பார்த்திபனின் க(வ)யல்விழியாள் 40

அத்தியாயம் 🌾 40 :

“எதுக்குடா என் கண் முன்னாடி வந்த. மனசுல எந்த சஞ்சலமும் இல்லாம சீரா இருந்தேன். உன்னை எப்போ பார்த்தனோ அப்போலிருந்து என் மனசே நான் சொல்லுறதை கேட்க மாட்டேங்குது.”

தென்னை மரங்களுக்கு நடுவில் கயிற்று கட்டிலில் கால் மேல் காலிட்டு, தலைக்கு அடியில் இரு கைகளையும் வைத்து… இரவு வானை ரசித்திருந்தவனின் மனமும் செவியும் மீண்டும் மீண்டும் கயல் பேசிச் சென்றதையே நினைத்திருந்தது.

அதுவும் மேற்கண்ட வார்த்தைகள் பார்த்திபனிற்கு அத்தனை மகிழ்வையும் அள்ளித்தந்தது.

“போ போன்னு துரத்துற. உன்னை விட்டு எங்கடி போறது?” அருகில் இல்லாத கயலிடம் கேட்டுக்கொண்டான்.

“நீ காதல் சொல்லும் போது வந்த தைரியம்… நான் சொன்ன காதலை ஏத்துக்க வரலயே!” உண்மை தெரிந்தால் சரியாகிவிடுவாள் என்று நினைத்தான். ஆனால் அதற்கு பிறகு தான் கயல் அவனை வைத்து செய்யப்போகிறாள் என்பது அவனுக்குத் தெரியவில்லை.

“காதலை சொல்லியாச்சு. ரெண்டு பேரும் லவ் பன்றோம். நாளைக்கு பார்த்தால் எப்படி ரியாக்ட் பண்ணுவாள்.” பார்த்திபனின் எண்ணம் முழுக்க அலைந்து அலைந்து கயலிடமே நிலைத்தது.

“நாளை கேட்கும் போது ஏதோ எமோஷ்னல் சொல்லிட்டேன்னு மறுத்துட்டா.” நினைத்த மாத்திரம் திக்கென்று இருக்க எழுந்து அமர்ந்துவிட்டான்.

“அய்யோ படுத்துறாளே! எப்படி சிங்கமாட்டாம் சுத்திட்டு இருந்தேன். இப்படி நாய்குட்டியா அவள் பின்னாடி சுத்த வச்சது மட்டுமில்லாம புலம்ப வேற விட்டுட்டாளே” என்றவன் கவிழ்ந்தடித்து படுத்து தலையணையில் முகம் புதைத்தான்.

அவனின் நெஞ்சத்தில் கயலின் முகம் புதைந்ததை நினைவூட்ட… “இது வேலைக்காகாது” என்று மீண்டும் எழுந்தவன், தலையை உலுக்கி தன்னை சமன்படுத்தியவாறு தோப்பில் உலா வந்தான்.

“ராட்சசி… இப்படி பேய் மாதிரி உலாவவிட்டுட்டாளே. காதலை சொன்னவள் என் காதலையும் ஏத்துகிட்டு போயிருக்கலாமே! இப்போ ரிசல்ட் தெரியுற வரை நான் இப்படி உலாத்திக்கிட்டு, புலம்பிக்கிட்டு இருக்கணும்” என்று இரவு முழுவதும் முணுமுணுத்தபடி நடந்து கொண்டிருந்தவன் எப்போது வந்து படுத்தான் என்றே தெரியவில்லை.

காலை தென்னை ஓலைகளை கிழித்துக்கொண்டு சூரியனின் கதிர்கள் சுள்ளென்று முகத்தில் அடிக்கவும் தான் எழுந்தான்.

எழுந்ததும் கயலின் நினைவு தான் முன்னுக்க வந்தது.

அதனை முயன்று புறம் தள்ளியவன், தேவராஜனுக்கு அழைத்தான். அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வரவும், ‘மொபைல் ஆன் பண்ணாமலே ஜெட் லாக்கில் தூங்கிட்டாரோ’ என்றுதான் அவனும் நினைத்தான்.

குளித்து முடித்து கயலுக்காகக் காத்திருந்தான்.

நேற்றே முகியிடம் சொல்லியிருந்தான்…

“சிவா இல்லை. நீ சாப்பாடு கொண்டு வந்துடாத. கயல் வரட்டும். உன்னை போக சொன்னாலும் நீ காரணம் சொல்லிக்கோ” என்று கிட்டத்தட்ட மிரட்டியே இருந்தான்.

