மயிலாஞ்சி
அத்தியாயம்-9

தஞ்சாவூர் தாலுக்கா காவல்நிலையம், என்ற பெயர் பலகை இருக்கும் கட்டிடத்தின் முன், அதியனின் புல்லட் வண்டி நின்றது. வேகமாக உள்ளே சென்றான். அவனுடன் பணிபுரியும் ஆட்கள் அவனுக்கு வணக்கம் சொல்ல, அவனும் மரியாதைக்கு வணக்கம் கூறிவிட்டு, பதிவேட்டில் கையொப்பம் போட்டுவிட்டு, தேசத்தலைவர்களின் படங்களை வணங்கிவிட்டு, அவனது இருக்கையில் அமர்ந்தான்.
காலையில் வந்த செய்திதாளைப் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு தேவையான முக்கிய செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தான். அதில் கணவனை மனைவி அடித்துவிட்டதாக புகார் செய்தியைப் படித்தவன் சிரித்துவிட்டான்.
“என்ன சார் சிரிக்கிறீங்க!” என்று கான்ஸ்டபிள் கேட்க,
“மனைவி கணவனை அடிச்சு கொடுமைப்படுத்துறதா கம்ப்ளைன்ட் நியூஸ். அதான்..!” என்றான் சின்ன சிரிப்போடு,
“உண்மை தான் சார்.. முன்னாடி மாதிரியெல்லாம் இப்போ இருக்க மனைவிங்க இருக்காங்களா என்ன. அதுவும் இந்த காலத்து பொண்ணுங்க புருஷனை அத்தனை கஷ்டப்படுத்துதுங்க..” என்றார் கான்ஸ்டபிள்.
“அதுல அதிகம் காதல் கல்யாணம் பண்ணவங்க தான்.. புரிதலும் சகிப்புத்தன்மை இல்லாம போச்சு. எதுக்கு எடுத்தாலும் விவாகரத்து பண்ணிக்கிறாங்க. மனைவி கணவனுக்கு அடங்கி போன காலம் போய்… மனைவிக்கு தான் கணவன் அடங்கி போகணும் போல..!” என்றார் டைப்பிங் செய்பவர்.
“என்ன அதியன் சார் உங்களுக்கும் இப்ப தானே கல்யாணம் ஆச்சு.. உங்க மனைவி எப்படி!” என கான்ஸ்டபிள் கேட்க, அவர்கள் பேசுவது விவாதமாகி விட கூடாதுனு என்று நினைத்து,
“டியூட்டி டைம்ல எதுக்கு சார் இதெல்லாம் பேசிட்டு.. நேத்து லாரி ஆக்ஸிடன்ட் கேஸ் என்னாச்சு எஃப்ஐஆர் போட்டுட்டீங்களா..!” எனப் பேச்சை மாற்றினான்.
“முடிச்சிட்டோம் சார்.. நீங்க சைன் பண்ணிட்டா அக்யூஸ்ட்ட கோர்ட்ல ஆஜர் படுத்திடலாம்.”
“சரி கொண்டு வாங்க” என்றான் அதியன். அந்த கான்ஸ்டபிள் அதியன் கேட்ட ஏஃப்ஐஆர் பதிவேட்டை கொண்டு வந்து அவனிடம் கொடுக்க, கையெழுத்து போட்டுவிட்டு வேறு சில ஏஃப்ஐஆர் பதிவையும் புரட்டிக் கொண்டிருந்தான். அப்போது சக ஊழியர்கள் பேச்சில் வந்த வார்த்தைகள் அவன் மண்டையில் ஓடியது. “புரிதலும், சகிப்புத்தன்மை, மனைவிக்கு கணவன் அடங்கி போற காலம் மாறி போச்சு” என்ற வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவளாக தானே தேஜஸ்வினி அவனுக்கு இருக்கிறாள்.
செண்பகம் இடித்தாலும் வாங்கிக் கொள்வாள்.
