5) மயிலாஞ்சி

மயிலாஞ்சி

 

அத்தியாயம்-5

“ஜி.. ஜி..” என தேஜஸ்வினி அதியனை எழுப்பினாள். அவன் உடம்பை முறுக்கிக் கொண்டு, கண்களை கசக்கியபடி எழுந்து அமர்ந்தான். இரவு நடந்தது மங்களாக நினைவு வந்தது. தேஜஸ்வினியை பற்றி பேசியதும் நினைவு வந்தது. அதற்கு பிறகு அவளை அணைத்துக் கொண்டு உறங்கியதெல்லாம் கனவு போல் இருந்தது. அவள் மெல்ல இதழ் விரித்து புன்னகைத்து, மோர் டம்ளரை அவன் முன் நீட்டினாள். அவன் முகத்தில் கடுமை தான் பரவி இருந்தது. அது தேஜஸ்வினிக்கு புரிந்தாலும் அவள் புன்னகை செய்துக் கொண்டிருந்தாள்.

 

“அப்படி வச்சிட்டுப் போ, பல்லு விளக்கிட்டு வர்றேன்.” என்றவன், கட்டிளை விட்டு இறங்கினான். என்றும் இல்லாமல் இன்று வீடே வேறு மாதிரி இருந்தது. அவன் கண்களைக் கசக்கிவிட்டு பார்த்தான்.

 

‘நம்ம வீடு தான்.. இவ்ளோ கிளீனா இருக்கு!’ என மனதில் நினைத்தபடி கொல்லைபுறம் சென்றான். அங்கு மாட்டு தொழுவம் கூட சுத்தமாக இருந்தது. விறகு அடுப்பும் சாணத்தால் மொழுகி பொட்டு வைத்து எரிந்துக் கொண்டிருந்தது பார்க்க அழகாக இருந்தது. வேப்பங்குச்சியை உடைத்து பல் துலக்கியபடி கிணத்தடியில் வந்து அமர்ந்தான்.

 

தேஜஸ்வினி டவல் கொண்டு வந்து கொண்டு வந்து அவனிடம் கொடுத்துவிட்டு, சுடுதண்ணீர் விளாவி வைத்துவிட்டு அவனிடம் குளிக்கச் சொல்லிவிட்டு போக, அவள் கையைப் பிடித்து இழுத்தான். குளவி கொட்டிய கை வலிக்கவும, ‘ஸ்ஸ் ஆஹ்’ என்று கத்தி கையை இழுத்துக் கொண்டு புறங்கையை தடவியபடி வீட்டினுள் ஓட

 

“தேஜூ நில்லு” என்றான். அவள் திரும்பி தலையை குனிந்து,

 

“சொல்லுங்க ஜி” என்றாள் அவள் மொழியில்,

 

“இதெல்லாம் நீ தான் செஞ்சியா!” என்றான் அவனும் அவள் மொழியில்,

 

“ஆங்.. ஜி.. நான் இந்த வீட்டு மருமக இதெல்லாம் நான் தானே செய்யணும். என் அம்மாவும் சொல்லி இருக்காங்க. உங்களுக்கு சாப்பிட என்ன செய்யட்டும்” என்று கேட்டாள்‌.

 

“அதெல்லாம் இருக்கட்டும் கையில் என்னாச்சு.. எதுக்கு கத்தின!” என அதியன் கேட்க தேஜஸ்வினி அவள் கையை பார்த்துவிட்டு,

 

“அது.. அது… நேத்து சாயங்காலம் கோயிலுக்குக் கிளம்பும்போது செங்குளவி கொட்டிடுச்சு ஜி. ஆர்த்தி திதி சுண்ணாம்பு தடவி விட்டாங்க, இப்போ பரவாயில்ல…” என்று அவள் வலது கையை மெதுவாகத் தடவியபடி சொன்னாள்.

 

​அதியன் அவளது கையை வாங்கிப் பார்த்தான். லேசாகச் சிவந்து வீங்கியிருந்தது. நேற்று போதையில் நிதானம் இல்லாமல் அவளது வலியைக் கூடக் கவனிக்காமல் கத்திவிட்டோமே, என்ற குற்ற உணர்ச்சி அவனுக்குள் லேசாக எட்டிப் பார்த்தது. அதிலும் இவ்வளவு வலியை வைத்துக்கொண்டுதான் அதிகாலையிலேயே எழுந்து கோலம் போட்டு, தொழுவத்தைச் சுத்தம் செய்து, சுடுதண்ணீர் வரை வைத்துக் கொடுத்திருக்கிறாளா! என்று நினைத்தபோது அவனது கடுமையான முகம் சற்றே இளகியது.

