இருள் நிழலாய் நானே 15

இருள் நிழலாய் நானே 15

“இன்னொரு முறை மகிக்கூட நீ சண்டை போட்டா நான் திரும்பி போயிடுவேன்.” ஓங்கி ஒலித்த சமரின் குரலில் தன் கோபத்தை கட்டுப்படுத்தி அனல் விலகி நிற்க, மகி அமைதியாக அவளது அத்துவை ஏறிட்டாள்.

“நீ என்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கும் தெரிய வேண்டாம். அமைதியா என்னோடவே இரு போதும்” என்ற சமரிடம் முதல் முறையாக அவனது லட்டுவின் மீது கோபம்.

“டேய் வாடா!”

சற்று முன்னர் நடந்த இரு ஆன்மாக்களின் ஆக்ரோஷ சண்டையில் சீனு உண்மையிலேயே பயந்திருந்தான். அவனது உடல் வெளிப்படையாக நடுங்கிக் கொண்டிருந்தது.

சமர் தான் அவனை இழுத்துக்கொண்டு நடந்தான்.

“எந்த தைரியத்தில் மச்சான் நாம இப்போ அங்க போயிட்டு இருக்கோம். நல்ல ஆன்மா கூட சுயம் தொலைக்கும் போது இத்தனை ஆக்ரோஷம் கொள்ளுமா?” என்று அச்சத்தோடு வினவினான்.

“நீ இப்படியே போயிடு சீனு. நான் என் மகிக்காக போறேன். நீ எதுக்கு தெரிஞ்சே ஆபத்தில் சிக்குற?” என்றான் சமர்.

“நான் என் பிரண்டுக்காக போறேன்” என்று பட்டென்று சொல்லிய சீனு, சமரை முந்திக்கொண்டு சென்றான்.

“இப்பவும் சொல்றேன். உன்னோட காற்றா வாழ்கை முழுக்க இருந்திடுறேன். இவள் சொல்லுறான்னு அங்க போகாத அத்து” என்றது மகியின் ஆன்மா.

“நீ இறந்து போயிட்டன்னே இருக்கட்டும் லட்டு.” இதனை சொல்லும் போது சமருக்கு அத்தனை வலித்தது.

“உன் உடல் எனக்கு வேண்டாமா? எதுக்காக உன் உடலை பத்திரப்படுத்தி வைக்கணும்?” என்றான்.

இந்த கேள்விக்கு மகிக்கே பதில் தெரியாதே! என்ன சொல்லுவாள்.

பாவமாக பார்த்து நின்றாள்.

“மகி சாகல” என்று அனல் சொல்லிட, சமரிடம் ஆச்சரியமில்லை மகிழ்வு மட்டுமே. அவன் தான் தினேஷ் அழுத்தமாக சொல்லிய போதும் மனதில் ஓர் மூலையில் தன்னவளின் இருப்பை உணர்ந்து கொண்டே இருந்தானே! அவளின் உயிரற்ற உடலை நேரில் பார்த்திருந்தால் நம்பியிருப்பானோ? நிதர்சனம் எதுவென்று ஏற்றிருப்பானோ?

மகிக்கு அதிர்வு. அவளால் எப்படி என்று அனல் சொல்வதை நம்ப முடியவில்லை.

“வேண்டாம் அத்து… உன்னை அங்க கூட்டிட்டுப் போக இவள் இல்லாத ஒன்னை இருக்குன்னு சொல்லி நம்ப வைக்க டிரை பண்ணுறாள். உன் முன்னாடி நான் ஆவியா நிக்கும்போதும் உன்னால் நம்ப முடியலையா?” என்றது பனிப்புகை.

“நான் பொய் சொல்லல” என்ற அனல்,

“உன் மகி உயிரோடு தான் இருக்கிறாள். உன் கண்ணு முன்னாடி நிக்கிற இந்த பனிப்புகை அவளின் ஆன்மாவின் ஒரு பகுதி தான். இவளோட உடலை நீ கண்டுபிடிச்சிட்டால் எல்லாமே சரியாகிடும்” என்ற அனல், “இவளால் என்னை கட்டுப்படுத்த முடியாததுக்கு காரணம் இதுதான். அவளோட முழு ஆன்மா உடலை விட்டு வெளியேறல” என்றது.

