வேள்வி : 9

அத்தியாயம் : 9

வீட்டுக்கு வந்து உணவை முடித்து இரவு நேரம் படுத்திருந்த நந்தனாவுக்கு, மாலை நேரம் பார்த்திருந்த கோழிப்பண்ணையின் ஞாபகமாகவே இருந்தது. அப்பா அடிக்கடி சொல்லும்போது மட்டுமே கேட்டிருந்தவள், இன்று பண்ணையை நேரில் பார்த்ததும், அவ்வளவு பெரிய பரப்பளவையும் அதன் நவீன வசதிகளையும் கண்டு வியந்து போய் நின்றாள்.

பரிதிவர்மன் புன்னகையுடன் அவளது கையைப் பற்றி அழைத்துச் சென்று ஒவ்வொரு இடமாகக் காண்பித்தான். அவளும் அவன் மீதான அச்சம் அகன்றவளாக, ஒவ்வொன்றையும் பார்த்து வியந்தாள். தனக்குரிய சந்தேகங்களையும் அவ்வப்போது கேட்டுத் தெளிவு செய்தாள்.

கோழிக் குஞ்சுகள் தனியாகப் பராமரிக்கப்படும் இடத்தில் கொஞ்சம் நேரம் அங்கிருந்து விளையாடிக்கொண்டிருந்தாள். பின்னர் முட்டைகள் சேகரித்து வைக்கும் பகுதிக்குச் சென்றதும் வாயைப் பிளந்து கொண்டு நின்றாள்.

மொத்த இடங்களையும் சுற்றிப் பார்த்து வர நிறைய நேரம் ஆகியது. அத்தனையும் ஒரே நாளில் பார்த்துத் தெரிந்துகொண்டவளுக்கு, அங்கிருந்து போகவே மனம் வரவில்லை. நேரம் சென்றுகொண்டிருக்க, மாலை நேரம் கடந்தும் சதாசிவம் வராமல் இருக்க, பரிதிவர்மன் தனது வீட்டிற்கு நந்தனாவை அழைத்தான். அவளுக்குப் பயத்தில் வியர்த்துக் கொட்டியது. சித்திக்குத் தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்பதால் வர மறுத்து, பண்ணை வீட்டிலேயே அப்பா வரும் வரை இருப்பதாகச் சொன்னாள். அவனோ ‘அதுவும் நம்ம வீடுதான், வா!’ என்று சொல்லியும் கேட்க மறுத்ததால், அவளுக்காக அங்கேயே இருந்தான் பரிதிவர்மன். இருட்டும் நேரம் அதே இடத்திற்கு விரைந்து வந்த சதாசிவம், மகளிடம் மன்னிப்புக் கேட்டு, மருமகனுக்கு நன்றி தெரிவித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அப்போது நந்தனா, “நானும் நாளையிலிருந்து பள்ளிக்குப் போகாம வீட்டுலதான் இருக்கணும். ரொம்பப் போர் அடிக்கும், வரட்டுமா?” என்று கேட்க, “உனக்கு எப்போ தோணினாலும் வா” என முழுமையாகச் சம்மதம் தெரிவித்தான் பரிதிவர்மன்.

வீட்டுக்கு வரும் வழியெங்கும் அப்பாவிடம் அதைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தாள். மறுநாள் முதல் தானும் அங்கு வருவதாகக் கூறினாள்.

அம்மாவின் வீட்டிற்குச் சென்று அவரது உடல்நிலையை பற்றி தெரிந்து கொண்ட நீலாம்பரி, பிள்ளைகளுக்குத் தற்சமயம் விடுமுறையாக இருப்பதால், சில நாட்களுக்கு மூவரும் அங்கேயே தங்கிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டாள். மறுவார்த்தை பேசாமல் அவரும் மனைவி மற்றும் பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டுப் புறப்பட்டு வந்துவிட்டார். இனி அவர்கள் திரும்ப வரும்வரை, மகள் நந்தனாவும் தனியாகத்தானே இருக்க வேண்டும், அதனால் தன்னுடன் அழைத்துப் போகலாம் என்று முடிவு செய்தார் சதாசிவம்.

