பார்த்திபனின் கயல்விழியாள் 8

அத்தியாயம் 🌾 8 :

சரளா ஒரு பக்கம் தூணில் சாய்ந்திருக்க… மாணிக்கம் என்ன சொல்வதென்று தெரியாது பேச்சற்று மௌனித்திருந்தார்.

நடந்ததை அறிந்ததுமே சரளா கணவனை அழைத்துவிட்டார். அவருக்கு அந்நேரத்தில் என்ன செய்வதென்று சுத்தமாக தெரியவில்லை. எப்போதும் சமயோஜிதமாக செயல்படும் சரளா தடுமாறி நின்றார். அவரால் நடந்ததை எண்ணி சந்தோஷம் கொள்ள முடியவில்லை.

மாணிக்கம் வரும் வரையிலுமே கயல் அதிர்வில் சிலையென தான் நின்றிருந்தாள். தன் தம்பியின் மீது பதித்த பார்வையை இம்மியும் மாற்றவில்லை.

கயலால் முகியின் சூழலை புரிந்துகொள்ள முடிந்தது. அதே சமயம் சற்று பொறுமையாக கையாண்டிருந்தால் இத்திருமணத்திற்கு அவசியம் வந்திருக்காது என்றே தோன்றியது.

“அக்கா எதாவது பேசுக்கா. அட்லீஸ்ட் திட்டவாவது செய். அடிக்கா. நான் செய்தது தப்புன்னாவது சொல்லேன். அந்த நேரம் எனக்கு அந்த பையன் தாலி கட்டிடக் கூடாதுங்கிறது மட்டும் தான் எண்ணம்மா இருந்தது. மலர் வேற குறுக்க இருந்ததால அவளைத்தாண்டி அவனை தடுக்க முடியும் தோணல. அதான் மலருக்கு பின்னாடி இருந்த என்னால என்ன செய்து அவனை தடுக்க முடியுமோ அதை பண்ணேன்.”

கயலின் அமைதி முகியை வெகுவாக பாதித்தது. கொல்லாமல் கொன்றது. தாய் தந்தையாய் நின்று தன்னை வளர்க்கும் சகோதரிக்கு தெரியாமல் தன் வாழ்வின் முக்கிய நிகழ்வு நடந்தேறிவிட்டதே என்ற வருத்தம் அவனை வாட்டியது. இதனை அவள் எவ்வாறு ஏற்றுக்கொள்வாளோ என்று கலக்கம் கொண்டு அவளிடம் மன்றாடினான்.

தம்பியை அழுத்தமாக ஏறிட்ட கயல், சரளாவின் அருகில் சென்று அவரின் கைகளை பிடித்துக்கொண்டு,

“முகிக்கு பதிலா நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் அக்கா. ஆனால் அவன் செய்ததை தப்புன்னு நான் சொல்லமாட்டேன்.

காரணம் சூழ்நிலையா இருக்கலாம். ஆனால் அதை பண்ணது என் தம்பி. அதுக்காக மட்டுமே இந்த மன்னிப்பு. உங்களால முடிஞ்சா அவனை மன்னிச்சு உங்க மருமகனா ஏத்துக்கோங்க.

அந்த நிலையில் நானிருந்திருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பேனோ என்னவோ!”

நேரடியாக இல்லையென்றாலும் மிகுந்த தெளிவுடன் நடந்ததை நான் ஏற்றுக்கொண்டு விட்டேன் என்பதை கயல் தன் பேச்சில் உணர்த்தினாள்.

தன் அக்கா தன்னை புரிந்துகொண்டாள் என்ற பிறகே முகிக்கு சீரான மூச்சு வெளிப்பட்டது.

சரளாவிற்கு எப்படி தொடங்குவதென்றே தெரியவில்லை.

ஊர் என்ன பேசுமோ என்பதிலேயே அவர் மனம் சுழன்றது.

“நீங்களாவது எதாவது பேசுங்க மாமா!”

கயலின் குரலில் சிறு கெஞ்சல் வெளிப்பட்டதோ!

பதறி கயலின் அருகில் வந்த மாணிக்கம்…

“நீ போய் என்கிட்ட கெஞ்சலாமா பாப்பா. அழகர் ஐயா வாரிசு… நான் மாட்டேன்னு சொல்லுவேனா?” அவரின் வார்த்தையில் முகி அவரை அணைத்துக் கொண்டான்.

