முகவரி 9

ஒருவழியாக அவளது ஊரின் ஸ்டாப்பில் வந்து இறங்கவும், மகளைக் கண்டதும் சுதாகரின் முகத்தில் அத்தனை பூரிப்பு!

வாத்தா என்றபடி மகளிடமிருந்து லக்கேஜை வாங்கி முன்னால் வைத்தவர், அவளுடன் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டினார்.

இருபது நிமிட பயணத்தில் வீட்டிற்கு வந்தவள், “அம்மா…!” என்றபடியே உள்ளே ஓடினாள் கமலி.

சமையலறையிலிருந்து ஓடிவந்த கலை, இரண்டு மாதம் கழித்துப் பார்க்கும் தன் செல்ல மகளை வாரியணைத்துக் கொண்டவள் “என் பொண்ணு இப்படி  இளைச்சிட்டாளே!” என்றவாறு மகளின் முகத்தை தடவி முத்தமிட்டவளின் கண்கள் கலங்கியது.

எக்ஸாம் வருவதால் கமலி தான் அவர்களை இரண்டு மாதங்கள் பார்க்க வரவேண்டாம் என்று சொல்லியிருந்தாள்..

“அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா… ரெண்டு மாசம் கழிச்சு பாக்குறியே” அதான் என்றாள்.

மறுநாளிலிருந்து கமலிக்கு பிடித்ததை எல்லாம் கலை விதவிதமாகச் சமைத்துப் போட்டார்.

கதிரும் வெளிநாட்டிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்கையிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தான்.

தன் கல்லூரி அனுபவங்கள், தோழிகள் ரூபஸ்ரீ, செல்வராணி, நந்தினியோடு செய்த குறும்புத்தனங்கள் என அனைத்தையும் பெற்றோரிடம் கதைகதையாகப் பகிர்ந்து கொண்டாள்.

செமஸ்டர் லீவில் வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், தன் அப்பாவுடன் கடலுக்கு வருவதாகச் சொன்னாள்.

மகள் சொன்னதைக் கேட்டவர், “ஆத்தா… கடலுக்கு வர்றதெல்லாம் கஷ்டம்டா, நீ வீட்லயே இரு,” என்று சுதாகர் தடுத்தபோதிலும், “இல்லப்பா… நான் உங்க கூட வருவேன். சின்ன வயசுல போனது, அப்புறம் ஸ்கூல் படிக்கும்போதெல்லாம் போகவே இல்லை. இப்போ எனக்கு லீவ் தான, நான் கண்டிப்பா வர்றேன்,” என்று பிடிவாதமாக ஒற்றைக்காலில் நின்றாள்.

மனைவி ஒருபக்கம் முறைத்த போதிலும் மகளின் ஆசைக்குக் குறுக்கே நிற்க முடியாமல் சுதாகரும் அவளைத் தன்னோடு கூட்டிச் சென்றார்.

கடற்கரைக்குச் சென்றதும், அங்கே சுதாகரின் நண்பர்களான வேலுவும் மற்ற மீனவ நண்பர்களும் கமலியைப் பார்த்து திகைத்தனர்.

“என்னயா சுதாகரு… பொண்ண என்னமோ சீமையில படிக்க வைக்கிறேனு பீத்துன, இப்போ கடலுக்கு கூட்டிட்டு வந்துட்ட?” என்று வேலு கிண்டலாகக் கேட்க, மாமா என்றவளோ வெட்கம் கலந்த சிரிப்போடு அவர்களிடம் நலம் விசாரித்தாள்.

அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் படகு கடலுக்குள் மிதக்கத் தொடங்கியதும், சுதாகரின் நண்பர்கள் அனைவரும் கமலியிடம் அவளது கல்லூரி வாழ்க்கையைப் பற்றி ஆர்வமாகக் கேட்டனர்.

கமலியும் திருச்சி கல்லூரியைப் பற்றியும், தன் புதிய தோழிகளைப் பற்றியும், பெரிய லைப்ரரி, பிரம்மாண்டமான வகுப்பறைகள் பற்றியும் அவர்களிடம் உற்சாகமாக சொன்னாள்.

“அவ்வளவு தூரம் படிக்க போயிருக்கிற உன்னை பார்க்கவே மனசுக்கு நிறைவா இருக்கு தாயி!” என்று பெரியவர்கள் மனதார வாழ்த்தினர்.

மறுநாள் மீன் பிடித்துக் கரைக்கு வந்ததும், முதல் நாள் இரவில் பேசியது போல அங்கேயே சமையல் செய்யத் திட்டமிட்டனர்.

“இன்னைக்கு உங்க எல்லாருக்கும் நான்தான் சமைச்சுப் போடப்போறேன்!” என்று கமலி உற்சாகத்துடன் களத்தில் இறங்கினாள்.