நாளை முதல் அங்கு போகலாம் என்ற நினைப்பிலேயே அவளுக்கு உறக்கம் வர மறுத்தது. கோழிக்குஞ்சுகளைத் தூக்கி வைத்துக் கொஞ்சியதை நினைத்தபடியே இருந்தாள். காலை நேரம் எப்போது விடியும் என்று காத்திருந்து, அவசரமாக எழுந்து காலைக் கடன்களை முடித்து, உணவு தயாரித்து அப்பாவுடன் சேர்ந்து உண்டு முடித்துப் புறப்பட்டு வந்து விட்டாள்.

அப்பாவிடம் நேற்று பண்ணையில் நடந்தவற்றை சொல்லிக்கொண்டிருந்த பரிதிவர்மன், பின்னர் தன்னுடைய பணி நிமித்தம் பேசிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த நாகேஸ்வரி, அவளது அண்ணன் வேல்முருகன் வெளிநாட்டில் இருந்து கொண்டு தன்னை அழைப்பதாகவும், சில நாட்களுக்கு அங்கு சென்று பணிபுரிய வருமாறும் பரிதியைக் கேட்டதாகச் சொன்னாள்.

மனைவியைக் கடுமையாக முறைத்துப் பார்த்த தாணுலிங்கம், “அவன் அப்பா நான் உயிரோடுதான் இருக்கேன். என் பிள்ளையை எப்படிப் பார்க்கணும், வளர்க்கணும்னு எனக்குத் தெரியும். தேவையில்லாம வார்த்தையை விடாதே!” என்று எச்சரித்தார்.

கணவரின் வார்த்தையில் ஒரு கணம் தடுமாறியவள், “நான் அப்படிச் சொல்ல வரல. அண்ணியும் அண்ணாவும் அடிக்கடி பரிதியைப் பற்றி கேட்கிறப்போ, அவன் கோழிப்பண்ணையை பார்த்துகிட்டு இருக்கறதா சொன்னேன். அதுக்கு கிண்டல் பண்ற மாதிரி ‘சும்மா சும்மா கோழி மேய்ச்சிட்டு இருக்காம இங்க அனுப்பிவிடு, நாங்க அவனை நிர்வாக படிப்பை முழுமையா கற்று தேர்ச்சி பெற உதவுறோம். அவ்வளவு வசதியான வீட்டுப் பிள்ளை எதுக்காக, கிராமத்துல கிடந்து கஷ்டப்படணும்? பெரிய பட்டப் படிப்பு படிச்சிருக்கானே! எங்கேயோ போய் யாரோ ஒருத்தருக்குக் கீழே வேலை செய்வதை விட, நம்ம கம்பெனியில் பார்ப்பது நல்லது தானே!” என்று சொன்னவர், கணவர் பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டார்.

சோஃபாவில் இருந்து எழுந்து மனைவியின் அருகில் சென்றவர், “அது நம்ம கம்பெனி இல்லை! உன் அண்ணன் வெளிநாட்டு நண்பர் ஒருவரின் ஆதரவுடன் இணைந்து நடத்தும் கம்பெனி. அதுக்கு ஆரம்பத்தில் பண உதவி தேவைப்பட்டப்போ கேட்டு இருந்தாங்க. நானும் கொடுத்தேன். அதுக்காக அதில் பங்கு தருகிறார் என்றோ, உரிமை கொண்டாடலாம் என்றோ அர்த்தமாகாது. இனிமேல் இப்படிச் சொல்லிட்டு இருக்காதே! என் அப்பா சம்பாதித்த சொத்துக்கள், என் மகன் ஆசைப்பட்டு கேட்ட கோழிப்பண்ணை… இனி அவனுக்காக செய்ய போறது எல்லாம் அவன் சந்தோஷமா வாழ மட்டும்தான்! அதை எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு என் பிள்ளையை யாரோ ஒருத்தர் கூப்பிட்டார்னு எங்கேயும் அனுப்பி வைக்க முடியாது!” என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

கணவர் தாணுலிங்கத்தை நாகேஸ்வரிக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் அவரிடம் உள்ள இந்தப் பிடிவாதம் மட்டும் ஏனோ வருத்தத்தையே ஏற்படுத்தும். என்றோ ஒரு நாள் நடந்த சம்பவத்தை வைத்துவிட்டு, இப்போதும் வனிதாவை வெறுக்கிறாரே! அவள் அப்படி என்ன தப்பாக செய்துவிட்டாள்? இப்போது பேசும்போது கூட அவ்வளவு உருக்கமாகத்தானே பேசி விசாரிக்கிறாள்?

