வெங்கதிரோன் முழு வீச்சில் தன் பணியைச் செவ்வனே செய்துகொண்டிருந்த மதிய நேரம்.
மாவட்ட ஆட்சியரைப் பார்த்துவிட்டு வரும்போது ஆதித்யன் தன் தாய்க்கு அழைத்துப் பேசிவிட்டு, மகிழுந்தை ஓட்ட, அருகில் அமர்ந்திருந்த நவநீதன் தன் மொபைலில் ஆழ்ந்திருந்தான்.
“ஆனாலும் உனக்கு இவ்வளவு கொழுப்பு கூடாதுடா. உன்னை என் பிஏவாக மட்டும் நான் அப்பாயிண்ட் பண்ணல. காரும் ஓட்டத்தான் வேலைக்கு வச்சிருக்கேன். ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன்னை சீட்டைக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்பல நான் ஆதித்யன் இல்லடா” கார் ஸ்டீயரிங்கை வளைத்துத் திரும்பியவாறு சொன்னான் அமைச்சன்.
“நாக்கில் நரம்பில்லைன்னு இதுக்குத்தான் சொல்றது போல. வரும்போது மாட்டு வண்டியாடா ஓட்டுறீனு திட்டி நீங்கதானே வாங்கி ஓட்டினீங்க? உங்களுக்கு என் சீட்டைக் கிழிக்கணும்னா தாராளமா செய்யுங்க தலைவரே. நம்ம கவுன்சிலர் வீட்டில் வேலைக்குக் கூப்பிட்டுட்டு இருக்காங்க, நான் போறேன்” நவநீதன் அலைபேசியைப் பார்த்தவாறு சொல்ல,
“ஏன் கவுன்சிலர் பொண்ணு கண்மணியைக் கரெக்ட் பண்ணவா?” என்றான் தாடையைத் தடவியபடி.
திடுக்கிட்டு ஆதித்யனை ஏறிட்ட நவநீ, “ஆ..அது அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல….அந்தப் புள்ளைக்கும் நமக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. நமக்கு படிப்பும் இல்ல பணமும் இல்ல…” என்றான்.
திரும்பி நவநீதனை நம்பாமல் பார்த்த ஆதித்யன், “டேய்…நீ மூச்சுவிட்டாலும் என் காதுக்கு வந்துரும். பணம், படிப்பு மட்டுமில்ல அவனுங்க சாதி வெறி பிடிச்சவனுங்க. பார்த்துக்க. ஆசைப்படலாம்..ஆனா நடைமுறைக்கு ஒத்து வரணும். உனக்கு இருபத்தி மூணுதான் ஆகுது, எடுத்த டிகிரியை முடிடான்னு சொன்னா, என் மண்டையில் உட்காரமாட்டேங்கிறானு சரஸ்வதியைக் குறை சொல்லிட்டுத் திரியுற…இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் ஓரங்கட்டி வச்சுட்டு பிழைக்கிற வழியைப் பாரு. உன் அப்பாரு இல்லாம ஆத்தா இருந்து வளர்த்துவிட்டதுக்கு அதுக்குச் சுமையைக் குறை. நாளப்பின்ன உன் தங்கச்சி வாழ்க்கையையும் நினைச்சுப் பாரு” என்றான் ஒரு கண்டிப்புக் கலந்த குரலில்.
பதில் பேசாமல் தலையாட்டிக் கொண்டான் நவநீதன். இவன் மேல் ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டான் ஆதித்யன்.
ஒரு பெரிய பள்ளி வளாகத்திற்குள் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திய ஆதித்யன், “நவநீதா..தங்கச்சியைப் பார்க்கணும். பத்து நிமிஷத்துல வந்துடுவேன் இரு” என்றவன் பள்ளித் தலைமை ஆசிரியர் அறையை நோக்கி விரைந்து நடந்தான்.
தலைமை ஆசிரியை பார்கவி தன் அறையிலிருந்து விடுவிடுவென வெளியே வர, “ஹாஹா..ஆத்தா சொல்லிடுச்சா என்ன?” என்றான் அவள் அருகில் சென்று அவள் தலையைத் தடவியபடி.