பாட்டி ஏசினாலும் கேட்டுக் கொள்வாள்.
தந்தையோ, தாத்தாவோ என்ன கூறினாலும் அதன்படி நடந்துகொள்வாள்.
நித்தியன், ஆர்த்தியிடம் தோழியாக இருக்கிறாள்.
எழிலனுக்கு தங்கையாக இருக்கிறாள். பவிஷாவிடம் பாசமாய் நடந்துக் கொள்வாள்.
ஆனால் அவனுக்கு மனைவி என்ற பெயரில் மட்டும் இங்கு இருக்கிறாள்.
இத்தனை நாளில் ஒரு முறை கூட அவளது குடும்பம் பற்றி கேட்டது இல்லை. தாய், தந்தை, உடன்பிறந்தவர்கள் பற்றி மொத்தமாய் மறந்து போய் இருக்கிறாள்.
“என்னால் தானா!” என முணுமுணுத்தபடி இருந்தான்.
வேலையில் கவனம் சிதறுவதை உணர்ந்து மீண்டும் பதிவுகளை புரட்டினான். அப்போதும் அவன் கவனம் சிதறியது. காலையில் தேஜஸ்வினியின் கலையிழந்த முகத்தைப் பார்த்தவனுக்கு அவள் முகமே கண்ணுக்குள் இருந்தது.
‘தேஜூவுக்கு என்னாச்சோ..? அக்கா போனாளா இல்லையா!’ என மனதில் புலம்பியபடி ஃபோனை எடுத்தான். மணி மதிய வேலையைத் தொட்டு இருந்தது.
ஆர்த்திக்கு ஃபோன் செய்தான்.
“சொல்லுடா அதி”
“தேஜூ எப்படி இருக்கா? என்ன பிரச்சனை அவளுக்கு!” என்றவன் குரலில் மிகுந்த அக்கறை தெரிந்தது.
“அது.. அவ கீழ விழுந்த இடுப்பு பிடிச்சிக்கிச்சி பாவம் அழுதுட்டு இருக்கா” என ஆர்த்தி பொய்யாக பதில் கூற,
“அழுகுறாளா அய்யோ..” என்று பதறினான்.
“ஆமா அதி.. தேஜூ பாவம்.. பாட்டி வச்சிருக்கும்ல அந்த தைலத்தை தான் தேய்ச்சு விட்டேன் இருந்தும் அவ அழுதுட்டே இருக்கா” இன்னும் ஆர்த்தி அவன் பதற்றத்தை ஏற்றிவிட்டு இருந்தாள்.
“என்னக்கா சொல்ற.. வலி அதிகமா இருந்தா ஹாஸ்பிடல் போய்ட்டு வாங்களேன்.”
“ம்ம்.. எனக்கு வேற வேலை இல்லை பாரு.. உன் பொண்டாட்டி கூடவே சுத்திக்கிட்டு இருக்கணுமாக்கும்.. அவ்ளோ அக்கறை இருந்தா நீயே வந்து உன் பொண்டாட்டிய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ.. என் புருஷன் துணியெல்லாம் துவைக்கணும். நான் போறேன்..!” என்றவள் ஃபோன் அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
இங்கு அதியன் மனம் தான் தவித்தது. எப்போது வேலை முடியும் என்று தவித்துக் கொண்டிருக்கிறான்.
அதேநேரம் தேஜஸ்வினி வயலில் ஆயாசமாக நடந்து வந்து சாப்பாடு பையை வைத்துவிட்டு, வரப்பில் நடந்து சென்றாள்.
ராஜன் நாளைக்கு நாற்று நடுவதற்கு, நெல் நாற்று முடிச்சுகளை கட்டி களத்தில் வீசிக் கொண்டிருந்தார்.
“மாமா.. சாப்பிட வாங்க.. சாப்பாடு கொண்டு வந்துட்டேன்..” என வரப்பில் நின்று சத்தமாக கத்தினாள். அவள் குரல் கேட்டு வேலை செய்துக் கொண்டிருந்தவள் தலையைத் நிமிர்ந்தனர்.
