இருள் நிழலாய் நானே 8
மகி இருக்கையில் மயங்கி சரிந்திருந்தாள்.
தன்னவளை அந்நிலையில் கண்ட சமர், தான் அணிந்திருக்கும் காக்கி உடையின் திடம் மறந்தவனாக அவள் முன் மண்டியிட்டு தரையில் அமர்ந்தவன்…
“மகி” என அவளின் கன்னம் தட்டினான். கொஞ்சமும் அசைவில்லை.
சமரின் கண்களில் சட்டென்று நீர் இறங்கியது.
“சமர்…” உடன் வந்திருந்த சீனு அவனின் தோள் தொட்டான்.
“லட்டு…” கலங்கி ஒலித்தது சமரின் குரல்.
அவ்விடம் சுற்றிக் கொண்டிருந்த அரூபத்தின் முகத்தில் கனிவு. சமரின் காதல் அதனையும் இளக வைத்தது.
“மயக்கம் மாதிரி தான் தெரியுது சமர். ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்” என்று சீனு சொல்ல…
வேகமாக மகியை கைகளில் தூக்கியிருந்தான்.
விடயம் அறிந்து வினைதீர்த்தான் வர, அவரிடம் சொல்லிக்கொண்டு மருத்துவமனை விரைந்தனர்.
“என்னோட சொந்தமும் இப்படித்தானே கதறி துடிச்சிருப்பாங்க” என்ற அரூபத்தின் குரல் மகியின் ஆழ்மனம் உள்வாங்கியதோ அந்நிலையிலும் அவளின் உடல் நடுக்கம் கொண்டு சீர் பெற்றது.
“லட்டு…” சமர் துடித்து அடங்கினான்.
மருத்துவமனை வர மகி அனுமதிக்கப்பட்டாள். உடல் அத்தனை சூடு கண்டிருந்தது.
மருத்துவர் உடல் சூட்டினை ஆராய கூறிட, செவிலி தெர்மோமீட்டரை மகியின் உள்ளங்கை வைத்து மூடினார்.
எண் கொஞ்சம் கூட உயரவில்லை.
மகியின் உடலில் இருக்கும் சூட்டிற்கு தெர்மோமீட்டர் உடைந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் சற்றும் புள்ளியை உயர்த்திடாது இருந்தது.
வெளியில் சமர் தவிப்புடன் நின்றிருந்தான்.
காக்கி உடையில் வழக்கு என்று வந்துவிட்டால், சிம்மமென கர்ஜித்து நிற்பவன் அவனவளுக்கு ஒன்று என்றதும் சுயம் தொலைத்து நிற்கிறான் என சீனுவுக்கு கவலையாக இருந்தது.
“மகிக்கு ஒன்னுமிருக்காது சமர்.”
சீனு ஆறுதலாக கூறிட, சமர் மொத்தமாக அவன் தோள் சாய்ந்து உடைந்துவிட்டான்.
சமர் அங்கு நிற்பதை பணி முடித்து வெளியில் வந்த ரூபேஷ் கண்டு அருகில் வந்தான்.
ரூபேஷ் அங்கு தான் பொது மருத்துவராக பணிபுரிகிறான்.
“சமர் இங்க என்ன?” என விசாரித்த ரூபேஷ்… “எதுவும் கேஸ்ஸா?” எனக் கேட்டான். அவனின் சீருடை வைத்து.
“மகி… மகிக்கு” என்று சொல்ல முடியாது தடுமாறிய சமர், “நீ கொஞ்சம் பாக்குறியா?” எனக் கேட்டான்.
“என்னாச்சு…”
“தெரியல!”
“ஆபீஸில் மயங்கி இருந்தாள்” என்ற சமர், “போய் பாருடா” என்றான். கெஞ்சுதலாய்.
“நான் பார்க்கிறேன். நீ முதலில் ரிலாக்ஸ் ஆகு” என்று மகி அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்தான் ரூபேஷ்.
ஏற்கனவே அவளை பரிசோதித்துக் கொண்டிருந்த மருத்துவர் குழப்பத்தில் நின்றிருந்தார்.
“ஹாய் டாக்டர்!”
