அட்மிஷன் வேலைகள் அனைத்தும் சிறப்பாக முடிவடைந்ததும், மூவருக்கும் மனதிலிருந்த பெரிய பாரம் குறைந்திருந்தது.
பின்னர் மூவரும் அங்கிருந்து மலைக்கோட்டைக்குச் சென்றார்கள். மலையடிவாரத்தில் காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு, பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட படிக்கட்டுகளில் மெல்ல ஏறத் தொடங்கினார்கள்.
உச்சிக்குச் சென்றதும் ஜில்லென்று வீசிய காற்று பயணத்தின் களைப்பை எல்லாம் பறக்கடித்தது. அங்கு வீற்றிருக்கும் அருள்மிகு உச்சிப்பிள்ளையாரை மிக மனமுருகத் தரிசனம் செய்தனர்.
கமலியோ தன் மனதில், “கல்லூரி வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும், அதோடு…” என்று நினைக்கும்போதே, அறியாமல் அந்த ருத்ரனின் நினைவும் வந்து போக, பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டு பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டாள்.
மலையிலிருந்து கீழே இறங்கியதும், அருகில் இருந்த கடைவீதிகளில் சுற்றி வந்தார்கள். மகள் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பதற்குத் தேவையான வாளி, மக்கு, பாய், தலையணை, மற்றும் தினசரிப் பயன்பாட்டிற்கான அத்தியாவசியப் பொருட்களைப் பார்த்துப் பார்த்து வாங்கினார் கலை.
ஷாப்பிங் எல்லாம் முடித்துக்கொண்டு, மீண்டும் சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது மணி மாலை ஆறு ஆகியிருந்தது.
மாலை நேரத்துச் சூரியன் மறையத் தொடங்க, பூம்பாறைக்குச் செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில் போய் நின்றார்கள்.
அரைமணி நேரத்தில் பேருந்தும் வர, அதில் ஏறி உட்கார பஸ்சும் புறப்பட, அந்தப் பயணத்தில், மகளைப் பிரிந்து தனியாக விடப்போகிறோம் என்ற மெல்லிய சோகம் சுதாகர் மற்றும் கலையின் முகத்தில் தெரிந்தது.
கமலியோ வெளியே வேடிக்கை பார்த்தபடியே, அடுத்த வாரம் தொடங்கப்போகும் தன் கல்லூரி வாழ்க்கையையும், இன்னும் விடை கிடைக்காத அந்த ‘ருத்ரன்’ பற்றிய ரகசியத்தையும் எண்ணியபடி உட்கார்ந்திருந்தாள்.
இரவு பதினோரு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். பூம்பாறையில் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக, கடலில் அலைகள் சீற்றமாக இருந்ததால் மீனவர்கள் யாருமே மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதனால் சுதாகருக்கும் தொழில் எதுவும் இல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டியதாயிற்று.
இன்று காலையில் ஒருவழியாக மழை ஓய்ந்து, வானம் சற்றே வெளுத்து வெளிச்சம் பரவியிருந்தது.
“மழை விட்டுருச்சுமா… நான் கடலுக்குப் போயிட்டு வர்றேன்,” என்று சொல்லிக்கொண்டு, தன் பைக்கை கிளப்பினார் சுதாகர்.
வீட்டிலிருந்து கிளம்பி, சில மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் தெருமுனைக்கு வந்து வண்டியைத் திருப்பியபோது, அங்கே சுதாகரின் பால்ய நண்பன் வேலு எதிரே வந்துகொண்டிருந்தான்.
சுதாகரைப் பார்த்ததும் வேலுவின் முகத்தில் வழமைபோலான மகிழ்ச்சி வர, “மச்சி! உன்னைக் கூப்பிடத்தான்யா உங்க வீட்டுக்கே கிளம்பினேன்!” என்றான்.
அதற்குச் சுதாகர் சிரித்தபடி, “அதான் நானே வந்துட்டேன்ல மாப்பிள்ளை… வா போவோம்!” என்றார்.
இருவரும் பைக்கில் ஏறி, கடற்கரை ஓரமாக மீன்களைப் பதப்படுத்தி வைக்கும் கொட்டாயின் அருகில் சென்று வண்டியை ஓரமாக நிறுத்தினார்கள்.
பைக்கிலிருந்து இறங்கி, கடலின் கரையை நோக்கி இருவரும் நடந்து செல்லத் தொடங்கியபோது, அவர்களைப் போலவே மீன்பிடிக்க தயாராகி வந்த மேலும் மூன்று மீனவ நண்பர்கள் ஓடிவந்து அவர்களோடு இணைந்துகொண்டனர்.
