எங்கும் பசுமை சூழ்ந்த மாமரத் தோட்டங்களுக்கு நடுவே, ஓடுகள் வேய்ந்த இரண்டடுக்கு மாளிகை போன்ற அந்த வீட்டில் காலை நேர உணவிற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
கேழ்வரகுக் களியின் மணம் சமையலறையைத் தாண்டி மணக்க, “ஆத்தா, பசியாறலாமா? பசிக்குது. அப்புச்சி வந்துட்டாகளா?” என்று கேட்டுக் கொண்டு வந்து தரையில் விரிக்கப்பட்டிருந்த பந்திப்பாயில் (வரிசையாக அமர்ந்து உண்பதற்காகத் தரையில் விரிக்கப்படும் இவை, குறுகிய கோரைப் புற்களைப் பதப்படுத்தி, இயற்கைச் சாயங்கள் ஏற்றி நெசவு செய்யப்படும் ஒரு வகை நீண்ட பாய்களாகும்) அமர்ந்தான் ஆதித்யன்.
“வந்துட்டேன் அப்புச்சி, அரசி வெரசா கொண்டா, புள்ளைக்குப் பசிக்கும்” என்று அருகில் வந்து அமர்ந்தார் பழனிச்சாமி. அறிவும், ஆளுமையும், நற்சிந்தனையும் நிறைந்த மகனை அப்புச்சி என்று அழைப்பதில் அத்தனை ஆனந்தம் தந்தைக்கு.
“ஆத்தி, செத்த நாழியாச்சுப்பூ, இந்தா வாரேன்” என்றவாறு களி உருண்டைகளையும், அதற்கு ஊற்றிக் கொள்ள நாட்டுச்சர்க்கரை கலந்த தேங்காய்ப் பாலும் கொண்டு வந்து பரிமாறினார் மங்கையற்கரசி.
“ஆத்தா, இருக்கீயளா” என்ற பெண் குரலொன்று சமையலறை கடந்து இருந்த கொல்லை என்று அழைக்கப்படும் வீட்டின் பின்புறத்தில் கேட்க,
“வெளுக்குறவ விடிஞ்சு வெள்ளைக்கோழி கூவும் முன்னே வந்துடுவா” என்று முணுமுணுத்த அரசி,
“முத்தம்மா…செத்த பொறு ஆத்தா, வூட்டு ஆம்பிளைக பசியாறட்டும்” என்றார் பெரும் குரலில்.
“ம்ப்ஸ்….ஆத்தா, முத்தக்கா பேரனோட வந்திருக்கும், பச்சப்புள்ளைக்கு உண்ணக் கொடு” என்றான் ஆதித்யன் முகத்தில் சற்றுக் கடுமை காட்டி.
“நீ சாப்பிடு அப்பூ, வீட்டு ஆளுக வயிறு நெறையும் முன்னே சேவகக்காரவுகளுக்கு என்ன அவசரம்னேன்?” என்றார் அரசி.
அமர்ந்திருந்த இடத்திலிருந்து ஆதித்யன் எழுந்து கொள்ளப் போக, அவனைக் கை நீட்டி அமர்த்தி, “அரசி…போய் முத்தம்மா பேரனுக்கு உங்கக் குடு” என்றார் பழனிச்சாமி கட்டளையாக.
கணவன் வார்த்தைக்கு மறுவார்த்தை பேசிப் பழகியிராத மங்கையர்க்கரசி, முணுமுணுத்துக் கொண்டு எழுந்து போனார்.
சமையலறையை ஒட்டிய கூடத்தில் தான் உணவு உண்டு கொண்டிருந்தனர், அங்கிருந்தபடியே எட்டி கொல்லை வாசலைப் பார்த்த ரிஷிக்கு கோபம் மனதில் கனன்றது.
சலவைத் தொழில் செய்யும் பிரிவில் பிறந்த முத்தம்மா அறுபது வயது தாண்டியவர். தினமும் இங்கு வந்து துணிகளை வெளுத்துக் கொடுப்பது தான் அவரது வாடிக்கை.
தினமும் அவர் வரும்போது, தனது பேரனையும் தூக்கி வருவார். குழந்தையை அருகே விளையாடவிட்டுவிட்டுத் தன் வேலையைப் பார்ப்பார்.
