ரவுடி பேபி 13

அத்தியாயம் 13 :

“மஹிராவை பற்றியா? என்ன உதவி செய்யணும்?”

ஆதர்ஷ் சரத்திடம், “நீங்க ஒரு உதவி பண்ணனுமே” என்றதும் எவ்வித யோசனையுமின்றி என்ன உதவியெனக் கேட்டிருந்தான் சரத்.

முதலில் தன்னைப்பற்றிக் கூறிய ஆதர்ஷ்…  தான் மஹிக்காக வந்ததற்கானக் காரணத்தை கூறினான். ஆதர்ஷும் தனக்கு நடந்த திருமணத்தை அழகாக தவிர்த்திருந்தான்.

ஆதர்ஷ் பற்றி அறிந்த சரத்திற்கு அவன்மீது மரியாதை அதிகரித்தது. அவன் மீண்டும் இங்கு வந்ததன் நோக்கமறிந்தவன்,

“மஹி நிச்சயம் உங்களோட வாழ ஒத்துக்கமாட்டாள். மஹி எதுக்காக அட்வகேட் ஆனாளோ அந்த கேஸ்காக ஐஜி’யிடம் கம்ப்ளைய்ன்ட் கொடுத்திருக்காள். அதில் உண்மை தெரியும்வரை அவள் தன்னோட வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்களுக்கு இடமேயில்லைன்னு இருக்காள்” என்றான் சரத்.

“ஹோ… ” ஒன்றும் தெரியாததைப்போல் காட்டிக்கொண்ட ஆதர்ஷ், “எனக்கு மேரேஜ்” எனக் கூறினான்.

“வாட்?”

அதிர்ந்து இருக்கையிலிருந்து எழுந்துவிட்ட சரத்… “மஹியோட நிலை?” என்றான். எங்கே ஆதர்ஷ் மஹியை தவிர்த்துவிட்டானோ என்ற பயம் அவனிடத்தில் தெரிந்தது.

“அச்சோ சார்… பீ கூல், எதுக்கு இவ்வளோ டென்ஷன்? மஹியை என்கிட்ட வர வைக்கத்தான் இந்த வெட்டிங் டிராமா” என ஆதி முதல் அந்தமாய் திட்டத்தை விளக்கினான்.

“மஹி வரலன்னா?”

சரத்தின் சந்தேகமான கேள்வியில் இளநகைப் புரிந்த ஆதர்ஷ், “எல்லாரும் சொல்லி வைத்த மாதிரி ஏன் இந்த ஒரு கேள்வியையே கேட்கிறீங்க? எனக்கு என் காதலை விட மஹி என் மேல வைச்சிருக்க காதல் மேல் அதிக நம்பிக்கை இருக்கு. இது மஹிக்காக ப்ரிண்ட் பண்ண ஒரேயொரு இன்விடேஷன் கார்ட். இதில் எனக்கும் மஹி தங்கைக்கும் மேரேஜ்ன்னு ப்ரிண்ட் பண்ணியிருக்கு” என்றவன் மற்றொரு கார்டை எடுத்து சரத்திடம் நீட்டினான்.

இன்னொன்று எதற்க்கென பார்த்த சரத்திடம், “இது தான் ஒரிஜினல் இன்விடேஷன். விஹான் ஆதர்ஷ் வெட்ஸ் மஹிரா. இந்த கார்டு உங்களுக்கு, வைஷூ பெயர் இருக்கும் கார்டை மஹிகிட்ட எப்படியாவது காட்டிடுங்க. அது போதும் மற்றதை அவளே பார்த்துப்பாள்” என்றான் ஆதர்ஷ்.

ஆதர்ஷ் சொல்லியதில் மஹி ஆதர்ஷுடன் இணைந்து சந்தோஷமாக வாழ வேண்டுமென ஆசைப்பட்ட சரத்தும், “கண்டிப்பா நான் மஹிகிட்ட உங்களுக்கு மேரேஜ்ன்னு தெரியப்படுத்திடுறேன்” என்று உறுதியளித்தான்.

நன்றி கூறிய ஆதர்ஷ்… “இந்த நன்றியெல்லாம் நீங்க மஹிக்கு செய்ததற்கு ஈடாகாது. இருந்தாலும் வேறெதுவும் சொல்லி உங்களை அந்நியப்படுத்த விரும்பல” என்று சரத்திடமிருந்து விடைபெற,

“நீங்களும்… உங்களுக்கும் மஹிக்கும் எப்படி திருமணமானது சொல்லலயே?” எனக் கேட்க, நீண்ட புன்னகை ஒன்றை உதிர்த்தவன் “சஸ்பென்ஸ்” எனக்கூறிச் சென்றான்.

