அத்தியாயம் 🌾 7 :
“காலையில கிளம்பி போன இப்போ மணியென்ன? இந்நேரம் வரை சாப்பிடாம இருக்கிறதா?”
“ஆமா, நீயென்ன இப்போ இங்கிருக்க? கரும்பு வெட்டியாச்சா?”
கயல் கேட்டதுக்கு பதில் சொல்லாது, அவள் இந்நேரம் வயலில் இல்லாது வீட்டில் இருப்பதை குறித்து கேள்வி கேட்டான் முகிலன்.
தான் கேட்டதற்கு பதில் சொல்லாது பேச்சினை மாற்றும் தம்பியின் தோற்றத்தை அப்போதுதான் கவனித்துப் பார்த்த கயல்,
“என்னடா இது கையில் காயம்” என்று பதட்டம் கொண்டாள்.
‘அக்காவிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை’ என நினைத்தவன் நடந்தைக் கூறினான்.
மலர் மூன்றாம் ஆண்டு கணிதவியல் மாணவி. படிப்பில் படு கெட்டி. சரளா தனது கல்வி ஆசையை மகளின் மூலம் தீர்த்துக்கொண்டார். அன்னையின் ஆசை படிப்பென்று அறிந்ததால் படிப்பில் மட்டுமே தன் கவனம் இருக்குமாறு பார்த்துக் கொண்டாள். நண்பர்களுடன் பழகினாலும் தன் எல்லையில் நின்று விடுவாள்.
காதலென்று பல ஆண்கள் மலரின் பின் வந்தபோதும் அமைதியாக தன் மறுப்பினை காட்டி நகர்ந்து விடுவாள்.
கல்லூரி வாழ்க்கையில் எவ்வித சிக்கலும் இன்றி அமைதியாக சென்று கொண்டிருந்தது இரண்டாம் ஆண்டு வரை மட்டுமே.
மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்தது அவளுக்கான தொல்லை.
முன்பு படித்த கல்லூரியில் ஏதோ பிரச்சனையில் மாட்டி, இரண்டாம் ஆண்டில் மலர் படிக்கும் கல்லூரியில் சேர்ந்தான் ரகு. அவன் அப்பகுதியில் அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு ரியல் எஸ்டேட் பிஸ்னெஸ் மேன் எனும் போர்வைக்குள் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம், கடத்தல் செய்யும் சிங்காரத்தின் மகன்.
வந்த முதல் நாளே தன்னுடைய வகுப்பு எங்கிருக்கிறதென்று பாராமல், பெண்களை வயது வித்தியாசமின்றி பார்வையால் கபளீகரம் செய்துகொண்டு மரத்தடியில் அமர்ந்திருந்தான்.
வந்த அரை மணி நேரத்தில் தன்னைப்போன்று உருப்படாததுகளை இனம் கண்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டான்.
மலரின் கெட்ட நேரமோ என்னவோ அன்று கல்லூரிக்கு தாமதாமாக வந்தவள், அரக்க பறக்க வகுப்பை நோக்கி ஓட…
“யாருடா அந்த பச்சைக்கிளி… பாக்குறதுக்கே அள்ளுதே!” என்று தன்னுடன் அமர்ந்திருக்கும் ஒருவனிடம் வினவினான்.
” அது வேணாம் மச்சி எவ்வளவோ பசங்க லவ்வுன்னு ட்ரை பண்ணி பார்த்துட்டானுங்க. யாருக்கும் மடங்கல” என்றான்.
“ரொம்ப நல்லா படிக்கும் டா. காலேஜ் டாப்பார் அவள் தான். அந்த திமிரு வேற.” இன்னொருவன் கூறினான். தானென்று இருப்பவர்களின் ஒதுக்கம் கூட மற்றவர்களுக்கு திமிராகத்தான் தெரியும் போல்.
“அதோட மச்சி… அவள் மூணாவது வருசம். நீ ரெண்டாவது வருசம் தான். வயசு இடிக்குது. அதனால் உன் வேலையை அவகிட்ட வச்சிக்காத!” மற்றொருவன் கூறினான்.
“இண்ட்ரெஸ்டிங்” என்ற ரகு, “இந்த ஆசை வயசெல்லாம் பார்க்காதுடா. அதுக்கு அழகு மட்டும் தான் தெரியும். இவளோட அழகு…” என்றவன் கண்களை மூடி மலர் ஓடிய காட்சியை ஓட்டிப்பார்த்து, “இதுக்கே கிக்கு ஏறுது மச்சீஸ்” என்றான்.
