இரவு ஒரு மணியைக் கடந்திருந்தது. வீட்டில் எல்லோரும் உறங்கியிருக்க, திண்ணையில் மட்டும் வள்ளியம்மாளும் தாரணியும் அமர்ந்திருந்தார்கள். இரவின் அமைதியில் தொலைவில் கேட்ட ஆந்தையின் குரல் மட்டும் அவ்வப்போது அந்த நிசப்தத்தைக் கலைத்தது.
தாரணியின் கண்கள் கலங்கியிருந்தன. அவளுடைய கையை ஆதரவாகப் பற்றிக்கொண்ட வள்ளியம்மாள்,
“அழாதே கண்ணு. அவன் உன்னை நினைச்சுக் கோபப்படல. தன்னைத்தானே நினைச்சுத்தான் கோபப்பட்டுக்கிட்டு இருக்கான்,” என்றார்.
“நான் அவசரப்பட்டுட்டேன் பாட்டி. அவரு அப்பாவைக் கூட்டிட்டுப் போயிருக்காருன்னு தெரிஞ்சும் கோபப்பட்டுட்டேன். ஆனா, எனக்கு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமேன்னு தோணுச்சு…” என்றாள் தாரணி.
“அதுக்குத்தான் அவன் ஏன் இப்படிப் பேசாம இருக்கான்னு உனக்குச் சொல்லணும்னு நினைச்சேன்.”
சில நொடிகள் அமைதியாக இருந்த வள்ளியம்மாள், பழைய நினைவுகளை அசைபோட்டபடி பேசத் தொடங்கினார்.
“முத்துவுக்கு ஒரு பதின்மூணு வயசு இருக்கும்போது நடந்தது கண்ணு. அப்போ அவன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம அடிக்கடி மருத்துவமனைக்குப் போயிட்டு வந்தாரு. வீட்டுச் செலவையும் வைத்தியச் செலவையும் சமாளிக்க முடியாம சிவகாமி ரொம்பக் கஷ்டப்பட்டுட்டு இருந்தா.
அந்தச் சமயத்துல முத்துவுக்குப் பள்ளிக்கூடத்துல ஒரு ஆசை இருந்துச்சு. அவனோட வகுப்புல படிக்கிற பசங்க எல்லாரும் சேர்ந்து ஒரு சுற்றுலா போக ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. அதுக்குக் கொஞ்சம் பணம் கட்டணும்னு சொல்லியிருக்காங்க. முத்துவுக்கும் போகணும்னு ஆசை. வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட கேட்கலாம்னு நினைச்சிருக்கான்.
அன்னிக்கு ராத்திரி சிவகாமி, அவன் அப்பாவோட மருந்துச் செலவுக்குப் பணம் இல்லாம அழுதுக்கிட்டிருந்ததைப் பார்த்திருக்கான். அப்போ அவன் கையில இருந்த சுற்றுலா அறிவிப்பை அப்படியே மடிச்சு சட்டைப் பைக்குள்ள வெச்சுக்கிட்டான்.
மறுநாள் பள்ளிக்கூடத்துல ஆசிரியர் பணம் கட்டாதவங்க பெயரைக் கேட்டப்போ, முத்து மட்டும் அமைதியா நின்னிருக்கான். கடைசி வரைக்கும் அவன் அந்தச் சுற்றுலாவுக்குப் போகவே இல்ல.
அப்புறம் ஒருநாள் நான் அவன்கிட்ட கேட்டேன். ‘ஏன்டா முத்து, உனக்கும் போக ஆசையிருந்துச்சே… அம்மாகிட்ட கேட்டிருக்கலாமே?’ன்னு.
அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?
‘அம்மா ஏற்கனவே அப்பாவுக்காகக் கவலைப்பட்டுக்கிட்டு இருக்காங்க பாட்டி. நான் வேற எதையாவது கேட்டா அவங்களுக்குக் கஷ்டமா இருக்கும்ல…’ன்னு சொன்னான்.
அந்த வயசுல அவனுக்கு ஒரு விஷயம் மனசுல பதிஞ்சிருச்சு கண்ணு. தனக்குப் பிடிச்சதைச் சொன்னா அது இன்னொருத்தருக்குச் சுமையா மாறிடும்னு நினைக்க ஆரம்பிச்சான். அதுக்கப்புறம் அவனுக்கு என்ன வேணும்னாலும் கேட்க மாட்டான். எதுவும் பிடிக்கலன்னாலும் சொல்ல மாட்டான்.