“வாங்க ரூபேஷ்” என்ற மருத்துவர், “நானே உங்களை கூப்பிடணும் இருந்தேன்” என்றார்.
“என்னாச்சு டாக்டர்?”
“இவங்க…”
“என்னோட மாமா பொண்ணு” என்ற ரூபேஷ்…
அவரும் நிலையை விவரிக்க… ரூபேஷ்க்கும் ஒன்றும் புரியவில்லை.
“பிளட் டெஸ்ட் பண்ணலாம் டாக்டர்!”
“சிரஞ் இஞ்செக்ட் பண்ணவே முடியல டாக்டர்” என்றார் செவிலி.
“வாட்…” என்று அதிர்ந்த ரூபேஷ், தான் ஒருமுறை மகியை பரிசோதித்து பார்க்க அருகில் சென்றான்.
அவனது கரம் மகியின் நெற்றியில் பதிய, அவ்வறைக்குள் ஒரு நொடி சூறாவளி வீசி அடங்கியது.
ஆளுக்கொரு மூலையில் சுவற்றை பற்றி அவர்கள் நின்றிருக்க, மருத்துவ உபகரணங்கள் யாவும் அறை முழுவதும் சிதறியது.
“என்ன நடக்குது இங்க.” மற்றொரு மருத்துவர் கேட்டிட, மகி கண் திறந்து எழுந்து அமர்ந்தாள்.
“மகி.” ரூபேஷ், அவளின் அருகில் மீண்டும் செல்ல, மகியையே சுற்றி வந்து கொண்டிருந்த அரூபத்தின் கண்ணில் அனல் கூடியது. அனல் அதிகரிக்க… மகியின் உடல் குளிரத் துவங்கியது.
“ரொம்ப குளிருது” என்ற மகி, “அம் ஓகே” என இறங்கி வெளியில் வந்தாள்.
மூவரும் அவளை புரியாது பார்த்தனர்.
“என்ன நடக்குது ரூபேஷ்… அந்த பொண்ணு வந்த கண்டிஷனுக்கு கண் விழிக்க வாய்ப்பே இல்லை. ஆனால் சாதாரணமா எழுந்து போகுது” எனக் கேட்டார் மருத்துவர்.
“சீனியர் உங்களுக்கே புரியலன்னா…” என்ற ரூபேஷ் வெளியில் வர, மகி சமரின் அணைவில் நின்றிருந்தாள்.
“என்னாச்சு மகி?”
“நத்திங் ரூபேஷ்… நான் மட்டும் இருக்கவும், இருட்டில் எதையோ பார்த்து பயந்துட்டேன்” என நெற்றி, வாய் என புறங்கை கொண்டு துடைத்தவளாகக் கூறினாள்.
“ஹோ… அப்போ பயத்தால் டெம்ப்ரேட்சர் ஹைப் ஆகியிருக்கும். அதான் ஹார்மோன் அமைதியானதும் சட்டுன்னு குறைஞ்சிடுச்சு” என்ற ரூபேஷ்”டேக் கேர்” என சிறு சிரிப்போடு நகர்ந்தான்.
செல்லும் ரூபேஷை பழிவாங்கும் உக்கிரத்தில் முறைத்து நின்றது அரூபம். மகியின் பின்னால். காரணமின்றி மகியின் அருகில் யாரையும் அனுமதிக்க அரூபம் தயங்கியது.
மகியின் முதுகில் படிந்திருந்த சமரின் கரம் தீயின் வெப்பம் உணர்ந்தது.
வேகமாக கையை உதறியவனாக மகியின் பின்னால் மீண்டும் கை வைக்க சாதாரணமாக இருந்தது.
“நீ ஓகே தான லட்டு?” கலக்கமாகக் கேட்டிருந்தான்.
சமர் இதுபோன்ற விடயங்களுக்கு பயம் கொள்பவன் இல்லை. சொல்லப்போனால் இதையெல்லாம் நம்பவும் மாட்டான். அத்தோடு தற்போது நடந்ததை, பார்த்ததை கூறினாள் அங்கு தன்னை செல்ல அனுமதிக்கமாட்டான் என எண்ணி சமரிடம் சொல்லாது மறைத்தாள்.
