இருள் நிழலாய் நானே 21
“வெல்கம் மிஸ்டர்.ஏசிபி சார்” என்ற குரலில் சமரின் நெற்றி சுருங்கியது யோசனையில்.
‘தெரிந்த குரல்.’ சமர் யோசித்திடும் முன்பே, “இது ரூபேஷ் வாய்ஸ் மாதிரி இருக்கு மச்சி” என்றான் சீனு.
“செம ஷார்ப் சீனு நீ” என்ற ரூபேஷ், “வரக்கூடாததை தேடி வந்திட்டிங்களே!” என்க, இருவருக்கும் முன்னிருந்த திரை மெல்ல நீங்கியது.
பார்ப்பவற்றை நம்ப முடியாது இருவரும் ஆச்சரியம் கொண்டனர்.
“எதோ சயின்ஸ் வோர்ல்டுக்கு உள்ள வந்த மாதிரி இருக்கு” என்ற சீனு, அவ்விடத்தைச் சுற்றி பார்வையை சுழல விட்டான்.
இதுபோல் ஏதும் இருக்குமென்று சமர் முன்பே நினைத்திருந்ததால் சீனு அளவிற்கு ஆச்சரியமோ அதிர்வோ அவன் அடையவில்லை.
அவ்விடத்தை ஒவ்வொரு அடியையும் அத்தனைக் கூர்மையாக நோக்கினான்.
பல வேதியியல் திரவியங்கள், குடுவைகள், செய்முறை உபகரணங்கள் என பார்க்கவே எல்லா வசதிகளும் நிரம்பிய அறிவியல் கூடம் போல் காட்சியளித்தது.
“சமர்…” சீனு நண்பனை ஒண்டி நின்றான்.
சீனுவின் வியப்பைக் கண்ட சமர் என்னவென்று அவன் பார்வை சென்ற திக்கில் பார்க்க, ஒரு பக்க குகை முழுவதும் ஆளுயரக் கண்ணாடி குடுவைகள் வேதியியல் திரவத்தினால் நிரப்பப்பட்டிருக்க… உள்ளே மனித உடல்கள்.
யாவரும் உயிருடன் தான் இருக்கின்றனர் என்பதற்கு சான்றாக, பிராணவாயு உட்செலுத்தும் குழாய் பொருத்தப் பட்டிருந்தது.
ஒருபக்கம் எத்தனைக்கு எத்தனை அறிவு சார்ந்த அறிவியல் ஆதிக்கம் செய்ததோ… அதே அளவுக்கு மற்றைய பக்கம் அறிவியலால் இன்னும் ஏற்றுக்கொள்ளப் படாத மாந்த்ரீகம், மாயம் என நிரம்பிய சூப்பர் நேச்சுரல் என்று சொல்லப்படும் ஆன்மீகம் சார்ந்த பொருட்கள் இடம் பெற்றிருந்தன.
“என்ன சமர் நடக்குது இங்க?” எனக் கேட்டுக்கொண்டே அவ்விடத்தை ஒரு சுற்று சுற்றிய சீனு, “டேய் மச்சான் வர்ஷா” என்றான்.
ஒரு கண்ணாடி குடுவைக்குள் வர்ஷா வேதியியல் திரவத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.
“அப்போ அப்போ… மகி, ராகுல்” என்று அவ்விடத்தை பார்வையால் அலசினான்.
“உங்களுக்கு வேண்டப்பட்டவங்கலாம் இங்க தான் இருக்காங்க” என்று ஒலித்த குரல், “என்ன அவசரம் பொறுமையா பார்க்கலாம். இப்போ வரை சுற்றிப் பார்த்தது போதும்” என்றது.
“நீ ரூபேஷ் தான்னு தெரிஞ்சுப்போச்சு. அப்புறமும் எதுக்கு முகம் காட்டாம இருக்க?” சீனு வினவினான்.
“இப்போ நான் அங்கில்லையே போலீசு. என் வீட்டில் என் ரூமில் இருந்து உன்னை பார்த்திட்டு இருக்கேன்.” சட்டென்று குரல் நின்றுபோனது.
“டெக்னாலஜியை நல்லதுக்கு பயன்படுத்தவே மாட்டானுங்களா இவனுங்க.” சீனு ஆயாசமாக சொல்லிக்கொண்ட தருணம், அவனை இரண்டு தடியர்கள் வந்து தூக்கிச் சென்றனர்.
