ருத்ரனின் பனித்தீ 💖 அத்தியாயம் 8

அத்தியாயம் 8

“மா..ம்மா…!”

 “இன்னொரு தடவை சொல்லுமா…” 

 “மா..ம்மா..”

 “மாமாவுக்காக இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் சொல்லு செல்லம்…”

 கண்ணீர் துளிகள் விழித்திரை முழுவதும் நிரம்பியிருக்க, உணர்ச்சி பெருக்கில் ரித்விக்கின் மகள் வர்ஷினியிடம் குரல் உடைய இறைஞ்சி நின்றிருந்தான் ருத்ரன்.

 “மாம்மா… மாம்மா… மாம்மா….” அவன் ஒரு முறை கூறக் கேட்ட பொழுதெல்லாம் அந்த பிஞ்சு குழந்தை தன்னுடைய மழலை மொழியால் ஒன்றுக்கு மூன்று முறையாக கூற, அந்த இரண்டு வயதே உடைய குட்டி அரும்பை, இரு கைகளால் வாரி தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டவன் சத்தம் இல்லாமல் கண்ணீர் உதிர்த்தான்.

 அதனை பார்த்தவாரே அங்கு வந்த ரித்விக்கோ “டேய்… டேய்… என்னடா இது… சின்ன குழந்தை மாதிரி…!” தன் நண்பன் மனம் கலங்குவதை பார்க்க தாளாமல் அவனின் தோளை மெல்ல வருடிக் குடுத்தவாரே கூறினான்.

 “அண்ணா… நீங்க மறுபடி ஆரம்பிச்சிட்டீங்களா…?” கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்தவள் வெளியில் வந்து இடுப்பில் ஒற்றை கை ஊன்றி அவனைப் பார்த்து முறைத்து உரிமையாக மிரட்டினாள் சுஜாதா.

 அவர்கள் இருவரும் தன்னை பார்ப்பதை உணர்ந்து வெள்ளமென பீறிட்டு கிளம்பிய தன்னுடைய உணர்வுகளை மெல்ல கடிவாளமிட்டுக் கொண்டு, தன் கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்து, வர்ஷினியை மெல்ல தன்னிலிருந்து பிரித்து நிறுத்தியவன், அவளின் கன்னங்களை கைகளில் தாங்கி, 

“மாமாவுக்காக இன்னும் ஒரு தடவை ப்ளீஸ்…!” என்று கண்களை சுருக்கி கேட்டான்.

“மா..ம்மா…” என்று மீண்டும் அந்த வார்த்தையை அந்த மழலை உச்சரிப்பில் கேட்டதும் அவளின் முகத்தை கனிவாக பார்த்து, அவளின் நெற்றியில் தன் பீறிட்ட உணர்வுகளை கட்டுப்படுத்தும் விதமாக அன்பாக ஒரு முத்தம் பதித்து விலகினான் ருத்ரன்.

 அதனை பார்த்து மெலிதாக புன்னகைத்து விட்டு, “சுஜா… விட்டா உன் அண்ணங்காரன் இப்படியே தான் பொழுதுக்கும் பெனாத்திட்டு இருப்பான்… நீ சாப்பாட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டியா…?” 

 “ஆங்.. எல்லாம் ஆச்சு ரித்து..”

 “இன்னைக்கு ஒன் அண்ணன் வேற வந்திருக்கான்… என்ன ஸ்பெஷல்..?”

 “எல்லாமே இருக்கு… நாட்டுக்கோழி குழம்பு, மட்டன் சுக்கா, ஃபிஷ் ஃப்ரை, நண்டு கூட்டு, முட்டை தொக்கு, இறால் கிரேவின்னு இப்படி எல்லாமே இருக்கு…” 

 அவள் அடுக்கிய லிஸ்ட்டை கேட்டவன் மெலிதான அதிர்வோடு “ஏண்டி… உன் அண்ணங்காரன் வந்தா மட்டும் விதவிதமா சமைக்கிறயே… மத்த நாளெல்லாம் எனக்கும் இந்த மாதிரி செஞ்சு குடுக்காம வெறும் புளிகுழம்பு ரசம்ன்னு வச்சு கொல்லுற…!” மிரட்டலோடு ஆரம்பித்து அமைதியாக முடித்திருந்தான் ரித்விக்.