அவள் செய்த தவறுகளைத் தோழி என்பதால் மறந்துவிடலாம் என்று நாகேஸ்வரி நினைத்தாலும், தாணுலிங்கம் மறக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆரம்பத்தில் தொழில் செய்ய வேண்டும் என்று உதவி கேட்டதால் அவர் ஐந்து லட்ச ரூபாய் பணம் அனுப்பித் கொடுத்திருந்தார். அதன் பிறகு, அவள் மனைவியின் மூலம் பேசி மேலும் ஐந்து லட்சம் வாங்கியிருக்கிறாள். கிட்டத்தட்ட பத்து வருடமாகியும் இன்னும் அந்தப் பணத்தைத் திருப்பித் தரவில்லை. அவருக்கும் ஆயிரம் செலவுகள் இருக்கும் என்று தெரிந்தும் தராமல் இழுத்தடிக்கிறாள் வனிதா. இதில் வேல்முருகன் நல்லவர். அன்றொரு நாள் அழைத்துப் பேசும்போது, அந்தக்கடன் தொகையை மிக விரைவில் அனுப்பித் தருவதாகச் சொல்லி அக்கவுண்ட் நம்பரை வாங்கியிருந்தார். ஆனால் வனிதா, நாகேஸ்வரியிடம் சதா புலம்பல், சலம்பல் என்று நடித்து நாடகம் ஆடி, அந்தப் பணத்தை வாங்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறாள்.

அதிலும் நந்தனாவுக்குச் சீர் செய்த விஷயம் தெரிய வந்ததில் இருந்து, ஏதோ இவளது பணத்தை எடுத்துச் செலவு செய்து விட்டதாக ஒப்பாரி வைக்கிறாள். இனிமேல் அவளுக்கு எதுவுமே செய்ய கூடாது என்று ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கிறாள். நாகேஸ்வரி பாவம் என்பதால், அவளை மறித்து பேச முடியாமல் இருக்கிறாள். இதுவே தாணுலிங்கமாக இருந்தால் நடப்பதே வேறு!

அதன் பிறகும் அதை அப்படியே விடாமல், நந்தனாவை விட தனது மகள் ரக்ஷனா தான் பெரியவள் என்பதை நிலைநாட்டும் விதமாக, அவளது மகள் பெரிய பெண்ணானதும் அங்கிருந்து அழைப்பு விடுத்தாள். இவர் ‘மகனின் படிப்பு, தொழில்கள், வீட்டைப் போட்டுவிட்டு உடனே புறப்பட்டு அங்கெல்லாம் வர முடியாது; நீங்கள் விடுமுறையில் வரும்போது இங்கு வைத்து நடத்தி விடலாம்’ என்று கூறிவிட்டார். அதில் அவளுக்கு இன்னும் கோபத்தை வரவழைத்து விட்டது.

அதோடு வீம்பில் மகளது பள்ளிக்கூட விடுமுறையில் மகள் மற்றும் கணவனை அழைத்துக் கொண்டு வந்துவிட்டாள். நேராகக் கணவனின் வீட்டிற்குச் சென்றவள், நந்தனாவுக்கு எப்படிச் செய்தார்களோ அதைவிட நான்கு மடங்கு பெரியதாக நடத்தினாள். 

தாணுலிங்கமோ மூன்று சவரனுக்கு ஒரு புதிய வரவிலான நெக்லஸ் மட்டும் வாங்கிக்கொண்டு, மகனை அழைக்காமல் மனைவியுடன் சென்றார்.

“பரிதியும் வரட்டுமே!” என்று நாகேஸ்வரி கேட்டதற்கு, மனைவியைப் பார்த்துத் தலையசைத்தவர், “அவன் இப்போ ஃபைனல் இயர் படிப்புக்காக, வீட்டுக்கும் வேலைக்கும் அலைஞ்சுகிட்டு இருக்கான். அவனைக் கட்டாயப்படுத்தி கூட்டிட்டுப் போக முடியாது. நீ கிளம்பு!” என்றார்.