 

​“வலிய வச்சுக்கிட்டு எதுக்கு இவ்வளவு வேலையும் செஞ்ச?” என்று அதியன் சற்று அதட்டலாகக் கேட்டாலும், அந்தக் குரலில் அக்கறை ஒளிந்திருந்தது.

 

​தேஜஸ்வினி மென்னகையுடன் தலையை ஆட்டினாள். “பரவாயில்ல ஜி… வேலை செஞ்சா வலி தெரியாது. நீங்க சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள்.

 

​அதியன் அவள் போகும் திசையையே சற்று நேரம் பார்த்துக் கொண்டு நின்றான். ‘இவ இந்த வீட்டுக்குள்ள எவ்வளவு சீக்கிரம் ஒட்டிக்கப் பார்க்குறா… ஆனா ஊர்க்காரனுங்க இவளை நிம்மதியா இருக்க விடுவாங்களா?’ என்ற எண்ணம் அவனது நெற்றியில் மீண்டும் சுருக்கத்தை ஏற்படுத்தியது.

 

​அவன் குளித்து முடித்து, அறைக்கு வந்தான். தேஜஸ்வினி கொடுத்த மோரை குடித்துவிட்டு, உடையை மாற்றிக் கொண்டு பூஜை அறையில் நுழைந்தான்‌‌‌, புதுவிளக்கு ஏற்றி சாம்பிராணி ஏற்றி வைத்து இருந்தது. அதைப் பார்த்ததும் அதியன் புரிந்துக் கொண்டான். அவளுடன் இருக்க தவறியதை நினைத்து வருந்தினான். பூஜைஅறையில் நடுநாயகமாய் இருந்த வீர அய்யனார் சாமியைப் பார்த்து கை கூப்பி,

 

“ஐயா.. அய்யனார் ஐயா.. நீ தான் எனக்கு துணை.. அதே மாதிரி இந்த பஞ்சாயத்து தேஜூவ காயப்படுத்திட கூடாது. அப்பா, தாத்தாவ கஷ்டப்படுத்த கூடாது” என அதியன் வேண்டிக் கொண்டு திருநீறு கையில் எடுத்து நெற்றியில் பட்டை இழுத்துவிட்டு நடுவில் சந்தன குங்குமம் வைத்துக் கொண்டு வெளியே வந்தான்

 

 

வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக வந்தவனை.. வெட்கத்தோடு ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் தேஜஸ்வினி. கூடத்தில் பரமசிவம் தாத்தாவும், ராஜனும் தயாராக அமர்ந்திருந்தனர். ஊர்ப் பஞ்சாயத்துக்குக் கிளம்பும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

 

​தேஜஸ்வினி தட்டில் சுடச்சுட தோசையும், தேங்காய்ச் சட்னியும் வைத்து அதியன் முன் நீட்டினாள்.

 

​“நான் மோர் குடிச்சிட்டேன் பசி இல்ல, நீ சாப்பிடு” என்று அதியன் சொல்ல, தேஜஸ்வினி அவனது முகத்தையே ஏக்கமாகப் பார்த்தாள்.

 

​“ஜி… கொஞ்சமாவது சாப்பிட்டுப் போங்க. வெறும் வயித்தோட வெளியே போகக் கூடாது” என்று அவள் கெஞ்சலாகச் சொல்ல, தாத்தா பரமசிவம் அதியனிடம்,

 

​“அதியா… பேத்தி ஆசையா செஞ்சு கொண்டு வந்து நிக்குறா, சாப்பிடு ப்பா. இன்னைக்குப் பஞ்சாயத்துல போய் பேசணும், வயித்துல பசி இருத்தா கோபம் தான் முந்தும்” என்றார் தாத்தா.

 

​அதியன் மறுப்பேதும் சொல்லாமல் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினான். அவள் பரிமாறிய விதமும், அந்தச் சட்னியின் சுவையும் அவனுக்குப் பிடித்திருந்தது. செண்பகம் சமையலறை வாசலில் நின்று கன்னத்தில் வைத்துக்கொண்டு, இதையெல்லாம் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.

 

​அப்போது வாசலில் சலசலப்பு கேட்டது. பஞ்சாயத்துக்கு ஆள் கூப்பிட ஊர் தலையாரி வந்திருந்தார்.

