ரவுடி பேபி 11

அத்தியாயம் 11

“வாம்மா!”

தீவிர யோசனையுடன் வீட்டிற்குள் நுழைந்தவளை சரத் கனிவுடன் வரவேற்றான்.

அவனின் குரல் காதில் விழுந்ததோ இல்லையோ மஹியிடம் எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லை.

மஹியின் முகம் ஏன் இப்படியிருக்கிறதென்ற ஸ்வேதாவிற்கு தனக்கு ஒன்றும் தெரியாதென்று உதடு பித்துக்கியவன் அவளே சொல்லுவாளென்று மெல்லக் கூறினான்.

சிறிது நேரம் காத்திருந்த ஸ்வேதா, மஹியின் முகம் யோசனையுடனான குழப்பத்திலேயே உழன்று கொண்டிருப்பதை தெளிவாக கண்டு கொண்டு,

“அந்த எம்.எல்.ஏ எதுவும் பிரச்சினை பண்ணிட்டாரா?” என்று கலக்கத்துடன் வினவினாள்.

ஸ்வேதாவின் கேள்வியில் சரத் மற்றும் மஹி இருவரும் அவளுக்கு எப்படி தெரியுமென்று ஆச்சரியமாகப் பார்க்க,

“இவங்க தான் மொபைலில் அந்த ராஜலிங்கம் உன்னை பார்க்க வரதா உன்கிட்ட சொன்னதை கேட்டேன்” எனக்கூறி சமாளித்தாள்.

மஹி “ஹோ” என்றதோடு மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிட, சரத் தன் மனைவியை நம்பாத பார்வை ஒன்றை பார்த்தான்.

‘தன்னோட தடுமாற்றத்தை வைத்தே இவன் என்னை கண்டு பிடிச்சிடுவான், இனியும் இங்க உட்கார்ந்திருக்காத ஸ்வே’ எனத் தனக்குள் பேசிக்கொண்டவள், “நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க, ருத்ரா வர டைம் ஆச்சு அவனுக்கு நான் ஸ்னாக்ஸ் செய்யப்போறேன்” என நழுவினாள்.

‘அடியே குச்சிமிட்டாய் நீ என்னவோ திருட்டுத்தனம் பண்றடி. சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்’ என்றவன் மஹியிடம் கவனமானான்.

ராஜலிங்கத்தின் வரவிற்கு பிறகு இனியும் அமைதியாக இருந்தால், தான் நினைத்தது நடக்காமல் போய்விடும். தான் எதற்காக பத்மநாபனிடம் மோதுகின்றோம் என்பதை எதிரிகள் கண்டுபிடிப்பதற்குள் தன் திட்டம் அவர்களை சூழ்ந்திருக்க வேண்டுமென்று நினைத்தவள் அதைப்பற்றி சரத்திடம் பேச எண்ணினாள்.

“அண்ணா!”

கடந்துப்போன ஐந்து வருடங்களில் முதல் முறையாக மஹி அவனை அண்ணனென்று அழைக்கிறாள்.

உள்ளுக்குள் தங்கையாக வாழ்பவளின் வாய் மொழியாக அவன் கேட்க நினைத்த வார்த்தை… சில்லென்ற மாலை நேரத் தென்றலாய் சரத்தின் மனதை குளிர்வித்தது. எதிராளிகள் தன் பார்வைக்கான அர்தத்தைக்கூட கணக்கிட கூடாதென்று அனைத்து உணர்வுகளையும் வெளிக்காட்டாதிருக்க, இத்தனை வருட தொழில் களத்தில் கற்று கொண்டதன் பயனாக முகத்தில் தன்னுடைய சந்தோஷ அலைகள் தென்படாதவாறு மிக கவனமாக மஹியிடம் சாதரணக்குரலில் “சொல்லுடா” என்றான்.

“நான் உங்க தங்கையா சிலது பேசணும்” என்றவளை தனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றவன், “சொல்லும்மா?” என ஊக்கினான்.

