மயிலாஞ்சி
அத்தியாயம்-8

காலையில் கதிரவன் அனைத்து ஜீவராசிகளுக்கும் விடியலைக் கொடுத்துக் கொண்டிருந்தான். குயிலின் ரீங்காரம், கிளிகளின் கீச்சிடும் சத்தம், லேசான பனித்தூறலில், கிராமத்து மண் வாசமும், மிக ரம்மியமாக இருந்தது அந்த காலை வெளிச்சம் அதியன் அறையில் நுழைந்தது.
அதியன் இரவு தாமதமாக வந்ததால் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். சூரிய வெளிச்சத்தின் தொந்தராவால் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டான். தேஜஸ்வினி எப்போதும் போல வழக்கமான வேலைகளை முடித்துவிட்டு, காஃபி போட்டு எடுத்துக் கொண்டு போய் கணவனை எழுப்ப சென்றாள்.
“ஜி.. எழுந்துருங்க.. காஃபி குடிங்க” என்றாள், அவள் இந்த மூன்று மாதத்தில் கொஞ்சம் தமிழ் பேச கற்றுக் கொண்டாலும் இந்த “ஜி” மட்டும் மாறாமல் தான் இருந்தது.
“வச்சிட்டு போ தேஜூ.. அப்படியே அந்த ஜன்னல் ஸ்கிரீன் இழுத்துவிட்டுட்டு போ” என அதியன் சொல்ல, தேஜஸ்வினி அவன் கூறியதை அப்படியே செய்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
ரத்னாவுக்கு இன்று பிறந்தநாள்.. என்றும் இல்லாமல் இன்று, அதிக நகையும், புடைவையும், அலங்காரமும் அளவுக்கு அதிகமாக இருந்தது. கண்ணாடியில் அவளை பார்த்து ரசித்துக் கொண்டாள். மணப்பெண் போன்று இருந்தாள்… அதே அலங்காரத்தோடு வெளிய வந்தவளை ஆர்த்தி அதிசயமாகப் பார்த்தாள்.
“ரத்னா.. எங்க கிளம்பிட்ட காலேஜ் கூட முடிச்சிட்ட எதுக்கு இப்படி ட்ரஸ் பண்ணிட்டு இருக்க?” என சந்தேகமாக கேட்டாள்.
”ம்ம்… உன் நிம்மதிய கெடுக்க தான்..!” என முணுமுணுத்தாள். ஆர்த்தி காதில் சரியாக கேட்காததால்,
“என்ன ரத்னா சொல்ற?” என்க,
“அது இன்னைக்கு என் பிறந்தநாள்.. இல்லே அதான்… சும்மா அப்படியே கோவிலுக்கு போயிட்டு தாத்தாவையும் பார்த்துட்டு வரலாம்னு” என ரத்னா சொல்ல,
“பார்த்து போமா..!” ஆர்த்தி செல்ல,
“நா வா..ரே..ன்” என ரத்னா ராகமாக கூறிவிட்டு சிலுப்பிக் கொண்டு போனாள்.
‘இன்னைக்கு என்ன செய்ய காத்திருக்காளோ.. எதுக்கும் தேஜூவை பத்திரமா இருக்க சொல்லுவோம்!’ என நினைத்தாள் ஆர்த்தி. உடனே தேஜூவின் எண்ணுக்கு அழைத்தாள். அவளது ஃபோன், அதியன் மெத்தையின் அருகில் இருந்தது ஓயாமல் அடிக்க.. அதியன் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான். ஃபோனை கையில் எடுத்தவன் கண்ணை கசக்கி பார்த்தான். ஆர்த்தி எண்ணை திரையில் பார்த்துவிட்டு,
“இவ எதுக்கு தேஜூவுக்கு கால் பண்றா..!” என்று முணுமுணுத்தபடி, அழைப்பை ஏற்றான்.
“என்ன க்கா காலையில ஃபோன் பண்ற!”
“தேஜூ எங்கடா..!”
“சமையல் பண்ணுவா என்னனு சொல்லு”
“விவகாரம் வீடு தேடி வருது அவள கொஞ்சம் பத்திரமா இருக்க சொல்லுடா”
“என்ன சொல்ற புரியல யாரு வரா”
“ரத்னா..!”