 

​“ஐயா… அய்யனார் கோவில்ல பஞ்சாயத்து கூடிடுச்சு. ஊர் பெரியவங்க நாட்டாமையும் வந்தாச்சுங்க.. உங்களைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்காங்க” என்றார் தலையாரி.

 

​அதியன் சாப்பிட்ட கையைக் கழுவிவிட்டு, தேஜஸவினியைப் பார்த்தான். அவள் கை துடைக்க டவல் கொடுத்தாள். அதியன் கையைத் துடைத்துக் கொண்டு “சரி நான் போயிட்டு வரேன்” என்றான்.

 

“ஜி..” என தேஜஸ்வினி கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

 

“என்ன தேஜூ…!”

 

“ஊர்காரங்க என்ன சொன்னாலும் நான் செய்யிறேன். ஆனா உங்களுக்கு ஏதும் பிரச்சனை வர கூடாது ஏற்கனவே என்னால நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்க” என்றாள்.

 

“இங்க பாரு உனக்கும் எதுவும் ஆக விட மாட்டேன். அதே மாதிரி இந்த குடும்பத்துக்கும் எதுவும் ஆக விட மாட்டேன் சரியா” என்றான் அதியன். இருந்தும் அவளுக்கு மனதில் கலக்கம் இருந்தது.

 

“நானும் வரேன்”

 

“அதெல்லாம் வேண்டாம்.. நான் தாத்தா, அப்பா கூட போறேன்.. நீ வீட்டுலயே இரு. கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு. காலையில் எவ்வளவு வேலை செஞ்சுருக்க” என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.

 

​தேஜஸ்வினி வாசற்படியில் நின்று கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்தாள். அவளது பார்வையில் இருந்த பயத்தைப் புரிந்து கொண்ட அதியன், ஒரு நொடி நின்று அவளைப் பார்த்துத் இமை அசைத்து ‘எதுவும் ஆகாது’ என்பது போலக் கண் ஜாடை காட்டிவிட்டு, தாத்தா மற்றும் அப்பாவோடு பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்குப் புறப்பட்டான்.

​

அய்யனார் கோவிலில் ஊரே திரண்டிருந்தது. கருணாகரன் தன் ஆட்களுடன் நடுநாயகமாக அமர்ந்து, திமிராக கால் மீது கால் போட்டுக் கொண்டு, சட்டை காலரை தூக்கி விட்டு அவன் ஆளுமையைக் காட்டிக் கொண்டிருந்தான். நாட்டாமை சிலர் கருணாகரன் பணத்திற்கு பேச வந்தவர்கள். அந்த மிதப்பில் அவனும் திமிராக அமர்ந்து இருக்கிறான்.

 

அதியன், அவன் அப்பா, தாத்தாவுடன் வந்து நின்றான். அதியனின் கோபம் தெறிக்கும் பார்வை கருணாகரனையும் அவனது ஆட்களையும் எரிப்பது போல் இருந்தது‌. கருணாகரன் அதியனை ஏலனமாகப் பார்த்து புன்னகைத்துவிட்டு,

 

“அதான் சம்மந்தப்பட்ட ஆளுங்க வந்துட்டாங்கல்ல ஆரம்பிங்கயா” என கருணாகரன் அதிகாரமாய் பேசினான்.

 

“என்னப்பா அதியா இது நீயே இப்படி பண்ணா எப்படி.. இந்த ஊரு பொண்ணுங்க வாழ்க்கையையும் பார்க்கணுமில்ல, இப்படி நீ பாட்டுக்கு எங்கிருந்தோ மொழி தெரியாத பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்க.” ஊர் பெரியவர் கேட்க.

 

“ஏன் அதனால உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை!” என அதியன் சாதாரணமாக கேட்க,

 

“அதியா ஊரு வழக்கத்தை மீறி இருக்க!” என ஒருவர் கத்த?

 

“இங்க யாரு ஊரு வழக்கத்தை மதிக்கிறாங்க! ஊரு வழக்கம் எதுக்காக? யாருக்காக?” என அவன் கேட்ட கேள்வி அங்கிருந்த சிலரை யோசிக்க வைத்தது.

 

“அதியா விதண்டாவாதம் வேணாம். நீங்களும் இந்த ஊருல ஒரு பெரிய குடும்பம் தான். நீங்க மத்தவங்களுக்கு முன் உதாரணமா இருந்துட கூடாது. அதனால பஞ்சாயத்து எடுக்குற முடிவுக்கு நீங்க கட்டுப்பட்டு தான் ஆகணும்‌.” என நாட்டாமைகள் சொல்ல,

 

“இதுல எனக்கு உடன்பாடு இல்ல” என்றான் அதியன் சற்று கோபமாகவே.

