வேள்வி : 13

அத்தியாயம் : 13

பரிதிவர்மன், முந்தைய நாள் தனது மனைவியிடம் பேசிய காதல் உரையாடல்கள் அவளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் என்று நினைத்து, அவளைப் பிரிய மனமில்லாமல் வேலைக்குச் சென்றுவிட்டான். அங்கு சென்றதும், ஹரி பிரசாத் அவனது புன்னகை முகத்தைக் கண்டு என்னவென்று விசாரித்து நடந்ததை தெரிந்துகொண்டான்.

“அப்போ ஒரே கவனிப்பு தானா? மனைவி ஒரு பக்கம், மகள் மற்றொரு பக்கம்னு… நீங்க இப்படி இருப்பதைப் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு! இப்படியே இருங்க” என்று மனதாரச் சொன்னான்.

அவன் சிரித்தபடி, “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? எங்க மாமனார் தன் மகளிடம் இறக்கும் முன் ஏதேதோ சொல்லிக் கொடுத்திருக்கார். இவள் அதை வச்சுட்டு என்கிட்ட காலையிலே வம்புக்கு வர, அவளைச் சமாளித்து வருமுன் ஒரு வழி ஆகிட்டேன்” என்றான்.

இருவரும் இணைந்து சிரித்தார்கள்.

“இப்படி துரத்துவதுக்கும் ஒருத்தர் வேணுமே! இல்லன்னா லைஃப் போரடிக்கும்” என்றான் ஹரி பிரசாத்.

“ஆமாம் பிரசாத்! நானும் கூட இப்படி எல்லாம் எதிர்பார்க்கல. அவளை எப்படி என்கிட்ட கொண்டு வருவதுன்னு தெரியாமத்தான் இருந்தேன். அவளும் கூட மனசு முழுக்க என்னை நினைச்சுட்டு மறுபடியும் வர முடியாமத்தான் இருந்திருக்கா; எல்லாத்துக்கும் அவள் தம்பி அகிலனுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றதும், அந்தச் சிறுவனைச் சந்தித்துப் பேசிய நினைவில் அவனது முகம் வாடியது. பாவம், அவன் முகத்தில் தான் எத்தனைப் பயம், தவிப்பு!

பெருமூச்சுடன் தனது இருக்கையில் சென்று அமர்ந்தவன், அன்றைய வேலைகளில் மூழ்கினான். இவனது மனைவி முன்பு ஒரு சில பிராஜக்ட்களை அனுப்பியிருந்தாள். அதை ஏற்கனவே முடித்துக் கொடுத்திருந்தாலும், அங்கிருந்து ஒரு சில ஒப்பந்தங்கள் அவ்வப்போது வரவே செய்கின்றன.

ஏற்கனவே பணிபுரிபவர்களைத் தவிர்த்து, உதவியாளர்கள், காவலாளி, சுத்தம் செய்பவர், வாகன ஓட்டுநர் என்று நிறைய பேர் உள்ளனர். கோழிப்பண்ணை, வீடு, தோப்பு என ஏகப்பட்ட பணியாட்கள் அவனிடம் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நியாயமான ஊதியம், வாகனங்களுக்குப் பெட்ரோல் … என்று மாதம் ஒரு பெரிய தொகை செலவாகிறது.

 

 அவன் அதை எல்லாம் பொருட்படுத்துவதில்லை. இன்னும் கொஞ்சம் ஆட்களை வேலையில் சேர்த்து, அந்த அலுவலகத்தை விரிவுபடுத்தும் ஆசையில் இருக்கிறான்! மதிய நேரம் வீட்டிற்கு வந்தவனின் கண்கள் சாப்பாட்டு மேஜையில் இருந்த உணவைக் கண்டதும் விரிந்தன.

“நண்டு வறுவலா?” என்று அவன் அட்டகாசமாக சிரிக்க, அவளது முகம் ரத்தமெனச் சிவந்துபோனது.

“அப்பா நண்டு, நண்டு!” என அம்மாவையும் தட்டில் இருப்பதையும் பார்த்து மகள் சொல்ல, அவன் உரத்த குரலில் சிரித்தான். “அப்பா இன்னைக்கு கடல் நண்டையும், வீட்டு நண்டையும் சேர்த்து சாப்பிட போறேனே!” என்று மனைவியைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.