“இதோ வரேன்மா..” என்றார்.
பாட்டியும், செண்பகமும் கேழ்வரகு கதிர்களை அறுவடை முடித்துவிட்டு, வந்து குடிசையில் அமர்ந்தனர். தேஜஸ்வினி சாப்பாடு பரிமாறினாள். கூடவே ராஜனும் வந்தார். தேஜஸ்வினி அவருக்கும் சாப்பாடு பரிமாறிவிட்டு அமரந்தாள்.
“நீ சாப்பிட்டியா மா” என ராஜன் கேட்டார். அந்தக் கேள்விக்கே அவளை பெற்ற அப்பாவை மறந்துவிட்டாள் என்றே சொல்லலாம். அத்தனை பாசம் நிறைந்த வார்த்தை. தினமும் அறையாக விசாரிப்பார்.
புன்னகை முகமாய் “சாப்பிட்டேன்” என்றாள். ஆனால் அவள் அதியனை விசாரிக்காமல் சாப்பிட மாட்டாள். அவர்கள் மனம் வருந்திட கூடாதே என்பதற்கு சாப்பிட்டேன் என்றே கூறினாள்.
தேஜஸ்வினி மீது தைல எண்ணெய் வாசம் வரவும் பாட்டி சுதாரித்து. “ஏன்டி உடம்பு சரியில்லையா.. தைலம் தேச்சியா” என்று பாட்டி கேட்டார்.
“ஆமா பாட்டி.. இடுப்பு வலி.. ஆர்த்தி திதி தான் தைலம் தேச்சு விட்டாங்க” என்றாள் தேஜஸ்வினி.
“ம்ம்.. இப்போ பரவாயில்லையா?”
“பரவாயில்லை பாட்டி”
“இந்த வயசுலயே இடுப்பு வலியா.. நானெல்லாம் உன் வயசுல எப்படி காத்தா பறந்து வேலை செய்வேன் தெரியுமா? இப்ப தான் மாப் கீப்புலாம் அப்போலாம் சாணி போட்டு மொழுகணும் விறகு அடுப்புல தான் சமைக்கணும்.” எனப் பாட்டி நிறைய சொல்லிக் கொண்டே போக.
“எம்மா போதும் சாப்பிடுமா.. காலத்துக்கு ஏத்த மாதிரி எல்லாம் மாறும். பழசையே பேசிக்கிட்டு.” என்றார் ராஜன்.
“மருமகள எதுவும் சொல்லிட கூடாதே.. உடனே.. கோவம் வந்துடுது” எனப் பாட்டி சொல்ல,
“அப்படி இல்லமா.. காலம் எவ்வளவோ மாறிபோச்சி இப்ப போய் சாணி மொழுகுனே.. விறகு அடுப்புல சமைச்சேன்னு.. தேஜூ வீட்டுல அம்புட்டு வேலையும் ஒத்த ஆளா செஞ்சுட்டு.. வலியோட நடந்து வந்திருக்கு. சும்மா எதுக்கு எடுத்தாலும் இது நொட்ட அது நொட்டன்னு. அந்த புள்ள எவ்வளவு தான் தாங்கும்.” என்றார் ராஜன்.
“எப்பா.. நான் எதுவும் கேக்கல சாப்பிடு..!” என்று கூறி பாட்டி அமைதியாகினார்,
“ஏன்ங்க.. வினி இங்க வந்து மூனு மாசம் ஆகிடல! தாலி பெருக்கி போட வேணாமா?”
என செண்பகம் கேட்க,
“செய்யணும்.. அப்பா கிட்ட தான் கேக்கணும்” என்றார் ராஜன்.
