முகவரி 17

“அப்பாடா…” என்ற பெருமூச்சோடு ஹாலில் இருந்த குஷன் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்த பரமு, தன் சட்டையின் மேல் பொத்தான்களைத் தளர்த்திவிட்டபடியே, “ஒரு வழியா நிச்சயதார்த்தம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு… மனசுக்கு நிம்மதியா இருக்கு சீதா” என்றார்.

“ஆமாங்க”, புள்ளைங்க ஜோடி பொருத்தம் எல்லாரும் கண்ணு வைக்கிற போல இருந்துச்சி. முதலில் சம்பந்தி அம்மாகிட்ட சொல்லி மருமவளுக்கு சுத்தி போட சொல்லணும். 

அந்த குமார் பொண்டாட்டி என்னனா பொண்டாட்டி தலைக்கு எண்ணெய் வாங்கி தரவே கொழுந்தனார் இன்னும் சம்பாதாக்கணும்னு கமலி முடிய பார்த்து சொல்லுறாங்க என்றார்.

மனைவி சொன்னதைக் கேட்டவர், பெண்களுக்கு அழகே முடி தாண்டி. நமக்கு தான் அடுத்த பிள்ளைக்கு வழியில்லை.என்ன செய்ய என் தலையெழுத்து என்கவும், “என்ன சொன்னீங்க?” என்று சீதா முறைக்க, சும்மா டி. 

“ஆமா சீதா…கல்யாணத்தை அடுத்த மாசமே வச்சுடலாம்னு பார்த்தா, உன் மவன் ‘மூணு மாசம் கழிச்சு வச்சுக்கலாம்’னு ஒத்தக்காலுல நிற்குறானே என்ன பண்றதுன்னே புரியல!” என்று சலித்துக் கொண்டார்.

அதற்குச் சீதா முகத்தில் மெல்லிய புன்னகையோடு, “விடுங்கங்க… அதான் நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சே! பொண்ணும் பையனும் கொஞ்ச நாள் போன்ல பேசி, ஒருத்தரையொருத்தர் நல்லா புரிஞ்சுக்கட்டுமே. அதுக்குள்ள என்ன அவசரம்?” என்று மகனுக்கு ஆதரவாகப் பேசினாள்.

உடனே பரமு பொய்யான கோபத்துடன் மனைவியை முறைத்து, “உனக்கு எப்பவுமே உன் மகனுக்குச் சொம்படிக்கிறதுதான் வேலையா போச்சு! சரி சரி, அவன் விருப்பப்படியே ஆகட்டும்” என்றார்.

அதே நேரத்தில், வீட்டின் மேல்மாடி அறையில் ஒரே சிரிப்பும் களேபரமுமாக இருந்தது. ஆதவனுக்கு நிச்சயதார்த்தம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, அவனது கல்லூரி தோழர்கள் மூவரும் பெங்களூரிலிருந்து வந்திருந்தனர். அவர்களோடு மாடியில் அருணும் பேசிக்கொண்டிருந்தார்கள். 

நண்பர்களில் ஒருவனான வசி, “மச்சானுக்கு ஒரு வழியா நிச்சயதார்த்தம் முடிஞ்சிருச்சு. அடுத்தது நம்ம பிளான் என்னடா?” என்று ஆவலாகக் கேட்டான்.

பரத்தோ தன் வழக்கமான கம்பீரமான குரலில், “ஏற்கனவே நாம போட்ட அதே பிளான் தான்டா! நாளைக்குக் காலையில நாம எல்லாரும் அப்படியே ‘கொல்லிமலை’க்குக் கிளம்புறோம். அங்கே சுத்திப் பார்த்துட்டு, ஜாலியா டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு, அப்புறம் இவனும் அருணும் திரும்ப இங்க வானகிரிக்கு வந்துடுங்க. நாங்க அப்படியே பெங்களூருக்குக் கிளம்பிடுறோம்” என்றான்.

“டேய்… சூப்பர் பிளான்டா! ஆனா, இன்னைக்குதான் நிச்சயதார்த்தம் முடிஞ்சிருக்கு, வீட்டுல ஒன்னும் சொல்ல மாட்டாங்களே?” என்று இன்னொரு நண்பன் தயங்க, “இருடா, நான் போயி அப்பா, அம்மா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடுறேன்” என்றவாறு ஆதவன் படிக்கட்டுகளில் கீழே இறங்கி வந்தான்.