இருவிதமான திருமண பத்திரிக்கையையும் பார்த்த சரத்… மஹியிடம் கொடுக்க வேண்டிய கார்டை மட்டும், வீட்டிற்கு கொண்டு செல்லும் பிரீப் கேசில் வைத்தான்.

*******************

தன்னுடைய வீடிருக்கும் வளாகத்தின் பூங்காவில் மழலையர்கள் விளையாடுவதை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தான் கிஷோர்.

அவன் மனதிற்கு அமைதியை தரும் ஒருசில சிறிய விஷியங்களில் இதுவும் ஒன்று.

கிஷோர் வெளியில் எந்தளவிற்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறானோ, அதைவிட பல வேதனைகள் அவனது மனதிற்குள் புதைந்துள்ளது. தன்னுடைய சோகம் வெளியே தெரியக் கூடாதென்பதற்காகவே வெளியில் கலகலப்பானவனாக தன்னைக் காட்டிக்கொள்கின்றான்.

அங்கிருந்த குழந்தைகள் அனைத்தும், ஒரே வளாகத்திலிருப்பதால் அவனுக்கு நன்கு பழக்கமென்பதால் ஒரு குழந்தை கிஷோரை பார்த்து புன்னகைக்க பதிலுக்கு இவனும் புன்னகைத்தான்.

விளையாடிக்கொண்டிருந்த அக்குழந்தை கால் இடறி கீழே விழ, விழும் முன் அம்மழலையை கையில் பிடித்திருந்தான் கிஷோர்.

“தேங்க்ஸ் அங்கிள்” என்ற  அக்குழந்தை அவனை குனிய சொல்லி கன்னத்தில் முத்தம் வைத்து ஓடிவிட்டது. அப்பிஞ்சின் முத்தம் அவனின் மனதில் இனம் புரியா சந்தோஷத்தை அளித்தது.

கிஷோரின் சந்தோஷ மனநிலையை கெடுக்கும் பொருட்டு அவனின் மொபைல் அலறியது.

பாக்கெட்டிலிருந்து எடுத்து ஒளிரும் மொபைலின் திரையை பார்த்தவனின் முகம் இம்சையென்ற பெயரில் எரிச்சலைடைந்தது.

“ச்சே.. இவளுக்கு வேற வேலையேயில்லை.” சத்தமாக முணுமுணுத்தவன் ஆன் செய்து காதில் வைத்தான். அட்டெண்ட் செய்யவில்லையென்றால் பேசும்வரை கால் செய்து கொண்டே இருப்பாளே, அதற்காகத்தான் அட்டெண்ட் செய்தான்.

“சரியா ஏழு மணிக்கு வினேஷ் பைவ் ஸ்டார் ஹோட்டலிற்கு வந்திடு” என கூறியவள் அவனின் மறுப்பை காதில் வாங்காது இணைப்பைத் துண்டித்திருந்தாள்.

“வினேஷ் ஹோட்டல் வினுவுடையதாச்சே, அங்கப்போனா? வினு பார்த்துட்டா, அவ்வளவுதான்” என்று யோசித்த கிஷோருக்கு மாலை அவள் சொல்லிய நேரத்திற்கு அங்கு செல்வதை தவிர வேறு வழி இருக்கவில்லை. இவன் போகாவிட்டால் இரவு நேரமென்று கூட பாராது அவள் இவனது அப்பார்ட்மெண்டிற்கு வந்துவிடுவாளே என்ற பயமே சரியாக அங்கு அவனை அழைத்துச் சென்றது.

*******************

“ஹாய் பாட்டி!”

கட்டிலில் எழ முடியாது படுத்திருந்த தேவியை கைதூக்கி அமர வைத்தாள் கௌசல்யா. வாஞ்சையுடன் தனது பேத்தியின் கன்னம் வழித்தவர், வாழ்த்துக்கூறி அவரின் நலன் விசாரிக்க, கௌசியும் அவரது நலனை கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

வேலையாளை அழைத்து தேவியை சர்க்கர நாற்காலியில் அமர வைத்தவள் மெல்ல தள்ளிக்கொண்டு தோட்டத்திற்கு வந்தாள். அவரிடம் பல கதைகள் அவள் பேசிக்கொண்டிருக்க, அலுவலகம் முடித்து வீடு வந்து சேர்ந்தான் ராகவ்.

