முகவரி 16

பியூட்டிஷியன் மாலை ஐந்து மணிக்கெல்லாம் வந்துவிடுவார் என்பதால், “கமலி அதற்குள்ளாகவே குளித்து, தலைமுடியை நன்றாகக் காயவைத்துவிட்டுத் தன் அறையில் தயாராக இருந்தாள்”

சொன்னபடியே பியூட்டிஷியனும் வந்து சேர, கமலியை நிச்சயதார்த்தத்திற்கு அழகாக அலங்கரிக்கத் தொடங்கினர்.

விசுஷத்திற்காக விருந்தினர்களும், சொந்தங்களும் மெல்ல வரத் தொடங்கினர். மாப்பிள்ளை வீட்டார் ராகுகாலம் முடிந்த பிறகுதான் வருவார்கள் என்பதால், அதற்குள் எல்லாம் தயாராக இருக்கணும் என்று முனைப்பாக வேலை நடந்து கொண்டிருந்தது. மண்டபமோ, பாட்டும் மேளதாளச் சத்தமுமாகத் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

சிறு பிள்ளைகள் மண்டபத்தின் பளபளக்கும் தரையில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாகச் சந்தித்த சொந்தங்கள் அனைவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்து, சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

நேரமும் கடந்து செல்ல, இரண்டு வேன்களில் பரமுவின் வீட்டினரும், உறவினர்களும் மண்டபத்தின் வாசலில் வந்து இறங்கினர்.

அவர்களைச் சுதாகரும், அவரது குடும்பத்தினரும் இன்முகத்தோடு, வாசலிலேயே நின்று வரவேற்று மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றனர்!

ஐயர் முதலில் ஆதவனை மேடைக்கு அழைத்தார். இந்த நிச்சயத்தை நிறுத்த முயன்று கடைசியில் தோல்வியை தழுவியவனோ,அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மேடைக்கு வர, பெண் வீட்டாரின் சார்பில் சுதாகரும் கலையும் அவனுக்காக ஆசையோடு வாங்கி வந்திருந்த புதிய உடைகள் அடங்கிய தாம்பாளத் தட்டைப் பூக்கள் மற்றும் பழங்களோடு அவனிடம் கொடுக்க, “தம்பி, உடை மாத்திட்டு ரெடியாகி வாங்க,” என்றார் ஐயர். 

அடுத்த சில நிமிடங்களில், பியூட்டிஷியனின் முழு அலங்காரத்தில் ஜொலித்துக்கொண்டிருந்த கமலியை மேடைக்கு அழைத்து வந்தனர். 

பரமுவும் சீதாவும் மகிழ்ச்சி பொங்க, மாப்பிள்ளை வீட்டின் சார்பில் அவளுக்காக எடுக்கப்பட்ட பட்டுப்புடவை, மேக்கப் பொருட்கள் அடங்கிய தாம்பாளத் தட்டை கமலியிடம் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பி வைத்தனர்.

இருவரும் அவரவர் அறைகளுக்குச் சென்று தயாராகத் தொடங்கினர்.

அறையில் முகூர்த்த உடைகளான பேண்ட் சர்ட் அணிந்துகொண்டிருந்த ஆதவனின் மனமோ இரட்டை மனதாகவே இருந்தது. ‘இவ்வளவு தூரம் வந்தாச்சு… நிச்சயதார்த்த மேடைக்கே வந்துட்டோம். இனி என்ன பண்றது?’ என்ற குழப்பமும் தவிப்பும் அவனது முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.

அவனது இந்தத் தடுமாற்றத்தைக் கவனித்த அருண், ஆதவனின் தோள்களைப் பிடித்து அதட்டி, “டேய் மாப்பிள்ளை! இவ்வளவு தூரம் வந்ததுக்கு அப்புறம் என்னடா யோசனை? காலம் கொண்டு போற வழியில போய்க்கிட்டே இருக்கணும். எல்லாம் நல்லதுக்கே நடக்கும், பேசாம கம்முனு வாடா!” என்று மேடைக்கு அழைத்து வந்தான்.

கம்பீரமாக அடர்ந்த மீசையும் மிடுக்கான தோற்றமுமாக ஆதவன் மேடைக்கு வந்து உட்கார, அவனது கம்பீரம் மண்டபத்தில் இருந்த சொந்த பந்தங்கள் அனைவரையும் வசியப்படுத்தியது.

