அத்தியாயம் 1
அதிகாலை….
இளஞ்சூரியன் கடலன்னையின் மடியிலிருந்து பிரசவிக்கும் தருணம்.
கடற்கரை சாலையில் தன் காலை நேர ஓட்டத்தினை தொடர்ந்திருந்தான் விஹான் ஆதர்ஷ்.
சக்ரவர்த்தி வம்சத்தின் இரண்டாம் வாரிசு. ஆறடிக்கும் கூடுதலான உயரம், திடமான புஜங்களையும், திண்ணிய மார்பினையும் கொண்ட கட்டுக்கோப்பான உடலமைப்பு. திரும்பிப் பார்க்க வைக்கும் முகம்.
கடற்கரையில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த பல இளம் பெண்களின் ஏக்க பார்வையினை சிறிதும் கண்டு கொள்ளாது தன் ஓட்டத்தினை முடித்தவன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற ஆடி R8 ரக காரிலேறி தனது வீட்டிற்கு சீரிப்பாய்ந்தான்.
சாலையில் கண் பதித்திருந்தாலும், அவனின் முழு கவனமும்.. தனக்கு அருகிலுள்ள இருக்கையில் தன் முழு உடலையும் குறுக்கி, கேசம் கலைந்திருக்க, சிறு பிள்ளையென வாய் பிளந்து உறங்குபவளின் உறக்கம் கலைந்துவிட கூடாது என்பதிலே இருந்தது.
ஒரு இடத்தில் தன்னையும் அறியாமல் வேகத்தடையில் காரினை ஏற்றி இறக்கினான். அதில் தன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்தவள், கண்களை அகல விரித்து… இடுப்பில் கை வைத்து நிமிர்ந்து அமர்ந்து விஹானை பார்த்து புசுபுசுவென மூச்சு விட்டாள்.
அவளது முறைப்பிற்கெல்லாம் சற்றும் அஞ்சாது… “இப்போ எதுக்கு இப்படி சிரிப்பு வர மாதிரி பார்க்கிற?” என்றான்.
அவளது கோபம் விஹானின் கிண்டலில் அதிகமானது.
“டேய்… வளந்து கெட்டவனே..! நான் உன்னை முறைச்சி பார்க்குறேன் டா..!”
“அப்படியா?” எனக் கேட்டவனின் இதழ் புன்னகையில் துடித்தது.
அவனது கேலிப் புன்னகையில் தன்னையும் மறந்து சிரித்தவள்,
“ஏன்டா… வீட்டுல இருக்கிற பெருசுங்க தொல்லை தான் தங்கலைன்னா, நீயும் ஏன்டா படுத்துற! சீக்கிரம் எழுந்திரு… சாமி கும்பிடு… சேட்டை பண்ணாத.. வால சுருட்டி வச்சிட்டு இருன்னு, ஒரு சின்ன புள்ளைக்கு எவ்ளோ அட்வைஸ்… மிடியல டா சாமி….” என புலம்பினாள்.
“அது மிடியல இல்லை.. முடியலன்னு சொல்லணும்.”
தான் புலிம்பியதை கண்டு கொள்ளாது இறுதி வார்த்தையை திருத்தி கூறுபவனைப் பார்த்து…
“அடேய்… போதும்டா, காலையிலே உன்னோட எழுந்து ஓட சொன்ன பெருசுகிட்டேயிருந்து தப்பிச்சு உன் கிட்ட மாட்டிகிட்டேன். இப்போ உன் கிட்ட தப்பிக்கிறதுக்கு எனக்கு தெம்பு இல்லைடா” என்று தலைக்கு மேலே கைகளை கும்பிடுவதை போல் உயர்த்திக் கூறினாள்.
அதில் அட்டகாசமாக சிரித்தவன்.. ” “இங்க பாரு மஹி…” என்க,
“மஹிரா…”
அவன் கூற வருவதை தடுத்து, “என் பெயரை சுருக்கி கூப்பிட்டா எனக்கு பிடிக்காது. கால் மீ மஹிரா” என்றாள்.