காரினை அதனிடத்தில் நிறுத்திய பின்னரும், காரிலிருந்து இறங்காது இன்று மதியம் நடந்தவற்றை அவனது மனம் யோசித்துக்கொண்டிருந்தது.

“என்ன மாப்ள நீங்கயிருந்தும் எப்படி இந்த கேஸ் மூவ் பண்ண விட்டீங்க?” பத்மநாபனின் குரலிலும் உடல் மொழியிலும் தானொரு முதலமைச்சர் என்பதையும் மறந்து சிறு பயம் தெரிந்தது. அதனை ராகவ் முன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லையென அவர் நினைத்திருக்க, ராகவின் கண்களில் அவரின் பயம் தப்பாமல்  பட்டது.

“நானிருக்கும் வரை உங்கள் கௌரவத்துக்கு சின்ன தடை கூட ஏற்பாடாது, தைரியமா இருங்க மாமா… இந்த வழக்கையும், அந்த மஹிராவையும் நான் பார்த்துக்கொள்கிறேன்.”

தனது மாமாவுக்கு வாய் வார்த்தையாக தைரியத்தை அளித்துவிட்டு வந்தவனுக்கு மனம் முழுக்க அவரின் பயம் சிறு நெருடலை ஏற்படுத்தியது. அவர் தவறு செய்யாத பட்சத்தில் ஏன் பயப்பட வேண்டும், சிந்தித்தவனுக்கு விடையில்லை. ராகவால் தனது மாமாவையும் தவறாக நினைக்க முடியவில்லை. அதே மனநிலையில் வீட்டிற்குள் சென்றவன் தோட்டத்திலிருந்தவர்களை கவனிக்கவில்லை.

எப்போதும் போல் வீட்டிற்கு வந்ததும் ராகவ் தனது அன்னையை காணச்செல்ல, அவரின் அறை ஆளற்று வெறுமையாக இருந்தது.

அப்போது தான் வாசலில் நின்றிருந்த கௌசியின் ஸ்கூட்டி ராகவின் கருத்தில் பதிந்தது.

“ஹோ, மேடம் வந்திருக்காங்களா?” என்றவன் தனது அறைக்குச் சென்று, தன்னை சுத்தம் செய்துகொண்டு உடை மாற்றி தோட்டத்திற்கு வந்தான்.

“மாமியாரும் மருமகளும் அப்படி என்ன தீவிரமா பேசிட்டிருக்கீங்க?”

தங்களது முதுகுக்கு பின்னால் ஒலித்த குரலில் இருவரும் திரும்பிப் பார்க்க, ராகவை கண்டதும் கௌசி தலையை தாழ்த்திக்கொண்டாள்.

“எப்பப்பா வந்த?” தனது அன்னை கேட்ட கேள்விக்கு, “இப்போதான் ம்மா” என்று பதிலளித்தாலும் அவனின் பார்வை தனக்கு மனைவியாக வரப்போகிறவள் மீதே நிலைத்திருந்தது.

மகனின் மனதை கண்டு கொண்ட தேவி, வீல் சேரினை தானே இயக்கியபடி அங்கிருந்து சென்றுவிட்டார். தனது அன்னையின் செயலில் அவருக்கு நன்றி தெரிவித்தவன் அங்கிருந்த கல்மேடையில் அமர்ந்துகொண்டான்.

“எவ்வளவு நேரம் இப்படியே நின்னுட்டு இருக்கப்போற?”

ராகவின் கேள்வியில் நிமிர்ந்து பார்த்த கௌசிக்கு அப்போதுதான் தெரிந்தது, தேவி அங்கிருந்து சென்றதும், செடிகளுக்கு நீர்பாய்ச்சிக் கொண்டிருந்த தோட்ட பணியாளும் அங்கிருந்து நகர்ந்ததும்.

அவனின் முன் மருண்ட புள்ளிமானாய் பெண்ணவள் நின்றிருக்க, வேடன் அவளின் கைப்பற்றி தன் மடியில் அமர வைத்தான்.