“எல்லாம் நம்ம தான் செய்யணுமா.. இவள பெத்தவங்கள கூப்பிட்டு செய்ய சொல்லலாம்ல” என செண்பகம் கேட்க,
“அவங்க வர மாட்டாங்க அத்தை..!” என மிக சாதாரணமாக கூற,
“ஏன் வர மாட்டாங்க?”
“அவங்க அப்போவே என்னை வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டாங்க.. இனி எப்பவும் அவங்க என்னை பார்க்க வர மாட்டாங்க. நான் அங்க போனாலும் சேர்க்க மாட்டாங்க” என்றாள் தேஜஸ்வினி, அவளின் மனதில் எத்தனை வலி இருக்கும் என்பது ராஜனுக்கு புரிந்தது.
“என்ன தாய் தகப்பன்..! ஒரு பொண்ணுக்கு ஒரு சடங்கு செய்ய கூட வர மாட்டாங்களா! ஏதோ நடந்தது நடந்து போச்சு அதுக்குன்னு ஒரேடியாவா அறுத்து விடுவாங்க! என்ன மனுஷங்களோ” என செண்பகம் புலம்பினார்.
“விடு செண்பகம் நம்மளே பண்ணிடலாம்.. அப்பா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு.. வர வெள்ளிக்கிழமை பண்ணிடுவோம். அதியனை லீவ் போட சொல்லுமா தேஜூ” என்றார் ராஜன்.
அப்போது அங்கு நித்தியன் வந்து, வயிற்றை தடவிக்கொண்டு ஏப்பம் விட, “என்னடா.. சாப்பிட்டா மாதிரி ஏப்பம் விடுட்டு வர?” என ராஜன் கேட்க,
“ரத்னா சாப்பாடு எடுத்துட்டு வந்தா.. அவளுக்கு பொறந்தநாளுன்னு சாப்பிட சொல்லி வயிறு நிறைய திணிச்சு விட்டுட்டா” என நித்தியன் சொல்ல.
“ஆமாப்பா மறந்தே போச்சு.. எங்க இருக்கா அவ”
“வீட்டு போயிட்டா.. வெயில் காயிதுன்னு” என்றவன், தேஜஸ்வினி சாப்பிட்ட பாத்திரங்களை சத்தம் செய்துக் கொண்டிருந்தாவளிடம்,
“என்ன அண்ணி நம்ம வீட்டுல என்ன ஸ்பெஷல்”
“நெத்திலி கருவாட்டு குழம்பு, மோர், பருப்புத் துவையல்” என்று அவள் சொல்லும் போதே அவன் நாவில் எச்சில் ஊறியது.
“அடடா மிஸ் பண்ணிட்டேன்.. அண்ணி எனக்காக நைடுக்கு எடுத்து வைங்க”
“சரி நித்தி” என்றாள்.
“டேய் நித்தி.. ரொம்ப வெயிலா இருக்கு.. தேஜூவை உன் வண்டியில கூட்டிட்டு போய் வீட்டுல விட்டுட்டு வாடா” என்றார். உடனே தேஜஸ்வினி,
“வேண்டாம் மாமா.. நான் கொஞ்சம் நேரம் கழிச்சு போறேன்..” என்றாள், அவள் விருப்பம் என்று அவரும் போய் வேலையைத் தொடங்கினார்.
அப்போது செண்பகம், முற்றாத சில கேழ்வரகு கதிர்களை கொண்டு வந்து தேஜஸ்வினியிடம் கொடுத்து,
“இந்தாடி.. இதை வீட்டுக்கு எடுத்துட்டு போய் அதியன் வந்ததும் நெருப்புல சுட்டு கொடு. அவனுக்கு இது ரொம்ப பிடிக்கும்.” என்றார் செண்பகம்.
“சரிங்க அத்தை” என்றவள் கதிரை வாங்கி சாப்பாடு எடுத்து வந்த கூடையில் வைத்துவிட்டு, ஃபோனைப் பார்த்தாள். அதியன் நினைவு வந்ததும் ஃபோன் செய்ய நினைத்தாள்.
