மரங்களின் கீழ் நின்றால் இடி தாக்கும் என்ற பயம் வந்ததால், நண்பர்கள் நாலாபுறமும் ஒதுங்க இடம் தேடி ஓடும் போது, ஆதவனோ சற்றே தள்ளி இருந்த ஒரு பாறை இடுக்கைச் சுட்டிக்காட்டி, “டேய்… அங்கே பாருங்கடா! ஒரு சின்ன குகை மாதிரி இடம் இருக்கு! ஓடி வாங்க… அங்கே போகலாம்!” என்று கத்தினான்.
பின்னர் மழையில் நனைந்தபடியே ஐந்து பேரும் ஓடிச் சென்று, அந்தச் சிறிய குகைக்குள் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் உள்ளே சென்று நின்ற அடுத்த நிமிடம், வெளியே வானம் பிளப்பது போலப் பேய் மழை அடித்துப் பெய்யத் தொடங்கியது.
காட்டிற்குள் இருள் மெல்லக் கவியத் தொடங்க, அந்த அரிய குகைக்குள் மாட்டிக்கொண்ட நண்பர்களுக்கும், இனி அடுத்து என்ன நிகழும் என்ற பரபரப்பும் திகைப்பும் தொற்றிக்கொண்டது!
தங்களின் தலைமுடியில் சொட்டிய மழைநீரை விரல்களால் துவட்டியபடியே, நண்பர்கள் ஐந்து பேரும் அந்த குகையின் உள் பகுதியை உற்றுப் பார்க்கத் தொடங்கினர்.
வெளியே பெய்யும் பேய் மழையின் சத்தத்திற்கு இடையே, குகையின் குளுமையும் அமைதியும் அவர்களுக்கு ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தன. வெளிப்புறம் குறுகலாகத் தெரிந்தாலும், உள்ளே ஏறக்குறைய பத்து பேர் தாராளமாகத் தங்கும் அளவிற்கு அது விசாலமான இடமாக இருந்தது.
அப்போது, நண்பர்களில் ஒருவனான அருணின் பார்வை குகையின் வலதுபுற மூலையில் கூர்மையாகப் பதிந்தது. மங்கலான வெளிச்சத்தில், அங்கே ஒரு மனித உருவம் அசைவற்று தியானத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அவனுக்கு ரத்தம் உறைந்து போவது போலிருந்தது!
“யாத்தே…!” என்று பயத்தில் அலறிய அருண், பின்னடி நின்ற ஆதவனின் கையைப் பிடித்துக்கொண்டான்.
அவனது அலறல் சத்தம் குகைக்குள் எதிரொலிக்க, மற்ற நண்பர்களும் பதறிப்போய் அந்தத் திசையைப் பார்த்தனர்.
ஆனால், அங்கே தியானத்தில் இருந்தவரோ எவ்வித சலனமுமின்றி மெதுவாகக் கண்களைத் திறந்து, மிகவும் சாந்தமான குரலில், “என்னப்பா… பயப்படாதீங்க, பயப்படாதீங்க! உள்ளே வாங்க…” என்று அன்போடு கூறினார்.
அந்த அசரீரி போன்ற குரலைக் கேட்டதும் நண்பர்களின் நடுக்கம் சற்றுத் தணிந்தது.
‘கொல்லிமலையில் இன்றும் சித்தர்களின் தரிசனம் சிலருக்குத் தற்செயலாகக் கிடைக்கும்’ என்று ஊர் கதைகளிலும், பெரியவர்கள் சொல்லியும் அவர்கள் செவிவழியாகக் கேட்டிருந்தது உண்டு. ஆனால், அதை இப்போது நேரடியாகத் தங்கள் கண்களால் காண்போம் என்று அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை.
நீண்டு அடர்ந்து சுருண்ட ஜடைமுடிகளும், கழுத்தை அலங்கரித்த பெரிய ருத்ராட்ச மாலைகளும், கண்களில் ஒருவித தெய்வீகக் காந்த ஈர்ப்பும் கொண்ட அந்த முதியவர், அமைதியின் உருவமாகத் திகழ்ந்தார். குகையின் இருளுக்குள்ளும் அவரது முகத்தில் ஒருவித ஒளிரும் தேஜஸ் வீசியது.
கண் முன்னால் நிஜமாகவே ஒரு சித்தரைப் பார்த்துவிட்ட திகைப்பில், ஆதவன், அருண் உட்பட மற்ற நண்பர்களும் வார்த்தைகளின்றி மெய் மறந்து, அப்படியே ஸ்தம்பித்து நின்றனர்!
“நடப்பவை எல்லாம் அந்த நமச்சிவாயனின் செயல்!” என்ற அந்த சித்தரின் கம்பீரமான குரல் குகையின் சுவர்களில் எதிரொலித்து, நண்பர்களின் நெஞ்சை ஊடுருவியது.
