ரவுடி பேபி 14

அத்தியாயம் 14 :

ஆதர்ஷின் வருகைக்காக கிஷோரும், வினுவும் ஹோட்டல் லானிலேயே காத்திருந்தனர். கல்லூரிக்கு கூட காரில் மட்டுமே செல்பவன் இன்று பைக் எடுத்து வந்திருந்தான் ஆதர்ஷ். அதுவும் வெளியில் செல்லும் போது பக்காவாக உடை உடுத்தி செல்பவன் இன்று இரவு உடை அணிந்து வந்திருந்தான்.

“என்னடா இப்படி வந்திருக்க?”

கிஷோர் தான் கேட்டிருந்தான்.

“நாம செய்யப்போகும் வேலைக்கு இந்த உடை தான் கம்ஃபர்ட்டபிளா இருக்கும்” என்றவன், “நீயும் உன் கோட் சூட்டெல்லாம் கழுட்டி வச்சிட்டு வாடா. சீக்கிரம் போகணும்” என அவசரப்படுத்தினான்.

“நீ கொடுக்குற பில்டப் பார்த்தா எங்கோ திருட போற மாதிரி இருக்கு.”

“எக்ஸாக்ட்லி!”

வினு தான் யூகித்ததை சொல்ல, அது சரியென்பதை போன்று ஆதர்ஷ் கூறியிருந்தான்.

“என்னது திருடப்போறீயா?” கிஷோர் சத்தமாக அதிர்ச்சியுடன் வினவ,

“டேய்… டேய்…” என்றவாறு கிஷோரின் வாயைப்பொத்திய ஆதர்ஷ்,

“போறியா இல்லை மச்சான். போறோம்” என்று கிஷோரையும் கூட்டு சேர்த்தான்.

கிஷோர் சிலையென நிற்க, தானே அவன் அணிந்திருந்த பிளேசர் மற்றும் டையினை கழுட்டியவன் வினுவின் கையில் திணித்து விட்டு, கிஷோரையும் இழுத்துக்கொண்டு தன் பைக்கிலேறி தார் சாலையில் காற்றென பறந்தான்.

இதுவரை பைக்கில் வேகமாகவே சென்றிடாத கிஷோருக்கு ஆதர்ஷ் வண்டியை ஓட்டிய விதம் கிலியை ஏற்படுத்த, அவனை இடையில் கரம் கொடுத்து இறுகப்பற்றிக்கொண்டு,

“கொஞ்சம் ஸ்லோவா போடா. நீ போற வேகத்துல, காற்றில் மூச்சு முட்டுதுடா” என்றான் கிஷோர்.

உடனடியாக தன் வேகத்தை குறைத்த ஆதர்ஷ் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தான். ஆதர்ஷின் தோளில் கரம் பதித்த கிஷோர்,

“உண்மையாவே திருடத்தான் போறோமா ஆது?” என நடுக்கமாகக் கேட்டான்.

“எஸ்” என்ற ஆதர்ஷ், “திருடப்போறதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேசணும். வா உட்கார்ந்து பேசுவோம்” என பைக்கினை நிறுத்தினான். ஆது கிஷோரை கடற்கரைக்கு அழைத்து வந்திருந்தான்.

இரவு நேரம் என்பதால் ஆளற்று அலைகளின் பேரிரைச்சலுடன் காணப்பட்ட கடற்கரை ஓர மணலில் அமர்ந்திருந்த ஆதுவும் கிஷோரும், சில நிமிடங்கள் கடந்தும் பேச்சின்றி அமைதியாகவே இருந்தனர்.

பேச வேண்டுமென அழைத்து வந்தவனுக்கு, என்னவென்று கேட்கவும் தெரியுமென நினைத்த கிஷோர் ஆதுவே தொடங்கட்டுமென்று அமைதி காத்தான்.

வானில் தெரிந்த பிறை நிலவினை கிஷோர் ரசித்திருக்க, அவனின் ரசனையை கலைக்கும் பொருட்டு தன் பேச்சினை ஆரம்பித்தான் ஆதர்ஷ்.

“வைஷ்ணவி எப்படிடா வினுவை லவ் பண்ணிணாள்.”