“அய்யோ அத்தான்!” பதறி விலக முயன்றவளை தன் கைப்பிடியில் அடக்கியவன், “காலையில அவ்வளவு தைரியமா முத்தமெல்லாம் கொடுத்த, இப்போ எதுக்கு இப்படி பயப்படுற? நான் ஒன்னும் உன்னை கடித்து தின்னுட மாட்டேன்” என்றான்.

அவனின் வார்த்தைகளில் எங்கே அவன் கோபமாக இருக்கிறானோ என்று நிமிர்ந்து ராகவின் முகம் பார்த்தவள், முதன் முதலாக அவனின் கண்களில் ஜாலம் செய்த காதலில் கட்டுண்டாள்.

இருவரது முகமும் ஒன்றிற்க்கொன்று நெருங்கியிருக்க, இதழ்கள் நான்கும் உரசி நின்றது. ராகவின் காதல் பார்வையை தாங்காதவள் அவனின் மடியிலிருந்து சட்டென்று எழுந்து நின்றாள்.

“நீங்க இப்படி பார்க்காதீங்க அத்தான்… என்னவோ பண்ணுது.”

“என்ன பண்ணுது பொண்டாட்டி!”

அவளின் வார்த்தைக்கு மென்குரலில் வினா எழுப்பியவன் தன்னவளை ஒட்டி நின்று…

“நீ வரைந்த படம் ரொம்ப நல்லாயிருந்தது. என் மேல அவ்வளவு காதலா? ஆனால் நீ ஒருநாளும் வெளிப்படுத்தியதில்லையே! அத்தான் மேல இவ்வளவு காதலெல்லாம் வைக்காத கௌசிம்மா. எங்க உன்னளவுக்குநான் உன்னை காதலிக்கலையோன்னு வருத்தமா இருக்கு” என்றவனின் வாயினை தன் கரம் கொண்டு மூடியவள், “நீ என் மேல வைத்த காதல் தான், நான் உன் மேல அதிகளவு காதல் வைக்க காரணம் அத்தான். எப்பவும் இந்த அளவீடு வேண்டாம். இது நம்ம காதல்” என மனதிலிருந்து கூறினாள்.

தன்னவளின் பேச்சு அவனுக்கு நிறைவை கொடுத்தது.

“சரி அத்தான் நான் வர்றேன். வந்து ரொம்ப நேரமாச்சு. அம்மா சீக்கிரம் வர சொன்னாங்க” என்றவள், “பாட்டிகிட்ட சொல்லிடுங்க” என்று தன் வாகனம் நிற்கும் இடத்திற்கு வந்தாள்.

அவளின் பின்னோடு சென்றவன், அவள் எதிர்பாராத சமயம் இழுத்து அணைத்திருந்தான். தனக்குள் அவளை புதைத்துக்கொண்டவன்,

“என்னால முடியல அம்மு. சீக்கிரம் கல்யாணம் செய்துக்கலாமா?” எனக் கேட்டிருந்தான்.

அதற்கு அவள் சரியென சிவந்த முகத்துடன் தலையசைக்க…

“பத்திரமா போ! போனதும் மெசேஜ் பண்ணு” என தன்னிலிருந்து விடுவித்தவன், மழை வருவதை போல் கருமேகம் சூழ்ந்து வானம் காணப்பட்டதால்,

“ஸ்கூட்டி இங்கயே இருக்கட்டும்” என்றதோடு, டிரைவரை அழைத்து தனது காரில் கௌசியை வீட்டில் விட்டுவிட்டு வருமாறு கூறினான். காரிலமர்ந்தவள் கண்களால் அவனிடமிருந்து விடைபெற, அவள் கேட்டினை தாண்டி செல்லும்வரை ராகவ் பார்த்திருந்தான்.

தன்னவளை தான் காண்பது இது தான் கடைசி எனத் தெரிந்திருந்தால் தன் பார்வையிலிருந்து அவள் மறைவதை தடுத்திருப்பானோ.

*********************

“வர மாட்டேன்னு நினைச்சேன். சரியா சொன்ன நேரத்திற்கு வந்திருக்க?” அவள் கேட்டதற்கு முறைத்துப் பார்த்த கிஷோர், “நான் இங்கதான் ஒர்க் பண்றேன்” என்றான்.

“ஓ….” என தன் வாயினை குவித்தவள், பட்டென்று முத்தம் ஒன்றினை கிஷோரின் முன்பு பறக்கவிட்டாள்.