கீழே வந்தவன், “அப்பா… பெங்களூர்ல இருந்து பசங்க வந்து ரெண்டு நாளாச்சு. நாளைக்குக் காலையில நாங்க எல்லாரும் கொல்லிமலை வரைக்கும் ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம்னு இருக்கோம். பார்த்துட்டு அப்படியே அவங்களும் ஊருக்குக் கிளம்பிடுவாங்க” என்றான்.

பரமு சற்று யோசித்தாலும், மகனின் கல்லூரி நட்பைப் புரிந்து கொண்டவராக, “சரிப்பா… பிரண்ட்ஸ் வந்திருக்காங்க, கூட்டிக்கிட்டுப் போயிட்டு வாங்க. ஆனா கொல்லிமலை ரோடு ரொம்ப வளைவு நெளிவா இருக்கும், பார்த்துப் பத்திரமா வண்டி ஓட்டுங்க. நேரமாச்சு, போய் தூங்குற வழியைப் பாருங்க” என்று அறிவுறுத்தினார்.

“சரிப்பா, பார்த்துக்கிறோம்” என்றபடி மாடியை நோக்கிச் செல்ல, வானகிரி வீட்டின் விளக்குகள் அணைந்து அன்றைய இரவு அமைதியில் மூழ்கியது.

மறுநாள் விடியற்காலையிலேயே கொல்லிமலைக்கான பயணப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆதவன், அருண் மற்றும் கல்லூரி நண்பர்கள் மூன்று பேர் என மொத்தம் ஐந்து பேரும் தயாராகி, அருணின் வெள்ளை நிற ‘இன்னோவா’ காரில் பயணத்தைத் தொடங்கினர்.

காரின் ஸ்பீக்கரில் மெல்லிய இசை ஓட, வளைந்து நெளிந்த மலைப் பாதைகளிலும், பசுமை போர்த்திய கொண்டை ஊசி வளைவுகளிலும் கார் சீறிப் பாய்ந்தது. வழியெங்கும் அரட்டைகளும், பழைய கல்லூரி நினைவுகளைப் பற்றிய கேலிகளும் சிரிப்பலைகளுமாகப் பயணம் உற்சாகமாகக் கழிந்தது. 

ஆங்காங்கே வண்டியை நிறுத்தி டீ குடிப்பது, இயற்கை அழகை ரசிப்பது எனச் சென்றதால், அவர்கள் கொல்லிமலையைச் சென்றடைந்தபோது மாலை மணி சரியாக 6:00ஐத் தொட்டிருந்தது.

மலையின் குளிர் காற்றும், மாலை நேரத்து மிதமான மூடுபனியும் அவர்களைக் கதகதப்பாக வரவேற்றன.

முன்பே ஆன்லைனில் ரூம் புக் பண்ணியிருந்ததால், எங்கும் அலையாமல் நேராக அந்த ஹோட்டலுக்குச் சென்று சேர்ந்தனர்.

ரிசப்ஷனில் சாவி வாங்கிச் சென்று, தங்களின் அறைகளுக்குள் லக்கேஜ்களை எறிந்துவிட்டு, “அப்பாடா…” என்ற பெருமூச்சோடு அனைவரும் ஆளுக்கொரு பக்கமாகப் பஞ்சு மெத்தையில் சென்று சுருண்டு விழுந்தனர். நீண்ட நேரப் பயணக் களைப்பு அனைவரின் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது.

“இன்னைக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சு… இருட்ட வேற செஞ்சிடுச்சு. அதனால இன்னைக்கு நைட் நல்லா ரெஸ்ட் எடுப்போம். நாளைக்குக் காலையில புதுத் தெம்போட காட்டுப் பகுதிக்குள்ள போய்ச் சுத்தலாம்” என்று முடிவெடுத்தனர்.

இரவு நேரம் நெருங்கியதும், அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு எதிரில் இருந்த ரோட்டுக் கடைக்குச் சென்று அவரவர் விருப்பத்திற்கேற்பச் சுடச்சுடச் சாப்பிட்டு முடித்தார்கள். 

உண்டு முடித்த திருப்தியில், அந்த மலைப் பிரதேசத்து இரவு நேரக் குளிர் காற்றை அனுபவித்தபடி சிறிது தூரம் நடந்து, சுற்றியிருந்த பகுதிகளை வேடிக்கை பார்த்தனர். 

அமைதியும் குளிர்ச்சியும் நிறைந்த அந்தச் சூழல் பயணக் களைப்பைக் சற்றே போக்கியது. அதன்பின் ரூமிற்குத் திரும்பியவர்கள், மறுநாள் பயணத்திற்கான திட்டமிடலோடு பஞ்சு மெத்தையில் சரிந்து உறங்கிப்போயினர்.