பத்மநாபன் தன்னுடைய வாழ்வில் எப்படி சம்மந்தப்பட்டானென்றும் தனது குடும்பத்தை பற்றியும், தன் வாழ்வின் முக்கிய நபருக்கு பத்மநாபனால் நிகழ்ந்த கொடுமையையும் ஒன்றுவிடாது கூறியவள், கவனமாக ஆதர்ஷ் பற்றியப் பேச்சினை முற்றிலும் தவிர்த்திருந்தாள்.

“முடிந்து போன வழக்கு ஒன்னை ரீ ஓபன் பண்ணலாம் இருக்கேன்.” தனது முடிவினை சொல்லியவள் சரத்தின் பதிலுக்காக அவனின் முகத்தையே பார்த்திருந்தாள்.

நவீனின் அதிகப்படியான உரிமையிலிருந்து மஹி அவர்களின் உறவுக்கார பெண்ணாக இருக்குமென்று யூகித்திருந்தவன், அவள் நாதன் குடும்பத்து வாரிசாக இருப்பாளென்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. நாதன், அவரைத் தொடர்ந்து விஷ்ணு இப்போது நவீன் இவர்கள் பிஸ்னெஸில் எப்பேர்ப்பட்டவர்கள் என்பதை அறிந்தவன், அவர்களின் வரட்டு பிடிவாதத்தால் மஹி அடைந்த துன்பங்களை நினைத்து வருந்தினான். அன்றொரு நாள் சொல்லியதை போல் எப்போதும் தான் துணை நிற்க வேண்டுமென்று முடிவு செய்தவன்,

“உனக்கு என்ன தோணுதோ செய்டா! நீ எதிர்ப்பது யாராயிருந்தாலும் நான் உன்னோட, உன் பின்னால் இருக்கேன்” என உறுதியளித்தான்.

“என் பின்னாடி இல்ல… எனக்கு இணையா துணையா நிக்கணும்” எனக் கூறியவள் தான் அடுத்து செய்ய வேண்டியதற்கான திட்டங்களை வகுக்கத் தொடங்கினாள்.

அன்றே மஹிக்குத் தெரியாமல் அவளின் பாதுகாப்பிற்காக இருவரை நியமித்தான் சரத். பின்னே அவள் துணிந்து மோதுவது சாதாரண மனிதர் அல்லவே, எதிர்வினை எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்குமே. என்னதான் உனக்கு துணையாக இருக்கின்றேன் எனக் கூறினாலும் அவனுள்ளும் மஹியை நினைத்து சிறு அச்சம் இருக்கத்தான் செய்தது.

************************

“இந்த திருமணத்தில் எனக்கு முழு சம்மதம். ஆகவேண்டியதை பாருங்க” என்ற ஆதர்ஷ் வைஷ்ணவியை பார்த்து கண்சிமிட்டியவாறு அங்கிருந்து நகர்ந்தான்.

தன் மகனின் பதிலில் அதிர்ந்து நின்ற விஷ்ணுவை…

“அப்புறம் என்னடா என் பேரனே சம்மதிச்சுட்டான். நீ என்னவோ அவன் ஒப்புக்கமாட்டான்னு சொன்ன” என்ற நாதன், “இன்னும் பத்து நாளில் கல்யாணம் நடக்கணும். நாளைக்கு காலையிலே நம்ம ஜோதிடரைப் பார்த்து முகூர்த்தம் குறிக்கணும்” என்றவர் அந்த வயதிலும் மகிழ்ச்சியால் துள்ளி குதித்தார்.

யமுனா மஹியை நினைத்து கவலை கொண்டார். வைஷ்ணவியின் காதல் அனைவரும் தெரிந்திருந்ததால்,

“நீயே தாத்தாகிட்ட உன் காதலை சொல்” எனக்கூற, “திருமணத்தில் எனக்கும் சம்மதம் தான்” என்று அனைவரின் தலையிலும் குண்டை போட்டாள் வைஷ்ணவி.

“அப்போ நீ காதலித்த பையன் நிலை?” ஜானகி அதிர்ந்துக் கேட்டார்.

