முகவரி 8

“என்ன… பயத்துல கை எல்லாம் நடுங்குது?, ஒன்னும் பெரிய ரேக்கிங் எல்லாம் இல்ல… ஆளுக்கு ஒரு டேலன்ட்டைக் காட்டுங்க பார்ப்போம்!” என்று சீனியர் அக்கா ஒருத்தி சொல்ல…

செல்வராணி தயக்கமே இல்லாமல் ஒரு சினிமா பாட்டைப் பாடத் தொடங்கினாள். ரூபஸ்ரீ ஒரு டயலாக்கைப் பேசி நடித்தாள். நந்தினி கவிதை சொல்ல… கடைசியாக கமலியின் முறை வந்தது.

கமலி சற்றே தயங்கி, தன் இனிமையான குரலில் ஒரு கிராமத்துப் நாட்டுப்புறப் பாடலைப் பாடத் தொடங்கினாள். அவளது குரலில் இருந்த தெளிவும், அந்த ராகமும் அங்கிருந்த எல்லாரையும் அசர வைத்தது!

பாடி முடித்ததும் சீனியர் மாணவிகள் அனைவரும் கைதட்டிப் பாராட்டினர். “வாவ் செம வாய்ஸ்! இனிமே காலேஜ் ஃபங்ஷன் எதுவா இருந்தாலும் நீயும் ஒரு பாட்டு பாடணும்!” என்று பாராட்டிவிட்டுச் சென்றனர்.

சீனியர்கள் சென்றதும், “ஹப்பாடா… தப்பிச்சோம்டி!” என்று நாலு பேரும் மூச்சு விட்டுக்கொண்டு சிரிக்க, கமலியின் கல்லூரி வாழ்க்கை பயமும் தயக்கமும் நீங்கி, அன்பான தோழிகளுடன் கொண்டாட்டமாக நகரத் தொடங்கியது.

 

நாட்கள் அதன் போக்கில் இயல்பாக ஓடிக்கொண்டிருந்தன. தினமும் மாலை வகுப்புகள் முடிந்ததும், ஹாஸ்டல் காம்பவுண்டில் இருக்கும் அந்த ஒரு ரூபாய் காயின் போனில் தன் வீட்டிற்குப் பேச ஒருநாளும் தவறவே மாட்டாள்.

அம்மாவிடம் அன்றைய கல்லூரி விஷயங்களைச் சொல்வதும், அப்பாவிடம் செல்லமாகக் கொஞ்சுவதுமாக அவளது மாலை பொழுதுகள் கழியும்.

வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10:00 மணியிலிருந்து இரவு 10:00 மணி வரை மாணவிகளுக்கு ஹாஸ்டல் உள்ளே இருக்கும் போனில் இன்கமிங் கால் பேச அனுமதி உண்டு. அதனால் அந்த நாட்களில் வெளிநாட்டிலிருக்கும் கதிர் தனது தங்கைக்கு கால் பண்ணி நலம் விசாரிப்பான். 

இப்படியே ஒரு மாதம் கடந்துவிட்டது…

அவள் கல்லூரிக்கு வந்த பிறகு வரப்போகும் முதல் ‘இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை’ அது!

சனிக்கிழமை இரவிலிருந்தே ஹாஸ்டல் மாணவிகளிடம் ஒரே பரபரப்பு. ஞாயிறு காலையிலேயே கமலி உட்பட அனைத்து மாணவிகளும் தங்கள் பெற்றோரை வரவேற்பதற்காகப் புது ஆடைகள் அணிந்து, ஆவலோடு காத்துக்கொண்டிருந்தனர்.

காலை 8:00 மணியிலிருந்தே ஹாஸ்டல் வரவேற்பறையில் இருக்கும் மைக் சத்தமிட்டுக்கொண்டே இருந்தது.