‘மகி.’ சமர் மனதிற்குள் அழைக்க, அவனது கையைப் பிடித்து குளிர் மூலம் தன்னிருப்பைக் காட்டினாள் மகி.
“பயப்படாத அத்து. நான் உன் பக்கத்தில் தான் இருக்கேன்” என்று சமரின் செவிகளுக்குள் மகியின் ஓசை.
மந்திரங்கள் ஓதி, பூஜை செய்யப்பட்டதற்கு சாட்சியாக அங்கு நிரம்பியிருந்த அத்தனைப் பொருட்களையும் சமர் ஆராய்ந்தான்.
(எல்லாம் கற்பனையே! எவ்வித மூட நம்பிக்கையும் பரப்பும் நோக்கமல்ல.)
தலையில்லா மனித உருவம், குதிரை, காக்கைகள், எரியும் பிணம், வித்தியாசமான ஒலி, இவையெல்லாம் மனிதனால் உண்டாக்கப்பட்ட மாயமாக இருப்பினும், தும்பை எனும் ஆன்மாவை பக்கம் வைத்து பார்த்து பேசியதால், கண் முன் இருப்பவை எதற்கானவை என்று சமரால் யூகிக்க முடிந்தது.
முன்பென்றால் கடவுள், ஆன்மா இவையெல்லாம் கட்டுக்கதை. நம்ப முடியாத, நம்பி ஏற்றுக்கொள்ளப் படும் மாயை என்று சொல்லி கடந்திருப்பான். தற்போது அவனது மகியே அவனோடு ஆன்மாவாக உலவும் போது அவனால் எப்படி நம்ப முடியாது இருக்க முடியும்.
“தும்பை மாதிரி இறந்த பிறகு இவனுங்களை எதிர்க்க நினைக்கும் ஆன்மாக்களை மந்திரக் கட்டுக்கள் மூலம் கட்டுப்படுத்தி வைக்கிறாங்க மகி. அதனால் தான் இந்த இடம் வரை தும்பையால் வர முடியல” என்ற சமர், “உனக்கு என்ன வேணும் ரூபேஷ்? எதுக்காக இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க? உனக்கு பின்னால் யார் இருக்கா?” எனக் கேட்டான்.
“எல்லாம் ஆராய்ந்து அலசிட்டியா?” என்ற ரூபேஷ், “உனக்கு இதுலேர்ந்து என்ன தெரியுது?” எனக் கேட்டான்.
“எதோ பெருசா பண்றன்னு மட்டும் தெரியுது” என்ற சமர், “இங்க இந்த விஷயமெல்லாம் கிட்டத்தட்ட மூணு தலைமுறையா நடக்குது. அப்போ இதுக்கான ஆரம்பம் நீயில்லை. யாருன்னு சொல்லு? எதுக்காக அப்பாவி மக்களை கொலை செய்து இந்த மாதிரி அடைச்சு வச்சிருக்க?” எனக் கேட்டான்.
“நீ ரொம்ப புத்திசாலி சமர்” என்ற ரூபேஷ், “எல்லாம் உடனே தெரிஞ்சுக்கிட்டா சுவாரஸ்யம் இருக்காது” என்றான்.
“உனக்கு தனியா இருக்க ரொம்ப பயம்ல? என்ஜாய்” என்றவனின் சத்தம் நின்று போனது.
அவ்விடம் முழுக்க ஒருவித புகை சூழ, சுவாசித்த நொடி சமர் இரும்பிக் கொண்டே மயங்கி சரிந்தான்.
“அத்து…” தன்னை வெளிக்காட்டிகொள்ளாது புகையோடு புகையாக மகி சமரைச் சுற்றி வட்டமிட்டது.
“அத்து எழுந்திரு…” மகியின் குரல் தூரத்தில் ஓங்கி ஒலிப்பது போல் சமரின் செவியை நிறைத்தது. அவனால் கண்களை திறந்திட முடியவில்லை.
மகியின் தவிப்பையும் ஓலத்தையும் உணர முடிந்தது.