மகள் “நானும்… நானும்!” என்றதும் ஒரே சிரிப்பு வந்து அவனுக்குள் ஒட்டிக் கொண்டது.

பத்து நிமிடத்தில் அங்கிருந்த உணவைக் காலி செய்துவிட்டு ஏப்பம் விட்டபடி அறைக்குள் வர, மகள் அப்பாவின் கன்னத்தைப் பற்றிப் பிடித்தவாறு பேசிக்கொண்டிருந்தாள். சரியாக ஒரு மணிக்கு வந்துவிட்டு, இரண்டு மணிக்குப் புறப்பட்டு வெளியேறியவன், மாலை நேரம் வந்ததும் அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு பண்ணை வீட்டிற்கு வந்தான்.

பண்ணை வீட்டின் முன்புறம் பைக்கை நிறுத்திய பரிதிவர்மன், உற்சாகமான மனநிலையுடன் இறங்கி மகளைத் தூக்கிப் பிடித்து விளையாடினான். அவள் கலகலவென நகைத்து, அந்த இடத்தில் இருந்த அமைதியைத் துரத்தி அடித்தாள்.

நந்தனா பைக்கின் அருகில் நின்றபடி சுற்றிலும் பார்க்க, மாமா தாணுலிங்கத்தின் சமாதியில் அணிவிக்கப்பட்டிருந்த மலர்மாலை அவர்களை வரவேற்றது. அதை நோக்கி நகர்ந்து சென்றவள், பழைய ஞாபகத்தில் கண் கலங்கினாள். அவனும் மகளுடன் அங்கு வந்து நிற்க, மூவருமாகச் சேர்ந்து அவரைக் கைகுவித்து வணங்கினர்.

இதே வீட்டில் இதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் மனதை விட்டு அகல மறுத்தன. அதை நினைத்துக்கொண்டே, சமாதியைத் தொட்டுக் கும்பிட்டு வீட்டிற்குள் வந்தனர். அத்தனை நாளைய தனிமை அகன்று, மூவரின் வரவால் அந்த வீடு பளீரென்று காட்சியளித்தது.

பரிதிவர்மன் புன்னகையுடன் சோஃபாவில் சென்று அமர, அவளால் அத்தனை எளிதாகப் பழையதை மறக்க முடியவில்லை. அவன் அவளைத் தன் அருகில் அமர வைத்து மடியில் சாய்ந்து கொள்ள, மகள் அவனது வயிற்றின் மீது அமர்ந்து கொண்டு குதித்தாள்.

“என்ன நண்டு, ஏன் முகமெல்லாம் வாடிப் போயிருக்கு?”

அவள் இல்லை என்றாலும் விடாமல் பரிதிவர்மன் கேட்க, “மாமாவுடன் கடைசியா இதே வீட்டுக்கு வந்த ஞாபகம் மனதை அரிக்குது. இப்ப மாமா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!” என்று ஒருவித ஏக்கத்துடன் பதிலளித்தாள்.

அவன் எதுவும் சொல்லாமல் சுவரில் இருந்த புகைப்படத்தைப் பார்த்தான். பின்னர் அவளது பக்கமாகத் திரும்ப, நந்தனா கணவனின் கேசத்திற்குள் கை நுழைத்து இதமாக வருடிவிட்டாள். கண்களை மூடிச் சற்று நேரம் படுத்திருந்தவன் அவளைப் பார்த்து, “அப்பா நம்மை விட்டு எங்கேயும் போகமாட்டார். அவரது கடைசி நேரத்தில் கூட உன்னையும் என்னைப் பற்றியும் தான் நினைச்சுட்டு இருந்திருப்பார். அப்பா மனசுல நம்மைத் தவிர வேறு எதுவுமில்லை. அவருக்கு நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வச்சு, நீ அந்த வீட்டுல வந்து எல்லாருமா சேர்ந்து சந்தோஷமா வாழணும்னுதான் ஆசை. ஆனால், இதை அப்பா வாய் திறந்து ஒரு நேரமும் சொன்னது இல்லை; உங்க அப்பா சொல்லிதான் எனக்குமே தெரிஞ்சது. மனசுக்கு அவ்வளவு கஷ்டமா இருந்தது. எங்க அம்மாவுக்கு நிச்சயம் தெரியாம இருக்க வாய்ப்பில்லை. பிறகும் இப்படி நடந்துட்டாரேன்னுதான் பயங்கர கோபம்!” என்று முந்தைய நிகழ்வுகளை விளக்கினான்.

