ரவுடி பேபி 10

அத்தியாயம் 10 :

தலைவரே…..

வெள்ளை வேட்டி சரசரக்க.. கோட்டை போன்று பிரமாண்டமாயிருந்த அவ்வீட்டின் மாடிப்படிகளில் கம்பீரமாக இறங்கி வந்துகொண்டிருந்தார் நம் மாநிலத்தின் முதலமைச்சர் திரு.பத்மநாபன்.

உள்ளே ஓடி வந்த அவரின் பணியாள், தங்களது மச்சான் வந்திருக்கின்றாரென்று தகவல் வழங்க பார்வையாலே அவனுக்கு கட்டளை விதித்தார்.

பணியாளும் பவ்யமாக சரியெனும் விதமாக தலையாட்டிவிட்டு சென்றுவிட, பத்மநாபன் பூஜையறையை நோக்கி நகர்ந்தார்.

பத்மநாபனின் மனைவி அம்சா பூஜைக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்கனவே செய்து முடித்திருக்க, சூடமேற்றி இறைவனை வழிபட்டவர் வரவேற்பறைக்கு வந்து அனைத்து இருக்கைகளுக்கும் நடுநாயகமாக வீற்றிருந்த ஒற்றையிருக்கையில் கம்பீரமாக அமர்ந்தார்.

தன் முதலாளி கண்ணாலே கட்டளையிட்டிருந்ததை சரியாக பொருளுணர்ந்து, வந்திருந்தவனை இருக்கையில் அமரச்செய்திருந்தான் அந்த பணியாள்.

அவர் முன்னே கட்டுகடங்கா கோபத்துடன் அமர்ந்திருந்தான் அம்சாவின் தம்பி ராகவ். அந்த பெயருக்கு சிறிதும் சமந்தமின்றி நிஜத்தில் அவன் ருத்ரமூர்த்தி. அமைதி, சாந்தம், பொறுமை இவையெல்லாம் என்ன விலையெனக் கேட்குமளவிற்கு எப்பவும் கடுகடுவென்றிருக்கும் இவனிடத்தில் பத்மநாபனுக்கே சற்று பயமுண்டு.

முரட்டுக் குணமுடையவன் தான், எதிரிகளை வீழுத்துவதில் வல்லவன்.. ஆனால், ஒரு உயிரை எடுக்குமளவிற்கான அரக்கன் கிடையாது. தனது மாமாவுக்கு ஒன்றென்றால் அதையும் செய்ய தயங்க மாட்டான். அப்படிப்பட்ட ராகவும் அடிபணிந்து செல்வது பத்மநாபனிடம் தான். அவர் முதலமைச்சர் என்பதை தாண்டி, ராகவிற்கு தன் அக்கா கணவனின் மீது மதிப்பும் மரியாதையும் அதிகம். அவர் எள் என்றால் இவன் எண்ணையாய் மாறி நிற்பான்.

தனது மாப்பிள்ளையின் கோபத்திற்கான காரணத்தை ஏற்கனவே அறிந்திருந்த பத்மநாபன், ஏதேனும் சில்லென்று கொண்டுவருமாறு தன் மனைவியிடத்தில் கண் காட்டினார்.

“என்ன மாப்ள, ஏன் இவ்வளவு கோபம்?”

“என்ன மாமா எல்லாம் தெரிந்தும், எதுவுமே தெரியாத மாதிரி கேட்கிறீங்க.” ஆத்திரத்தில் யாரிடம் பேசுகிறோம் என்பதையும் மறந்து வெடித்தான்.

அவனின் கோபக் குரல் அடுப்படி வரை எதிரொலித்தது. இப்போது அங்கு போனால் நிச்சயம் தன்னை கண் பார்வையாலே எரித்துவிடுவான் என்று அஞ்சிய அம்சா, வெளியே செல்லத் தயாராகி வந்த தனது மகள் கௌசல்யாவிடம் பழச்சாற்றினை கொடுத்து அனுப்பினார்.

தனது முன்னால் நீட்டப்பட்ட ட்ரேவினை முறைத்துப் பார்த்தவன்,

“நான் கேட்டனா?” என உருமியபடி நிமிர, கௌசல்யா அவனின் அதட்டல் மற்றும் கோபத்தில் கைகள் நடுங்க ட்ரேவினை கீழே விட அதிலிருந்த பழச்சாறு அடங்கிய கண்ணாடி குவளை அவன் மீதே மொத்தமாக கொட்டிக்கவிழ்ந்தது.