“அட்டென்ஷன் ப்ளீஸ்… செகண்ட் இயர் ஷாலினியோட பேரண்ட்ஸ் வந்திருக்காங்க…”

“ஃபர்ஸ்ட் இயர் திவ்யா… உங்களை பார்க்க உங்க ஃபேமிலி கேட்ல வெயிட் பண்றாங்க…”

ஒவ்வொரு மாணவியின் பெயராக அனௌன்ஸ் பண்ணப்பண்ண, அவர்கள் ஓடிப்போய் தன் பெற்றோரைக் கட்டிப்பிடித்து மகிழ்வதைப் பார்த்து கமலியின் மனதுக்குள் படபடப்பு கூடிக்கொண்டே இருந்தது.

மணி 10:00 தாண்டியது… 11:00 ஆச்சு… 12:00 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது!

சுற்றிலும் இருந்த பெரும்பாலான தோழிகளின் பெற்றோர் வந்துவிட்டனர். ஆனால், கமலியின் பெயர் மட்டும் மைக்கில் கூப்பிடப்படவே இல்லை.

‘ஒருவேளை ஊர்ல ஏதாச்சும் வேலையா? அப்பாவுக்கு உடம்புக்கு எதுவும் முடியலையா? ஏன் இன்னும் வரல… நம்மள பார்க்க வரமாட்டாங்களோ?’ என்று நினைக்க நினைக்க கமலியின் கண்களில் நீர் முட்டியது. உதட்டைப் பிதுக்கிக்கொண்டு, தன் அறையின் ஜன்னல் வழியே வாசலையே பார்த்து அழுதுகொண்டே நின்றிருந்தாள்.

அப்போது, ஹாஸ்டலின் படிக்கட்டுகளில் வேகவேகமாகக் குதித்து ஓடிவந்தாள் அவளது தோழி நந்தினி!

நேராக கமலியின் அறைக்குள் நுழைந்த நந்தினி, “ஹே ஆர்கலி! இங்கு என்னடி பண்ணிட்டு இருக்க? உங்க அப்பா, அம்மா வந்துட்டாங்கடி! வா சீக்கிரம்!” என்று மூச்சு வாங்கக் கத்தினாள்.

அதைக் கேட்டவளோ தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, ஆச்சரியத்துடன், “என்னடி சொல்ற? ஆனா மைக்கில் இன்னும் என்னோட பேரை கூப்பிடவே இல்லையேடி?” என்றாள் சந்தேகமாக.

“அட, அந்த மைக்ல அனௌன்ஸ் பண்றதுக்குள்ள நான் பார்த்ததை உன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு ஓடி வந்தேன்டி! கீழ கேட் கிட்ட எங்க அப்பா அம்மா கூடத்தான் உங்க அப்பாவும் அம்மாவும் பேசிட்டு இருக்காங்க…வா வா… சீக்கிரம்!” என்று நந்தினி அவள் கையைப் பிடித்து இழுத்தாள்.

தோழி சொன்னதைக் கேட்டவள் ‘அப்பா… அம்மா வந்துட்டாங்க!’ என்ற சந்தோஷத்தில் முகம் சட்டென்று பிரகாசமாக மாறியது. வழியும் கண்ணீரைத் துடைத்துவிட்டு, தன் பெற்றோரைப் பார்க்க கீழே ஓடோடிச் சென்றாள் கமலி.

அங்கே மெயின் கேட் அருகே, கையில் பெரிய பைகளோடு சுதாகரும் கலையும் ஆவலோடு நின்றுகொண்டிருந்தனர்.

ஒரு மாதத்திற்குப் பிறகு தன் பெற்றோரைக் கண்டதும் கமலிக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. “அப்பா… அம்மா…” என்று கத்திக்கொண்டே ஓடிச்சென்று கலையைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

“ஆத்தா… என் செல்லப் பொண்ணு!” என்று கலையும் மகளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள்.

சுதாகர் மகளின் தலையைக் கோதி, “என்னடா ஆத்தா… கண்ணெல்லாம் சிவந்திருக்கு? அப்பா அம்மா வரலையேன்னு அழுதுட்டியா?” என்று செல்லமாகக் கேட்டவாறே அவளது நெற்றியில் முத்தமிட்டார்.