“நீ தினமும் தான வீட்ல சாப்பிடுற… அண்ணே எப்பயாவது தான வர்றாரு… அவருக்கு வாய்க்கு ருசியா சமைச்சு போட வேணாமா… அதுக்கு தான் இது எல்லாம் செஞ்சேன்…!” 

 “உன் அண்ணனும் வீட்டு சாப்பாட வாய்க்கு ருசியா சாப்பிடலாம்ல்ல யாரு வேணாம்னு சொன்னா…. அவனை மட்டும் ஊ.. ன்னு ஒரு வார்த்தை சொல்ல சொல்லு… உடனே அவனுக்கு தகுந்த மாதிரி ஒரு பொண்ணு தேடி கல்யாணம் பண்ணி வச்சிடுவோம்… அதுக்கப்பறம் அவ கேண்டீன்லயோ இந்த ஹோட்டல்லையோ போய் சாப்பிட வேண்டிய வேலையே இருக்காது… தினமும் வகை வகையா ருசி ருசியா சாப்பிடலாம்மே… ஆனால் இவன் தான் ஒத்துக்க மாட்டானே…!”

தன் மனைவியிடம் சலிப்பாக கூறிக் கொண்டே டிவியை ஆன் செய்து ரிமோட்டை கையில் எடுத்துக் கொண்டு சோஃபாவில் வந்து அமர்ந்தான் ரித்விக்.

 அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை சிறுமுறைப்புடன் பார்த்து விட்டு, வர்ஷினியை கையில் தூக்கிக்கொண்டு தானும் வந்து சோஃபாவில் அமர்ந்த ருத்ரனோ, 

“என்னடா வந்ததும் ஆரம்பிச்சுட்டியா…? இதுக்குத்தான் நான் இங்க வரலைன்னு சொன்னேன்…!” என்று சற்றே கட்டமான குரலில் கூறினான்.

“என்னடா…இப்ப நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு..? நடந்ததையே நினைச்சுக்கிட்டு இருந்தா மட்டும் என்ன ஆக போகுது..? நீ உருகி உருகி உன்னுடைய கயலை ஞாபகத்துல வச்சிருக்கிறதால மட்டும் உன்னை விட்டு போன கயல் உன்கிட்ட திரும்பி வந்துட போறாளா என்ன..? இல்லையே…! அப்படி இருக்க அதையே நினைச்சுக்கிட்டு என்னடா பண்ண போற…? அந்த விஷயத்தை கடந்து வெளியே வாயேன்டா…

 நானும் உன் கூட பழக்கம் வச்சு உன்னை பத்தின விஷயம் எல்லாம் தெரிஞ்சதுல இருந்து சொல்றேன், ஆனா நான் பேசுறதையோ சொல்றதையோ நீ உன் காதுகொடுத்துக் கூட கேட்க மாட்டேன்ங்குற… உனக்கும் கல்யாண வயசு வந்துருச்சு… இப்பிடியே தனியாவே இன்னும் எத்தனை வருஷத்துக்கு இருக்கலாம்ன்னு முடிவு பண்ணி இருக்க…? அந்தந்த வயசுல அது அது முறையா நடக்கணும்லடா….!”

 தன் நண்பன் மீதான அக்கறையில், அவன் மீது தான் கொண்ட உரிமையில், அவனின் வாழ்க்கைக்கு வேண்டிய விஷயத்தை அவனிடம் எடுத்துரைக்க முயற்சித்தான் ரித்விக். 