நான்கு நாட்கள் கழித்துக் கடலுக்குச் செல்வதால், ஐவரும் கடலின் போக்கைப் பற்றியும், அன்றைய வலை வீச்சு எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் பேசிக்கொண்டே அலைகள் அடிக்கும் கரையை நோக்கி அடிமேல் அடிவைத்துச் சென்றார்கள்.
வழக்கமாகக் கடலுக்குச் சென்றால் இரண்டு நாட்கள் கழித்துதான் கரை திரும்புவார்கள். அதனால் படகின் மோட்டார் சரியாக இயங்குகிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை ஆழமாகச் சோதித்துப் பார்த்தனர்.
இரண்டு நாட்களும் கடலிலேயே தங்கி மீன்பிடிக்க வேண்டியிருக்கும் என்பதால், சமையலுக்குத் தேவையான அரிசி, காய்கறிகள், பாத்திரங்கள் மற்றும் குடிநீர் என அனைத்தையும் படகில் எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பது சுதாகரின் வழக்கம்.
சுதாகர் இருந்தால் உணவுக்கு எந்தக் குறையும் இருக்காது என்ற நம்பிக்கை மற்ற நண்பர்களுக்கு எப்போதும் உண்டு. அந்த நம்பிக்கையை அவன் ஒருபோதும் வீணடித்ததில்லை.
படகைப் பரிசோதித்தபடி, “டீசல் போதுமா, இல்ல எதுக்கும் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாங்கி வச்சுக்கலாமா?” என்று சுதாகர் கேட்க…
உடனே இன்னொரு நண்பனான காசி சிரித்துக்கொண்டே, “அதையெல்லாம் நேத்தே யோசிச்சு எக்ஸ்ட்ராவா வாங்கி கேன்ல ஊத்தி வச்சுட்டேனே மாப்பிள்ளை!” என்றான்.
வாங்கிய பொருட்களைப் பார்த்த சுதாகர் உரக்கச் சிரித்து, “அப்படி போடு மாப்பிள்ளை! அநியாயத்துக்கு பங்காளிகள் ரெண்டு பேரும் புத்திசாலியா இருக்கீங்களாடா!” என்று வேலுவையும் காசியையும் பார்த்துக் கிண்டல் அடித்தார்.
“ஏண்டா சொல்ல மாட்ட… நாங்க புத்திசாலியா இருந்தா உனக்குத்தானே லாபம்!” என்று காசி திருப்பிக் கேட்க, ஐவரும் சேர்ந்து அடித்த சிரிப்பொலி அலைகளின் ஓசையையும் மீறி எதிரொலித்தது.
கலகலப்பான அந்தச் சிரிப்போடு, விசைப்படகின் இன்ஜினை முடுக்கினார்கள். படகு கரையை விட்டு மெல்ல விலகி, நீலக்கடலின் ஆழத்தை நோக்கிப் பாய்ந்து செல்லத் தொடங்கியது.
பூம்பாறையில் இருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ‘வானகிரி’ கிராமத்தில் இருந்த அந்தப் பெரிய வீடு காலையிலேயே சத்தத்தால் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
“ஏ சீதா… ஒரு வாய் காபி குடுக்கப் போடுறியா… இல்ல உங்க அப்பன் வீட்டுல போய் மாடு வாங்கிட்டு வந்துதான், பால் கறந்து இனி போடுவியாடி?” என்று வீட்டின் ஹாலில் உட்கார்ந்திருந்த பரமு, சமையலறைப் பக்கமாகப் பார்த்துத் தன் உரத்த குரலில் கேட்டார்.
காலையிலிருந்தே அவர் இப்படி மாறி மாறி குரல் கொடுத்துக் கொண்டிருக்க, சமையலறையிலிருந்து காபி டம்ளருடன் வெளியே வந்த சீதா, “இதோ வந்துட்டேங்க…” என்றவாறே வந்து கணவரிடம் காபியை நீட்டினாள்.
டம்ளரை வாங்கிய பரமு, “ஒரு காபி போடுறதுக்கு இவ்வளவு நேரமாடி?” என்று முறைத்தவர், காபியை ஒரு மடக்குக் குடித்துவிட்டு, “நைட்டு உன் மவன் எப்ப வந்தான்?” என்று கேட்டார்.