“இந்த மாதிரி செய்றதெல்லாம் எனக்கு பிடிக்காது” என்றவன், “நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லத்தான் வந்தேன். அதை சொன்ன அப்புறமும் நீ என்னை காதலிக்கிறியா பார்க்கலாம்” என்றான்.

அவனின் பேச்சில் நிச்சயம் நீ என்னை விட்டு சென்றுவிடுவாயென்ற ஏளனம் இருந்தது.

அவள் மௌனமாகவே இருக்க, கிஷோர் தன் வாழ்நாள் பக்கங்களை புரட்டினான்.

“நானொரு அனாதை.”

இதை சொல்லும்போது அவளின் கண்களில் தோன்றிய வலியை கிஷோர் குறித்துக்கொண்டான்.

“சின்ன வயதிலிருந்தே ஆசிரமத்தில் தான் வளர்ந்தேன். பள்ளி படிக்கும் வரை, ஒருத்தர் ஸ்பான்சர் பண்ண உதவியில் தான் படித்தேன். பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்ததால பிரபல கல்லூரியில் மெரிட்டில் இடம் கிடைத்தது. அங்கும் என்னோட ஸ்கூல் பிரண்ட்ஸ் ஆதர்ஷ் , வினேஷ் படிக்க, அவங்க மட்டுமே என்னோட உறவு, உலகம். படித்து முடித்த அப்புறமும் என்னை தனியாவிடாம அவங்களோடவே வச்சிக்கிட்டாங்க. இப்போ தேவைக்கு அதிகமாவே வருமானம் வருது. சொந்தமா சின்ன பிளாட் இருக்கு. என் நண்பர்களைத் தாண்டி நான் எதையும் யோசித்ததில்லை. என்னோட சோகங்களை மறைக்கத்தான் நான் வெளிய இயல்பா சிரிச்சிட்டு இருக்கேன். இதையும் தாண்டி என் வாழ்க்கையில் என் நண்பர்களுக்குக்கூட தெரியாத ஒரு விஷயம் இருக்கு” என,

இந்த இடத்தில் கிஷோர் அமைதி காக்க,

“அது நீங்க வைஷ்ணவி மேல் வைத்திருக்கும் காதல்” என்றாள் அவள்.

அவளுக்கெப்படி தெரியுமென கிஷோர் யோசித்தாலும்,

“வைத்திருக்கும் காதலில்லை. வைத்திருந்த காதல்” என்றதோடு, “அதான் உனக்கு நான் வேறொரு பெண்ணை விரும்பியது தெரிந்திருக்கே. அப்புறமும் என்னை ஏன் தொல்லை செய்ற?” என காட்டமாக மொழிந்தான்.

“அதுதான் நீங்களே வைத்திருந்த காதல் அப்படின்னு இறந்த காலத்தில் சொல்றீங்களே! அதன் பிறகும் எனக்கென்ன கவலை. நண்பனுக்காக உங்கள் காதலையே விட்டுக்கொடுத்த நீங்க உங்களுக்கு மனைவியாக வர போறவளுக்காக என்னவெல்லாம் செய்வீங்க. நான் உங்க அழுகையை பார்த்து தான் லவ் பண்ணேன். அன்னைக்கு உங்க கண்ணில் வழிந்த கண்ணீர் தான் உங்க மேல காதல் வரக் காரணம்” என்றவள்,

ஏழு வருடத்திற்கு முன்பு அவனை முதன் முதலாக பார்த்த நிகழ்வினை அவனிடம் கூறினாள்.

அவள் கிஷோரை முதன் முதலாக பார்த்தது ஓர் அழகிய பௌர்ணமி இரவு…. அன்று தான் பள்ளி படிப்பின் இறுதித் தேர்வு நடந்து முடிந்திருந்தது. இனி நண்பர்கள் யாரையும் பார்க்க முடியாதென அன்று முழுவதும் நகரத்தில் தெரிந்த அனைத்து இடங்களிலும் தோழிகள் ஒன்றாக சுற்றித் திரிந்தனர். கடைசியாக இருட்டிய வேளையில் அவர்கள் ஆட்டம் போட்ட இடம் கடற்கரை மணல்.

அவளின் தோழிகள் அனைவரும் இரவு நேரம் என்பதையும் மறந்து நீரில் இறங்கி விளையாடிக்கொண்டிருக்க, அவள் மட்டும் அவர்கள் கண்ணுக்கெட்டும் தூரத்திலிருந்த ஒரு படகிற்கு அருகில் அமர்ந்திருந்தாள். அப்போது படகிற்கு அந்தப்பக்கம் மெல்லிய அழுகுரல். முதலில் பயமாக இருந்தாலும், சத்தம் அதிகரிக்கவே யாரென்று பார்க்க அங்கே கிஷோர்.