“சரிம்மா… தாயே மஹிரா… பெரியவங்க எல்லாம் உன் நல்லதுக்குத் தானே சொல்றாங்க.. நீயேன் இப்படி இருக்க, கொஞ்சம் உன்னை மாத்திக்கலாமில்லையா?” என்றான் ஆதர்ஷ்.
ஆதர்ஷ்’க்கு மஹிராவை மிகவும் பிடிக்கும். வீட்டிலுள்ள அனைவரும் ஏதாவது ஒரு விஷயத்தில் அவளைத் திட்டிக்கொண்டோ அல்லது அறிவுரைக் கூறிக்கொண்டோ இருப்பர். அதற்கு காரணம் அவளது துடுக்குத் தனமும், சேட்டைகளுமே.. எதைப்பற்றியும் கவலை கொள்ளாது தனக்கு தோன்றியதை மட்டும் செய்யும் ரகம்.
ஆனால் மஹிராவிற்கு எப்போதும் ஆதரவாக இருப்பது ஆதர்ஷ் மட்டுமே, அதுவும் மறைமுகமாக.
ஆதர்ஷ், “உன்னை கொஞ்சம் மாத்திக்கோ” என்றதற்கு,
” என்னை நான் ஏன் மாத்திக்கணும்? இது என் லைஃப். எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருப்பேன். அதுவும் உங்களை மாதிரி சென்டிமென்ட் அட்டாச்டாலாம் என்னால் இருக்க முடியாது” என்றாள். பட்டென்று.
“சரி நம்ம வீட்டுல இருக்கிற வாண்டுங்க முதல் கொண்டு என்னைப் பிடிக்காது, உனக்கு மட்டும் ஏன் என்னை பிடிச்சிருக்கு?”
அவள் கேட்டதற்கு பதிலளிக்காமல் அமைதியாக வண்டியை, சக்ரவர்த்தி இல்லமென்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த மிகப் பிரமாண்டமான வீட்டின் போர்டிக்கோவில் நிறுத்தினான். அது வீடல்ல மாளிகை என்று தான் சொல்ல வேண்டும். நுழைவு வாயிலே அவ்வளவு பிரமாண்டமாகக் காட்சியளித்தது.
தான் கேட்டதற்கு அவன் பதிலளிப்பானென்று மஹிரா ஆதர்ஷின் முகத்தையே பார்த்திருக்க, அவனோ எப்போதும் போல் அந்த கேள்வியினை தவிர்த்தவனாக…
” வீடு வந்திருச்சு” எனக்கூறி காரை விட்டிறங்கி கம்பீரமான நடையுடன் உள்ளே சென்று விட்டான்.
“ஏகதந்தம் மஹாகாயம் தப்த
காஞ்சன ஸந்நிபம்!
லம்போதரம் விசா’லாக்ஷம்
வந்தே(அ)ஹம் கணநாயகம்.”
ஆதர்ஷ் உள்ளே வந்த சமயம், பூஜையறையிலிருந்து ஒலித்த விநாயகர் துதியில் அப்படியே நின்றுவிட்டான். எப்போதும் போல் இன்றும் அவனது அன்னையின் குரலில் கண்கள் மூடி மெய்மறந்து நின்றான்.
‘உள்ளே வந்தவன் ஏன் சிலை மாதிரி நின்னுட்டு இருக்கான்’ என்று அவன் பின்னோடு வந்த மஹிரா யோசிக்க…
“ஹோ, ஜானு குரலில் ஐயா பிரீஸ் அகிட்டாரா” என்றவள், தன் அறை நோக்கிச் சென்றாள்.
“தீபம் ஒற்றிக்கோப்பா” என்ற அன்னையின் குரலில் கலைந்தவன்…
“உங்களுக்கு நல்ல வாய்ஸ்ம்மா” என்றதோடு, “குளிச்சிட்டு வர்றேன்” எனக் கூறி, இரண்டிரண்டு படிகளாகத் தாவி முதல் தளத்திலிருக்கும் தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.
சரியாக மணி காலை எட்டு என கடிகாரக் குயில் கூவியதும் வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் உணவு மேஜைக்கு வருகை தந்தனர்.