பொதுவாக மதிய உணவுக்கு முன் வந்து துணிகளை வெளுப்பவர், வெகு சில நாட்களில் காலையில் வந்துவிடுவார், அப்படி வந்தால் வேலைகளை முடித்துவிட்டு அரசி தரும் உணவை வாங்கிக் கொண்டு போவார். மாதச் சம்பளம்தான் என்ற போதிலும் அரசி அவ்வப்போது முத்தம்மாவுக்கு வேண்டியதைச் செய்வார்.
இப்போது ஆதித்யன் கோபம் கொள்ளக் காரணம், முத்தம்மா மற்றும் அவரது பேரன் உண்பதற்கு வாழை மட்டையில் களியிட்டுக் கொடுத்து, கொல்லை வாசலைத் தாண்டி தரையில் அவர்கள் அமர்ந்து உண்ணுமாறு பணித்தார் அரசி.
இயல்பில் இளகிய மனம் கொண்டவர்தான் அரசி, ஆனால் சாதியின் சாயமானது அவர் மனதில் திண்ணமாக ஏறி இருந்தது. சாதி வேற்றுமையின் வேர்கள் அவர் ஆன்மா ஆட்பட்டிருந்த இடத்தில் எல்லாம் பரவிக் கிடந்தது. வயிற்றுக்கு உணவு தரும் அரசி, தங்களுக்கு வைத்திருக்கும் தட்டில் தரமாட்டார். சில சாதியின் மக்களை வீட்டிற்குள் அனுமதிக்கமாட்டார். கொல்லைபக்கம் மட்டுமே வந்து போக வேண்டும்.
அன்னையின் மேல் அதிகப் பிரியம் கொண்டிருக்கும் ஆதித்யனுக்கு, இந்த ஒரு விஷயத்தில் என்றுமே அவருடன் ஒத்துப் போவதில்லை. பல நேரங்களில் கடுமையான விவாதங்கள் நடக்கும். சில நேரங்களில் பொறுமையாக எடுத்துச் சொல்வான், தலையைத் தலையை ஆட்டும் அரசி, இறுதியில் அவர் நினைத்ததை மட்டுமே செய்வார்.
இது புரையோடிப் போயிருக்கும் புண், வெட்டி எறிந்தால் ஒழிய குணமாக்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்து கொண்டான்.
கையில் எடுத்த களியை உண்ணாமல் அவர்களையே ஆதித்யன் பார்த்துக் கொண்டிருக்க, “அப்புச்சி, சாதி வேற்றுமை அவ இரத்தத்தில் கலந்து ஓடுது, மூச்சு உள்ளவரை அவ இப்புடித்தான் இருப்பா. வெசனப்பட்டு நமக்குத்தேன் சீக்கு, சாப்பிடுங்க” மகனைத் தொட்டு அசைத்தார் பழனிச்சாமி.
உணவைக் கொடுத்துவிட்டு உள்ளே வந்து இருவருக்கும் அருகே அமர்ந்து கொண்டார் அரசி.
ஒரு பெருமூச்சை வெளியேற்றிய ஆதித்யன், “ஏன் உன் தட்டில் போட்டுக் கொடுத்தா, ஏதும் ஒட்டிக்கிடுமா என்ன? இல்ல வீட்டுக்குள்ள வச்சுக் கொடுத்தா உன் வீடு வெடிச்சுப் போயிடுமா?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“தீட்டுப்பூ…” என்றவரை முறைத்த ஆதித்யன்.
“நம்ம வீட்டில் பிறந்தாலும் இறந்தாலும், அந்த சாதிக்காரவுக மாத்து கொண்டு வந்தாத்தான் தீட்டுக் கழியும். தெரியாத சங்கதியா உனக்கு?, அந்தக் காலத்திலேயே உன்னை மாதிரி ஆட்களுக்காகத்தான் இந்த வழக்கத்தை வச்சிருக்காக. உயிரில்லாத, உருவமில்லாத, நம் புறக் கண்களால் பார்க்க முடியாத இந்த சாதியைப் பிடிச்சுக்கிட்டு அலையுற உன்னைப் போன்றவர்களுக்காகத்தான், நீ யாரைத் தாழ்வா நினைக்கிறாயோ அவர்கள் இல்லாமல் உன் வீட்டில் எதுவும் நடக்காதுன்னு முகத்தில் அறையிற மாதிரி பண்ணிட்டுப் போயிருக்காக, ஆனா நீ…ச்சை….” என்றவன் விருட்டென எழுந்து கையைக் கழுவிக் கொண்டு வெளியேறினான்.
