முகவரி 4

சில்லென்ற கடல் காற்றும், படகின் லேசான அசைவும் அவர்களுக்கு இதமாக இருந்தது. அப்போது அவர்களிலேயே வயதில் மூத்தவரான கந்தன், சுதாகரின் பக்கம் திரும்பி, “ஏன் சுதா… கமலிய காலேஜுக்குக் கூட்டிட்டுப் போனியே, விஷயம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதாப்பா?” என்று விசாரித்தார்.

“எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சு சித்தப்பா… வெறும் பொம்பளப் பிள்ளைங்க மட்டும் படிக்கிற காலேஜ் தான். காலேஜ் வளாகத்துக்குள்ளேயே ஹாஸ்டல் வசதியும் இருக்கு. ரொம்பப் பாதுகாப்பு,” என்றார் சுதாகர் மனநிறைவோடு.

அதைக் கேட்ட கந்தன் தலையசைத்து, “ரொம்ப நல்லது சுதா! நம்ம காலத்துல தான் படிப்பறிவு இல்லாம இப்படியே கடலுக்குள்ளேயே வாழ்க்கையைக் கழிச்சுட்டோம். நம்ம பிள்ளைங்க காலத்துலயாவது நாலு எழுத்தைப் படிச்சு பெரிய ஆளா வரட்டும். அது நம்ம சாதி சனத்துக்கும், சொந்த பந்தத்துக்கும் பெருமைதானே!” என்று நெகிழ்ச்சியோடு சொன்னார்.

“ஆமா சித்தப்பா… நீங்க சொல்றது மறுக்க முடியாத உண்மை,” என்றார் சுதாகர்.

“சரி, பெரியவன் எப்ப ஊருக்கு வரானாம்?” என்று கந்தன் அடுத்த கேள்வியைக் கேட்க…

“அவன் எப்படியும் இந்த மாசம் கடைசியில வந்துடுவேன்னு சொல்லியிருக்கான் சித்தப்பா. அவன் வந்த பிறகு, கையோடு அவனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணத்தை முடிச்சுரணும்,” என்றார் சுதாகர்.

அதைக் கேட்ட கந்தன், “கண்டிப்பா முடிச்சிரலாம்… நல்ல பொண்ணா அமையட்டும்,” எல்லாம் அந்த காளியாத்தா புண்ணியம் என்றார். 

இப்படியே ஊர் விஷயங்கள், குடும்பக் கதைகள் எனப் பேசிக்கொண்டே இருக்க, அலைகளின் ஓசைக்கு இடையே நேரமும் வேகமாக நகர்ந்து சென்றது.

தன் பைக்கில் ஏறி டவுனுக்கு வந்த பரமு, நேராக ஆட்டுக்கறி வெட்டும் கடைக்குச் சென்றார்.

“பாய்! நல்ல கறியா ஒரு ரெண்டு கிலோ வெட்டிக் கொடுங்க,” என்றார்.

கறியை வெட்டிக்கொண்டிருந்த பாய், சிரித்துக்கொண்டே, “என்னங்க பரமு அண்ணே! நாளு கிழமை இல்லாம விதவிதமா மீன் சாப்பிடுற ஆளு, இன்னைக்குத் திடீர்னு ஆட்டுக்கறிக் கடைக்கு வந்திருக்கீங்க?” என்று கிண்டலாகக் கேட்டார்.

“அது ஒன்னும் இல்ல பாய்… மவன் படிப்பு முடிச்சுட்டு ஊர்ல இருந்து வந்திருக்கான். அவனுக்கு அங்க பெங்களூர் ஹாஸ்டல் சாப்பாட்டைச் சாப்பிட்டு நாக்கே செத்துப் போயிருக்கும்! அதுக்குத்தான் எடுக்க வந்தேன். இல்லனா நம்ம வீட்ல கவிச்சி (மீன்/கருவாடு) இல்லாத நாள் ஏது? பச்சைத் தண்ணியைக் குடிச்சாக்கூடக் கருவாட்டைப் பார்த்தாதான் எங்களுக்கு வயித்துல சோறே இறங்கும்!” என்று பரமு கலகலவெனச் சிரித்தார்.

“கொடுத்து வச்சவர் அண்ணே நீங்க! தினம்தினம் விதவிதமான மீனு, கருவாடுன்னு திங்குறீங்க…” என்று பாய் சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்ல…

“ஏய்யா! உனக்கு என்ன நான் கொண்டு வந்து கொடுக்கவே இல்லையா?” என்று பரமு உடனே எகிறினார்.