“அதுக்காக ஆதர்ஷ் அத்தான் மாதிரி ஒரு நல்ல பையனை வேண்டாம்னு மறுக்க சொல்கிறீங்களா? எனக்கு வர நல்ல வாழ்க்கையை நான் கெடுத்துக்க விரும்பல” எ ன்றவள் விடுவிடுவென தனது அறைக்குள் சென்றுவிட்டாள்.

மெத்தையில் அமர்ந்தவளுக்கு இதயம் தாறுமாறாகத் துடித்தது. தன்னை சமன்படுத்திக்கொள்ளவே வைஷுவிற்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

வைஷுவின் பதிலை விஷ்ணு உட்பட யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் முகத்தில் உறைந்திட்ட அதிர்ச்சியிலேயே நன்கு தெரிந்தது.

நடப்பது எல்லாம் விதியின் கையில் என்று நினைத்து தத்தம் வேலைகளை காணச் சென்றனர்.

விஷ்ணு மட்டும் தன்னுடைய இளைய மகனை தேடிச் சென்றார்.

“அட உசுரைய தொலைச்சேன் உனக்குள்ள…

இந்த உலகினில் உனைபோல் யாருமில்ல _______________

நீ தூங்கும் நேரம் உன் கன்னம் ஓரம்

உனை தீண்டும் என் தாபம்

உடைந்தே போகும்.

என் இதயத்தில் யுத்தம் செய்யாதே!”

ஆதர்ஷின் மனதிற்கு மிக நெருக்கமான அந்த பாடல், அவனின் அறை முழுக்க மெல்ல கசிந்து கொண்டிருந்தது.

கீழே அனைவரிடமும் திருமணத்திற்கு சம்மதமெனக் கூறிவிட்டு மேலே தனது அறைக்குள் நுழைந்ததும், உடைகள் கலையாது, உடலை சுத்தம் செய்யாது மெத்தையில் விழுந்தவன், பாடலை ஒலிக்கச் செய்து தன்னவளின் நினைவுகளுடன் மூழ்கிவிட்டான்.

அப்பாடல் அவனின் காயம்பட்ட இதயத்திற்கு எவ்வளவு இன்றியமையாததென்று அவன் மட்டுமே அறிந்தது. இப்பாடலை ஒலிக்கச் செய்து மஹியின் நினைவுகளுடன் மூழ்கிவிடுவது மிகவும் பிடித்தது. மஹியால் யுத்தம் நடக்கும் இதயத்திற்கு ஆறுதலாய் அவன் விரும்பி கேட்கும் பாடல்.

ஆதர்ஷின் மனம் எல்லையில்லா காதல் வீதியில் சிறகடிக்கும் நேரம் சரியாக பாடல் அணைக்கப்பட்டது.

தனது காதல் நிலை அறுபட்டத்தில், சலிப்புடன் கண் திறந்து பார்த்தவன் தனது தந்தையை கண்டதும், “வாங்க டாட்” என வரவேற்றான்.

“பாட்டு ரொம்ப நல்லாயிருந்துச்சு.” விஷ்ணு கூற,

“மை மோஸ்ட் பேவரட் சாங் டாட்.” ஆதர்ஷ் பதிலளித்திருந்தான்.

“இட் மீன்ஸ் டூ…” விஷ்ணுவின் இழுவையில் ஆதர்ஷ் மௌனம் காக்க, “மஹியை நினைத்து இந்த பாட்டை ரசிக்கிற அப்படித்தானே?” என்று அழுத்தமாகக் கேட்டார்.

“எஸ் டாட்.” அதே அழுத்தம் ஆதர்ஷின் குரலிலும் காணப்பட்டது.

“இவ்வளவு காதல்…” என ஏதோ கேட்க வந்தவர் அவ்வாக்கியத்தை பாதியிலேயே நிறுத்தி, “நீ இன்னமும் மஹியை விரும்புறியா?” எனக் கேட்டிருந்தார்.

“டாட்!”

அவர் கேள்வியில் அதிர்ந்தவன்,

“ஷீ இஸ் மை வைஃப் டாட்” என்றான்.