ஆதுவின் திடீர் கேள்வியில் கிஷோர் அதிர்ந்தாலும், அதனை மறைத்துக் கொண்டு தன் நண்பனை பார்த்தவன்,

“என்னது வினு லவ் பண்ற பொண்ணு நம்ம வைஷ்ணவியா!” என ஆச்சர்யமாகப் பார்த்தான்.

கிஷோரை ஏற இறங்க பார்த்த ஆதர்ஷ், “அப்போ வைஷ்ணவி தான் வினு லவ் பண்ற பொண்ணுன்னு உனக்குத் தெரியாது அப்படித்தானே?” என்றான்.

ஆதுவின் சந்தேகமான கேள்விக்கு ஆமென்ற கிஷோர் அமைதியாக இருக்க,

“இன்னும் என்னலாம் என்கிட்ட மறைக்கப்போற கிஷோர்… நீ உள்ளுக்குள்ளே வைத்து மறுகுவதற்கா உனக்கு பிரண்டுன்னு நாங்க இருக்கோம்” எனக்கேட்ட ஆதுவின் குரலில் வருத்தமே மேலோங்கியிருந்தது.

“உனக்கொரு நல்ல நண்பனா நானில்லாம போனதுக்கு என்னை மன்னிச்சிடு கிஷோர்” என்ற ஆதுவின் வார்த்தைகளில் பதறினான் கிஷோர்.

“பின்ன என்னடா, நான் உனக்கு நல்ல நண்பனா இருந்திருந்தா, உன் சோகத்தையும் என்கிட்ட ஒளிவு மறைவின்றி ஷேர் செய்திருப்ப தான!”

ஆதுவின் கேள்வியில் மெல்ல தலை கவிழ்ந்த கிஷோர், “என்னோட கஷ்டம் எனக்குள்ளே போகட்டும் விடுடா” என்றான் விரக்தியாக,

“ஹோ… உன்னோட கஷ்டம். இது உன்னோட கஷ்டம் அப்படித்தானே, நான் தெரியாம கேட்டுட்டேன். வா போகலாம்.” ஆதர்ஷ் மணலிலிருந்து எழுந்து விட்டான். அவனின் முகத்தில் தன்னைப்பற்றிய கவலை அப்பட்டமாக தெரிய, ஆதுவின் கைபிடித்து அமர வைத்த கிஷோர், “உனக்கு என்னடா தெரியணும்” என்று கேட்டான்.

“வைஷுவுக்கும் உனக்கும் நடுவில் எப்படி வினு? நான் வந்த அன்னைக்கு நீ யாரையும் காதலிக்கலன்னு வினு சொன்னதுமே எனக்கு குழப்பமா இருந்தது. வீட்டிலும் வைஷு யாரையோ விரும்புறதா சொல்லவும் அது நீயாதான் இருக்கும் நினைத்தேன். ஆனால், அது வினுன்னு தெரிஞ்ச அப்புறம் பயங்கர குழப்பம். அன்னைக்கு நீ வினு காதலிக்கும் பெண்ணை சிஸ்டர் சிஸ்டர்ன்னு வார்த்தைக்கு வார்த்தை சொன்னதும், அது யாருன்னு தெரியாத மாதிரி காட்டிக்கிட்டதும், உன் காதலை தெரிஞ்சே நீ விட்டுக் கொடுத்திருக்கன்னு யோசிக்கும் போது புரிஞ்சுது. ஏன்?”

அனைத்து கேள்வியையும் ஒரு ஏனில் கேட்டிருந்தான்.

ஏழு வருடங்களுக்கு முன்பு, ஆதர்ஷ், கிஷோர், வினு தங்களது இளங்களை படிப்பின் இறுதியிலும் வைஷு பள்ளி பருவத்திலும் இருந்தனர்.

ஒரு நாள் கல்லூரிக்கு செல்லும் வழியில் தான் கிஷோர் முதன் முதலாக வைஷூவை கோவில் வாசலில் யமுனாவுடன் பார்த்தான்.

ஆது தன் தாத்தாவுக்கு பயந்தே தன் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்ததில்லை.

“வீட்டில் வயதுக்கு வந்த மூன்று பெண் பிள்ளைகள் இருக்கின்றனர், நீ யாரையும் நண்பர்களென நம் வீட்டிற்கு அழைத்து வர கூடாது” என யமுனா நேரடியாகவே ஆதுவிடம் சொல்லியிருக்க அவன் தன் நெருங்கிய நண்பர்களை கூட வீட்டிற்கு அழைத்து வராமல் தவிர்த்தான்.