அத்தோடு நின்றுவிடாது மலரின் வகுப்பு எதுவென்று அறிந்து அங்கு சென்றான். ஆசிரியர் வர தாமதாமாகும் என்பதால் மாணவர்கள் அனைவரும் கொட்டமடித்துக் கொண்டு இருந்தனர்.
திடீரென உள்ளே நுழைந்தவன் உள்ளிருப்பவர் அனைவரும் தன்னைவிட ஒரு வருடம் பெரியவர்கள், அத்தோடு தனக்கு சீனியர்கள் என்பதை புறம் தள்ளி, ஆசிரியர் பயன்படுத்தும் மேசை மேல் கால் மேல் காலிட்டு அமர்ந்தான்.
மலர் எங்கிருக்கிறாள் என்று பார்வையை சுழலவிட்டவனின் பார்வை அனைத்து பெண்களையும் வஞ்சனையின்றி விழுங்கி வைத்தது.
அங்கு ஒருவன் வந்திருப்பதையே கண்டு கொள்ளாத மலர் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தாள். அவனின் பார்வை அவளின் மீது நிலைத்து நின்றுவிட்டது.
“ஹேய் யார் நீ?”
“உன் பார்வையே சரியில்லை.”
“உன் கிளாஸ் இதில்லையே!”
“முதலில் வெளிய போ!”
தங்களது வகுப்பு பெண்களை ரகு பார்த்த பார்வையை கண்டு கோபம் கொண்ட மாணவர்கள் அவனிடம் கேள்வி கேட்டனர்.
அனைவரையும் அழுத்தமாக ஏறிட்டவன், உட்கார்ந்திருந்தவாறே காலினை ஆட்டியபடி… “என் அப்பா பேரு சிங்காரம்” என்று ரகு சொல்லியது தான் தாமதம், அடுத்த கணம் அங்கு ஊசி விழுந்தால் கூட அதிர்வு கொடுக்கும் நிசப்தம்.
ரகுவிடம் சத்தமிட்ட அனைத்து மாணவர்களும், சிங்காரத்தைப்பற்றி தெரிந்திருந்ததால் தங்களுக்கு எதுக்கு வம்பென்று அமைதியாகினர்.
திடீரென நிலவிய அமைதியில், ‘என்னடா இது நம்ம கிளாஸ் தானா இது’ என்று எண்ணியபடி எழுதிக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு தலை நிமிர்த்தி பார்த்த மலர் தங்களுக்கு எதிரில் நடுநாயகமாக நின்றிருந்த ரகுவை அரை நொடிக்கும் குறைவாக பார்த்து… “யாருடி இவன்” என்று தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் தோழியை வினவினாள்.
அவளுக்கும் அவனைப்பற்றி முழுவதுமாக தெரியாதல்லவா அதனால் அவன் சொல்லியதை மட்டும் வைத்து, “அந்த ரவுடி சிங்காரத்தோட பையனாம்” என்றாள்.
“ஹோ.”
அவ்வளவுதான் மலரின் பிரதிபலிப்பு. மீண்டும் தன் வேலையை கவனித்தாள்.
ரகுவும் மலரையே பார்த்திருந்ததால், அவள் நிமிர்ந்து தன்னை பார்த்தது, தன்னைப்பற்றி அவளது தோழியிடம் வினவியது என்றுவரை தெரிந்தவன் அவளின் அலட்சியத் தன்மையில் கோபம் கொண்டான்.
தான் யாரென்று தெரிந்ததும் மலரிடம் சிறு அதிர்வாவது ஏற்படும் என்று நினைத்தவன் ஏமாந்து போனான். அந்த ஏமாற்றம் அவளை எப்படியும் தன் கைக்குள் கொண்டுவர வேண்டும் என்னும் தீவிரத்தை அவனுள் உண்டு செய்தது.
“மலர்.”
ரகுவின் விளிப்பில்,
‘இவனுக்கெப்படி என் பெயர் தெரியும்’ என்று ஆராய்ந்தாலும், “என்ன?” என்பதைப்போல் வெட்டும் பார்வையை அவனிடம் வீசினாள்.
