ரவுடி பேபி 12

அத்தியாயம் 12

“டேய் மாப்ள…”

பிரமாண்டமான அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் ஆறாம் தளமே அதிரும் வகையில் தனது நண்பனை அதிக சத்தத்துடன் கத்தி அழைத்தபடி அவனின் அறைக்குள் நுழைந்தான் கிஷோர்.

முக்கியமான மீட்டிங் ஒன்றிற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த வினு கிஷோரின் சத்தத்தில் ஒருநொடி பயந்தே விட்டான்.

“எத்தனை முறைடா உனக்கு சொல்றது. இப்படி கத்திட்டு ஓடி வராதேன்னு!” வினு கிஷோரிடத்தில் கடிந்து கொண்டான்.

“சாரிடா!”

முகத்தை தொங்கப்போட்டு கிஷோர் கேட்ட சாரியில், “இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை. எதுக்கு இப்போ இப்படி சத்தமா கத்திட்டு ஓடிவந்த?” என வினு கேட்டிருந்தான்.

“ஆதுவுக்கு கல்யாணமாம் டா…”

கிஷோர் ஆச்சரியமாகக் கூறியதில், “எனக்கு தெரியுமே” என்று சாதரணமாகக் கூறிய வினு, “அய்யோ ஒளறிட்டோம் போலிருக்கே” என தன் நாக்கை கடித்துக்கொண்டான்.

வினுவை சந்தேகமாகப் பார்த்த கிஷோர் எப்படியென வினவ…

“அதான் இப்போ நீ சொன்னியே” என வினு சமாளிக்க முயன்றான்.

“இந்த பழைய டெக்னிக் வச்செல்லாம் என்னை ஏமாத்த பார்க்காத! உனக்கு எப்படித் தெரியுமம் சொல்லு” என கிஷோர் விடாகண்டனாக அதிலேயே நின்றான்.

“உனக்கு எப்படித் தெரியுமோ அப்படித்தான் எனக்கும் தெரியும்” என்று பதிலளித்த வினுவை நம்பாத பார்வைப் பார்த்த கிஷோர், “சரி எனக்கு எப்படித் தெரியும்?” என்று மடக்க,

“உனக்கு எப்படித் தெரியும்ன்னு உனக்குத்தானே தெரியும்” என்று மீண்டும் அவனை குழப்பினான் வினு.

தலையை உலுக்கியவன், “சரி விடு, அதெப்படியோ எனக்கு முன்னவே உனக்குத் தெரிஞ்சிடுச்சு. மிக்க மகிழ்ச்சி. இப்போ நாம மேட்டருக்கு வருவோம், இந்த ஆது வைஷுவை கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்போ அந்த ஆம்பள பையனோட வாழ்க்கை ?” என்றான் கிஷோர்.

“அது அவனோட பிரோப்ளேம் டா… நீ ஏன் இதை ரொம்ப யோசிக்கிற?” என்ற வினுவை ஆச்சரியமாகப் பார்த்து வைத்தான் கிஷோர்.

அவன் பார்வையின் பொருளுணராது, ” என்னடா?” என்ற வினுவிற்கு, “ஒன்றுமில்லை” என கூறிய கிஷோர்…

“எப்போலயிருந்துடா பிரித்துப் பார்க்க ஆரம்பிச்ச?” என்றான்.

கிஷோருக்கு எப்படி புரிய வைப்பதென்று குழம்பிய வினு, “நான் காதலிக்கும் பெண் தான்டா வைஷூ” என்றான்.

“மாப்ள!” என்று அழைத்தவாறு வினுவை கட்டிக்கொண்ட கிஷோர், “நண்பனுக்காக உன் காதலையே விட்டுக்கொடுத்த உன்னை போய் பிரித்து பார்க்கிறன்னு தவறா நினைத்துட்டனே” எனக்கூற,

“நான் எப்போடா விட்டுக்கொடுத்தேன்” என்று வினு கேட்டதில் அதிர்வுடன் அவனிடமிருந்து பிரிந்தான் கிஷோர்.

வினுவையே சில நொடிகள் அமைதியாகப் பார்த்திருந்த கிஷோர்,

“தெளிவா நீயே சொல்லிடுடா. இல்லைன்னா நானா எதையாவது நினைத்து, அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடைய முடியாது” என சொல்லியவன் இருக்கையில் அமர்ந்தான்.

