பார்த்திபனின் கயல்விழியாள் 9

அத்தியாயம் 🌾 9 :

பார்த்திபனின் விழிகள் அங்குமிங்கும் அவளைத்தேடி அலைமோதின.

மூடிய கண்களுக்குள் இதயம் வழி நுழைந்து தடம் பதித்தவளை மலர்ந்த விழி கண்டுவிட்ட தூரத்தில் மாயமாகிய விந்தையை எண்ணி அக்கணத்தை நிந்தித்தான்.

உடனடியாக தனது அறை நோக்கி மின்தூக்கியில் விரைந்தவன் கண்காணிப்பு பகுதிக்கு அழைத்து உணவு கூடம் பகுதியின் கடந்து சென்ற பதினைந்து நிமிடங்கள் அடங்கிய புட்டேஜினை தன்னுடைய கம்ப்யூட்டரில் இணைக்கச் சொல்லியவன் அதனை பார்வையிட்டான்.

பார்த்திபன் கண்கள் மூடிய வினாடியில் காட்சி பதிவு ஓடியது.

யாரையோ எதிர்பார்த்து காத்திருந்த கயல்… பழச்சாறு ஒன்றினை ஆர்டர் செய்திருக்க, செர்வ் செய்ய வந்த பேரர் தவறுதலாக அவளின் மீது கொட்டிவிட்டு அவளிடம் மன்னித்துவிடுமாறு வேண்டுவதும்… “இது தற்செயலான சாதரண நிகழ்வு. எதிர்பாராம நடந்தது. இதுக்கெதுக்கு இவ்வளவு மன்னிப்பு” என்று கோபம் கொள்ளாது எளிதாக அதனை ஏற்றவள் வாஷ்ரூம் நோக்கி செல்வது தெரிந்தது.

இதே கயலின் இடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் இவ்வளவு அமைதியாக கடந்து, அந்த செர்வரை மன்னித்து இருப்பார்களா என்பது கேள்வியே. ஏன் தானே கோபம் கொண்டிருப்போம் என்று எண்ணிய பார்த்திபனை கயலின் அனைவரையும் மதிக்கும் இத்தகைய பண்பு மிகவும் கவர்ந்தது.

இளநகையுடன் காட்சியை தனிப்பட்ட ஃபோல்டரில் சேமித்து வைத்தவன் மீண்டும் உணவுகூடம் வந்து தான் ஏற்கெனவே அமர்ந்திருந்த மேசையின் இருக்கையில் அமர்ந்துகொண்டான். அவனை கண்டதும் மேனேஜர் அவன் ஆர்டர் செய்த உணவினை சர்வரின் உதவியுடன் கொண்டு வந்து மேசையில் வைத்தார்.

கண்களில் கூலர்ஸ் அணிந்து ஒரு கையில் மொபைல் மற்றொரு கையில் உணவு உண்ண ஏற்ற ஃபோர்க் என அமர்ந்திருந்தவனின் பார்வை கயலின் மீதே. ஆனால் காண்போருக்கு அவன் கவனம் முழுவதும் மொபைலிலும் உணவிலும் இருப்பதாகவேத் தோன்றும்.

கயல் யாரோ ஒரு ஆடவனுடன் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தாள்.

கயலையே கவனித்துக் கொண்டிருந்த பார்த்திபனின் கண்களில் கயலின் சிறு அசைவும் தவறாது பதிந்தது.

முதலில் ஓர் ஆர்வம் பின்னர் எதிர்பார்ப்பு, அதை தொடர்ந்து ஏமாற்றம் இறுதியில் வருத்தம் என்று கயலின் உணர்வுகள் அவளின் முகத்தில் அப்பட்டமாக பிரதிபலித்தது.

பார்த்திபனுக்கு அது ஏதோ காதலர்களுக்கு இடையேயான பிணக்கு என்று தான் தோன்றியது.

ஏனென்றே தெரியாது சுருக்கென்று ஒரு வலி மின்னலென இதயத்தை பதம் பார்த்தது. கயலுக்கு முன் அமர்ந்திருந்தவனை கொன்று புதைக்கும் எண்ணம் அவனுள். தன் மனதின் போக்கு அவனுக்கே விசித்திரமாகத் தென்பட பாதி உணவிலேயே எழுந்து கொண்டான்.

வேகமாக அங்கிருந்து கிளம்பியவன் லாபியை கடந்து வெளியில் வந்து நிற்க… வாலட் அவனின் காரினை கொண்டு வந்து நிறுத்தினான்.