அவள் கண்மூடி சோஃபாவில் சாய்ந்தபடி, தான் செய்த தவறுகளை நினைத்து வெம்பினாள். மகள் அவனது வயிற்றைக் கட்டிக்கொண்டு தூங்கிவிட, அவளைத் தூக்கிச் சென்று படுக்கையில் கிடத்திவிட்டு வந்தான் பரிதிவர்மன்.

அவள் அந்த இடத்தை விட்டு அசையாமல் இருப்பதைப் பார்த்து விட்டு, “நந்து, நடந்த எதுவும் மாறப் போவதில்லை. இனிமேல் நடக்க வேண்டியதைப் பார்க்கலாம். அப்பாவால் நம்மை விட்டுப் பிரிஞ்சிருக்க முடியாது. அவர் எப்பவும் நம்ம கூடவேதான் இருப்பார். நீ வேணா பாரு, நமக்குப் பிறக்கக்கூடிய முதல் குழந்தை பையனாகத்தான் இருக்கும். அதுவும் அப்பாவே உன் வயிற்றில் மழலையாகப் பிறப்பார்” என்று நம்பிக்கை அளித்தான்.

அதன் பிறகு அன்று முழுவதும் அங்கேயே செலவிட்டு, மறுநாள் தங்களது வீட்டிற்கு வந்தான். அப்போது பண்ணை வீட்டு அலமாரியில் வைத்திருந்த ஆவணங்கள் வரிசையாக வைத்த இடத்தில் மாறி இருப்பது கண்டு அதனருகில் சென்று பார்த்தான். யாரேனும் வந்திருப்பார்களா? அல்லது நாம்தான் அவசரத்தில் வந்து மாற்றி வைத்தோமா என்று நினைத்தபடி அனைத்தையும் சரிபார்த்தான். நேரம் வேறு சென்று கொண்டிருக்க, அவனுக்கு அலுவலகத்திற்கும் போக வேண்டும்.

கோழிப் பண்ணை சம்பந்தமான ஆவணங்களை அவன் அங்கே வைத்திருந்தான். அவற்றை இனி மொத்தமாக வீட்டில் கொண்டு வைக்க வேண்டும் என்று நினைத்தவன், மதிய நேரத்தில் வந்து எடுத்துச் செல்லலாம் என மனைவி மற்றும் மகளுடன் வீட்டிற்குச் சென்றான்.

சற்று நேரத்தில் வேறு ஆடைக்கு மாறியவன், அவர்களிடம் விடைபெற்று சென்றுவிட, மதிய நேரம் வரும்போது நேராகப் பண்ணை வீட்டிற்குச் சென்று மொத்தத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான். வீடு அமைதியாக இருந்தது. மனைவி மகளின் சத்தமே இல்லை, அவன் நிவேதா உறங்கி இருப்பதாக நினைத்து, மாடியில் உள்ள தனது படுக்கை அறைக்குள் இருக்கும் இன்னொரு அறையான அலுவலக அறைக்குள் நுழைந்து கையில் இருந்தவற்றை வைத்து விட்டு, வெளியே வந்தான். அங்குள்ள படுக்கையில் மகள் உறங்கிக்கொண்டிருந்தாள்.

 

குளியலறையில் சத்தமும் கேட்டது. அவன் மனைவி உள்ளே இருப்பதாக நினைத்துப் புன்னகைத்தபடி, மகளின் முகத்தை மிருதுவாக வருடிவிட, குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

தன் மனைவி நந்தனா வருவதாக நினைத்து, “என்ன நண்டு, நான் இல்லாத நேரம் மாடிக்கு எல்லாம் வந்திருக்கே? இனிமேல் தினமும் இங்கயே இரவு பொழுதை கழிக்கலாமா? இங்குள்ள பாத்ரூம் தான் வசதியா இருக்கும்” என்று சொன்னான்.