“ஆது வேறொரு பெண்ணை மேரேஜ் செய்துக்க போறான் அப்படின்னா நிச்சயம் மஹி அவன்கிட்ட வந்து சேர்வாளென்பது ஆதுவோட நம்பிக்கை, இதையே தான் நாதன் தாத்தாவும் நினைக்கிறார். சோ, கல்யாணப்பொண்ணு வைஷூவா இருந்தால், கல்யாணம் நடக்காம நின்னு போனாலும் பிரச்சினை இல்லையில்லையா அதான், ஆதுவுக்கு கல்யாணப் பெண்ணா வைஷூ நடிக்கப்போறாள். நான் தான் வைஷூ லவ்வர்ன்னு தெரியாம ஆது என்கிட்ட பெர்மிஷன் கேட்க சொல்ல, வைஷூவும் என்கிட்ட கேட்டாள் நானும் சரி சொல்லிட்டேன். ஆதுவுக்கு முன்னாடியே இதைப்பற்றி நாதன் தாத்தா வைஷூகிட்ட பேசியிருக்கார். சோ, வைஷூ வரலன்னாலும் வந்தாலும் எனக்கும் வைஷூவுக்கும் அன்னைக்கு கட்டாயம் மேரேஜ் நடக்கும்.”

வினு கூறியதும் அனைத்தும் புரிந்துவிட, “உண்மையிலே நீ ஒரு நல்ல நண்பன்டா… நானா இருந்திருந்தா கூட என் காதலியை என் நண்பனுக்கு மணப்பெண்ணா நடிக்க வைக்க சம்மதித்திருக்க மாட்டேன் நினைக்கிறேன். நீ எப்படிடா?”

ஆச்சரியம் விலகாமல் கேட்ட கிஷோரிடம்… “ஆது நம்ம பிரெண்ட் டா, அவனுக்காக இதைக்கூட செய்யலன்னா எப்படி?” என்ற வினு… “நானாவது நடிக்க வைக்கத்தான் ஓகே சொன்னேன். ஆனால் நீ உன் காதலை(லி)யே விட்டுக்கொடுப்ப. என்னைவிட நீ பலபடி உயர்ந்தவன்.. நட்புக்காக உன் அளவுக்கு யாரும் விட்டுக்கொடுக்க முடியாது” என்றான்.

வினு உள்ளர்த்தம் ஒன்று வைத்து பேச… கிஷோர் புரியாததைபோல் அவனிடமிருந்து விடைபெற்றான்.

வெளியில் வந்த கிஷோர் தனக்குள் புதைத்து வைத்த காதலின் பக்கத்தை மெல்ல புரட்டினான். வினுவும் இப்போது இதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான்.

********************

ஐஜி அறையினுள் புயல் போல் நுழைந்த ராகவினை அலட்சியமாகப் பார்த்து வைத்தாள் மஹிரா. அவளின் அலட்சியப் பார்வை, ஏற்கனவே கோபத்திலிருந்தவனின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டது.

“வாங்க மிஸ்டர். ராகவ்.”

ஐஜி அவனை வரவேற்க, “நீங்க இந்த கேசினை மீண்டும் விசாரணைக்கு கொண்டு வர கூடாது” என்றான். உத்தரவிடம் குரலில்.

முதலமைச்சருக்கு மருமாகனாக போகிறவன் என்பதால் தனக்குள் எழுந்த கோபத்தை வெளிக்காட்டாது, “கொலை செய்யப்பட்ட நபரின் மகளே கேசை ரீ ஓபன் செய்ய சொல்லும் போது இதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை மிஸ்டர்.ராகவ்” என்றார் திரு.தீனதயாளன்.ஐபிஎஸ்.

தான் நேராக வந்து சொல்லியும் கேட்காத தயாவை கூர்ப்பார்வையால் நோக்கியவன், “தேங்க்ஸ் ஐஜி சார், இதை எப்படி டீல் பண்ணனும் எனக்குத் தெரியும்” என்றான்.

“உங்களால் முடிந்ததை பாருங்க.”

தெனாவட்டாகக் கூறிய மஹியை ஆழ்ந்து நோக்கியவன், “என் முதல் டார்க்கெட் நீ தான்” எனக் கூறிச் சென்றான்.