தன்னுடைய கருநிற பி.எம்.டபள்யூ’வில் ஏறியவனின் வேகம் காற்றையும் மிஞ்சியது.

ஏனென்றே தெரியாது மனதில் எழும் ஏமாற்றத்தினை உள்வாங்க முடியாது தவித்தான்.

அவனின் மனம் அவனுக்கே புரியவில்லை. தினமும் இம்சிக்கும் விழிகளுக்கு உரியவளை எங்கு சென்று தேடுவது. அப்படியொருத்தி இல்லையென்றால் என்ன செய்வதென்றேல்லாம் யோசித்திருந்தவன் நிச்சயம் அவனின் கண்ணாட்டியை இங்கு இப்படியாரு நிலையில் பார்ப்பானென்று துளியும் கற்பனை செய்திருக்கவில்லை.

அவனை பொறுத்தவரை பார்த்தது காதலர்களின் சந்திப்பு. அவன் அப்படித்தான் நினைத்துக்கொண்டான்.

பார்க்கும் காட்சிகள் யாவும் நம் கண் வழி சொல்லும் மனதின் கணிப்பு தானே. இங்கு பார்த்திபனும் அவ்வழியில் தான் சிந்தித்தான்.

வெளியில் சொல்லிக் கொள்ளாவிட்டாலும், விழிக்கு சொந்தகாரியை தேட முயற்சிக்கவில்லை என்றாலும், ஒரு நாளும் அவ்விழிக்காரிகையை நினையாது இருந்தது இல்லை. அந்த நினைப்பே காதலாய் இதயத்தில் தடம் பதித்திருக்குமென்று பார்த்திபன் கொஞ்சமும் நினைக்கவில்லை.

தன்னை தாக்கும் கண்களின் கண்ணாட்டி வேறொருவனின் காதலி என்கிற நினைப்பே பார்த்திபனுக்கு கசந்து வந்தது.

பார்ப்பதெல்லாம் நிஜமல்ல என்று அவனுக்கு யார் சொல்லுவது. அவனது தொழில் மூளை காதலின் அறிவில் மந்தமாக இருந்தது.

வீட்டிற்கு வந்தவன் கடலை வெறித்தவாறு நின்றுவிட்டான். எவ்வளவு நேரம் நின்றிருந்தானோ உப்புக்காற்றின் குளிர் உடலை துளைக்கவே அறைக்குள் சென்றவன் நித்திரையில் விழுந்தான்.

கனவில் மீண்டும் அவ்விழிகளின் அலைப்புறுதல். கண்ணா என்கிற ஓலம். உடல் முழுக்க வியர்வையில் குளித்திருக்க, மிகுந்த பதட்டத்துடன் எழுந்தமர்ந்தான்.

அக்குரல் அவனின் நெஞ்சின் அடி ஆழத்தில் அமிழ்ந்திருக்கும் உணர்வு.

‘யாரோட வாய்ஸ் அது. நிச்சயம் அது… ஓர் ஆணின் குரல்.’ அவனின் மனம் சொல்லிக்கொண்டது.

கனவு வரத் தொடங்கிய நாள் முதலாக, கண்களுக்கு உரித்தான பெண்ணின் குரலென்று அவன் நினைத்திருக்க இன்றோ அது ஆணின் குரல் எனத் தெளிவாக தெரிந்ததும் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். தூக்கம் எங்கோ சென்றிருந்தது.

‘அக்குரல் தன்னிடம் என்ன சொல்ல முற்படுகிறது? குரலுக்கும் கண்களுக்கும் என்ன சம்மந்தம்?’

கேள்விகள் உதித்த அளவிற்கு அவனுக்கான பதில்கள் கிடைக்கவில்லை.

கண்களை மூடி தன்னை சமன்படுத்த முயன்றவன் வெற்றி கண்ட பிறகும் அந்நிலையிலே அமர்ந்திருக்க… யாரோ ஒருவரின் மடியில் பார்த்திபன் அமர்ந்திருக்க, கண்ணா என்ற விளிப்போடு அவர் அவனின் கன்னம் தீண்டி செல்லம் கொஞ்சும் காட்சி கோர்வையாய் கண்ணில் படர்ந்த போதும்… அந்த ஆணின் முகம் தெளிவில்லாது இருந்தது.