இங்கு, சக்ரவர்த்தி இல்லத்தில் யார் யார் என எல்லாரையும் ஒன்றாக பார்த்திடலாம்..
உணவு மேஜையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார், வீட்டின் மூத்த தலைமுறை நாதன் சக்கரவர்த்தி, அவருக்கு அருகில் அவரது துணைவியார் கோமளா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த மகன் விஷ்ணு சக்கரவர்த்தி, இரண்டாவது மகள் யமுனா. விஷ்ணுவின் மனைவி ஜானகி, மாமியார் மெச்சும் மருமகள். இவர்களுக்கு இரண்டு புதல்வர்கள். மூத்தவன் நவீன் சக்கரவர்த்தி, இரண்டாவது நம் நாயகன். யமுனாவின் கணவர் ராஜ சேகர். இப்போது அவர் உயிருடன் இல்லை. இவர்களுக்கு மூன்று பெண்பிள்ளைகள். அவர்கள் வினோதினி, நம் நாயகி மஹிரா, வைஷ்ணவி.
நவீனுக்கும், வினோதினிக்கும் திருமணம் முடிந்து ஐந்து வயதில் ஆதி என்கிற பையனும், மூன்று வயதில் நித்திலா என்கிற மகளும் உள்ளனர்.
(குடும்பம் கொஞ்சம் பெருசு தான்… இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்பத்தில் வாழ தான் முடியவில்லை, அட்லீஸ்ட் படிக்கவாவது செய்யலாமே..!)
உணவு உட்கொள்ள அனைவருக்காகவும் காத்திருந்த நாதன் எல்லோரும் வந்து விட்டனரா என நோட்டம் விட்டார். வழக்கம்போல நம் நாயகி மிஸ்ஸிங்.
நாதன் தனது மகள் யமுனாவிடம்,
“எங்க உன் தவப்புதல்வி.. இன்னும் அம்மையாருக்கு மணி எட்டு ஆகலயா? சின்ன பசங்களே தயாராகி வந்தாச்சு” என்று கடிந்துக்கொண்டார்.
“எப்பவும் எனக்கு திட்டு வாங்கிக் கொடுக்கன்னே இருக்காள்.” தன்னுடைய மகளுக்கு உள்ளுக்குள்ளே அர்ச்சனை செய்தார் யமுனா.
ஆண்கள் அனைவரும் தொழில் சம்மந்தமாக பேசியபடி உணவருந்த, அவர்களது பேச்சினை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான் ஆதர்ஷ்.
MBA இறுதி வருடம் பயில்கின்றான், இப்போதே அண்ணனுக்கு தொழிலில் உறுதுணையாக இருக்கின்றான். அமைதியானவன், அழுத்தமிக்கவன், படிப்பில் கெட்டி… கல்லூரியில் மாணவ தலைவன். கல்லூரியில் அனைத்து பேராசிரியர்களுக்கும் விருப்பமான மாணவன்.
கல்லூரி சம்மந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் இவனுடைய கருத்தும் அங்கீகரிக்கப்படும்.
மாணவர்களுக்கான எந்தவொரு முடிவிலும் ஆதர்ஷின் கருத்து சரியாக இருக்குமென்ற நம்பிக்கை கல்லூரி முதல்வருக்கே உண்டு.
வெளிநாடு சென்று படிக்க வசதிகள் இருந்தும் குடும்பத்தை விட்டு பிரிய மனமில்லாமல் நகரத்திலே பிரபலமான கல்லூரியில் தனது இளங்கலையை முடித்தவன் அங்கேயே முதுகலையும் பயில்கின்றான்.
ஐந்து வருடங்களுக்கு மேலாக சிறந்த மாணவனாக திகழ்வதால் கல்லூரி மாணவர்களிடத்திலும் ஆதர்ஷ் மிகவும் பிரபலம். பெண்கள் மத்தியில் அவனது கிரேஸ் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேயிருக்கிறது.
அனைவரும் உண்டு முடித்து எழும் சமயம் சாப்பிட வந்தாள் மஹிரா. இருக்கையில் அமர போனவள் நாதனின் அழுத்தமானப் பார்வையில் அப்படியே நின்று விட்டாள்.