“கேஸ் ஸ்டார்ட் பண்ணும் முன்பே பிரச்சினை வருதே! கட்டாயம் இதை செய்ய வேண்டுமா? மீண்டும் ஒருமுறை நல்லா யோசிச்சிக்கோ மஹிரா.”

தன் மீது அக்கறையாக கூறுபவரை அமைதியாக பார்த்தவள், “பதினெட்டு வருஷமா யோசித்துட்டேன். இனி இதிலிருந்து பின்வாங்குவதா இல்லை.” உறுதியாகவும் அழுத்தமாகவும் தெரிவித்தாள்.

“முதலமைச்சர் சம்மந்தப்பட்ட வழக்கு என்பதால் போலீசிடம் இதனை ஒப்படைக்க முடியாது. க்ரைம் ப்ராஞ்சிடம் தான் வழக்கினை கொண்டு செல்ல வேண்டும். சோ, புகாரினை நான் சிபிசிஐடி’க்கு அனுப்பிட்டு உனக்கு தகவல் அளிக்கிறேன்” என்ற தயாவிடம் நன்றி தெரிவித்து வெளியேறினாள்.

தனது காரினை நிறுத்திய இடத்திற்கு மஹி வர, அங்கு அவளின் கார் இஞ்ஜின் மீது ஸ்டைலாக அமர்ந்து சாக்லேட்டினை சுவைத்துக் கொண்டிருந்தான் ஆதர்ஷ், அவளின் விஹூ.

அவனைப் பார்த்ததும் தன் நடையின் வேகத்தை குறைத்தவள், எப்படி நானெங்கு சென்றாலும் சரியா அவ்விடத்திற்கு வருகிறானென யோசித்தவள்.. தனது காரை நெருங்கியதும், “உனக்கு வேற வேலையேயில்லையா?” எனக் கேட்க, அதற்கு சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், “உன் பின்னாடி வரதுதான் என் வேலை டி பொண்டாட்டி” என்றான்.

“ஹேய்… இந்த பொண்டாட்டி சொல்ற வேலையெல்லாம் வேணாம்” என்று ஒரு விரல் நீட்டி எச்சரித்தவளை மயக்கும் பார்வை பார்த்தவன்.. அவள் நீட்டிய விரலின் மீதே பொதுயிடமென்றும் பாராமல் முத்தம் வைத்தான்.

நொடியில் அவனை தள்ளிவிட்டவள், காரிலிருந்த தண்ணீர் பாட்டிலினை எடுத்து தன் விரலினை கழுவ, இமைக்கும் நேரத்தில் மஹியை காரின் பின்னிருக்கையில் தள்ளி கதவினை சாற்றியவன் மொத்தமாய் அவளின் மீது சரிந்து, அவளின் தேனூறும் இதழை வன்மையாய் கவ்வியிருந்தான்.

ஆதுவை தடுப்பதற்காக அவளெடுத்த எந்தவொரு முயற்சியும் அவனிடத்தில் பலிக்கவில்லை. தன்னை சுற்றியிருந்த அவனின் கைகளை கூட அவளால் அசைக்க முடியவில்லை.

போதையேற்றும் அவளின் இதழை விட மனமில்லாது சுவைத்துக்கொண்டே இருந்தவன் அவளின் இதயத்தோடு அழுந்திக்கொண்டிருந்த தனது இதயப்பகுதியில், மஹியின் நெஞ்சோடு உறவாடிக்கொண்டிருந்த ஏதோ ஒருபொருள் முள்ளாய் குத்தி வலியை ஏற்படுத்த.. அது என்னவாகயிருக்குமென்று உணர்ந்தவன் நொடியில் சுதாரித்து அவளிடமிருந்து விலகினான்.

அது என்னவாகயிருக்குமென்று அவனுக்குத் தெரிந்திருந்தாலும் தன் கண்களால் ஒருமுறை அதனை காண எண்ணி அவன் பார்வை அவளின் கழுத்துப் பகுதியை உரிமையுடன் அலசியது. ஆனால் அவனுக்குத்தான் மஹி அணிந்திருந்த க்ளோஸ் நெக் சர்ட் வழியாக ஒன்றும் புலப்படவில்லை.