ஆதித்யன் சொல்வது போல் ‘மாத்து’ என்பது தமிழ் சமூகத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் சடங்குகளில் ‘மாற்றுத் துணி’ (மாத்து ஆடை) கொடுக்கும் வழக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
எந்தச் சமூகத்தைச் சார்ந்த பண்பாட்டுச் சடங்குகளிலும் மாத்து என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது.
பூப்புச் சடங்கின்போது பெண் பருவமடைந்த பிறகு தீட்டுக் கழித்து, இச்சமூகத்தினரால் வழங்கப்படும் சுத்தமான மாத்துப் புடவை அணிவிக்கப்படுகிறது. இறப்புச் சடங்கில் இறுதி ஊர்வலத்திற்கு முன்னால் துணி விரிக்கப்படுவதோடு, இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு உறவினர்கள் அணிவதற்கும், 16-ஆம் நாள் கருமாதிச் சடங்கிலும் மாத்துத் துணி பயன்படுத்தப்படுகிறது. திருமணம் போன்ற நிகழ்வுகளிலும் மாத்து வழக்கங்கள் உண்டு.
மாத்து என்பது வெறும் துணி மட்டுமல்ல; மனித வாழ்க்கையின் முக்கியமான மாற்றங்களான பூப்பு முதல் இறப்பு வரை தீட்டு என்ற ஒன்றைக் கழித்து, தூய்மையையும் புதிய தொடக்கத்தையும் குறிக்கும் ஒரு முக்கியமான பண்பாட்டுச் சடங்கு அடையாளமாக விளங்குகிறது. இச்சடங்குகள் மூலம் இச்சமூகத்தினரின் பாரம்பரியப் பங்களிப்பும் சமூக முக்கியத்துவமும் வெளிப்படுகின்றன என்னும் செய்தியை மட்டுமே நம் முன்னோர்கள் நமக்குக் கடத்த விழைகின்றனர். ஆனால் பாடத்தைக் கற்றோமா என்பதுதான் இங்கு கேள்வி!
பிறக்கின்ற பூமி ஒன்றே, ஒளி தரும் சூரியன் ஒன்றே, சுவாசிக்கின்ற காற்று ஒன்றே, காக்கின்ற மேற்கூரை வானம் ஒன்றே, வாழ்க்கை முடிந்தால் எரிகின்ற நெருப்போ அல்லது விழுங்கிக் கொள்ளும் மண்ணோ எல்லாம் எல்லாம் எல்லாமே ஒன்றே, அப்படி இருக்க ஏற்றமும் தாழ்வும் எங்கிருக்கிறது?!
ஐம்பெரும் பூதங்களால் ஆக்கப்பட்டு பிறப்பிக்கப்படும் உடல் என்பது அனைவருக்கும் ஒன்றே, அந்த உடலிலுள்ள நம் சிந்தனையில் தான் ஆயிரமாயிரம் வேற்றுமையும் வெறுப்பும் விரவிக்கிடக்கிறது.
———————-
பவுர்ணமியின் பொன்நிலவு ஆகாய வீதியில் பவனி வந்து கொண்டிருந்தாள்.
மொட்டை மாடியில், அலெக்ஸ் ஹேலி எழுதிய “ஏழு தலைமுறைகள்” புத்தகத்தில் ஆழ்ந்து போயிருந்தான் ஆதித்யன்.
அவனது அலைபேசி அடித்து கவனத்தைக் கலைக்க, எடுத்துப் பேசியவன் முகத்தில் கோபமும், பதட்டமும் போட்டியிட்டுக் கொண்டு வந்தது.
விரைந்து தன் அறைக்குச் சென்று இரவு உடுப்பிலிருந்து மாறியவன், தடதடவென மாடியிலிருந்து இறங்கி கீழே தந்தையின் அறைக்கதவைத் தட்டினான்.