“அட சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன் அண்ணே!” என்று சிரித்த பாய், ‘உடனே இவருக்கு ரோஷம் மூக்குல பொத்துக்கிட்டு வந்துருமே’ என்று மனதிற்குள் நினைத்தபடி, பரமு கேட்டதை விடக் கறியைக் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே வெட்டிப் போட்டுப் பொட்டலம் கட்டிக் கொடுத்தார். பரமுவும் அதற்குரிய காசைக் கொடுத்துவிட்டு, சமையலுக்குத் தேவையான மற்ற மளிகைப் பொருட்களையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

ஆதவனும் அவனது மாமன் பையன் அருணும் மெல்ல நடந்து தெரு வழியாக வெளியே வந்தனர்.

அரை மணி நேர நடைபயணத்திற்குப் பிறகு, இருவரும் கடற்கரையை வந்து சேர்ந்தனர். அங்கே நீல நிறக் கடல் அமைதியாக அலைமோதிக் கொண்டிருந்தது. அதன் ஓரத்தில் நீண்ட சவுக்குத் தோப்பு அடர்த்தியாகக் காட்சி அளித்தது. சில இடங்களில் மீனவர்கள் நின்றுகொண்டு தங்கள் வலைகளைச் சரி பண்ணிக் கொண்டிருப்பது தெரிந்தது.

நண்பர்கள் இருவரும் கடலோரமாக நடந்து போய், அங்கிருந்த ஒரு பழைய கட்டுமரத்தில் போய் உட்கார்ந்தனர்.

அருணோ ஆதவனைப் பார்த்துச் சீரியஸாக, “சொல்லு மாப்பிள்ளை… என்ன விஷயம்? ஏதாச்சும் பிரச்சனையா? மூணு மாசமா என் உயிரை வாங்குறியே!” என்று கேட்டான்.

“எனக்கு இதை எப்படிச் சொல்றதுன்னே தெரியலடா அருண்…” என்று தயங்கிய ஆதவன், தன் மனதிற்குள் பூட்டி வைத்திருந்த அந்த விசித்திரமான ரகசியத்தை நண்பனிடம் சொல்லத் தொடங்கினான்.

“நாலு மாதங்களுக்கு முன்னாடி… வழக்கம்போல ஹாஸ்டல்ல சாப்பிட்டுட்டு ராத்திரி தூங்கப் போனேன்டா. நல்ல நடுராத்திரி இருக்கும்… திடீர்னு ஒரு கனவு!

அந்தக் கனவுல… கால்கள்ல தண்டைக் கால் கொலுசு, மூக்குல மயில் வடிவ மூக்குத்தி, ஒரு பக்கமாய் அள்ளி முடிச்ச கூந்தல்ல வாசனை பிச்சிப்பூ, இடுப்புல இருந்து கால் வரைக்கும் கொஞ்சம் ஏத்திக் கட்டின சேலை… இடுப்பில் ஒரு மண்குடத்தைத் தூக்கிக்கிட்டு ஒரு பொண்ணு அந்தப் பாதையில நடந்து வர்றா.

அப்போ எதிரே வேகமாக யாரோ வர, எதிர்பாராம இடிச்சுடுறாங்க! அந்த அதிர்ச்சியில மண்குடத்தோடு பக்கத்துல இருந்த சேற்றுல விழுந்துடுறா! அவளுக்குப் பின்னாடி வந்த அவளோட தோழி பதறிப்போய், ‘ஏய் முத்தழகு… என்னடி ஆச்சு?’ அப்படின்னு கூப்பிடுறா…”

“அந்த பொண்ணு வந்து அவ கையப் பிடிச்சு தூக்கும் போது… அவளோட பின் முதுகில வலது பக்கத்துல ஒரு பெரிய மச்சம் இருக்குடா! அதை பார்த்த அடுத்த கணமே நான் டக்குனு முழிச்சுக்கிட்டேன்…” என்று ஆதவன் சொல்லச் சொல்ல, அவன் குரலில் ஒருவித அதிர்வும் தவிப்பும் தென்பட்டது.

“அன்னைக்கு ராத்திரியில இருந்து எனக்கு ஒரே சிந்தனைதான்டா… யாரு அந்த முத்தழகு? அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இப்பெல்லாம் நான் கண்ணை மூடினாலே அந்தத் தண்டைக் கால் கொலுசோட சத்தமும், தலையில இருக்க பிச்சிப்பூ வாசனையும், அவளோட அந்தப் பின்புறத் தோற்றமும் தான் கண்ணு முன்னாடி வந்து வந்து போகுது. என்னால இதிலிருந்து மீண்டு வரலைடா…”

இதை அனைத்தையும் கேட்ட அருணுக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை!