“அதில்ல… போனதும் என் அண்ணன் கேட்பார். அதோடு நந்தனாவுக்கு அவ்வளவு விலை உயர்வாக நகைகள் வாங்கிட்டு, ரக்ஷனாவுக்கு மட்டும் இப்படி வாங்கி இருக்கிங்களே?” என்று வினவியதும், “நந்தனாவுக்கு வாங்கிக் கொடுக்க யாரும் இல்லை. அவங்க அப்பா கஷ்டப்பட்டு உழைக்கும் சம்பாத்தியம் அத்தனையும் குடும்பத்துக்குப் போகுது. ரக்ஷனா அப்படி இல்லை. அதோடு உன் அண்ணன் வீட்டுக்கு கொடுத்த பணம் கூட இன்னும் திரும்பி தரலை. வார்த்தையைப் பேசுறப்போ பார்த்து உச்சரி!” என்று அடக்கினார்.

ஏற்கனவே, “அந்த அநாதைப் பெண்ணுக்கு எதுக்கு இவ்வளவு செய்யணும்? வீட்டுல உள்ள சொத்தை எல்லாம் கரைத்து அவளுக்கே கொடுக்கலாம்னு பார்க்கிறாரோ? நீ ஏன் அவரை இப்படி விட்டு வச்சிருக்க? உன் பையனை அவங்களோடு பழகக் கூடாதுன்னு சொல்லியும் கேட்காம அனுப்பி வச்சிருக்கே! நாளைக்கு வந்து அவள்தான் எனக்கு வேணும்னு கேட்டா என்ன செய்வ? கணவனைத் தான் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியல, பிள்ளையையும் பார்த்துக்கத் தெரியாதா? என் கணவர் நான் என்ன சொன்னாலும் கேட்டு, வாங்கி எப்படி நடந்துக்கிறார் தெரியுமா?” என்று மமதையுடன் பேசியிருந்தாள் வனிதா.

நாகேஸ்வரி அமைதியாக இருந்ததும், “நீ இப்படி இருப்பதால்தான், அவங்க எல்லாரும் உன் தலை மேல் ஏறி மிளகாய் அரைக்குறாங்க. நானாக இருந்திருந்தா பத்து பைசா செய்ய விட மாட்டேன்” என்று கூறி, நீயும் இதேபோல நடந்து கொள் என்று அறிவுரை கூறினாள்.

அடிக்கடி பேசும்போது இப்படி எதையாவது சொல்லிச் சொல்லிக் குழப்பினாள். ரக்ஷனாவுக்கும் இங்கு வரவேண்டும், அவர்களைக் காண வேண்டும் என ஆசையாக இருப்பதாகக் கூறினாள்.

“உங்க எல்லாரையும் பார்க்கணும்னு இருக்குது. அவங்க அப்பா சதா பிசினஸை கட்டிக்கிட்டு அழுவதால், சொந்த ஊருக்கு வந்து கூட ஆசை தீர நிற்க முடியல; நீங்களாவது ஒரு மாசம் வந்து தங்கிட்டுப் போகலாமே!” என்று சொல்லி, அங்குள்ள ஆடம்பர வாழ்க்கையை வர்ணித்து அவள் மனதிலும் ஆசையைக் காட்டினாள்.

 

பரிதிவர்மனைப் பார்க்கும் ஆசையில் மகள் இருப்பதாகக் கூறுவாள். நடக்காதவற்றை நடந்ததாக இட்டுக்கட்டி கூறுவதில் தேர்ந்தவள் வனிதா. இது தெரியாமல் நாகேஸ்வரி, அவளை நல்லவள் என்று நினைத்துக் கணவனிடம் அவ்வப்போது தனது அதிருப்தியைத் தெரிவிப்பதுண்டு.

இதோ, பட்டுப்புடவை, அவளுக்காக வாங்கிய நகை மற்றும் சாதனங்களுடன் கணவனும் மனைவியும் காரில் ஏறி அவர்களின் வீட்டிற்குச் சென்றனர். அந்த வீடு இரண்டு மாடியுடன் மார்பிள் டைல்ஸில் ஜொலித்தது. சில மாதங்களுக்கு முன்புதான் புதிதாக அமைத்திருக்கிறார்கள்; அதற்கு இன்னும் கிரகப்பிரவேச அழைப்பு கூட விடவில்லை. அதற்குள் மகளின் நிகழ்ச்சியை நடத்துகிறாள். வீட்டைச் சுற்றிலும் பார்த்துவிட்டு மனைவியை ஒரு பார்வை பார்த்தார் தாணுலிங்கம். அந்தப் பார்வை, ‘என் அண்ணன் கஷ்டப்படுகிறார், ஒன்றுமில்லாமல் திண்டாடுகிறார்; நீங்கள் கொடுத்த பணத்தை இப்போது அவரால் எப்படித் திருப்பித் தர முடியும்? கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்’ என்று நாகேஸ்வரி முன்பு சொன்ன வார்த்தைக்கான பதிலாக இருந்தது.