உயிருக்கு உயிராய் நேசிப்பவளை மனைவியெனக் கூறுகின்றான் என நினைத்தவர்… “முதல் வைஃப் இருக்கும்போது யாரும் இரண்டாவது கல்யாணம் பண்ண மாட்டங்கப்பா” என சொல்லியிருந்தார்.

அவரின் வார்த்தைகளுக்கு மென்னகை ஒன்றை பரிசாக சிந்தியவன்… “என் வாழ்க்கையோட இறுதி பக்கம் வரை மஹி மட்டுமே என் மனைவி” என உருக்கமாகக் கூறியிருந்தான்.

“அப்புறம் எதுக்கு இந்த கல்யாணம் ஆதர்ஷ்.” இவ்வளவு காதலை மஹி மீது வைத்திருப்பவன் எப்படி இந்தக் கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னான் என்பதற்கான விடையறிய துடித்தார்.

“என் மனைவி என்னோட வாழ வரணுமே! அதுக்காக.”

ஆதர்ஷ் கூறியதில் விஷ்ணு மிகவும் குழம்பினார். அவரின் குழம்பியத் தோற்றமே அவருக்கு தான் சொல்ல வருவது புரியவில்லையென தெரிந்தவன் விளக்கமாகக் கூறினான்.

“நான் எந்தளவுக்கு மஹியை நேசிக்கிறனோ.. அதே அளவுக்கு, அதைவிட அதிகமா மஹியும் என்னை நேசிக்கிறாள் டாட். சோ, இந்த கல்யாணம் மஹி காதலை மீறி நடந்துடாது. அப்படி நடந்தாலும் எனக்கும் மஹிக்கும் தான் திருமணம்.” உறுதியான குரலில் மொழிந்தான்.

“அப்போ, உனக்குத் திருமணம் அப்படின்னா மஹியே உன்னைத் தேடி வருவான்னு சொல்றியா?”

விஷ்ணுவின் சந்தேகக் கேள்விக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கையாக “எஸ் டாட்” என்றான்.

விஷ்ணு எதையோ நினைத்து சிந்திக்க, அதை சரியாக யூகித்த ஆதர்ஷ்… “நிச்சயம் இதில் வைஷு பகடைக்காய் இல்ல டாட்” எனக் கூறினான்.

“ஆனால், வைஷுவும் உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சுட்டாளே ஆது.” விஷ்ணுவின் குரலில் கலக்கமிருந்தது.

அவரது கலக்கம் அவசியமற்றது எனும் விதமாக அடுத்து ஆதர்ஷ் பேசினான்.

“வைஷுகிட்ட நான் ஏற்கனவே பேசிட்டேன் டாட்” என்றவன் முந்தைய நாள் இரவு இருவருக்குள்ளும் நடந்த உரையாடலை கூறினான்.

“தாத்தா உங்ககிட்ட பேசினதை அப்பவே பாட்டி என்கிட்ட சொல்லிட்டாங்க. நானும் முதல்ல வேண்டாம் சொல்லத்தான் நினைத்தேன். ஆனால், கொஞ்சம் யோசித்த அப்புறம் தான் இந்த மேரேஜ் மூலம் மஹியை என்கிட்ட வர வச்சிடலாம்னு பிளான் பண்ணேன்.

இதை வைஷுகிட்ட சொல்லும் போதுதான் யாரையோ லவ் பண்றேன் சொன்னா. அப்படி மஹி லாஸ்ட் மினிட் வரை வரலன்னா, அந்த மேடையிலே அவளுக்கும் அவள் லவ் பண்ற பையனுக்கும் மேரேஜ் நடக்கும் சொன்னப்புறம் வைஷுவும் அவளோட ஆளுகிட்ட பேசிட்டு என் பிளானுக்கு ஓகே சொல்லிட்டாள். சோ, உங்க மருமகளை வச்சு நான் கேம் எதுவும் பிளே பண்ணல போதுமா?”

தீவிரமாக சொல்லிக்கொண்டிருந்தவன் இறுதியில் கேலியாக முடித்தான். இப்போது தான் அவருக்கு நிம்மதியாக இருந்ததது. எங்கே தனது மக்களின் வாழ்க்கை தடம் மாறிவிடுமோவென்று இந்த இரண்டு நாட்களில் அவரடைந்த வேதனை அவருக்கு மட்டும் தானே தெரியும்.