“எனக்கு நீ வேணும். சோ, என்னை நீ லவ் பண்ணியே ஆகணும்.” கட்டளையாகக் கூறியவன் ஆசிரியர் வருகையை உணர்ந்து சடுதியில் வெளியேறியிருந்தான்.
மலரைவிட அவளது வகுப்பினர் தான் ரகு சொல்லிச் சென்றதில் அதிர்ந்து போயினர். மலர் அவனது பேச்சு ஒன்றுமில்லை என்பதைப்போல் சாதாரணமாக தோளைக் குலுக்கிவிட்டு ஆசிரியர் நடத்துவதை கவனிக்கத் தொடங்கிவிட்டாள்.
ஆசிரியர் சென்றதும் மாணவிகள் மட்டுமல்லாது மாணவர்களும் மலரிடம் ரகுவிடத்தில் மிகுந்த கவனமாக இருக்குமாறு கூறினர்.
‘சிங்காரத்தின் மகன் என்பதற்காகவா இவ்வளவு பத்திரம்’ என்று எண்ணிக்கொண்டாலும் தன்மீது அக்கறை கொண்டு பேசிய நண்பர்களுக்கு சரியென்பதைப் போன்று தலையசைத்தாள்.
ஆனால் மலர் நினைத்தப்போல் ரகு அவ்வளவு எளிதில் அவளை விட்டுவிடவில்லை. தினமும் அவளின் வகுப்பிற்கே வந்து மலரை காதலிக்கச் சொல்லி மிரட்டுபவன், மாலை கல்லூரி முடிந்ததும் தானே டிராப் செய்வதாக வண்டியில் ஏறச் சொல்லி வம்பு செய்வான்.
கேன்டினில் மலர் உண்டு கொண்டிருந்தாள் உரிமையாக அவளின் அருகில் சென்று அமர்ந்து அவளின் உணவினை ருசி பார்ப்பவன், அவளுக்கும் ஊட்டுவதற்கு முயற்சிப்பான்.
வேண்டுமென்றே அவளின் உடல் உரசிட முயற்சி செய்வான். கரம்பிடிக்க முயல்வான்.
மலர் பேருந்தில் சென்றாலும் அவளை பின்தொடர்ந்து வீடுவரை உடன் செல்வான்.
அனைத்தையும் ஒரு முறைப்புடன் கடந்து வந்தவளால் இறுதியாக அவன் செய்ததை ஜீரணிக்க முடியவில்லை என்பதை விட அவளால் அதனை ஒப்ப முடியவில்லை. ஒரு ஒவ்வாமை. உடலில் அசூயை. தனது உடலே அவளுக்கு அந்நியமாகிப் போனது.
அன்று கல்லூரி முடிந்ததும் தனது ஊர் தோழி பாமாவிற்காக மரத்தடியில் போடப்பட்டிருக்கும் மேடையில் அமர்ந்து காத்திருந்தாள். பாமா மலரிடம் புத்தகப் பையினை கொடுத்துவிட்டு ஓய்வறை சென்றிருந்தாள்.
கல்லூரியே ஓரளவிற்கு காலியாகியிருந்தது.
பாமா வரும் திசையையே மலர் பார்த்திருக்க, யாரோ அருகில் அமரும் அரவம் உணர்ந்து மலர் திரும்புவதற்குள், அவளின் கன்னத்தில் முத்தமிட்டு விலகியிருந்தான் ரகு.
நொடியில் கண்கள் கலங்கிப்போக, மலரின் உடல் நடு நடுங்கியது.
தூரத்திலேயே இதனை கண்டுவிட்ட பாமா மலரை நோக்கி ஓடி வந்தாள்.
“உன் பின்னாடியே வரதால் என்னை என்ன நா*ன்னு நினைச்சிட்டியா? நாளைக்கு உன் கிளாசுக்கு வழக்கமா வர நேரத்துக்கு வருவேன். உன் கிளாஸ்மேட்ஸ் அத்தனை பேர் முன்னாடியும் இப்போ நான் உனக்கு கொடுத்ததை திருப்பி கொடுத்துட்டு லவ் யூ ரகு சொல்லற… சொல்லணும்… புரியுதா?” என்றவன்,
“அப்படி நீ நான் சொன்னதை செய்யலன்னா… நாளைக்கு ஜெனரல் அசெம்பலி அப்போ மொத்த காலேஜ் முன்னுக்க உன்னை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுப்பேன். இப்போ மாதிரி கன்னத்தில் இல்லை” என்று அவள் அதிர்ந்து நிற்பதையும் பொருட்படுத்தாது அவளின் கன்னத்தை நிமிண்டி விட்டு “நீ ரொம்ப சாஃப்ட் டி” என சொல்லிச் சென்றான்.