அவள் பதில் சொல்லாமல் அமைதியாக நிற்க, “என்ன ஆச்சு? மறுபடியும் அம்மா எதுவும் சொல்லிட்டாங்களா?” என்று கேட்டுக்கொண்டே அருகில் சென்று தோளில் கை வைத்துத் திருப்ப, அத்தனை நேரம் வெளியே பார்த்தபடி நின்றவள் மெல்லத் திரும்பினாள்.

“ரக்ஷனா!!” என்றவன் நா அசையாமல் மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

அவள் அலட்சியமாக அவனைப் பார்க்க, “நீ… நீ எப்ப இங்க வந்தே? அமெரிக்காவிலிருந்து கிளம்பும் முன் எனக்கு யாரும் தகவல் தரலயே!” என்று அதிர்ச்சியுடன் வினவினான்.

அவள் இதழை வளைத்துக் கேலிப் புன்னகையை பதிலாக தந்தாள்.

“என்ன ரக்ஷனா? ஏன் அமைதியா இருக்க? அத்தை, மாமா வரலையா? எங்கே, வீட்டுல காணுமே!” என்று அவள் மீதான கோபத்தை இரண்டு வருடங்களுக்குப் பிறகு வந்திருப்பவளிடம் காட்டாமல் நின்றான்.

அவளது முகம் இறுகிப் பின் இளகியது.

“கட்டுன பொண்டாட்டியை கண்டதும் என்னே ஓர் பாசம் இல்லையா அத்தான்?”

“ஏன், இருக்கக் கூடாதா? என்ன இருந்தாலும் நீ என் மாமாவின் மகளாயிற்றே!”

“அவ்வளவு தானா?” என்று கேட்டுச் சிரித்தவள், “உங்க விசாரிப்பைப் பார்த்தா உண்மையான அன்புடன் விசாரிப்பது போலத் தெரியலயே!” என்றாள்.

அவன் புருவத்தைச் சுருக்கியபடி இருக்க, அவனது தோளைச் சுற்றிக்கொண்டு வந்தவள், “என்னைப் பார்த்து எவ்வளவு நாளாகுது! ஒரு நாளாவது வந்து பார்த்திருக்கலாம். இந்தக் குழந்தையைக் கொண்டு வந்து காட்டியிருக்கலாம். என்னையாவது வரச் சொல்லியிருக்கலாம்… எதுவுமே செய்யாம இப்ப விசாரிப்பில் ஈடுபடுவது சரி தானா?” என்று தோளைக் குலுக்கினாள்.

“நீ எந்த நிலமையில் இங்கே இருந்து போனேன்னு மறந்துட்டியா?”

“நான் அப்படி போக காரணமே நீங்க தானே!”

“பழையதை பற்றிய பேச்சு இனி வேண்டாம்”

அவள் சத்தமாக சிரித்தபடி, “ஏன் போனவள் போகட்டும்னு ஒரேடியா தலை முழுகிட்டீர்களா?” என்று கேட்டாள்.

அவன் முகம் மாற நிற்பதைக் கண்டு, “அன்னைக்கு என்னவோ நான் கேட்டதுக்கு அந்த நந்தனாவை விரும்பல, அத்தை மகள்னுதான் பாசத்தில் பழகியதா சொன்னீங்க; பிறகு பார்த்தா என்னைக் கல்யாணம் செய்துட்டு வந்த பின்னும் அவளைத்தான் நினைச்சுட்டு இருந்தீங்க” என்றாள்.

“நீ இப்பதான் ஊர்ல இருந்து வந்திருக்கே! எதுக்கு தேவையில்லாத பேச்சு. அத்தை மாமா இங்கு வரலயா? நீ மட்டும்தான் வந்து இருக்கியா?” என்று அவன் பேச்சை மாற்ற, “அத்தை மேல தான் என்ன பாசம், அவர் சொன்னா பிடிக்காத பெண்ணா இருந்தாலும் உடனே கல்யாணம் செய்துக்குவீங்க இல்லையா?” என்று காரமாக வினவினாள்.