“நிஜமா?” சமர் நம்பாது கேட்டிட…
“வீட்டுக்கு போனதும் ப்ரூவ் பண்ணட்டுமா?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் மெல்ல கிசுகிசுத்து கண் அடித்தாள்.
“வாலு” என்று தோளோடு சேர்த்து அணைத்தவன், “கொஞ்ச நேரத்தில் உயிரே போயிடுச்சு லட்டு” என்று அவளின் நெற்றி முட்டினான்.
“இவன் அழுது ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன் மகி” என்றான் சீனு.
“அழுதானா?” நம்ப முடியாது கேட்ட மகி, “அயர்ன் மேன் அழ மாட்டானே” என்றாள்.
“இன்னொரு முறை நீ மயங்கி விழு. அழுவான்” என்று சீனு கிண்டல் செய்திட… “விடுடா” என்று அசடு வழிந்தான் சமர்.
“தேங்க்ஸ் சீனு” என்று வெளியில் வந்த இருவரும், சீனுவை ஆட்டோவில் அனுப்பி வைத்துவிட்டு, வீடு வந்தனர்.
“நீ எப்படி அத்து ஆபீஸ் வந்த?”
“நீ கால் பண்ண… ஒரு ரிங்கிலே கட் ஆகிடுச்சு. திரும்ப நீயும் பண்ணல, நான் பண்ணப்பவும் ரீச் ஆகல. அதான் சீனு கூட்டிட்டு வந்தேன்” என்ற சமர், மகி உள்ளே நுழைய, வேகமாக பின்னால் வந்து இறுக அணைத்து நின்றான்.
“அத்து…”
“செத்துட்டேன் டி” என்ற சமர், “உன்னை அப்படி இதுவரை பார்த்தது இல்லையா? ஒரு மாதிரி” என்றவன்… “உன்னைவிட்டு சத்தியமா முடியாது லட்டு” என்று தழுதழுத்தான்.
“ஹேய் அத்து… உன்னோடதான் இருப்பேன். செத்துப்போனாலும் ஆவியா உன்னை சுத்தி வருவேன். இருட்டுல கூட உன் நிழலா இருப்பேன்… ஓகேவா” என்று அவள் சொல்ல சமரின் அணைப்பு இன்னும் கூடியது.
“பேச்சுக்கு கூட இப்படி இனி சொல்லாத மகி” என்ற சமர், “ஷ்ஷ்…” என்ற மகியின் சத்தத்தில் தான் தன் இறுக்கத்தை உணர்ந்து தளர்ந்தான்.
“சாரிடா… நீ ரெஸ்ட் எடு. நான் டின்னர் ரெடி பண்ணிட்டு கூப்பிடுறேன்” என்ற கணவனை பார்த்து தன்னிரு கரங்களை விரித்தாள்.
அவளின் கண்களின் அழைப்பு அவனுக்கு தடுமாற்றத்தை கொடுத்தது.
“லட்டு…”
“தூக்கு அத்து…”
“முடியாது…” என்று நகர்ந்தவனை பிடித்து இழுத்த மகி, “வேணுமே!” என்றாள்.
“இப்போ… உனக்கு ஓகேவா?” குரல் மெலிந்து வந்தது சமருக்கு.
“எனக்கு ஓகே தான். அத்துக்கு வேண்டான்னா… எனக்கும் வேண்டாம்” என சென்றவளை சடுதியில் கைகளில் அள்ளிக்கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்து, தன்னவளுடன் மெத்தையில் சரிந்திருந்தான்.
தன்னுடைய மொத்த பயம், கவலை, வருத்தம் என அனைத்து உணர்வுகளையும் தன் உயிரான கணவனிடம் இறக்கி வைத்து களைத்து அவனுள் கலந்து விலகியவளின் கரம் மட்டும் அவனது புஜத்தை அழுந்த பற்றியிருந்தது.
“என்னவாம் லட்டு குட்டி செமயா பெர்ஃபார்ம் பண்றாங்க.” சமர் அவளின் கழுத்தில் முகம் புதைத்து மீசையால் குறுகுறுப்பு உண்டாக்கிட, அவனது கரங்களில் மீனாய் துள்ளி குதித்து துவண்டு மீண்டும் தன்னுள் மூழகத் துடித்தவனை கரை சேர்த்திருந்தாள்.