“சரி வரட்டும் அதுக்கென்ன?”
“அவ வர தோரணையே சரியில்லை.. கொஞ்சம் உஷாரா இருந்துக்க” என ஆர்த்தி ஃபோனை வைத்துவிட்டு வேலையைப் பார்த்தாள். அதியன் சோம்பல் முறித்து, பனியன் வேட்டியுடன் வெளியே வந்தான்.
அதியன் முகத்தை கழுவி விட்டு வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு, தேஜஸ்வினி வைத்துவிட்டு போன, காஃபியை கையில் எடுத்தான். அது ஆறிப் போய் இருந்தது. “தேஜூ.. காஃபி ஆறிடுச்சி” என்றான். அவளும் வேறு காஃபி கொண்டு வந்து கொடுத்துவிட்டு, ஆறிய காஃபியை அவள் வாயில் ஊற்றிக் கொண்டாள்.
அதியன் வாசற்படியில் சாய்ந்து நின்று, காஃபியை ஊதி ஊதி குடித்துக் கொண்டிருந்தான். ரத்னா சர்வ அலங்காரத்துடன் முந்தானையை கையில் சுழற்றிக் கொண்டு வந்தாள். அதியன் அவள ஒரு சந்தேகப் பார்வைப் பார்த்தபடி காஃபியைக் குடித்தபடி நிற்க, அவள் அவன் அருகில் வந்தவள், “ம்ஹூம்” என்று உதட்டை வளைத்து முறைத்து சிலுப்பிவிட்டு உள்ளே போனாள்.
“தாத்தா..!” என்றாள் உற்சாகமாய்.
“காலையில இருந்து உன்னை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன். இந்தா ரத்னா” என தாத்தா அவர் வேட்டியின் இடுப்பின் மடிப்பில் இருந்த, நான்கு ஐநூறு ரூபாய் தாள்களை அவளிடம் கொடுத்தார்.
“செல்ல தாத்தா..!” என அவர் கன்னம் கிள்ளினாள். “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க!” என காலில் விழுந்தாள். வருடா வருடம் அவள் பிறந்தநாளுக்காக பணத்தை சேர்த்து வைத்து கொடுப்பார். அவளுக்கு மட்டும் இல்லை, பேரன், பேத்தி ஐவருக்கும் விசேஷ நாட்களிலும் பணம் கொடுத்து ஆசிர்வாதம் செய்வார்.
ரத்னா வாங்கிய பணத்தை அவரிடமே கொடுத்துவிட்டு, “தாத்தா.. எனக்கு வேற ஆசை இருக்கு அதை நீங்க தான் நிறைவேற்றணும்” என்றாள். பரமசிவம் தாத்தா சிரித்தபடி அவளைப் பார்த்தார்.
“என்னனு சொல்லு ரத்னா.. உனக்கு செய்யாம யாருக்குச் செய்யப் போறேன்” என்ற தாத்தாவின் வார்த்தைகள் அவளுக்கு போதுமாய் இருந்தது.
“அது வந்து…” என அவள் தாத்தாவின் காதில் ரகசியமாக கூறிவிட்டு, அதியனை ஒரு பார்வை பார்த்தாள். அவனும் அவள் செயலைப் பார்த்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்து, காலியான காஃபி டம்ளரை தேஜூவிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்தான். பரமசிவம் தாத்தாவிடம் அவள் அப்படி என்ன சொன்னாளோ அவள் முகத்தில் அத்தனை பிரகாசம் தெரிந்தது. அதியன் கொல்லைப்புறம் கை, கால்களை நீட்டி உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்தான்.
“சரிமா.. நீயே கேட்ட பிறகு நான் என்ன சொல்ல போறேன் சீக்கிரம் நல்ல செதி வரும் சந்தோஷமா போயிட்டு வா” என்றார் தாத்தா.
ரத்னா அந்த வீட்டினை சுற்றி சுற்றி வந்தாள்.. நித்தியனை தேடி. கொல்லைப்புறம் சென்றவள், அதியன் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். பட்டாம்பூச்சி போல கைகளை முன்னும் பின்னும் அசைத்துக் கொண்டிருந்தவனை, பார்க்க பார்க்க ரத்னாவுக்கு கோபமாக வந்தது. அதே கோபத்தோடு வேகமாக சமையலறைக்கு வந்தாள்.