“நீ லேட்டா வந்ததால உனக்கு காலை உணவில்லை, சாப்பிடாமலே போ” என்றவர் கை கழுவ எழுந்துவிட்டார்.
நாதன் மிகவும் கட்டுக்கோப்பானவர். பாரம்பரியம், குடும்ப கௌரவம் என்பதில் அதிக நம்பிக்கை உள்ளவர். தம் மக்களும் அதேபோல் இருக்க வேண்டுமென்று நினைப்பவர். அதனாலே இவ்வளவு கட்டுப்பாடுகள். அதிலொன்று காலையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பது. ஒருவேளையாவது ஒற்றுமையுடன் அமர்ந்து முகம் பார்த்து பேசுவதற்கே இந்த ஏற்பாடு.
மீண்டும் வந்தவர் தனது மகன் விஷ்ணுவிடம்,
“காலேஜ் அட்மிஷன் கிடைச்சுதா? என்று வினவினார்.
” காலேஜ் கரஸ்பான்டட் என் நண்பன் தான் அப்பா… கல்லூரி திறந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு எப்படி சேர்க்கிறது கொஞ்சம் யோசித்தான், ஆனால்… ஒத்துக்கிட்டான். இன்னைக்கு மஹி காலேஜ் போலாம்” என பதிலளித்தார்.
“இந்த காலேஜிலாவது எந்த வம்புக்கும் போகாம ஒழுங்கா படிக்க சொல்லு” மஹிராவை அர்த்தமாகப் பார்த்து வைத்தார்.
‘இந்தப் பெருசுக்கு எப்பவும் நாம தான் அவல். நல்லா வருத்தெடுக்கும்.’ பெரியவரின் பேச்சுக்கு மனதில் கவுண்டர் கொடுத்தவள் வெளியில் பாவம் போல் முகத்தை வைத்திருந்தாள்.
அவளின் முக பாவனையையும், மனதின் ஓட்டத்தையும் சரியாக கணித்த ஆதர்ஷ் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.
உண்டு முடித்து எழுந்தவன் தனது அன்னையிடம் சொல்லிவிட்டு கல்லூரிக்கு கிளம்பினான். அவனைத் தடுத்த யமுனா,
“இவளையும் அழைத்து போப்பா. இல்லைன்னா போறதுக்குள்ள ஏதாவது வம்பை இழுத்துட்டு வந்திருவா” என்று மஹிக்கு ஒரு கொட்டு வைத்தார்.
“இந்த காலேஜிலாவது படிக்கிற வேலையை மட்டும் செய்” என்றார்.
எல்லோரும் இதையே சொல்வது கடுப்பாக இருக்க,
“நான் என்னவோ தப்பு பண்ண மாதிரி எல்லாரும் பேசறீங்க, ஒருமுறை நான் அடித்த வாலிபால் பட்டு ப்ரின்சி கார் கண்ணாடி உடைஞ்சிருச்சு.. (அதை நீ வேண்டுமென்று தான் உடைத்தாய்.. ஆதர்ஷ் மைண்ட் வாய்ஸ்.) அதை அந்த பிரின்சி மனசுல வைச்சிட்டு, கேன்டீன் புட் நல்லா இல்லை… நீங்க இதை சாப்பிடுவீங்களான்னு அவர் பிளேட்டில் கொட்டி போராட்டம் பண்ணதுக்கு நான் தப்பு பண்ணிட்டேன்னு என்னை டிஸ்மிஸ் செஞ்சிருச்சு நான் என்ன பண்றது?” என அசால்ட்டாக தோளை குலுக்கியவள் ஆதரஷுடன் வெளியேறியதோடு,
“ஆல் தி பெஸ்ட் மஹிரா என்ற வாண்டுகளை” முறைத்துவிட்டு ஓடினாள்.
மஹிரா… மூன்றாம் ஆண்டு அறிவியல் துறை மாணவி.
“பொறியியல் படித்தால் நம் குடும்பத் தொழிலை கவனிக்கலாம்” என்ற நாதன் மற்றும் விஷ்ணுவின் பேச்சை மறுத்து, பிடிவாதமாக வேதியியல் துறையை தேர்ந்தெடுத்தாள்.