அந்நிகழ்வு தன்னுடைய சிறு பிராயத்தில் நடந்துபோல் அவனுக்குத் தோன்ற நினைவுகளை தன் மூளையின் அடுக்கில் தேடி கலைத்துப்போனவனின் முன்னே மீண்டும் அதே காட்சி. இப்போது அவரின் மடியில் அமர்ந்திருந்த சிறுவனான பார்த்திபன் அவரை மாமா என்று அழைக்கும் குரல் பார்த்திபனின் செவி தீண்டியது.

படக்கென கண்கள் திறந்தவன்,

“இந்த மாமா யாரு?” வாய்விட்டே கேட்டுக்கொண்டான்.

‘அம்மாவிற்கு அண்ணன் இருப்பதா…’ உடனடியாக நேரத்தையும் பொருட்படுத்தாது அன்னைக்கு அழைத்துவிட்டான்.

“சின்னத் தங்கம்.” அவரின் குரலில் பதட்டம்.

மொபைலின் ஒலியில் உறக்கத்தில் இருந்த மங்கை எழுந்து நேரத்தைப் பார்த்தவர், திரையில் ஒளிர்ந்த மகனின் எண்ணில் துணுக்குற்றவராய் ஆன் செய்தார்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இரண்டரை மணிநேரம் வித்தியாசம். அங்கு நேரம் அதிகாலை ஐந்தை நெருங்கிக்கொண்டிருக்க… இந்தியாவில் பின் இரவு இரண்டு முப்பது.

இந்நேரத்தில் உறங்காது அழைத்திருப்பதாலே மங்கையிடம் பதட்டம்.

அன்னையின் குரல் கேட்ட பின்னரே இந்நேரம் தான் அழைத்ததை எண்ணி தன் நெற்றியில் தட்டிக்கொண்டான்.

“மாம்… அம் ஓகே. உங்கக்கிட்ட பேசணும் போல் இருந்தது. அதான் நேரத்தை பார்க்காம கால் பண்ணிட்டேன்” என்று கூறியவன் மேற்கொண்டு பொதுவாக பேசிவிட்டு இறுதியில்…

“மாம் உங்களுக்கு ஒரு அண்ணன் இருக்கார் இல்லையா?’ எனக் கேட்டான்.

‘இத்தனை வருடங்கள் இல்லாது இப்போது எதற்கு இதென’ நினைத்தாலும் மகனுக்கு ஆமென்று பதில் வழங்கினார் மங்கை.

“அவர் என்னை கண்ணான்னு தான் கூப்பிடுவாரா மாம்.”

பார்த்திபனின் அடுத்த கேள்வியில் மங்கையிடம் ஸ்தம்பித்த நிலை.

“மாம்.”

மங்கையிடம் பதிலின்றி போக சத்தமாக அழைத்தான்.

“உனக்கு அவரை ஞாபகம் இருக்காப்பா?” மங்கையிடம் ஓர் எதிர்பார்ப்பு.

“அவரை பற்றி இத்தனை வருடத்தில் ஒருமுறையாவது நீங்க சகஜம சொல்லியிருந்தா எனக்கு தெரிந்திருக்குமோ என்னவோ!”

தனக்கு தெரியாது என்பதற்கு காரணமே தாங்கள் தான் என்று ஒரு கொட்டு வைத்திருந்தான்.

“உன் அப்பாவை மீறி என்னால் பேசியிருக்க முடியும் நினைக்கிறியா?”

“நான் கேட்டதற்கு இது பதிலில்லையே மாம். பட் எனக்கு கிடைக்க வேண்டிய பதில் கிடைச்சாச்சு.”

“பார்த்திபா…”

“எஸ் மாம்.”

“அவருக்கு நீன்னா உயிருப்பா!”

“ஐ கேன் ஃபீல் மாம்.”

அத்தோடு இணைப்பைத் துண்டித்துவிட்டான்.

அப்போதே சென்னையிலிருக்கும் தன்னுடைய நண்பனுக்கு… ‘நான் சென்னையில் தான் இருக்கேன். உன்கிட்ட சொன்ன விஷயம் என்னவானது? நாளை சந்திக்கலாம்” என குறுஞ்செய்தி அனுப்பியவன் ஏதேதோ யோசனைகளில் அலைபாய்ந்தபடி உறங்கிப்போனான்.

*****

கயலை பேருந்தில் ஏற்றிவிட்டு முகி வீடு திரும்பியிருந்தான்.

மாணிக்கமும் சரளாவும் அவர்களது இல்லத்தில் இருந்தனர். நேரே அங்கு தான் சென்றான்.