“ரக்ஷனா! நீ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கே! நீ என் மாமன் மகள். அந்த எண்ணத்தில் தான் இப்பவும் பேசுறேன். அவள் என் அத்தை பொண்ணு. என் கண்ணு முன்னே பல கஷ்டங்களை அனுபவித்து, கண்ணீர் கவலையில் மூழ்கி வாழ்ந்தவள். அவளைப் பார்த்துக்கும் பொறுப்பை அப்பா என்னை நம்பி ஒப்படைத்தார். உன்னைக் கட்டிக்கிட்ட காரணத்தால் அவளைப் பார்க்காம இருக்க முடியாது” என்றான் பரிதிவர்மன்.

“ஓ மாமன் பொண்ணா? அதுசரி!”

 “ஆமாம்! உன்னை அந்த உரிமையில் மட்டும்தான் நான் பார்க்கறேன். அவளை எப்போ வேணா பார்க்கவும் பேசவும் எனக்கு உரிமையிருக்கு. அவளைப் பார்க்காதே, பேசாதே சொல்ல யாருக்கும் உரிமையில்லை!”

அவள் கை தட்டிச் சிரித்தாள்.

“இதையே நான் செய்தா நீங்களும் ஏத்துக்குவீர்களா?” என்று கேட்க, அவன் பதில் கூறாமல் நின்றான்.

“ரைட்! அது உங்க விருப்பம். இனிமேல் நான் இந்த வீட்டுலதான், அதுவும் உங்க மனைவியா இருக்கப் போறேன்” என்று அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டாள்.

அவன் மறுத்துக் கூறாமல் நின்ற விதமே, அவளை இந்த வீட்டில் தங்க அனுமதித்துவிட்டான் என்று சொல்லாமல் சொல்லியது.

“அப்புறம், எப்படி இருக்கீங்க?” என்று வினயமாகக் கேட்டாள். தொடர்ந்து, “கொஞ்ச நாளா எனக்கு உங்க ஞாபகம் தான். கோபத்தையும் மீறிப் புருஷனைப் பார்க்கணும்னு ஆசை. அதான் அப்பா கூப்பிட்டதும் மறுக்காம வந்துட்டேன்.” என்றாள்.

அவன் அசையக்கூடச் செய்யாமல் நின்றான்.

“குழந்தையை வயித்துல குடுத்தா மட்டும் போதாது; அதுக்கு தக்க நடந்துக்கவும் தெரியணும்” என்று கிண்டலாகச் சொன்னாள்.

அவள் வேண்டுமென்றே தன்னிடம் வம்புக்கு இழுக்கிறாள் என்று தெரியவும், அவன் தற்சமயம் விவாதம் வேண்டாம் எனத் தவிர்க்க முயன்றான்.

“அப்புறம், என் மகள், நீங்க, நான் மூணு பேரும் இதே அறையில் தான் முன்பு போல தங்க போறோம்” என்றாள். அவன் அவளை ஆழமாகப் பார்த்தான். அவள் அலட்சியமாகப் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

“இது உன் அத்தை வீடு! தாராளமாய் நீ தங்கலாம். அதுக்கு என் அனுமதி தேவையில்லை” என்றவன், “இதுக்கு முன்னோடி எப்படி இருந்தோம் என்பது கொஞ்சம் ஞாபகம் இருக்கட்டும்” என்று விட்டுக் கீழே வந்தான்.

நந்தனா கதவின் அருகில் நின்றுகொண்டு பயத்துடன் மார்பைப் பற்றியபடி இருந்தாள்.

அவளது மாமியாருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இத்தனை நாட்களும் வராமல் இப்போது வந்திருக்கிறாளே, இனி என்ன நடக்கப் போகிறதோ என்று நினைத்துத் தவித்தார் நாகேஸ்வரி.

அவன் மனைவியின் முகத்தைப் பார்த்துவிட்டுக் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுமாறு தலையசைத்தான்.

அவள் நயனங்களில் அச்சத்தை வெளிப்படுத்த, அவனுக்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது. எதுவும் சொல்லாமல் வெளியே சென்று விட்டான்.

ரக்ஷனா கீழே வராமல் அறையிலேயே இருக்க, மகள் தூக்கம் கலைந்து விழித்ததும் அம்மாவைக் காணாமல் தேடினாள். ரக்ஷனா குழந்தையின் அருகில் சென்று கண்கள் கசிய அவள் நெற்றியில் முத்தமிட, புதியதாகத் தெரியும் அவள் தன்னை அம்மா என்று அறிமுகப்படுத்தியும், “இல்லை” என்று தலையாட்டினாள் நிவேதா.