 

“என்னயா.. போலீஸ்காரன்னு திமிரா பேசுறியா! உன் அதிகாரத்தை வெளிய வச்சுக்க. உன்னால ஒரு பொண்ணு உயிர விட துணிஞ்சு இருக்கு. இது மாதிரி இனி நடக்க கூடாதுன்னா. அந்த பொண்ணும் நீயும் இந்த ஊருல இருக்க கூடாது. உங்க குடும்பமும் இந்த ஊரு நிகழ்ச்சி எதுலையும் கலந்துக்க கூடாது.” என கருணாகரன் கண்ஜாடைக்கு தோதாக ஒருவர் பேச,

 

“அதைச் சொல்ல நீங்க யாரு” என்று ஒரு குரல் வந்தது.. கோவிலின் வாயிலில். நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு போலீஸ் உடையில் கம்பீரமாக வந்து நின்றார் வெற்றிவேந்தன் டிஎஸ்பி.

 

“சார்.. நீங்க ஏன் இங்க?” என அதியன் வந்து கேட்டுவிட்டு பதறினான்.

 

“ஒரு நிமிஷம் அதியன் இவங்க கிட்ட பேசிட்டு வரேன்.” என்றவர் பார்வை கருணாகரன் மீது திரும்பியது.

 

“என்ன சொன்னீங்க அந்த பொண்ணு இந்த ஊருல இருக்க கூடாதா? அப்படி பார்த்தா இந்த கருணாகரன எப்படி இந்த ஊருல வச்சிருக்கீங்க. கந்துவட்டி கட்ட பஞ்சாயத்து பண்றவன் இவன். இவனுக்கு எதிரா சாட்சி சொல்ல ஒருத்தருக்கும் தைரியம் வரல. உப்புக்கும் உதவாத உங்க ஊர் வழக்கத்தை தூக்கிட்டு வந்து, ஒரு குடும்பத்தை அவமானப்படுத்த பார்க்குறீங்க. இது இந்தியா அதுல ஒரு சின்ன கிராமம் தான் இந்த வேப்பத்தூர். ஒரு பொண்ணுக்கு அநியாயம் பண்ணீங்க உங்க எல்லாரையும் கைது பண்ண வேண்டிதாகும்.” என்று எச்சரிக்கை செய்ய, கூட்டத்தில் சலசலப்பு கிளம்பியது.

 

‘இந்த கந்துவட்டிகாரன் பேச்ச கேட்டு வந்ததுக்கு ஜெயில்ல கம்பி எண்ண வச்சிடுவான் போல இருக்கு’ என நாட்டாமைகள் அவர்களுக்குள் பேசிக்கொண்டனர். கருணாகரன் நடப்பதை பார்த்து திகைத்து போனான் அதியனை எப்படியாவது ஊரைவிட்டு துரத்த வேண்டும் என்று நினைத்தான் அது நடக்காமல் போய்விடுமோ என்று நினைத்து,

 

“இங்க பாரு போலீசு இது ஊர் விவகாரம் இதுல நீங்க தலையிட முடியாது போ போ..” என திமிராக சொன்னவனை, அதியன் அடிக்கப் பாய்ந்தான். அங்கிருந்தவர்கள் அவனை தடுத்து பிடித்துக் கொண்டனர்.

 

“அத ஊர் பெரியவங்க சொல்லிட்டும். நீ போய் உட்கார்ந்து வேடிக்கை பாரு..” என்றார் வெற்றிவேந்தன்.

 

“இங்க பாருங்க ஊர் மக்கா.. போலீஸ் வரைக்கும் விவகாரம் போகுதுன்னா.. பிரச்சனை பண்ணாம போறது தான் நல்லது. போங்க போங்க பஞ்சாயத்து முடிவு இதான்” என்றதும் கருணாகரன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவனது ஆட்களுடன் அசிங்கப்பட்டு போனான் கருணாகரன்.

 

“நீங்க எப்படி சார் இங்க வந்தீங்க!” என்றதும் வெற்றி வேந்தன் அவர் வந்த போலீஸ் ஜீப்பை நோக்கி கை காட்டினார் தேஜஸ்வினி அவன் முன் வெளிப்பட்டாள்.

 

தொடரும் மயிலாஞ்சி ✍️

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top