக்கொள்ளவே இல்லை.
மகனை கண்டதும் தன் முகத்தை சீராக்கிய மங்கை இப்போது பேசும் மன நிலையின்றி,
“வாப்பா சாப்பிடு” என்றவாறு கிச்சனிற்குள் புகுந்து கொண்டார்.
செல்லும் மனைவியின் முதுகையை வெறித்த தேவராஜன் ‘அதிகமாக பேசிவிட்டோமோ?’ என்று வருந்த,
“ரொம்ப பேசிட்டீங்கப்பா! உங்களுக்குத்தான் உறவுன்னு யாருமில்லை. ஆனால் அம்மாக்கு அண்ணா இருக்காங்க போல. அவர் இருந்தும் உங்களை மட்டுமே நம்பி இத்தனை வருஷங்கள் உங்களோட இருந்த அம்மாவை நீங்க அப்படி கேட்டிருக்கூடாது டாட்” என்றவன் எழுந்து தன்னறை நோக்கி அடி வைத்தான்.
‘இவன் கேட்டுட்டானா? மகனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதா? அங்கு போகணும் சொல்லிவிடுவானோ?’ என்று மனதோடு பயந்தார்.
அன்று இளம் ரத்தம். சூடாக அலசி ஆராயும் பக்குவமின்றி நண்பனை எடுத்து எறிந்துவிட்டு வந்துவிட்டார். காலப்போக்கில் தன் நண்பனின் மீது தவறு இருக்காது என்று புரிந்தாலும், அன்று அப்படி நடந்துகொண்டு இன்று இறங்கி செல்ல தேவராஜின் தற்போதைய நிலை அவரை விடவில்லை. அதனாலேயே உறவென்று இருந்த ஒரு உறவையும் தள்ளி வைத்து தனித்து நிற்கிறார்.
அன்று கோபத்தில் மாமன் இருக்கின்றான் என்பதை காட்டிக்கொள்ளாது மகனை வளர்த்தவரால் இப்போது மகனிடம் அவ்வுறவைப்பற்றி சொல்ல முடியவில்லை. சொன்னால் மகன் அன்னையின் சந்தோஷத்தை அழித்துவிட்டீர்களே என்று கேட்டு விடுவானோ என்கிற பயம் அவருக்கு.
“டோன்ட் ஒர்ரி டாட். இதைப்பற்றி நானெதுவும் உங்ககிட்ட கேட்டு கஷ்டப்படுத்த மாட்டேன்” என்று மேலேறிய தன் நடையை நிறுத்திக் கூறியவன், ‘நானா கண்டுபிடித்து என் அம்மாவை அவங்க அண்ணனோடு சேர்த்து வைக்கிறேன்’ என மனதோடு கூறினான்.
மகனின் குரலில் கலைந்தவர் அவனின் வார்த்தைகள் புரிந்த பின்னர் தான் சீரான மூச்சினை வெளியேற்றினார்.
தன்னறைக்குள் வந்த பார்த்திபன் சிந்தனையோடு அங்கிருந்த கோச்சில் அமர்ந்து விட்டான்.
சில நிமிடங்கள் பலவாறு யோசித்தவன், இந்தியாவிலிருக்கும் தன்னுடைய நண்பன் ஒருவனுக்கு அழைத்து நம்பத்தகுந்த டிடெக்டிவ் மூலம் தன் குடும்ப வரலாற்றினை கண்டறியக் கூறினான்.
அதன் பின்பே குளித்து முடித்து உணவருந்த கீழே வந்தான்.
உண்டு கொண்டிருந்த வேளையிலேயே அவனின் அலைபேசியில் அழைப்பு வர, சாப்பிடும் போது பேச மங்கை மறுத்துவிட்டார்.
மீண்டும் மீண்டும் ஒலிக்கவே, அதுவும் இந்திய எண்ணாக இருப்பதால் ஏதோ அவசரமென்று பாதி உணவில் கை கழுவி எழுந்தவன் அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்தியாவிற்கு செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தான்.
இந்த பயணம் அவனின் கண்ணாட்டியை அவனிடம் காண்பிக்க இருக்கிறது என்பதை அறியாது… தான் செல்லும் காரியத்தின் எண்ணத்தில் சுழன்று கொண்டிருந்தான்.
அங்கு அவனது கண்ணாட்டியோ அவனைத்தேடி அலைந்து கொண்டிருந்தாள்.