தன் நண்பர்களைப்பற்றி தன் வீட்டிலிருப்பவர்களுக்கு என்னத்தெரியும், அவர்களின் கணிப்புப்படி தன் நண்பர்களை தவறாக நினைக்க இடமளிக்க கூடாதென்று அவனும் கிஷோர் மற்றும் வினுவை வீட்டிற்கு அழைத்து வர நினைத்ததில்லை.

ஆதுவின் குடும்ப நபர்களைப்பற்றி அறிந்திடாததால், கிஷோருக்கு வைஷூ ஆதுவின் அத்தை மகளென்று தெரிந்திருக்கவில்லை.

கிஷோர் மற்றும் வினுவிற்கு தெரிந்தவர்கள் நாதன், விஷ்ணு மற்றும் நவீன்.

ஆது அடிக்கடி தன் தாத்தாவின் கட்டுப்பாடுகளை பற்றி பேசுவதால் அவரைப்பற்றித் தெரியும். இளங்களையில் இன்டர்ன்ஷிப் மூவரும் ஆதுவின் கம்பெனியில் செய்ததால், விஷ்ணு மற்றும் நவீனை மட்டுமே தெரியும்.

அன்று வைஷூ சீருடையில் அல்லாது, தாவணி அணிந்திருக்கவும் அவள் பள்ளி படிக்கும் சிறு பெண்ணென அறிந்திடாத கிஷோர் பார்த்ததும் காதல் கொண்டான்.

ஒவ்வொரு வெள்ளியும் பள்ளி செல்வதற்கு முன் தன் தாயுடன் கோவிலுக்கு செல்வது வைஷூவின் வழக்கம். அன்றும் அதே போல் வந்தவள் தான் கிஷோரின் கண்ணில் அகப்பட்டுக்கொண்டாள்.

அவள் நினைவாகவே சுற்றித்திரிந்த கிஷோர் தனக்கென்ற தனியுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். இதனை கண்டு கொண்ட ஆது என்னவெனக் கேட்க, வைஷூவைப்பற்றிக் கூறியவன்..

“அவள் யாரு என்னன்னுலாம் தெரியலடா, பட் எனக்கு மொத்த வாழ்க்கையும் அவ கூடத்தான்னு தோணுதுடா மச்சான்” என்ற கிஷோரை வித்தியாசமாகப் பார்த்து வைத்தான் ஆது.

ஆனால், தன் நண்பன் தன்னுடைய வாழ்வில் முதன் முதலாக ஒன்றின் மீது ஆசைக்கொள்கிறான், அதனை எப்படியாவது நிறைவேற்றி வைக்க வேண்டுமென நினைத்த ஆது,

“யாருன்னு காட்டுடா. உனக்காக அவங்க வீட்டில் நான் பேசுறேன்” என்றான்.

ஆதுவின் பாசத்தில் நெகிழ்ந்தவன்,

“நாளைக்கு அவளை உனக்கு காட்டுறேன் மச்சான்” எனக்கூறி சந்தோஷமான மனநிலையில் விடைபெற்றவன், மறுநாள் ஆதுவின் வருகையை எதிர்பார்த்து கோவில் வாசலில் காத்திருந்தான்.

“சாரிடா மச்சான் கொஞ்சம் லேட்டாகிருச்சுடா” என்ற ஆதுவிடம், ” “இப்போ தான்டா உள்ள போயிருக்காள். வர நேரமாகும்” என்றான் கிஷோர்.

“அப்போ வா உள்ள போய் பார்த்துடலாம்” என ஆது சொல்ல, “கோவில் உள்ள இதெல்லாம் தப்புடா” என்றான் கிஷோர்.

“கோவில் உள்ள பண்ணா தப்பு, வெளிய பண்ணா சரியாட?”

ஆது கலாய்க்க, வைஷூ கோவிலின் உள்ளே இருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள். கிஷோர் அடையாளம் காண்பித்ததும், வைஷூவைப் பார்த்த ஆது உண்மையிலேயே மகிழ்ந்துதான் போனான்.