“மாமா…”

முகியின் அழைப்பில் உள்ளிருந்த மாணிக்கம் வெளியில் ஓடிவந்தவர் முகியை உள்ளே அழைத்து அமர வைத்தார்.

சரளாவும் வந்து அவனையே ஏறிட்டபடி நின்றார்.

“நான் பண்ணது தப்புன்னு என்னைக்கும் சொல்லமாட்டேன். ஆனால் யாருக்கும் தெரியாம நடந்தது தப்புன்னு எனக்கே தெரியுது. அதனால் என்னை…”

“மன்னிப்பு கேட்டு கஷ்டப்படுத்திடாதீங்க முகிலா.”

முகியை மன்னிப்பு என்கிற வார்த்தையைக்கூட சொல்ல விடாது தடுத்தார் மாணிக்கம்.

“உங்களை நான் எப்பவும் மாப்பிள்ளையா நினைச்சு பார்த்தது இல்லைங்க… அதுக்காக எங்க ஐயாவே என் வீட்டுக்கு மகனா வரும்போது அதை எட்டி உதைக்குற எண்ணமும் எனக்கில்லை.

எம் மகளுக்கு உங்களைவிட நல்ல பையன் கிடைச்சிடுவானாங்க.

ஊரறிய கல்யாணம் நடக்கலையேன்னு வருத்தம் இருக்கத்தான் செய்யுது. அதுக்காக நடந்ததை இல்லைன்னு சொல்லிட முடியுங்களா?

எங்களுக்கு இது சந்தோஷம் தான்.”

இறுதி வரியை சரளாவை பார்த்துக்கொண்டே பேச்சில் அவரையும் தன்னோடு இணைத்துக் கூறினார்.

“அப்போ மலர் இனி எங்க வீட்டுலே இருக்கட்டுமா?”

எந்த சூழ்நிலையில் தாலி கட்டியிருந்தாலும் இனி அவளுக்கான அனைத்தும் தன் பொறுப்பு கடமை என எண்ணினான். அதனை உரிமையாய் செய்திட மலர் அனுமதிக்கும் வரை தன்னுடன் தன்னறையில் தன்னை புரிந்துகொள்ளும் வரையிலும் தன்னுடனே இருக்க வேண்டும். தன்னுடன் இருப்பதே அவளை தனக்கு நெருக்கமாக்கும் என எண்ணினான். அதனாலே மலரை தன்னுடன் இருக்க வைக்க நினைத்துக் கேட்டான்.

“மலர் இன்னைக்கு ஒருநாள் இங்கிருட்டும் முகி. நாளைக்கு கயல் வந்ததும் கோவிலுக்கு போயிட்டு ஒரு பொங்கலை வைச்சுடலாம். அப்புறம் அங்க இருக்கட்டும்” என்ற சரளாவின் பேச்சினை ஏற்றவனாக அங்கிருந்து செல்ல எழுந்தவன்… மலரைத்தேடி வீட்டை பார்வையால் அலசியபடி,

“எம்மேல உங்களுக்கு வருத்தம் ஒன்றுமில்லையே?” என வினவினான்.

இருவருமே ஒரு சேர இல்லையென தலையசைக்க அமைதியான மனநிலையில் தன் இல்லம் சென்றான்.

அன்றைய கரும்பு கணக்கை சிவா விவரிக்க, சிரத்தையாகக் கேட்டுக்கொண்டவன் எப்போதும் கயல் எழுதி வைக்கும் நோட்டில் கணக்கை குறித்து வைத்தவன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

சற்று நேரம் அமைதியாக இருந்த சிவா…

“ஃபீல் பண்றியா முகி” என்றான்.

“எனக்காக ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செய்யுற கயலுக்கு நான் உண்மையா இல்லை தானே?”

“ச்சூ… உலராதே!”

முகியின் பேச்சை அடக்கினான் சிவா.

“உண்மை அது இதுன்னா என்னடா பேசுற நீ. இதைக்கேட்டாதான் கயல் வருத்தப்படுவாள்” என்றான்.

“இப்பவும் கயல் வருத்தப்பட நான் காரணமாகிட்டனேன்னு கில்டியா இருக்குண்ணா.”

‘கயலுக்காக சிறு நிம்மதியை கூட இதுவரை நான் கொடுக்கல… அத்தோட நடந்தது மிகப்பெரிய வருத்தமா அவளுக்கு அமைய நான் காரணமாகிட்டனே’ என்று உள்ளுக்குள் தம்பியாய் உடைந்திருந்தான்.