நாளாக நாளாக அது அவனோட பழக்கமாவே மாறிடுச்சு. தன்னோட ஆசையைச் சொல்லாம இருக்கிறதோட நிற்காம, தனக்கு ஏதாவது கஷ்டம்னாலும் அதை வெளியே காட்டாம இருக்கப் பழகிட்டான்.
அவன் மனசுல இருக்கிறதை யார்கிட்டயும் சொல்ல மாட்டான்னு நீ நினைக்கிறியா? சொல்லணும்னு அவனுக்கும் ஆசை இருக்கும். ஆனா, அதைச் சொன்னா அடுத்தவங்களுக்கு வருத்தமா இருக்குமோ, பாரமா இருக்குமோன்னு நினைச்சு அப்படியே அடக்கிக்குவான்.
அதனாலதான் கண்ணு, அவன் மௌனத்தை உடைக்கணும்னா அவனைப் பேசச் சொல்லிக் கட்டாயப்படுத்தக் கூடாது. அவன் பேசும்போது அவன் சொல்றதைக் கேட்க ஒருத்தர் இருக்காங்கன்னு அவனுக்கு நம்பிக்கை வரணும்.”
வள்ளியம்மாள் சொல்லி முடித்ததும் தாரணி எதுவும் பேசவில்லை. இதுவரை முத்துவின் மௌனத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்தவளுக்கு, அதன் பின்னால் இருந்த சிறுவயதுப் பழக்கம் இப்போது மெல்லப் புரியத் தொடங்கியது.
“பதினேழு வயசுல படிப்பை நிறுத்தினப்போகூட யார்கிட்டயும் எதுவும் சொல்லல. பகல்ல வழக்கம்போல வேலை பார்ப்பான். ராத்திரியானா கிணத்தடியில போய் தனியா உட்கார்ந்திருப்பான். அவன் படிக்கணும்னு ஆசைப்பட்டதை நான் பார்த்திருக்கேன். ஆனா, யார்கிட்டயும் அதைப் பத்திப் பேச மாட்டான்.”
பாட்டி ஒரு பெருமூச்சு விட்டார்.
““சின்ன வயசுல ஒருநாள் திருவிழாவுக்குப் போயிட்டு வரும்போது பரோட்டா வாங்கிட்டு வந்தான். வீட்டுக்கு வந்ததும் அதைத் தன் தம்பிக்கும் தங்கைக்கும் மட்டும் பிரிச்சுக் கொடுத்தான். தனக்கென்று எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. ‘உனக்கு வேண்டாமா?’ன்னு கேட்டதுக்கு, ‘எனக்கு வேண்டாம் பாட்டி’ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னான். அவன் கொடுத்த பரோட்டாவை ஆசையோடு சாப்பிட்ட அந்தக் குழந்தைகளுக்கு, தங்களுக்காக எதையும் வைத்துக்கொள்ளாமல் கொடுத்த அண்ணனின் மனசு அப்போ புரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வயசுல அவனுக்கும் ஆசை இருக்கும்னு யாருக்குத் தோணுச்சு?”
தாரணியின் மனம் கனத்தது.
“இன்னொரு விஷயம் இருக்கு. முத்துவுக்கு இருபத்து நாலு வயசு இருக்கும்போது செல்வின்னு ஒரு பொண்ணைப் பிடிச்சிருந்துச்சு. அவளுக்கும் இவன் மேல விருப்பம் இருந்துச்சு. கல்யாணப் பேச்சு நடந்த நேரத்துல அரவிந்தன் படிப்பு, கவிதா கல்லூரிச் செலவு, வீட்டுக் கடன்னு நிறைய பொறுப்புகள் இருந்துச்சு. அதையெல்லாம் யோசிச்சு, ‘இன்னும் ரெண்டு வருஷம் பொறுத்துக்கோங்க’ன்னு செல்விகிட்ட சொல்லியிருக்கான்.”
“அவங்க காத்திருக்கலையா பாட்டி?”