மலருக்கு அதிர்ந்த நிலையிலும் கண்ணீர் நிற்கவில்லை.
மலர் தைரியமான பெண். அவளே இப்படி கண்ணீர் வழிய நிற்பது பாமாவிற்கு பயத்தை கொடுத்தது.
“பிரின்சிகிட்ட கம்பலைன்ட் பண்ணிடலாம் மலர்.”
“நோ யூஸ் பாமா. நான் அல்ரெடி அவர்கிட்ட இவன் தொந்தரவு தாங்காம சொல்லிட்டேன், அவன் அப்பா பெரிய ரவிடிம்மா அவனை பகைச்சிக்கிட்டா கல்லூரிக்கு தான் ஆபத்து… நீ கொஞ்சம் ஒதுங்கிப்போன்னு சொல்லுறாரு” என்றவள் அடுத்து என்ன என்ற யோசனையோடு பாமாவுடன் வீடு வந்து சேர்ந்தாள்.
வீட்டிற்கு வந்தவள், என்ன செய்வதென்று தெரியாது அழுகையில் கரைந்தாள். அதனை தான் முகி தன்னறையிலிருந்து பார்த்திருந்தான். வீட்டில் ஏதோ பிரச்சனையாக இருக்குமென்று எண்ணியவன் நிச்சயம் இப்படி இருக்குமென்று நினைக்கவில்லை.
அடுத்த நாள் என்ற பயமே அவளை தூங்கவிடவில்லை. மறுநாள் வாயில் வந்த பொய்யினை சொல்லி கல்லூரிக்கு செல்லாது வீட்டிலேயே இருந்துவிட்டாள்.
மலர் சொல்லிய அனைத்தையும் கேட்ட முகிக்கு கட்டுகடங்கா கோபம்.
“இதை முதல்லே வீட்டில் சொல்லியிருக்கலாமே?” எனக் கேட்டவனுக்கு மௌனத்தையே பதிலாக அளித்தாள்.
“அக்காகிட்ட சொல்லியிருந்தா கூட போதுமே! இவ்வளவு தூரம் வந்திருக்காது” என்றவன், “இப்போ உன் ஃபிரண்ட் எதுக்கு வந்தாள்? என்ன சொன்னாள்?”
“எத்தனை நாள் ஓடி ஒளிய முடியும். அவள் நாளைக்கு மட்டும் காலேஜ் வரல… வீடு புகுந்து தூக்க என்னால் முடியும். நாளைக்கு காலேஜ் வந்தே ஆகணும் அப்படின்னு அவன் பாமாகிட்ட சொல்லி அனுப்பியிருக்கான்” என்றாள்.
“என்ன முடிவு பண்ணியிருக்க?”
“தெரியல.” அதனை சொல்லும் போதே மலருக்கு கண்கள் நிறைந்துவிட்டன.
அவளின் கண்ணீர் நிறைந்த முகத்தை பார்க்க முடியாதவன், “இதுக்கெல்லாமா அழுவாங்க. பார்த்துக்கலாம் விடு. நாளைக்கு உன்னோட நான் காலேஜூக்கு வர்றேன்” என்றான்.
“நீங்க வந்து என்ன பண்ணுவீங்க?”
“பேசி பார்ப்போம் வழிக்கு வரலைன்னா போட்டு தள்ளிடலாம்” என்று கழுத்தில் கிழிப்பதைப்போல் விரல் வைத்து காண்பித்தான்.
“கொலையா?” முகியிடம் சொல்லியிருக்கக் கூடாதோ என்று தோன்றியது அவளுக்கு.
“ஹேய்… சும்மா சொன்னேன். நீ போ” என்று மலரை அனுப்பி வைத்தவன் நீண்ட நேரம் யோசனையில் அங்கேயே நின்றுவிட்டான்.
முகிக்கும் சிங்காரத்தைப் பற்றி ஓரளவிற்கு தெரியும். அவனை மீறி ரகுவை அடக்குவது கடினமே! போலீசிடம் சென்றால் அடுத்த நொடி அவர்கள் சிங்காரத்தின் சொல்படி நட என்று தங்களுக்குத்தான் உபதேசம் செய்வார்கள் என்று பலவாறு சிந்தித்தவன் முதலில் பேசி பார்ப்போம் என்று மறுநாள் மலரை முன் அனுப்பி அவளது நிழல் போல் பின் தொடர்ந்தான்.