இங்கு மகியின் அழுகையையும், சமரின் நிலையையும் கண்டு ஒன்றும் செய்ய முடியாது பரிதவிப்பாக தன் எல்லைக்குள் தவித்து நின்றது தும்பையின் ஆன்மா.
__________________________
சமர் கண் விழித்த போது அங்கிருந்த இருக்கையில் கொஞ்சமும் அசைய முடியாத அளவிற்கு இறுக்கமாகக் கட்டிப் போடப்பட்டிருந்தான்.
அவனுக்கு முன்பு ரூபேஷ், அவனின் தந்தை, அவருக்கு தந்தை என மூவரும் அமர்ந்திருந்தனர்.
“நீங்களுமா?”
அவனின் தந்தையிடம் அதிர்ச்சியாக வினவினான் சமர்.
அவருக்கு அருகில் ரூபேஷுக்கு அண்ணன் தோற்றத்தில் இருப்பவர் யாரென்று சமருக்குத் தெரியவில்லை.
“இது ரூபேஷ் தாத்தா மந்திரன் அத்து. அவங்க வீட்டில் போட்டோவில் பார்த்திருக்கேன்” என்ற மகி, “ஆனால் இவர் எப்பவோ செத்துட்டாரே. நீ நானெல்லாம் பிறக்கும் முன்பே. அப்படியே உயிரோடு இருந்தாலும் இவ்வளவு யங்கா எப்படி?” என்றாள்.
“சீனு எங்கே?” சமர் கேட்டிட,
“உனக்கு இங்க என்ன நடக்குதுன்னு சீனு மூலமாத்தான் டெமோ காட்டப் போறேன்” என்ற ரூபேஷ், அங்கிருந்த ஆட்களுக்கு கண் காட்டிட நால்வர் சென்று சீனுவை இழுத்து வந்தனர்.
“என் தாத்தாவுக்கு வயசாவது பிடிக்கல. அதனால் எப்பவும் இளமைத் தோற்றத்தில் இருக்க என்ன பண்ணலாம்னு எழுபது, எண்பது வருஷத்துக்கு முன்னவே ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கார். அவர் அப்போவே மூலிகை வைத்தியத்தில் பெயர் போனவர். பக்கத்து நாட்டிலிருந்து கூட மருந்துகள் ஆராய்ச்சிக்கு இவரிடம் வந்து நோட்ஸ் வாங்கிட்டு போவாங்க. அப்பேர்ப்பட்ட ஆளு இவரு” என்று ரூபேஷ் அவனின் தாத்தாவை கை காட்டிட, அவரோ பற்கள் தெரிய சிரித்தபடி எழுந்து சுழன்று தன் தோற்றத்தின் துள்ளலை வெளிப்படுத்தினார்.
அவருக்கு இப்போது நூறு வயதிற்கு மேலிருக்கும். ஆனாலும் முப்பத்தைந்து வயது தோற்றத்தில் காணப்பட்டார். இதெப்படி சாத்தியம். சாத்தியமாக்கியிருந்தார்.
அதன் பின்னர் அவரே சொல்ல ஆரம்பித்தார்.
“பழங்கால ஓலைச் சுவடியின் மூலம் இந்த மலையில் கிடைக்கும் ஒரு மூலிகையின் சாரோடு, மனித இரத்த இளம் திசுக்களை ஒன்றிணைத்து கிடைக்கும் திரவத்தின் மூலம் தோல் சுருங்காமல் செய்ய முடியும் தெரிஞ்சுக்கிட்டேன்.”
அதற்காக அவர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இந்த மலைக் காட்டில் உணவு, உறக்கம் தொலைத்து திரிந்து,தேடி அலைந்து அந்த மூலிகை தாவரத்தினை கண்டறிந்தார்.
அதன் பின்னர் அவர் தன்னுடைய ரத்த திசுக்கள் மூலம் ஆராய்ச்சி மேற்கொள்ளத் துவங்கினார். தொடக்கம் யாவும் தோல்விகளில் தான் முடிந்தது.
ஒவ்வொரு முறையும் இரத்த திசுக்களுக்காக வதை கொண்டவர், மலைக்கு சுள்ளி பொருக்க, கிழங்கு, தேன் எடுக்க, கால்நடை மேய்க்க வருபவர்களை கடத்தி தன் ஆராய்ச்சிக்கு ஈடுபடுத்தினார். அதில் சிலர் இறந்தும் போக, அவர்களின் உடலை மலைக்கு கீழ் மலைப் பாதையில் போட ஆரம்பித்தார்.
