அன்றைய நாளில் நிச்சயதார்த்தப் பரபரப்புகள் அனைத்தும் ஓய்ந்த பிறகு, கமலியும் அவளது தோழிகளும் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தனர்.
ஆனால், கமலிக்குத்தான் இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. ஒருபக்கம் தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஆதவனின் அந்தப் புரியாத விலகல், மறுபக்கம் தெருவில் கேட்ட ‘ருத்ரன்’ என்ற பெயர் உருவாக்கிய பயம்—இரண்டிற்கும் நடுவே சலனப்படும் மனதோடு தவித்துப் போய் ஒருவழியாக அதிகாலை வேளையில் உறங்கிப்போனாள்.
அடுத்த இரண்டு நாட்களும் தோழிகள் இருவரும் அவளுடனேயே தங்கியிருந்து விட்டு, தங்களின் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர். வழக்கம் போலத் தந்தை சுதாகர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட, வீட்டில் கலையும் கமலியும் மட்டுமே இருந்தனர்.
அன்று நள்ளிரவு நேரம்… ஊரே அடர்ந்த அமைதியில் மூழ்கியிருந்தது.
திடீரென, “ருத்ரன்…!” என்ற அலறல் சத்தம் கமலியின் அறையிலிருந்து வெடித்துக் கிளம்பியது.
அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த கலை, மகளின் அலறல் கேட்டதும் பதறியடித்துக் கொண்டு விழித்தவர் “என்னாச்சு என் பொண்ணுக்கு?” என்ற பயத்தோடு ஓடிவந்து பார்க்கும்போது, கமலி கட்டிலுக்குக் கீழே தரையில் சுருண்டு மயங்கிக் கிடந்தாள்.
நள்ளிரவு நேரம் என்பதால் யாரைக் கூப்பிடுவது என்று தெரியாமல் ஒரு கணம் கலைக்குக் கையும் ஓடவில்லை, கால்களும் ஓடவில்லை. நெஞ்சு படபடவென அடித்துக் கொள்ள, செம்பில் இருந்த தண்ணீரைக் கையிலெடுத்து மகளின் முகத்தில் தெளித்து, “கமலி… கண்ணைத் தொறடி மா!” என்று கதறினார்.
சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, கமலி மெல்லக் இமைகளை அசைத்து விழித்துப் பார்த்தாள்.
“என்னமா ஆச்சு? என்க, ஏதாவது கெட்ட கனவு கண்டு பயந்துட்டியாடி?” என்று கலை பதற்றத்தோடு கேட்க, கமலி இன்னமும் அந்த நடுக்கத்திலிருந்து மீளாமல், “ஒன்னும் இல்லம்மா… ஏதோ கனவு போல…” என்று திக்கித் திணறிச் சொன்னாள்.
பின்னர் தாயின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டவள், “அம்மா… நீ இன்னைக்கு என் பக்கத்திலேயே படுத்துக்கமா… எனக்கு பயமா இருக்கு” என்று கெஞ்சினாள்.
நிச்சயதார்த்த விசேஷத்திற்கு வந்திருந்த ஊர் ஜனங்களில் யாரோ தன் மகளின் மேல் கண் திருஷ்டி வைத்துவிட்டார்கள் என்று நினைத்த கலை, “ஒன்னும் இல்லடா தங்கம்… பயப்படாத, தூங்கு. நம்ம காளியம்மா பார்த்துப்பா” என்று மகளைத் தேற்றி தன் அணைப்பிலேயே தூங்க வைத்தார்.
மறுநாள் அதிகாலைப் பொழுது விடிந்தது. வழக்கம் போல வீட்டு வேலைகளை முடித்த கலை, மகளுக்காகச் சுடச்சுட இட்லி அவித்து ஹாட் பாக்ஸில் வைத்து விட்டு மகளது அறைக்கு வந்தவர், “கமலி எந்திரிடி, வந்து சாப்பிடு” என்று அவளைத் தொட்டு எழுப்பப் போனவருக்குப் பேரதிர்ச்சி!
கமலியின் உடல் அனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது. காய்ச்சலின் தீவிரத்தில் அவள் உதடுகள் நடுங்க சுருண்டு கிடந்தாள்.