 அவன் அவ்வாறு கூறியதும் சடுதியில் முகத்தை மாற்றிக்கொண்டவன், “சரி இதுக்கப்பறம் நான் இங்கிருந்தா அதை சரிப்பட்டு வராது… நான் கிளம்புறேன்…” என்றவன் எழுந்து கொள்ள பார்க்க, 

 “ஐயோ…! அப்பா சாமி டேய் உட்காருடா, நான் தெரியாம சொல்லிட்டேன், உன் வாழ்க்கையில ஒரு நல்லது நடக்கணும்னு அக்கறையா பேசுனேன் பாத்தியா என்னை சொல்லணும்…!” சலித்துக் கொண்டே கூறி முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான் ரித்விக்.

யார் அந்த கயல்…? அந்த சிறுமியை நினைத்து ஏன் ருத்ரன் இத்தனை வேதனை கொள்கிறான்…? அப்படி அந்த சிறுமிக்கு என்னவாயிற்று…?  

 15 வருடங்களுக்கு முன்பு 

 ருத்ரனின் அம்மா மீனாட்சி அப்பா சிவராமன் இவர்களின் பூர்வீகம் திருவண்ணாமலையை அடுத்து இருக்கும் ஒரு சிறிய கிராமம். ருத்ரன் தன் தாய் தந்தையருடன் சிறுவயதில் அங்கு தான் வாழ்ந்தான்.

சிவராமனின் தங்கை மாலதி மாலதியின் கணவர் சந்திரசேகர் அவர்களின் ஒரே புதல்வி கயல்விழி.

 ருத்ரனுக்கு தன் அத்தை மகள் கயல்விழி என்றால் அத்தனை பிடித்தம். அதுவும் அவர்கள் இருந்தது கிராமம் என்பதால் கயல்விழி பிறந்ததிலிருந்தே இவள் உனக்குத்தான்… உன்னுடைய வருங்கால மனைவி தான்..! என்று சொல்லி சொல்லியே வளர்த்ததால் அது ருத்ரனின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து போனது.

தனக்கு விபரம் தெரிந்த காலத்தில் பிறந்து, தன்னிடம் முழுதாக ஒப்படைக்கப்பட்டவள் கயல்விழி. அவனுக்கு இயல்பாகவே கயல்விழி என்றால் மிகவும் பிடிக்கும். அவளை அந்த சிறுவயதிலேயே அத்தனை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்பவன் தான் ருத்ரன்.

 ஒரு கட்டத்தில் கயல்விழியும் வளர்ந்து வந்துவிட, இருவரும் வயற்காடு பள்ளம் மேடு என்று அனைத்து இடங்களிலும் நன்றாக ஓடியாடி விளையாடத் துவங்கிய சூழலில், ருத்ரன் கயல்விழியை விட்டு எப்பொழுதும் பிரிய மாட்டான்… கயல்விழியும் கூட தன் மாமன் மகனை மூச்சுக்கு முன்னூறு முறை “மாமா…மாமா…!” என்று வெண்பற்கள் தெரிய இதழ் விரித்து புன்னகைத்து அழைத்துக் கொண்டே வால் போல் அவனின் பின்னாலேயே சுற்றித் திரிவாள். 

 ருத்ரன் வளர்ந்து விட்டதாலும், அவனுக்கு அந்த கிராமத்தில் அனைத்து இடங்களும் பரிச்சயம் என்பதாலும், குழந்தைகளின் பாதுகாப்பில் எந்த ஒரு பயமும் கொள்ளாது ருத்ரனின் பொறுப்பில் கயல்விழியை குடுத்து விட்டு தாம்தம் வேலைகளில் கவனமாகிவிடுவர் பெரியவர்கள் நால்வரும்.

இரு குடும்பத்திலும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் எவ்வித பஞ்சமும் இல்லை என்றாலும் கூட, ஒரு கட்டத்தில் மழையின்மை காரணமாக தண்ணீருக்கு பஞ்சம் ஏற்பட்டு நிலத்தின் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு அவர்கள் அனைவரையும் வறுமை வாட்டுத் துவங்கியது.