அப்போது தான் தேஜஸ்வினி சமையல் முடித்துவிட்டு வெளியே வர, வேண்டுமென்று அவளை வேகமாக இடித்துவிட அவள் பொத்தென கீழே விழுந்தாள்.
“அச்சச்சோ..! என்னமா நீ பார்த்து வரமட்ட இப்படியா வந்து மேல மோதுவ” என்று ரத்னா கேட்க, தேஜஸ்வினிக்கு தன் மீது தான் தவறோ என்ற எண்ணம்,
“மன்னிச்சிடுங்க. கவனிக்கல” என்றவள் எழுந்துக் கொள்ள முயற்சி செய்தாள். ரத்னா கை கொடுத்தாள். தேஜஸ்வினி அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு, அவள் கையை பிடிக்க போக.. ரத்னா கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டு, அவளை பார்த்து சிரித்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
தேஜஸ்வினி அவளாகவே எழுந்தாள் நேராக நடக்க முடியவில்லை. விழுந்ததில் இடுப்பு பிடித்துக் கொண்டது. வலியோடு போய் மெத்தையில் அமர்ந்தாள். ரத்னாவின் செயலும் அவள் மனதை காயப்படுத்தியது.
‘நான் என்ன பண்ணேன்.. அவங்க ஏன் இப்படி நடந்துக்குறாங்க? அவங்கள மாதிரி நானும் ஒரு பொண்ணு தானே!’ என மனதில் நினைத்தவளுக்கு கண்கள் கலங்கியது. என்ன தான் இங்கு அதியனும் அவன் சொந்தங்கள் இருந்தாலும் அவளுக்கு தனிமையாகத் தான் இருந்தது. அந்த உணர்வை அவளால் வார்த்தைகளால் கூட விவரிக்க முடியவில்லை.
“தேஜூ.. டவல் கொண்டு வரியா!” என அதியன் குரல் கொடுக்க. தேஜஸ்வினி மெல்ல எழுந்து டவலை எடுத்துக் கொண்டு போனாள். எப்போதும் விறுவிறுவென ஓடி வருபவள். இன்று இடுப்பை பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வருவதைப் பார்த்தான் அதியன்.
“தேஜூ என்னாச்சு?”
“ஒண்ணும் இல்ல ஜி”
“உடம்புக்கு ஏதும் முடியலையா?”
“அதெல்லாம் இல்ல ஜி”
“அப்புறம் ஏன் இடுப்ப பிடிச்சிட்டு நடந்து வர.. என்னாச்சு சொல்லு”
“எனக்கு ஒண்ணும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன் ஜி.. நீங்க குளிச்சிட்டு வாங்க நான் உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்”
“ம்ம் சரி..!” என்றவன், அவளைப் பாவமாகப் பார்த்தான்.
‘என்னாச்சு இவளுக்கு.. ஒரு வேலை வேற ஏதாவது பிரச்சனைய ஆர்த்திய வர சொல்லுவோமா’ என்று நினைத்தவன் குளித்துவிட்டு வந்து போலீஸ் உடைக்கு மாறிவிட்டு, ஆர்த்திக்கு ஃபோன் செய்தான்.
ஃபோனை எடுத்த ஆர்த்தி பதற்றத்துடன்,
“என்னடா என் நாத்தனார் ஏதும் பிரச்சனை பண்ணிட்டாளா.?” என்றாள்.
“இல்லை க்கா.. தேஜூவுக்கு உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன். நான் கேட்டா சொல்ல மாட்ரா… நீ வந்து கேளேன் என்னனு. நான் வேலைக்கு கிளம்புறேன் கொஞ்சம் வந்து பார்த்துக்க”
“அம்மா கிட்ட சொல்லுடா”
“அம்மா, பாட்டி வீட்டுல இல்ல கேழ்வரகு அறுவடை பண்ண போயிருச்சி காலையில! நீ வாயேன்.!” என்றான் சிறு கெஞ்சலோடு.
“சரி..பவிஷாவை.. ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வரேன்” என்றாள் ஆர்த்தி.
“ஜி.. சாப்பாடு எடுத்து வச்சிட்டேன்.. வாங்க” என்றாள். எப்போதும் சிரித்த முகத்துடன் அழைப்பவள் ஏனோ, இன்று அவள் முகத்தில் அத்தனை சோகம் பரவி இருந்தது.