அதனால் இப்போது கண்டிப்பாக கயல் தான் உணவு கொண்டு வருவாள், அவளை எப்படியாவது காதலை ஏற்க வைத்துவிட வேண்டும் என்று அவளுக்காக பார்த்திருந்தான்.

பார்த்திபன் எதிர்பார்த்ததை போலவே, கயல் அவளது தந்தையின் வார்த்தைகளை மீறி அவனுக்காகவே அவனை காதலிக்கத் தொடங்கிவிட்டாள். இதற்குமேல் அவனுக்கு என்ன வேண்டும். இனியும் கயலை மனதால் போராட வைக்கக்கூடாது என்று முடிவெடுத்தே காத்திருக்கிறான்.

ஆனால் நேரம் தான் கழிந்ததே தவிர யாரும் உணவு கொண்டுவரவில்லை.

‘என்னடா இது என்னை மறந்துட்டாங்களா என்ன?’ என்று நினைத்தவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது.

மேலும் சில மணி பொறுத்திருந்தவன் தாமே போவோமென்று கிளம்பினான்.

வீட்டிற்கு முன்னிருக்கும் பெரிய வாய்க்காலின் அருகில் சென்றதுமே, வெளி திண்ணையிலேயே அமர்ந்திருந்த மங்கை, முகியை கண்டுவிட்டான்.

அவர்களின் முகம் சரியில்லாததை அருகே நெருங்க உணர்ந்து கொண்டான்.

வீட்டிற்குள்ளே எட்டிப் பார்த்தவன்,

“மாம் ஏன் இப்படி இருக்கீங்க?” என்று அவன் கேட்டு முடிக்க கயல் உள்ளிருந்து வெளிவந்தாள்.

“என்ன காலையிலே வெளியில் மீட்டிங்?” என்று கேட்டபடி வந்தவள் பார்த்திபனை எதிர்பார்க்கவில்லை. நொடியில் முகத்தை தரை தாழ்த்தியிருந்தாள்.

கண நேரம் பார்த்திபனுக்கு போதுமானதாக இருந்தது. அவனவளை அளவிடுவதற்கு.

‘நைட் முழுக்க அழுதிருக்காள். இடியட்.’ மனதில் தன்னவளை திட்டினான்.

‘என்னை லவ் பண்றது மேடத்துக்கு அவ்வளவு கஷ்டமா’ என தனக்குத்தானே கேட்டுக்கொண்டவன், ‘இதுக்கெல்லாம் சேர்த்து வைத்து உன்னை லவ் டார்ச்சர் செய்றேன் இரு’ என்று கூறிக்கொண்டான்.

“பார்த்திபா… ஆஆஆ”

மங்கையின் தீனமான குரல் பார்த்திபனை கலைத்தது.

அன்னையின் சோர்வடைந்த விளிப்பு ஏதோ விபரீதம் என்பதை அவனுக்கு உணர்த்தியது.

முகியின் மேல் சாய்ந்திருந்த மங்கை…

பார்த்திபன் வந்து காரணம் கேட்டபோதும் சுயம் பெறவில்லை. கணவரை நினைத்து உழன்று கொண்டிருந்தார். தேவராஜனிற்கு என்ன ஆனதோ என்று வெளிப்படையாகவே நடுங்கிக்கொண்டிருக்க… முகி தான் அவரை உலுக்கி பார்த்திபன் வந்திருப்பதைக் கண்காட்டினான்.

மகனை கண்டதும் அந்த தாய் ஆறுதல் தான் தேட விழைந்தார். தங்களின் நாடாகமெல்லாம் மங்கையின் நினைவிலே இல்லை.

“பார்த்திபா” என்ற கேவலுடன் தன்னை நோக்கி இரு கரம் நீட்டிய அன்னையை “மாம்” என்ற விளிப்போடு தன் தோள் தாங்கினான்.

அந்நொடி பார்த்திபனுக்கு அன்னையே பிரதானம்.

மங்கையை அணைத்துக்கொண்டவன் கயலை மறந்துபோனான். மங்கையின் உரிமையான அழைப்பிலும், பார்த்திபனின் மாம் என்கிற விளிப்பிலும் அவர்கள் சொல்லாதது கயல் அறிவதாய்.