தன் கணவர் ஏற்றுக்கொண்டதை உணர்ந்த சரளா…

“இதுக்காகத்தான் உங்களை பாதுகாக்கிறோமுன்ற பேர்ல உங்களுக்கு துணை நின்னதா ஊர் பேசுமே கயலு.

மொத்த சொத்தையும் இப்படி பிடிங்கிக்கத்தான் இத்தனை வருசம் எங்க ஐயா பெத்த வாரிசுன்னு சுத்தி சுத்தி வந்தீங்களான்னு கேட்குமே?”

அடுத்து நடக்கவிருக்கும் நிதர்சனத்தை முன் வைத்தார்.

“நாங்க தனியா நின்னப்போ வாய் திறக்காதவங்கெல்லாம் இப்போ பேசினா அது உண்மையாகிடாதுக்கா.”

கயல் சொல்லியதற்கு சரளாவிடம் பதிலில்லை.

“நான் மலரை கட்டிக்க விரும்புறேன்னு தெரிஞ்சாலும்… இப்படித்தான் என் ஆசையை விட்டுட்டு, ஊர் என்ன பேசுமோன்னு என்னை வேண்டான்னு சொல்லியிருப்பீங்களா? நான் மலரை மூணு வருசமா விரும்புறேன். இப்போ சொல்லுங்க எனக்கு மலரை கொடுக்க உங்களுக்கு சம்மதமா இல்லையா?” முகியை முன்வந்து தன் விருப்பத்தை தெரிவித்து அதிரடியாக வினா எழுப்ப சரளா தன் மகளைப் பார்த்தார்.

கயல் தன் தம்பியை… அவன் சொல்லியதை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

முதல் முறையாக ஒரு விடயத்தில் முடிவெடுக்க சரளா தயங்கி நிற்பது கயலுக்கே வருத்தமாக இருந்தது. பலமுறை கயலுக்கு வந்த தடங்கல்களுக்கெல்லாம் இதை இப்படி செய்தால் சரிவருமென்று முன்யோசனை சொல்பவராயிற்றே இன்று முடிவெடுக்கத் தெரியாது குழம்பி நின்றார்.

அன்னையின் நிலை மலருக்கு நன்றாக புரிந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு முகியை ஒருநாள் ஆர்வமாக தான் பார்த்ததற்கே தங்களின் சூழலை அவ்வளவு விளக்கி சொல்லி தன் மனதை மாற்றியவராயிற்றே. இன்று எப்படி இதற்கு பதில் சொல்வார்.

மலர் கல்லூரி படிப்பில் அடி வைத்த தொடக்கம்… முகி மூன்றாம் ஆண்டு மருத்துவம். அதற்கு முன்பே இருவருக்குள்ளும் நடந்த ஒன்று இருவருகிடையேயான பேச்சு வார்த்தையை தடை செய்திருந்தது.

சில நாட்களாக முகியின் நினைவு மனதை அலைகழிப்பதும்… அவனின் முகம் காண தவிப்பதும் ஏனென்று புரியாது… விடுமுறைக்கு வந்திருந்த முகியை சற்று ஆர்வமாகவே ஆராய்ந்தாள் மலர். அந்நாள் முழுக்க அவளின் அப்பார்வை முகியை தொடர்ந்தது. இதனை கண்டு கொண்ட சரளா என்னவென்று கேட்க… தனக்கே தெரியாத பதிலை அவளெப்படி சொல்வாள். ஆனால் காதல் மணம் புரிந்த சரளாவிற்கு மகளின் பார்வைக்கான அர்த்தம் நன்கு விளங்கியது. அதனை அன்றே அழிக்கவும் செய்தார்.

“நாம இந்த வீட்டுக்கு எப்பவும் விசுவாசம் உள்ளவங்களா மட்டும்தான் இருக்கணும். நாம அவங்களுக்கு பாதுகாப்பா இருக்கலாமே தவிர உரிமை உள்ளவங்களா மாறனும் ஆசைப்படக் கூடாது.”

அன்றைய சரளாவின் பேச்சு மலரின் மனதில் நன்கு பதிய… ஏற்கனவே முகியிடம் தள்ளி இருந்தவள் முற்றுமாக விலகி நிற்கத் தொடங்கினாள்.

அதனை இன்று நினைத்தவள்… அன்னையின் வெறுமையான பார்வையை காண இயலாது,

“உங்களுக்கு வேண்டான்னா எனக்கும் வேண்டாம்மா. ரகுகிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியாமதான் முகி மா… அவங்ககிட்ட சொன்னேன். ஆனால் இப்படி ஆகும் தெரியாதும்மா” என்று கண்ணீர் விட்டாள்.