யாருமற்று தனியாக இருக்கும் தனது நண்பன் தன் குடும்பத்தில் ஒருவனாகப் போகின்றான் என்ற சந்தோஷம் ஆதுவின் முகத்தில் தெரிந்தது.

இப்போது கிஷோரிடம், வைஷூ தன் அத்தை மகளென்று கூறினால், நட்பிற்கு துரோகம் இழப்பதாகக் கருதி காதலை வேண்டாமென ஒதுக்கிவிடுவானென நினைத்த ஆது,

“பொண்ணு நல்லாயிருக்காள் மச்சான். நாளைக்கே அந்தப்பொண்ணு டீடெயில்ஸ் உனக்கு சொல்றேன்” என்றான்.

“தான்க்ஸ் டா மச்சி” என்று ஆதுவை கட்டிக்கொண்ட கிஷோர், “அவளுக்கு என்னை பிடிக்குமாடா?” எனக் கேட்டிருந்தான்.

“என் ஃப்ரெண்ட யாருக்காவது பிடிக்காமப் போகுமாடா?” என்ற ஆது, “எல்லாம் நல்லதாவே நினைப்போம்” என கிஷோரை கல்லூரிக்கு அழைத்துச் சென்றான்.

அடுத்த நாள் ஆது லைப்ரரியில் பாடக்குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தான். அது படிக்குமிடமென்பதையும் மறந்து அவனைத் தேடிச் சென்ற கிஷோர் தன்னவளை பற்றிக்கேட்க, மெல்லியதாக சிரித்த ஆது…

“உன் ஆளோட பெயர் வைஷ்ணவி” என்றான்.

அப்போதே கிஷோரின் மனம் வைஷூ என பல முறை உச்சரித்து மகிழ்ந்தது.

“அவங்க குடும்பம் ரொம்பப் பெருசுடா. நிச்சயம் நீ உன் வாழ்க்கையில் எதிர்பார்க்கிற அத்தனை சொந்தமும் அவள் ஒருத்தி உனக்கு கிடைக்கிறதால கிடைக்கப்போகுது.” ஆது கூறியதில், குடும்பத்திற்காக ஏங்கி தவித்த தன் ஏக்கம் அப்போதே தீர்ந்தாதாக எண்ணினான்.

“ஓகே டா! எந்த காலேஜ்?”

கிஷோர் கேட்ட கேள்வியில் சிறிதாக அதிர்ந்த ஆது,

“அவள் காலேஜ் இல்லை மச்சான். ஸ்கூல் லாஸ் இயர்” என்றான் தயக்கத்துடன்.

வைஷூ பள்ளி படிப்பே இன்னும் முடிக்கவில்லையென தெரிந்த கிஷோர் தன்னையே கடிந்துக்கொண்டான். சிறு பெண் மீது எனக்கு காதலா என்று வருந்தியவனை பல காரணங்கள் கூறி ஆது தான் தேற்றினான்.

இனி அவளிடம் தன் மனம் சாயக்கூடாதென அவனெடுத்த கட்டுப்பாடுகள் அனைத்தும் காணாமல் போயின.

“அவள் பள்ளியில் படிக்கும் சின்னப் பொண்ணுன்னு ஏன் நினைக்கிற? உன்னை விட மூணு நாலு வயசு சின்னவன்னு நினைடா” என்ற ஆதுவின் பேச்சு கிஷோரின் குற்றவுணர்வை போக்க மீண்டும் தன் காதலில் மூழ்கினான் கிஷோர்.

இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. இன்டர்ன்ஷிப்பிற்காக விஷ்ணுவின் கம்பெனிக்கு மூவரும் சென்றுகொண்டிருந்த சமயம்.

ஒருநாள் மாலை வைஷூவை பள்ளியிலிருந்து அழைத்து வர விஷ்ணு சென்றிருந்தார்.

முக்கியமான கூட்டம் நடைபெற இருந்ததால் காலதாமதமாகுமென வீட்டிற்கு செல்லாமல் வைஷூவையும் தன்னுடனே அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்.

“நீ என்அறையில் இரும்மா, நான் மீட்டிங் முடிந்ததும் வர்றேன்” என்டு அலுவலகத்தினுள் நுழைந்ததும் நேராக மீட்டிங் ஹாலிற்கு சென்றுவிட்டார் விஷ்ணு.