அவர் குகையின் ஒரு பகுதியில் சற்றே மேடு போலக் காட்சிளித்த பெரிய பாறையைக் காட்டி, “அப்படி உட்காருங்கப்பா…” என்று சைகை செய்ய, இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்தும் திகைப்பிலிருந்தும் மீளாத நண்பர்களும் தயங்கியபடியே சென்று அந்தப் பாறை மேடையில் உட்கார்ந்தனர்.
வெளியே இடி மின்னலுடன் பேய் மழை கொட்டிக்கொண்டிருக்க, குகைக்குள் இருந்த அந்த அகல் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் சித்தரின் முகம் தெய்வீகக் களையோடு மின்னியது. அவர் நண்பர்கள் ஒவ்வொருவரையும் தன் தீர்க்கமான பார்வையால் ஊடுருவிப் பார்த்தார்.
குறிப்பாக, ஆதவனை மட்டும் அவரது கண்கள் ஒரு கணம் உற்று நோக்கியது.
சற்றே அமைதிக்குப் பின், சித்தர் தன் நாசியால் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு, சூட்சுமமான முறையில் சில வரிகளைப் பேசத் தொடங்கினார்:
“நடப்பவை யாவும் நன்மைக்கே! முற்பிறவி பந்தம்… இந்த மூன்றாம் பிறவியிலும் தொடரும் என்பது அந்த இறைவன் வகுத்த வழி. எட்டிப் போனாலும் அது உன்னைத் தேடி கிட்ட வரும்! நீயாக வெட்டி நின்றாலும்… அது உன்னை வந்து முட்டிக்கொள்ளும்! நீயோ நானும் மண்ணல்லவா…”
அவர் சொல்லி முடித்துவிட்டு மெல்லிய புன்னகையோடு கண்களை மூடிக்கொள்ள, நண்பர்கள் அனைவரும் ஒருவரையொருவர் குழப்பத்தோடு பார்த்துக்கொண்டனர்.
அவர் கூறிய ‘முற்பிறவி பந்தம்’, ‘மூன்றாம் பிறவி’, ‘எட்டிப் போனாலும் கிட்ட வரும்’ போன்ற வரிகளின் ஆழமான பொருள் அவர்களுக்குச் சுத்தமாகப் புரியவில்லை.
ஆதவனுக்கு மட்டும் அந்த வரிகளைக் கேட்டதும், தன் கனவில் வரும் ‘முத்தழகு’ நினைவுகளும், தன் கைப்பிடிக்கக் காத்திருக்கும் ‘கமலி’யின் முகமும் ஒருசேர நினைவுக்கு வந்து நெஞ்சை அடைப்பது போலிருந்தது.
யாருக்கு என்ன நடக்கப் போகிறது? அந்தச் சித்தர் சொன்னதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? – எதுவுமே புரியாமல் மற்ற நண்பர்களும் பிரமை பிடித்தது போல உட்கார்ந்திருந்தனர்!
அவர்களில் சற்றே துணிச்சல்மிக்க பரத், தன் பயத்தை மறைத்துக் கொண்டு குரலைத் தாழ்த்தி, “சாமி… நீங்க பேசுறது எங்களுக்குச் சுத்தமா புரியலையே! என்ன சொல்ல வர்றீங்க?” என்று மெல்லக் கேட்டான்.
அவனது கேள்வியைக் கேட்டு மெல்லிய புன்னகையை உதிர்த்த சித்தர், “விதி வகுத்த பாதை அப்பா இது! அதுவே உங்களை இன்னைக்கு இந்த இடத்துக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கு. ‘இன்று இருப்போர் நாளை இல்லார், நாளை இருப்போர் இன்று இல்லார்’… எதுவும் நம்ம கையில் இல்லைப்பா! நிஜத்திற்கும் நிழலுக்கும் இடையில யுத்தம் தொடங்கிடுச்சு. நிஜத்தை நீ உணரும்போது, அந்த நிழல் பிம்பம் அதில் சுடர்விட்டு எரியும்!” என்று ஆழமான புதிரோடு முடித்தார்.
அவரது வார்த்தைகள் குகையின் அமைதியில் ஒருவித மர்மத்தை உறைய வைத்தன.
அதன்பின், குகையின் ஒரு மூலையைக் காட்டிய சித்தர், “அங்கே பழங்கள் இருக்கு… எடுத்துச் சாப்பிட்டுட்டு படுத்துத் தூங்குங்க. மழை இப்போதைக்கு விடாது, விடியுற வரைக்கும் எப்படியும் பெய்யும்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்திற்குள் சென்றுவிட்டார்.
அவர் தியானத்தில் அமர்ந்த அடுத்த கணமே, அந்த குகைக்குள் ஒரு அமைதியும் தெய்வீக நிசப்தமும் சூழ்ந்துகொண்டன.