“ரொம்ப சந்தோஷம் ஆது. ஆனால், வைஷு கேட்டது போல மஹி வரலன்ன?”

“நிச்சயம் கல்யாணம் நடக்கும் டாட்… வைஷுவிற்கு என் ஃபிரண்டுக்கும்.”

“உன் பிரண்ட்… வைஷூ லவ்வர் வினுதான்னு உனக்கு எப்படித் தெரியும்?”

“வினு வைஷு கிட்ட லவ் சொன்ன அன்னைக்கே உங்ககிட்ட மாட்டிக்கிட்டதும், உங்க காதல் உண்மையா இருக்கும் பட்சத்தில், வெயிட் பண்ணுங்க நானே உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறேன்னு நீங்க வாக்குகொடுத்த வரை எல்லாம் எனக்குத் தெரியும்.” சிறிதும் சிரிக்காது கூறுபவனை புன்னகையுடன் பார்த்தவர்…

“வினு சொல்லிட்டானா? நான் உன்கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருந்தேன்” என்றார்.

“அவன் உங்க வார்த்தையை இந்த நொடி வரை மீறவே இல்லை டாட். நைட் பீச்சுக்கு போயிருந்தோம். வினு அவன் வாலேட்டை கீழே விட்டுட்டுப் போயிட்டான்” எனக் கூறியவன் தான் எடுத்து வைத்திருந்த வினுவின் வாலேட்டை திறந்து காண்பிக்க அதில் வைஷூ புகைப்படமாக மின்னிக்கொண்டிருந்தாள்.

“வைஷூகிட்ட பேசிட்டு வரவரை, இவங்க தான் லவ் பண்றாங்கன்னு எனக்குத் தெரியாது டாட். சொல்லப்போனா வினு காதலிப்பதே கிஷோர் சொல்லித்தான் தெரியும்” என்றவன், “மார்னிங் தான் வாலேட்டை வினுவை பார்த்தால் கொடுத்திடலாம் எடுக்கும்போது எனக்கேத் தெரிந்தது. வினு அவனாக என்கிட்ட சொல்லும்வரை எனக்குத் தெரிந்ததா நீங்களும் காட்டிக்காதீங்க” என்றான்.

அதற்கு சிரித்த விஷ்ணு… “பய பாவம்டா, இதுநாள் வரை வினு உன்கிட்ட சொல்லலன்னு அவன்கிட்ட சண்டைலாம் போடாத, அதுக்கு நான்தான் காரணம். உண்மையிலே வினு உன் நண்பனா கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்கணும் ஆது” எனக் கூறினார்.

“எஸ் டாட்.”

விஷ்ணுவின் கூற்றை ஆமோதித்தவன்,

“நம்ம பிளானுக்கு அவரும் ஓகே சொலிட்டாருன்னு வைஷூ சொல்லும்போது எனக்கு ஆச்சரியமா இருந்தது டாட். ஆனால், அது வினுன்னு தெரிந்த அப்புறம் என் லைஃப்காக அவன் சரின்னு சொல்லாம இருந்திருந்தாதான் எனக்கு ஆச்சரியமா இருந்திருக்கும்” என்றான்.

” ம்ம்ம்”, என்ற விஷ்ணு, “சரிப்பா நான் கிளம்புறேன். நீ பாட்டு கேட்காம சீக்கிரம் தூங்கு, அப்போதான் ட்ரீம்ல என் மருமகளோட டூயட் ஆடலாம்” எனக் கூறியவர் ஆதர்ஷின் முறைப்பை கண்டுகொள்ளாது அங்கிருந்து வெளியேற,

“தாத்தாவுக்கும் இந்த பிளான் தான்… அதாவது, எனக்கு இன்னொரு பொண்ணோட மேரேஜ் அப்படின்னா மஹி என்னைத்தேடி வருவாங்கிற நம்பிக்கையில் தான் இந்த ஏற்பாட்டையே செய்றார். இதை உங்ககிட்ட பேசுறதுக்கு முன்னாடியே வைஷூகிட்ட சொல்லி சம்மதம் வாங்கிட்டார். நம்ம வீட்டுப்பெண், தன்னோட பிளானுக்கு ஆதரவா இருப்பான்னுதான் நீங்க எனக்காக பாக்குறதா சொன்ன பொண்ணை வேணாம் சொன்னார். அப்புறம் வைஷூ லவ் தாத்தாவுக்கு ஏற்கனவே தெரியும்” என்றான்.