முகி மாமா என்பதை தவிர்த்த அவளின் பேச்சின் தடுமாற்றத்தை யார் உணர்ந்தார்களோ, கண்டுகொள்ள வேண்டியவன் நன்கு கண்டுகொண்டான். அவனின் இதயத்தில் சிறுவலி எழுந்து அடங்கியது. அவளின் மாமா என்றழைப்பு தடைபடக் காரணம் அவனல்லவா!

மலர் வேண்டாமென்று சொன்னதில் முகியின் காதல் மரித்தது. மனம் மெல்ல உடையும் தடம் அவனால் உணர முடிந்தது. இருப்பினும் தன் வாழ்வு என்பதைவிட இருவரின் காதலும் இதில் அடங்கியிருப்பதை நினைத்த முகி தானே தங்களது வாழ்விற்காக பேசினான்.

“இப்படி நடக்காம போயிருந்தாலும் என் திருமணம் மலரோட தான் நடந்திருக்கும். ஊருக்காக பார்க்காம என் விருப்பத்துக்குன்னு பாருங்க. இப்போ சொல்லுங்க உங்க பதிலென்ன?” அழுத்தமாக வினவினான்.

சரளா பதில் சொல்ல வாய் திறக்கும் முன்…

“உண்மையிலே ரகுவை கண்டிக்கணும் எண்ணத்தோடு மட்டும் தான் அங்கு போனேன். நடந்து நிகழ்வு நானுமே எதிர்பாராதது. எனக்கு சாதகமா பயன்படுத்திக்கும் நோக்கம் எனக்கில்லை. அவன் கையில் தாலியை, அதுவும் அவன் மலர் கழுத்திலே வைச்சதும், அந்த செக்கென்ட் அவன் கைக்கு கீழ தொங்கின கயிறு மட்டும் தான் என் கண்ணுக்குத் தெரிஞ்சுது…” என்றான்.

சரளா அவரது பதிலினை சொல்லும் முன்னர் தன்னை தன் செயலை புரிந்துகொள்ள வேண்டுமென நினைத்தான்.

“எனக்கு இவ்வளவு விளக்கம் சொல்லணும் அவசியமில்லை முகி. ஊர் ஒரு சொல் சொல்லிடக்கூடாதே! அதான் தயக்கம்” என்றவர் “உன் சந்தோஷத்தை விடைவாய்யா எனக்கு இந்த ஊர் பேச்சு பெரிசாகிடப்போகுது” என்றவர், “உன்னை மாதிரி ஒரு பையன் என் பொண்ணுக்கு கிடைச்சா வேண்டான்னா சொல்லுவேன்” என்று தான் ஒப்புக்கொண்டதைக் கூறினார்.

மாணிக்கத்திற்கு மட்டற்ற மகிழ்வு. அதற்கு காரணம் அழகரின் மறு பதிப்பாக முகியை அவர் பார்ப்பதால்.

அடுத்து அவர்களின் எண்ணம்… நடந்ததை ஊர் அறிய செய்ய வேண்டுமே!

அதற்கு அவசயமின்றி ஊர் பெரியவர்கள் கயலின் வீட்டின் முன்பு வருகை தந்தனர்.

“ஆத்தா கயலு…”

“இது ராமசாமி பெரியப்பா குரலாச்சே!”

இந்நேரத்தில் எதற்கு அழைக்கிறார் என்று தெரியாமல் ஒருவித பதட்டத்துடன் வெளியில் வந்த கயல் அங்கு நின்றிருந்த பெரிய தலைகளைக் கண்டு என்னவோ ஏதோவென்று நினைத்தாலும் நொடியில் தன் கலக்கத்தை மறைத்து முகத்தை சாதாரணம் போல் வைத்துக்கொண்டாள்.

“வாங்க பெரியப்பா… வாங்க… எல்லாரும் வாங்க” என்று வந்திருப்போர் அனைவரையும் உள் அழைத்து வரவேற்பறை இருக்கையில் அமர வைத்தாள்.

எதுவாக இருந்தாலும் வந்திருப்போர் வாயிலிருந்தே வரட்டுமென்று கயல் அமைதியாக இருக்க… சரளா அனைவருக்கும் மோர் கொண்டு வந்து கொடுத்தார்.

குடித்த முடித்த பெரியவர் ஒருவர் பேச்சினைத் தொடங்கினார்.