காரில் தன்னை தள்ளி அவனிட்ட முத்த அதிர்ச்சியிலிருந்தே வெளிவராதவள், ஆது விலகிய பின்னரும் சுயவுணர்வின்றி இருக்க… அவன் தொட்டு நினைவிற்கு கொண்டு வர.. ஆதுவை சரமாரியாக தன் கைகள் ஓயுமளவிற்கு அடித்தாள்.

தன்னவளின் அடி கூட தான் கண்டு கொண்ட செய்தியால் ஆதுவிற்கு சுகமாக இருந்தது.

ஆதுவை அடித்து ஓய்ந்தவள்… “கெட் அவுட் ஆப் மை சைட்” எனக் கத்தியிருந்தாள்.

இன்றைக்கு இது போதுமென நினைத்த அதுவும்… இப்போதிருக்கும் சந்தோஷ மன நிலையை கெடுத்துக்கொள்ள விரும்பாமல், “பார்த்து போ” எனக் கூறி காரிலிருந்து கீழிறங்கினான்.

ஆது அவளிடத்தில் உணர்ந்து கொண்ட செய்தி, தன் கல்யாண ஏற்பாடு நிச்சயம் அவளை தன்னிடம் கொண்டுவந்து சேர்த்துவிடுமென்ற நம்பிக்கையை அதிகரித்தது.

ஆதர்ஷ் சென்ற பிறகும் காரில் அப்படியே அமர்ந்திருந்தவள் முயன்று தன்னை சமன்படுத்திக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.

ஆதர்ஷ் அடுத்து சென்றது தன் நண்பர்களை காண, வினுவின் ஹோட்டலிற்குள் நுழைந்தவன் யாரின் அனுமதியுமின்றி வினுவின் அறைக்குள் சென்றிருந்தான்.

“வாடா… காங்கிராட்ஸ் என்ற வினுவை”, சிறு புன்னகையுடன் பார்த்தவன், அவனது வாலேட்டை தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்தான். அதை பார்த்ததும் அதிர்ந்த அவனின் முகத்தை குறித்துக்கொண்ட ஆது,

“எதுக்குடா இவ்வளவு ஷாக் ஆகற.. அப்படியென்ன அதிலிருக்கு, நீ இந்தளவுக்கு ஷாக் ஆகறன்னா அதுல என்னவோயிருக்கு. இரு பார்த்துட்டு தர்றேன்” என்ற ஆது வாலேட்டை ஓப்பன் செய்யப்போக அதிவேகமாக அவனிடமிருந்து அதனை பறித்திருந்தான் வினு.

வினுவின் செயலில் உள்ளுக்குள் சிரித்து வைத்த ஆது… “கிஷோர் எங்கடா?” எனக் கேட்க, கேள்விக்குறியவன் உள் நுழைந்தான்.

“நைட் நீயும் நானும் ஒரு இடத்துக்கு போறோம் தூங்கிடாத, நானே உன் வீட்டுக்கு வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்” என்ற ஆது அவனின் பதிலை எதிர்பாராது சென்றிருந்தான்.

******************

ஐஜி அலுவலகத்திலிருந்து வெளியேறிய ராகவ் கட்டுக்கடங்காத தனது கோபத்தை கார் ஸ்டியரிங்கில் காண்பித்தான். சிக்னலில் தனக்கு குறுக்கே வாகனத்தை நிறுத்தியவனை இறங்கிச் சென்று அடித்தான். தன் கோபத்தை யார்மீது எப்படி காட்டுவதென தவித்திருந்தவனுக்கு இறையாக ராகவின் காருக்கு குறுக்கே வந்து நின்று அநியாயமாக அடி வாங்கிக்கொண்டான் அந்த அப்பாவி.

நெரிசல் மிகுந்த சாலையில் தனக்கு முன் செல்லும் வண்டிகளை கருத்தில் கொள்ளாது தார் சாலையில் சீறிப்பாய்ந்தான். அதிவேகத்துடன் பத்மநாபனின் வீடிருக்கும் பகுதியில் நுழைந்தான்.

காரை சுற்றி சுழலும் புழுதி காற்றே அவனின் வேகத்தை காட்டிக்கொடுக்க மின்னலென கேட்டினைத் திறந்து அவனுக்கு வழி விட்டார் வாயிற் காவலாளி.

போர்டிகோவில் கிரீச்சென்ற சத்தத்துடன் காரினை நிறுத்தியவன் புயலென உள்ளே பாய்ந்து தன் கண்ணில்பட்ட மீன்தொட்டியை தூக்கி போட்டு உடைத்தான்.