ஆதர்ஷ் கூறியதும் அமைதியாக திரும்பியவர், “இன்னும் எனக்குத் தெரியாம எதுவும் நடக்குதா?” எனக் கேட்க… சாதாரணமாக,

“இப்போதைக்கு அவ்வளவு தான் டாட்” என்ற ஆதர்ஷினை முறைக்க நினைத்து முடியாமல் போக, தோளில் செல்லமாகத் தட்டிச் சென்றார்.

எல்லாம் சரியாக நடந்துவிட வேண்டுமென்று கூறிக்கொண்டவன் தன்னவளுக்கு அழைப்பு விடுத்திருந்தான்.

நாளை தான் செய்யப்போகும் செயலுக்காக, தூங்காது சில முக்கியக் குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்த மஹி, யாரென திரையை பார்க்காமலேயே மொபைலினை ஆன் செய்து காதில் வைத்தாள்.

“லவ் யூ டி வைஃபீ…”

செவி நுழைந்த தன்னவனின் வார்த்தைகளில், செய்து கொண்டிருந்த வேலையை பாதியிலே நிறுத்தியவள்.. யாரென்று தெரிந்து கொண்டே,

“ஹலோ மிஸ்டர் மைண்ட் யுவர் வோர்ட்ஸ்” என காட்டமாக மொழிந்தாள்.

“மைண்டோட தான்டி பேசுறேன் மை ஸ்வீட் வைஃபீ…”

மேலும் மேலும் அவனின் கொஞ்சல் குரலில் கோபத்தை காட்ட முடியாது தவித்தவள், “எதுக்கு போன் பண்ண?” எனக் கேட்டிருந்தாள்.

“இப்போ நான் யாருன்னு கண்டுபிடிச்சிட்டியாடி என் ரசகுல்லா!”

அவன் கேட்டதில் தடுமாறியவள்…

‘நான் எப்பவும் கேட்க துடிக்கும் குரல் நினைவில்லாமலிருக்குமா?’ மனதோடு சொல்லிக்கொண்டு,

“முதல்ல பேசும்போது தெரியல இப்போ தெரியுது. சொல்லு என்ன விஷயம்?” எனக் கேட்டாள்.

“பொய்!” ஆதர்ஷ் கூறியதில், எங்கு கண்டுகொண்டானோ என பயந்தவள்,

“உனக்கு வேலையில்லனா போய் தூங்கு, எனக்கு நிறைய வேலையிருக்கு” எனக்கூறி இணைப்பை பட்டென்று துண்டித்தாள்.

“தூக்கம் வருதுதான்… ஆனால், ஹக் பண்ணிட்டு தூங்க நீயில்லையே. வர்றியா வைஃபீ?” என்ற மெஸேஜினை அவளுக்கு தட்டுவிட்டவன் மகிழ்ச்சியான மனநிலையுடன் உறக்கம் தழுவினான்.

எடுக்க வேண்டிய முக்கிய குறிப்புகள் அனைத்தையும் எடுத்து வைத்தவள், உறங்கச் செல்லும்போது ஆதர்ஷிடமிருந்து வந்திருந்த தகவலை படித்து சத்தமில்லாமல் புன்னகைத்தாள்.

“கொழுப்புடா உனக்கு.” கொஞ்சலாகத் திட்டியவள்…

“இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணு மாமா!” மனதிலிருக்கும் ஆதுவிற்கு பதிலத்தவள் அவனுடன் மனதோடு பேசிக்கொண்டே உறங்கிப்போனாள்.