அவர் ‘உன் மாமன்’ என்று மகனைக் குறிப்பிட்டுத் தன்னைக் கேலி பேசுவதைப் புரிந்து கொண்ட சீதா, “ஏன்… எனக்கு மட்டும்தான் மகனா? உங்களுக்கு அவன் மகன் இல்லையா?” என்று செல்லமாகக் கோபித்துக் கேட்டாள்.
பரமு சிரித்துக்கொண்டே, “அடி எவடி இவ! அப்பனை விட ஆத்தாளுக்கு தானே உரிமை…சரிதான் போ… நம்ம ரெண்டு பேருக்கும் தான் மவன்! போதுமா?” என்றார்.
சீதா முகத்தில் லேசான சிரிப்புடன், “அப்படிச் சொல்லுங்க…” என்றாள்.
அதற்குப் பரமு, “எப்போ பார்த்தாலும் வேல்கம்பைத் தூக்கிக்கிட்டு நில்லுடி! நான் எப்ப என்ன பேசுவேன்னு… என்னைக் குத்தி, கிழிக்கலாம்னு!” என்று தன் வழக்கமான கிண்டல் பாணியில் புலம்பினார்.
சீதா விட்டுக்கொடுக்காமல், “அதற்கு நீங்க ஒழுங்கா பேசணும் முதல்ல!” என்றாள்.
மனைவி சொன்னதைக் கேட்ட பரமு பெருமூச்சு விட்டுக்கொண்டே, “ஏண்டி சொல்ல மாட்ட… அத்த மகன்னு ஆசைப்பட்டு கட்டினேன்ல எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்!” என்று சிரித்தபடியே காபியைக் குடித்து முடித்தார்.
அந்தப் பெரிய வீட்டில், பரமு மற்றும் சீதாவின் இந்தச் சின்னச் சின்னச் செல்லச் சண்டைகளும் கலகலப்பும் காலை நேரத்துக்கே உரித்தான ஒரு தனி அழகைக் கொடுத்தது.
அப்பொழுது மாடிப் படியிலிருந்து கம்பீரமாக இறங்கி கீழே வரும் மகனைப் பார்த்த பரமுவின் முகத்தில் சட்டென்று ஒரு வெளிச்சம் பிறந்தது.
கம்பீரமான தோற்றத்துடன் ஒவ்வொரு படியாக இறங்கி வந்துகொண்டிருந்தான் ஆதவன்.
வெள்ளை நிறச் சட்டையின் கைகளை முழங்கைக்கு மேலாக மடித்துவிட்டிருக்க, அடர்த்தியான தலைமுடியை நேர்த்தியாக வாரியிருந்தவனின் முகத்தில் இளமைக்கே உரிய வசீகரம் இருந்தாலும், கண்களில் ஒருவிதமான தன்னம்பிக்கையும் முதிர்ச்சியும் தெரிந்தன.
உயரமான தேகம், அளவான நடையுடன் அவன் படியிறங்கி வருவதைப் பார்த்தவரின் முகத்தில் தன்னையறியாமல் பெருமிதப் புன்னகை அரும்பியது.
சிறுவயதில் தன் விரலைப் பிடித்துக்கொண்டு தத்தித் தத்தி நடந்த அதே மகன்தான் இன்று இப்படி ஒரு கம்பீரமான இளைஞனாகத் தன் முன்னால் வந்து நிற்கிறான் என்பதை நினைத்தபோது தந்தையின் மனம் சிலிர்த்தது.
பெங்களூருக்குப் படிக்கச் சென்றபோது இருந்த தோற்றத்திற்கும் இப்போது திரும்பி வந்திருக்கும் தோற்றத்திற்கும் எவ்வளவு வித்தியாசம்!
படிப்பு மட்டுமல்லாமல், வெளியுலக அனுபவமும் அவனுக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருப்பதை அவனது தோற்றமும் நடையும் வெளிப்படுத்தின.
“என்னப்பா…என்னை அப்படிப் பார்க்கிறீங்க?” என்று தந்தையின் பார்வையை உணர்ந்து, லேசாக சிரித்துக்கொண்டே கேட்டான்.
“வாயா… எப்போ வந்தீங்க? என்க, நைட் 12:30 மணி ஆயிடுச்சுங்கப்பா! என்பனைப் பார்த்தவர், படிப்பெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா? இனியாவது ஆத்தா அப்பன் கூட இந்த ஊர்ல இருப்பியா… இல்ல அந்த கம்ப்யூட்டர் பெட்டியைத் தூக்கிக்கிட்டு திரும்பவும் செங்களுரு, மங்களுருன்னு திரிவியா?” என்று மனதிலிருந்த ஆதங்கமெல்லாம் வெளியே வரக் கேட்டார்.