“ம்ம்…திண்டுக்கல் வந்துட்டு என்னைப் பார்க்காமல் போயிடுவீங்களா என்ன….இந்தா எட்டிப் பார்க்கிற தூரத்தில் கட்டிக் கொடுத்துருக்கீங்க, ஆனா மாசம் ஒரு முறை பார்க்கிறதே கஷ்டமா இருக்கு, கேட்டா வேலை வேலைன்னு இதே சாக்கு” சலுகையாக தன் அண்ணனைக் கட்டிக் கொண்டவள் குறை சொல்ல
“வந்துட்டனே பாரும்மா, அப்புறம் உன் அவர் பார்கவிராயன் நலமா?” என்று இவன் கண்சிமிட்ட,
“ரொம்ப…நீங்கதான் மெச்சிக்கணும். ஆனா நான் வடக்குன்னா அவர் தெற்கில் நிற்பார்” என்றாள் புன்சிரிப்போடு.
“நம்பிட்டேன், நீ எள்ளுன்னு சொன்னா மாப்பிள்ளை எள்ளை ஆட்டி எண்ணெய் கொண்டு வருவாருங்கிறது இந்த ஊர் அறிந்த விஷயம்” என்று இவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது,
ஒரு பத்து வயது மதிக்கத்தக்க மாணவன் வந்து தனது வகுப்பு ஆசிரியையான பார்கவியிடம் பேசுவதற்கு சற்று இடைவெளியில் கைகள் கட்டிக் கொண்டு நின்றான்.
எதார்த்தமாகத் திரும்பிய ஆதித்யன் கண்களில் சட்டென ஒரு ஒளி வந்து மனதை வருடியது.
இமைக்காமல் அச்சிறுவனையே இவன் பார்த்துக் கொண்டிருக்க, அண்ணனின் பார்வையைத் தொடர்ந்து பார்த்த பார்கவி, “ஹேய் கிருஷ்ணா…ஏதாவது வேண்டுமா?” என்றாள்.
“ஆமா மிஸ், காலையில் என் சைக்கிளை ஸ்கூல் கேட்டுக்கு வெளியே விட்டுட்டேன், வாட்ச்மேன் அண்ணா உள்ள பார்க்கில் சிலாட் பக்கம் வைக்கச் சொல்றாங்க, நான் போகட்டுமா?” என்றான் சிறுவன் பவ்யமாக.
“ஓ எஸ்..போயிட்டு வா” என்ற ஆசிரியையின் அனுமதியில் கிருஷ்ணா நகர்ந்தான்.
“கிருஷ்ணா யார் தெரியுமாண்ணா…” என்ற பார்கவியை இடையிட்ட ஆதித்யன்,
“நம்ம மாவட்ட கலெக்டர் மிஸ்.குயிலமுதியோட பையன் ரைட்?” என்றான் புருவத்தை வலது கையின் பெருவிரல் கொண்டு வருடியவாறு.
“உங்களுக்கு எப்படித் தெரியும்?….” என்ற தங்கையின் ஆராய்ச்சிப் பார்வையில்,
“சிதம்பர ரகசியமா என்ன? கலெக்டர் கூட ஒரு விழாவில் பார்த்தேன்” என்றான் மழுப்பலாக.
“ஆனா இவங்க திண்டுக்கல் வந்து ஒரு வாரம் கூட ஆகவில்லையே?” பார்கவி இழுக்க,
“அது…இங்க இல்ல….சென்னையில் பார்த்தேன். சரி அதை விடு, முயல் குட்டி எப்படி இருக்கா? அவளையும் பார்த்துட்டுப் போகலாமா நான்?” என அனுமதி கோர.
“நோ வே…அவளுக்கு கிளாஸ் நடந்துட்டு இருக்கு, சோ பார்க்கணும்னா வீட்டுக்கு வாங்க” என்றாள் முறைப்புடன்.
“ஆத்தி…டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்கீங்க. சரி வாரக் கடைசியில் நம்ம வீட்டுக்கு வாங்க” என்றவன் தங்கையின் தலையைக் கலைத்துவிட்டு வந்த வழியே நடந்தான்.