மலைக்கு செல்பவர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள் என மலையைச் சுற்றியிருக்கும் மக்கள் மலைக்கு செல்ல அஞ்சினர். மக்களின் அச்சம் அவருக்கு சாதகமாகிட, மலையிலே தற்போதிருக்கும் குகையை தன் ஆராய்ச்சிக் கூடமாக மாற்றிக் கொண்டார்.
தன்னுடைய ஆராய்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் வெளிநாடுகளில் பல கோடி லாபம் பார்க்கலாம் என நினைத்தவர், வெளி ஆட்களை உடன் வைத்துக்கொள்ள மறுத்து தன் மகனையே, அதாவது ரூபேஷின் தந்தை விருமனை மருத்துவம் படிக்க வைத்தார். பின்னர் அவரும் தன் தந்தைக்கு உதவிட ஒருங்கிணைந்தார்.
ஆராய்ச்சிக் கூடமே கதியென கிடந்த மந்திரனுக்கு வெளியுலகத் தொடர்பே இல்லாமல் போனது. வெளியிலிருந்து கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் விருமன் தான் பார்த்துக் கொண்டார்.
மூலிகை பறிக்கச் சென்ற மந்திரன் பல வருடங்கள் சென்றும் திரும்பாததால், கிராமத்தில் அனைவரும் அவரும் அங்கேயே மர்ம முறையில் இருந்திருப்பார் என்று நினைக்க, அதனையே விருமனும் உண்மையென நம்ப வைத்திட்டார்.
பல ஆண்டுகள் அதில் கழிந்தது. ஓரளவு அறிவியல் வளர்ச்சியடையத் துவங்கிய காலம்.
“இப்படியே ஒவ்வொரு முறையும் கொலை செய்துகிட்டு இருக்க முடியாதுப்பா” என்ற விருமன், “முதலில் இருப்பதை வைத்து மூலக்கூறை கண்டுபிடிங்க. பின்னர் பார்ப்போம்” என்று சில காலங்கள் அமைதியாக இருந்தனர்.
என்ன முயற்சித்தும் முடியாது போக, இதில் வெற்றிபெற்றே ஆக வேண்டுமென்ற எண்ணம் மந்திரனுக்கு வெறியாகியது.
சில காலங்களாக முன்பு போல் இறப்பு எதுவும் ஏற்படுவதில்லை என மக்கள் மீண்டும் மலைக்கு செல்ல ஆரம்பிக்க, இறப்புகள் ஏற்படத் துவங்கின.
இதனை இப்படியே விட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நாளை ஊர் மக்கள் எல்லாரும் ஒன்றாக சென்று மலைக்குள் என்ன மர்மம் என்று பார்போம் என ஒன்றுகூடி முடிவு செய்தனர்.
அதனை தடுப்பதற்காக விருமன் போட்டத் திட்டம் தான் பேய், பிசாசு.
அதற்கு முதல் பலியாக தன் அன்னையையே காவு வாங்கினார். இறந்த உடலை வைத்துக்கொண்டு,
“இராவு வெளியப்போக கொல்லைப் பக்கம் வந்தவங்க எதோ வித்தியாச சத்தம் கேட்குதுன்னு மலைப் பாதைக்கு போனாங்க. எதையோ கண்டு பயந்து ஓடி வந்தாங்க. மோகினி ஆட்டம் ஆடுறாள். தலைவிரிக் கோலமா சத்தமா சிரிக்கிறாள். குதிரை சத்தம், காக்கா சத்தமெல்லாம் கேட்குதுன்னு பயந்து நடுங்கிட்டே இருந்தாங்க. விடிஞ்சிப் பார்த்தா இரத்தம் கக்கி இறந்து கிடக்கிறாங்க” என அழுது கரைந்து கண்ணீரோடு கூற ஊர் மக்கள் அனைவரும் எதோ அமானுஷ்யம் என்று நம்பத் தொடங்கினர்.
சொன்ன பொய்யை உண்மையாக்க ரெக்காடர் மூலமாக தினமும் இரவு நேரங்களில் சுற்றியிருக்கும் கிராமம் அனைத்திற்கும் வித்தியாச ஒலிகள் ஒலிக்கும்படி செய்தனர்.