ராகவின் மீது கொண்ட பயத்தால் அவன் திட்டிவிடுவானோ என்று நடுங்கியவள், நா தடுமாற “சாரி அத்தான் பயத்தில் தெரியாம கொட்டிட்டேன்” என்று மன்னிப்பு வேண்டினாள்.

ஆனால் அவளின் மன்னிப்பு அவசியமற்றதென்று அவளுக்கு தன் பேச்சினால் உணர்த்த முயன்று தோற்றான்.

“ஹேய்… ரிலாக்ஸ்” என்றவன், “எதுக்கெடுத்தாலும் என்னை பார்த்து ஏன்டி பயந்து நடுங்குற, நானென்ன சிங்கமா புலியா” என கத்தினான். அவள் பயத்தில் தனது தந்தையின் அருகில் நெருங்க, அவனின் கோபம் அதிகமாகியது.

“அய்யோ ஏன் மாமா இப்படி பயந்தவளா இவளை வளர்த்து வச்சிருக்கீங்க” என்று அதற்கும் பத்மநாபனிடத்தில் மீண்டும் மீண்டும் கத்தினான்.

“ஆறுதலா பேச வேண்டிய வார்த்தையை கூட கரடுமுரடா பேசுனா அவள் பயப்படாம என்ன செய்வா(ள்) ராகவ். அவரின் வார்த்தைகள் புரிய அமைதியாகிவன்,

“எனக்கு பொண்டாட்டியாகப் போறவ(ள்) எதுக்கும் பயப்பட கூடாதுன்னு சொல்லி வையுங்க” என்றவன் தானெதற்கு வந்தோம் என்பதையும் மறந்து கிளம்பிவிட்டான்.

மற்றவர்கள் அனைவரும் அவனை பார்த்து அஞ்சி நடுங்குவது கர்வமாகயிருக்க, தன் உயிரானவள் கண்களில் தன்னிடத்தில் தோன்றிய பயத்தை அவனால் காணமுடியவில்லை. தன்னை வில்லன் போல் பாவித்து அவள் கண்களில் தெரியும் பயத்தை காண சகியாமலே அங்கிருந்து சென்றிருந்தான்.

காரினை சீரான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தவன், தான் எதற்கு பத்மநாபனை காணச்சென்றோம் என்பது நினைவுவர அவருக்கு அழைத்திருந்தான்.

“சொல்லு ராகவ்?”

அந்தப்பக்கமிருந்து குரல் வரவும்,

“ஒவ்வொரு முறையும் அந்த வக்கீல் என்கிட்ட வாலாட்டிக்கிட்டே இருக்காள். நீங்க சொன்ன வார்த்தைக்காகத்தான் பொறுமைனாலே என்னன்னு தெரியாத நான் பொறுமையா இருக்கேன். மேலும் மேலும் என்னை சீண்டினா அவளை நான் சும்மா விடமாட்டேன்” என்று கர்ஜித்தான்.

அவனின் கோபம் புரிந்தவர் தன்மையாக அவனுக்கு எடுத்துக்கூற முயன்றார்.

“நான் சொல்றதை கேளு ராகவ், ஏதோ அவள் ஒவ்வொரு முறையும் உன்னை ஜெயித்து விடுகிறாள். அதுக்காக வேணும்னே அவள் செய்றதா ஏன் நினைக்கிற? தொழிலில் போட்டின்னு வருவது சகஜம் தான். கொஞ்சம் பொறுமையா இரு, உன் கோபத்தில் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோமுன்னு செய்துடாத. தொழில்கள் அனைத்தும் உன் பொறுப்பில் நடந்தாலும், எல்லாம் என் பெயரில் இருக்கிறது. இது வெளிய யாருக்கும் தெரியாமலிருக்கலாம்.. ஆனால், நீ செய்யுறது எனக்கும் என் பதவிக்கும் ஆபத்தா முடியும். சோ, நிதானமா இரு” என்றார்.

“உங்கள் பதவி, கௌரவதுக்காக மட்டும் தான் மாமா, அவ்வளவு பெரிய டெண்டர் கை மீறி போன அப்புறமும், அமைதியா இருக்கேன்” என்றவன், “நம் அமைச்சர்களில் யாரையாவது அனுப்பி அவகிட்ட கொஞ்சம் பேசி பாருங்க” என ஆலோசனை வழங்கினான்.