உடனே பதறிய கலை, பவானிக்குத் தகவல் சொல்லி வரவழைத்தார். இருவரும் சேர்ந்து கமலியை மெல்லத் தாங்கிப் பிடித்து ஆட்டோவில் ஏற்றி, டவுனில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே டாக்டரும் அவளை பரிசோதித்து ஊசியும் போட்டு, மாத்திரைகளையும் வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
மகளுக்குப் பதமாகக் கஞ்சியைச் சுடச்சுட வைத்து, அதற்குத் தொட்டுச் சாப்பிட சென்னாக்கூனி துவையலையும் அரைத்து எடுத்துக்கொண்டு தட்டோடு கமலியின் அறைக்குள் வந்தார் கலை.
“கமலி…கமலி எந்திரி! இதோ சூடா கஞ்சியும் துவையலும் கொண்டு வந்திருக்கேன். நாலு வாய் சாப்பிட்டுட்டு மருந்தை போட்டாதான் உடம்புல தெம்பு வரும்,” என்று தாயன்போடு அழைத்தார்.
காய்ச்சலின் அசதியிலும் தூக்கத்தின் மயக்கத்திலும் இருந்த கமலி, தாயின் குரல் கேட்டுப் பொறுமையாகக் கண் விழித்து எழுந்தாள். மெல்லக் கட்டிலை விட்டு இறங்கி, ரெஸ்ட் ரூமிற்குச் சென்று முகம் கழுவிவிட்டு வந்து தாயின் அருகில் அமர்ந்தாள்.
கலை ஊட்டிவிட்ட கஞ்சியை விருப்பமே இல்லாமல் நாலு வாய் மட்டுமே சாப்பிட்டவள், “போதும் மா… எனக்கு நாக்கே கசக்குது, இதுக்கு மேல சாப்பிட முடியல,” என்று முகத்தைச் சுளித்தபடி தட்டைத் தள்ளி வைத்தாள்.
“சரிடா தங்கம், இந்த மாத்திரையைப் போட்டுக்கோ,” என்று கலை கையிலிருந்த மருந்தை அவளிடம் நீட்டினார்.
மருந்தை விழுங்கிவிட்டுக் மீண்டும் தலையணையில் தலை சாய்த்த கமலியின் மனதில், அந்த நள்ளிரவுக் கனவும் ‘ருத்ரன்’ என்ற பெயரும் மீண்டும் நிழலாடத் தொடங்கின.
“டேய்… உண்மையாவே நேத்து இங்க ஒருத்தர் இருந்தாரா? இல்ல நாம எல்லாரும் ஒரே கனவைக் கண்டோமாடா?” என்று பரத் விழிபிதுங்கி நிற்க, அருண் மெல்ல முன்வந்து அந்தச் சித்தர் அமர்ந்திருந்த பாறை மேடையைத் தொட்டுப் பார்த்தான்.
அங்கே… அந்தச் சித்தர் பத்மாசனமிட்டு அமர்ந்திருந்த இடத்தில், புதிய பூக்களின் நறுமணமும் ஒருவித சந்தன வாசமும் இன்னமும் காற்றில் மிதந்து கொண்டிருந்தது!
“கனவு இல்லடா… அவர் நிஜம்தான்! ஆனா நாம தூங்கும்போது எப்படியோ கிளம்பிப் போயிருக்காரு” என்று அருண் சொல்ல, ஆதவன் அமைதியாக அந்த இடத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சித்தர் சொன்ன “நிஜத்திற்கும் நிழலுக்கும் யுத்தம் தொடங்கிவிட்டது… நிஜத்தை உணரும்போது நிழல் பிம்பம் அதில் சுடர்விட்டு எரியும்” என்ற வரிகள் அவனது தலைக்குள் சம்மட்டியால் அடிப்பது போல மீண்டும் மீண்டும் ஒலித்தன. ‘என் வாழ்க்கையில வரப்போற அந்த நிஜமும் நிழலும் எது?’ என்ற கேள்வி அவனை அரித்துத் தின்றது.
“சரிடா… நேரம் ஆச்சு. மழை வேற விட்டுடுச்சு, நாம முதல்ல காட்ட விட்டு வெளியேறுவோம். இங்க இருந்தா மனசு ஒரே மாதிரியா இருக்கு” என்று அருண் சொல்ல, அனைவரும் அதை ஆமோதித்தனர்.