 அந்த வறுமையினால் கஷ்டப்படும் தன் மனைவி மகன் மற்றும் தங்கை குடும்பம் என அனைவரையும் கருத்தில் கொண்ட சிவராமன் சென்னைக்கு சென்று அங்கு ஏதேனும் வேலை பார்த்து பணம் அனுப்புவதாக கூறிவிட்டு தன் மனைவி மற்றும் மகன் இருவரையும் சிறிது காலம் சந்திரசேகரின் பொறுப்பில் விட்டுவிட்டு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

சென்னைக்கு வந்து தன்னுடைய திறமைக்கு எட்டிய வேலையினை செய்து தன் குடும்பத்திற்கு தன் தங்கை குடும்பத்திற்கும் வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து வந்தார்.

 ஒரு கட்டத்திற்கு மேல் சென்னையில் அவருக்கான தொழில் சிறப்பாக அமைந்து விட, இனி கிராமத்தில், வரண்ட வானம் பார்த்த பூமியை நம்பி பிரயோஜனம் இல்லை எனும் கட்டத்தில், தன் மனைவி மற்றும் மகன் இருவரையும் உடன் அழைத்துக்கொண்டார் சிவராமன்.

 ஊரிலிருந்து கிளம்பும் பொழுது கயல்விழியை விட்டு வரமாட்டேன் என்றும், அவளையும் உடன் அழைத்து செல்வதாகவும் கூறி அடம்பிடித்து ரகளை செய்தவனை சமாதானம் வார்த்தைகள் கூறி சென்னைக்கு அழைத்து வருவதற்குள் மீனாட்சி மற்றும் சிவராமன் இருவரும் ஒருவழியாகி விட்டனர்.

 கிளம்பும் பொழுது கயலின் முகத்தை கைகளில் ஏந்தி கொண்டவன், அந்த சிறுவயதிலேயே அவளை விட்டு பிரியப்போகும் ஏக்கத்தோடு, “இதுக்கப்பறம் உன்னை பார்க்க, உன் குரலை கேக்க ரொம்ப நாள் ஆகும்ல… நீ என்னை கடைசியா ஒரு தடவை மாமான்னு சொல்றியா…?” என்று கேட்டான்.

 அவன் அவ்வாறு கேட்டதும் எப்பொழுதும் போல் தன்னுடைய ப்ரத்தியேகமான வெண்பற்கள் தெரிய சிரித்து “மாமா…!!!” என்று அழைத்தவளின் மனம் பிரிவை உணர்த்தியதோ என்னமோ அவனை கழுத்தோடு கட்டிக்கொண்டு வெடித்து அழுதாள் அந்த சிறு மொட்டு.

 “நீ அழுகாத எனக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு… கொஞ்ச நாள் மட்டும் தான்… அங்க போயி நான் நல்லா படிச்சு இன்னும் கொஞ்சம் பெரியவனாகவும் உன்னையும் அங்க என்கூடவே கூட்டிட்டு போயிடுறேன்… அப்போ உன்னை யாரும் என் கூட அனுப்ப மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க சரியா…!” என்று அவளுக்கும் தன்னுடைய மனதிற்கும் சேர்த்து சமாதானம் கூறிவிட்டு அந்த கிராமத்திலிருந்து கிளம்பி இருந்தான் ருத்ரன்.  

 அந்த ஐந்து வயது குழந்தை கயல்விழி தான் ருத்ரனின் படுக்கை அறையில் புகைப்படத்தில் ஒய்யாரமிட்டிருக்கும் இருக்கும் அந்த சிறுமி.

 டைனிங் டேபிளில் வாழை இலையில் வகை வகையான உணவுகள் பரிமாறப்பட, அதனை பொறுமையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ருத்ரன்.

அவனுக்கு அருகிலேயே நின்று அவனுக்கு வேண்டியவற்றை எல்லாம் பார்த்து பார்த்து பரிமாறினாள் சுஜாதா. 

