“ம்ஹும்… இறைவன் போட்ட முடிச்சை எவராலும் பிரிக்க முடியாது! காலம் தன் கடமையைச் செய்யத் தொடங்கிவிட்டது…” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்த சித்தர், அந்த தெய்வீகச் சிரிப்போடு மீண்டும் வழமை போலத் தன் ஆழ்ந்த தியானத்தைத் தொடர்ந்தார்.
குகையின் வலது பக்க இடுக்கிலிருந்து, அதிகாலைப் பொன்னிறச் சூரிய ஒளிக்கீற்று ஒன்று குகையின் இருளைக் கிழித்துக்கொண்டு வந்து, சித்தரின் தவப் பிரகாசம் வீசும் முகத்தில் அழகாகப் பட்டுக் கொண்டிருந்தது!
வானத்தின் ஆசியும், இயற்கையின் ஆசியும், சித்தரின் ஆசியும் அந்த இரு இளம் உள்ளங்களின் அன்புக்கும் கல்யாணத்திற்கும் தடையின்றித் கிடைத்ததை உணர்த்துவது போல அந்தச் சூரிய ஒளி மிளிர்ந்தது!
கல்யாண வேலைகளை முறைப்படித் தொடங்குவதற்காக இருவீட்டுப் பெற்றோரும் ஜாதகப் பொருத்தம் பார்க்க முடிவு செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பக்கத்து ஊரில் ஜாதக கணிப்பில் மிகவும் புகழ்பெற்ற ஒரு முதிய ஜோசியர் இருந்தார். வெள்ளிக்கிழமை காலை வேளையில், பரமு, சீதா, சுதாகர் மற்றும் கலை ஆகிய நால்வரும் இரு பிள்ளைகளின் ஜாதகக் குறிப்புகளுடன் அந்த ஜோசியரின் வீட்டிற்குச் சென்றனர்.
அங்கே ஏற்கனவே சிலர் காத்திருந்ததால், இவர்கள் நால்வரும் வெளி மண்டபத்தில் உள்ள மரப் பெஞ்சில் அமர்ந்து காத்திருந்தனர். இரு குடும்பத்தாரும் தங்களின் இளமைக்கால நினைவுகளையும், பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிய ஆசைகளையும் பேசி மகிழ்ந்தனர்.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து, ஜோசியரின் உதவியாளர் இவர்களை உள்ளே அழைத்தான்.
அறைக்குள் நுழைந்ததும், சுவர்களெல்லாம் சாமிப் படங்களும், சாம்பிராணிப் புகையின் நறுமணமும் நிறைந்திருந்தது. ஜோசியரை வணங்கி அமர்ந்த பரமு, விஷயத்தை மெல்ல ஆரம்பித்தார்.
“சாமி… எங்க பையனுக்கும், சுதாகரோட பொண்ணுக்கும் கல்யாணம் பேசிக்கிட்டு இருக்கோம். ரெண்டு பேரோட ஜாதகத்தையும் கொஞ்சம் பார்த்து, பொருத்தம் எப்படி இருக்குன்னு கணிச்சுச் சொல்லணும்,” என்று கூறி இருவரின் ஜாதகச் சுவடிகளை அவரிடம் நீட்டினார்.
ஜோசியர் அந்த ஜாதகக் குறிப்புகளைப் பெற்றுக்கொண்டு, தன் பின்னால் இருந்த காமாட்சி அம்மன் படத்திற்கு முன்பாக வைத்து, மனமுருகி வேண்டிக் கொண்டார். பின்னர், தன் எதிரே இருந்த சுவடிகளில் சோழிகளை உருட்டிப் போட்டு, கட்டங்களைக் கணித்துத் தாள்களில் எழுதத் தொடங்கினார்.