ராகவின் குணமறிந்தவர் இதுவே அவனின் அதிகபட்ச பொறுமை என உணர்ந்து அவனின் யோசனைக்கு சரியென்றார். பத்மநாபனுக்கு முதல் இரண்டு முறை, டீலிங் எஸ்எஸ் கன்ஸ்டரக்ஷனிற்கு சென்றது தவறாக படவில்லை. ஆனால் தொடர்ந்து நான்காவது முறையாகவும் தொழில்முறை கூட்டம் அவர்களுக்கே சாதகமாகவும் அவருக்கே சந்தேகம் எழுந்தது. ஆனால், தன் பதவியை கருத்தில் கொண்டு தன் மருமகனின் கூற்றை செயல்படுத்தினார்.

ராகவ் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்ததும் அவனின் வாட்ஸாப்பில் தகவல் வந்ததற்கு அடையாளமாக சத்தம் ஒலித்தது. யாரென்று எடுத்து பார்த்தவன் முகத்தில் அவ்வளவு கோபத்திலும் மகிழ்ச்சி தோன்றியது.

செய்தி அனுப்பியிருந்தது அவனின் உயிரானவள்.

“இப்படியே எப்பவும் சிங்கம் மாதிரி உறுமிக்கிட்டே கோபமா சுத்திக்கிடிருந்தா ரத்த அழுத்தம் வந்து, சீக்கிரமே முடி நரைத்து கிழவனாகிடுவீங்க. அப்புறம் நான் யாரை கட்டிக்கிறது என் அன்பு அத்தானே?” எனக் கேட்டிருந்தவள் வாக்கியத்திற்கு கீழே கண்ணடிக்கும் எமோஜியையும் சேர்த்து அனுப்பியிருந்தாள்.

“நேர்ல பார்த்தா பயந்து நடுங்குறது. மெசேஜில் மட்டும் கேலி செய்றது” என்று தனக்குள் கூறிக்கொண்டவன், “அவ்வளவு அக்கறையும் பாசமும் இருக்கவங்க சீக்கிரம் இந்த அத்தானை கட்டிக்கிட்டு பொறுப்பா பார்த்துக்க வேண்டியதுதானே” என்று பதிலனுப்பியிருந்தான்.

அவன் தான் அனுப்பிய தகவலை பார்த்துவிட்டானென்பதற்கு அடையாளமாக ப்ளூ டிக் விழவும், என்ன வார்த்தைகளால் திட்டப் போகிறானோ என்று பயத்துடன் மொபைல் திரையையே பார்த்திருந்தவள் அவனின் இத்தகைய பதிலை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

துள்ளி குதிக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. தான் பிறந்ததிலிருந்தே ராகவிற்கு தன் மீது தனிபிரியமுண்டு என்று அறிந்திருந்தவளுக்கு எப்போது அவன் மீது காதல் வந்ததென்றெல்லாம் தெரியாது.

தன்னை போலவே அவனும் காதலிக்கிறான் உங்கள் இருவருக்கும் தான் திருமணமென்று அம்சா சொல்லிய தருணம் தன் காதல் அப்போதே ஈடேறியதை போல் உணர்ந்தாள்.

சந்தோஷ வானில் அவனுடன் சஞ்சரித்தவள் அந்நொடி அவன் மீதான பயம் விலக தைரியமாக… “லவ் யூ டா விருமாண்டி” என வாய்ஸ் மெசேஜ் செய்திருந்தாள்.

தன்னவளின் குரலில் அவனைத் தீண்டிய காதல் வார்த்தை உள்ளுக்குள் சந்தோஷ அலைகளை வாறி இறைத்தது.

அவள் செல்லமாக அழைத்தாளோ அல்லது கிண்டல் செய்யும் பொருட்டு விருமாண்டியென சொல்லியிருந்தாளோ அது கூட அவனுக்கு சுகமாய் இருந்தது.

மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்து கேட்டவன் தன்னை தொலைத்தான். சாலையில் தான் பயணித்துக் கொண்டிருக்கின்றேன் என்பதை மறந்தான். தீடிரென யாருமற்ற அந்த சாலையில் மிகுந்த வேகத்துடன் தன் காரின் மீது மோதும் நோக்கத்துடன் வரும் லாரியை கண்டுகொண்டவன் நொடியில் சுதாரித்து ஒடித்து திருப்ப, லாரி மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

அவனுக்கு உறுதியாக தெரிந்தது யாரோ தன்னை கொல்ல முயற்சிக்கின்றனர் என்று, யாராக இருக்குமென்று யோசித்தவன் ஓட்டுனரை உதைத்து கேட்கலாமென்று சென்று பார்க்க, இடித்த வேகத்தில் அப்போதே அவன் இறந்திருந்தான்.

போலீஸிற்கு தகவல் அளித்து, அவர்களின் விசாரணை முடிந்து வீடு வந்து சேர்ந்தவனின் மனம் யார்… யார்… யாரென்ற கேள்வியிலேயே உழன்றது.

**************

வழக்கு கோப்புகளில் மூழ்கியிருந்த மஹிரா சரத்தின் அழைப்பிற்கு செவிமடுத்தாள்.

எதிர்முனையில் சரத் அமைதியாக இருக்கவும், “என்னாச்சு சார்?” என்றாள்.

தன்னை சீர்படுத்தி கொண்டவன்.. “அங்கு உன்னைத்தேடி எம்.எல்.ஏ ராஜாலிங்கம் வர்றார் மஹி.. பீ கேர்புல்” என்றான்.

“என்ன சார் பயமா?”

“நிச்சயமா பயமில்லை, உன் மோதலுக்கான எதிர்வினை தொடங்கியாச்சு. இதில் உனக்கு எதுவும் ஆகிடக்கூடாதுங்கிற கவலை” எனக் கூறியவன் “ஜாக்கிரதை” எனக் கூறி இணைப்பைத் துண்டித்தான்.

அமைச்சர் வந்தால் உள்ளே அனுப்புமாறு காவலாளிக்கு தகவல் அளித்தவள், ராஜாலிங்கத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

தொழில் உலகத்தின் சக்கரவர்த்திகளில் சரத்தும் ஒருவன் என்பதால் என்ன நடந்தாலும் அவனின் செவி நுழைந்துவிடும். அவ்வாறே ராஜாலிங்கத்தின் வரவும் அறிந்தவன் மஹியிடத்தில் எச்சரிக்கை செய்திருந்தான்.

ராஜாலிங்கம் இரண்டு பக்கமும் தனது சகாக்கள் நால்வர் சூழ, மஹியின் அலுவலகத்திற்குள் வேக நடையுடன் உள் நுழைந்தார்.

தான் வந்தும் மஹிரா எழாமல் இருக்கையில் திமிராக கால் மேல் காலிட்டு அமர்ந்திருக்க, கோபத்தில் பற்களை கடித்தார்.

“நீ அங்க சமாதானம் பேசத்தான் போற.”

நேரங்காலம் பாராமல் பத்மநாபன் சொல்லியது நினைவிற்கு வந்தது. இரண்டு நிமிடங்கள் கடந்தும் தன்னை அமர சொல்லாமல் மஹி காட்டிய தெனாவட்டு ராஜலிங்கத்தின் பொறுமையை ரொம்பவே சோதித்தது.

மெல்ல எழுந்து அவ்வறையிலேயே போடப்பட்டிருந்த சோபாவில் ஒரு ஆணின் தோற்றத்துடன் அமர்ந்தவள் தனக்கு முன்பாக கோபத்துடன் நின்றிருந்தவரை என்ன என்பதை போல் தனது புருவத்தை உயர்த்தி வினவினாள்.

அவளின் பார்வையில் அரண்டவர், “கண்ணு” என்றழைக்க அவளது கை அவரது கன்னத்தை பதம் பார்த்தது. “கால் மீ மேம்” என்றாள் அழுத்தமாக.

தனது சகாக்களின் முன் தன்னை அடித்தது அவருக்கு அவமானமாக இருக்க, தீ பார்வைப் பார்த்தார்.

உன் பார்வை என்னை ஒன்றும் செய்து விடாது என்கிற திமிர் மஹியிடத்தில் சற்று கூடுதலாகவே காணப்பட்டது.

ராஜலிங்கம் அமைதியாக நிற்க,

ஒன்றும் நடவாததை போன்று, வந்ததற்கான காரணத்தை சொல் என்பதை போல் தனது பார்வையை அவர் மீது வீசினாள்.