இவர்கள் வலை வைப்பதற்கு தனியாக குடில் இருந்தது. சமைக்க தேவையான பொருட்கள் எப்போதும் அங்கு இருக்கும்…கமலிக்குத் துணையாக வேலவுவின் மகளும், அவளின் சிறுவயது பள்ளித் தோழியுமான பவானியும் வந்து இணைந்து கொண்டாள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த தோழிகள் இருவரும் சிரித்துப் பேசிக்கொண்டே, மீன்களைச் சுத்தப்படுத்தி, வெங்காயம், தக்காளி, காரசாரமான மசாலா அரைத்து வச்சுக் கம கமவென மீன் குழம்பும், மொறுமொறுப்பான மீன் வறுவலும் செய்தனர்.

சவுக்கு தோப்பின் நிழலில், கடற்கரை மணலில் எல்லாரும் வட்டமாக உட்கார, கமலியும் பவானியும் பரிமாறினர்.

“அடடே… சுதாகரு! உன் பொண்ணு காலேஜுக்குப் போய் படிப்பை மட்டும் கத்துக்கலப்பா, கலையோட கைமணத்தையும் அப்படியே கத்து வச்சிருக்கா! குழம்பு அம்புட்டு ருசி!” என்று சுதாகரின் நண்பர்கள் கமலியின் சமையலைப் பாராட்டித் தள்ளினர்.

தன் தோழி பவானியுடன் சேர்ந்து சமைத்துப் பரிமாறிய அந்த நாள், கமலியின் நினைவடுக்கில் மறக்க முடியாத ஒரு அழகிய நினைவு கொண்ட நாளாக மாறியது.

ஆதவனும் அருணும் தங்கள் ‘ஏஏ சீஃபுட்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த ஏற்றுமதி ஆர்டருக்காகத் தரமான வஞ்சிர மீன்கள் தேவைப்பட, மீண்டும் சுதாகரையும் வேலுவையும் நேரில் பார்த்துப் பேச பூம்பாறை கடற்கரைக்குத் தன் காரில் வந்து இறங்கினர்.

காரை விட்டு இறங்கிய ஆதவன், தூரத்திலேயே மரத்தடி நிழலில் சுதாகரின் நண்பர்கள் கூட்டமாகச் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரிய, அத்தோடு அங்கே, கையில் கரண்டியோடு தோழி பவானியிடம் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டே மீன் குழம்பைப் பரிமாறிக் கொண்டிருந்தவளின் மேல் அவனது பார்வை தேங்கியது.

கடற்கரைக் காற்றில் கலைந்த கூந்தலும், எந்தவித ஒப்பனையும் இல்லாதவளின் இயல்பான அழகும், சிரிப்பும் ஆதவனின் மனதை ஏதோ செய்ய, சில வினாடிகள் தன் பார்வையை அவளிடமிருந்து விலக்க முடியாமல் அப்படியே சொக்கிப்போய் நின்றுவிட்டான்!

திடிரென்று நின்றவனை திரும்பிப் பார்த்த அருண், அவனது தோளைத் தட்டி, “எலே! என்னடா அப்படிப் பாக்குற? வா அவங்க கிட்ட போகலாம்,” என்று கூப்பிட்ட பிறகுதான் ஆதவன் சுயநினைவுக்கு வந்தான்.

பின்னர் சுதாரித்துக் கொண்டு ம்ம் என்றான்.

அவர்கள் அருகில் வர, இவர்களைப் பார்த்துவிட்டு “வாங்கப்பா!” என்று அவர்களை அன்போடு வரவேற்றனர்.

“என்னப்பா ஆது… பிசினஸ் எல்லாம் நல்லபடியா போகுதா? புது ஆர்டர் எதுவும் வந்திருக்கா?” என்று சுதாகர் நலம் விசாரிக்க…

ஆதவன் சற்றே தடுமாற்றத்துடன், “ஆ… ஆமா மாமா. சிங்கப்பூர்ல இருந்து அடுத்த பெரிய ஆர்டர் வந்திருக்கு. அதுக்குத்தான் மீன் விஷயமாகப் பேச வந்தோம்,” என்று சொன்னாலும், அவனது கண்கள் ரகசியமாக கமலியைத்தான் தேடின.

சுதாகர் சிரித்துக் கொண்டே, “முதல்ல வந்து சாப்பிடுங்க. இதுதான் என் பொண்ணு கமலினி. காலேஜ் லீவுக்கு ஊருக்கு வந்திருக்கா… அவளும் வேலு பொண்ணு பவானியும் சேர்ந்துதான் இன்னைக்கு மீன் குழம்பு வச்சிருக்காங்க. அம்புட்டு ருசியா இருக்கு, வந்து ரெண்டு வாய் சாப்பிடுங்கப்பா,” என்றார்.