ஆதித்யன் தன் காருக்கு அருகில் வர, கிருஷ்ணா தனது சைக்கிளைப் பூட்டுவதற்கு முயன்று கொண்டிருந்தான். ஒரு நிமிடம் நின்று அவனையே அவதானித்த ஆதித்யன், “நான் ஹெல்ப் பண்ணட்டுமா லிட்டில் சேம்ப்?” என்றான்.
திரும்பி இவனை ஏறிட்ட கிருஷ்ணா, சரி என்பதாய் தலையை ஆட்ட, மிதிவண்டியைப் பூட்டிவிட்டு சாவியை சிறுவனிடம் கொடுத்த ஆதித்யன், “புது ஸ்கூல் பிடிச்சிருக்கா லிட்டில் சேம்ப்?” பேச்சை வளர்க்க விழைந்தான்.
“தேங்க்ஸ் அங்கிள், எஸ் ரொம்பப் பிடிச்சிருக்கு, நான் லிட்டில் இல்ல…” என்றான் முறுவலித்துக் கொண்டு.
“ஆஹாங்…பட் என் பக்கத்தில் லிட்டில் தான் நீங்க” என்ற பெரியவனின் புன்னகையில்.
“குட் பாயிண்ட் அங்கிள், சாரி… நேரமாச்சு கிளாஸ் மிஸ்ஸாயிடும். நான் போறேன் அங்கிள். பாய்” என்றவன் கையசைத்துவிட்டுப் பறந்தோடினான்.
சிறுவனின் ‘அங்கிள்’ என்ற வார்த்தை ஆதித்யனின் முகத்தில் புன்னகையையும் வருத்தத்தையும் ஒருசேரக் கொண்டு வந்து சேர்த்தது. ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை நுரையீரலிலிருந்து பிடுங்கி வெளியேற்றியவன் காருக்குள் வந்து அமர்ந்துகொண்டான்.
இரவு உணவு உண்டு கொண்டிருந்த கிருஷ்ணா, வழக்கம் போல் அன்றைய நாளில் தன் பள்ளியில் நடந்தது, கற்றது, கேட்டது என்று தாயிடம் சொல்லிக் கொண்டிருந்தவன், “ம்மா..இன்னைக்கு ஒரு அங்கிளை எங்க ஸ்கூல்ல பார்த்தேன். பார்கவி மிஸ் கூட பேசிட்டு இருந்தாங்க. ம்மா…ஹீரோ மாதிரி என்ன ஒரு லுக் தெரியுமா? என்னோட சைக்கிளைப் பூட்ட முடியல, அவங்களே வந்து ஹெல்ப் பண்ணாங்க. ம்மா…வெரி இன்டெரெஸ்ட்டிங் திங் என்னன்னா…என்னை லிட்டில் சேம்ப் அப்படின்னு கூப்பிட்டாங்க” என்று நடந்த சம்பாஷணை முழுவதையும் ஒப்பித்தான்.
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த குயிலின் மனதில் கிருஷ்ணா யாரை சந்தித்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாள்.
அவனைத் தவிர அப்படி அழைக்க யார் இருக்கிறார்கள் என்ற எண்ணமும் வந்தது இவளுக்கு.
ஆதித்யனின் தங்கையின் குடும்பத்திற்குச் சொந்தமான பள்ளி அது என்பதும் குயிலுக்கு நன்கு தெரியும். இந்த ஊரில் மிகப் பிரபலமான, கல்வியின் தரத்திற்கு முக்கியத்துவம் தருகின்ற பள்ளி என்ற காரணத்தினால்தான் மகனை இவள் அங்கு சேர்த்ததே.
தன்னைப் பார்த்துவிட்டு பிறகு தங்கச்சியைப் பார்க்கப் போயிருப்பான் என்பதை ஊகித்துக் கொண்டாள் பெண்.
“ம்மா…அந்த அங்கிள் தான் வருணியோட ஓன் அங்கிளாம். எங்க பாரு மிஸ்ஸோட அண்ணனாம். வருணின்னா அந்த அங்கிளுக்கு ரொம்பப் பிடிக்குமாம், வருணி சொன்னா. அவ ரொம்ப லக்கி இல்லமா?” என்ற சிறுவனின் குரலில் தந்தை இல்லாத சோகம் ஒன்று இழையோடியது.