அடுத்த சில நிமிடங்களில்… மண்டபத்தில் மேளதாளத்தின் வேகம் கூடியது! பாட்டுகளின் இனிய கீதம் மிதந்து வர, அனைவரின் பார்வையும் மணமகள் அறைப் பக்கம் திரும்பியது.

தோழிகள் சூழ, பளபளக்கும் முகூர்த்தப் பட்டுப்புடவையில், தேவதையைப் போல மேடையை நோக்கி மெல்ல அடிமேல் அடிவைத்து வந்தாள் கமலி!

நெற்றிச்சுட்டி, காதுகளில் தொங்கல், கைகளில் மருதாணிச் சிவப்போடு ஜொலித்த அவளது தோற்றம், மேடையில் ஒருவித அசௌகரியத்தோடு உட்கார்ந்திருந்த ஆதவனின் கவனத்தையும் சட்டென்று ஈர்த்தது!

கமலி மேடையை நோக்கி நடந்து வரும் ஒவ்வொரு அடியிலும் அவளது முகத்தில் நாணமும் மெல்லிய பதற்றமும் இழையோடியது. பளபளக்கும் பட்டுப்புடவையின் மின்னலும், கைகளில் சுடர்ந்த மருதாணியின் சிவப்பும், தலையில் சூடியிருந்த மல்லிகைப் பூக்களின் நறுமணமும் அவளை ஒரு நிஜ தேவதையாகவே காட்டியது.

அவள் மேடை ஏறிய அந்த நொடி… ஆதவன் அறியாமலேயே அவனை மீறி அவளது தோற்றத்தில் தன் பார்வையைத் தொலைத்தான்!

‘இவளா அது… இவ்வளவு அழகாக இருக்கிறாள்?’ என்று அவனது மனது பிரமிப்பில் உறைந்தது. இத்தனை நாட்களாகத் தன் மனதை ஆக்கிரமித்திருந்த கனவுத் தேவதையின் நினைவுகள் ஒருபுறம் இருந்தாலும், தன் கண்ணெதிரே நிலவென ஜொலிக்கும் கமலியின் இந்த பேரழகு ஆதவனின் நெஞ்சை மெல்லச் சிலிர்க்க வைக்க மறக்கவில்லை. 

கமலியும் மெல்ல நிமிர்ந்து ஆதனைப் பார்த்தாள். கம்பீரமான உடையில், அடர்ந்த மீசையும் அக்னிப் பார்வையுமாக மேடையில் வீற்றிருந்த அவனது தோற்றம் அவளது இதயத் துடிப்பை எகிற வைத்தது. 

‘கனவில் வந்த அந்த முகம் தெரியாத ருத்ரனின் குரலும் கம்பீரமும்… இதோ என் முன்னே இருக்கும் இந்த ஆதவனிடம் அப்படியே இருக்கிறதே!’ என்ற அதிர்ச்சியும் ஆச்சரியமும் அவள் விழிகளில் மின்னியது.

இருவரின் விழிகளும் நேரடியாகச் சந்தித்துக் கொண்ட அந்தச் சில நொடிகள், சுற்றிலும் இருந்த மனிதர்களின் சலசலப்பும் மேளச்சத்தமும் மறந்து, இருவருக்கும் இடையே ஒரு மெளனக் கவிதை எழுதப்பட்டது!

அப்போது ஐயரின் கம்பீரமான குரல் அந்த மெளனத்தைக் கலைத்தது: “சுப முகூர்த்த நேரம் வந்தாச்சு… தம்பூலத் தட்டு மாத்திக்கலாம்!”

மண்டபத்தில் மேளதாளமும் கெட்டிமேள நாதமும் உச்சத்தை அடைய, இருவீட்டுப் பெரியவர்களும் மேடையில் கூடினர்.

பரமுவும் சுதாகரும் பூக்களாலும் பழங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தாம்பாளத் தட்டுகளை பரஸ்பரம் மாற்றி, “எங்கள் மகனுக்கும் உங்கள் மகளுக்கும் திருமணம் செய்யச் சம்மதம்” என்று உறுதியளித்தனர். சீதாவும் கலையும் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டனர். 