அவளது பார்வையின் பொருள் உணராதவர் தயங்கி நிற்க… அவளின் பொறுமை எல்லை கடந்தது.

“ஷ்யாம்” என அவ்விடமே அதிர தனது நண்பனை கத்தி அழைத்தாள். அவளின் சத்தத்தில் தூக்கிவாரிப்போட அங்கு ஓடி வந்தவனை பாராமலே,

“இவனை வெளிய போகச்சொல்லு” என்றாள் காட்டமாக. ஷ்யாம் தயக்கத்துடன் அவளை ஏறிட.. “என்ன?” என்று முறைத்தாள்.

மஹியின் முறைப்பில் ஷ்யாம் ஏதோ கூற வாய் திறக்க,

“பேபி மா அவர் இந்த தொகுதி எம்.எல்.ஏ” என அவர்களுக்கு பின்னால் ஒரு குரல் ஒலித்தது. அக்குரலிலிருந்த நக்கல் மஹி மட்டுமே அறிந்த ஒன்று.

தங்களது பேச்சிற்கு இடையில் புதிதாக வந்த ஆதர்ஷினை ஷ்யாம் உட்பட இவன் யாரென யோசித்திருக்க,

“சோ வாட்? என் நேரத்தை வீணாக்குவது எவனா இருந்தாலும் எனக்கு பிடிக்காது” என்றாள் காட்டமாக.

எவனாக இருந்தாலும் என்ற வார்த்தை அதிக அழுத்தத்துடன் வெளியில் வந்தது. அவளது பார்வை தீர்க்கமாக அவர் மீது பதிந்திருந்தது. அதில் அவர் மீண்டும் தான் வந்ததற்கான காரணத்தை தெரிவிக்க வாய் திறக்கையில் “கெட் அவுட் ஆஃப் மை சைட்” என சீறினாள். அவளது சீற்றத்தில் அவர் நடுநடுங்கிப் போனார்.

ஷ்யாமிற்கு ராஜலிங்கம் பாவம் என்றே தோன்றியது.

“அதான் வெளிய போக சொல்றாங்களே! இன்னும் ஏன் இங்கு நின்னுட்டு இருக்கீங்க?” ஆதர்ஷின் பேச்சில் சினம் கொண்ட ராஜலிங்கம்,

“தம்பி யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று அமைதியாகவே கேட்டார்.

“அதை தெரிஞ்சிக்கிட்டு நீங்க என்ன பண்ணப்போறீங்க, வந்த வேலை முடிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன் கிளம்புங்க.” வாயிற்பக்கம் கை காண்பித்தான்.

மஹியையும், ஆதர்ஷையும் முறைத்துப் பார்த்தவர், பத்மநாபனின் வார்தைகளுக்காக அமைதியாகப் போனார். முன்னோக்கி நடந்தவரை மஹியின் சொடக்கு சத்தம் தடுத்து நிறுத்தியது.

“உன்னை அனுப்பி வைத்த பெரிய மனிதரிடம் சொல்லு… என் ஆட்டம் இப்போதான் தொடங்கியிருக்கு, அவனோட முடிவு என்னால்தான்.”

மஹியின் குரலிலிருந்த தீவிரம், உறுதி, பழிவாங்கும் வெறி, வேட்கை ராஜலிங்கத்திடம் கிலியை ஏற்படுத்த ஆதர்ஷிற்கு ஆச்சரியமாக இருந்தது.

மஹி தைரியமான பெண் தான், ஆனால் இப்படியொரு தைரியத்தை ஆதர்ஷ் எதிர்பார்க்கவில்லை.

“ரவுடி பேபி.” அவனையும் அறியாது அவனின் வாய் மெல்ல முணுமுணுத்தது.

“நீ ரொம்ப அனுபவிக்கப்போற!” ராஜலிங்கத்தின் எச்சரிக்கை மஹியின் காதில் விழவேயில்லை.

அவர் சென்றதும், நீ எதற்கு இங்கு வந்தாய் என்ற கேள்வி தாங்கிய மஹியின் பார்வையின் பொருளுணர்ந்தவன்…

“கால்ல அடிப்பட்டுச்சே சரியாகிடுச்சா பார்க்க வந்தேன்” என்றான்.

ஆதர்ஷின் பதிலில் அவனை சந்தேகமாகப் பார்த்து வைத்தவள் ஷ்யாமை கண்களாலே வெளியனுப்பியிருந்தாள்.