“இது எப்படி சாத்தியம்?” என்று மகி கேட்க,

“படத்தில் காட்டினா நம்புறீங்க தானே! அப்போ இதையும் நம்புங்க. இது தான உங்க மாடர்ன் சயின்ஸ். அறிவியல் என்னைக்கு புரிஞ்சிருக்கு. அறிவியலுக்கும் மிஞ்சியது இயற்கை. இயற்கையை முழுசா புரிஞ்சிக்கிட்ட யாரும் இங்கில்லை” என்ற அனல், “இங்க நடப்பது எதோ மனித சக்தியின் சூழ்ச்சி. அவர்களின் தேவைக்கு கிட்டத்தட்ட நாப்பது வருடங்களுக்கு மேலாக இவ்விடத்தை மர்ம கிராமமாக உருவகப்படுத்தி வைச்சிருக்காங்க” என்றது.

“புதுசா எதுவும் சொல்லி குழப்பாதே!” மகி மறைந்தாள். அவளால் இங்கு வந்தது முதல் தன் கண்ணையே, தான் நம்ப முடியாத நிலை தான்.

“அவள் உன்னை விட்டு எங்கும் போயிடமாட்டாள்.”

அனல் கூறிட பேச்சின் ஊடே வந்து சேர்ந்த இடத்தை சிறு அதிர்வோடு ஏறிட்டுப் பார்த்தான் சமர்.

காடு தொடங்கும் பகுதி. அத்தனை அடர்ந்து, பாதையின் விளிம்பு கூட தெரியாது புதர் போன்று அனைத்து இடங்களும் மண்டி கிடந்தன.

அனலும், சமரும் பேசியபடி வருவதை அமைதியாகக் கேட்டபடி வந்த சீனு, “வழி கண்டு பிடிங்க. நான் இப்படி உட்காருரேன். கால் வலிக்குது” என அங்கிருந்த கல்லின் மீது அமர்ந்துவிட்டான்.

இரு ஆன்மாக்களும் சண்டையிட்டு நேரம் கரைந்திருக்க, ஏழு மணியை அடைய இன்னும் இருபது நிமிடங்களே இருந்தது. அதற்குள் காட்டை கடந்து, மூன்று பனை மரத்தை தொடுவது சாத்தியமில்லாதது.

“இப்போ ஊர் போய் சேருவது கஷ்டம்” என்ற அனல், “இரவு இங்கேயே நின்னுட்டு விடியலின் போது காட்டுக்குள் இறங்கலாம்” என்றது.

“ராத்திரி முழுக்க இங்கவா?” என்ற சீனு, “எனக்கு பசிக்குதுடா” என்றான் பாவமாக.

“பேசாம கிளம்பிடுங்க.” மகியின் குரல் மட்டும் கேட்டது.

“நேரத்தை வீணாக்க முடியாது” என்ற சமர், “எப்படியும் அங்கு என்ன நடக்குதுன்னு நாங்க நேரில் தெரிஞ்சிக்க வேண்டும் தானே! அது இன்னைக்கு இப்போவே இருந்தாலும் சரி தான்” என்றான்.

மொபைல் டார்ச்சை உயிர்ப்பித்தான்.

“இந்த வெளிச்சம் எத்தனை நேரத்துக்கு வரும்?” என்ற அனல், தன் அரூபமாக பற்றி எரிந்தது.

அவ்விடம் முழுக்க தீயின் வெளிச்சம்.

“அத்து பிளிஸ். அட்லீஸ்ட் விடிஞ்சதுமாவது போ” என்ற மகியின் குரலை சமர் பொருட்படுத்தவில்லை.

முடிந்தளவு மகியின் உடலை அவன் பார்க்க வேண்டும். காரணம் அறிய வேண்டும்.

“நீ என் பக்கத்திலே இருக்க. ஒன்னும் ஆகாது லட்டு” என்று சமர் கை நீட்டிட, அவனது கையில் மகி பற்றிக் கொண்டதற்கு அடையாளமாக சில்லென்ற உணர்வு.

அனல், முன்னே அடி வைக்கும் அளவிற்கு தன் நெருப்பால் பாதை அமைத்து முன் செல்ல, சீனு மற்றும் சமர் பார்த்து அடி வைத்து முன்னேறினர்.