“மலரை கல்யாணம் செய்ததை நினைத்து வருந்துறியா முகி.”

“நிச்சயம் இல்லைண்ணா. மலர் தான் என் வாழ்க்கை. ஆனால் அந்த வாழ்க்கையில் அக்காவா கயலுக்கு நான் பங்களிக்கவில்லையோன்னு தான் ஃபீல் பண்ணுறேன்” என தன் மனதை தெளிவாக்கினான்.

“உன் சந்தோஷம் கயல் சந்தோஷம் டா. அதைவிட மலருன்னா கயலுக்கும் பிடிக்கும் தானே! அதனால் கண்டதை நினைத்து குழம்பாம சாப்பிட்டு படு” என்ற சிவா எழுந்துகொள்ள,

“ரொம்ப தேங்க்ஸ்ண்ணா” என்றான்.

இந்த நன்றி எதற்காக என்பதைப்போல் சிவா பார்க்க…

“நீங்க மட்டும் முன்யோசனையா ராமசாமி பெரியப்பாவிடம் பேசவிலன்னா ஊர் மக்கள் இப்போ மாதிரி அமைதியா இருந்திருப்பாங்களா? சந்தேகம் தான். அதுக்குத்தான் தேங்க்ஸ்” எனக் கூறினான்.

சிறு புன்னகையுடன் சிவா சென்றிட விட்டத்தை பார்த்தவாறு அமர்ந்துவிட்டான். நேரம் விரைந்து கடந்து சென்றது.

கயல் இல்லாததால் இரவு உணவை சரளா கொண்டு வந்து கொடுக்க சாப்பிட்டு தனது அறைக்கு வந்தவன், சன்னலோரம் நின்று மலரின் வீட்டில் கண்களை பதித்தான்.

கால்களை கட்டிக்கொண்டு தலை கவிழ்ந்து முற்றத்தில் மலர் அமர்ந்திருப்பது நன்கு தெரிந்தது. அவளின் முகத்தை வைத்து அவளின் எண்ணம் என்னவென்று முகியால் யூகிக்க முடியவில்லை.

சரளா அவளை சாப்பிட அழைப்பதும்… மலர் மறுப்பதுமாக இருப்பது முகிக்கு தெளிவாகக் கேட்டது.

“உன் முடிவு எதுவா இருந்தாலும் நான் சம்மதிக்கிறேன்” என்று அவளின் மனகுழப்பதை அகற்றி தன் தோளில் சாய்த்து சாப்பிட வைக்க வேண்டுமென்கிற ஆவல் எழுந்தபோதும் ‘இப்போது அதனை செய்யும் நிலை தனக்குமில்லை அதனை ஏற்றுக்கொள்ளும் மனம் அவளுக்குமில்லை’ என நினைத்தவன் விருப்பமற்று மெத்தையில் விழுந்தான்.

முழுதாய் அவனின் சிந்தனையை மலர் ஆட்கொள்ள அவ்விரவை உறக்கமின்றி கழித்தான்.

காலை ஆறு மணியளவில் அலைபேசியில் முகியை அழைத்த கயல் தான் இன்னும் அரை மணி நேரத்தில் டவுன் பேருந்து நிலையம் வந்துடுவேன் என்பதை தெரிவித்து வைத்துவிட்டாள்.

“போனதும் கிளம்பியிருப்பாளோ” என்ற எண்ணத்தோடே கயலை பிக் செய்ய, குளியலறைக்குள் புகுந்து ஐந்து நிமிடத்தில் கிளம்பி வெளிவந்தவன் பார்த்தது தங்களது வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த மலரைத்தான்.

முகியின் அரவம் உணர்ந்து நிமிர்ந்தவள் எதுவும் பேசாது மீண்டும் தன் பணியை செய்ய… ஆழ்ந்த மூச்சினை வெளியேற்றியபடி தன் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து சென்றான்.

முகி செல்வதற்கும் கயல் பேருந்திலிருந்து இறங்குவதற்கும் சரியாக இருக்க… வீட்டிற்கு சென்று என்னவென்பதை கேட்டுக்கொள்ளலாம் என்று கயலை கூட்டிக்கொண்டு அடுத்த நொடியே தங்கள் வீடு நோக்கி புறப்பட்டிருந்தான்.

தங்களது ஊர் எல்லையைத் தொட்டதும்…

“நேரா தோப்புக்கு போ முகி.”