அடுத்ததாக, “மாப்பிள்ளையும் பொண்ணும் மோதிரம் மாத்திக்கிடுங்க,” என்று ஐயர் அசரீரி போல அறிவித்தார்.

அருண் புன்னகையோடு மோதிரத் தட்டை ஏந்தி வர, ஆதவன் மெல்ல கமலியின் மென்மையான கரங்களைப் பற்றினான். அவனது விரல்கள் பட்ட அடுத்த வினாடி அவளது உடம்பில் ஒரு மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. 

வேறு வழியின்றி ஆதவனும் அவளது விரலில் நிச்சயதார்த்த மோதிரத்தை மெல்ல அணிவித்தான்.

அடுத்து கமலி நடுங்கும் கைகளோடு ஆதவனின் கையைப் பற்றி அவனுக்கு மோதிரத்தை அணிவித்தாள். இருவரின் கைகளும் ஒன்றையொன்று தொட்ட அந்த நொடியில், காலமும் விதியும் ஒன்றுசேர்ந்து நகர்வது போல இருந்தது!

கேமராக்களின் வெளிச்சங்களும், சொந்தங்களின் அட்சதைப் பூக்களின் தூவல்களும் இருவரையும் நனைக்க… மனதிற்குள் பல ரகசியங்களையும் கனவுகளையும் சுமந்தபடி, இருவரும் புன்னகையோடு தங்களின் புதிய வாழ்க்கைப் பயணத்தின் முதற்படியில் காலடி எடுத்து வைத்தனர்!

மோதிரம் மாற்றி, சுற்றிலும் சொந்தங்களின் அட்சதைப் பூக்களும் கேமராக்களின் பிளாஷ் வெளிச்சங்களும் பொழியும் அந்தச் சந்தோஷமான சூழலிலும்… ஆதவனின் அடிமனதில் ஒரு மெல்லிய கனம் இருந்துகொண்டேதான் இருந்தது.

மேடையில் பக்கத்தில் தேவதையாய் அமர்ந்திருக்கும் கமலியின் பேரழகும், அவளது அமைதியான குணமும் அவனுக்குப் பிடித்திருந்தது உண்மைதான். இந்த நிச்சயதார்த்தச் சூழலையும், பெரியவர்களின் முகத்தில் தெரியும் பேரானந்தத்தையும் அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

ஆனால்… அவனது நெஞ்சிற்குள் அந்த ஒரே ஒரு கேள்வி மட்டும் திரும்பத் திரும்ப வந்து குடைந்து கொண்டிருந்தது!

‘இப்போதைக்கு சூழ்நிலைக்காகவும், பெற்றோர் சந்தோஷத்துக்காகவும் இந்த நிச்சயதார்த்தத்தை ஏத்துக்கிட்டேன்… ஆனா, மூன்று வருஷமா என் உயிரையே உலுக்கிக்கிட்டு இருக்குற அந்தச் சூறாவளியை…என் மனசுல பதிஞ்ச ‘முத்தழகை’ மறந்துட்டு… என்னால இந்த கமலியோட ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ முடியுமா?’

கனவில் வந்தவள் அடங்காத கடலைப்போலச் சீறிப்பாய்பவள்; இதோ தன் அருகில் அமர்ந்திருக்கும் கமலியோ கரையைத் தொடாத அமைதியான நதியைப் போன்றவள். இரு துருவங்களாக இருக்கும் இந்த உணர்வுகளுக்கு நடுவே ஆதவனின் மனம் தத்தளித்துக் கொண்டிருந்தது. 

‘கமலிக்கு நான் எந்தக் குறையும் வைக்க மாட்டேன்… ஆனா என் மனசுல இன்னோருத்தி வாழும்போது, இவளுக்கு நான் உண்மையா இருக்க முடியுமா?’ என்ற குற்ற உணர்ச்சியும் அவனுக்குள் தலைதூக்கியது.

அதே நேரத்தில், அவனது கைவிரலில் இருக்கும் மோதிரத்தைத் தொட்டபடி உட்கார்ந்திருந்த கமலியும், ஆதவனின் முகத்தில் அவ்வப்போது தோன்றி மறையும் அந்த யோசனையான பார்வையை கவனிக்காமல் இல்லை.