“லவ் யூ அத்து” என்று இறுக்கி அணைத்துக் கொண்டு படுத்தவள், “இந்த வீக் எண்ட் கிளம்புறேன் அத்து” என்றாள்.
“ம்ம்…” சுரத்தின்றி ம் கொட்டியவன், அவளிலிருந்து பிரிந்து எழுந்தான்.
மகியின் நெற்றியில் முத்தம் வைத்து குளியலறை நுழைந்தவன் ஷவருக்கு அடியில் சென்று நிற்க, கணவனின் தோள் இடுக்கில் கையிட்டு பின்னிருந்து கட்டிக்கொண்டவளின் கன்னம் சமரின் ஈர முதுகில் வெம்மையை பரப்பியது.
இரு தேகம் ஒன்றாய் தீப்பிடிக்க, நீரினை திறந்திருந்தான் சமர்.
நீருக்கடியில் இருவரும் ஒருவரில் ஒருவர் கட்டுண்டு நீண்ட நேரம் நின்றிருந்தனர்.
முதல் பிரிவை எதிர்கொள்ளும் தவிப்பு இருவரிடமும்.
“பத்திரமா இருக்கணும் அத்து” என்று முதுகில் இதழ் பதித்தவளை இழுத்து முன் நிறுத்தி இரு உள்ளங்கையில் கன்னம் தாங்கிய சமர், வன்மையாய் இதழ் சுவை பருகினான்.
“கண்டிப்பா போகணுமா லட்டு?”
“ம்ம்…” என்றவள், தூவாலை எடுத்து சுற்றியவளாக வெளியேறினாள்.
சில நிமிடங்களில் சமர் வர, தூவாலை சுற்றிய உடலோடு, பாதி ஈரத்தோடு அப்படியே அமர்ந்திருந்தாள்.
“என்ன லட்டு ஈரத்தோடு உட்கார்ந்திருக்க” என்ற சமர் மற்றொரு துண்டை எடுத்து நீர் சொட்டும் அவளின் கூந்தலை துடைத்து, ஹீட்டர் காண்பித்து ஆரவிட்டான்.
“எதும் மறைக்கிறியா மகி?”
“இல்லையே.”
சமரின் பார்வை வீச்சில் தடுமாற்றமாக மொழிந்தவள், வேகமாக ஆடை அணிந்து கிச்சன் சென்றாள்.
“எதும் சமைக்க வேண்டாம் லட்டு. ஆர்டர் பண்ணிக்கலாம்” என்ற சமரின் குரலில் கூடம் வந்து இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
அறையின் கதவு திறந்திருக்க, சமரின் அரவம் உணர்ந்த போதும் வேறொன்றும் தன்னை கவனிப்பதை உணர்ந்தாள் மகி.
தன்னை ஒட்டி உரசி அமர்ந்திருப்பது தோள் சூட்டில் அறிந்தாள்.
“எதுக்கு இப்படி தொல்லை பண்ற? யார் நீ?” முன்பிருந்த பயம் தற்போது மகியிடம் இல்லை. இதைவிட பயம் கொள்ளும் காட்சி இனி பார்ப்பதற்கு இல்லை என்கிற திடம் வந்துவிட்டிருந்தது.
“நான் கூப்பிட்டப்பவே நீ வந்திருந்தால், நான் உன்னைத்தேடி வந்திருக்க்கமாட்டேன்” என்றது அரரூபம்.
“நீ என்னை கூப்பிட்டியா? யார் நீ?”
“நீ எங்க போகனும் நினைக்கிறியோ அங்க போ… உனக்கே தெரியும்” என்ற அரூபம், “எனக்கு ஒரே வருத்தம் தான். இந்த வருத்தம் கூட உன் மேல உயிரே வச்சிருக்கவனிடமிருந்து உன்னை பிரித்து கூட்டிப்போறேன்” என்று உச்சுக் கொட்டியது.
“என்ன சொல்ற நீ?” மகியின் கண்கள் வெளுத்து விரிந்தது.