“பின்ன இல்லாம… மணி பன்னிரண்டு ஆகப் போகுதுப்பா. எல்லாரோட அப்பா அம்மாவும் காலைலயே வந்துட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் இன்னும் வரலையேன்னு எனக்குப் பயமே வந்துடுச்சு!” என்று கமலி தந்தையின் தோளில் சாய்ந்து செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.

சுதாகர் சிரித்துக்கொண்டே, “நம்ம ஊர்ல இருந்து வர்ற பஸ் நடுவழியில கொஞ்சம் பஞ்சர் ஆயிடுச்சுடா கண்ணு… அதான் தாமதம். அதுமட்டுமில்லாம, என் பொண்ணுக்குப் பிடிச்ச வஞ்சிர மீன் வறுவலும், நல்ல காரசாரமான நெத்திலி மீன் குழம்பும் உன் அம்மா சமைச்சு எடுத்துட்டு வந்தோம்… அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு,” என்றார்.

பின்னர் அங்கே இருந்த மரத்தடி பெஞ்ச்சில் மூவரும் உட்கார்ந்தனர். கலை தூக்குவாளியைத் திறந்து, கொண்டுவந்திருந்த மீன் குழம்பையும், மீன் வறுவலையும் எடுத்து மகளுக்குத் தன் கையாலேயே பிசைந்து ஊட்டினாள்.

“அப்பாடா… ஒரு மாசத்துக்கு அப்புறம் அம்மா கை சாப்பாடு! ஹாஸ்டல் சாப்பாட்டைச் சாப்பிட்டு நாக்கே செத்துப் போச்சும்மா,” என்றபடி ஆசையோடு வாங்கிச் சாப்பிட்டாள்.

வயிறு முட்ட சாப்பிட்டவள், நந்தினியை அறிமுகம் பண்ண மறக்கவில்லை. நேரமும் கடக்க,இரண்டு பைகளையும் எடுத்து மகளிடம் நீட்டினர். அதில் அவளுக்குப் பிடிச்ச புது ஆடைகளும், நொறுக்குத் தீனிகளும் இருந்தன. “பத்திரமா வச்சுக்கோ ஆத்தா… உடம்ப நல்லா பார்த்துக்கோ. நல்லபடியா படி,” என்று சுதாகர் அன்போடு அறிவுறுத்தினார்.

சரி டா கிளம்புறோம் என்று அவர்கள் சென்றுவிட, ஹாஸ்டல் விதிமுறைகளின்படி அசைவ உணவுகளுக்குக் கடுமையான தடை இருந்தது! 

யாராவது வார்டனிடமோ அல்லது செக்யூரிட்டியிடமோ மாட்டிக்கொண்டால், பைன் கட்டுவதோடு கடும் எச்சரிக்கையும் வழங்கப்படும்.

அதனால், மீன் குழம்பையும் வறுவலையும், வார்டன் கண்ணில் படாதவாறு கமலி மிகச் சாமர்த்தியமாக மறைக்க தொடங்கினாள்.

துணிமணிகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் இருந்த பெரிய பைகளின் நடுவே அந்த தூக்குவாளியை வைத்து, மேலே மற்ற பார்சல்களால் நன்றாக மூடினாள்.

வார்டனைக் கடந்து செல்லும்போது இதயத் துடிப்பு எகிறினாலும், முகத்தில் எதையும் காட்டிக்காமல் இயல்பாக இருப்பது போல தன் அறைக்கு வந்து சேர்ந்தாள்.

அறைக்கு வந்ததும் அப்பாடா என்று மூச்சுவிட்டவள், இரவு உணவு நேரம் வந்ததும் ஹாஸ்டல் மெஸ்ஸுக்குச் சென்று வழக்கமான சோற்றையும் சாம்பாரையும் வாங்கிக்கொண்டு நேராக அறைக்கு வந்தாள்.