ஒன்றுமில்லாதவனால் எப்படி இரண்டு கோடி மதிப்பிலான வீடு கட்ட முடிந்தது? நாகேஸ்வரி பதில் சொல்ல முடியாமல் இருக்க, அவரும் அதை எதிர்பார்த்தது போலத் தெரியவில்லை.

வேல்முருகன் நன்றாகப் பேசினார். வனிதாவின் பேச்சில் அதிகப்படியான ஆணவமும் தலைக்கனமும் தெரிந்தது. ஏதோ உலகத்தில் இல்லாததைச் சாதித்துவிட்டதைப் போன்ற மிதப்பு! அவளது மகள் அவளைப் போலவே அடக்கம் இல்லாமல், வெளிநாட்டு வாசத்தில் ஆடை அணிந்து மொத்த தலைமுடியையும்  விரித்துப் போட்டு இருந்தாள். மாமா, அத்தை வந்திருக்கிறார்கள் என்று கடமைக்கு பேசியவள், அதற்குப் பிறகு கண்டு கொண்டதாகவும் தெரியவில்லை.

பரிதியைப் பற்றிப் பத்தாவது முறையாகக் கேட்டிருப்பாள்; அவனைப் பார்க்க வேண்டும் என்று சொன்னாள். அவனை அழைக்காமல் வந்துவிட்டதற்காக வனிதா முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருந்தாள். அது போதாமல், மகளுக்காக வாங்கி வந்திருந்த பரிசுப் பொருளும், மிகவும் குறைவாக இருந்தது அவளுக்கு மேலும் மனத்தாங்கலை ஏற்படுத்தியது.

‘அப்படி என்ன என் பிள்ளை அவளை விடக் குறைந்து போய்விட்டாள்? இதற்கு இப்படிச் செய்பவர், நாளைக்குத் திருமணத்திற்கு எப்படிச் செய்வார்? அதற்கு முன் எப்படியாவது தனது மகளுக்கும் பரிதிக்கும் திருமணத்தை முடித்துவிட வேண்டும்’ என்று கங்கணம் கட்டினாள் வனிதா.

அவள் மனதில் இருப்பது அத்தனையும் அறிந்து வைத்திருந்த தாணுலிங்கம், தான் உயிரோடு இருக்கும் வரை இவளை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்ற முடிவுடன், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். 

நாகேஸ்வரிக்கு அண்ணன் வீட்டில் தங்குவதற்கு ஆசையாகத்தான் இருந்தது; ஆனால், வனிதாவுடன் தனியாக விட்டுவந்தால் எதையாவது பேசித் திசைதிருப்பி விடுவாள் என்பதாலும், தாணுலிங்கத்திற்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை என்பதாலும், வந்த காரியம் முடிந்ததும் கிளம்பிவிட்டார்கள்.

அது முடிந்து சரியாக நான்காம் நாள், அமெரிக்காவுக்குக் கிளம்புவதற்கு முன்பு குடும்ப சகிதம் நாகேஸ்வரியின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவளுக்காக விதவிதமான உணவுகளை தயாரித்து வைத்திருந்தார்கள்.

பரிதியும் அப்போதுதான் வந்திருந்தான். ரக்ஷனா அவனைக் கண்டதும் விரைந்து சென்று நன்றாகப் பேசினாள். அவனது படிப்பு, வேலை குறித்து விசாரித்து தெரிந்து கொண்டாள். மதிய உணவை முடித்த பின்னர் அந்த ஊரை சுற்றி பார்க்கும் ஆசையில் வினவினாள். அவனும் அம்மாவிடம் சொல்லி விட்டு, அங்குள்ள இடங்களுக்கு அழைத்துச் சென்று காண்பித்தான். அப்படி போகும்போது நந்தனாவை பார்த்து விட்டவன், அவளது கைப்பற்றி இழுத்து வந்து ரக்ஷனாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். முதலில் அவள் யார் என்றே தெரியாமல் இருந்தவளுக்கு, பின்னர் தனது பெரியம்மாவின் மகள் என்று தெரிய வரவும் அதிர்ச்சியாக இருந்தது. 