“நம்ம மலருகிட்ட காலேசுல அந்த சிங்காரம் மவன் பிரச்சினை பண்ணுறானாமே?”

“தெரிஞ்சிக்கிட்டு தான் வந்திருக்கங்களா?” மாணிக்கம் சரளாவிடம் கிசுகிசுத்தார்.

அவர்களை உள்ளே அழைப்பதற்கு முன்பே கயல்… முகி, மலரை அறைக்குள் அனுப்பியிருந்தாள்.

மலர் படிக்கும் கல்லூரியில் தான், அவ்வூரில் உள்ள பிள்ளைகள் பலர் படிக்கின்றனர். அவர்களின் வாயிலாக கல்லூரியில் நடந்ததை தெரிந்துகொண்டே இங்கு வந்தனர்.

“அது வந்து சித்தப்பா…”

கயல் என்ன சொல்லி விளக்குவதென்று தெரியாது தடுமாற…

“அட என்ன கண்ணு… இதுதான் பிரச்சினைன்னு முன்னுக்கவே சொல்லியிருந்தா பெரியவங்க நாங்க சிங்காரத்துகிட்டே பேசியிருப்போம்.”

“பேசுறதுக்கு சிங்காரம் ஒத்து வரணுமே?”

“அதுவும் சரிதான்.”

அவர்களுக்குள்ளே பேசிக்கொள்ள மேற்கொண்டு என்ன சொல்லுவார்களோ என கயல் ஒருவித தடுமாற்ற நிலையிலேயே நின்றிருந்தாள்.

அவளின் முகம் கண்டு கணித்த ராமசாமி…

“அட நீ வெசனப்படாத கண்ணு… புள்ளைங்க அங்கு நடந்ததை சொல்லுச்சுவ. என்ன நடக்கணும் இருக்கோ அதுதான் நடக்கும். முகிக்கு மலருன்னு ஆண்டவன் முடிவு பண்ணியிருக்கும் போது நாமென்ன பண்ண முடியும்.

உங்க குடும்பத்துக்கு இவ்வளவு வருசம் விசுவாசமா இருந்த மாணிக்கம், சொல்லளவில் மட்டுமே இல்லாமல் உறவுக்காரனவும் மாறனுமுன்னு விதி இருந்திருக்கு. அதுக்கு சிங்காரம் மகன் காரணமா அமைஞ்சிட்டான். முகிக்கு மலரும் ஏத்த பொண்ணுதான் கண்ணு. நடந்ததை இல்லைன்னு மாத்த வேண்டாம். அதை நீங்களும் ஏத்துக்கோங்க.

மாணிக்கம் சரளா தான் உங்களுக்கு துணையா இருந்திருக்காங்க. அவங்கள வுட்டுப்புடாத கண்ணு.”

சரளா எதை நினைத்து பயந்தாரோ அது தேவையில்லாததென்று அவர் பேசியிருந்தார். அவரின் பேச்சினை ஆமோதிப்பதை போல் மற்ற பெரியவர்களும் பேச அப்போதுதான் சரளாவிற்கு நிம்மதியாக இருந்தது.

“இதை நாங்களே உங்ககிட்டலாம் எப்படி சொல்லுறது தெரியாம யோசிச்சிட்டு இருந்தோம் பெரியப்பா. இப்போ தான் மனசு லேசான மாதிரி இருக்குது.”

கயல் அவர்களிடம் பேசிக்கொண்டிருக்க…

உள்ளறையில் இருந்த தம்பதியரை அழைத்து வந்த சரளா அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கச்சொல்லி காலில் விழ செய்து… வந்திருந்தவர்களின் கைகளில் பூஜையறை மாலையில் இருந்த மலர்களை உதிர்த்து கொண்டு வந்து கொடுக்க அவர்களும் மன நிறைவுடன் மணமக்களை ஆசீர்வாதம் செய்து வெளியேறினர்.

ராமசாமி பெரியப்பா மட்டும் தங்கிவிட…

“ரொம்ப நன்றி பெரியப்பா. நீங்க மட்டும் எல்லாருக்கும் முன்னாடி பேசலன்னா அவங்க எல்லாரும் என்ன பேசியிருப்பாங்களோ!” என்று தன் நன்றியைக் கூறினாள்.