“ம்ம்…கண்ணா, நம்மகிட்ட என்ன இருக்கோ அதைப் பற்றி மட்டும்தான் நாம் சிந்திக்கணும். அம்மா சொல்றது புரியுதா செல்லத்துக்கு?” என்றாள் அன்பின் மென்குரலில்.
அதற்கு மேல் அதுபற்றிப் பேசாமல் தலையசைத்து ஏற்றுக் கொண்ட கிருஷ்ணா சாப்பாட்டில் கவனமானான்.
மகனுக்கு தூங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுத்துவிட்டு தன் அறைக்கு வந்து கட்டிலில் சாய்ந்த குயிலுக்கு மனம் அடங்கமாட்டேன் என்று சத்தியாகிரகம் செய்தது.
மனதை எங்கு திருப்பினும், குயிலம்மா என்னும் அவனின் அழைப்பிலேயே வந்து நின்றது.
அவனது பரிவுண்ட குரலும், கண்களில் கனிந்துகிடந்த அன்பும், ஆளை அசத்தும் கம்பீரமும், முகத்தில் தெறித்த பெருமிதமும் இவளைச் சூழ்ந்து கொண்டு சுழற்றியது.
அவித்த மரவள்ளிக் கிழங்கையும், பச்சைப் பயிறு குழம்பையும் ரசித்து உண்டு கொண்டே, “குயிலம்மாக்குள்ள ஒரு பெரிய குக் இல்ல ஒளிஞ்சிருக்காங்க. இத்தனை அற்புதமாக சாப்பாடு தந்த கைக்கு ஏதாவது தரணுமே…ம்ம்ம் என்ன தரலாம்…?” என்று யோசித்தவன், எப்போதும் அணிந்திருக்கும் அவனுக்குப் பிடித்தமான செப்புக் காப்பைக் கழற்றிக் கொடுத்தான் ஆதித்யன்.
“ஆகா இது போங்காட்டம், தங்கம் தாரத விட்டுப்புட்டு தகரமில்ல தாறிய” என்றாள் குயிலு புன்சிரிப்போடு.
“தந்துட்டா போச்சு, குயிலம்மா ஜில்லா கலெக்டர் ஆன பிறகு கண்டிப்பா தருவேன். இப்போ இதுதான் இருக்கு” என்றவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டாள் குயிலு.
நினைவுகளிலிருந்து மீண்டவள், கட்டிலிலிருந்து இறங்கி அருகே இருந்த அலமாரியைத் திறந்து நகைகள் வைக்கும் பெட்டியைத் திறக்க, அன்று அவன் கொடுத்த காப்பு இருந்தது.
எடுத்து அதை வருடிப் பார்த்தவள் விழிகளில் நீர் நிறைந்து போனது. ஆதித்யன் என்பவன் அவள் வாழ்க்கையில் எத்தனை பெரிய மாற்றத்தை விதைத்தான் என்பது அவள் மட்டுமே அறிந்த உண்மை.
தான் எதற்காகக் கலங்குகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள இயலாமல் கலங்கினாள் குயிலு.
படிப்பறிவற்ற குயிலிடம் அளப்பரிய அன்பு காட்டி அருகில் இருந்தவனை, இன்று காலத்தின் கட்டாயம் மற்றும் வாழ்வியல் யதார்த்தம் என அனைத்தும் சேர்ந்து எட்டி நிறுத்தி இருக்கிறது என்பதை தன்னால் ஏற்க இயலவில்லையா?
நான் என்ன எதிர்பார்க்கிறேன்? பழங்குடி இனத்தில் பிறந்து, கணவனை இழந்து, பதினோரு வயது நெருங்கும் பையனின் தாயான எனக்கு இனி என்ன வேண்டும் என கலங்குகிறேன்?
‘நம்மகிட்ட என்ன இருக்கோ அதைப் பற்றி மட்டும்தான் நாம் சிந்திக்கணும்’ சற்று முன் மகனுக்குச் சொன்ன அறிவுரை நினைவிலாட, காப்பை இருந்த இடத்தில் வைத்து மூடியவள், படுக்கையில் வந்து சாய்ந்து கொண்டாள்.