எப்போதும் அமைதியாகவும், தெளிவான சிந்தனையோடும் இருக்கும் தன் அத்தை மகனா இப்படி ஒரு கனவைப் பிடித்துக்கொண்டு தவிக்கிறான் என்று அவனால் நம்பவே முடியவில்லை.

அருண் சற்று நேர அமைதிக்குப் பிறகு, ஆதவனின் தோளைப் பிடித்து குலுக்கி, “டேய் ஆது… என்னடா சொல்ற? வெறும் கனவுதானேடா இது? பெங்களூர்ல படிச்சுகிட்டு இருந்தப்ப ஏதாச்சும் வரலாற்றுப் படமோ இல்ல நாவலோ படிச்சியா? அதோட தாக்கம் ஏதாச்சும் மனசுக்குள்ள உட்கார்ந்திருக்கும்டா. அதுக்காக ஒரு கனவை வச்சுக்கிட்டு மூணு மாசமா இப்படி உயிரை விட்டுக்கிட்டு இருப்பியா?” என்று புரியாமல் கேட்டான்.

“இல்ல மச்சி… இது ஏதோ சாதாரணக் கனவு இல்லடா! என்னால உணர்ந்து சொல்ல முடியுது… அந்தப் பொண்ணு எங்கேயோ உயிரோடு தான் வாழுறாள், இல்லனா இது ஏதோ போன பிறவியோட தொடர்பா இருக்கணும். இதைத் தேடாம என்னால நிம்மதியா இருக்க முடியாது,” என்றான் ஆதவன் சற்று அழுத்தமாக.

அருண் தன் தலையில் கை வைத்துக்கொண்டு, தன் நண்பனின் ஆழமான தேடலையும், அவன் முகத்திலிருந்த தீவிரத்தையும் பார்த்து பிரமித்துப்போய் நின்றான்.

இனி அவளை தேடுவது தான் என் வேலை என்ற ஆதவன் தூரத்து அலைகளை வெறிக்க பார்க்க, கடந்த நான்கு மாதங்களாக ஒரு கனவைப் பிடித்துக்கொண்டு தனது நண்பன் இப்படியெல்லாம் தீவிரமாக யோசிப்பதை பார்த்த அருணுக்குப் பயமே வந்துவிட்டது. 

‘இவனை இப்படியே விட்டா சரிப்பட்டு வராது… இது நல்லதுக்கு இல்ல!’ என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டவன், சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவன் ஆதவனைப் பார்த்து, “ஏன் மச்சி… நீ அந்த படம் பார்த்தியா?” என்று திடீரெனக் கேட்டான்.

ஆதவனோ புரியாமல், “எந்த படம்டா?” என்றான்.

“அதான்டா, ‘பொன்னியின் செல்வன்’ படம்!”

“ஆமா பார்த்தேனே…”

“அதுல உனக்கு எந்த கேரக்டர் ரொம்ப பிடிச்சிருந்தது?” என்று அருண் கேட்க…

ஆதவனோ லேசாகச் சிரித்துக்கொண்டே, “ம்ம்ம்… அந்த குந்தவை கேரக்டர் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது,” என்றான்.

“அதேதான்டா! சரி, உனக்கு எப்போ அந்த கனவு முதன்முதலா வந்ததுன்னு அந்த டேட் ஞாபகம் இருக்கா?” என்று அடுத்த கேள்வியை அருண் கேட்கவும், ஆதவனும் ஒரு குறிப்பிட்ட தேதியைச் சொன்னான்.

அருண் தன் விரல்களை மடித்துக் கணக்குப் போட்டுவிட்டு, “சரி, நீ அந்த ‘பொன்னியின் செல்வன்’ படம் பார்த்த டேட் ஞாபகம் இருக்காடா?” என்று அவனைக் யோசிக்க வைத்தான்.

ஏன்டா இப்படினு ஆதவன் முறைக்க, நீ பதில் சொல்லு பக்கி என்கவும், அவனும் யோசித்துப்பார்த்துவிட்டு, “ஆமாடா… அன்னைக்குத்தான் நாங்க காலேஜ் ஹாஸ்டலுக்குத் தெரியாம செகண்ட் ஷோ படம் பார்த்துட்டு வந்து அப்படியே படுத்துத் தூங்கினோம்,” என்றான்.