“சிவத்துக்கு தான் நீ நன்றி சொல்லணும் கண்ணு. அவன் தான் வந்து என்கிட்ட பேசி… முகியோட விருப்பத்தையும் சொல்லி என்னை இங்கு அனுப்பி வைச்சான்” என்று சொல்லியவர்… சரளா மற்றும் மாணிக்கத்திடம் திரும்பி “உங்க வெள்ளை குணம் எங்களுக்கும் தெரியும். அப்படியெல்லாம் ஒரு சொல் சொல்லிடமாட்டோம். இந்த பிள்ளைங்க நட்டாத்துல நின்னப்போ நானிருக்கேன்னு ரெண்டு பேரும் நின்னுங்களே அதுக்காக பொண்ணு எடுக்கிறதென்ன எண்ணவேனாலும் செய்யலாம்” எனக்கூறி மேலும் அவர்களின் சங்கடங்களை தீர்த்து சென்றிருந்தார்.

அப்போது உள்ளே வந்த சிவாவை கயல் முறைத்து வைக்க… அதன் பொருள் புரிந்து,

“நான் வேணுன்னு மறைக்கல கயல். முகியே அவன் காதலை உன்கிட்ட சொல்லுவான்னு இருந்தேன்” என்று மெல்லக் கூறினான்.

“ஆமாக்கா. நான் தான் சிவாண்ணாவை உன்கிட்ட சொல்லக்கூடாது சொல்லியிருந்தேன். எனக்கு மலர் விருப்பம் தெரிய வேண்டியிருந்தது, அதுக்கு அப்புறம் உன்கிட்ட சொல்லிக்கலாம் இருந்தேன்” என்று கயலிடம் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டுக்கூறினான் முகி.

“ரெண்டு பேருமே என்கிட்ட பேசாதீங்க” என்றவள், சரளாவிடம் திரும்பி “நான் சென்னைக்கு அவசரமா போகணும்க்கா… இங்க நீங்க பார்த்துக்கோங்க நாளைக்கு இந்தநேரம் வந்திடுவேன் நினைக்கிறேன்” என்றவள் முகி வீட்டிற்குள் வரும்போது தயாராக வைத்திருந்த சிறு பையினை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

செல்வதற்கு முன் மலரிடம் வந்தவள்…

“எங்களுக்கு இது ஓகேதான்னாலும், உன் விருப்பம் இங்க ரொம்ப முக்கியம். நீ எதுவாயிருந்தாலும் சொல்லலாம். அது முகியோட வாழ விருப்பமில்லைன்னாலும் சரிதான்” எனக்கூறினாள். முகியிடம் ஆழ்ந்த பார்வை ஒன்றை வீசியபடி.

அனைவரிடமும் சொல்லிக்கொண்டு வெளியில் வந்த கயல் சிவாவிடம், “கரும்பு வெட்டுறதை நாளைக்கு ஒருநாள் பார்த்துக்கோங்க… இப்போ என்னை டவுனில் கொண்டு விடுங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, முகி தனது இரு சக்கர வாகனத்தை உயிர்ப்பித்து அவள்முன் வந்து நிறுத்தினான்.

கயலும் எதுவும் சொல்லாது வண்டியின் பின்னால் அமர்ந்தாள். பேருந்து நிலையம் வரும்வரை இருவரிடமும் அமைதியே நிலவியது.

கயலை சென்னை பேருந்தில் ஏற்றிவிட்ட முகி… அவளின் முகத்தையே ஏக்கமாக பார்த்தபடி பேருந்துக்கு வெளியில் நின்றிருக்க… அவனை பார்வையாலேயே உள்ளே அழைத்தாள்.

கயலுக்கு அருகிலிருந்த காலி இருக்கையில் முகி அமர…

அவனின் ஒரு கன்னத்தில் கை வைத்தவள், “உன்னைவிட்டா எனக்கு யாருமில்லை முகி. உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். நீ அழுதா எனக்கும் அழுகை வரும். உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியாது தெரியுமே உனக்கு. அப்புறம் எதுக்கு என் மூஞ்சியே பார்த்திட்டு இருக்க. வீட்டுக்கு போ. மலருகிட்ட மனசுவிட்டு பேசு. அவளும் உன்னை புரிஞ்சிப்பாள்” என்று முகிக்கு ஆறுதல் தருமாறு பேசி அவனை அனுப்பி வைத்தாள்.

“லவ் யூக்கா.” உணர்ச்சி மிகுதியில் முகி தன் அன்பை வெளிப்படுத்த, “போய் மலருகிட்ட சொல்லு” என்று முகியின் கன்னம் தட்டினாள்.