“தேஜூ.. அக்காவ வர சொல்லி இருக்கேன் உடம்பு சரியில்லைனா அக்கா கூட ஹாஸ்பிடல் போயிட்டு வா சரியா!” என அதியன் சொல்ல, ‘இதிலாவது அக்கறை இருக்கே..!’ என நினைத்தவள் “சரி” என்று தலையை ஆட்டி வைத்தாள். அப்போதூம் கூட அவன் அழைத்துச் செல்லவில்லை என்று வருந்தினாள்.
அதியன் சாப்பிட்டு முடித்து.. “போயிட்டு வரேன் தேஜூ” என்றவன் வேலைக்கு புறப்பட்டான். வாசல் தாண்டி போகும் அவனையே பார்த்துக் கொண்டு சிறிது நொடி வாசலில் நின்றாள். என்ன தான் அதியன் அவளிடம் ஒட்டுதல் இல்லாமல் இருந்தாலும், அவனை அவள் மனம் விட்டுக் கொடுப்பது இல்லை. அவனை ரசிக்கவும் மறந்தது இல்லை. அந்த ஒரு சந்தோஷம் அவளுக்கு போதுமாக இருந்தது.
தேஜஸ்வினி வேலையை முடித்துவிட்டு கொல்லைப்புறம் சென்று படியில் அமர்ந்து, தாய் பசுவிடம் விளையாடும் கன்றுக்குட்டியைப் பார்த்து மெல்லியதாக சிரித்தாள். அப்படியே அமர்ந்து இருந்தவளுக்கு நினைவுகள் எங்கோ சென்றது.
ஒரு நாள் ஒடிசாவில் துர்கா பூஜை நடந்துக் கொண்டிருந்தது. ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, மண்டபத்தின் விளக்கு வெளிச்சமும், டாக்கின் ஓசையும், மலர்களின் மணமும் காற்றில் கலந்து நிறைந்திருந்தது.
அப்போது கூட்டத்தின் நடுவே தேஜஸ்வினி, மஞ்சள் சிவப்பு நிறத்தில் பாவடை, சட்டை, சரிகை துப்பட்டா, நெற்றியில் உருண்டை வடிவிலான நெற்றிச்சுட்டி, சிறியதாய் மூக்கில் தங்க வளையம், கை நிறைய கண்ணாடி வளையல், காலில் தண்டை கொலுசு பாவடை மறைந்திருந்தது. தன் தோழிகளோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.
அப்போது தான் கூட்டத்தை விலக்கிக்கொண்டு, கம்பீரமான தோற்றத்தோடு ஒருவன் உள்ளே வந்தான். வெள்ளை சட்டையும், காக்கி பேண்டும் அணிந்து இருந்தான். அவனது பூட்ஸ் அவன் ஒரு போலீஸ் என்பதை சொல்லாமல் சொல்லியது.
அவன் நிற்கும் தோரணையும், அவனது பார்வையும், அந்த அமைதியான கம்பீரமும் தேஜஸ்வினியின் கவனத்தை ஒரு நொடி ஈர்த்தது. அவன் பார்வை அவளைப் பார்த்தபடியே எங்கோ நகர்ந்தது. ஆனால், அந்த ஒற்றைப் பார்வையே தேஜஸ்வினியின் மனதில் ஏனோ ஒரு சின்ன நினைவாகத் தங்கிப்போனது… அன்றே அவள் அறியாமல், அவன் அவள் மனதில் ஒரு ஓரமாகப் பதிந்துவிட்டான்.
அவன் யாரையோ தேடுவதை வைத்தகண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் அந்த கெண்டை மீன் விழி அவனை துளைப்பது போல இருக்க, கூட்டத்தில் நின்று இருந்த தேஜஸ்வினி அருகில் சென்று ஒரு படத்தை காண்பித்து,
“இவன் இந்த பக்கம் வந்தானா.. யாராவது பார்த்தீங்களா?” என ஒடிசா மொழியில் கேட்டான்.
“இல்லை..!” என்று உதட்டை பிதுக்கி தலையை ஆட்டினாள்.