விஷ்ணுவின் அறையில் வைஷூ தொலைக்காட்சி பார்த்தபடி அமர்ந்திருக்க, கதவினை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் வினேஷ்.

திடீரென ஒரு ஆண்மகனை தனிமையில் சந்திக்கவும் கண்களை அகல விரித்து மருண்டு விழித்தாள். பெண்ணவளின் ஆழ்கடல் கருவண்டில் ஆணவன் அப்போதே வீழ்ந்து விட்டான்.

“ஹேய்… இப்போ எதுக்கு என்னை பார்த்து பயப்படுற? விஷ்ணு சாரை பார்க்கலான்னு வந்தேன் அவரில்லையா?” எனக் கேட்டான்.

“மாமா ம்…மீட்ட..மீட்டிங் இருக்குன்னு போயிருக்கார், அவர் தான் என்னை இங்கு உட்கார்ந்திருக்க சொன்னார்” என்று வார்த்தைகளை தந்தியடித்தவாறு கூறியவளை, நொடியில் தன் மனம் தன்னவள் என்கிற உரிமையோடு பார்க்க, எவ்வித பயமுமின்றி ரசித்தவன்… “ஐ லவ் யூ” என்றான்.

அவள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க,

“உன்னோட ஸ்கூல் யூனிஃபார்ம். ரெட்ட ஜடை. நீ சின்னப்பொண்ணு இப்படியெதுவும் என் கண்ணுல படல . உன்னை பார்த்ததுமே பயத்துல அகல விரிஞ்ச உன் கண்ணு எனக்குள்ள சொல்லுச்சு, வாழப்போற வாழ்க்கை உன்னோடதான்னு. அதான் டக்குன்னு சொல்லிட்டேன், நாளைக்கு உன் ஸ்கூல் கிட்ட இருக்க பார்க்கில் வெயிட் பண்றேன். (யூனிஃபார்மை வைத்து அவள் எந்த ஸ்கூலென கண்டுகொண்டான்.) உன் பதிலை சொல்லு” என கடகடவென பேசிய வினு அவ்வளவு தான் என்பதைப்போல் திரும்பி நடந்தான்.

இரண்டடி எடுத்து வைத்தவன் மீண்டும் அவளருகில் வந்து “உன் பெயர் என்ன?” எனக் கேட்டான்.

“வைஷ்ணவி.”

அவளையும் அறியாது அவளது வாய் பெயரினை சொல்லியது.

“எந்த ஸ்டாண்டர்ட்?”

“பிளஸ் டூ.”

” உப்ப்ப்…” பெரும் நிம்மதி அவனிடம். பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவன்,

“எங் பத்தாவது அதுக்கும் கீழன்னு சொல்லி என்னை ரொம்ப நாள் வெயிட் பண்ண வச்சிடுவியோன்னு பயந்துட்டேன்” என்றான்.

அவனின் அதிரடி, பேச்சு எல்லாம் அவளுக்கு புதிதாக இருந்தாலும், அவனை அவளுக்கு பிடித்துதான் இருந்தது. இருப்பினும் மனதில் ஒரு நெருடல், இந்த வயதில் இது ஒத்து வருமாயென்று.

அன்று முழுக்க கிஷோர் ஒருவித குழப்ப மனதிலே உழன்று கொண்டிருந்தான். என்னவென்று எவ்வளவு யோசித்தும் சரியான தெளிவு அவனுள் ஏற்படவில்லை. அன்று அவன் எவ்வளவோ முயற்சித்தும் வைஷூவை அவனால் பார்க்க முடியவில்லை. அதனால் இருக்குமோவென யோசித்தவன் ஆதுவிடம் தன் நிலையை கூற,

“நீ நாளைக்கே உன் காதலை அவகிட்ட சொல்லிடு” என்றான்.

அவளின் வயதை கிஷோர் காரணம் காட்ட, “சொல்லாத காதல் செல்லாது” என்றான்.

இதுநாள் வரை தன் காதலை மஹியிடம் சொல்லாததால், அதன் வலியை அறிந்திருந்தானோ. தன் நண்பனுக்கும் அப்படியொரு நிலை வரக்கூடாதென்று உடனடியாக சொல்லிவிடென அறிவுரை வழங்கினான்.