கயலின் விரிந்த விழிகளே அவளின் அதிர்வின் அளவை பறைசாற்றியது. அதனை கவனிக்க யாருமில்லை அங்கே.

“என்னாச்சு முகி. மாம் ஏன் இப்படி இருக்காங்க?”

மங்கை பதில் சொல்லும் நிலையில் இல்லை என்று முகியிடம் வினவினான்.

அதில் கயலுக்கு மேலும் அதிர்ச்சி.

“மாமா இன்னும் கால் பண்ணலன்னு அத்தை கவலையா இருக்காங்க அத்தான்” என்ற முகி கயலை நிமிர்ந்துப் பார்த்து… பின் தலையை குனிந்து கொண்டான்.

‘அத்தானா? அப்போ கண்ணத்தான் இவரா!’ அதிர்ச்சியும் கோபமும் ஒருங்கே எழுந்த அதே கணம் மனதின் ஓரமிருந்த பெரும்பாரம் ஒன்றும் விலகி ஓடியது.

கண்களில் நீர் கோர்த்து நின்றது. அவளின் உணர்வுகளுக்கான அர்த்தம் அவளுக்கே விளங்கா நொடிகள் அவை.

முகியின் பார்வை கயலின் மீது பதிந்து மீண்ட பின்னரே பார்த்திபனும் கயலின் நிலையை அறிந்து அவளை ஏறிட்டான்.

ஆனால் கயலுக்கு விளக்கம் சொல்லும் தருணம் அதுவல்லவே.

மங்கையை ஆறுதல் படுத்த முயன்றான்.

“மாம்… இங்க என்னை என் முகத்தை பாருங்க” என்று தன் தோளில் சாய்ந்திருந்த மங்கையின் அமைதியை கலைத்து தன் முகத்தை காணச் செய்தான்.

“டாட்’க்கு எதுவும் ஆகியிருக்காது. பயப்படாதீங்க.” வார்த்தைகளால் தேற்றினான்.

“எனக்கென்னவோ மனசே சரியில்லை பார்த்திபா, நீ நேரா அங்கபோய் பார்த்துட்டு வந்துடு கண்ணா” என்றவர்… “இல்லையில்லை நானும் வரேன் போகலாம்” என்று எழுந்தார்.

“மாம்… நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க. நான் சிங்கப்பூரில் விசாரிக்கிறேன்” என்றவன் பாக்கெட்டிலிருந்து தன்னுடைய அலைபேசியை எடுத்தவனாக முகிக்கு கண்காட்டிவிட்டு சற்று தள்ளி சென்றான்.

அலைபேசியை பார்த்தவன் அப்போதுதான் கவனித்தான் தவறவிட்ட அழைப்புகள் நான்கு எனக் காட்டியது. அனைத்தும் சிங்கப்பூர் அழைப்பு. அதில் மூன்று லிண்டாவிடமிருந்து.

அலைபேசியை சைலன்ட் மோடில் போட்ட தன்னையே தட்டிக்கொண்டான்.

அவசரமாக லிண்டாவின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.

“எனித்திங் எமர்ஜென்சி?”

சிங்கப்பூர் போலீஸ் உயர் அதிகாரி பார்த்திபனுக்கு அழைத்து பார்த்துவிட்டு, அவனுடைய அலுவலக எண்ணிற்கு அழைத்து… உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு சொல்லியதாக சொல்ல… அடுத்து அவருக்கு அழைத்தான்.

“ஹாய் மிஸ்டர்.பார்த்திபன். நீங்க அவுட் ஆஃப் கண்ட்ரின்னு தகவல் கிடைத்தது.”

“யாப்” என்ற பார்த்திபன் விடயத்தை எப்படி கேட்பதென்று தயங்க அவரே கூறினார்.

“லூங் இன்ப்ளூவென்ஸ் யூஸ் பண்ணி வெளியில் வந்துட்டான் பார்த்திபன். என்னால ஒன்னும் பண்ண முடியல. நிறைய மணி(money) விளையாடியிருக்கு” என்றவர் அவ்வளவு தான் என்பது போல் வைத்துவிட்டார்.

பார்த்திபன் சொல்லித்தான் லூங் கைது செய்யப்பட்டார். லூங்கின் இல்லீகள் பிஸ்னெஸ் அறிந்த அவரும் லூங்கை பிடிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதாயென்று எதிர்பார்த்திருக்க, பார்த்திபன் ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்.