“இப்போ சொல்லு எதுக்கு வந்த?”

“அதான் சொன்னனே!” ஆதர்ஷ்.

“அது உண்மையா தெரியல.”

“ஹோ… எனக்கு சொந்தமான ஒன்னு இங்கிருக்கு. பார்த்துட்டு போலான்னு வந்தேன்.”

“பார்த்தாச்சு நினைக்கிறேன். கிளம்பு!”

தான் வந்த வேலை முடிந்துவிட்டதென அவனும் மஹியின் பேச்சைக் கேட்பதைப்போல் வெளியேறினான்.

சற்று உட்கார்ந்து யோசிக்கும் போது ஆதர்ஷின் மீது மஹிக்கு சந்தேகம் எழுந்தது. தனக்கு ஒன்று நிகழும் போது சரியாக இவனெப்படி வருகின்றான். இன்று அவன் சொல்லியதை போல் என்னை பார்க்க வந்தானென்றால் கூட நேற்று இரவு சரியாக அந்நேரம் அங்கெப்படி வந்தான். ரவுடி பேபிக்கே இதற்கு விடை கிடைக்கவில்லை. எப்படியும் ஒருநாள் தெரிந்துவிடப் போகிறதென்று அதனை அப்படியே விட்டு விட்டாள்.

மஹியின் அலுவலக அறையிலிருந்து வெளிவந்த ஆதர்ஷ் ஷ்யாமை சந்தித்து தன்னை முறையாக அறிமுகப்படுத்திக்கொண்டு (என்னவென்று அறிமுகம் செய்திருப்பான்) சில நிமிடங்கள் அவனிடம் உரையாடிய பின்னர் கோரிக்கை ஒன்றை முன் வைக்க, கட்டாயம் தான் அதற்கு உதவுவதாக ஷ்யாமும் வாக்களிக்க… மூடிய கண்ணாடி கதவுகளின் வழியே தன்னவளை ஒருமுறை பார்த்து ஆழ்ந்த பெருமூச்சை வெளியேற்றி அங்கிருந்து கிளம்பினான்.

ஷ்யாம் மஹியின் லா காலேஜ் நண்பன். இப்போதைக்கு அவளுக்கு நண்பர்கள் வட்டாரத்திலிருக்கும் ஒரே நண்பன் அவன் மட்டுமே. படிக்கும் காலத்தில் ஷ்யாம் யாருமற்றவன் எனத் தெரிந்த பிறகு அவனிடத்தில் அதிக ஒட்டுதலுடன் தனது நட்பினை வளர்த்துக்கொண்டாள். மஹியின் மீது அவன் கொண்ட ஆழமான நட்பால் இன்றுவரை அவளுடனே உற்றத் தோழனாக இணைந்திருக்கின்றான்.

தனி வழக்குகளை ஷ்யாம் மேற்கொண்டாலும், மஹியை விட்டு பிரிந்து தனியே அலுவலகம் வைக்க வேண்டுமென்றெல்லாம் அவன் நினைத்ததே இல்லை. அனாதை என்பதற்காகவே அனைத்திலும் ஒதுக்கப்பட்டவனுக்கு மஹியின் நட்பு வரமாய் தெரிந்தது. ஆதலால், எப்போதும் மஹியுடனே இருப்பது தான் அவனின் விருப்பம். அவனின் மனமறிந்த மஹியும் இந்நொடி வரை ஷ்யாமிற்கு நல்ல தோழியாக மட்டுமல்லாமல், உறவாகவும் இருந்து வருகிறாள். இருவரும் வரும் வழக்குகளை தங்களுக்கு ஏற்ற வகையில் பிரித்துக்கொண்டு செயல்படுவர்.

ஆதர்ஷ் சென்ற பிறகு ஷ்யாம் அப்படியே இருக்கையில் தொப்பென்று அமர்ந்துவிட்டான்.

தனக்குத் தெரியாமல் தன் தோழியின் வாழ்வில் பல பக்கங்கள் உள்ளதென தெரிந்துகொண்டான்.

மஹியின் இத்தகைய இறுக்கமான தோற்றத்திற்கு பின்னாலிருக்கும் காரணத்தை ஆதர்ஷின் மூலம் அறிந்தவன்.. என்னவாகயிருந்தாலும், மஹிக்கு தானொரு காவலனாக இருக்க வேண்டுமென்று முடிவு செய்தான்.