“பிளடி ராஸ்கல்.. எங்க போனான்.” எனத் தமிழில் புலம்பியவனை புருவம் சுருக்கிப் பார்த்தாள் தேஜஸ்வினி. அதற்குள் தேஜஸ்வினி அம்மா அவளைக் கூப்பிட, “அச்சச்சோ..!” என அவள் துப்பட்டாவில் முகம் மறைத்துக் கொண்டு ஓடினாள்.
“எத்தனை முறை சொல்றது தனியா போகாதேன்னு.” என அவளைத் தலையில் இடித்தார், அவள் அதியனை திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தாள்.
“தேஜூ.. தேஜூ..!” என்று ஆர்த்தி குரல் கேட்டு, நினைவில் இருந்து திரும்பினாள்.
“தேஜூ எங்கமா இருக்க”
“திதி.. நா இங்க இருக்கேன்” என மெல்ல எழுந்து வந்தாள். அவள் நடையே சரியில்லை என்று ஆர்த்தி கவனித்தாள்.
“தேஜூ என்னாச்சு ஏன் ஒரு மாதிரி நடக்குற.. இடுப்பு வலிக்கிதா.. மாசம் வந்துடுச்சா?” எனக் கேட்டாள்.
“இல்ல திதி.. கீழ விழுந்துட்டேன் இடுப்பு பிடிச்சிக்கிச்சி” என்க
“வேற எதுவும் இல்லை தானே”
“இல்ல திதி..”
“சரி.. என்னை பிடிச்சிக்கோ வா உட்காரு.” என ஆர்த்தி அவளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு, அழைத்து வந்து மெத்தையில் அமரத்தினாள்.
“படுத்துக்கோ தேஜூ இப்போ வந்துடுறேன்.” என்றவள் அவள் பாட்டியின் அறையில் நுழைந்து.. ஒரு எண்ணெய் பாட்டிலைக் கொண்டு வந்தாள்.
“என்ன பண்ண போறீங்க..!”
“திரும்பி படு தேஜூ..” என்றாள் ஆர்த்தி, தேஜஸ்வினி குப்புற படுத்துக் கொண்டாள்.
ஆர்த்தி, தேஜஸ்வினி இடுப்பில் எண்ணெய் தேய்த்து நீவி விட்டாள். அப்படியே அந்த அறையை சுற்றிப் பார்த்தாள். அழகாக சுத்தம் செய்து வைத்து எந்த பொருட்களும் கலையாமல் இருந்தது. சிறிய அறை என்றாலும் தேஜஸ்வினி அதை அழகாக வைத்திருந்தாள்.
“ஏன் தேஜூ.. தினமும் அறைய சுத்தம் செய்வியோ..?”
“இல்லை திதி..! வாரத்துக்கு ஒரு தடவை தான்!” என்றாள்.
“கடைசியா எப்போ பண்ணு”
“மூனு நாள் முன்னாடி”
“ஓஹோ..!”
தேஜஸ்வினி இங்கு வந்து மூன்று மாதம் ஆக போகிறது. ஆனாலும் இருவருக்குள்ளும் எதுவும் நடக்கவில்லை போலும்.. என ஆர்த்தி சந்தேகித்தாள். மெல்ல பேச்சு கொடுத்தாள் அதியனைப் பற்றி கேட்க.
“தேஜூ.. அதியன் உன்னை கஷ்டப்படுத்துறானா”
“அய்யோ.. இல்ல திதி.. அவர் எனக்கு கடவுள் மாதிரி” என்றாள்.
“கடவுள் மாதிரியா..! அதான் அப்படியே பூஜை பண்ணிட்டு இருக்கியா.. உங்களுக்குள்ள ஒண்ணும் இல்லையா” என நேரடியாகவே கேட்டாள் ஆர்த்தி.
“அது..திதி.. அவர்..!” அவள் சொல்ல தடுமாறினாள்.
“என்ன தேஜூ உனக்கு அதியனை பிடிக்கலையா.” என ஆர்த்தி கேட்டதும்.. இடுப்பு வலியையும் மறந்து, படக்கென திரும்பி எழுந்து அமர்ந்தாள்.
“திதி.. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்..ஆனா அவர்..” என அவள் சொல்ல தயங்கினாள்.
“அதியன் ஏதாச்சும் சொன்னானா”
“இல்லை திதி..!”