“இல்ல கண்ணு. அவளுக்கு வேற இடத்துல கல்யாணம் நடந்துச்சு. அந்தக் கல்யாணத்துக்குக்கூட முத்து போயிருந்தான். சிரிச்ச முகத்தோட பந்தி பரிமாறினான். ஆனா, அன்னிக்கு ராத்திரி மட்டும் விடிய விடிய கிணத்தடியில உட்கார்ந்திருந்தான். அவன் மனசுல என்ன வலியிருந்திருக்கும்னு எனக்குத்தான் தெரியும்.”
வள்ளியம்மாள் தாரணியின் கையைத் தட்டிக்கொடுத்தார்.
“அவன் எதுவும் பேசாம இருக்கிறதால அவனுக்கு உணர்ச்சியே இல்லன்னு நினைச்சிடாதே. அவனுக்குள்ள நிறைய ஆசையும் ஏக்கமும் இருக்கு. ஆனா, அதை வெளியே சொல்லிப் பழக்கமில்ல. அவ்வளவுதான்.”
“நான் அவரைப் புரிஞ்சுக்காம பேசிட்டேன் பாட்டி…” என்றாள் தாரணி.
“ இதுல நீ மட்டும் தப்புன்னு சொல்ல முடியாது கண்ணு. அவனும் ஒரு போன் பண்ணி உன்கிட்டச் சொல்லியிருக்கலாம். நீயும் அவன் நிலைமையை இன்னும் கொஞ்சம் பொறுமையா கேட்டிருக்கலாம். ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முயற்சி பண்ணணும். அவன் மனசுல இருக்கிறதை உடனே சொல்லிடுவான்னு எதிர்பார்க்காதே. அவனுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடு. அதே நேரம், அவன் பேசத் தயங்கும்போது அவனுக்குத் துணையா இரு. நாளடைவுல அவனும் உன்கிட்டத் தன்னோட மனசுல இருக்கிறதை மறைக்காம பேசப் பழகுவான்,” என்றாள் வள்ளியம்மாள்.
தாரணி சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பிறகு எழுந்து,
“பாட்டி, நான் அவரைப் பார்க்கப் போறேன்,” என்றாள்.
“இந்த நேரத்துலயா?”
“அவர் கிணத்தடியிலதானே இருப்பாரு?”
வள்ளியம்மாள் புன்னகைத்தார்.
“போ கண்ணு. டார்ச்சை எடுத்துட்டுப் போ. வரப்புல கவனமா நட.”
போர்வையையும் டார்ச்சையும் எடுத்துக்கொண்டு தாரணி வயலை நோக்கி நடந்தாள். இரவுப் பனியில் வரப்பு ஈரமாக இருந்தது. கிணற்றை நெருங்கியதும் தனியாக அமர்ந்திருந்த முத்துவின் உருவம் தெரிந்தது.
அவள் வருவதைக் கேட்டுத் திரும்பியவன், எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தான். தாரணி அவனருகில் அமர்ந்து, அவன் தோளில் போர்வையைப் போர்த்தினாள்.
“மன்னிச்சிடுங்க…” என்றாள் மெல்ல.
“எதுக்கு?”
“நான் அவசரப்பட்டு உங்களைத் திட்டிட்டேன். அப்பாவைக் கூட்டிட்டுப் போனதுல எந்தத் தப்பும் இல்ல. ஆனா, ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் இவ்வளவு வருத்தப்பட்டிருக்க மாட்டேன்.”
“நானும் ஒரு போன் பண்ணியிருக்கணும். அது என் தப்புதான்,” என்றான் முத்து.
சிறிது நேரம் தயங்கியவன், பிறகு மெல்லப் பேசினான்.
“உங்க சொந்தக்காரங்க எல்லாரும் படிச்சவங்க. டாக்டர், ஆசிரியர், இன்ஜினியர்னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையில இருக்காங்க. அவங்களுக்கு நடுவுல நான் போய் உட்கார்ந்தா என்ன பேசுவேன்? அவங்க பேசுற விஷயமெல்லாம் எனக்குத் தெரியுமா? என் படிப்பைப் பத்திக் கேட்டா என்ன சொல்றது? என்னைப் பார்த்து ஏதாவது குறையா நினைச்சுப்பாங்களோன்னு ஒரு தயக்கம் இருந்துச்சு…” என்றான் முத்து.
தாரணி அவன் முகத்தையே பார்த்தாள்.
“அதுக்காகத்தான் வரத் தயங்கினீங்களா?”