தண்ணீரில் சுகமாய் நீந்திக்கொண்டிருந்த மீன்களெல்லாம் தரையில் சிதறிடிக்கப்பட்டு உயிருக்கு போராடி தத்தளித்துக்கொண்டிருந்தது.

மீன்களின் உயிர் போராட்டத்தை ஒருவித வெறியுடன் பார்த்திருந்தவன், ‘உன்னையும் இப்படி தரையில் உயிருக்காக துடிக்க வைக்கிறேன்டி’ என மனதில் சொல்லிக்கொண்டான்.

துடிக்கும் மீன்களை மஹியாய் நினைத்து அவன் ரசித்துப் பார்க்க, தரையில் துடித்துக்கொண்டிருந்த வண்ண மீன்களை தளிர் கரமொன்று மெல்ல ஏந்தி சிறு கண்ணாடி குவளையில் போட ஆரம்பித்தது.

அழகு மயிலென மீன்களை கைகளால் எடுத்துக்கொண்டிருந்த தன்னவளை கண்டதும் அவனின் ஒட்டுமொத்த ஆத்திரமும் நொடியில் மறைந்தது. மீன்தொட்டியின் உடைந்த கண்ணாடி துகள் அவளின் விரலை பதம் பார்க்க, மின்னலென அவளருகில் சென்று,

“உனக்கெதுக்கு இந்த வேலை, இதை செய்யதான் வேலையாள் இருக்காங்களே” என எரிந்து விழுந்தான்.

ராகவின் கண்களை தீர்க்கமாய் பார்த்தவள்.. “புருஷன் பண்ற தப்புக்கு பொண்டாட்டி தான பரிகாரம் செய்யணும்” என மொழிந்தாள்.

கௌசி கூறிய வார்த்தைகளில் சிலையென உறைந்தவன் ஸ்தம்பித்திருக்க, மீன்களையெல்லாம் கண்ணாடி குவளையில் போட்டவள்.. அங்கிருந்து எழுந்து தன் விரலினை சுத்தம் செய்து மருந்திட்டு வரும் வரையிலும் அவன் அதே நிலையிலேயே இருந்தான்.

வேலையாள் அவ்விடத்தை சுத்தம் செய்ய வர, தன்னுணர்வு பெற்றான்.

“யாரு மேல உங்களுக்கு கோபம்? எதுக்காக இவ்வளவு ஆத்திரம்? சின்ன மீனா இருந்தாலும் அதுவும் உயிர் தான். ஒரு உயிரை கொல்லுற அளவுக்கு அப்படியென்ன மூளையை மழுங்கச் செய்யும் வெறி” என்றவள், “இந்த கோபம் ஆத்திரம் தான் அத்தான் என்னை உங்ககிட்ட பயந்து விலக்கி வைக்குது” என்றவள் அவன் முன் நிற்காது கண்ணீரோடு ஓடிவிட்டாள்.

மீன்களின் துடிப்பினை ரசித்தவனால் தன்னவளின் கண்ணீரை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

‘உனக்காக, உன் ஒருத்திக்காக என் கோபத்தை குறைக்க பார்க்கிறேன்.’ மானசீகமாக கௌசியிடம் கூறியவன், அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்த பணியாளிடம், “அக்கா இல்லையா?” என்றான்.

“சின்னம்மாவுக்கு பிறந்தநாளுன்னு பெரியம்மா கோவிலுக்கு போயிருக்காங்க ஐயா” என்ற பணியாளின் பதிலிற்கு சரியென்ற ராகவ் அடுத்த பத்து நொடிகளில் கௌசியின் அறைக்குள்ளிருந்தான்.

கதவு திறந்து உள்நுழைந்தவனை உணராது படுக்கையில் குப்புற படுத்து உடல் குலுங்க அழுது கொண்டிருந்தவளின் அருகில் சென்று நின்றான்.

ஐந்து நிமிடங்கள் பொறுத்து பார்த்தவன்… இதுவே தனது அதிகபட்ச பொறுமையென மீண்டும் கோபத்தில் கத்தியிருந்தான்.