லூங் கைதான அன்றே எப்படியும் வெளியில் வந்துவிடுவானென்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவானென்று பார்த்திபன் எதிர்பார்க்கவில்லை.

இதற்கு எவ்வளவு செலவு லூங் செய்திருப்பாரென்று பார்த்திபனால் யூகிக்க முடிந்தது.

வேகமாக டெல்லிற்கு அழைத்தவன், உடனடியாக பிரைவேட் ஜெட் ஒன்றை ஏற்பாடு செய்ய கட்டளையிட்டான்.

மீண்டும் மங்கையிடம் வந்தவன்,

“நான் கிளம்புறேன் மாம். வரும்போது கண்டிப்பா டாட் கூட்டிட்டு வருவேன்” என்று சொல்லியவன் கயலின் கையைப்பற்றி இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்று கண்ணில்பட்ட அறைக்குள் நுழைந்தான்.

அவனின் கையை உதறி விலகியவள், முறைத்துக்கொண்டு நிற்க… அதையெல்லாம் அசட்டை செய்தவனாக, கயலை இறுக அணைத்து விடுவித்து…

“ஐ கேன் எக்ஸ்பிளேன் கயல். பட் திஸ் இஸ் நாட் ரைட் டைம் தட். அம்மாவை பார்த்துக்கோ. நான் வரேன்” என்று சொல்லியவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்து வெளியேறினான்.

அவள் அப்படியே நின்றிருந்தாள்.

வெளியில் வந்த பார்த்திபன் முகியிடம் மங்கையை பார்த்துக்கொள்ள சொல்லிக் கொண்டிருக்கும் போது…

“அவருக்கு என்னாச்சு பார்த்திபா?” என்று மங்கை வினவினார்.

“எதுவும் ஆகியிருக்காது மாம்” என்று தனக்கும் சேர்த்து சொல்லியவன், “நீங்க கவலைப்படாம இருங்க” என்றான்.

“முதல்ல நான் சொல்லும்போது அவருக்கு ஒன்னுமிருக்காது சொன்ன. இப்போ அவசரமா கிளம்புற, என்கிட்ட எதையாவது மறைக்கிறியா?” எனக் கேட்டார் மங்கை.

தெரியாத ஒன்றை அவன் எப்படி சொல்லுவான்.

லூங் வெளியில் வந்துவிட்டான். அங்கு சென்ற தேவராஜனைப் பற்றி தகவல் ஒன்றுமில்லை. ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும் என்பது மட்டும் பார்த்திபனுக்கு திண்ணம். அதனாலேயே அங்கு செல்ல முடிவெடுத்து இப்போது கிளம்பியும் விட்டான். ஆனால் இதனை மங்கையிடம் சொன்னால் ஏற்கனவே உடைந்திருப்பவர் மொத்தமாக சிதைந்து விடுவார்.

அதற்காக காரணத்தை தவிர்த்தவன், “உங்க புருஷனோட வந்து பதில் சொல்றேன்” என்றவனாக காரினை அதிவேகத்தில் கிளப்பிக்கொண்டு சாலையில் பறந்தான்.

வேகமென்றால் அப்படியொரு வேகம். கண்மண் தெரியாத வேகம். லூங்கின் மீதான மொத்த கோபத்தையும் காரின் வேகத்தில் காண்பித்தான்.

ஆறு ஏழு மணிநேர பயணத்தை நான்கு மணி நேரத்தில் கடந்திருந்தான்.

சென்னை வந்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு அடுத்த பதினைந்து நிமிடங்களில் தனி விமானத்தில் புறப்பட்டுவிட்டான்.

****

லூங்கின் முன் கால் மேல் காலிட்டு தன் திமிர் தோரணையுடன் பார்த்திபன் அமர்ந்திருந்தான்.

அணிந்திருந்த ரேபானுக்கு பின்னால் அழுத்தமான கூர்ப்பார்வை.

கூலர்ஸை தாண்டி லூங்கின் திடம் குலைந்தது. முதுகுத்தண்டு சில்லிட்டது. அதனை வெளிக்காட்டிக்கொள்ளாத ஓர் விறைப்புத்தன்மை அவரிடம்.

சில நிமிடங்களில் இருக்கையை விட்டு எழுந்த பார்த்திபன்…

“பை லூங்” என்று சொல்லிவிட்டு அமைதியாகச் சென்றான்.