கல்லூரியில் மலருக்காகவே ரகு தன் படையுடன் காத்திருந்தான்.
நுழைவு வாயிலிலே ரகு தன்னை கவனிப்பதை கண்டுவிட்டு மலர் அடுத்த அடி வைக்கும் முன் முகியை திரும்பிப் பார்த்தாள்.
முகி போ என்பதைப்போல் கண் காட்ட, சிறு தலையசைப்புடன் பாமாவுடன் முன்னேறினாள். பாமாவின் கையை இறுக்கி பிடித்த பிடியிலேயே மலரின் பயம் பாமாவிற்கு புரிய…
“முகி அண்ணா உன் பின்னால் தான் வர்றார் மலரு… பயப்படாத, தப்பா எதுவும் நடக்காது” என்று தேற்றினாள்.
மலருக்கு பத்தடி இடைவெளியில் முகிலன்.
ரகு இருக்குமிடம் நெருங்கிய மலர் அவனை கடந்து செல்ல முயல… மலரை நோக்கி சொடக்கிட்டான் ரகு.
அதிலேயே உடல் அதிர மலரின் நடை நின்றது.
தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து குதித்து இறங்கியவன் இரண்டே எட்டில் மலருக்கு முன் வந்து நின்றான்.
மலர் என்னவென்று உணரும் முன்பே…
“நான் சொன்னதோட சீரியஸ்னெஸ் உனக்கு புரியல இல்லையா? இப்போ புரியும்” என்றவன் தாலி கயிற்றை அவள் கழுத்தை சுற்றி போட்டவன் முடிச்சினை போட முயல்க முடியவில்லை… அவன் கை கயிற்றை பிடித்துக் கொண்டிருக்க, அவனின் விரல் தாண்டி தொங்கிய சில இன்ச் கயிற்றை பிடித்து மலருக்கு பின்னால் நின்ற முகில் முடிச்சினை போட்டுக் கொண்டிருந்தான்.
மூன்று முடிச்சிட்டு தன்னை பார்த்த முகியிடம் “யாருடா நீ?” என்று அதிர்ந்து கத்திய ரகு… வெறி கொண்டவன் போல் தலையை பிடித்துக்கொண்டு அங்குமிங்கும் நடந்தான்.
ரகு எங்கே தாலியை கட்டிவிடுவானோ என்று, அவன் கை தன் கழுத்தில் பதிந்ததுமே கல்லென சமைந்தவள்… பயத்தில் வெளுத்த முகத்துடன் வெடவெடத்திருக்க தாலிகட்ட சென்றவன் எதற்கு இப்படி கத்துகிறான் என்று புரியாமல் மலங்க மலங்க விழித்தாள்.
ரகு கையினை எடுத்த பிறகும் தன் மார்பில் தாலி தொங்குவதை கண்ட மலர், ரகு தாலியை கட்டிவிட்டானோ என அதனை கையிலேந்தி பார்க்க…
“முகி அண்ணா தாலி கட்டிட்டாருடி மலரு” என்று தோழியை தோளோடு அணைத்து… மலரின் காதல் முகியென தெரிந்த பாமா துள்ளி குதித்தாள்.
மலரால் தானிருந்த நிலையில் பாமா சொல்லியதை நம்ப முடியவில்லை. மெல்ல தன் நினைவடுக்கில் சற்று முன் நடந்த காட்சிகளை கோர்க்க முனைய பாமா நடந்ததை விவரித்தாள்.
முகி தாலிகட்டியது மகிழ்வே. ஆனால் இப்படி இந்நிலையில் நடந்திருக்க வேண்டாமே என்று எதையோ எண்ணி மருகினாள்.
தாலியை இறுக்கமாக பிடித்துக்கொண்டே முகியை திரும்பிப் பார்த்து முடிந்த மட்டும் முறைத்தாள்.
“மலர்… ஐ கேன் எஸ்பிளேன்…”
“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.” கை காட்டி அவனை தடுத்தவள், “நீங்க செய்யுற உதவிக்கு உங்க லவ்வை ஏத்துக்க சொல்லி கார்னர் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு இப்படி மொத்தமா காலி பண்ணிட்டீங்களே” என்றவள் விசும்பலோடு தலையில் அடித்துக் கொண்டாள்.