“ம்…” என்று தலையசைத்தவன், சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டுத் தொடர்ந்தான்.
“உன்கூட வந்தா, உன் சொந்தக்காரங்க முன்னாடி என்னை எப்படி அறிமுகப்படுத்துவேன்னு கூட யோசிச்சேன். அவங்ககிட்ட பேசுறதுக்கு என்னால முடியுமான்னு பயமா இருந்துச்சு. அப்பாவுக்கு செக்கப் இருக்குன்னு தெரிஞ்சதும், அதைக் காரணமா சொல்லிட்டு வராம இருந்துடலாம்னு தோணியிருக்குமோன்னு இப்போ நினைச்சா எனக்கே கஷ்டமா இருக்கு. அப்பாவைக் கூட்டிட்டுப் போனது தப்பில்லை. ஆனா, அந்தக் காரணத்தால உன் கூட வர வேண்டிய அவசியம் இல்லாமப் போச்சேன்னு எனக்குள்ள ஒரு நிம்மதி இருந்திருக்குமோன்னு தோணுது…” என்றான்.
அவன் கடைசி வார்த்தைகளில் இருந்த குற்றவுணர்வை உணர்ந்த தாரணி, அவன் கையை மெதுவாகப் பற்றிக்கொண்டாள்.
“இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் முத்து. உங்க மனசுல இருக்கிறதை என்கிட்ட சொல்லணும். வர விருப்பமில்லன்னா அதையும் சொல்லியிருக்கலாம். நீங்க எதுவுமே சொல்லாம இருந்தா நான் எப்படி உங்களைப் புரிஞ்சுக்க முடியும்?”
“எனக்குப் பழக்கமில்ல தாரணி. மனசுல இருக்கிறதைச் சொல்லணும்னு நினைச்சாலும் எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல.”
“பரவாயில்ல. கொஞ்சம் கொஞ்சமா சொல்லுங்க. நான் கேட்கிறேன்.”
அந்த வார்த்தைகள் அவனுக்குள் இருந்த தயக்கத்தை மெல்லக் குறைத்தன.
அவன் பேசத் தொடங்கினான். படிப்பை நிறுத்திய ஏக்கம், தம்பியின் நண்பர்கள் முன்னால் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது ஏற்படும் தயக்கம், குடும்பத்துக்காகத் தள்ளிப்போட்ட ஆசைகள் என இதுவரை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத விஷயங்களை ஒவ்வொன்றாகச் சொன்னான்.
தாரணி இடைமறிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தாள். அவன் குரல் தடுமாறிய இடங்களில் அவனுடைய கையை மென்மையாகப் பற்றிக் கொண்டாள்.
சிறிது நேரம் இருவருக்குள்ளும் அமைதி நிலவியது. அந்த அமைதியைக் கலைத்த தாரணி,
“செல்வின்னு ஒருத்தியைப் பத்திப் பாட்டி சொன்னாங்க…” என்றாள்.
முத்து அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“அதெல்லாம் பழைய விஷயம் தாரணி. அவ இப்போ நல்லா இருக்கா.”
“அவங்களைப் பத்தித் தெரிஞ்சுக்க எனக்கு ஆர்வமில்லை. அந்த விஷயம் நடந்தப்போ நீங்க எப்படி இருந்தீங்கன்னுதான் தெரிஞ்சுக்கணும்.”
முத்து மீண்டும் வானத்தைப் பார்த்தான். சில நொடிகள் கழித்துப் பேசினான்.
“ரொம்ப வெறுமையா இருந்துச்சு. ஆனா, அதுவும் கொஞ்சம் கொஞ்சமா பழகிடுச்சு.”
அவன் சொன்ன விதம் தாரணியின் மனதை ஏதோ செய்தது. இத்தனை நாள் அவன் சுமந்த வலிகளில் இதுவும் ஒன்று. ஆனால், அதைப் பற்றி அவளிடம் ஒருமுறைகூட அவன் பேசியதில்லை.
“இனிமே எதுவா இருந்தாலும் தனியா சுமக்காதீங்க. சந்தோஷமா இருந்தாலும் சரி, மனசு கஷ்டமா இருந்தாலும் சரி… என்கிட்ட சொல்லணும். உங்க எல்லா உணர்வுகளையும் என்கிட்ட பகிர்ந்துக்கலாம்.”