********************

தோட்டத்தில் காலை நேர சூரியனை ரசித்தவாறு யோகா செய்து கொண்டிருந்த ராகவை கலைத்தது அவனின் அன்னை தேவியின் குரல்.

அன்னை அழைத்ததும் செய்து கொண்டிருந்த ஆசனத்தை பாதியிலே விட்டுவிட்டு “என்னம்மா” என்று ஓடி வந்தான்.

“ஏம்மா, நீங்க இவ்வளவு தூரம் தனியா வந்தீங்க?” என்று கடிந்து கொண்டவன், அவர் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை திருப்பி தள்ளியபடி வீட்டிற்குள் சென்றான்.

வேலையாளை தவிர்த்து தனது அன்னைக்கு தன்னுடைய கையினாலே தேநீர் தயாரித்தவன் அவரிடம் மிதமான சூட்டில் குடிக்க கொடுத்தவன், அவருடனே அமர்ந்தான்.

தேவி… ராகவ் மற்றும் அம்சாவின் அன்னை. பத்மநாபனின் மாமியார். பதினெட்டு வருடங்களுக்கு முன் தன்னுடைய கணவர் இறந்த செய்தி கேட்டு மயங்கி விழுந்தவரின் கால்கள் அதிர்ச்சியில் செயலிழந்து போயின… அன்று முதல் தன் அன்னையை சேயாக தாங்குகிறான் ராகவ்.  அன்று ஒடிந்து நிலை குலைந்து போயிருந்த தன் குடும்பத்திற்கு இன்று வரை ஆதரவாக பத்மநாபன் இருப்பதாலே ராகவிற்கு அவர் மீது அவ்வளவு மரியாதை.

“கேட்கணும்னு நினைத்தேன். கௌசி எப்படிப்பா இருக்காள்?”

தாய் கேட்டதற்கு, “என் மேல ஜூஸ் கொட்டி கவிழ்க்கும் அளவுக்கு ரொம்பவே நல்லா இருக்காள்” என்றவன் நேற்றைய நிகழ்வில் இதழோரம் புன்னகைத்தான். தன் மகன் சந்தோஷமடையுமளவிற்கு நேற்று ஏதோ நடந்திருக்கிறதென்று நினைத்தவர், நாகரிகம் கருதி அது என்னவென்று கேட்கவில்லை.

“இன்னைக்கு கௌசி பிறந்தநாள் ராகவ், புள்ளைய பார்க்கணும் போலிருக்குப்பா. கூட்டிட்டு வர்றியா?” என தன் பேத்தியை நீண்ட நாள் பார்க்காத ஏக்கத்துடன் கேட்டார்.

மாலை கண்டிப்பாக அழைத்து வருவதாகக் கூறியவன், தேவிக்கு துணையிருக்கும் உதவியாளரிடம் அவரை நன்றாக பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு அன்றைய பணிகளை காணத் தயாராகினான்.

இதற்கு முந்தைய பிறந்தநாள் எப்படியோ… ஆனால் காதலை ராகவிடம் கௌசி தன் வாய் வார்த்தையாக சொல்லிய பிறகு வரும் முதல் பிறந்தநாள். ஒருவேளை இன்று தன்னுடைய பிறந்தநாள் என்பதால் தான் நேற்று தன்னுடைய காதல் மனத்தை ராகவிடம் வெளிப்படுத்தினாளோ.

இரவிலிருந்து ராகவின் அழைப்பிற்காகவும், அவனின் வாழ்த்திற்காகவும் காத்திருக்கிறாள். ஆனால், ராகவிடமிருந்து ஒரு குறுந்தகவலுக்கு கூட பஞ்சமாகிப்போனது.

தந்தை இறந்த பிறகு, அந்த சிறுவயதிலேயே குடும்பத்தை காக்க நினைத்தவன் தொழில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவே முரட்டு குழந்தையாக வளர்ந்தான். ஆதலால், சிறு வயதிலிருந்தே கௌசிக்கு ராகவின் மீது நிறைய பயம். தனது பாட்டி வீட்டிற்கு சென்றால், ராகவின் முன் கூட செல்லமாட்டாள். அப்படிப்பட்டவள் இன்று அவனை காதலிக்கின்றாள் என்றால் அவனின் நற்குணமே காரணம். ராகவின் நினைவுகளில் இவள் உழன்று கொண்டிருக்க, அங்கு நினைவுக்கு சொந்தக்காரனோ ஒருவனை அடி வெளுத்துக்கொண்டிருந்தான்.