மறுநாள் காலையில் பொழுது புலர்ந்ததும், அனைவரும் சுறுசுறுப்பாகத் தயாராயினர்.

 “இன்னைக்கு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள்ள போயி, மலையோட உச்சியில இருக்குற அந்தச் சாமியைத் தரிசனம் பண்ணலாம். அப்படியே சுத்தி இருக்குற அடர்ந்த மலைக்காட்டையும் வேடிக்கை பார்த்துட்டு வரலாம்” என்று முடிவெடுத்துக் கிளம்பினர்.

காட்டுப் பாதையில் பயணத்தைத் தொடங்கியபோதுதான் அவர்களுக்குத் தெரிந்தது—தங்களைப்போலவே இன்னும் பல இளைஞர் குழுக்களும், சுற்றுலாப் பயணிகளும் கூட்டமாக அந்தக் காட்டுப் பாதையில் சாமியைத் தரிசிக்கவும், இயற்கையை ரசிக்கவும் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது.

பசுமையான மரங்கள் அடர்ந்து நிற்க, பறவைகளின் ஒலியும், வழிப்போக்கர்களின் பேச்சுச் சத்தமும் அந்தக் காட்டுப் பாதையை மேலும் உயிர்ப்புள்ளதாக மாற்றியிருந்தன.

அடர்ந்த மரங்களுக்கு நடுவே வளைந்து நெளிந்து சென்ற அந்தப் மண் பாதையில், பறவைகளின் கூச்சலுக்கும் வழிப்போக்கர்களின் பேச்சுச் சத்தத்திற்கும் நடுவே ஏழு பேரும் மெல்ல மேலேறிச் சென்றனர். காட்டுப் பாதையின் இருபுறமும் பிரம்மாண்டமாக வளர்ந்து நின்ற மரங்களும், பாறைகளின் வழியே கசிந்து வந்த சுனைநீரும் காண்போரைக் கவரும் வகையில் இருந்தன.

“டேய் பரத்… இங்க பாருடா! கூட்டத்தைப் பார்த்தா மேல இருக்குற கோயிலுக்கு ஏதோ விசேஷம் போல இருக்கு,” என்று நண்பன் அருண் சுட்டிக்காட்ட, மித்ரன் சுற்றிலும் இருந்த மக்களை நோட்டம் விட்டான்.

உண்மையிலேயே, தங்களைப் போன்ற சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும் வழிநெடுகிலும் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தனர்.

காட்டுக்குள்ளே செல்லச் செல்ல வெயிலின் தாக்கம் மறைந்து, மரங்களின் அடர்த்தியால் ஒருவித குளுமையான நிழல் சூழ்ந்தது

சிறிது தூரம் நடந்ததும், காட்டின் நடுவே அமைந்திருந்த அந்தப் பழமையான கோயில் கண்ணில் பட்டது. பாறைகளுக்கும் பிரம்மாண்ட மரங்களுக்கும் நடுவே, இயற்கையோடு இயைந்து கம்பீரமாகக் காட்சியளித்தது அந்த எல்லைச் சாமி கோயில். மணி ஓசையும், கற்பூர வாசனையும், சாம்பிராணி புகையும் அந்தக் காட்டுப் பகுதியையே ஒரு புனிதமான உணர்வால் நிரப்பியிருந்தன.

ஐந்து பேரும் வரிசையில் நின்று, அந்த எல்லைச் சாமியை மனதாரத் தரிசனம் செய்தனர். சாமி கும்பிட்டு முடித்து வெளியே வந்ததும், காட்டின் அமைதியை ரசித்தபடி ஒரு பெரிய மரத்தின் நிழலில் போய் உட்கார்ந்தனர்.

அப்போது ஆதவன், தன் கையில் இருந்த மோதிரத்தை மெல்லத் தடவிப் பார்த்தபடி எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகம் ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருப்பதை கவனித்த மித்ரன், அவனருகே சென்று தோளில் கை வைத்தான்.

“என்னடா ஆது… நேத்துல இருந்து பார்க்குறேன், ரொம்ப யோசனையாவே இருக்க? நிச்சயதார்த்தம் முடிஞ்ச சந்தோஷமே உன் முகத்துல இல்லையேடா?” என்று கேட்டான். 

மித்ரனின் இந்தக் கேள்வியைக் கேட்டதும் ஆதவன் திடுக்கிட்டு நிமிர்ந்தவனோ, பின்னர் சட்டெனச் சுதாரித்துக் கொண்டு, தன் மனதிற்குள் புதைந்து கிடக்கும் ‘முத்தழகு’ நினைவுகளையும், அதனால் கமலியின் முகத்தைக் கூடப் பார்க்க முடியாமல் தவிக்கும் தன் குழப்பத்தையும் சொல்லி, நண்பர்களின் சந்தோஷத்தைக் கெடுக்க அவன் விரும்பவில்லை.