சிறிது தயக்கத்துடன் அவன் முகத்தைப் பார்த்தவள், அவன் கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
“உங்க வாழ்க்கையில இதுவரைக்கும் எல்லாருக்காகவும் நிறைய யோசிச்சிருக்கீங்க. இனிமே உங்களுக்காகவும் கொஞ்சம் யோசிங்க. உங்க கஷ்டத்துல மட்டும் இல்ல… உங்க சந்தோஷத்துலயும் நான் பங்கெடுத்துக்கணும். உங்க மனசுல இருக்கிற எல்லாத்தையும் என்கிட்ட பகிர்ந்துக்கணும். ஏன்னா, உங்களைப் புரிஞ்சுக்கிற உரிமை எனக்கும் இருக்கு இல்லையா?”
அவளுடைய வார்த்தைகளில் இருந்த உரிமையும் அன்பும் முத்துவின் மனதைத் தொட்டன.
“இனிமே எதையும் என்கிட்ட மறைக்காதீங்க. உங்க மனசுல என்ன இருந்தாலும் என்கிட்ட சொல்லணும். உங்களைத் தனியா தவிக்க விடமாட்டேன்…” என்றாள்.
முத்து எதுவும் பேசவில்லை. ஆனால், அவளுடைய கையைத் தன் இரு கைகளுக்குள்ளும் வைத்துக்கொண்டு இறுக்கமாகப் பற்றினான்.
அந்த மௌனத்தில், அவளுடைய அன்பை ஏற்றுக்கொண்ட ஒரு சிறிய நிம்மதி இருந்தது. அதை உணர்ந்த தாரணி, அவன் தோளில் மெதுவாகச் சாய்ந்துகொண்டாள். அவனும் அவளை விலக்காமல் அப்படியே அமர்ந்திருந்தான்.
சிறிது நேரம் கழித்து தாரணி புன்னகைத்தாள்.
“உங்ககிட்ட ஒரு பழக்கத்தை மாத்தணும்.”
“என்ன பழக்கம்?”
“நான் ஏதாவது கேட்டா உடனே ‘பாக்கலாம்’னு சொல்லிடுறது! உங்களுக்கு விருப்பமா இல்லையா, சம்மதமா இல்லையான்னு எனக்குப் புரியவே மாட்டேங்குது. இனிமே சரின்னா சரின்னு சொல்லுங்க, முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லுங்க. நான் ஒண்ணும் உங்க மனசைப் படிக்கத் தெரிஞ்சவ இல்லையே!” என்றாள் குறும்பாக.
முத்து சிரித்தான்.
“சரி, இனிமே அப்படியே சொல்றேன்.”
“இப்போதான் என் பேச்சைக் கொஞ்சம் கவனிக்கிறீங்க!” என்று அவள் சிரிக்க, அவனும் அவளுடன் சேர்ந்து சிரித்தான்.
****
கிழக்கில் வானம் மெல்ல வெளுக்கத் தொடங்கியிருந்தது. வயல்வெளியின் மீது முதல் சூரிய ஒளி படர்ந்தது.
“இந்த நேரம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்,” என்றான் முத்து.
“ஏன்?”
“வயல் முழுக்க அழகா இருக்கும். எல்லாமே புதுசா ஆரம்பிக்கிற மாதிரி இருக்கும்.”
“அப்படியா? இனிமே எனக்கும் இந்த நேரம் பிடிக்கும்,” என்ற தாரணி, அவன் தோளில் சாய்ந்து கொண்டே.
அன்று அதிகாலையில் முத்து வழக்கம்போல் தனியாக விடியலைப் பார்க்கவில்லை. தன் மனதிற்குள் இருந்த பாரத்தை இன்னொருவரிடம் இறக்கி வைத்திருந்தான். அவன் சொன்னதைக் கேட்டுவிட்டு விலகிச் செல்லாமல், அருகிலேயே இருந்தாள் தாரணி.
வீட்டு வாசலில் நின்ற வள்ளியம்மாள், கிணற்றருகே ஒன்றாக அமர்ந்திருந்த இருவரையும் பார்த்தார். அவர் முகத்தில் நிறைவான புன்னகை மலர்ந்தது.
“இனி இந்த வீடு மாறும்…” என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்.
தொடரும்…