தான் வந்தது கூட தெரியாது அழுது கொண்டிருப்பவளை, “இப்போ எதுக்குடி நான் செத்து போயிட்ட மாதிரி இப்படி அழுதுகிட்டிருக்க? முதல்ல டேம் திறந்து விடுறதை நிறுத்துடி” என அதட்டினான்.

தன்னவள் கண்ணீர் சிந்துவது பிடிக்காது தான் அவள் அழுவதை நிறுத்துவதுவதற்காக அவ்வாறு கூறினான். ஆனால் அதனையும் தன்மையாக கூறாது கடுமையாக மொழிந்திருந்தான்.

ராகவின் வார்த்தைகளில் காதை பொத்தியவாறு வாரி சுருட்டியபடி படுக்கையில் எழுந்தமர்ந்தவளின் கண்களில் கண்ணீர் நின்றிருந்தது. ராகவை காதலாக பார்த்தவள், “நீ செத்து போயிட்டன்னா… நான் இப்படி அழுதுகிட்டு இருக்க மாட்டேன் அத்தான், நானும் உன் பக்கத்தில் பிணமாதான் படுத்திருப்பேன்”, அமைதியாக அழுத்தமாக கூறினாள்.

கௌசியின் வார்த்தைகள் செவி நுழைந்து மூளையின் கருத்தில் பதிந்ததும் அவளை வேகமாக இழுத்து அணைத்திருந்தான். கண்ணீரே என்னவென்று தெரியாத அவனின் கண்களில் கூட இரண்டு துளி கண்ணீர் எட்டிப்பார்த்தது.

“பிறந்தநாள் அதுவுமா என்ன வார்த்தை சொல்லிட்ட? நாம ஒண்ணு சேர்ந்து பல காலம் திகட்ட முடியாத காதலை அனுபவிக்கணும்டி” என்று மேலும் மேலும் அவளை தனக்குள் புதைத்தான்.

அவனின் அணைப்பு அவளுக்கும் வேண்டியதாய் இருக்க, விரும்பியே அவனுள் ஆழப் புதைந்தாள்.

“எனக்காக இந்த கோபத்தை குறைச்சிக்கோங்க அத்தான். கோபத்தில் என்ன செய்தாலும் அது சரி வராது… இந்த கோபமே ஒருநாள் உங்களுக்கு எதிரா திரும்பிட்டா, நம்ம வாழ்க்கை நரகமாகிடும்” என்றால் ராகவின் கௌசல்யா.

“உனக்காக நான் கோபத்தை குறைக்க முயற்சிக்கிறேன். இந்த முடிவை நானெடுத்து பத்து நிமிஷமாச்சு. முடியுமான்னு தான் தெரியல” என்றவனை தன்னிடமிருந்து பிரித்தவள் சிறு கோபத்துடன் அங்கிருந்து நீண்ட கோச்சில் சென்றமர்ந்தாள்.

“இப்போ பண்ணிக்கிட்டிருந்தது நல்லா தானடி இருந்துச்சு. அப்புறம் எதுக்கு அங்கப்போய் உட்கார்ந்த” எனக் கேட்டுக்கொண்டே தன்னருகில் வந்து அமர்ந்தவனிடம்,

“என் பிறந்தநாளுனெல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க ஆனால் ஒரு வாழ்த்து கூட இல்லை” என்று குறைபட்டாள்.

“இன்னைக்கு ஒருநாள் கிப்ட் கொடுத்து, வாட்ஸாப்பில் ஸ்டேட்டஸ் போட்டெல்லாம் விஷ் பண்ணத் தெரியாது. ஆனால், நீ வாழ்நாள் முழுக்க சந்தோஷமா சிரிச்சிகிட்டே இருக்கணும்ன்னு மனசார தினமும் நினைக்க முடியும்.”

ராகவ் சொல்லி முடிப்பதற்குள் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள் அறையிலிருந்து வெளியே ஓடிவிட்டாள். வெட்கத்தில் எங்கு சென்று மறைந்தாளென்றெல்லாம் அவனுக்குத் தெரியவில்லை. தன்னவள் அளித்த முதல் முத்தத்தை ஆச்சரியமாக ஆழ்ந்து அனுபவித்து கோச்சிலிருந்து எழுந்தவன் அப்போது தான் ஒன்றை கவனித்தான்.