“போற இடத்தில் உனக்கு என்னவும் ஆகும். அதைத்தான் சொல்றேன். அதுக்காக உன்னை போகாத சொல்லமாட்டேன். எனக்கு உன் மூலமாகத்தான் பதில் கிடைக்கும். என் சாவுக்கு பதில் எனக்கு வேணும். கண்டிப்பா நீ போகனும்” என்ற அரூபம், சமரின் வருகை உணர்ந்து மாயமானது.
“ஆர்டர் பண்ணிட்டியா லட்டு?”
“ஹான்… அத்து… என்னது?” அப்பட்டமாக அவளிடம் பதட்டம் தென்பட்டது.
“யாரோட பேசிட்டு இருந்த?” சமர் அவளை இடித்துக்கொண்டு அமர்ந்தான்.
மகி சமரின் தோள் சாய்ந்தாள்.
“கால்…” என தன்னுடைய அலைபேசியை காண்பித்தாள்.
“ம்ம்… செம பசி” என தானே அலைபேசியை எடுத்து உணவினை ஆர்டர் செய்த சமர்…
“நான் அப்போவே வேணாம் சொன்னேன். இப்போ பாரு ரொம்பவே டயர்டா தெறியுற” என அவளின் நெற்றியில் தவழ்ந்த முடி கற்றயை ஒதுக்கி முத்தம் வைத்தான்.
“டயர்ட்லாம் இல்லை…” என்று இன்னும் ஒட்டி அவனோட ஒண்டினாள்.
“தைரியமா இருந்திடுவியா அத்து?”
“தெரியலடி…” வேறென்ன அவனால் சொல்லிட முடியும். மன சிகிச்சை எடுத்தும் பலனில்லையே. அவனால் முடியாத ஒன்றாக அவனை படுத்தி வைக்கிறது.
“நீ இருப்பியா?” சமர் கேட்டிட,
“இருக்கணும் அத்து. நீயும் நானில்லாமா… யாரு துணையும் இல்லாம இருக்க பழகு” என்றாள்.
அவளையும் அவள் சொல்லியதையும் ஆச்சரியமாக பார்த்தான் சமர்.
“என்னடா?”
“எனக்கு சரியாகலன்னாலும் பரவாயில்லை… நான் எப்பவும் கூடவே இருக்கேன்னு சொல்ற என் லட்டு நீயில்லை” என்றான்.
“அத்து…”
“புரியுது… பட் புதுசா இருக்கா. ஒரு மாதிரி ஆகுது” என்ற சமர் அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.
“நானும் இல்லை. அம்மா, அப்பா நீதான் பார்த்துக்கணும் அத்து. அவங்களுக்கு நம்மைவிட்டா யாருமில்லை” அவனின் சிகைக்குள் விரல் நுழைத்து வருடியவளாக மொழிந்தாள்.
“கண்டிப்பா நல்லா பார்த்துப்பேன். பார்த்துக்கணும்” என்றான்.
அடுத்தடுத்து நேரம் சென்று… நாட்களும் நகர இன்னும் சில நிமிடங்களில் மகி அங்கு புறப்பட இருக்கிறாள்.
நேரம் நெருங்க நெருங்க சமரால் உள்ளுக்குள் எழும் படபடப்பை சரிசெய்திட முடியவில்லை.
மகியின் பின்னாலே சுற்றிக் கொண்டிருந்தான்.
“அம்மா, அப்பா இருக்காங்க அத்து. தள்ளி இரு.” மகி தான் அவனை விலக்கி நிறுத்தினாள்.
“உனக்கு துணையா நானிருக்கேன். சமர் உன்மேல வச்சிருக்கும் அன்புக்காகவாவது உனக்கு எதும் ஆகாமல் நான் பார்த்துக்கிறேன். சமரை தைரியமா இருக்க சொல்லிட்டு கிளம்பு” என்றது அரூபம். மகியின் செவிகளில் மட்டுமே ஒலித்தது.
‘பாலுக்கு பூனை காவலா?’ மகிக்கு அக்கணம் இதுதான் தோன்றியது. பின்னே மகியை அந்தளவிற்கு அரூபம் பயம் காட்டியிருந்ததே!
சமரின் கையில் ரெக்கார்டரை கொடுத்த மகி… “பீ ஸ்ட்ராங் அத்து” என அவனை அணைத்து விடுத்தாள்.