ஐந்து பேரும் குகையை விட்டு வெளியே வந்தனர். இரவு பெய்த பேய் மழையில் காடே நனைந்து, மரங்களின் இலைகளில் இருந்து நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன. இதமான காலைக் வெயில் காட்டின் வழியே ஊடுருவி வர, அவர்கள் மெல்லத் தங்களின் காரை நிறுத்தியிருந்த இட நோக்கி மலையிறங்கத் தொடங்கினர்.
வழியெங்கும் நண்பர்கள் சித்தரின் அமானுஷ்ய வருகையைப் பற்றியே ஆச்சரியத்துடன் பேசி வந்தனர். ஆனால் ஆதவன் மட்டும் எதிலும் கவனமில்லாமல் ஒருவிதமான சிந்தனையில் மூழ்கியிருந்தான்
ஒரு வழியாகக் கீழே வந்து, தங்களுடைய இன்னோவா காரை அடைந்தனர். காரை நோக்கிச் செல்லும்போது, போனில் சிக்னல் கிடைத்ததும் அடுத்தடுத்து மெசேஜ்களும் அழைப்புகளும் வரத் தொடங்கின.
போனை எடுத்துப் பார்த்த ஆதவனின் முகம் திடீரென மாறியது. அவனது அப்பா பலமுறை அழைத்திருந்தார்!
“டேய் அருண்… அப்பா தான் போன் பண்ணிருக்காருடா. என்னவா இருக்கும்?” என்று ஆதவன் போனைக் காட்ட, அருண் சற்று பதற்றத்தோடு, “பேசுடா…” என்றான்.
ஆதவன் தனது அப்பாவிற்கு கால் பண்ண, மறுமுனையில் தந்தை சொன்ன விஷயத்தைக் கேட்டதும், அவனின் கண்கள் சற்று அதிர்ந்தது.
காரின் கதவைத் திறக்கப் போன அருண், நண்பனின் அதிர்ச்சியான முகத்தைப் பார்த்துப் பதறிப்போய், “என்னடா ஆச்ச? வீட்ல ஏதும் பிரச்சினையா?” என்று கேட்டான்.
ஆதவன் அழைப்பை துண்டித்து விட்டு “கமலிக்கு உடம்புக்கு முடியலையாம்டா! நேத்து ராத்திரி திடீர்னு ரொம்ப காய்ச்சல் வந்து மயங்கிட்டாளாம்” என்றான்.
என்ன டா சொல்ற?, அந்த அளவுக்கு காய்ச்சல்? என்ற அருண் சரி முதலில் இவனுங்களை பஸ் ஏற்றி விடுவோம் என்க,…”எப்பாடி… நல்லபடியா குகையிலிருந்து வந்து சேர்ந்தோமே!” என்று தங்களுக்குள் ஆசுவாசப் பெருமூச்சு விட்டபடி, மற்ற நண்பர்கள் மூவரும் அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்தவர்கள், பெங்களூர் நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறி விடைபெற்றனர்”
“நண்பர்களைப் பத்திரமாக வழியனுப்பி வைத்த அருணும் ஆதவனும், அவர்களிடம் கை அசைத்துச் சொல்லிவிட்டு, தங்கள் இன்னோவா காரில் ஏறிக் கொண்டனர். கார் சுழன்றடிக்கும் காற்றைக் கிழித்துக் கொண்டு, அவர்களின் சொந்த ஊரான பூம்புகாரை நோக்கி நேரடிப் பாதையில் விரையத் தொடங்கியது.
கார் சீரான வேகத்தில் போய்க்கொண்டிருந்தாலும், ஆதவனின் கவனம் சாலையில் இல்லை. அவனது மனதுக்குள் அவனது தந்தை கூறிய வார்த்தைகளே மீள மீள எதிரொலித்துக் கொண்டிருந்தன. “கமலிக்கு உடம்பு சரியில்லை…” என்ற செய்தி அவனது சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
“எப்படி இருக்காளோ, பாவம்…” என்று அவன் மனம் அவளை நினைத்து லேசாகக் கவலைகொண்டது.
முதல்முறை அவளைப் பார்த்தபோது அவனுக்குத் தோணிய நினைவு மீண்டும் தலைதூக்கியது — பாக்குறதுக்குக் கொஞ்சம் நோஞ்சான் போல, மெலிதாகத்தானே இருக்கிறாள்!