அறைக்குள் மயான அமைதி நிலவியது. பெற்றோர்களின் இதயத் துடிப்பு சற்றே கூடியது. “ஏதாவது தோஷம் இருக்குமோ… பொருத்தம் நன்றாக வருமா…” என்ற பதற்றத்தோடு உட்கார்ந்துகொண்டு ஜோசியரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கழித்து… ஜோசியர் தன் கணிப்புகளை முடித்துவிட்டுப் பேனாவைக் கீழே வைத்துவிட்டு, தன் தடிமனான கண்ணாடியைக் கழற்றித் துடைத்தபடி, மெல்ல நிமிர்ந்து நால்வரின் முகத்தையும் பார்த்தார்.
அவரது முகத்தில் ஒரு தெய்வீகச் சிரிப்பும், வியப்பும் ஒருசேரப் படர்ந்திருந்தது!
“அடடா… கடவுளோட முடிச்சை அவிழ்க்குறதுக்கோ, இல்ல மாற்றி அமைக்குறதுக்கோ இதுவரைக்கும் உலகத்துல யாருமே பிறக்கலைங்க! ‘இன்னார்க்கு இன்னார்னு எழுதி வச்சான் தேவன் அன்று’ன்னு சொல்வாங்களே… அது இந்த ரெண்டு பேரோட ஜாதகத்துக்கும் நூற்றுக்கு நூறு பொருந்துது! இது மனிதர்கள் சேர்த்து வச்ச பந்தம் இல்ல… இறைவன் அமைத்துக் கொடுத்த வழி! யோசிக்கவே யோசிக்காதீங்க, சந்தோஷமா கல்யாண வேலையை ஆரம்பிங்க!” என்று தீர்க்கமான குரலில் சொன்னார்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட அடுத்த நொடி, பெற்றோர் நால்வரின் முகத்திலும் அளவிட முடியாத மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது!
சீதாவும் கலையும் பரஸ்பரம் கைகளைப் பிடித்துக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டனர். பரமுவும் சுதாகரும் பேரானந்தத்துடன் ஜோசியருக்கு மனமார நன்றி கூறி, அவருக்கு உண்டான தட்சணைக் கட்டணத்தையும் தட்டில் வைத்துக் கொடுத்தனர்.
மனநிறைவோடு வீட்டிற்குத் திரும்பிய பெற்றோர், விஷயத்தை உடனே பிள்ளைகளிடம் பகிர்ந்துகொண்டனர்.
சுதாகர் மகளின் அருகில் உட்கார்ந்தவர், “ஆத்தா… ஜோசியர் அம்புட்டு அற்புதமா பொருத்தம் இருக்குன்னு சொல்லிட்டாருடா! இறைவனே சேர்த்து வச்ச முடிச்சாம்,” என்று பெருமையோடு சொன்னார்.
அதைக் கேட்டதும் கமலியின் மனதிற்குள் பலவித உணர்வுகள் அலைமோதின.
ஒருபுறம், நெடுநெடுவென்று கம்பீரமாக, அடர்ந்த மீசையுடனும் அக்னிப் பார்வையுடனும் வீற்றிருக்கும் ஆதவனின் தோற்றம் அவள் மனக்கண் முன்னால் வந்துபோனது. அவனது அந்த ஆண்மை நிறைந்த தோற்றமும், அமைதியான குணமும் அவளுக்குள் ஒரு புதுவித ஈர்ப்பைக் கொடுத்தது உண்மைதான்.
ஆனால்… அதே நேரத்தில், இன்னொரு புறம் அவளது அடிமனதை ஒரு பயம் கவ்விப் பிடித்தது!
இரவு நேரக் கனவுகளில் புயல் காற்றிற்கு நடுவே வந்து, அடங்காத அதிகாரக் கர்ஜனையோடு “எங்கு போனாலும் உன்னை விடமாட்டேண்டி… இந்த ருத்ரன்!” என்று எதிரொலிக்கும் அந்த பயங்கரமான வார்த்தைகள் அவள் நெஞ்சைக் குத்தியது.