‘மாப்பிள்ளை பார்க்க கம்பீரமா இருந்தாலும்… ஏதோ யோசனையிலேயே இருக்காரே! என்ன விஷயமா இருக்கும்?’ என்று அவளும் மனதிற்குள் குழம்பத் தொடங்கினாள்.

கமலியின் பின்னால் நின்றிருந்த தோழிகள் அவளது தோளை மெல்லக் கிள்ளி, “ஏடி… ம்ம்ம்! உன் மாப்பிள்ளை செம்ம கம்பீரமா, ஆளு தூக்கலா இருக்காருடி!” என்று காதோடு கிசுகிசுக்க, கமலிக்கு முகம் சிவந்து வெட்கமும் சிரிப்பும் ஒருசேர வந்தது.

ஆனால்… நிச்சயம் முடிந்த பின்னர் ஆதவனின் பார்வையோ கமலியின் பக்கம் திரும்பவே இல்லை!

அருகிலேயே நின்று கொண்டிருந்தாலும், அவள் முகத்தை நேருக்கு நேராகப் பார்ப்பதைத் தவிப்பது போல அவனது பார்வை எங்கோ நிலைத்திருந்தது. மேடையில் மோதிரம் மாற்றிய அந்தச் சில நொடிகளைத் தவிர, அதன்பின் அவன் அவளைத் திரும்பிப் பார்க்கவே இல்லை.

மண்டபத்தில் வந்திருந்த சொந்த பந்தங்கள், ஊர் ஜனங்கள் அனைவரும் சுவையான விருந்தை வயிறாரச் சாப்பிட்டுவிட்டு, மனதார மணமக்களை வாழ்த்தி விடைபெற்றுச் சென்றனர்.

நிச்சயதார்த்த விழா இனிதே நிறைவடைய, களைப்பும் மகிழ்ச்சியுமாக இருவீட்டாரும் மண்டபத்தைக் காலி செய்துவிட்டுத் தங்களின் வீடுகளுக்குப் புறப்பட்டனர்.

வீட்டிற்குத் திரும்பும் வழியில் காரில் அமர்ந்திருந்த கமலிக்கு அதுவே பெரிய யோசனையாக இருந்தது.

‘சடங்கு முடிஞ்ச பிறகும் அவர் ஒரு தடவ கூட என்னை நிமிர்ந்து பார்க்கலையே… எல்லார்கிட்டயும் இயல்பாப் பேசுறவர், என்கிட்ட மட்டும் ஏன் இவ்வளவு தூரத் தள்ளி நிக்கிறாரு? ஒருவேளை அவருக்கு இந்தத் திருமணத்துல முழு மனசு இல்லையோ? இல்ல என்னை அவருக்குப் பிடிக்கலையோ?’ என்று எண்ணி எண்ணி அவளது மனம் ஏங்கத் தொடங்கியது.

இன்னொரு பக்கம் , தன் வீட்டிற்கு வந்ததும் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டான் ஆதவன்.

நிச்சயதார்த்த மோதிரம் மின்னும் தன் விரலைப் பார்த்தபடி, ‘கமலியைப் பார்க்கும்போது மனசுல ஒரு மரியாதை வருது… ஆனா கனவில் வர்ற அந்த ‘முத்தழகு’ நினைவை என்னால் அழிக்கவே முடியலையே! அவளுக்குத் துரோகம் செய்யக் கூடாதுன்னு நினைச்சுதான் கமலி முகத்தைப் பார்க்காமத் தவிர்க்குறேனா? இல்ல என் மனசே என்கிட்ட பொய் சொல்லுதா?’ என்று புரியாமல் தவித்தான்.

ஒரு பக்கம் தன் கனவுத் தேவதையின் நினைவுகளோடு போராடும் ஆதவன்… இன்னொரு பக்கம் அவனது விலகலால் மனதுக்குள் காயம்படும் கமலி…இந்த விளையாட்டை இறைவனும் சிறப்பாக விளையாடி கொண்டிருந்தான். 

தோழிகள் மூவரும் தூங்கி விட, அந்த இரவு நேரத்தில், கமலி தன் அறையின் ஜன்னலோரம் நின்றுகொண்டு, ஆதவனின் அந்தப் புரியாத விலகலை பற்றியே எண்ணி எண்ணி மனதிற்குள் உருகிக் கொண்டிருந்தாள். 