வினைதீர்த்தான் கூட வேண்டாமென சொல்லி பார்த்திருக்க மகி போவதென்று உறுதியாக கிளம்பிவிட்டாள். அவளுக்கு தன் நண்பர்களுக்கு என்னவானது என்று தெரிய வேண்டும். அத்தோடு தன் பின்னால் நிழல் போல் சுற்றும் அரூபம் யாரென்று அறிந்திட வேண்டும். இவை அங்கு சென்றால் தான் முடியும் என்பதால் ஆபத்தென அறிந்தும் புறப்படுகிறாள்.
சமருடன் தங்குவதற்கு சீனு தனது உடமைகளுடன் வர, அவன் பின்னால் தினேஷ் வந்தான்.
“என்னடா நீ?” மகி கேட்க, “நானும் வரேன் மகி” என்ற தினேஷ் “ஆபத்து” என்று ஆரம்பிக்க… “தொழில் ரகசியம் பொதுவாக பேசக்கூடாது தினேஷ்” என சீனுவுடன் பேசிக் கொண்டிருந்தாலும் தன்னையே பார்த்திருக்கும் சமரை கண் காண்பித்தாள்.
“அப்போ எங்க போறோம் சொல்லலையா நீ?” தினேஷ் அதிர்வாகக் கேட்டான்.
“ரொம்ப இண்டீரியரா ஒரு மலைகிராமம் போறேன்னு மட்டும் சொன்னேன்” என்றாள்.
“அதோட சமர் எதுவும் கேட்காம விட்டுட்டானா?”
“இதுக்கு மேல சொல்ல முடியாது. ஜாப் பிரைவசி சொல்லிட்டேன்” என்றாள்.
தினேஷ் சமரை பாவமாக பார்த்தான்.
தினேஷிற்கு அங்கு செல்ல அத்தனை பயம். இருப்பினும், போன நண்பர்களுக்காகவும், போகப்போகும் தோழிக்காகவும் அவனும் அங்கு செல்ல முடிவு செய்துவிட்டான்.
மகியை தனியாக அழைத்து வந்த சமர்…
“கவனமா இருக்கணும் லட்டு” என அவளின் பாதுகாப்பு குறித்து ஆயிரம் அறிவுரை வழங்கி, “தினமும் கால் பண்ணனும்” என்றிட,
“அங்க சிக்னல் கிடைக்காது சொன்னாங்க அத்து” என்றாள். உண்மை நிலவரம் தெரியாது தன்னுடைய அழைப்பிற்காக அவன் காத்திருக்க கூடாதென அவ்வாறு கூறினாள்.
“அதெல்லாம் தெரியாது. என்கிட்ட பேசிடனும் நீ” என்று பிடிவாதமாகக் கூறினான்.
“ம்ம்…” தலையை எல்லா பக்கமும் ஆட்டினாள்.
“டீப் வில்லேஜ் ஏரியா சொல்ற… தேவையான முக்கிய தின்க்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டியா?” எனக் கேட்டு அவளின் கையில் தன்னுடைய கையிலிருந்த காப்பினை கழட்டி மாட்டிவிட்டான்.
“எல்லாம் எடுத்துக்கிட்டேன் அத்து” என்று மகி சொல்ல… சமர் அவளின் காதில் முணுமுணுத்தான்.
“அச்சோ அத்து” என்றவளுக்கே அப்போது தான் ஒன்று நினைவு வந்தது. சந்தேகமின்றி இருக்க வாய்ப்பிருக்கிறது எனும் நம்பிக்கையும். ஆனால் இப்போது சமரிடம் சொன்னால் பயணம் தடைபட்டுவிடும். கண்டிப்பாக அனுப்பிட மாட்டானென்று மனதில் மறைத்துக் கொண்டாள்.
கணவனிடம் மறைக்கக் கூடாத விடயத்தை மறைக்கின்றோமே என்று கண்களில் நீரும், உதட்டில் புன்னகையுமாக சமரை அணைத்து நின்றவள்… சடுதியில் விலகி அனைவரிடமும் சொல்லிவிட்டு தினேஷ் உடன் புறபட்டிருந்தாள்.
அன்று தான் சமர் தன்னவளை இறுதியாக பார்த்தது.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