தான் தாலி கட்டியது ஏதோ அருவருக்கத்தக்க செயலை போல் அவள் பேசுவதும் நடந்துகொள்வதும் இருக்க… முகிக்கு உள்ளுக்குள் அவ்வளவு வலித்தது. அந்த வலி கோபமாக மாறியது.
“அப்போ அவன் தாலி கட்டட்டுமுன்னு வேடிக்கை பார்த்திருக்க சொல்லுறியா… இல்லை படத்துல காட்டுற மாதிரி சண்டை போட்டிருக்கணும் சொல்லுறியா? அடிதடியெல்லாம் படத்திற்கும் கேட்கும் கதைகளுக்கும் சரிவரலாம். ரியல் லைஃப்பில் சாத்தியமில்லை.”
முகி சொல்வது மலருக்கும் புரியத்தான் செய்தது. ஆனால் அவளால் ஏற்றுக்கொள்ளத்தான் முடியவில்லை.
முகியும் மலரும் வார்த்தையால் சண்டையிடுவதை பார்த்த பாமா… மலரின் கையை பற்றியவாறு நெருங்கி நின்று…
“நீயும் முகி அண்ணாவை விரும்புறதானே அப்புறம் என்னடி பிரச்சினை” என்க, மலர் பார்த்த பார்வையில் பாமாவின் வாய் இறுக மூடிக்கொண்டது.
அங்கு நடப்பது எதையும் கருத்தில் கொள்ளாது பைத்தியம் பிடித்தவன் போல் நடந்து கொண்டிருந்த ரகு…
“அவன் தாலி கட்டிட்டால் உன்னை விட்டுடுவேனா… எனக்கு நீ வேணும். அவன் கட்டுனதை நானே அறுக்குறேன்” என்று வெறியோடு மலரை நெருங்க, தன்னைப்போல் மலர் இரண்டடி பின்னால் நகர்ந்தாள். தாலியின் பிடியை அவள் விடவே இல்லை.
அதுவே மலர் தன்னை ஏற்காவிட்டாலும், தனது தாலியை ஏற்றுக்கொண்டாள் என முகிக்கு சிறு ஆறுதலாக இருந்தது.
“எல்லாம் உன்னால் தான்டா” என்று ரகு தன் பாக்கெட்டிலிருந்து பேனா அளவிற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து, முகியை நோக்கி பாய… குறுக்கே தன் கை வைத்து தடுத்ததால் நீளமான கீறல் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. அத்தோடு ரகுவின் வயிற்றில் முகி உதைத்த உதையில் அவன் நான்கடி தள்ளிச்சென்று விழுந்தான். ரகுவின் திடம் எல்லாம் மிரட்டலில் மட்டுமே. உடலளவில் அடிக்கு பயந்த கோழை அவன். அதனால் முகியின் ஒரு உதைக்கே சுருண்டிருந்தான்.
“அய்யோ ரத்தம்” என்ற மலர் முகியின் அருகில் செல்ல…
“என்னையும் என் காதலையும் ஏத்துகிட்ட அப்புறம் தான் இந்த அக்கறையெல்லாம்” என்றவனின் வார்த்தையில் அப்படியே நின்று விட்டாள்.
நடப்பதை அங்கிருந்த மாணவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தனர்.
விடயம் கேள்விப்பட்டு அங்கு வந்த முதல்வர்,
மலரை கண்டனப் பார்வை பார்க்க…
“ரகுவை கண்டிக்க முடியுன்னா மட்டுமே மலரை உங்களால் தண்டிக்க முடியும் சார்” என்றான் முகிலன்.
முதல்வர் அதன்பிறகு ஒன்றும் பேசாது அங்கிருந்து சென்றிருந்தார்.
நடந்ததை ஒன்றுவிடாது முகி சொல்லியதும்… கயலின் பார்வை அவனுக்கு பின்னால் சென்றது.
கழுத்தில் முகி கட்டிய தாலியுடன்… தலை குனிந்து நின்றபடி மலர்.
கயலின் செயல் என்னவாக இருக்கும்?
கயல் வீட்டு அடுக்கலையிலிருந்து வெளிவந்த சரளா அனைத்தையும் கேட்டிருக்க, அவரின் எண்ணம் தான் என்னவாக இருக்கும்?