“பேசாம நீ எங்களை தூக்கிட்டு போகலாம்” என்று சீனு சொல்ல, “அந்தளவுக்கு வித்தை ஆன்மாக்களுக்கு இல்லை” என்றது அனல்.

“புரியல?” என்ற சீனு “அப்புறம் எப்படி நெருப்பா எரிய மட்டும் செய்யுற?” எனக் கேட்டான்.

“என்னை அப்படித்தானே கொன்னாங்க?” அனல் என்னவோ சாதாரணமாக சொல்லிவிட்டது, கேட்டிருந்த சீனுவுக்கு அத்தனை வேதனையாக இருந்தது.

அவனால் அந்த அனலின் பின்னால் நெருங்கி செல்வதே அத்தனை தகிப்பாக இருந்தது. இதில் அவளை உயிருடன் எரித்து இருக்கிறார்கள்… எப்படி துடித்திருப்பாளோ? நினைக்கையில் சீனு மற்றும் சமருக்கு அதீத வருத்தம்.

“உன்னை ஏன் கொன்னாங்க?”

“மகிக்கு லெட்டர் போட்டன்னு?”

சீனு கேட்டு அனல் பதில் சொன்னதும், மகி அதிர்ந்தாள்.

“நீதான் லெட்டர் போட்டியா?”, மகி.

“ஆமா…”, அனல்.

“அப்போ நீ?”

“நான் தும்பை. பருத்தியின் மகள்” என்றது அனல்.

“அத்து… இவள் உன் தங்கச்சி.” மகி சொல்வதை சமர் ஆச்சரியமாகக் கேட்டான்.

“என்ன சொல்ற மகி?”

மகி, தினேஷுடன் வந்த இரண்டு நாட்களில் பருத்தி கோமளத்தின் தங்கை என்று அறிந்து கொண்டிருந்தாள்.

கோமளாவை சிறு வயதில் பார்த்தது நினைவில்லை என்றாலும், அவரின் புகைப்படம் வீட்டில் இருக்கிறதே! தினமும் பார்த்திடுவாளே! அதை வைத்து பருத்தியின் வீட்டில் தங்கியிருந்த போது அங்கிருந்த கோமளாவின் படம் வைத்து கண்டு கொண்டிருந்தாள்.

அதனை தற்போது சமரிடம் விளக்கினாள்.

சமருக்கு அனல் தன்னை இருமுறை அண்ணா என்று விளித்த காரணம் தெரிந்தது.

“அப்போ என் அம்மா, அப்பாவையும் இங்க தான் கொன்னு இருக்காங்க ரைட்?” எனக் கேட்டான் சமர்.

நின்று திரும்பிய தும்பை ஆம் என்றது.

அன்று பாறை மீது அமர்ந்து தன் ஊரில் நடக்கும் மர்மம், தான் பார்த்தது என தும்பை யோசித்துக் கொண்டிருக்கும்போதே மெல்ல இருட்டத் துவங்கியது. உடல் நிலை சரியில்லாததால் சில நாட்கள் வீட்டிலேயே படுத்து கிடந்தது அசதியாக இருந்திட உறக்கம் வரவில்லை என்று திண்ணையில் சென்று அமர்ந்து கொண்டாள் தும்பை.

“எங்கையும் போகாத தும்பை. இங்கவே உட்காந்திரு. தூக்கம் வந்தா உள்ள வந்து படு” என்று நாள் முழுக்க செய்த வேலையின் அலுப்பால் பருத்தி சென்று படுத்துக் கொண்டார்.

திண்ணையில் அமர்ந்திருந்த தும்பை, நேரம் செல்ல தூணில் சாய்ந்தபடி உறங்கியிருந்தாள்.

வழக்கமான நேரம் வந்ததும், காக்கைகளின் இரைச்சல், குதிரையின் கணைப்பின் ஒலியுடன் கூடிய சலங்கை சத்தம் என பல ஒலிகள் காதை நிறைக்க மெல்ல கண் திறந்தாள் தும்பை.

உள்ளே செல்ல நினைத்தவள், நொடியில் தன் கிராமம் நலன் பெற வேண்டுமென்ற எண்ணம் தோன்ற மூன்று பனைமரம் நோக்கி நடக்கத் துவங்கினாள்.