சிறிது யோசித்த கிஷோர், “இது சரியாக வராது மச்சான். அவள் ஸ்கூல் முடிக்கட்டும். இன்னும் ரெண்டு மூணு மாசம் தான” என்று கூறிவிட்டான்.

மறுநாள் வினு தான் சொல்லிய பூங்காவில் வைஷூவிற்காக காத்திருந்தான்.

இரவு முழுக்க தூக்கத்தில் கூட வினுவின் ஞாபகம் தான் வைஷூவிற்கு. அவனின் அதிரடிப்பேச்சே மீண்டும் மீண்டும் மனதில் ஓடியது. அமைதியாக இருந்த அவளின் மனதில் காதல் வார்த்தையை கூறி முதன் முதலாக சலனத்தை ஏற்படுத்திவிட்டான். அதிலிருந்து மீளும் வழி தெரியாது தவித்தவள், தன்னை அழைக்க வந்த டிரைவரிடம்,

“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. என் பிரண்ட் பார்த்துட்டு வரேன்” எனக்கூறி அவளின் பள்ளிக்கு மிக அருகிலிருந்த பூங்காவினுள் வினுவைத் தேடிச்சென்றாள்.

கையினில் வைத்திருந்த கைக்குட்டையை கசக்கிக்கொண்டே, தன்னை யாரும் பார்த்துவிடுவார்களோயென சுற்றி பயப்பார்வை பார்த்தவாறு உள்ளே வந்தவளை தூரத்திலேயே கண்டு கொண்ட வினு அவளிடம் ஓடிவந்திருந்தான்.

தன்னை கண்டதும் அவளின் கண்களில் தோன்றிய மின்னலை கள்வன் கண்டு கொண்டான்.

அவனை பார்த்ததும் அதுவரையிருந்த அரைகுறை தைரியமும் நொடியில் பயந்து போக,

“நா…ந்.. நான் ஸ்கூல் முடிக்கணும், அப்புறம் காலேஜ் சேரணும், நல்லா படிக்கணும்” என, கைகட்டி அவளை பார்த்தவாறே அவள் சொல்வதை கேட்டவன்,

“ம்ம்ம்ம்… படி!” என்றான்.

அவளின் கைகளில் கைக்குட்டை ஒரு வழியாகியது. அதை பார்த்து மெல்ல சிரித்தவன்,

“அதை தா?” என்றான்.

எதுவும் யோசிக்காது அவனிடம் கைக்குட்டையை அவள் நீட்டியதும் வாங்கியவன்… “இப்போ சொல்லு” எனக் கூறினான்.

பயத்தில் சுற்றி ஒருமுறை பார்த்தவள்,

“அதான் நான் படிக்கணும். அது…அ…அத்…அதுவரை வெயிட் பண்ண முடியுமா?” என திக்கி திணறிக் கேட்டாள்.

மெல்ல இதழ் விரித்து சிரித்தவன்,

“சரி… போ!” என்க, அவனை குழப்பத்துடன் பார்த்து வைத்தாள்.

“நீ இப்போ சொன்னதிலே உனக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு நான் தெரிஞ்சிக்கிட்டேன். எனக்கு இது போதும், நீ போ படி. நான் வெயிட் பண்றேன்” என தெளிவாக வினு கூறியதும் இரட்டை பின்னல் அசைய தலையை ஆட்டியவள் அவனை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே சென்றாள்.

வைஷூ தனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்திருக்க, வினு, கிஷோர், ஆதர்ஷ் எம்பிஏ முதல் வருடம் சேர்ந்திருந்தனர்.

யாருமற்ற தனக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருந்த கிஷோர் கொஞ்ச நாட்களுக்கு தன் காதலை தள்ளி வைத்தான். அதற்குள் வைஷூவிற்கு சுயமாக சிந்திக்குமளவிற்கு வயது வந்துவிடுமென நினைத்தான்.

இங்கு தான் கிஷோர் பெரிய தவறினை செய்துவிட்டானோ. வைஷூவை பார்த்த அன்றே இவனும் தன் காதலை வெளிப்படுத்தியிருந்தால், ஒருவேளை வைஷுவுக்குக் கிஷோர் மீது காதல் தோன்றி அவனின் காதல் தோற்றுப்போயிருக்காதோ? எல்லாம் விதியின் செயல்.