கமலியும் இயல்பான புன்னகையுடன் நிமிர, கம்பீரமான தோற்றத்துடன் நின்றிருந்த ஆதவனைக் கண்டாள். இருவரின் பார்வைகளும் ஒரு நொடி சந்தித்துக்கொண்டன. கமலி லேசான தயக்கத்துடனும் வெட்கத்துடனும் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு, அவர்களுக்குச் சாப்பிடும் தட்டுகளை எடுத்து வைத்தாள்.

மீன் குழம்பை சாப்பிட்டு பார்த்த ஆதவனுக்கு, அதன் சுவையை விடவும், அதைச் சமைத்துப் பரிமாறிய கமலியின் நினைவே மனதில் ஆழமாகப் பதிந்தது!

 தங்கச்சிங்களா உங்க கை பக்குவம் அம்புட்டு ருசினு அருண் சொல்ல,  அண்ணா குழம்பை கமலி தான் வைத்தாளென்ற பவானி இன்னும் கொஞ்சம் சோறு போடட்டுமா என்க இருவரும் போதும் என்றார்கள்.

பின்னர் தேவையான மீன்களைப் பற்றி சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டு சென்று விட்டானுங்கள்.

அதோ இதொவென கமலியின் செமஸ்டர் லீவும் முடிவுக்கு வந்தது. மனமில்லாமல் சுதாகரிடமும் கலையிடமும் விடைபெற்று, மீண்டும் தனது கல்லூரி வாழ்க்கையைத் தொடர திருச்சிக்குக் புறப்பட்டுச் சென்றாள்.

அதன் பின்னர் நாட்கள் இறக்கை கட்டிப் பறந்தன…

முதல் வருடம் முடிந்து, இரண்டாம் ஆண்டின் வகுப்புகள், செமஸ்டர் தேர்வுகள், தோழிகளுடன் கலகலப்பான கொண்டாட்டங்கள் என கமலியின் காலேஜ் வாழ்க்கை விறுவிறுப்பாக நகர்ந்தது.

இதோ, அவளது இரண்டாம் ஆண்டின் இறுதித் தேர்வுகளும் முடிவடையும் தருவாயை எட்டியிருந்தன.

அதே நேரத்தில், வானகிரியில் ஆதவனின் ‘ஏஏ சீஃபுட்ஸ்’ நிறுவனமும் மிகப்பெரிய அளவில் வளர்ந்து, பல்வேறு நாடுகளுக்கு மீன்களை ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனமாக மாறியிருந்தது.

பூம்பாறைக்கு வரும்போதெல்லாம் கமலியைப் பற்றிய விவரங்களைச் சுதாகரிடம் மறைமுகமாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதை ஆதவனும் வழக்கமாகக் கொண்டிருந்தான்.

அன்று வழக்கம் போல கடலுக்கு சென்ற கணவனின் வருகைக்காக காத்திருக்கும் போது, கலையின் போனிற்கு கால் வரவும், அட்டென் பண்ணியவர் தம்பி எப்படி இருக்க என்க..

“அம்மா… நான் ஊருக்கு வர்றேன்மா! அடுத்த வாரம் ஏர்போர்ட்ல வந்து இறங்கிடுவேன். கமலிக்கும் செமஸ்டர் லீவ் ஆரம்பிச்சிடும்ல? எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்!” என்று கதிர் சொல்லவும் கலைக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

பத்திரமாக வாப்பா என்றபடி போனை வைத்தவர், கணவர் வீட்டிற்கு வந்ததும் விஷயத்தை சொல்ல, இத்தனை வருடங்களுக்கு பிறகு மகன் வரப்போகும் சந்தோஷத்தில் சுதாகருக்கு கண்கள் கலங்கி விட்டது.

“என் புள்ள இத்தனை வருஷம் கழிச்சு சொந்த ஊருக்கு வர்றான்!” என்று கலை வீட்டையே சுத்தப்படுத்தி, மகனுக்குப் பிடித்த பலகாரங்களைச் செய்யத் தயாரானாள்.

சுதாகரோ மகனின் ரூமை ஆள் வைத்து இன்னும் கொஞ்சம் அழகு படுத்த, இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கமலி, ம்ம் நடத்துங்க நடத்துங்கள் என்று சிரித்தார்.

இரண்டாம் ஆண்டின் எக்ஸாம் முடிந்த கையோடு கமலியும் திருச்சியிலிருந்து வீட்டிற்கு வந்து சேர்ந்தவள் வீட்டை பார்த்து வாவ் என்றாள்.

வெளியே பார்க்க அது ஓட்டு வீடுதான் ஆனால் உள்ளே அத்தனை வசதிகளும் இருந்தது.பிள்ளைகள் வளரும் போதே வீட்டின் உள் அமைப்பை பாரம்பரியம் மாறாமல் மாற்றி விட்டார்.