‘ஏன் என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை? என்னிடம் பேசக்கூட அவருக்கு விருப்பமில்லையா?’

நாம் கேள்விப்பட்ட வரைக்கும் பொண்ணுனு பார்த்துட்டு போனாலே போனிலே இருவரும் குடும்பத்தை நடத்தி விடுவார்கள். ஆனால் இவர் இதுவரை என்கிட்ட ஒரு வார்த்தை பேசியதில்லை.

“இவருக்கு நான் பொருத்தமானவள் இல்லையோ? “என்ற கேள்விகள் அவளைச் சுழற்றி அடித்துக் கொண்டிருக்க, அவளது கண்கள் ஜன்னலுக்கு வெளியே வெறித்திருந்தன.

அப்போதுதான், வீட்டின் வெளியே தெருவில் சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் கூட்டத்திலிருந்து அந்தச் சத்தம் உரக்கக் கேட்டது:

“டேய் மச்சான்… ருத்ரா அங்க இருக்கான்டா!”

அந்த ‘ருத்ரன்’ என்ற பெயர் காற்றில் மிதந்து வந்து அவளது செவிகளைத் தீண்டிய அந்த ஒரு நொடி… கமலியின் உடலும் மனமும் அப்படியே உறைந்து போயின! அதுவரை ஆதவனைப் பற்றிய யோசனையில் மூழ்கியிருந்தவளுக்கு, திடீரென மின்னல் தாக்கியது போன்றதொரு பேரதிர்ச்சி.

காலையிலிருந்து நடந்த சம்பவங்கள், நிச்சயதார்த்த பரபரப்பு, சொந்தங்களின் கூச்சல், ஆதவனின் ஏமாற்றமளிக்கும் நடத்தை என எல்லாவற்றிற்கும் நடுவே, தன் மனதின் ஏதோ ஒரு இருண்ட மூலையில் ஒளித்து வைத்திருந்த அந்தப் பெயரும் முகமும் அவளுக்கு முற்றிலும் மறந்தே போய்விட்டிருந்தது.

ஆனால், இப்போது ‘ருத்ரன்’ என்ற அந்த ஒற்றைச் சொல்… அவளது அமைதியை சுக்குநூறாக உடைத்தெறிந்தது.

அவளையறியாமலே அவளது கண்கள் அகல விரிந்து, உடல் ஒட்டுமொத்தமாக நடுங்கத் தொடங்கியது. 

ஜன்னல் கம்பிகளைப் பற்றியிருந்த அவளது விரல்கள் சட்டென இறுக்கமடைந்தன. ரத்த ஓட்டமே நின்றது போல அவளது கை, கால்கள் ஜில்லென்று குளிர்ந்து போக, நெஞ்சிற்குள் இதயம் சீரற்ற வேகத்தில் துடிக்க, தொண்டை அடைத்துக் கொண்டு மூச்சு வாங்கியது

தான் கண்ட அந்த விசித்திரமான கனவு, அதில் கேட்ட அந்த கம்பீரமான அதேசமயம் அதிகாரமிக்க குரல், அச்சுறுத்தலாகத் தெரிந்த அந்த முகம்… எல்லாமே அவளது நினைவுக்குள் அலைகடலெனப் பொங்கி வந்தன.

‘யார் இந்த ருத்ரன்? வெறும் கனவில் வந்த ஒரு பெயர், எப்படி இப்போது நிஜத்தில் வெளியே கேட்கிறது? இது வெறும் தற்செயலா… இல்லை ஏதேனும் அசம்பாவிதத்தின் அறிகுறியா?’

ஜன்னல் திரைச்சீலையின் பின்னால் மறைந்து நின்று கொண்டு, நடுக்கத்தோடு வெளியே எட்டிப் பார்க்க முயன்றாள் கமலி. 

ஒருபக்கம் நிச்சயதார்த்தம் முடிந்த ஆதவனின் விலகல், மறுபக்கம் அமைதியைக் குலைக்கும் இந்த ருத்ரனின் பெயர்—இரண்டு புதிர்களுக்கு நடுவே சிக்கிக் கொண்டவளாய், தன் பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்துப் போனாள்!.

தேடல் தொடரும்… 

 

 

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top