“என்ன அப்புச்சி இந்த நேரத்தில்” என்ற பழனிச்சாமி தோளில் ஒரு துண்டைப் போர்த்திக் கொண்டார்.
“நம்ம நவநீப் பய கவுன்சிலர் பொண்ணைக் கூட்டிகிட்டு ஓடப் பாத்திருக்கான், பக்கத்தூரில் ரெண்டு பேரையும் பிடிச்சுப்புட்டாய்ங்க போல, இப்ப நம்ம அய்யனார் கோவில்ல பஞ்சாயத்து கூடி இருக்கப்புச்சி. கிளம்புறியளா?” என்றான்.
“ஏன்டா இவனுக்கு இந்த வேண்டாத வேலை?, தகப்பன் இல்லாம ஆத்தா வம்பாடு பட்டு வளத்துருக்கு, வயசுக்கு வந்த தங்கச்சி இருக்க, வேத்து சாதிக்காரப் பொண்ணை இழுத்துகிட்டுப் போலாமா? கலி முத்திக்கெடக்கு” கேட்டுக் கொண்டிருந்த அரசி புலம்பினார்.
தந்தையை அழைத்துக் கொண்டு தன் இரு சக்கர வாகனத்தில் பறந்தான் ஆதித்யன்.
பழனிச்சாமியின் குடும்பம் அந்த ஊரில் வழிவழியாக ஊரின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் பெரிய தலைக்கட்டுக் குடும்பமாக இருந்து கொண்டிருக்கிறது.
நிலக்கோட்டை என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட பழனிச்சாமி மங்கையர்க்கரசி தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள், பெரியவன் ஆதித்யனும் இளையவள் பார்கவியும். பார்கவி தன் அத்தை மகன் நேத்ரனை மணம் செய்து கொண்டு திண்டுக்கல்லில் வசிக்கிறாள். பார்கவி மற்றும் நேத்ரனின் புதல்விதான் வருணி, குயிலின் மகன் கிருஷ்ணாவின் வகுப்புத் தோழி.
ஊரின் எல்லையிலிருந்த அய்யனார் கோவிலில் ஆண்களும் பெண்களுமாக பெரும் கூட்டம் கூடி இருக்க, கூச்சலும் குழப்பமுமாக அந்த இடமே அல்லோகலப்பட்டது.
“தலைவர் வந்துட்டாக, நிறுத்துங்கய்யா, ஆளாளுக்கு பேசிகிட்டு இருந்தா அவுகளுக்கு என்னய்யா மறுவாதி?” ஒரு குரல் ஓங்கி ஒலிக்க கூட்டம் கப்சிப் என அடங்கிவிட்டது.
ஆதித்யன் கூட்டத்தின் உள்ளே நுழைந்து பார்வையைச் சுழற்ற, அணிந்திருந்த சட்டை முழுக்க இரத்தக் காயங்களோடு நவநீதனை ஒரு தூணில் கட்டி வைத்திருந்தார்கள். ஆதித்யனைக் கண்டதும் பட்டென்று தலையைக் கவிழ்த்துக் கொண்டான் நவநீ.
‘இந்த மூடப் பயலுக்கு எத்தனை சொன்னேன்’ பொங்கிய ஆற்றாமையை அடக்கிக் கொண்டான் இவன்.
எதிர்புறம் நவநீதனின் காதலி தலைவிரிக் கோலத்தோடு காணப்பட்டாள். கண்டிப்பாக அடி வெளுத்திருப்பார்கள், என்ன ஒன்று பெண்ணாக இருப்பதனால் தூணில் கட்டவில்லை.
“ஊப்” என ஊதிக் கொண்டான் ஆதித்யன்.
“குடி கெடுத்தானே அப்பு, ஒங்ககிட்ட இருந்தாலாவது உருப்பவடுவேன்னு இருந்தனே அப்பு, சந்தி சிரிக்க நிப்பாட்டிப்புட்டானே” தலையில் அடித்துக் கொண்டு அழுதார் நவநீதனின் அன்னை.
‘சுயமரியாதையை இழக்க வைக்கும் இந்தக் காதல் தேவைதானா’ என்று நினைத்த ஆதித்யன் உடல் இறுக வந்து தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டான்.
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