‘இப்படிப்பட்ட உறவுமுறையில் ஒருவர் இருப்பதாக அம்மா இதுவரை சொல்ல வில்லையே! அந்த அளவுக்கு என்ன நடந்து விட்டது?’ என்று தெரியாமல் குழம்பினாள். நந்தனா அவளைப் பார்த்து சினேகமாக புன்னகைத்து நலன் விசாரிக்க, ரக்ஷனா தலையை மட்டுமே ஆட்டினாள். பரிதிவர்மன் நந்தனாவிடம் சகஜமாக பேசுவதையும், அவள் அமைதி அடக்கத்துடன் நடந்து கொள்வதையும் கண்டு வியந்தாள்.

மூவருமாக சேர்ந்து வெளியே சென்று விட்டு வந்தனர். அவளைக் கண்டதும் இவன் முகத்தில் அதுவரை இல்லாத ஒரு பரபரப்பும், உரிமை உணர்வும் இருப்பது ரக்ஷனாவுக்கு தெரிந்தது. வீட்டிற்கு வரும்போது அவளுக்குப் பிடித்தமானதை கேட்காமலே வாங்கி தந்து அனுப்பி வைத்தான்.

அதன் பிறகே ரக்ஷனாவின் புறம் திரும்பி சிரித்தான். வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் அம்மாவிடம் சென்று அவள் விசாரிக்க, கலையரசியின் மீது காரணமறியாத வெறுப்பில் இருந்தவள், நந்தனாவின் மீது கசப்பான வார்த்தை வீசினாள். ‘இனிமேல் அவளைப் பார்க்க கூடாது பேசக் கூடாது’ என திட்டினாள். அங்கு நடந்த எதுவும் தெரியாததால் அவளும் சரி என்று சென்றுவிட, தனது அத்தை மகளைத் திட்டி பேசிய அத்தை வனிதாவை முறைத்துப் பார்த்தான் பரிதிவர்மன்!

கோழிப் பண்ணை பற்றிய பேச்சு அடிக்கடி வருவதால் அங்கு அழைத்துச் செல்ல கேட்க, அவனும் மறுக்காமல் கூப்பிட்டு வந்தான். முதலில் பண்ணை வீட்டைப் பார்த்து ஆச்சரியமாக நோக்கியவள், பின்னர் அங்கேயும் வந்து நோக்கிவிட்டு முகத்தை சுளித்தாள். வெளிநாட்டில் வாழ்ந்து வந்த அவளுக்கு இந்த இடம் ரசிக்கவில்லை.

தண்ணீரும், தவிடும் உமியும் கீழே கொட்டி கிடப்பதும், கோழிகளின் எச்சத்தில் இருந்து வீசிய நாற்றத்தில் குமட்டிக் கொண்டு வருவது போலிருக்க, வேகமாக வெளியே வந்து விட்டாள். அவன் என்ன என்று கேட்க, “எனக்கு இந்த இடம் பிடிக்கல! நீங்க ஏன் அவ்வளவு பெரிய வீட்டுல பிறந்துட்டு இந்த மாதிரி வேலை பார்க்கணும்? என் டேட் மம்மி சொல்வது போல இதை டிஸ்போஸ் பண்ணிட்டு பாரின் வரலாமே?” என்று சொன்னதும், முகம் மாறினான் பரிதிவர்மன். 

அதற்கு மேலும் அவளுடன் அங்கு நிற்க விரும்பாமல் அழைத்து வந்து விட்டான். நந்தனாவை காணாமல் தேடியவள் அவளைப் பற்றி விசாரித்தாள். அதனால் அவன் அவளது வீட்டிற்கு அழைத்து வந்தான். மூவரும் நிறைய நேரம் பேசினார்கள், வெளியே வந்து சுற்றி பார்த்தார்கள், அதில் நீலாம்பரியின் குணமும் அங்கு நடப்பதும் தெரிந்தது. அவளுக்காக இரக்கப்பட்டாள் ரக்ஷனா. 