‘சாப்பிட்டீங்களா’ என்று குறுஞ்செய்தி மட்டும் அனுப்பினாள். ஆனால் அவன் முக்கிய வழக்கு ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்தான். குறுஞ்செய்தியைப் பார்க்கவில்லை. தேஜூ பதிலுக்காக காத்திருந்தவள். அங்கேயே உட்கார்ந்து இதமான காற்றில் அதியனினுடன் கனவில் இருந்தாள். மாலை சாயும் நேரம் ஆனதும் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
அவள் வீட்டிற்கு வந்த போது அதியன் புல்லட் வண்டி வாசலில் நின்று இருந்தது. அவளுக்கு மனதில் அத்தனை மகிழ்ச்சி. அவனை நாள் முழுவதும் பார்த்து கொண்டிருக்கும் ஆசை அவளுக்கு. அவன் என்றாள் அத்தனை பிரியம். காரணம் இல்லாமல் காதலை மனதில் வளர்த்துக் கொண்டாள்.
வேகமாக உள்ளே வந்தாள். அவளது கொலுசு சத்தம் கேட்டதும்.. உடை மாற்றிக் கொண்டிருந்த அதியன் அறையில் இருந்து வெளியே வந்தான். ஒரு நொடி இருவர் பார்வையும் மோதிக் கொண்டது. அவனை பார்த்ததும் சிலையாக நின்றவளின், உயிர் மட்டும் அவனிடம் ஓடி ஓட்டிக் கொண்டது.
“தேஜூ.. உடம்பு சரியில்லைன்னு அக்கா சொன்னா நீ ஏன் வயலுக்கு போனே” என அதியன் அவளை நெருங்கி கேட்டிருந்தான். அவளுக்கு அவனது ஸ்பரிசம் அவளை உறைந்து போக வைத்தது.
“ஆங்… என்ன..!” என தேஜூ தெளிந்தாள்.
“லூசா நீ.. உடம்பு சரியில்லைனா வீட்டுலையே இருக்குறது தானே..!”
“எனக்கு ஒண்ணும் இல்லை ஜி.. நான் நல்லா தான் இருக்கேன்” என்றாள்.
“நிஜமாவா”
“ஆமா ஜி.. நீங்க சீக்கிரம் வந்துட்டீங்க”
“ஆமா.. சரி வா ஹாஸ்பிடல் போய் வரலாம்..”
“எதுக்கு ஹாஸ்பிடல் அதெல்லாம் ஒண்ணும் வேணாம்”
“இப்போ வலி பரவாயில்லையா”
“ம்ம்.. ஆர்த்தி திதி தைலம் தேச்சு விட்டாங்க.. அப்போவே வலி போய்டுச்சி.”
“சரி வா”
“இருங்க ஜி.. அத்தை உங்களுக்காக கேழ்வரகு கதிர் கொடுத்தாங்க சுட்டு எடுத்துட்டு வரேன்.”
“அதெல்லாம் எதுக்கு நீ வா”
“ஆனா உங்களுக்கு இது ரொம்ப பிடிக்குமாம் அத்தை சொன்னாங்க”
“பிடிக்கும் தான்..”
“அப்றம் என்ன நீங்க போய் உட்காருங்க” என்றாள்.
தேஜஸ்வினி கொல்லைப்புறம் சென்று விறகு அடுப்பை பற்ற வைத்து கதிரைச் சுட ஆரம்பித்தாள். அதன் வாசனையே அவனை அவளிடம் அழைத்து வந்தது.
“இதோட வாசனை நல்லா இருக்குல்ல” என அதியன் சொல்ல,
“ஆமா ஜி.. சின்ன வயசுல நிறைய சாப்பிட்டு இருக்கேன்”
“உனக்கும் பிடிக்குமா”
“ஆமா..” என்றவள், தணலில் வெடித்துச் சிவந்திருந்த கதிர்களைக் கவனமாக வெளியே எடுத்து, சிறிது நேரம் ஆறவிட்டாள்.