கம்பீரமான ஆதவனின் முகமும், கனவில் மிரட்டும் ருத்ரனின் குரலும் அவள் மனதிற்குள் போராட, “யார் அந்த ருத்ரன்? ஏன் அவன் வார்த்தைகள் என்னை இப்படிப் பயமுறுத்துகிறது?” என்று புரியாமல், தன் உள்ளங்கைகளைக் கூப்பி அமைதியாக உட்கார்ந்திருந்தாள் கமலி.
மகளின் அமைதியை பார்த்து வெட்கம் என்று நினைத்துக் கொண்டனர்.
அதேபோல், அன்று இரவு உணவருந்தும் வேளையில், பரமுவும் சீதாவும் மிகுந்த உற்சாகத்தோடு ஜோசியர் சொன்ன விஷயங்களை ஆதவனிடம் பகிர்ந்து கொண்டனர்.
“ஆது! ஜோசியர் என்ன சொன்னாரு தெரியுமாடா? ‘கடவுள் போட்ட முடிச்சை யாராலும் பிரிக்க முடியாது… ரெண்டு பேரோட ஜாதகமும் அம்புட்டு கச்சிதமா பொருந்தியிருக்கு. இது இறைவனே பார்த்து சேர்த்து வச்ச பந்தம்’னு நெஞ்சார வாழ்த்திச் சொன்னாருடா!” என்று சீதா மகிழ்ச்சி பொங்க டிபனை பரிமாறியபடியே சொன்னாள்.
கையைக் கழுவியபடி வந்து உட்கார்ந்த பரமு, “ஆமா தம்பி… நாம தேடி அலைஞ்சாக்கூட இப்படி ஒரு பொருத்தம் அமையாது. எல்லாம் அந்த இறைவனோட அருள் தான்!” என்றார் பெருமிதத்துடன்.
பெற்றோர்கள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும், ஆதவன் அதிர்ந்துபோய் நிமிர்ந்து பார்த்தான்! கையிலிருந்த சாப்பாடு அப்படியே உறைந்துபோனது.
உண்மையில், அவன் பெற்றோரின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக மட்டுமே பெண் பார்க்கச் சம்மதித்து வந்திருந்தான். மனதில் முழுமையாக இந்தத் திருமணத்திற்கு இன்னும் அவன் சம்மதிக்கவில்லை.
‘இப்போதைக்கு இவங்க பேச்சுக்காகப் பெண் பார்க்கப் போவோம்… அப்புறம் மெல்ல ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி இந்தத் திருமணத்தைத் தவிர்த்துவிடலாம்; பிறகு தன் மனதைக் கொள்ளையடித்த, அந்த கனவுத் தேவதையைத் தேடிக் கண்டுபிடிக்கலாம்’ என்பதுதான் அவனது திட்டமாக இருந்தது.
ஆனால், நிலைமை இப்படித் தலைகீழாக மாறும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை!
“அதுமட்டுமில்ல ஆது… அடுத்த வாரம் வர்ற சுபமுகூர்த்த நாளிலேயே நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்னு ஜோசியர் நல்ல நாளும் குறித்துக் கொடுத்துட்டாரு. சுதாகர் அண்ணன்கிட்டயும் பேசியாச்சு, அவங்களும் சந்தோஷமா சம்மதிச்சுட்டாங்க!” என்று பரமு அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டார்.
நிச்சயதார்த்தத்திற்கும் நாள் குறித்தாயிற்று என்ற செய்தியைக் கேட்ட வேந்தனுக்குத் தலையில் இடியே விழுந்தது போலிருந்தது! ‘அடக் கடவுளே… என்ன பண்றதுன்னே தெரியலையே! அம்மா அப்பாகிட்ட இதை எப்படி மறுத்துப் பேசுறது? பொண்ணு பார்க்க ஓகே சொன்னதுக்கே அடுத்த கட்டத்துக்கு இவ்வளவு வேகமா போயிட்டாங்களே…’ என்று புரியாமல், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துப்போனான்.