ராஜலிங்கம் பத்மநாபனிடம் நடந்ததை தெரிவிக்க…. தன்னையே நேராக எதிர்க்க துணியும் அவளின் பின்னணி என்னவென்று விசாரிக்க கூறினார்.

பத்மநாபன் தனது கட்சி தலைமை கட்டிடத்திற்கு சென்ற பிறகு, இரவு அங்கு நடந்ததை தெரிந்து கொண்டவர் தனது ஆட்களை, “அப்பவே ஏன் கால் பண்ணல” என பிளு பிளுவென பிடித்துவிட்டார்.

தங்களுக்கு பயந்தே சொல்லவில்லையெனக் கூற அதற்கும் திட்டி தீர்த்துவிட்டார்.

“தலைவரே நீங்க பயப்படும்படி எதுவும் நடக்கல. எவனோ பணமிருக்குமுன்னு திருட வந்திருப்பான் போல… அப்படி எதுவும் இல்லைன்னு எங்களை அடிச்சிப்போட்டு போயிட்டான்.”

இரவு ஆதர்ஷின் கையால் அடிவாங்கிய தடியர்களில் ஒருவன் கூற, அவனை பளாரென்று அறைந்திருந்தார் பத்மநாபன்.

“வந்தவன் பணம் திருட வந்திருந்தா அலுவலக அறை ஃபைல் எல்லாம் ஏன்டா சிதறி கிடக்கு. இதில் வேறென்னவோ இருக்கு. கண்காணிப்பு காமிரா பதிவுகளை செக் பண்ணுங்க” எனக் கட்டளையிட, அனைவரும் தலையை சொறிந்து கொண்டு நின்றனர். அவர்களின் அச்செயலே காணொளியில் ஒன்றும் பதிவாகவில்லையென பத்மநாபன் அறிந்துகொண்டார்.

இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட ராகவ்… தனது மாமாவின் சாம்ராஜ்ஜியத்தை அழிக்க ஒருவன்(ள்) வந்துவிட்டதாகவே நினைத்தான். அவர் என்றோ விதைத்த விதை இன்று வேர்விடுகிறதென நொடியில் யூகித்தான். ஒருவேளை இதற்கும் மஹிக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமாவென்று சிந்தித்தவனின் மூளையில், அவனின் முடிவு என்னால் தான் ஏற்படுமென்று மஹி கூறியதாக பத்மநாபன் சொல்லியது மூளையில் உதித்து ராகவின் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது.

தனது மாமாவிற்கு அவளின் (மஹி) மூலம் ஏதேனும் ஏற்பட்டால் அவளை உயிருடனே விடமாட்டேனென்று மனதில் சபதம் ஏற்றான். ஆனால் எடுத்த சபதம் மறந்து, தன் மாமாவின் சுயமறிந்து மஹிக்கு துணையாக நிற்க போகிறோமென்று அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

எவ்வளவுக்கு எவ்வளவு ராகவ் முரடன், கோபக்காரனோ அவ்வளவிற்கு நல்ல மனம் கொண்டவன். ஆனால், பத்மநாபனுக்கு ஒன்றென்று வரும்போது நல்ல மனம் காணாமல் போய்விடும்.

***************

காலையில் உணவு உண்ண மேஜையில் அமர்ந்த ஆதர்ஷ், திடீரென வந்த அழைப்பால், அதில் சொல்லப்பட்ட செய்தியால் சாப்பிடாமல் கூட மஹியின் அலுவலகத்திற்கு.. ராஜலிங்கத்திடமிருந்து எந்தவொரு வம்புமின்றி மஹியை காக்க வேண்டுமென நினைத்துச் சென்றவன் மாலை தான் வீடு திரும்பினான்.

நேற்று இரவு முதலே தானெடுத்த முடிவை ஆதர்ஷ் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் சொல்ல காத்திருந்த நாதன், ஆதர்ஷ் வந்ததும் தனக்கு முன்னால் அமரச் சொன்னவர் மற்ற அனைவரையும் அழைத்தார்.

ஏற்கனவே தானறிந்த விஷயம் என்பதால் விஷ்ணு மற்றும் வைஷு அமைதியாக நிற்க, எல்லோரும் நாதன் என்ன சொல்லப் போகிறாரென்று ஆவலுடன் அவரின் முகத்தையே பார்த்தனர்.