சித்தர் சொன்ன ‘நிஜத்திற்கும் நிழலுக்கும் யுத்தம்’, ‘நிழல் பிம்பம் சுடர்விட்டு எரியும்’ என்ற வரிகள் ஆதவனின் மனதை மீண்டும் சுழற்றி அடித்தன. தன் நிஜ வாழ்க்கையில் வந்திருக்கும் ‘கமலி’ நிஜமா? அல்லது தன் கனவில் வந்து உயிரை வதைக்கும் ‘முத்தழகு’ என்ற நிழல் பிம்பம் நிஜமா? சித்தர் யாரைக் குறிப்பிட்டு இப்படிப் பேசுகிறார்? என்பது அவனுக்கு புரியவில்லை.
சித்தரை மேற்கொண்டு தொந்தரவு செய்யப் பயந்த நண்பர்கள், அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்த கொய்யா மற்றும் வாழைப்பழம் போன்ற காட்டுப் பழங்களை எடுத்து ஆளுக்கொன்றாகச் சாப்பிட்டுப் பசியை ஆற்றிக் கொண்டனர்.
வெளியே இடியும் மின்னலுமாக மழை அடித்துப் பெய்ய, குகையின் மிதமான சூட்டில் ஐந்து பேரும் தரையில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டனர்.
ஆனால், ஆதவனுக்கு மட்டும் இரவெல்லாம் கண்ணிமைக்க முடியவில்லை. சித்தரின் அந்தச் சூட்சும வரிகள் காற்றில் மிதந்து வந்து அவர்களின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தன!
வெகுநேரம் சிந்தனையுடனே தன்னை மறந்து தூங்கினான். குகையின் பாறை இடுக்குகளின் வழியே கசிந்து வந்த சூரிய வெளிச்சம் நண்பர்களின் முகங்களில் பட்டபோதுதான் அவர்கள் ஒவ்வொருவராகக் கண் விழிக்கத் தொடங்கினர்.
முதலில் கண்ணைத் திறந்த அருணுக்கு, சில நொடிகள் தான் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை. தலையைக் கோதியபடியே சுற்றிலும் பார்த்தவனுக்கு, பக்கத்தில் நண்பர்கள் அனைவரும் சுருண்டு படுத்து தூங்குவதைக் கண்ட பின்னரே, நேற்று இரவில் பெய்த மழையும், தஞ்சம் புகுந்த இந்தக் குகையும் நினைவுக்கு வந்தன.
‘அட ஆமா… நைட் மழையில மாட்டிக்கிட்டு இங்கதானே வந்தோம்!’ என்று எண்ணியபடியே, நேற்று தங்களுக்குத் தஞ்சம் அளித்த அந்தச் சித்தரைப் பார்க்க வலதுபுற மூலையை நோக்கித் திருப்பினான்.
ஆனால்… அங்கே அந்தச் சித்தர் அமர்ந்திருந்த பாறை மேடை அப்படியே காலியாகக் கிடந்தது!
அவரைக் காணாததும் தூக்கி வாரிப்போட, அருண் பதறியடித்துக் கொண்டு எழுந்தான். “டேய்… டேய் ஆது! பரத்… சீக்கிரம் எந்திரிங்கடா!” என்று கத்திப் பக்கத்தில் படுத்திருந்தவர்களைத் தட்டி எழுப்பினான்.
அவனது பதற்றமான குரலைக் கேட்டு நண்பர்கள் அனைவரும் திடுக்கிட்டு விழித்து எழுந்தனர்.
“என்னடா ஆச்சு… ஏன் கத்துற?” என்று ஆதவன் கண்கள் கசக்கியபடியே கேட்க, அருண் அந்தச் சித்தர் தியானத்தில் இருந்த வெற்றுப் பாறையைச் சுட்டிக்காட்டினான்.
அங்கே சித்தர் இருந்ததற்கான எந்த ஒரு தடயமும் இல்லை! அவர் வைத்திருந்த பழங்கள் இருந்த மூங்கில் தட்டு கூட அங்கே இல்லை.
“ஏய்… நேற்று நைட் நாம இங்க ஒரு சித்தரைப் பார்த்தோமேடா… அவர் எங்கே?” என்று ஆதவன் குகையைச் சுற்றிலும் தேட, நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
வெளியே மழை முற்றிலும் நின்று, காலை நேரக் குளிர் காற்றும் பறவைகளின் இனிய ஒலியும் காடெங்கும் நிறைந்திருந்தன. ஆனால், குகைக்குள் இருந்த அந்த ஐந்து பேரின் மனதிலும் ஒரு மிகப்பெரிய புதிரும் அசாத்திய நடுக்கமும் குடிகொண்டிருந்தன.
நேற்று இரவு அவர்கள் சந்தித்தது நிஜமான சித்தரைத்தானா? அல்லது எல்லாமே ஏதேனும் மாயையா? அவர் சொன்ன அந்தச் சூட்சும வரிகளின் உண்மைப் பொருள் என்ன? என்று ஒன்றும் புரியாமல், அந்த காலியான பாறையையே வெறித்துப் பார்த்தபடி திகைத்து நின்றனர் நண்பர்கள்!
தேடல் தொடரும்…