அந்த வருட இறுதியில், ஆதுவின் கட்டாயத்தால் இதற்கு மேலும் சொல்லாமலிருக்க வேண்டாமென்று நினைத்த கிஷோர் தன் காதலை வெளிப்படுத்த, வைஷூவிற்காக கோவிலில் காத்திருந்தான்.

வைஷூ இறைவன் முன் நின்று வழிபட, அவளிடம் மெல்ல நெருங்கிய கிஷோர் வினு வருவதை பார்த்து தூண் மறைவில் ஒளிந்து நின்றுக்கொண்டான். மறைவாக நின்றாலும் அவனின் பார்வை வைஷூவின் மீதேயிருந்தது.

வைஷூ கண்கள் மூடி பிரார்த்திக்க, அவளின் நெற்றியில் குங்குமத்தை வைத்த வினு,

“இதுக்கு மேலயும் பேசாம உன்னை பார்த்துட்டே மட்டும் இருக்க முடியாதுடி, லவ் பண்ணலாமா?” எனக் கேட்டிருந்தான்.

தனக்காக தன் வார்தைக்காக இவ்வளவு நாள் தன்னை தொந்தரவு செய்யாது காத்திருந்தவனின் மீது காதல் ஊற்றெடுக்க கண்கள் கலங்க சம்மதம் வழங்கினாள்.

அவர்களுக்கு மிக அருகில் நின்றிருந்த கிஷோர்… வினு வைஷூவின் நெற்றியில் குங்குமம் வைத்திலேயே உறைந்து நிற்க, இருவரது பேச்சும் தெளிவாக செவி நுழைந்தது.

இங்கு இரண்டு இதயம் காதலில் மகிழ்ச்சி கொள்ள, ஒரு இதயம் காதல் தந்த வலியில் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது.

தன் உயிர் நண்பனின் காதலியையா தானும் விரும்பியிருக்கின்றோமென நினைத்தவனுக்கு, தன் மீதே கோபம் கட்டுகடங்காது எழுந்தது. ஆனால், அவன் அறிந்திடாத ஒன்று, தான் முதலில் பார்த்து நேசித்த பெண்ணைத்தான் தனது நண்பன் நேசித்திருக்கின்றான் என்பது. தன் நண்பனுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக கருதியவன், கண்களில் நீர் இறங்க எதையும் உணராது நீண்டதூரம் நடந்தே கடற்கரை பகுதிக்கு வந்திருந்தான்.

அப்பகுதியிலிருந்த மது கடையில் பாட்டில் ஒன்றினை வாங்கியவன் தன் வலியை மறக்க முதல் முறையாக குடித்தான். முழு மூச்சாக குடித்தவன் கடற்கரை மணற்பரப்பிற்கு வந்து படகு மறைவில் அமர்ந்து கதறி துடித்து அழுதான்.

“வைஷூ நீ காதலிக்கும் பெண், யாருக்கும் விட்டுக்கொடுக்காதே!” அவனின் ஒருமனம் வாதிட, இன்னொரு மனமோ… “என் நண்பனின் வாழ்வுக்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன்” என்றது.

“வைஷூ என் காதலியில்லை, அவள் என் நண்பனின் காதலி. இனி வேறொரு கண்ணோட்டத்தில் அவளை பார்க்கமாட்டேன்” என்றவன் மீண்டும் மீண்டும் அதையே பிதற்றிக்கொண்டும், தன் நண்பனுக்கு தவறு இழைத்துவிட்டதாக வருந்தியும் வினுவிடம் மன்னிப்புக் கேட்டு புலம்பினான். கண்களில் நீர் வற்றும் வரை அழுது தீர்த்தான். அதன் பிறகு என்ன நடந்ததென்று கிஷோருக்கு நினைவில்லை.

மறுநாள் புது மனிதனாக, இன்று தான் மீண்டும் பிறந்தவனாக நினைத்துக்கொண்டவன், தன் சோகத்தை வெளிக்காட்டாதிருக்க கலகலப்பான ஆளாக மாறியிருந்தான்.