அங்கே நந்தினியும் மற்ற தோழிகளும் ஏற்கனவே தயாராகக் காத்திருந்தனர். கதவை தாழிட்டு விட்டு, கமலி மறைத்து எடுத்துவந்த தூக்குவாளியைத் திறந்ததும், அந்த அறை முழுதும் மணக்க மணக்க நெத்திலி மீன் குழம்பின் வாசனையும் வஞ்சிர வறுவலின் மணமும் தூக்கியது!

“சீக்கிரம்டி தெய்வமே!” என்று நந்தினி சொல்ல, பின்னர் மெஸ் சோற்றில் அம்மாவின் மீன் குழம்பை ஊற்றி, வறுவலைப் பங்கிட்டுச் சாப்பிட்டனர். மற்ற தோழிகளும் தங்கள் வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த பலகாரங்களையும் தொட்டுகளையும் பரிமாறிக்கொள்ள, அந்த ரகசிய இரவு விருந்து அத்தனை சுவையாகவும் மறக்க முடியாத அனுபவமாகவும் அமைந்தது.

சொன்ன நேரத்தில் முதல் ஆர்டரை நல்லபடியாக அனுப்பி வைத்து ஒரு வாரம் கடந்திருக்க, அப்போது சிங்கப்பூர் இறக்குமதி நிறுவனத்திடமிருந்து வந்த அந்தத் தொலைபேசி அழைப்பும் மின்னஞ்சலும் ஆதவனின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தன.

“திரு. ஆதவன், நீங்கள் அனுப்பிய மீன்களின் தரம், பேக்கிங் முறை, சரியான நேரத்தில் வந்து சேர்ந்த விதம் என அனைத்துமே மிகச் சிறப்பாக இருந்தது! எங்கள் வாடிக்கையாளர்கள் மிகவும் திருப்தி அடைந்துள்ளார்கள்,” என்று அந்த நிறுவனத்தின் மேலாளர் பாராட்டினார்.

அதோடு நின்றுவிடாமல், “நாங்கள் சிங்கப்பூர் மட்டுமல்லாமல் மலேசியா மற்றும் துபாயிலும் ஹோட்டல் நடத்தி வருகிறோம். எனவே, உங்களுடைய ‘ஏஏ சீஃபுட்ஸ்’ நிறுவனத்துடன் ‘பிரத்யேகப் பிசினஸ் பார்ட்னர்’  ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறோம். இதற்கான முறையான ஒப்பந்தப் பத்திரங்களை மெயிலில் அனுப்பியிருக்கிறோம். அத்துடன் உங்கள் கணக்கிற்கு முதல் ஆர்டருக்கான தொகையையும், அடுத்தடுத்த ஆர்டர்களுக்கான முன்முறைப் பணத்தையும் செலுத்திவிட்டோம்,” என்று கூறினர்.

மின்னஞ்சலைத் திறந்து பார்த்த ஆதவனுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தாங்க முடியவில்லை. ஐந்து வருட காலத்திற்கான பிரத்யேக ஏற்றுமதி ஒப்பந்தம் அது!

வேகமாக சேரில் இருந்து எழுந்து வெளியே வந்த ஆதவன் “அப்பா! நம்ம முதல் ஆர்டர் மிகப்பெரிய வெற்றியடைஞ்சிருச்சுப்பா! அதுமட்டுமில்லாம, அவங்க நம்மகூட அஞ்சு வருஷத்துக்குப் பிசினஸ் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் போடுறாங்க!” என்றான்.

பரமுவின் கண்கள் பெருமையிலும் ஆனந்தத்திலும் கலங்கியது. “கடலன்னையை நம்பி இறங்கினோம், அவ நம்ம கையை விடலடா! உன் உழைப்புக்கும் படிப்புக்கும் கிடைச்ச வெற்றி இது!” என்று மகனின் தோளைத் தட்டி தழுவிக்கொண்டார்.