எப்படி நடந்திருந்தாலும் முகி ஆசைப்பட்டது நடந்துவிட்டது. அடுத்து அவனின் எதிர்பார்ப்பை மலர் நிறைவேற்றுவாளா? அவனுடன் சேர்ந்து வாழ்வாளா?

இங்கு அனைவரும் மறந்த விடயம்… தன் மகன் மீது கை வைத்த முகியின் மீது சிங்காரத்தின் எதிர்வினை எத்தகையதாக இருக்கும்?

*********

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் வண்ண விளக்குகளால் மிளிர்ந்தது.

அன்று காலை தான் பார்த்திபன் சென்னையிலுள்ள தி வாரியருக்கு வந்திருந்தான். இங்கு அவன் வந்து இரண்டு மாதங்களாகிறது. கணக்கு வழக்கில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மேனேஜர் அழைத்ததும் புறப்பட்டு வந்திருந்தான்.

கம்ப்யூட்டர் வழி அனைத்தையும் பார்த்துக்கொண்டாலும், நேரில் அனைத்தும் ஒழுங்காக உள்ளதா என்று லாபியின் தொடக்கம் முதல்… உணவுகூடம் வரை அனைத்து கணக்கு வழக்குகளையும், விருந்தாளிகளின் வரவு, எத்தனை அறைகள் காலியுள்ளன… அதன் நிலைப்பாடு என்ன? அந்தந்த மாதங்களில் அறிமுகம் செய்துள்ள புதிய உணவு வகைகள்… அவ்விரு மாதங்களில் விடுதியில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளைப்பற்றியும் அடி நுனி வரை அலசி ஆராய்ந்தவன், தவறு எங்கென கண்டுபிடித்து அதனை சரிசெய்து, தவறு ஏற்பட காரணமாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கி சற்று ஓய்வாக நிமிர்ந்த பொழுது இரவு ஏழாகியிருந்தது.

அப்போதுதான் தி வாரியருக்குள் மெல்ல நுழைந்தாள் கயல்விழி. பேருந்து நிலையத்தில் இறங்கியதும்… நேராக இங்குதான் வருகிறாள்.

அவ்வளவு பெரிய ஹோட்டல் இருந்த போதிலும்… பார்த்திபன் சென்னை வந்தால் தங்குவதற்கென்றே தன்னுடைய ரசனைக்கேற்ப கடற்கரை ஓரம் பெரிய பங்களாவை தனக்கு சொந்தமாக வைத்திருக்கிறான்.

அங்கு செல்ல தனது அறையிலிருந்து வெளிவந்த பார்த்திபன் கீழ்தளம் வருவதற்கு மின்தூக்கியில் ஏறிய பின்னர் தான் தன் பசியை உணர்ந்தான்.

இனி தன்னுடைய அறைக்குச் சென்று வரவழைத்து உண்பதற்கு கீழேயிருக்கும் உணவகம் சென்று சாப்பிடலாம்… அப்படியே அங்கு தன் கண்காணிப்பை முடித்த மாதிரியும் இருக்குமென்று நினைத்தவன் உணவகம் வந்து ஓர் இருக்கையில் அமர்ந்தான்.

ஹோட்டல் முதலாளியை அங்கு கண்டதும் அப்பகுதி மேலாளரே அவனின் அருகில் வந்து என்ன உணவென்று கேட்டுச் சென்றார்.

பார்த்திபன் தன் ஆராயும் பார்வையை, மொபைலை நோண்டுவதைப்போல் ஒவ்வொரு பகுதியிலும் சுழலவிட்டவனின் விழிகள்… ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றன.

ஆகாயத்திலிருந்து தரையிறங்கிய தேவதையை போல்… அவளின் பால் வண்ண நிறத்திற்கு ஏற்ற வண்ணத்தில் புடவை அணிந்து யாரையோ எதிர்பார்த்து பார்த்திபனுக்கு நேரெதிர் இருந்த மேசையில் அமர்ந்திருந்தாள் கயல்விழி.

பார்த்தவனின் பார்வை அவள் மீதே உறைந்துவிட்டன. அவனை தினமும் இம்சிக்கும் விழிகள் அவளது முகத்தில் வீற்றிருக்கும் விழிகளாகத் தோன்ற… கண்மூடி தனது கனவு விழிகளை காட்சிகளாக்கியவன் மனதில் ஏற்பட்ட அதிர்வோடு பட்டென்று கண் விழிக்க காரிகை மாயமாகியிருந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top