மது அருந்திவிட்டு, சுயநினைவின்றி கண்களில் கண்ணீரோடு அழுதபடி படகில் சாய்ந்து அமர்ந்திருந்தான். முதன் முதலில் அன்று தான் வளர்ந்த ஆண்மகனுக்கும் அழத்தெரியுமென்று அவள் கண்முன்னே தெரிந்துகொண்டாள்.

அப்போதே, பார்த்த நொடியே… “உங்க கண்ணீர் எனக்குள்ள ஏதோ செய்தது. என்னால் முடிந்தால் உங்கள் கண்ணீரை துடைக்கணும்ன்னு என் மனசு துடித்தது. உங்க முகத்துக்கு அருகே கையை நான் கொண்டு வந்த சமயம் என் ஃப்ரெண்ட்ஸ் என்னை போலாம்னு கூப்பிட, அந்த இரவு நேரத்தில் உங்களை அப்படியே விட்டு செல்லவும் மனசு வரல” என்றவள், அதுவரை தான் கூறிக்கொண்டிருந்த உண்மை நிகழ்விலிருந்து பொய் நிகழ்விற்கு தாவியிருந்தாள்.

கிஷோரை அங்கேயே விட்டுச்செல்ல மனமின்றி அவனின் மொபைல் இருக்கிறதாயென்று சட்டை பையினை ஆராயும் போது,

“சாரி டா வினு…. வைஷுவை நீ லவ் பணறேன்னு எனக்குத் தெரியாதுடா தெரிஞ்சிருந்தா, நிச்சயம் வைஷூ இருக்கும் பக்கம் கூட நான் திரும்பியிருக்கமாட்டேன். இனி வைஷூ… சாரி… சாரி டா மச்சான், வைஷூ இல்லை வைஷ்ணவி..  உனக்கு மட்டும் தான் மச்சான். இந்த நொடியிலிருந்து வைஷ்ணவி என்னோட சிஸ்டர்” என சொல்லியதையே மீண்டும் மீண்டும் பிதற்றிக் கொண்டிருந்தான்.

“ஹோ… இவர் லவ் பண்ண பொண்ணையே இவர் பிரண்டும் லவ் பண்றாங்க போல… பிரண்டுக்கு காதலையே விட்டு கொடுக்கிறார். நல்ல மனசு தான்” என்று தனக்காக கூறிக்கொண்டவள், மொபைலில் சற்று நேரத்திற்கு முன் பிதற்றலில் அவன் கூறிய வினு என்ற எண் இருக்கிறதாவென ஆராய்ந்து, வினு என்ற பெயரில் சேமிக்கப்பட்டிருந்த எண்ணிற்கு அழைப்பு விடுத்து அவன் வந்ததும் தன் தோழிகளுடன் சென்றுவிட்டாள். செல்லும்போது மறக்காமல் தன் கையிலிருந்த கிஷோரின் மொபைலிலிருந்து தன் எண்ணிற்கு அழைப்பு விடுத்துக்கொண்டாள்.

இது தான் அவள் கிஷோரிடம் கூறியது. ஆனால் அன்று நடந்தது வேறு.

“அதுதான் என்னைப்பற்றி எல்லாம் தெரிந்திருக்கே! அப்புறம் ஏன் என்னை தொல்லை செய்ற?” அவள் கூறி முடித்ததும், கோபமென்றால் என்னவென்றே தெரியாதவன் அவளிடத்தில் எரிந்து விழுந்தான். கோபம் கொள்வது கூட உரிமையான நிகழ்வு என்பது அவனுக்குத் தெரியவில்லை. அதனை புரிந்து கொண்டவளோ புன்னகை முகமாக அவனை பார்த்திருந்தாள்.

ஏழு வருடங்களாக அவள் காதலித்த போதும் கடந்த மூன்று வருடங்களாகத் தான் அவள் கிஷோரை லவ் செய்வதாக துரத்துகிறாள். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமென்பதை போல் அவளின் தொல்லையான காதலில் கிஷோரின் மனமும் கரையத்தான் செய்தது. ஆனால் தன்னைப்பற்றி தெரிந்தால் எங்கு விலகிவிடுவாளோ என இவன் தள்ளியிருக்க, எல்லாம் தெரிந்தும் தன்னை காதலிக்கின்றாளே என்று அறிந்து கொண்டவனின் மனம் மீண்டுமொரு ஏமாற்றத்தை தாங்க முடியாதென்ற இயலாமையால் அவளிடம் சிடுசிடுத்தது. அதற்கும் அவள் புன்னகையையே பதிலளிக்க என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.