சுஜாதாவிற்கு ருத்ரன் என்றால் நல்ல அபிப்பிராயம், உடன் பிறந்தோர் யாவரும் இல்லாததால் உடன் பிறவா சகோதரன் என்கின்ற அன்பு அவனிடம் இருக்கும், அதனோடு சேர்த்து அவனின் கடந்த காலத்தில் அவன் கண்ட வேதனைகளை அறிந்த பிறகு அவன் மீதான ஒரு தனி பிரியமும், அவனை உரிமையாய் கண்டிக்கும் அளவிற்கு அன்பும் அக்கறையும் உருவானது.

 மற்ற நாட்களை விட ருத்ரன் வீட்டிற்கு வருகிறான் என்கின்ற செய்தியை கேட்டாலே, சுஜாதாவிற்கு ஒரே குஷியாகிவிடும். அவள் தன் அண்ணனுக்கு வேண்டியவற்றை விரும்பி செய்வதில் ஆரம்பித்து, அவன் ரசித்து ருசித்து வயிறார உண்டு முடிக்கும் வரையிலும் அவனுக்கு வேண்டியவற்றையெல்லாம் பார்த்து பார்த்து செய்து குடுப்பாள். 

 அதனோடு சேர்த்து அவன் இங்கு வந்து தன் மகளுடன் விளையாடும் தருணங்களில், அவனின் மனம் சற்றே இலகுவாவதையும் பார்த்தவள் அதனை வாடிக்கையாக மாற்ற வேண்டும்… அவனை இங்கு அடிக்கடி வரவழைக்க வேண்டும் என்றெண்ணி அவன் வர மறுத்தாலும் கண்டிப்பான முறையில் அவனை அழைப்பதும் உண்டு.

 மதிய உணவினை முடித்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்திருந்த ருத்ரனின் மடியிலேயே உறங்கி இருந்தாள் வர்ஷினி.

 “குடுங்க அண்ணா நான் போய் அவளை பெட்ரூம்ல தூங்க வச்சுடுறேன்…” 

“அதெல்லாம் வேண்டாம்மா… அவ நிம்மதியா தூங்கட்டும்… எனக்கு அவ என் பக்கத்துல இருக்கும்போது தான் மனசு ரொம்ப இதமா இருக்கு… நான் இங்க இருக்கிற வரைக்கும் அவளும் என் கூடவே இருக்கட்டும்…” 

 அவன் அவ்வாறு கூறியதும் மெலிதாக புன்னகையோடு மீண்டும் அமர்ந்து சாதாரணமாக உரையாடலை தொடங்கினாள் சுஜாதா.

“ஏய் சுமி… போன வருஷமும் இந்த காலேஜ்ல தான நீ படிச்ச… அப்போ நம்ம காலேஜ்ல இருக்குற ஒரு லெக்ஜரோட வீடு எங்க இருக்குன்னு கூட தெரிஞ்சு வச்சிக்க மாட்டியா நீ…? கொஞ்சம்னாலும் உன்னோட லெக்ஜர் மேல உனக்கு அக்கறை இருக்கா… என்னதான் ஸ்டூடண்ட்டோ நீ.. போ…” அழைப்பில் இருந்த சுமித்ராவிடம் சலிப்பாக பேசினாள் பனிவிழி.

 “ஏண்டி லெக்ஜரரோட பேர் என்ன…? அவர் என்ன படிச்சுருக்காரு…? அவரு நம்மளுக்கு நல்லா சொல்லித் தருவாரா…? இதெல்லாம் தாண்டி நம்ம தெரிஞ்சு வச்சுக்கணும்… யாராவது லெக்ஜரோட வீடு எங்க இருக்குன்னு தெரிஞ்சு வச்சுக்குவாங்களா…?”

“எனக்கு தெரியனுமே…”

 “சரி… இப்போ அவரோட வீடு எங்கன்னு தெரிஞ்சுகிட்டு நீ என்ன பண்ண போற…?”

“வேற எதுக்கு… அங்க போய் அவரை பாக்குறதுக்கு தான்…!”

(பனித்தீ தொடரும் 💝💝💝)

 

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top