அந்த ஒலிகளுக்கு பயந்து மக்கள் இரவில் விரைவில் முடங்கிட ஆரம்பித்தனர்.
அவர்களுக்கு ஆராய்ச்சிக்கு இரத்த திசுக்கள் வேண்டும், அதற்காக இரவில் மலைக்கு கீழே மிக அருகில் இருக்கும் தும்பையின் கிராமத்திலிருந்து ஆட்களை குகைக்கு கொண்டு செல்வது எளிது என்று, இரவில் தனித்த நபர் இருக்கும் ஒரு வீட்டிற்கு முன்பு குதிரையின் குளம்பு மற்றும் கணைப்பு சத்தத்தை ஒலிக்கச் செய்து அவர்களை கடத்திச் சென்று திசுக்கள் எடுக்கப்பட்டு, அதிகப்படி இரத்த திசு வெளியேற்றத்தால் இறப்பவர்களை மலைப்பாதையில் போட்டு மக்கள் மனதில் அதீத பயத்தை உண்டாக்கினர்.
வருடங்கள் செல்ல செல்ல மக்கள் மனதில் மூட நம்பிக்கை குறையத் துவங்கியது. மீண்டும் அதனை தூண்டிவிட தன் குடும்பத்தை அங்கு நிலவும் மர்மத்திற்கு பயந்து நகரத்திற்கு அழைத்துச் செல்வதாக விருமன், தன் தங்கை கணவர், மற்றும் தன் மனைவியின் அண்ணனாகிய மகியின் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு நகரத்திற்கு வந்துவிட்டார்.
அத்தோடு நிறுத்தாது தானே பல மர்மங்களை நிகழ்த்தி மக்களை ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேற்ற ஆரம்பித்தார்.
சுற்று கிராமம் முழுக்க வெளியேறியிருக்க… தும்பையின் கிராமமும் காலியாகிவிட்டால் தங்களின் ஆராய்ச்சிக்கு ஆட்களை பிடிப்பது கடினமாகிவிடும் என மூன்று பனைமரம், ஆலமர கதைகளை பரப்பினார். அதற்காகவும் சில கொலைகள் நடத்தப்பட்டது.
ஒரு கட்டத்தில் இருவரின் ஆராய்ச்சியும் வெற்றி அடைந்தது.
ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் மீண்டும் உண்மைத் தோற்றம் மாறியது. வெளிநாடுகளில் இவர்களைப்போன்று சட்டத்திற்கு புறம்பாக செய்யப்படும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் தொடர்புகொள்ள, நிரந்தர மருந்தினை கண்டுபிடித்தால் தான் லாபம் என்று சொல்லிட, மேற்கொண்டு தங்களின் ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர்.
மந்திரன் தன் மகன் விருமனை எப்படி இதற்குள் இழுத்துக் கொண்டாரோ அதேபோல் ரூபேஷும் அவர்களுடன் இணைத்துக் கொண்டனர்.
விருமன் வாய் வார்த்தையாக கட்டுக்கதையாக உலவவிட்ட அனைத்து மர்மத்தையும் ரூபேஷ் தற்போதைய அறிவியல் வளர்ச்சியின் மூலமாக, ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உண்மை காட்சிகளாக சாத்தியப்படுத்தினான்.
பெரியவர்கள் இருவருக்கும் இருந்த அறுபது ஆண்டுகால பொறுமை, ரூபேஷிடம் இல்லை. அனைத்திலும் வேகம் காட்டினான். அதனால் மீண்டும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.
அனைத்திற்கும் இரவில் குதிரை, காக்கைகள், வித்தியாச சத்தங்கள், கண்ணுக்குத் தெரியாத மனிதர்கள், மூன்று பனைமரம், ஆலமரம், எரியும் பிணம் என்று அனைத்தையும் காரணமாக்கினான்.
மீண்டும் பல வருடங்களுக்குப் பின்னர் மர்ம கிராமம் என்று பேசப்பட்டது.
அதனை தெரிந்துகொள்ள வெவ்வேறு செய்தியாளர்கள் மூவர் மலைப்பகுதிக்குள் நுழைந்திட அவர்களிடம் தனக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு, நகரத்தில் கோனியில் கட்டி பாலத்திற்கு கீழே போட்டான்.