இப்போது அவனது அமைதியே போதுமென நினைத்தவள்….

“ஐ லவ் யூ கிஷோர். யூ ஆர் தி ஹாப்பினஸ் ஆஃப் மை லைஃப். யூ ஆர் தி ஸ்மைல் ஆப் மை லிப்ஸ். வில் யூ பிலீஸ் அக்ஸப்ட் மை லவ்.”

என்னுடைய வாழ்வின் சந்தோஷமும் நீதான், என் உதட்டில் மலரும் புன்னகையும் நீதான் என அழகாக தன் வார்த்தைகளால் காதலை வெளிப்படுத்தியவள், அவன் முன் தன் கரத்தினை நீட்டினாள்.

அவளின் கரத்தினையே படபடக்கும் இதயத்துடன் பார்த்திருந்தவன்,

“காதல் கெஞ்சி வரக்கூடாது. கட்டாயப்படுத்துவதால் வந்தா அது காதலில்லை” என்றான்.

“நான் உங்களை கட்டாயப்படுத்துறேனா? கிட்டத்தட்ட ஆறு வருஷத்துக்கும் மேல நான் உங்களை காதலிக்கிறேன். ஒரு கட்டத்திற்கு மேல் உங்க மீது நான் வைத்த காதலின் கணம் தாங்காமதான் உங்ககிட்ட வெளிப்படுத்த ஆரம்பிச்சேன். என் காதலை நீங்க மறுத்தும் மூணு வருஷமா உங்களை சுற்றி வரும் என்னை பார்த்து கட்டாயப்படுத்துறேன் சொல்லிட்டீங்களே, இனி உங்க முன்னாடி நான் வந்தா ஏன் வந்தேன் உங்கள் கையாலே அடிங்க” என கண்ணீரோடு கூறியவள், அழுத விழிகளை துடைத்துபடி இருக்கையிலிருந்து எழுந்தாள்.

செல்லும் அவளை இடைவெட்டியது கிஷோரின் குரல்.

“இப்போவாவது உன் பேர் என்னன்னு சொல்லு?” என்றான்.

சிவந்த கண்களுடன் கிஷோரை திரும்பிப் பார்த்தவள், “நான் உங்களை லவ் பண்றேன்னு சொன்ன இந்த மூணு வருஷத்தில் ஒருமுறை கூடவா என் பெயரை நீங்க தெரிந்து கொள்ளவில்லை” என விரக்தியாக கேட்டவள், கன்னம் தாண்டி வழிந்தோடிய கண்ணீரை துடைக்கவும் மறந்து அங்கிருந்து வெளியேறினாள்.

அவளின் கண்ணீர்… அவள் மீது முளைத்திருந்த காதல் விதைக்கு உரமாக கிஷோரின் நெஞ்சத்தில் துளிர்விட ஆரம்பித்தது.

“யாருடா மாப்ள அது?” குரலை வைத்தே வினு தானென்று கண்டுகொண்டவன், “என் வருங்காலம் மச்சான்” என்றிருந்தால் கிஷோர். முகத்தில் உதித்த வெட்கப் புன்னகையுடன்.

கிஷோரை ஆச்சரியமாகப் பார்த்த வினுவிடம்,

“ஆனால் அவளை லவ் பண்றனா ஒன்னும் புரியலடா! பட் எப்படியாவது என்னை கட்டிபோட்டாவது அவள் கழுத்தில் தாலி கட்ட வச்சிடுவா(ள்)டா” என்றான் கிஷோர்.

“அவ்வளவு பெரிய அப்பாடக்கராடா மச்சான் உன் ஆளு.” வினு கேட்டதற்கு கிஷோரின் தலை ஆமென ஆடியது.

வினு சொல்லிய “உன் ஆளு” என்ற வார்த்தை தித்திப்பாக அவனின் இதயத்தை நனைத்தது.