அவனது முகத்தில் நொடிப் பொழுதில் தோன்றி மறைந்த அந்தத் தவிப்பையும், அதிர்ச்சியையும் பெற்றோர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவன் கல்யாணப் பேச்சைக் கேட்டு யோசிக்கிறான் என்று தவறாக நினைத்துக் கொண்ட பரமுவும் சீதாவும், “சரிப்பா… நீ சாப்பிட்டு ஓய்வெடு,” என்று சொல்லிவிட்டுச் சிரித்தபடியே நகர்ந்தனர்.
ஆதவனோ தட்டிலிருந்த உணவை அரைமனதாக சாப்பிட்டுவிட்டுத் தன் அறைக்குச் சென்றான்.
அங்கே கட்டிலில் படுத்தவனுக்குத் தூக்கம் வரவில்லை. ஜன்னல் வழியே தெரிந்த நிலவை வெறித்துப் பார்த்தபடி யோசனையில் மூழ்கினான்.
‘ஒரு பக்கம் பெற்றோர் பார்த்து நிச்சயித்த கமலி… இன்னொரு பக்கம் என் மனதில் ஆழமாகப் பதிந்த அந்தப் முகம் தெரியாத முத்தழகு! ஜாதகப் பொருத்தம் எல்லாம் சரிதான்… ஆனா என் மனசு ஏற்காத ஒரு வாழ்க்கையில எப்படி காலடி எடுத்து வைக்கிறது? நிச்சயதார்த்தத்துக்குள்ள உண்மையைச் சொல்லி இந்தத் திருமணத்தை நிறுத்தவா… இல்ல விதி வழியே போகட்டும்னு விட்டுடவா?’ என்றவனின் மனதுக்குள் பெரும் போராட்டமே நடந்தது.
கமலியின் மனதிற்குள் “ருத்ரன்” பற்றிய பயமும், ஆதவனின் மனதிற்குள் “கனவுத் தேவதை முத்தழகு” பற்றிய ஏக்கம்மாக… இருவரின் உணர்வுகளும் இரு வேறு பாதைகளில் தவித்துக் கொண்டிருந்தன!
இரவின் அமைதியில் தன் அறைக் கட்டிலில் படுத்திருந்த ஆதவனுக்கு ஆழ்ந்த தூக்கத்திலும் மனதிற்குள் ஏதோ ஒரு இனம்புரியாத தவிப்பு அலைமோதிக்கொண்டே இருந்தது.
ஒருபுறம் பெற்றோர் ஆசையாகக் குறித்து வந்த நிச்சயதார்த்தம், மறுபுறம் தன் மனதை ஆக்கிரமித்திருக்கும் கனவுத் தேவதை… இந்த மனப்போராட்டத்தின் நடுவே அவனது விழிப்பு நிலை மெல்ல நழுவி, ஆழமான கனவுலகிற்குள் அவன் இறங்கினான்.
கனவிலும் அதே சீறிப்பாயும் அலைகளின் ஓசையோடு அந்த அடர்ந்த கடற்கரைக்கரை விரிந்தது.
உப்புக்காற்றின் வாசமும், ஈரமணலின் குளுமையும் நிறைந்த அந்த இரவில்… அங்கே ஒரு பெண் ஓடிக் கொண்டிருந்தாள்!
அவள் அணிந்திருந்த எளிய புடவையைக் கட்டியிருந்த விதமும், தோளில் சரிந்திருந்த முந்தானையை இடுப்பில் சொருகியிருந்த பாணியும், காற்றில் பறந்த அவளது சுருள் முடியும் அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே ‘இவள் ஒரு மீனவப் பெண்’ என்பதைத் தெளிவாக உணர்த்தியது!
தன் கையில் ஏதோ ஒரு மீன்பிடி வலையைக் பிடித்துக்கொண்டு, அவளுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைச் செல்லக் கோபத்தோடு விரட்டிக்கொண்டு ஓடினாள் அவள்.
தேடல் தொடரும்…