அன்று அவள் பார்த்த அனைத்தும் இன்றும் அப்படியே நடந்தது. கொஞ்சமும் மாற்றமில்லை.

மூன்று பனை மரம் அடைந்ததும், தூரத்து ஆல மரத்தில் பிணம் தொங்கிய நிலையில் எரிந்தது.

உண்மையில் அது பிணம் தானா எனும் சந்தேகம் எழவே, பனை மரங்கள் தாண்டி அடி வைத்தாள். அருகில் நெருங்க நெருங்க ஒரு மாற்றம். அவளால் அங்கு நிகழும் வித்தியாசத்தை உணர முடிந்தது. ஆனால் கண்ணில் காணும் காட்சி நிஜமென அடித்து சொல்லியது.

பனை மரத்திற்கு அடுத்த பக்கம் இருக்கும் மலை பாதையில் குதிரை செல்லும் சத்தம், திரும்பிப் பார்த்தாள்.

ராஜ அலங்காரத்தில் வெண் குதிரை துள்ளி குதித்து ஓடிக் கொண்டிருந்தது. அதன் மேல் கரிய உருவம் ஒன்று அமர்ந்திருந்தது. மெல்ல இவளை நோக்கி திரும்பியது.

சட்டென்று மனதில் பயம் சூழ, அந்த கரிய உருவத்தில் இருட்டிலும் நெருப்பு எரிவதைப்போல் தெரிந்த சிவப்பு கண்களில் அரண்டு தும்பை திரும்பிட, மரத்தில் எரிந்து கொண்டிருந்த பிணம் அவளின் முகத்தின் மிக அருகில் மூக்கோடு மூக்கு உரச இரத்தம் வழிய நின்றிருந்தது.

திக்கென்று பயத்தில் மூச்சு உறைய கண்கள் விரிந்து, நா மேலண்ணம் ஒட்டிக்கொள்ள மெல்ல பின்னோக்கி அடி வைத்திட…

“தெரிஞ்சிக்கக் கூடாத விஷயத்தை தெரிஞ்சிக்க நினைக்கக் கூடாது” என்று குரல் ஒலித்தது.

நிச்சயம் அவள் கண் முன் நிற்கும் பிணம் பேசவில்லை.

‘அப்போ இந்த குரல்?’ தும்பை மீண்டும் திரும்பி பார்த்திட, தலைக்கு மேல் காக்கைகள் சுற்றியது.

“இப்போ நீ சாகப் போற?” மீண்டும் வெறும் குரல் மட்டும்.

“யாரு?” தும்பை குரல் நடுங்கக் கேட்டாள்.

“நான் யாருன்னு தெரிஞ்சிக்க பத்திரிக்கை புலனாய்வு ஆட்களை தொடர்பு கொண்ட தானே?” என்ற குரல், “அப்படி இங்க என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கிறேன்னு யார் வந்தாலும் உன் நிலை தான். என்ன ஒண்ணு எதையும் தெரிஞ்சிக்காம நீ சாகப்போற” என்று குரல் முடியும் முன்பு தும்பையின் உடல் மீது நெருப்பு பற்றியிருந்தது.

“யார் என்கிட்ட பேசுனது. அந்த குதிரை, பிணம், காகம் எல்லாம் நிஜமா? குதிரை மீது யார் உட்கார்ந்து இருந்தாங்க? எதுவும் தெரியல. இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்” என்றது அனல்.

“ராகுல், வர்ஷா?” சமர் வேகமாகக் கேட்டிருந்தான்.

“தெரியல அத்து. உன் சித்தி எனக்கும் தினேஷுக்கும் முன்ன இங்க யாரும் வரலன்னு சொன்னாங்க. இவளுக்குத் தெரியும் சொல்லமாட்டேங்கிறாள்” என்றது மகியின் ஆன்மா.

“என் கண்ணு முன்னாடி ரெண்டு பேரும் மறைஞ்சு போனாங்க. எப்படின்னு தெரியாது” என்ற அனல், “இந்நேரம் நீங்க வந்தது தெரிஞ்சிருக்கும். கவனமா இருங்க” என்றது.

இவர்கள் நடு காட்டில் நின்று கொண்டிருக்க…

யாரோ சத்தமிட்டு சிரிக்கும் சிரிப்பின் ஓலம் காடு முழுக்க பரவி விரவியது.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top