மனதிற்குள் எழுந்த வலியை அடக்கிக்கொண்டு அவளைத் தூக்கி அணைத்தாள். பின்னர் தனது மடியில் அமர வைத்து, “பிள்ளைக்கு அம்மா உனக்காக நிறைய விளையாட்டு சாதனம் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று சொல்லி ஒவ்வொன்றாக எடுத்துக் காட்ட, முதலில் மறுத்தவள் பின்னர் அதை எடுத்து விளையாடினாள்.

மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பரிதிவர்மன், நேராகச் சென்று சோஃபாவில் அமர்ந்தான். அப்போது, “அப்பா! கார்… காரு” என்றபடி மாடியிலிருந்து வந்தாள் நிவேதா.

அவன் குழந்தையின் முன்பு எதையும் காட்டாமல் தலையை ஆட்ட, “அம்மா தந்துச்சு…” என்று ரக்ஷனாவைக் காட்டினாள்.

எப்படி அவளிடம் மறுத்துப் பேசுவது என்ற யோசனையுடன் அவன் இருக்க, அவனைப் பார்த்துக்கொண்டே கீழே வந்தாள் ரக்ஷனா.

கண்கள் சுவரோரம் நின்றும், உரிமையாக அவர்களுக்கு முன்பு வர முடியாமல் இருக்கும் நந்தனாவைக் கண்டன.

“ஹேய்… வாட் எ சர்ப்ரைஸ்! நீ எப்படி இந்த வீட்டுக்கு வந்தே? முன்பெல்லாம் வரமாட்டியே! உன்னை எங்க அத்தை எப்படி வீட்டுக்குள் அனுமதித்தார்?” என்று நாகேஸ்வரியைப் பார்த்தவாறு கேட்டாள். அந்த வார்த்தை சுருக்கென உள்ளே சென்று தைத்தது; ஏனெனில் அவர்தான் இவளை இந்தப் பக்கமே வர அனுமதிக்க மாட்டாரே!

“என்ன அத்தை, நான் இல்லாத நேரம் இங்கு என்ன நடக்குது? மூத்த மருமகள் மீது திடீர் பாசம் எல்லாம் வந்திருக்கு!” என்று கேட்டாள்.

முன்பு என்றால் படபடவெனக் கொட்டிவிடுவார் நாகேஸ்வரி. இப்போதோ வாய் திறக்கவே பயமாக உள்ளது. அதிலும் உண்மை எல்லாம் அறிந்த பிறகு, மகனின் வாழ்க்கை அழிந்து விடக்கூடாது என்று மட்டுமே எண்ண முடிகிறது.

ரக்ஷனா சிரித்தபடி பரிதிவர்மனின் அருகில் சென்று அமர்ந்தாள். அவன் எழுந்து செல்லப் போக, அத்தானின் கையைப் பற்றி மீண்டும் அமர வைத்தாள். அவனும் பேசாமல் அமர்ந்துவிட, கணவன், மனைவி, மகள் என மூவரும் இருப்பதைக் காணும்போது அத்தனை அழகாகத்தான் இருந்தது. ஆனாலும் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு விதமான எண்ணங்கள் எழுந்து அவர்களை அலைக்கழித்தன.

“உன்னை நான் சின்ன வயசுல பார்த்த பிறகு என் கல்யாணம் முடிஞ்ச புதுசுல தான் பார்த்தேன். முன்பை விட இப்ப பெரிய பெண்ணா அழகா இருக்க! உனக்குக் கல்யாணம் எப்ப ஆனது? கணவர் என்ன ஒர்க் பண்றார்? இந்த ஊர்ல தான் இருக்கியா?” என்று அவள் விசாரிக்க, நந்தனாவால் பதில் கூற முடியாமல் தொண்டை அடைத்தது.