ஆதித்யன் தன் மனைவி மற்றும் பையனோடு நலமோடு வாழ வேண்டும் என்று எப்போதும் போல் இப்போதும் நினைத்துக் கொண்டவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
——————–
நடுநிசியில் படுக்கையிலிருந்து எழுந்து கொண்ட ஆதித்யன், தன் அறையின் கதவுக்கு வெளியே இருந்த வராண்டாவில் வந்து நின்று கொண்டு இருள் சூழ்ந்த வானத்தை வெறித்தான்.
தன் உள்ளமும் அத்தகைய அடர்ந்த இருட்டை நிரப்பிக் கொண்டிருப்பதாக ஒரு பிரமை.
நிம்மதியற்ற மனது நித்திரை தொலைத்து அலைந்தது.
கட்டுக்குள் அடங்க மறுக்கும் சிந்தனைகளை என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியவன், தன் கைபேசியை எடுத்து அழைத்தான்.
“ஹலோ…நீயுமாடா, ஏன்டா பேய் உலாத்துற நேரத்தில்தான் போன் பண்ணுவீங்களாடா” என்றது ஒரு குரல் தூக்கம் கலைந்த எரிச்சலில்.
“ஏன் நீங்க மட்டும் மாமியை லவ்வ அர்த்த ராத்திரியில் அதுவும் மாமனாரை எழுப்பிப் போய் பார்க்கலாம், நான் உங்களை எழுப்பக் கூடாதா? நல்ல நியாயம் பேசுறீங்க” என்றான் புன்னகைத்து.
அலைபேசியில் வந்தவன் சாட்சாத் ரிஷி நந்தன்தான், இவன் தன் மதுரயாழியை, மண முடிக்கும் வரை தினமும் இரவில் மாமனாரின் தூக்கத்தைக் கெடுத்து, பேய் உலாத்தும் நேரத்தில் அவரையும் கூட உலாத்தவிட்டவன். அதைத்தான் ஆதித்யன் சுட்டிக் காட்டினான்.
“ஆவுன்னா இதையே சொல்லிட்டு கிளம்பி வாங்கடா, சரி என்ன இப்போ? பார்த்துட்டியா உன் குயிலம்மாவை?” என்றான் ஆர்வம் மிக.
“ம்ம்..திவ்யமா, என்ன ஒரு கம்பீரமாக இருக்கா…..என்ன ஒரு கலை அவள் முகத்தில்….மனசு நெறஞ்சு போச்சுண்ணா, மகனையும் பார்த்தேன்..நல்லா வளர்ந்துட்டான்” என்றான் மகிழ்ந்து.
ஆதித்யன் குரலில் வழிந்த ஆனந்தத்தில் திளைத்த ரிஷி, “சோ..” என்றான்.
“ம்ப்ஸ்….என் பொண்டாட்டி பிள்ளையெல்லாம் பற்றி கேட்டா” புன்சிரிப்பு இவனில்.
“ம்ம்ம் சார் என்ன சொன்னீங்க”
“ரொம்ப சௌக்கியமா இருக்காங்கன்னு உண்மையைச் சொன்னேன்” ஆதித்யனில் ஒரு நக்கல் வந்து நின்றது.
“கேடி ஃபெல்லோ, சரி நடத்து…ஆமா நியாயப்படி தூக்கம் அங்க இல்ல போயிருக்கணும்..சார் ஏன் தூங்காம இருக்கீங்க?” ரிஷியின் கேள்வியில்,
“நாற்பது வயது தாண்டியதும் உங்களுக்கு எல்லாம் மறந்து போய்டுமா பாஸ்? அங்க தூக்கம் போனா அந்த எபெக்ட் இங்க வராதா?” என்றான் அமைச்சன் நக்கல் வழிய.
“எனக்கேவா, நீ நாற்பதுக்குள்ளவாவது எல்லாத்தையும் நடத்திக்கப் பாரு, இல்ல….ஏதாவது ஆசிரமம் கட்டுற வழியைப் பாரு. இப்போ என்னைத் தூங்க விடு. குட் நைட்” என்ற ரிஷி வைத்துவிட்டான்.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