கிஷோரின் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளும்… அவனின் முடிந்த காதல் உட்பட தெரிந்திருந்த வினுவிற்கு இச்செய்தி சந்தோஷத்தை கொடுத்தது. தான் அந்த ஹோட்டலின் உரிமையாளன் என்பதையும் மறந்து தனது நண்பனை தூக்கி சுற்றிய வினு,

“என் மச்சானும் குடும்பஸ்தன் ஆகிட்டான்” என்று ஆர்ப்பரித்தான்.

அவர்களின் நட்பைப்பற்றி தெரிந்ததால் பணியாட்கள் வினுவின் செயலை கண்டுகொள்ள வில்லை.

எங்கே கிஷோர் தனி ஆளாக இருக்க தன்னுடைய காதல் தான் காரணமோ என்ற குற்றவுணர்விலிருந்த வினுவிற்கு இப்போது தான் மனம் லேசானது.

இரவு எங்கோ செல்லவேண்டும் உன்னை உன் வீட்டிற்கே வந்து கூட்டிக்கொள்கிறேனென்று ஆதர்ஷ் கூறியது அப்போதுதான் நினைவுவர, வினுவின் பிடியிலிருந்து இறங்கிய கிஷோர் வேகமாக ஆதுவிற்கு அழைத்திருந்தான்.

“எங்கடா இருக்க?”

“நான் உன் அப்பார்ட்மென்ட் கீழ் தான் இருக்கேன்.”

ஆதுவின் சத்தமே அவன் கோபமாக இருக்கின்றான் என்பதை காட்டிக்கொடுக்க,

“சாரிடா ஆது, நான் இங்கதான் ஹோட்டலில் இருக்கேன். நீ இங்க வந்திடு” என வேகமாகப் பேசிய கிஷோர் ஆதர்ஷ் திட்டுவதற்குள் காலினை கட் செய்திருந்தான்.

அன்றைய நாள் முழுக்க வழக்குப் பற்றி ஏதேனும் தகவல் தயாவிடமிருந்து வருமென எதிர்பார்த்த மஹி ஏமாற்றத்துடன் வீடு வந்து சேர்ந்தாள்.

எப்போதும் மஹியுடனே தூங்குவதால், ருத்ரன் அவள் இன்னும் வராததால் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தான். மஹியை கண்டதும் அவளிற்கு குட் நைட் சொல்ல… இவள் ருத்ரனின் நெற்றியில் முத்தம் வைத்து அவன் உறங்க தட்டி கொடுத்தாள்.

ருத்ரன் தூங்கிய பிறகு, அன்றைய நிகழ்வுகளை சரத்திடம் கூறுவதற்காக அவனைத்தேடி அவள் கூடத்திற்கு வந்தாள். சரத்தும் அவளின் வருகையை எதிர்பார்த்து தான் இருந்தான்.

“ஹௌ வாஸ் தி டே?”

சரத்தின் கேள்விக்கு, “சுவாரஸ்யமா ஒன்றுமில்லை. புகார் கொடுத்த அப்புறம் ஐஜி’யிடமிருந்து எந்தவொரு தகவலுமில்லை” என்றாள்.

“காலையில் தான் புகார் கொடுத்திருக்க, இன்னும் இந்த நாள் முடியவே இல்லை. அதுக்குள்ள எதிர் வினையை எதிர்பார்த்தால் எப்படிடா?” என்ற சரத்தின் வார்த்தைகளில் உள்ள நிதர்சனம் புரிய…

“சீக்கிரம் இந்த கேசில் நியாயம் கிடைக்கணும்” என மஹி சொல்ல, ஏன் ஆதர்ஷுடன் நீ வாழ வேண்டும” என்று சரத் கேட்டிருந்தான்.

மஹி உங்களுக்கு ஆதர்ஷை எப்படித்தெறியுமெனக் கேட்டு அதிரவெல்லாம் இல்லை.

“நான் நாதன் வீட்டு வாரிசென்ற பிறகு, என் பெயருக்கு பின்னால் வரும் பெயர் யாரெனக் தெரிந்துக்கொள்வது உங்களுக்கு அவ்வளவு கஷ்டமான விஷயமில்லை” எனக் கூறியவளை மெச்சுதலாய்ப் பார்த்தவன், அவளின் கையில் ஆதர்ஷ் அளித்த இன்விடேஷன் கார்டினை கொடுத்தான்.

இதற்கு நிச்சயம் அதிர்வாளென்று சரத் எதிர்பார்க்க, அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

error: Content is protected !!
Scroll to Top