கௌசியின் படுக்கைக்கு மேலாக சுவற்றில் ராகவின் ஆளுயர புகைப்படம் பெரிதாக சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. அப்புகைப்படம் நிச்சயம் காமிராவினால் எடுக்கப்பட்டதல்ல என ஆழ்ந்து கவனிக்கும்போது தெரிந்தது.

இப்படியொரு போட்டோ அவனிடமே கூடயில்லை. எப்போ எப்படி எடுத்ததென படுக்கையின் மீதேறி கூர்ந்து கவனித்த பிறகே அது கையினால் வரையப்பட்டதென்று தெளிவாகியது. இன்னும் சொல்ல போனால் கௌசல்யா ராகவ் என்ற பெயர் கொண்டே ராகவின் முழு உருவமும் வரையப்பட்டிருந்தது. உற்று கவனித்தால் மட்டுமே பெயர் தெரியுமளவிற்கு அவ்வளவு நுண்ணிய வரைதலாகா வரையப்பட்டிருந்தது.

ஓவியத்தையே பார்த்தபடி நேரம் போவது தெரியாமல் ராகவ் கௌசியின் அறையிலேயே நின்றிருக்க, கோவிலுக்கு சென்று வந்திருந்த அம்சா பிரசாதமளிக்க அவளின் அறைக்குள் வருகை தர அங்கு தன் தம்பியை கண்டு,

“என்னப்பா கௌசியை பார்க்க வந்தியா?” எனக் கேட்டார்.

தன் அக்காவின் குரலில் கலைந்தவன் ஓவியத்தை காண்பித்து, “இதை வரைந்தது யார்?” என்றான்.

“கௌசி தான்ப்பா வரைந்தாள். இதை முழுசா வரைய மூணு மாதமாச்சு, நான் கூட கிறுக்குத்தனமா இவ்வளவு நாளா ஒரே படத்தை வரையறாளேன்னு நினைத்தேன். முழுசும் முடித்த அப்புறம் நான் திறந்த வாய் மூடல. இதை வரைந்து கிட்டத்தட்ட ஒரு வருஷமிருக்கும். இன்னைக்குத்தான் உனக்கு பார்க்க கொடுத்துவச்சிருக்கு” என்றவர் தன் மகளைத் தேடிச்சென்றார்.

ஒரு வருடத்திற்கு முன்பே இவ்வளவு தத்ரூபமாக என்னை வரைந்திருக்கிறாளென்றால் என்னை எந்தளவிற்கு மனதில் பதிந்து வைத்திருப்பாள். எவ்வளவு காதல் என் மீது கொண்டிருப்பாள். நினைத்து பார்க்கவே தித்திப்பாக உணர்ந்தான்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு அறையிலிருந்து வெளியில் வந்தவன் தன்னவளை வீடு முழுக்க தேட, அவனின் தேடலை புரிந்துகொண்ட அம்சா, “அவள் பிரண்ட் யாரையோ பார்க்க போறேன்னு அவசரமா கிளம்பி போனாப்பா” என்று தானாக முன்வந்து கூறினார்.

“ஓகேக்கா… அம்மா அவங்க பேத்தியை பார்க்கணும் சொன்னாங்க, கௌசி  வந்தா ஈவ்வினிங் வீட்டுக்கு வர சொல்லுங்க” என்றவன், அவர் தலையசைத்ததும் விடைபெற்றான்.

*****************

சரத் தனது அலுவலக அறையில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து தீவிரமாக வேலையில் மூழ்கியிருக்க இண்டர்காம் ஒலித்தது.

அந்தப்பக்கம் அழைத்திருந்த ரிஷப்ஷனிஸ்ட் யாரோ ஒருவர் உங்களை பார்க்க வந்திருப்பதாக அவரின் பெயரைத் தெரிவிக்க.. ஒரு நொடி ஆழ்ந்து யோசித்தவன் அனுமதியளித்தான்.

செய்து கொண்டிருந்த வேலையின் திரையை கணினியில் மாற்றியவன், ரிஷப்ஷனிஸ்ட் சொல்லிய நபர் யாரென பார்க்கும் ஆர்வம் மேலோங்க… சிசிடிவி காமிராவினை தன் கணினியின் பக்கத்தில் ஓபன் செய்தான்.