“ஆதர்ஷ்.”

“சொல்லுங்க தாத்தா.”

“நீ எப்போ உன் அண்ணனோடு சேர்ந்து நம்ம கம்பெனிகளின் பொறுப்பை ஏற்கப்போற?”

“இப்போ அதுக்கு என்ன தாத்தா அவசரம். நவீன் நல்லா தானே பார்த்துக்கிறான். லாஸ்ட் இயர் விட இந்த இயர் கம்பெனி ப்ராபிட் இன்கிரிஸ் ஆகிதான இருக்கு. எல்லாம் நவீன் பார்த்துப்பான். எனக்கு தொழில் செய்றதில் விருப்பமில்லை” என்றான் ஆதர்ஷ்.

அவனின் பதிலில் மொத்தக் குடும்பமும் ஷாக் அடித்ததை போல் அவனைப் பார்த்தனர்.

இப்போது தொழில் செய்வதில் விருப்பமில்லையென்று சொல்லியவன் தான், படிக்கும் காலத்திலேயே தனது அண்ணனுக்கு துணையாக நின்றான் என்பதையும், தான் தன்னுடைய சுய முயற்சியில் பெரிய நிறுவனம் ஒன்றை தொடங்கி அதில் பல வெற்றிகள் அடைய கனவு கண்டு கொண்டிருந்தான் என்பதையும் தெரிந்து வைத்தவர்களுக்கு இப்போது அவன் சொல்லிய பதில் அதிர்ச்சியாக இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

என்று தன்னவளின் எண்ணம் இதுதானென்று ஆதர்ஷ் தெரிந்து கொண்டானோ அன்றே தன் வலட்சியத்தின் பாதையை மாற்றியிருந்தான். அவனை பொறுத்தவரை மஹிக்கு என்றும், தான் துணையாக நிற்க வேண்டுமென்ற எண்ணமே, அவனின் லட்சியம் தொழிலிலிருந்து மாறி வேற்று பாதைக்கு செல்ல காரணம்.

“சரிப்பா… உன் விருப்பம் என்னவோ அதுவே எங்க விருப்பமும்” என்ற நாதன், “எனக்கு வேறொரு விருப்பமிருக்கு ஆது. அதை நீ நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

ஆதர்ஷ் சரியென ஒப்புக்கொள்ள வாய் திறக்கையில், விஷ்ணு மறுத்துக்கூறும்படி கண்ஜாடை செய்தார்.

தன் வாழ்நாளில் தன்னுடைய தந்தை சொல்லை இதுவரை மீறிடாத தனது தந்தையே இப்போது அவர் கேட்கவிருக்கும் ஒன்றிற்கு மறுப்புத் தெரிவிக்க சொல்கிறாரென்றால் விஷயம் பெரியதென யூகித்த ஆதர்ஷ், “என்னன்னு சொல்லுங்க தாத்தா” என ஊக்கினான்.

“உன் திருமணத்தை எனக்கு எதுவும் நடக்கும் முன்னாடி நடத்தணும் ஆசைப்படுறேன் ஆது…”

நாதன் சொல்லியதை கேட்ட ஆதர்ஷ்… “பெண் பார்த்தாச்சா? இல்லை இனிமேல் தானா?” எனக் கேட்டிருந்தான்.

ஆதர்ஷின் விட்டேற்றியான கேள்வியில் விஷ்ணு நிம்மதியடைய, நாதன் கலவரமானார்.

“பொண்ணு யாருன்னு நான் தெரிஞ்சுக்கக் கூடாதா?”

ஆதர்ஷ் கேட்டதில் மெல்ல தன் தொண்டையை செருமியவர்,

“வைஷ்ணவி தான் நான் உனக்கு பார்த்திருக்கும் பெண்” என்றார் நாதான்.

எங்கே அவன் மறுத்துக் கூறிவிடுவானோ என பயந்து வைஷுவிற்கு இதில் சம்மதம் தானென்ற செய்தியை சேர்த்தேக் கூறினார்.

“ஓகே பைன்… குட் சாய்ஸ் தாத்தா” என்றவன்.

தனது தந்தை விஷ்ணுவை பார்த்தவாறே… “எனக்கு முழு சம்மதம். ஆக வேண்டியதை பாருங்க” என்றான்.

கல்யாணம் நடந்திரும் போலவே🤔😁😜

error: Content is protected !!
Scroll to Top