பார்த்திபனின் இந்த அமைதிக்கு பின்னால் வரும் புயல் லூங் அறிந்ததே. ஆனால் தேவராஜன் தன் கையில் இருக்கும்வரை பார்த்திபனால் தன் விரலைக்கூட அசைக்க முடியாதென்று இறுமாந்து இருந்தார்.

பார்த்திபனுடன் டெல்லும் வந்திருந்தான்.

தன்னுடைய அலுவலகத்திற்கு வந்த பார்த்திபன்… மடிக்கணினியில் கண்களை புதைத்திருந்த டெல்லிடம்,

“என்னடா ரெடியா?” எனக் கேட்ட மறுநொடி தன் பெருவிரலை உயர்த்தி காட்டினான் டெல்.

“தி கேம் ஸ்டார்ட் நௌவ்.” விஷம சிரிப்பு அவனிடம்.

அடுத்த பத்து நிமிடங்களில் லூங் பார்த்திபனை அழைத்திருந்தார். அவன் எடுத்தால் தானே.

பொறுமையாக மூன்றாவது அழைப்பிற்கு செவி மடுத்தான்.

“பார்த்திபன் உன் அப்பா என் கையில்.” எடுத்ததும் மிரட்டல் அவரிடம்.

அதற்கெல்லாம் அசருபவனா நம் நாயகன்.

“தெரியுமே” என்று அலட்டிக்கொள்ளாது கூறியவன், “உனக்கு ஒரு நிமிஷம் கூட கிடையாது லூங். என்னோட டாட் சின்ன கீறலும் இல்லாம வந்து சேரணும்” என்று ஆணையிட்டான்.

“அனுப்பலனா?”

“சேம்பிள் பார்த்தே அரண்டு போய் கால் பண்ணியிருக்க… மெயின் பிக்சர் காட்டினா…” வார்த்தையை முடிக்காது விட்டான்.

அதில் லூங்கின் மொத்தமும் ஆட்டம் கண்டது.

லூங்கின் ஒட்டுமொத்த பங்குச்சந்தை கணக்கீடுகளும் கடைசிப்புள்ளி வரை வீழ்ச்சியை சந்தித்து பூஜ்ஜியத்தில் நிலைத்திருக்க… அதிலிருந்து மீளவே இதுவரை சேர்த்து வைத்தவை கூட போதாது. பல ஆண்டுகள் உழைத்திட வேண்டுமென்ற நிலையில், இதையே சேம்பிள் என்கிறானே என்ற கோபம் அவருள்.

“அப்படியென்னன்னு ரொம்ப யோசிக்காத. நானே சொல்றேன்” என்ற பார்த்திபன், “உன் இல்லீகள் பிஸ்னெஸ் பற்றிய டாக்குமெண்ட்ஸ்… உன் ஸ்விஸ் பேங்க் அக்கௌன்ட் கன்ட்ரோல் வரை என்னுடைய பிங்கர் டிப்பில் வச்சிருக்கேன். இது போதுமா இன்னும் சொல்லவா?” என்று கேலியுடன் வினவினான்.

மனிதர் மிரண்டுப்போனார்.

‘சும்மா இருந்தவனை சீண்டிவிட்டுட்டோமா!’ காலம் கடந்து வருந்தினார்.

‘மீண்டும் சிறைக்கு சென்றால் வெளியில் வருவது என்பதே கனவாகிவிடும். வெளியில் வந்து தன் வேலையென இருந்திருக்க வேண்டுமோ? தேவராஜனை தொட்டு பார்த்திபனை பதற வைக்க தானொரு கணக்கிட்டால் அவனோ என்னை மொத்தமாக அழிக்க ஸ்கெட்ச் போட்டுட்டானே’ மனதிற்குள்ளே இத்தனையையும் யோசித்தாலும், பார்த்திபனிடம் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள லூங்கிற்கு மனமில்லை.

அதே சமயம் மீண்டும் சிறை. அவரை அச்சுறுத்தியது.

அங்கு வாழ்ந்த வாழ்வு அப்படி.

இனியொருமுறை சிறைக்கு செல்ல முடியாது. சிறையென்றாலே வாழ்வை வெறுக்குமளவிற்கு செய்திருந்தனர் சிங்கப்பூர் போலீஸ்.

“இப்போ நான் என்ன பண்ணனும்?” இறங்கி வந்து கேட்டிருந்தார்.

“என்ன லூங் பட்டுன்னு காலில் விழுந்துட்ட.” பார்த்திபன் அட்டகாசமாக சிரித்தான்.