அருணோ கங்கிராட்ஸ் மச்சி என்று சிரித்தபடி, “இனிமே நாம சாதாரண வியாபாரி இல்லடா… இன்டர்நேஷனல் பிசினஸ் பார்ட்னர்ஸ்!” என்று சொல்லி அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டான்.

இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடக் குடும்பத்தினர் அனைவரும் கடலோரத்தில் இருக்கும் கண்ணியம்மன் கோவிலுக்குச் சென்று நன்றிக் கடனாகச் சிறப்புப் பூஜைகள் செய்தனர்.

ஒப்பந்தத்தின்படி இனி மாதம் பல டன் மீன்கள் மற்றும் கடல் பொருட்களை அனுப்ப வேண்டியிருந்ததால், ஆதவன் தன் ஏற்றுமதிப் பணிகளை மேலும் விரிவாக்கத் திட்டமிட்டான்.

அடுத்த கட்டமாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, தூத்துக்குடி மற்றும் திருச்சி போன்ற இடங்களிலிருக்கும் மிகப்பெரிய குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் மற்றும் நவீனப் பேக்கிங் மையங்களுடன் தொடர்பு கொண்டு ஒப்பந்தம் செய்ய ஆதவனும் முடிவு செய்தான்.

நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் ஓட, முதல் செமஸ்டர் தேர்வுகள் ஒரு வழியாக முடிவடைய, லீவும் அளிக்கப்பட்டது.

எக்ஸாம் முடிந்த அன்றே தன் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு, தோழிகளிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டு ஊருக்குக் கிளம்பினாள் கமலி. 

இதுவரை அப்பா அம்மா துணையுடனோ பயணம் செய்தவளுக்கு, இப்போது தனியாக ஊருக்குச் செல்வது இதுவே முதல் முறை. அந்தப் புதிய அனுபவம் அவளுக்குள் ஒருவிதமான தயக்கத்தையும் அதேசமயம் சொல்ல முடியாத உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

திருச்சியிலிருந்து தனது ஊருக்குச் செல்ல சுமார் நான்கு மணி நேரப் பயணம். பஸ்ஸில் ஏறி ஜன்னலோர உட்கார்ந்து கொண்டாள். பஸ் புறப்படுவதற்காகக் காத்திருந்த அந்தச் சில நிமிடங்கள்கூட அவளுக்கு நீண்ட நேரமாகத் தோன்றின.

பஸ்சும் மெல்ல நகரத் தொடங்கியதும், ஜன்னல் வழியாகத் திருச்சி நகரத்தின் பரபரப்பான சாலைகளையும் கடைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். நகரத்தின் கட்டிடங்கள் பின்னோக்கி நகர, அவளது எண்ணங்கள் மட்டும் வீட்டை நோக்கி முன்னோக்கிப் பறந்தன.

இன்னும் எவ்வளவு நேரம் ஆகுமென்ற ஆவலில் ஒவ்வொரு முறையும் கையிலிருந்த வாட்சைப் பார்க்கத் தூண்டியது. வழியில் தென்பட்ட வயல்வெளிகள், மரங்கள், சிறு கிராமங்கள் என அனைத்தையும் ரசித்தபடியே பயணித்தாள்.

தனியாகப் பயணம் செய்வதில் ஆரம்பத்தில் இருந்த சிறிய பதற்றம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, அந்தப் பயணத்தை ரசிக்கத் தொடங்கியிருந்தாள்.

நான்கு மணி நேரம் என்பது மற்றவர்களுக்கு சாதாரணமான பயண நேரமாக இருக்கலாம். ஆனால், வீட்டிற்குச் செல்லும் ஆவலில் இருந்த கமலிக்கோ அந்த நான்கு மணி நேரமும் நான்கு யுகங்களாகவே கழிந்தன.

எப்போது ஊரை அடைவோம், அப்பா அம்மாவைப் பார்க்கப் போகிறோமே என்ற எண்ணங்களே அவளது மனம் முழுவதும் நிறைந்திருந்தது. 

தேடல் தொடரும்…

 

 

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top