“மண்டு.. மண்டு..!” என ஆர்த்தி அவள் தலையில் இடித்தாள். அவளுக்கு அவள் அம்மாவின் நினைவு வந்து போனது.
“திதி.. நான் அவருக்கு கஷ்டம் கொடுக்குறேனோன்னு கவலையா இருக்கு.. விருப்பம் இல்லாம தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார்.. ஆனால் அவர் என்னை எப்பவும் விட்டு கொடுத்தது இல்லை! எனக்கு அவர் மட்டும் போதும் வேற எதுவும் வேண்டாம்” என்க,
“லூசு மாதிரி பேசாத.. அடி வாங்க போற”
“திதி.. அவரால எனக்கு ஒரு புது சொந்த கிடைச்சு இருக்கு…
எனக்கு அதுவே போதும்… திதி.. நீங்க தாத்தா, பாட்டி, அத்தை, மாமா,நித்தி, பவிஷா குட்டி, எழிலன் அண்ணா நீங்க எல்லாரும் போதும். எனக்கு” என வெள்ளந்தியாக பேசியவளை பாவமாய் பார்த்தாள்.
“அப்போ.. உனக்கு அதியன் மேல எந்த ஆசையும் இல்லையா?”
“இருக்கு திதி.. ஆனா அவர் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம நான் என்ன பண்ண முடியும்” என்றாள்.
ஆம் அவள் கூறுவதும் சரி தானே.. அவனுக்கு அவள் மீது அக்கறை இருந்தாலும்.. அவளை மனைவி என்ற பார்வையில் வைக்கவில்லையே. ‘தேஜூ இதை எடு.. தேஜூ அதை எடு.. சாப்பிடு ரெஸ்ட் எடு.. இரவும் கூட அவளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு தான் உறங்குகிறான். சின்ன குழந்தையிடம் காசு கொடுத்து.. கடைக்கு போய் பொருட்களை வாங்கி வர சொல்வது போல, தாலி கட்டி அழைத்து வந்தவளை வீட்டில் அவனுக்கு ஒரு உதவியாளர் போலவும், தஞ்சாவூர் பொம்மை போல் வைத்திருக்கிறவனை என்னவென்று சொல்வது.
“சரி.. அவன்..!” என ஆர்த்தி அதற்கு மேலும் கேட்டு அவளைக் காயப்படுத்த வேண்டாம் என நினைத்துவிட்டு, “அவன விடு..! இப்போ உனக்கு வலி பரவாயில்லையா” என ஆர்த்தி கேட்க, அவளும் பாவமாய் முகத்தை காட்டி,
“இல்ல திதி.. இன்னும் கொஞ்சம் மசாஜ் பண்றீங்களா?” என தேஜஸ்வினி படுத்துக் கொள்ள, ஆர்த்தி சிரித்துவிட்டு, அவள் இடுப்பை நீவி விட்டாள். இருவரும் பேசிக் கொண்டே நேரம் போனது தெரியாமல் இருந்தது.
“அச்சசோ.. அத்தை, மாமா, பாட்டிக்கு சாப்பாடு எடுத்துட்டு போகணும் திதி.. மறந்துட்டேன் பாருங்க” என தேஜஸ்வினி இப்போது நன்றாகவே நடந்தாள். வேக வேகமாக சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டு ஓடினாள். போகும் அவளை சந்தோஷமாக பார்த்தாள் ஆர்த்தி.
“ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா!” என்று நினைத்தபடி வாசலில் நின்றவளை தாத்தா அழைத்தார்.
“ஆர்த்தி…”
“என்ன தாத்தா..!”
“ஓ.. மாமனாரையும்.. மாமியாரையும்.. வெள்ளி கிழமை வர சொல்லு. அப்படியே உன் புருஷனையும் லீவு போட்டுட்டு வர சொல்லு… முக்கியமா பேசணும்” என்றார்.
“என்ன தாத்தா பேசணும்..!?”
“வெள்ளிக்கிழமை சொல்றேன்…” என்றவர் புத்தகத்தை புரட்டிப் படிக்க ஆரம்பித்தார்.ஆர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை. என்னவாக இருக்கும் என்று யோசனையில் இருந்தாள்.
தொடரும் மயிலாஞ்சி ✍️