“உன்கிட்ட இன்னும் எதிர்பார்த்தேன். இதற்காகவா அவ்வளவு வேகமா பறந்து வந்தேன். எவ்வளவு அலைச்சல் தெரியுமா?” என்று சோகமாகக் குரலை வைத்துக்கொண்டு கேட்டவன்,

“நீயே உன் ஃபிரண்டை… சாரி சாரி என்னோட டாட், கரெக்ட். கொண்டு வந்து விட்டுட்டு போ” என்றான்.

பார்த்திபனை எந்த வழியிலும் தொட முடியவில்லையே என்கிற அவரின் இறுதி கோபம் அழைப்பைத் துண்டித்த வேகத்திலேயே அப்பட்டமாக பார்த்திபனுக்கு தெரிந்தது.

வெளிப்படையாக சிரித்துக்கொண்டான்.

சில நிமிடங்களில் லூங்கே தேவராஜனை எவ்வித சேதாரமுமின்றி தி வாரியரின் முன் இறக்கிவிட்டுச் சென்றார்.

இறங்கி நின்றவரை ஓடிச்சென்று அணைத்துக் கொண்டான் பார்த்திபன்.

“டாட் ஆர் யூ ஓகே?”

வெறும் தலையாட்டால் மட்டுமே அவரிடம்.

மனதால் உடைந்து போயிருக்கிறார் என்று உணர்ந்தவன் எதுவும் பேசாது தன்னுடைய அறைக்கு தந்தையை அழைத்துச் சென்றான்.

தேவராஜன் குடிக்க பழச்சாறு தருவித்து கொடுத்தான்.

பார்த்திபனின் பார்வை தேவராஜனை அங்கம் அங்கமாக ஆராய்ந்தது. அவரின் நலன் அறிய.

“கூட்டிட்டுப்போன மாதிரியே கொண்டுவந்து விட்டுட்டான்.”

“அங்க எதாவது சாப்பிடிங்களா டாட்?”

இல்லையென தலையசைத்தார்.

பார்த்திபன் அவ்வாறு கேட்டதற்கான காரணம் முன்பென்றால் யூகித்திருக்க முடியாது. ஆனால் இப்போது புரிந்தது.

லூங் உடன் பல வருட நட்பு.

தேவராஜனின் வளர்ச்சியால் லூங் நட்பை முறித்துக்கொண்டார்.

எப்படியிருந்தாலும் தேவராஜனால் நட்பை துண்டிக்க முடியவில்லை. லூங் என்ன செய்தாலும் தன் நட்பை காரணம் காட்டி பார்த்திபனை அடக்கி வைத்தார்.

தன்னைப்போலவே லூங்கும் இருப்பாரென்று தவறாக நினைத்துவிட்டார். அதனால் தன்னுடைய வரவு அறிந்து விமான நிலையத்திற்கே பிக்கப் செய்ய வந்த லூங்கை கண்டு மகிழ்வோடு அவருடன் சென்றவருக்கு… லூங்கின் இடத்திற்கு சென்ற பின்னர் தான், தான் கடத்தப்பட்டிருக்கோம் என்கிற விடயமே தெரிந்தது.

அந்நொடி நட்பை மனதளவில் துறந்துவிட்டார்.

“மங்கை ரொம்ப கவலையா இருப்பாள். கிளம்பனும் பார்த்திபா.” சொன்னவர் அப்படியே இருக்கையில் சரிந்து கண்களை மூடிக்கொண்டார்.

“லூங் தான் என்னை கடத்தியிருப்பான் எப்படி தெரிந்தது?” மூடிய இமை திறவாது கேட்டார்.

“லூங் பற்றி உங்களைவிட எனக்கு நல்லா தெரியும்” என்ற பார்த்திபன் விரைந்து தந்தையை அன்னையிடம் சேர்பிக்க ஆயத்தமாகினான். வரும்போதிருந்த அதே வேகம் இப்போதும்.

சோர்ந்து போன தாயை மீண்டும் உற்சாக நிலையில் கண்டுவிட வேண்டி அந்த வேகம்.

அங்கு சென்றதும் கயல் தனக்கு கொடுக்கவிருக்கும் அதிர்வுகள் தெரியாது அமைதியாகவே தேவராஜனை அழைத்துக்கொண்டு டெல்லுடன் இந்தியா புறப்பட்டிருந்தான் பார்த்திபன்.

error: Content is protected !!
Scroll to Top