கயலின் குரலில் சுரத்தே இல்லை.

“என்னாச்சு கயல்?”

“ஒண்ணுமாகல முகி. அதுதான் என் கவலையே” என்றாள்.

“சரி அதைவிடு, மலர் என்ன முடிவு பண்ணியிருக்காள்?” என தன் கவலையை தள்ளி வைத்துவிட்டு தம்பியின் பிரச்சனைக்கு வந்திருந்தாள்.

“சாரிக்கா…”

“எத்தனை முறை சாரி சொல்லுவ… என்கிட்ட உன் லவ்வை சொல்லன்னு கோபம் தான். அதுக்காக உன்னை விட்டுடுவேனா முகி” என்றவள், “புதுசா இந்த அக்கால்லாம் வேண்டாம். எப்பவும் போல கயலுன்னே சொல்லு. நீ அக்கா சொல்லுறது என்னவோபோல இருக்கு” என்றாள்.

அவனின் மனநிலையை மாற்ற முயற்சி செய்தாள்.

மீண்டும் மலரே பேச்சினை ஆரம்பித்தாள்.

“இன்னும் நான் கேட்டதுக்கு பதில் சொல்லலை நீ.”

“இன்னும் அவகிட்ட நானே பேசலக்கா” என்றவன் நேற்று சரளா மாணிக்கத்திடம் தான் பேசியதையும் சரளா சொல்லியதையும் சொல்லியவன்…

“மலர் இங்கிருப்பது சேஃப் இல்லைன்னு தோணுது கயல்” என்றான்.

“சிங்காரம் என்ன பண்ணுவாருன்னு நினைச்சா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. சரிவிடு அடுத்து என்னன்னு யோசிப்போம்.”

அதற்குள் அவர்களின் தோப்பும் வந்திருக்க… சற்று தூரத்தில் கரும்பு வெட்டும் காட்சி தெளிவாக தெரிந்தது.

“இன்னும் ரெண்டு மூணு நாளுல முடிஞ்சிரும் போல” என்றவள் கிணற்று மேட்டில் அமர்ந்தாள்.

“இப்போ என்ன உன்னை போட்டு குடையுது?”

கயல் எப்போதும் தன்னை நிலைப்படுத்த நினைக்கும் போதெல்லாம் இங்கு வந்துதான் அமர்ந்திருப்பாள். அதனாலே இப்போது முகி அவ்வாறு வினவினான்.

“அத்தை மாமா பற்றி ஒரு தகவல் கிடைச்சிருக்கு முகி.” கயலின் பேச்சில் முகி ஆர்வமானான்.

“அவங்க யாருன்னு தெரிஞ்சிருச்சா. எங்க இருக்காங்களாம்? என்ன பண்றாங்களாம்? ஏன் இத்தனை வருஷமா நம்மை பார்க்க வரலையாம்?” அடுக்கடுக்காக முகியின் கேள்விகள் நீண்டுகொண்டே சென்றன.

“ஹேய் நிறுத்து… நிறுத்து…” என்று தம்பியின் வாயினை மூட செய்தாள்.

இத்தனை வருடங்கள் ரத்த சொந்தங்களின்றி தனித்திருந்தவனுக்கு தங்களுக்கென்று உறவென சொல்லிக்கொள்ள இருக்கின்றனர் என்றும் சற்று உணர்ச்சிவயப்பட்டான். அதான் வெளிப்பாடே முகியின் கேள்விகள்.

“அவங்க இங்கிருந்து சென்னை போய் அங்கிருந்து வெளிநாடு எங்கேயோ போயிட்டாங்கன்னு மட்டும் தான் முகி தகவல் கிடைச்சிருக்கு.”

“வெளிநாடுனா… எங்க?”

தெரியல என்பதைப்போல் உதடு காண்பித்தாள்.

“இதை கண்டுபிடிக்கவா சிக்ஸ் மந்த்ஸ்.” ஆயசமாக உணர்ந்தான்.

“கிட்டத்தட்ட இருபது வருடத்துக்கு முன்னாடி நாம தேட சொல்லியிருக்கோம் முகி. கொஞ்சம் டைம் எடுக்கும்.” ஆனால் இரவு சந்தித்தவர் பேசியதை வைத்து கிடைப்பது கடினமென்று தெரிந்ததோடு… இனியும் தேடுவதும் முட்டாள் தனமென்றே தோன்றியது.

கயலால், தன் தந்தையின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றிட முடியுமா?

error: Content is protected !!
Scroll to Top