அவன் திண்ணையில் அமர்ந்தபடி, அவள் செய்யும் ஒவ்வொரு அசைவையும் புரியாத உணர்வோடு பார்த்துக் கொண்டிருந்தான். சூடு சற்று தணிந்ததும், தேஜஸ்வினி அந்தக் கதிர்களைத் தன் இரு உள்ளங்கைகளுக்குள் வைத்து அழுத்தித் தேய்த்தாள். கரியும் உமியும் உதிர, உள்ளேயிருந்த சுட்ட தானியங்கள் மணிகளாய் அவள் உள்ளங்கையில் தங்கின.
மெல்ல ஊதி உமியைப் போக்கிவிட்டு, தன் கையிலிருந்த சுட்ட கேழ்வரகை அவனிடம் நீட்டினாள்.
“இந்தாங்க ஜி.. சூடா சாப்பிடுங்க”
அவன் அவள் கையிலிருந்த தானியங்களை அள்ளாமல், அவள் உள்ளங்கையோடு சேர்த்துத் தன் கையைப் பிடித்தபடி, “நீயும் சாப்பிடு” என்றான் மென்மையான குரலில்.
அவனது அந்த எதிர்பாராத தீண்டலிலும், பார்வையிலும் தேஜஸ்வினியின் கன்னங்கள் அடுப்புத் தணலை விட அதிகமாகச் சிவந்தன. அதை கவனித்தானோ இல்லையோ அதற்குள் அங்கு ரத்னா வந்து நின்றாள். அவள் கையில் ஒரு சில்வர் டப்பாவை வைத்திருந்தாள். அதை அதியன் முன் நீட்டி.
“என்னை தான் வேண்டாம்னு ஒதுக்கிட்ட.. இன்னைக்கு என் பிறந்தநாள் அம்மா வெள்ளை பணியாரம் செஞ்சுச்சி. உனக்காக தான் எடுத்துட்டு வந்தேன் இந்தா” என ரத்னா சொல்ல, அவன் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல். தேஜஸ்வினி கையில் இருந்த சுட்ட கேழ்வரகு தானியத்தை அள்ளி வாயில் போட்டு மென்றுக் கொண்டே,
“கிச்சன்ல வச்சிட்டு போ” என்றான்.
“இப்பவே சாப்பிடு.. அப்புறம் நல்லா இருக்காது” என்றாள் ரத்னா.
“தெரியும் வச்சிட்டு போ”
“ஏன் மாமா என்னை துரத்துற” என ரத்னா கேட்க. அவளிடம் பேச விருப்பம் இல்லாமல்,
“தேஜூ.. அதை வாங்கிட்டு போய் வை” என்றான்.
“குடுங்க அக்கா அவருக்கு கொடுத்துடுறேன்.” என தேஜூ சொல்ல, அவள் கையில் கொடுக்க பிடிக்காமல்.. டப்பாவை கீழே வைத்துவிட்டுச் சென்றாள்.
தேஜஸ்வினி அந்த டப்பாவை எடுக்க போனாள். அவன் அவள் கையைப் பிடித்து தடுத்து, “அது இருக்கட்டும்.. எனக்கு கதிர் சுட்டு கொடு” என்றான்.
“சரிங்க ஜி” என்றாள் புன்னகை முகமாக. அதைக் காணமல் தானே அவனும் தவித்தான் இத்தனை நேரமாக, தேஜஸ்வினி அவ்வபோது இடுப்பில் கை வைப்பதைப் பார்த்தான். ஆனால் அவள் வலியை காட்டிக் கொள்ளாமல் அவனுக்காக கதிரைச் சுட்டு பக்குவமாய் அவனுக்கு கொடுத்தாள். அந்த மாலை நேரமும் அவளுக்கு அழகாய் அமைந்தது அவனுடன்.
தொடரும் மயிலாஞ்சி ✍️
மக்களே தவறாமல் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள் 💐🙏