அவனுடன் ஒரு சில நாள் பேசி பழகியதில் அவனது குணம் நன்கு தெரிந்தது. பரிதியின் பேச்சில் பாதி நேரமும் நந்தனா வருவதும் புரிந்தது. அவனுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டு  பேசுவாள், தோளில் கை வைத்து தொடுவாள், அவனை இழுத்துக்கொண்டு போய் கதை பேசுவாள், வெளிநாட்டில் உள்ளவற்றை சொல்லி மகிழ்வாள். இதை எல்லாம் அத்தை மாமாவிடம் விட்டு விட்டு தங்களுடன் வருமாறு கோரிக்கை வைப்பாள். 

இப்படி ஒரு அழகான அன்பான அத்தான் கிடைத்து இருப்பதில் மகிழ்ச்சியடைந்தாள். மறுநாள் முதல் பரிதிவர்மன் காலை நேரம் வெளியே சென்றால் இரவு தான் வீடு திரும்பினான். அவன் இல்லாமல் போர் அடித்தது. அவன் தலை தெரிந்ததும் ஓடிச் சென்று பேசினாள். அவனுடன் சுற்றிக் கொண்டிருந்தாள். இது தாணுலிங்கத்திற்கு பிடித்தமாக இல்லை. அவர் தன் மனதில் நந்தனாவை இந்த வீட்டு மருமகளாக வரிந்து வைத்திருக்க, தப்பாக எதுவும் நடந்து விடக்கூடாது என்று அஞ்சினார்.

அதுவும் இல்லாமல் நாகேஸ்வரியின் நடைமுறை வித்தியாசமாக இருந்தது. தனது மகளுக்கு குறைவாக செய்து விட்ட கோபத்தை நாத்தனாரிடம் கொட்டி தீர்த்தவள், அவளது நகைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். எதற்காக அவள் கேட்கிறாள் என்று தெரியாமல் நாகேஸ்வரி தனது நகைகளை எடுத்து வந்து காட்ட, “அத்தை, அது நல்லா இருக்கு, இது நல்லா இருக்கு! நியூ மாடல் எல்லாம் வாங்கி வச்சிருக்கீங்க அத்தை. இதெல்லாம் என்கிட்ட இல்ல, நான் எடுத்துக்கட்டுமா?” என்று ரக்ஷனா கேட்ட கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திகைத்தாள்.

உடனே குறுக்கிட்ட வனிதா, “உன் அத்தைக்குப் பெண் பிள்ளைனு வேறு யார் இருக்கறார்கள்? நாளைக்குக் கல்யாணம் செய்து இந்த வீட்டுக்கு நீ தானே வரப் போறே! உன் கல்யாணம் முடிந்த பிறகு தாராளமா எல்லாத்தையும் நீயே பயன்படுத்தலாம். இந்த வீடு, வீட்டில் உள்ள சாதனங்கள், நகை எல்லாமே உனக்குத்தான்!” என்று தன் மனதில் இருப்பதைக் கோடிட்டுக் காட்டினாள்.

ரக்ஷனா கண்கள் இரண்டையும் விரித்து அம்மாவை நோக்க, “அதுக்குத்தான் நீ நல்லா படி! நம்ம அப்பாவைப் போல இன்னொருவர் கூடச் சேர்ந்து இருக்காம தனியாக பிசினஸ் செய்து சம்பாதி. உன் கூடச் சேர்ந்து பார்த்துக்க நம்ம பரிதியும் வந்துடுவான். நாம எல்லாரும் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிடலாம்னு சொன்னேன்” என்று தனது ஆசையை வெளிப்படுத்தினாள்.

“பரிதி இங்கு உள்ளதை எல்லாம் விட்டுட்டு வருவாரா?”

“உன் மேல உண்மையான பாசம் இருந்தா கண்டிப்பா வருவான்!”

“மாமா… அத்தை…” என்று ரக்ஷனா இடைமறித்தாள்.

“அவங்க ரெண்டு பேரும் இருக்கும் வரை ஊரில் உள்ள சொத்து, நிலபுலன் எல்லாம் பார்த்துக்குவாங்க. அதுக்குப் பிறகு எல்லாத்தையும் வித்துட்டு மொத்தப் பணத்திலும் ஒரு பெரிய பிசினஸ் ஆரம்பிச்சுடலாம்” என்று தனது கனவுகளை விரிவாக்கினாள் வனிதா.

அப்போது முகம் இறுகியபடி அதைக் கேட்டுக்கொண்டே வந்தார் தாணுலிங்கம்!

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top