எப்படி இருக்குத்தா என்கவும், செமப்பா என்றவள் என் ரூமிற்கு எதாவது என்க,  பதில் எதுவும் வராததால் முகத்தை வலம் புறமாக முறுக்கி காட்டிவிட்டு தனது அறைக் கதவை திறந்தவளோ திகைத்துப் போனாள்.

சுவரில் அழகான ஓவியங்கள் மாட்டியிருக்க, மேலும் சில மாற்றங்கள் நடந்திருப்பதை பார்த்து ம்ஹூம்….உங்கள் செய்கையை பார்த்தால் வீட்டை அண்ணன் கல்யாணத்துக்கு ரெடி பண்ண போல இருக்கேனு சிரித்தாள்.

இன்னும் ஒருநாளே இருக்க, கதிரின் வருகைக்காக குடும்பமே ஆவலோடு காத்திருந்தது.

அதேபோல் வெளிநாட்டிலிருந்து நிறையப் பரிசுகளுடனும், குடும்பத்தைப் பார்க்கும் ஏங்களுடனும் கதிரும் ஊருக்கு வந்து இறங்கினான்!

காரிலிருந்து இறங்கிய அண்ணனைப் பார்த்ததும் அண்ணானு ஓடிவர, பாப்பா என்றபடி அணைத்துக் கொண்டவன், “என் குட்டித் தங்கச்சி காலேஜ் படிக்கும் அளவுக்கு பொண்ணாயிட்டாளே!” என்று கொஞ்சினான்.

பின்னர் அப்பா அம்மாவை அணைத்துக்கொள்ள, மகனைப் பிடித்துக்கொண்டு கலை அழுதார்.

அதான் வந்துட்டேனே பிறகு எதுக்கு இந்த அழுகை என்றவன் அம்மாவை சமாதானம் செய்தான்.

கதிரின் வருகையால் சுதாகரின் வீடே திருவிழாக்கோலம் பூண்டது. இதோ அவன் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன.

அன்று மதியம் சாப்பிடும் போது தம்பி, நம்ப இடம் சும்மாவே பக்கத்தில் கிடக்கு. அதில் ஒரு மச்சு வீடு கட்டிடலாமானு சுதாகார் கேட்க, நிமிர்ந்து பார்த்த கதிர், மச்சு வீடு இருந்தால் தான் பொண்ணு குடுப்பேனு சொல்ற இடம் நமக்கு வேண்டாம்ப்பா.

இந்த வீட்டோட ஒவ்வொரு செங்கல்லிலையும் நீங்களும் பாட்டியும் சிந்திய வேர்வையும் ரத்தமும் கலந்துருக்கு. இன்றைக்கும் செவுத்த நீங்கள் தொட்டா அம்மானு தான் உங்க வாயில் வருதுப்பா.

இது போதும் எனக்கு…அநேகமாக உன் தம்பி தானே இந்த வார்த்தையை சொன்னதென்று தாயை முறைத்தவன், நமக்கு ஏற்ப பாருங்களென்றான்.

இந்த விஷயத்தை நண்பர்கள் கிட்ட சொல்லி பெருமைப்பட்ட சுதாகர், வேலுவின் நெருங்கிய சொந்தத்திலேயே பெண் இருப்பது தெரிந்து புதன்கிழமை சுதாகர் குடும்பத்தினர் பெண் பார்க்கச் செல்ல முடிவு செய்தனர்.

அதேபோல் அந்தச் சுபநாளில் சுதாகர் தன் குடும்பத்தோடும், நெருங்கிய சொந்த பந்தங்களோடு பழங்கள், பூ, இனிப்புகள் எனப் பொருட்களை எடுத்துக்கொண்டு பெண் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார்.

பெண் வீட்டாரும் வாசலிலேயே வந்து அனைவரையும் புன்னகையோடு வரவேற்றனர்.

சற்று நேரத்தில், கமலியும் கலையும் அந்தப் பெண்ணின் அறைக்குச் சென்று அழைத்து வர, தலை குனிந்தபடி வெட்கத்தோடு வந்து தட்டில் காபி பரிமாறினாள் சிந்து. 

கதிரும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிப் பிடிக்க, இரு வீட்டாருக்கும் மனதுக்கு நிறைவாக அமைந்தது.

“தம்பியும் பொண்ணும் நல்ல பொருத்தமா இருக்காங்க. இன்றே நிச்சயம் பண்ணிடலாம்!” என்று பெரியவர்கள் கூடிப் பேசி வெற்றிலை பாக்கு மாற்றிக் கொண்டனர்.

தேடல் தொடரும்…. 

 

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top