இதற்கு நடுவில் ரூபேஷுக்கு மகியின் மீது காதல். திருமண ஏற்பாடும் செய்யப்பட்டது. திடீரென மகி சமரை விரும்புவதாக சொல்லவும், அந்த நேரம் தான் பல வருட உழைப்புக்கு பலனாக ஆராய்ச்சியில் நல்ல முடிவு தென்பட, தற்போது மகியிடம் காதலில் மல்லுக்கட்ட முடியாதென நல்லவன் போன்று விட்டுக் கொடுத்திட்டு ஆராய்ச்சியில் முனைப்பைக் காட்டினான்.
ரூபேஷின் வேகமும், விவேகமும், ஆர்வமும் அவனது தாத்தா மற்றும் தந்தையால் பல வருடங்களாக செய்ய முடியாதை சில வருடங்களில் அவன் சத்தியமாக்கியிருந்தான்.
தன்னுடைய ஆராய்ச்சிக்கு தனது தாத்தாவையே ஈடுபடுத்தினான். பல உயிர்களைக் கொன்று செய்த ஆராய்ச்சியின் பலனாக இன்று மந்திரன் இளமைத் தோற்றத்தில்.
அனைத்தும் சொல்லி முடிக்க, சமர் மற்றும் சீனு ஒருவரையொருவர் மலைப்பாக பார்த்துக் கொண்டனர்.
“இயற்கையை மாற்றும் வல்லமை கொண்டவன் யாருமில்லை” என்ற சமர், “உன்னுடைய இந்த ஆய்வு தான் உனக்கு முடிவு” என்றான்.
சத்தமிட்டு சிரித்த ரூபேஷ்…
“என் தாத்தா இவருன்னு சொன்னா உன்னால் நம்ப முடியுதா?” என்ற ரூபேஷ், “இயற்கையே என் காலுக்கு கீழ் தான்” என்றான்.
“கிட்டத்தட்ட எட்டு மாதமா என் தாத்தா இளமையா இருக்கார். முன்பு போல் சில நாட்களில் தோற்றம் மாறவில்லை. அப்படின்னா நான் இயற்கையை விட சக்தி வாய்ந்தவன் தானே” எனக்கேட்டு, எழுந்து நின்று கைகளை விரித்து அவ்விடத்தில் சுழன்றான்.
“அதான் சக்சஸ் பண்ணிட்டியே! அப்புறம் எதுக்கு இன்னும் கொலை பண்ணிட்டு இருக்க?” சமர் கேட்டான். அவனுக்கு முதன்மையாக மகியின் உடல் வேண்டும்.
“ஒரு வருடத்தில் மூன்று முறை இந்த மருந்தை நரம்பில் செலுத்த வேண்டும். அதற்கு மனித இரத்த திசுக்கள் வேணுமே! தேவைப்படும் போதெல்லாம் ஒரு உயிரை கொலை செய்ய முடியாதே! அதான் இவங்களை எல்லாம் ***** மருந்தின் மூலம் கோமா நிலைக்கு கொண்டு சென்று குடுவைக்குள் வைத்து பத்திரப்படுத்துறேன்” என்ற ரூபேஷ், “தினேஷ் உடல் தான் மிஸ்ஸிங். அவன் செத்துட்டான் நினைச்சு வழக்கமா செய்யுற மாதிரி சாக்கில் சுத்தி பாலத்துக்கிட்டப் போட்டுட்டேன்” என்றான். தினேஷை தவறவிட்ட வருத்தம் அவனிடம்.
“அப்போ மகி?”
“ரொம்ப பத்திரமா வச்சிருக்கேன். வெளிநாடு செல்ல எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன், என்னோட இந்த ஆராய்ச்சிக்கு அங்கு எவ்வளவு வரவேற்பு தெரியுமா? இப்போவே பணம் கொட்டு கொட்டுண்ணு கொட்டுறானுங்க. அங்க போயிட்டு மகியோட நினைவுகளை செயலிழக்கச் செய்து, உன்னை மொத்தமா மறக்க வச்சு, நானும் என் மகியும் ஹேப்பியா வாழ்வோம்” என்றான்.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