அவ்வளவுதான்! அருணுக்கு விஷயம் பொட்டில் அடித்தாற்போல புரிந்துவிட்டது.

“ஹப்பாடா! முடிஞ்சுதுடா உன் ரகசியம்! டேய் லூசு மச்சி… அன்னைக்கு ராத்திரி நீ படம் பார்த்துட்டு வந்து தூங்கிருக்க. அந்தப் படத்துல அந்த கடல்கரை மீனவப் பொண்ணு ‘பூங்குழலி’ வருவாளே… அவ்வளவுதான்!”

“அவளைப் பார்த்து நல்லா சைட் அடிச்சிருக்க. அன்னைக்கு அடிச்ச சைட் தான் இன்னைக்கு வரைக்கும் உன் மனசுக்குள்ள ‘முத்தழகு’, ‘ஒத்தழகு’ன்னு உருவெடுத்து என் உயிரை வாங்கித் தொலையுது! சீ… எந்திரிச்சு வாடா, வீட்டுக்கு போகலாம்!” என்றபடி தன் அத்தை மகனை இழுத்துக் கொண்டு மீண்டும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அருண். 

ஆதவனோ தன் தலையைக் கோதியபடி, ‘ஒருவேளை அருண் சொல்றதும் கரெக்ட்டோ?’ என்ற குழப்பத்தோடு அவன் பின்னாலேயே நடந்தான்.

வீட்டை நோக்கி அவர்கள் இருவரும் நடந்து வரும் வழியில், எதிரே வந்த தெரிந்தவர்கள் அனைவரும் ஆதவனைப் பார்த்து, “என்னப்பா ஆது, எப்ப வந்த? படிப்பெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?” என்று அன்போடு நலம் விசாரித்தனர். 

ஆதவனும் சிரித்த முகத்தோடு அவர்களுக்குப் பதில் சொல்லிவிட்டு நலம் விசாரித்தபடி முன்னால் நடந்தான்.

தெருமுனைக்கு வந்து சேர்ந்ததும் “சரி மச்சி, நான் கிளம்புறேன். சாயந்திரம் வர்றேன்… அம்மாச்சி கிட்டயும் அத்தை கிட்டயும் சொல்லிடு,” என்றான்.

“ஓகேடா,” என்ற அருண் இடது பக்கமாக இருக்கும் தன் வீட்டை நோக்கிச் சென்றான்.

ஆதவன் மெயின் ரோட்டிலிருந்து சிறிது தூரம் நடந்து வந்து, வலது பக்கமாக இருக்கும் தன் வீட்டைப் பார்த்து நடந்தவனுக்கு, வழி நெடுக அவன் மனதுக்குள் அருண் சொன்ன விஷயமே ஓடிக்கொண்டிருந்தது.

‘ஆமாம்… அருண் சொல்றதும் கரெக்ட் தான். நாம அன்னைக்கு செகண்ட் ஷோ பொன்னியின் செல்வன் படம் பார்த்துட்டு வந்துதானே தூங்கினோம்? அந்த பூங்குழலி கேரக்டரைப் பார்த்த தாக்கம் தான் நமக்கு இப்படிப் மனசுக்குள்ள கனவா வந்து முத்தழகுன்னு குழப்பிருக்கு. அருண் சொன்னது போல தான் நடந்திருக்கும்’ என்று தனக்குத்தானே ஒரு தெளிவுக்கு வந்தான்.

‘இனிமே இந்த வீணான கனவை நினைச்சு மனசைக் குழப்பிக்கவே கூடாதுடா ஆதவா!’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு

வீட்டிற்குள் நுழைந்தவன், அங்கே கண்ட காட்சியைக் கண்டு வியந்து நின்றான்!

பரமு சமையலறை வாசலில் உட்கார்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருக்க, சீதா அவரிடம் ஏதோ சொல்லி அதட்டிக் கொண்டிருந்தாள். 

தன் கம்பீரமான தந்தை, தாய்க்கு முன்னால் அமைதியாகச் சமையல் வேலைக்கு உதவி செய்வதைப் பார்த்த ஆதவன், “அடடா…சிங்கத்தையே இப்படிச் சாய்த்து வேலை வாங்க வச்சுட்டியேம்மா!” என்றபடி ஆதவன் சத்தமாக சிரித்தான். 

தேடல் தொடரும்…. 

 

 

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top