அப்படிப்பட்டவளுக்கு திடீரென உடல்நலக் குறைவு என்றால் எப்படித் தாங்குவாள் என்ற எண்ணம் அவன் மனதின் ஏதோ ஒரு மூலையில் மெல்லிய இரக்கத்தைத் தூண்டியது.
ஆனாலும், அந்தப் பரிதாப உணர்வைத் தாண்டி, அவள்மீது தீவிரமான ஈர்ப்போ உடனடியாக அவளுக்கு போன் செய்து பேச வேண்டும், குரலைக் கேட்க வேண்டும் என்ற துடிப்போ அவனுக்குள் எழவில்லை.
அவளது நிலைமை பற்றிய கவலை ஒரு மனிதநேயப் பரிவாக மட்டுமே இருந்தது தவிர, அது ஒரு காதலாகவோ இருவருக்கும் பிணைப்பாகவோ உருவெடுக்கவில்லை. மனதிற்குள் எழுந்த இந்தக் குழப்பமான எண்ணங்களின் பின்னணியில், பூம்புகாரை நோக்கி இன்னோவா கார் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது.
காலையில் புறப்பட்ட இருவரும் தங்களின் பயணத்தை முடித்துக் கொண்டு வானகிரிக்கு வந்து சேரும்போது, கரிய இருள் சூழ்ந்து இரவு மணி எட்டு ஆகிவிட்டிருந்தது. நீண்ட நேரப் பயணத்தின் களைப்போடு வீட்டிற்குள் நுழைந்த இருவரையும் கண்டதும், சீதாவின் முகத்தில் நிம்மதி பெருமூச்சு வந்தது.
அவர்களின் அருகில் வந்தவர், “பயணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதாப்பா? உடம்புக்கு ஒன்னும் அலுப்பு இல்லையே?” என்று பரிவோடு நலம் விசாரித்தார் சீதா.
அப்போது ஆதவனுக்கும் அருணுக்கும் அந்தப் பயணத்தில் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைவில் வந்து சென்றன.
அந்த அடர்ந்த குகை, அங்கு அவர்கள் சந்தித்த சித்தரின் மர்மமான தோற்றம், இவற்றைப் பற்றி விரிவாகச் சொன்னால் சீதா தேவையில்லாமல் பயந்து நடுங்கிவிடுவாரோ என்ற பயம் அவர்களுக்குள் எழுந்தது.
எனவே, நிலைமையை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட இருவரும், “அதெல்லாம் பயணம் ரொம்ப நல்லபடியா முடிஞ்சது” என்று இயல்பாகப் புன்னகைத்தபடியே கூறி நிலைமையைச் சமாளித்தனர்.
அடுத்தடுத்த நாட்களில், வழக்கம்போலத் தங்களின் தினசரி வாழ்க்கைக்குத் திரும்பினர். இருவரும் தங்களது மீன் ஏற்றுமதி நிறுவனத்தின் வேலைகளில் முழுமூச்சாகக் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினர். வியாபாரம், ஏற்றுமதி ஆர்டர்கள் என ஓயாத உழைப்பில் நாட்கள் நகர்ந்தன.
ஆனால், ஆதவனின் மனதின் நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது. கமலிக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தும், “அவளைப் போய் நேரில் பார்க்க வேண்டும்” என்ற எண்ணம் துளிகூட அவன் மனதிற்குள் வரவில்லை. அவளது நினைவை விட, அவனை உலுக்கிக் கொண்டிருந்தது வேறொன்றுதான்…
அவனது தூக்கத்தைக் கலைத்து, மனதைக் கலங்கடித்துக் கொண்டிருக்கும் அந்த மாயக் கனவு! அதில் மீண்டும் மீண்டும் தோன்றி மறைந்த அந்தப் பெண் யார்? அவளுக்கும் தனக்கும் என்ன தொடர்பு? அவளது தேடல் மட்டுமே அவனது சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது.
எக்ஸ்போர்ட் கம்பெனி வேலைகளுக்கு நடுவேயும், அவனது ஆழ்மனம் “முத்தழகு” பற்றிய விடை தெரியாத கேள்விகளையே தொடர்ந்து தேடிக் கொண்டிருந்தது.
தேடல் தொடரும். .