அதில் வெண்மை நிற டி ஷர்ட் மற்றும் அடர் நீல நிற டெனிமில்.. கண்களுக்கு கூலர்ஸ் அணிந்து, ஆறடிக்கும் மேலான உயரத்தில் பார்ப்பதற்கு ஆணழகான தெரிந்த ஆதர்ஷ், சரத்தின் மனதிற்குள் பார்த்ததும் ஒட்டிக்கொண்டான்.

“மே ஐ…”

வெளியில் கேட்ட ஆதர்ஷின் குரலில், “எஸ் கெட் இன்”, எனக் கூறிய சரத் காமிராவின் பக்கத்தை மாற்றிவிட்டு வேலையில் தீவிரமாக இருப்பதைப்போல் காட்டிக்கொண்டான்.

ஆதர்ஷ் உள் நுழைந்ததும் அவனை அப்போதுதான் பார்ப்பதைப்போல், எழுந்து வரவேற்றான்.

நட்புக்காக சரத்தின் கரம் பற்றி குலுக்கிய ஆதர்ஷ், “யூ லுக்கிங் மேன்லி” என்றான்.

“சும்மா தானே சொல்றீங்க” என்று சிரித்த ஆதர்ஷ், “உங்களைவிடவா?” எனக் கேட்டான்.

இவ்வார்த்தைகளே இருவரிடத்திலும் முதல் சந்திப்பை அழகாக்கியது.

“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று நேரடியாக விஷியத்திற்கு வந்திருந்த ஆதர்ஷை மெச்சுதலாய் நோக்கிய சரத், “மஹிராவை பற்றியா? அல்லது மிஸஸ். மஹிரா விஹான் ஆதர்ஷ் சக்கரவர்த்தியை பற்றியா?” என அழுத்தமாகக் கேட்டிருந்தான்.

சிறு அதிர்வுடன் சரத்தினை ஆதர்ஷ் ஏறிட்டுப் பார்க்க, “எனக்கு எப்படி தெரியும் யோசிக்கிறீங்களா?” என்றான்.

“நிச்சயம் மஹி சொல்லிருக்க மாட்டான்னு எனக்குத் தெரியும்.” ஆதர்ஷின் வார்த்தையில் உறுதியிருந்தது.

“என்னை அவளோட கணவனா அவள் அங்கீகரிக்கும் நாள் இன்னும் வரவில்லையே” என விரக்தியுடன் ஒலித்த ஆதர்ஷின் குரலில் உண்மையான கவலையிருப்பதை சரத் புரிந்துகொண்டான்.

“நீங்க சொல்ற மாதிரியில்லை. மஹி இதுநாள் வரை எங்கயும் மணமாகதவளா யாரிடமும் காட்டிக்கிட்டதே இல்லை.”

“மணமானவளா காட்டிக்கிட்டதும் இல்லைதான?”

சரத் கூறியதற்கு சட்டென்று எதிர்ப்பு காண்பித்திருந்தான் ஆதர்ஷ்.

ஆமென்று தலையசைத்த சரத்…

“இதுவரை அவளோட வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் என்கிட்ட பகிர்ந்துகிட்ட மஹி உங்களைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லியதில்லை. மஹியை கல்லூரியில் சேர்க்கும் போது விண்ணப்பத்தில் அவள் எழுதிய மிஸஸ்.ஆதர்ஷ் என்ற பெயரும், ஸ்டேடட்ஸ் மேரிட் என்பதும் தான் அவளுக்கு மணம் ஆகிவிட்டதை எனக்கு காட்டிக்கொடுத்தது. எல்லாவற்றையும் சொல்லியவள் இதை சொல்லாததற்கு காரணம் இருக்குன்னு நானும் அமைதியா விட்டுட்டேன்.”

சரத் கூறிய செய்தி ஆதர்ஷ்க்கு சந்தோஷமாக இருந்தாலும்.. ‘பெயரில் சேர்த்துக்கொள்ளும் என்னை உறவில் தள்ளி வைக்கிறாளே’, என்று வருத்தமாக இருந்தது.

மேசையின் மீதிருந்த தண்ணீரை அருந்தி தன் உணர்ச்சி போராட்டங்களை புதைத்தவன்,

“நீங்க ஒரு ஹெல்ப் பண்ணனும்” என்றான்.

என்ன உதவியாக இருக்கும்?

மஹிக்கும் ஆதர்ஷுக்கும் எப்படி எப்போ திருமணம் நடந்திருக்கும்?

error: Content is protected !!
Scroll to Top