தனது தந்தையைப் பார்த்து லேசாகச் சிரித்துக் கொண்டே, அவரின் பக்கத்தில் வந்து உட்கார்ந்த ஆதவன் “என் படிப்பு எல்லாம் முடிஞ்சிருச்சுப்பா. இனிமே உங்களோடவே இருந்து நம்ம பிசினஸைப் பார்த்துக்கத்தான் போறேன்,” என்றான் அமைதியான குரலில்.
அதைக்கேட்ட பரமுவுக்குள் சந்தோஷம் தாங்கவில்லை!
நெஞ்சை அடைக்கும் அளவுக்கு மகிழ்ச்சி பொங்கியபோதிலும், அதை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
முகத்தை லேசாக மாற்றிக் கொண்டு, “ஆமா, ஆமா…இந்த மீனு நாத்தத்துல வேலை பாக்கட்டும்னு ஒம்மா உன்னை விட்டுடுவாளா என்ன? எங்க தலையெழுத்துதான் பொறந்ததுல இருந்து இந்த மீன் வாடையிலயே போச்சு…” என்று சலித்துக் கொள்வது போல் பேசினார்.
கணவர் சொன்னதைக் கேட்ட சீதா “ஆமா வந்துட்டாரு பெரிய மனுஷன் பேச! ஏன்யா, என் புள்ள படிச்சுட்டு வந்து நம்ம தொழிலைப் பார்க்குறேன்னு சொன்னா உங்களுக்கு என்ன கசக்குதா? எப்போ பார்த்தாலும் ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கணும்!” என்று மகனுக்குச் பரிந்து பேசினாள்.
அப்பொழுது, “ஆது…ஆது…” என்று சத்தமாக கூப்பிட்டுக்கொண்டே, வாசல்கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான் சீதாவின் அண்ணன் மகன் அருண்.
அவன் உள்ளே வருவதைப் பார்த்த பரமு, சீதாவைத் திரும்பிப் பார்த்து நக்கலாக, “ஏண்டி… உங்கப்பன் என்னைக் கண்காணிக்கவே இவனை ஆளா வச்சிருக்காரா? பொழுது விடிஞ்சா போதும்… உன்னைப் பார்க்க இவன் ஓடியாந்துடுறானே!” என்று கடுப்பானவர் போலக் கேட்டார்.
அவ்வளவுதான்! அதைக் கேட்டதும் சீதாவுக்குப் பொறி பறக்க,”இங்க பாருயா… என் வீட்டு ஆளைப் பத்தி ஏதாவது பேசுன, நான் மனுஷியா இருக்க மாட்டேன்! நல்லாவே இருக்காது சொல்லிட்டேன்!” என்று கணவரை முறைத்தாள்.
உள்ளே வந்த அருண் இதையெல்லாம் பார்த்துச் சிரித்தபடியே, அத்தை மகனைப் பார்த்து, “ஆது…நைட் எப்போ வந்த? எப்படியோ படிப்பை முடிச்சுட்டு ஊருக்குத் திரும்பியாச்சு!” என்று தோளைத் தட்டினான்.
ஆதவன் சிரித்தபடி அருணின் கையை பிடித்தவன், “வீட்ல அம்மாச்சி, தாத்தா, மாமா, மாமி எல்லாரும் எப்படிடா இருக்காங்க?” என்று நலம் விசாரிக்க…
“எல்லாரும் நல்லா இருக்காங்கடா. அதெல்லாம் இருக்கட்டும்… நான் தான் பஸ் ஸ்டாண்ட்ல வந்து நிக்கிறேன்னு சொன்னேன்ல, அப்புறம் ஏன்டா எனக்கு போன் பண்ணி சொல்லலை?” என்று அருண் சற்று கோபமாகவே கேட்டான்.
“அங்கேயே பஸ் ஏற ரொம்ப லேட் ஆகிடுச்சுடா… திருச்சி கிட்ட கடந்து வானகிரிக்கு வரதுக்கு எப்படியும் ராத்திரி 12 மணிக்கு மேல ஆகும்னு தெரிஞ்சது. நீயும் அன்னைக்குக் காலையில தான் கடலுக்குப் போயிட்டு களைப்பா வந்திருந்த… அதான் நடுராத்திரியில உன்னைத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு சொல்லாம வந்துட்டேன்,” என்று அமைதியாகக் காரணத்தைச் சொன்னான் ஆதவன்.
தேடல் தொடரும்…