முகத்தில் ஒரு போலிப் புன்னகையை வரவழைத்துக் கொண்டு, “அட ஏண்டா நீ வேற… ஒன்னும் இல்லடா மச்சான்! நமக்கு மலை ஏறிப் பழக்கம் இல்லையா, அதான் ஒரே அசதியா இருக்கு. தலை சுத்துற மாதிரி இருந்தது, வேற ஒன்னும் இல்ல,” என்று சமாளித்துவிட்டுப் பேச்சைத் திசைதிருப்பினான். 

மித்ரனும் அவன் சொன்னதை நம்பி, அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான்.

மீண்டும் அவர்களின் பயணம் தொடர்ந்தது. கரடுமுரடான அந்தப் பாறைப் பாதையிலும், சருகுகள் நிறைந்த காட்டு வழியிலும் நண்பர்கள் ஐந்து பேரும் மெல்ல அடியெடுத்து வைத்து முன்னோக்கி நடந்தனர்.

நேரம் செல்லச் செல்ல, காட்டின் அடர்த்தியையும் மீறி உச்சி வெயில் மண்டையைப் பிளப்பது போலக் காயத் தொடங்கியது. மரங்களின் இடைவெளியே கசிந்து வந்த வெயில் ஆட்களைச் சோதித்தது.

மதியம் 1:00 மணியைத் தொட்டதும், பயணக் களைப்பும் பசியும் அனைவரையும் வாட்டியது.

நல்லவேளையாக, காலையிலேயே ஹோட்டலில் வாங்கி வந்த உணவுப் பொட்டலங்கள் அவர்களிடம் இருந்தன. 

அடர்ந்த ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் அனைவரும் வட்டமாக அமர்ந்தனர். கட்டியிருந்த பொட்டலங்களைப் பிரித்து, காட்டின் குளுமையான சூழலில் ஆளுக்கொரு பிடி பிடித்துச் சாப்பிட்டு முடித்தனர். சாப்பிட்ட மயக்கத்தில் சிறிது நேரம் அங்கேயே சாய்ந்து ஓய்வெடுத்தவர்கள், தங்களின் பயணத்தை மீண்டும் தொடங்கினர்.

இறுதியாக, அவர்கள் அடைய நினைத்த அந்தப் புகழ்பெற்ற குகைக்கல் தெய்வத்தின் சன்னதியை அடைந்தபோது, மாலை மணி சரியாக 6:00 ஐத் தொட்டிருந்தது.

மலைக் காட்டின் அந்த அந்திப் பொழுதில், குகைச் சன்னதி ஒருவித மர்மமான அழகோடு காட்சியளித்தது. அவர்களுக்கு முன்பே சில சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் அங்கே காத்திருந்தனர்.

ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய குறுகிய, பாறை இடுக்கான பாதையில் அனைவரும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். குகைக்குள் வீசிய சாம்பிராணி மணத்திலும், அகல் விளக்கின் வெளிச்சத்திலும் மிளிர்ந்த அந்தத் தெய்வத்தை மனமுருக வேண்டி, வழிபாடு செய்துவிட்டு வெளியே வந்தனர்.

குகையை விட்டு வெளியே வந்ததும், சுற்றியிருந்த பாறை இடுக்குகளையும், சித்தர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படும் குகை அமைப்புகளையும் வியப்புடன் பார்த்தானுங்கள். 

“டேய்… இந்த மலைக்காட்டுல பல நூறு வருஷத்துக்கு முன்னாடி சித்தர்கள் எல்லாம் தவமிருந்திருக்காங்களாம்டா!” என்று நண்பர்கள் சித்தர்களைப் பற்றிய சுவாரசியமான கதைகளைப் பேசிக்கொண்டே, முதன்மைப் பாதையிலிருந்து சற்றுத் தள்ளி நடந்தனர்.

அப்போது திடீரென வானம் இருண்டு, காடு முழுதும் பெருங்காற்று சுழன்றடித்தது. அடுத்த சில நொடிகளில், எதிர்பாராத விதமாக ‘சடசட’வென மழை கொட்டத் தொடங்கியது. சாதாரணமாகத் தொடங்கிய மழை, கணநேரத்திற்குள் பேய் மழையாக உருவெடுத்து, காடே இடி முழக்கத்தாலும் மின்னலாலும் அதிர்ந்தது.

தேடல் தொடரும்…

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top