“நீ ஏற்கனவே அதிகமா பேசமாட்டே இல்ல. ஆமாம்! உங்க அப்பா இறந்து போயிட்டதா கேள்விப்பட்டேன். கவலைப்படாதே! கடவுள் உன் கூடவே இருந்து உனக்குத் தேவையானதை செய்து தருவார்?” என்றதும், அவள் தலையை ஆட்டினாள்.

“நான் இனி இங்கதான் இருக்கப் போறேன். நாம அடிக்கடி சந்திக்கலாம். காலேஜ் படிப்பு முடிஞ்சதும் வேலைக்கு ஏதாவது போறியா? வீட்டுல தான் சும்மா இருக்கியா?” என்று ரக்ஷனா வினவ, “இல்லை” என்றாள் நந்தனா.

“அவ்வளவு கஷ்டப்பட்டுப் படிச்சு வேலைக்குப் போகாமலா இருக்க?” என்றவள், “சரி விடு! நான்தான் வந்திருக்கேன் இல்லை, பார்த்துக்கலாம்” என்றாள்.

அவள் ‘சரி’ என்றதும் மகளைப் பார்க்க, நிவேதா கையில் இருந்த காரை அப்பாவின் கையில் வைத்து ஓட்டி விளையாடிக்கொண்டிருந்தாள்.

“இவள் அப்படியே அவங்க அப்பா சாயல்ல இருக்கா இல்ல?”

அவள் மனம் வலிக்கக் கணவனைப் பார்க்க, அவன் நீண்ட மூச்சை வெளியே விட்டான். வாய் திறந்து பேச ஒரு நிமிடம் போதாது, ஆனால் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன என்பதால் அமைதியாக இருக்க முயன்றான்.

நந்தனாவும் மகனும் இருக்கும் நிலை தாயவளைச் சங்கடப்படுத்த, “ரக்ஷனா! நீயும் இனிமேல் இங்கேதானே இருக்கப் போறே? பிறகும் ஏன் ஒரே நேரமா எல்லாத்தையும் பேசிட்டு இருக்கணும்! நந்தனாவும் இதே வீட்டுலதானே தங்கப் போறா, நிதானமா பேசலாம்” என்றார் நாகேஸ்வரி.

அவள் அதிசயமாக விழி விரித்து நோக்கினாள். “வாட் அத்தை? நீங்க அவளுக்காகப் பேசுறீங்களா? என்ன ஆச்சரியம்?” என்று கேட்க, அவரோ என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார்.

“என்ன அத்தை, உங்களுக்குத்தான் அவளைப் பார்த்தாலே பிடிக்காதே! இப்ப என்ன மருமகளுக்கு ஆதரவாய்?” என்று நம்ப முடியாமல் கேட்டாள் ரக்ஷனா. பரிதிவர்மன் எதிர்பார்ப்பதும் இதுதானே!

“அது வேறு ஒண்ணுமில்ல, அவங்க அம்மாவும் இந்த வீட்டுப் பிள்ளைதானே! அதிலும் என் கணவருக்கு மிகவும் பிடித்தமானவள். நந்தனா! பிறந்த முதல் எந்த சந்தோஷமும் அனுபவிக்காதவள். அம்மாவும் இல்லாம அப்பாவையும் இழந்து, சித்தி கொடுமையால் ரொம்பவும் கஷ்டப்பட்டுட்டா, அதோடு விட்டாளா அந்த ராட்சஷி! அவளைப் பிடிக்காதவனுக்கு கட்டாய கல்யாணம் செய்து கொடுத்துக் காலமெல்லாம் கஷ்டப்படுத்த பார்த்தா… ஏதோ கடவுள் புண்ணியத்தில் இனியாவது நல்லா இருந்தா சரி!” என்றார் நாகேஸ்வரி.

அத்தையின் வார்த்தையில் நந்தனா அதுவரை அனுபவித்த காயங்கள் கூட மறைந்துபோக, பரிதிவர்மன் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.