ஆனால், அவளது கனவு படிப்பு வேறு, இது இறுதியாண்டு என்பதால் எப்படியாவது டிகிரியை முடித்துவிட்டு தான் நினைத்த படிப்பில் சேர முடிவு செய்திருக்கிறாள்.
அவளின் முடிவு குடும்பத்தாருக்கு தெரிய வந்தால், என்ன நிகழுமோ?ஆதர்ஷிடம் கூட இன்னும் தன்னுடைய முடிவினை அவள் கூறவில்லை.
பள்ளி படிப்பை முடித்ததும் அவள் தனது தாத்தாவிடம் தனக்கு விருப்பமான படிப்பினை சொல்ல சலங்கையே இல்லாமல் அவர் ஆடி விட்டார். சின்னப்பெண் என்பதால் அப்போது குடும்பத்தாரை எதிர்த்து அவளால் ஒன்றும் செய்ய முடியாமல், அவர்கள் கூறிய பொறியியல் துறையை விடுத்து வேண்டுமென்றே கலை மற்றும் அறிவியலை தேர்ந்தெடுத்திருந்தாள்.
இதுவும் அவளின் கனவு படிப்பினை நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு வழி தான். அது தெரிந்திருந்தாலும் குடும்பத்தார் யாரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. முதலில் மூன்றாண்டை அவள் முடிக்கட்டுமென்று அமைதியாகினர்.
ஆதர்ஷ் படிக்கும் கல்லூரியில் சேர்ந்தால் அதிகம் சேட்டை செய்ய முடியாது என்பதற்காகவே வேறொரு கல்லூரிக்குச் சென்றாள்.
விதி யாரை விட்டது அவளது சேட்டைகள் தாங்காத கல்லூரியோ அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டது.
மேடம் இப்போ ஆதர்ஷ் பயிலும் கல்லூரிக்கு போகிறாள்.
‘விதி வலியது.’
அக்கல்லூரி வளாகத்தினுள்ளே அனைத்து படிப்பு சம்பந்தப்பட்ட துறைகளும் அடங்கியிருந்தன. இது சென்னையின் மிகவும் பிரபலமான கல்வி குழுமம்.
கல்லூரிக்கு செல்ல தனது காரினை எடுக்கச் சென்ற ஆதர்ஷனை தடுத்த மஹிரா…
“காலேஜ்க்கு கார்ராஆஆஆ?” என்று அதிர்ந்து, “நீ பைக்கில் போக மாட்டியா? பைக்கில் போனாதான் கெத்து” என்று அடம் பிடித்து அவனை பைக்கில் செல்ல வைத்தாள்.
சிறிது தூரம் அவனுக்கு பின்னால் அமைதியாக அமர்ந்திருந்தவள், “மாமா” என்றழைத்தாள்.
“மாமாவா!?” அவளது திடீர் விளிப்பில் ஜர்க்கானவன், “என்னவாம்?” என்றான்.
“பைக் நான் ஓட்டவா?” எனக் கேட்டாள்.
“இது ஸ்போர்ட்ஸ் மாடல் பைக். உன்னால் பாலன்ஸ் பண்ண முடியாது.”
அவனின் மறுப்பினை ஏற்காது மீண்டும் அடம் பிடிக்க… நாம் தான் பின்னால் அமர்ந்திருக்க போகின்றோமே அவளால் எதுவும் செய்ய முடியாதென்று நினைத்தவன் சரியென ஒப்புக்கொண்டு அவளது கையில் பைக்கினை கொடுத்தான்.
அவன் ஒப்புக்கொள்ள மாட்டான் என நினைத்தவளுக்கு பைக்கை கொடுத்தது ஆச்சரியமாகவே இருந்தது. ஆதர்ஷ்க்கு முதல் நண்பன் அவனுடைய பைக் தான். யாரையும் தொடுவதற்கு கூட அனுமதிக்கமாட்டான். நவீன் ஒருமுறை எடுத்தற்கே அண்ணன் என்றும் பாராமல் திட்டிவிட்டான்.