***************

காலை மஹி எழுந்ததும் செய்த முதல் வேலை… ‘பதினெட்டு வருடங்களுக்கு முன்பு இறந்து போன தன் தந்தையின் இறப்பில் தனக்கு சந்தேகமிருப்பதாகவும், அது தற்கொலையல்ல திட்டமிடப்பட்ட கொலை என்ற அடிப்படையில் தற்கொலையென மூடப்பட்ட வழக்கினை இன்று நான் ரீ ஓபன் செய்கிறேனென்று’ தன் கைப்பட எழுதிய புகார் கடிதத்துடன், இதுவரை தான் சேகரித்த சில ஆதாரங்களையும் எடுத்துக்கொண்டு ஐஜி அலுவலகம் சென்றாள்.

செல்லுமுன் சரத்திடம் சொல்வதற்கும் மறக்கவில்லை. உடன் வருகிறேன் என்றவனை, அவனின் பாதுகாப்பு கருதி வேண்டாமென மறுத்துவிட்டாள்.

மஹி செய்யவிருப்பதை அறிந்த ஆதர்ஷ் தான் எதிர்பார்த்ததென்று அமைதியாக இருக்க,

நவீன், “அவளை எப்படியாவது தடுக்கணும். அவள் குற்றம் சாட்டுவது பத்மநாபன் மீது, அவனுக்கு இது தெரிந்தது அவ்வளவு தான்!” என பயந்தான்.

“உன் பயம் தேவையில்லாதது. மஹிக்கு துணையா நானிருக்கேன்” என்றவன் கூலாக சாக்லெட்டினை சுவைக்க ஆரம்பித்தான்.

பத்து நிமிட காத்திருப்பிற்கு பின் ஐஜி’யை காண மஹி உள்ளே அனுமதிக்கப்பட்டாள்.

வாங்க மிஸ்.மஹிரா என்றவரின் அழைப்பைத் திருத்தி “***.மஹிரா *** ****” எனக் கூறினாள்.

“ஹோ… அம் சாரி” என்றவர், வந்ததற்கான காரணம் கேட்க, தான் கைப்பட எழுதி கொண்டு வந்திருந்த புகாரை அவர் முன் நீட்டினாள்.

அதை படித்துப்பார்த்தவர்… சர்வமும் அதிர இருக்கையிலிருந்து எழுந்தே விட்டார்.

“நீ ராஜசேகரின் மகளா?” எனக் கேட்க,  அவரின் அதிர்ச்சியையும் கேள்வியையும் அலட்சியமாக புறம் தள்ளியவள், “இந்த கேஸ் ரீ ஓபன் செய்ய என்னோட புகார் மட்டும் போதுமா இல்லை கோர்ட் ஆர்டர் கொண்டு வரவா?” எனக் கேட்டிருந்தாள். அவளின் கம்பீரம் அவளது தந்தை ராஜசேகரை நினைவுபடுத்தியது.

இந்த இளம் வயதிலேயே லீடிங் லாயாரா இருப்பதற்கான காரணம் இப்போது தான் புரிகிறது. “புலிக்கு பிறந்தது பூனையல்லன்னு நிரூபிச்சிட்ட” என்றவர், “ஒருமுறை நல்லா யோசித்துடும்மா. நீ மோத போவது நம்ம மாநிலத்தின் தலைவரிடம்” என்க,

“சோ வாட்?” சினந்து எழுந்தவள், “முதலமைச்சரா இருந்தா தப்பு செய்யமாட்டாங்களா?” என பெண் புலியென உறுமினாள்.

அவளின் சீற்றம் கண்டு அவரே பயந்து நடுங்க…. புயலென உள் நுழைந்தான் ராகவ்.

error: Content is protected !!
Scroll to Top