“நிஜமாவே என்னால நம்ப முடியல அத்தை! ஆனாலும் அந்தக் காலேஜ் ஸ்டடி, ஹாஸ்டல் லைஃப், திறமைக்கு ஏத்த வேலையெல்லாம் விட்டுட்டு, எப்படிதான் நந்தனாவால் இப்படி ஒரு சூழ்நிலையில் வாழ முடியுதோ? நானா இருந்தா அடுத்த நிமிடம் அங்கிருந்து போயிடுவேன்” என்றவள்,

 

​“பாரின்ல எப்பவும் ஜாலியா இருக்கலாம். அந்த மாதிரியான மாடர்ன் வேர்ல்டுல இருந்துட்டு இந்தப் பட்டிக்காட்டில் ஒரு நாள் இருந்தாலே மூச்சு முட்டுது. இதுல உங்க அண்ணி இங்கேயே இருக்கச் சொல்லி என்கிட்ட வம்பு இழுக்குது. ஏன் அத்தை, இவரைப் பெத்தார்களா? செய்தார்களா?” என்று ரக்ஷனா கேட்க, பரிதிவர்மன் தன் சிரிப்பைச் சிரமப்பட்டு மறைத்துக்கொண்டான்.

நாகேஸ்வரியும் கூடப் பல்லைக் கடித்து சிரிப்பை அடக்கினார்.

“எங்க அப்பா பாவம்! அழகா வேறொரு பெண்ணைக் கட்டிக்கிட்டு நல்லா இருப்பதை விட்டுவிட்டு, இப்படி ஒரு பஜாரியைக் கல்யாணம் செய்து கஷ்டப்படுறாங்க” என்று பெருமூச்சை வெளியேற்றினாள்.

நிவேதா உடனே “அம்மா பஜாரி…..” என்று சொல்ல, “அம்மா இல்லடா, உங்க பாட்டி” என ரக்ஷனா திருத்திச் சொல்ல, நாகேஸ்வரியைப் பார்த்துவிட்டு, “பாட்டி பஜாரி” என்று கூறினாள். அதைக் கேட்டதும் ரக்ஷனா மட்டுமல்ல, அங்கே இருந்த அத்தனை பேருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

நாகேஸ்வரி பேத்தியை நோக்கி வர, அவள் அவரது கைக்குள் அகப்படாமல் அங்கும் இங்கும் ஓடினாள். பின்னர், “அம்மா தூக்கு!” என்றபடி நந்தனாவின் முன்பு கையை நீட்டினாள்.

“அம்மாவா?” என்று ரக்ஷனா புருவத்தை உயர்த்த, “அம்மாட்ட நிவேதா சமத்தா இருக்கும்” என்று அவளது தோளில் சாய்ந்தாள்.

நந்தனா குழந்தையை அணைத்தபடி தன் மன உணர்வுகளை அடக்கப் போராட, “அவங்க உனக்கு அம்மா இல்ல, பெரியம்மா” என்றாள் ரக்ஷனா.

பரிதிவர்மனுக்கு ஒரே குழப்பம். இவள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வந்து இருக்கிறாளா? தெரியாமல் வந்து இருக்கிறாளா? அது எப்படி எல்லாவற்றையும் அறிந்தும் அவளால் சாதாரணமாக நடக்க முடிகிறது? இரண்டு முறை அழைத்தும் மாமாவுக்கு அழைப்பு போகவில்லை. அவரும் ஒரு வார்த்தை பேசவில்லை. மகளை மட்டும் இங்கு அனுப்பி வைத்து விட்டு,என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவரும் இருந்தால் தானே எல்லாவற்றையும் விபரமாக பேசி தீர்வு காண முடியும்! நாளைக்கு தனது கடுமையான நடவடிக்கை அவர் மனதை வருத்தி விடக்கூடாதே என்று நினைத்தான். அதே நேரத்தில் அம்மாவின் பேச்சு ஆறுதல் தருவது போலிருந்தாலும், நந்தனாவின் மனநிலையை எண்ணி பார்க்கும்போது கவலையாகவும் இருந்தது.

கொஞ்சம் நாளைக்கு அவளைப் பொறுமையாக இருக்க சொல்ல வேண்டும். ரக்ஷனா என்ன எண்ணத்துடன் வந்திருக்கிறாள்? அவளது அம்மா என்ன திட்டத்துடன் மகளை அனுப்பி வைத்திருக்கிறார்? மாமாவின் மனதில் இருப்பது… என்று முழுவதையும் தெரிந்து கொண்டு இறுதி அத்தியாயத்தில் தீர்ப்பு எழுத வேண்டும் என்று முடிவு செய்தான்.

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top