தன் சிந்தனையில் உழன்றவளை.. கல்லூரிக்கு தாமதமாவதாக கூறி பைக்கினை ஸ்டார்ட் செய்யக் கூறினான்.
அவளது கைகளில் காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது அந்த நவீன இருசக்கர பறவை.
அவன் இவ்வளவு வேகத்தினை அவளிடம் எதிர்பார்க்கவில்லை. மஹி பைக் ஓட்டுவாளென்று அவனுக்கு தெரியும் ஆனால், இவ்வளவு லாவகமாக கையாலுவாள் என்று எதிர்பார்க்கவில்லை.
அவள் பைக் ஓட்டுவதை ஒருவித வியப்புடன் பார்த்திருந்தவன்.. திடீரென தான் மேலே பறப்பதை உணர்ந்து கவனித்த போது தான் தெரிந்தது, அவள் பைக் செல்லும் வேகத்தை சிறிதும் குறைக்காமல் அழுத்தமாக பிரேக்கில் கை வைத்து பின் சக்கரத்தை மட்டும் மேலே தூக்கி வீலிங் செய்ததை.
“ஹேய் ரவுடி, வண்டியை நிறுத்து” என்று கூறியவன் அவளை பின் அமர செய்து வண்டியினை தான் இயக்கினான்.
அவன் திட்டுவான் அல்லது கோபமாக ஒரு பார்வை பார்ப்பானென்று எதிர்பார்த்தவளுக்கு அவனின் அமைதி என்னவோ போலிருந்தது. வீட்டில் தன்னிடம் அன்பாக பழகும் அவனின் ஒரு நொடி ஒதுக்கம் கூட அவளை பாதித்தது.
ஆதர்ஷின் தோள் தொட்டு “சாரி” என்றாள்.
அவளது குரலிலுள்ள வருத்தத்தை உணர்ந்தவன் பைக்கினை ஓரமாக நிறுத்திவிட்டு…
“ஆண்களே செய்ய தயங்கும் போது தைரியமா நீ பண்ணது எனக்கு பிடிச்சிருக்கு, நீ வீலிங் நல்லா பண்ண… பட் இது உயிருக்கே கூட ஆபத்தா முடியலாம். உன்னை வீட்ல இருக்கவங்க மாதிரி நான் உன்னை அடக்க ஒடுக்கமா இரு அப்படியெல்லாம் சொல்லல. ஒரு சில விஷியங்களிலாவது பொண்ணு மாதிரி இரு. எப்பவும் பையன் மாதிரி சுத்திட்டு இருக்காத. உன்னோட இந்த ஆட்டிடுயூடே உன் வாழ்க்கையை மாத்திடும்” என்றான்.
தன்னுடைய இந்த வார்த்தை பின்னாளில் பலிக்குமென்று அவனே நினைத்திருக்க மாட்டான்.
“நீ வீலிங் பண்ணப்போ உனக்கு எதுவும் ஆகிடுமோன்னு எவ்வளவு பயம் தெரியுமா?” என்றவன்,
“காலேஜில் உன் வாலையெல்லாம் சுருட்டி நடந்துக்க, நான் பிரசிடெண்ட் அப்படிங்கிறதுக்காக உனக்கு எல்லா விஷயத்துக்கும் சப்போர்ட் பண்ணிட்டு இருக்கமாட்டேன்” என நீளமாக பேசி முடித்தான்.
அதற்கு அவள் சிறு பிள்ளையென சரியென்று தலையாட்டினாள்.
இதுவே இப்போதைக்கு அவனுக்கு போதுமானதாக இருந்தது.
இருப்பினும், ‘இந்த ரவுடி ரங்கம்மா எந்த வம்புக்கும் செல்லக்கூடாது’ என இறைவனிடம் வேண்டவும்
அவன் மறக்கவில்லை.
ஆனால் தான் கூறிய அனைத்தையும் அவள் கல்லூரியில் இன்றே பறக்கவிடப் போகின்றாளென்று அவன் அறியவில்லை.
நீ என்பதில் முரணாக நான்..
நீ அமைதி என்றால்
உனக்கு முரணான
நான் அடாவடியே!