அவனின் இந்த மாற்றம் வினுவிற்கு புதிதாக இருக்க… அதற்கான காரணத்தை முந்தைய இரவில் தெரிந்து கொண்ட வினு மானசீகமாக கிஷோரிடம் மன்னிப்பு வேண்டினான். அவனால் மன்னிப்பு மட்டுமே கேட்க முடியும், வைஷூவை விட்டுக்கொடுக்க இயலாதே.

வைஷூ தன்னைத்தானே விரும்புகின்றாளென நினைத்தவன் அறிந்திடாத ஒன்று தான் வைஷூவை பார்க்காமலிருந்தால் ஒருவேளை தன்னிடத்தில் கிஷோர் இருந்திருப்பானென்று. தன் நண்பனின் காதலுக்கு குறுக்கே தான் எமனாக வந்தோமென்று.

கிஷோரின் மன வலியை அறிந்திடாத வினு, ஒரு நாள்…

“நீ யாரையாவது லவ் பண்றியாடா?” என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.

வினுவிற்கு கிஷோர் இன்னமும் வைஷூவை மனதில் நினைத்துக் கொண்டிருக்கின்றானா என்பது தெரிய வேண்டும்.

வினு கேட்ட கேள்வியில், கிஷோருக்கு… தான் மறந்து விட்டதாக நினைத்த நிகழ்வுகள் அனைத்தும் நினைவிற்கு வர, இதயத்தில் சுருக்கென்றது.

இருப்பினும் தன் வலியை வெளிக்காட்டிக் கொள்ளாதவன்,

“எனக்கு அம்மா இல்லை வினு. இருந்திருந்தா அவங்க மீது சத்தியம் வைத்திருப்பேன். என்ன செய்றது எனக்கு அவங்களோட வாழ கொடுத்து வைக்கல. உன் மீது, ஆது மீது சத்தியமா நான் யாரையும் காதலிக்கல”, என்றவன்… “இந்த வயசில் பார்க்கும் பெண்களை எல்லாம் மனதிற்கு பிடிக்கலாம். அதுக்காக காதலிக்க முடியுமா? எனக்கான பெண்ணை பார்த்ததும் உன்கிட்டதான் முதல்ல சொல்லுவேன்” எனக் கூறினான்.

என்றுமில்லாது இன்று வினு தன்னை யாரையாவது காதலிக்கின்றாயா என்றதில், அவனுக்கு வைஷூவை தான் விரும்பியது தெரிந்திருக்குமோ என்ற சிறு சந்தேகம் எழ… தன்னைப்பற்றி தன் நண்பன் தவறாக நினைத்துவிடக் கூடாதென விளக்கமாக கூறி வினுவிற்கு தன் மனதில் யாருமில்லையென தெளிவுப்படுத்தினான்.

கிஷோர் தன் மனதில் யாருமில்லையென்றதில், வினுவிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும்… தன் நண்பன் வருந்த தான் காரணமாகிவிட்டோமோ என்ற குற்றவுணர்வு இனி இருக்காதென்பதில் தான் அவனின் மனம் அமைதி அடைந்தது.

அதன் பிறகு ஆது வைஷூவிடம் சொல்லிவிடு என்ற போதெல்லாம் புன்னகையுடன் கடந்து விட்டான்.

‘தான் காதலித்த பெண்ணையே வினுவும் காதலித்தான், சோ.. என் காதலை நான் மறந்துட்டேன்’ என்றால் நிச்சயம் ஆது ஒத்துக்கொள்ள மாட்டான். அதைவிட தன்னை நினைத்து மிகவும் வருந்துவான் என்பதற்காகவே வினுவின் காதல் மலர்ந்ததையும் தனது காதல் மடிந்ததையும் கிஷோர் ஆதர்ஷிடம் மறைத்து விட்டான்.

“நான் சொன்னா கேட்கமாட்ட, நீயே ஒருநாள் அவகிட்ட சொல்லுவ” என்ற ஆதர்ஷும் கிஷோரிடம் அவன் காதலைப்பற்றி பேசுவதை நிறுத்திவிட்டான்.

அதன் பின்னர் மஹியும் இவர்களது கல்லூரிக்கு வர, அவளுடனான நேரம் மற்றும் நிகழ்வுகளிலேயே உழன்று கொண்டிருந்த ஆதர்ஷ் கிஷோரின் காதலை மறந்தேவிட்டான்.

நாட்கள் கடக்க, ஆதுவும் எதிலிருந்தோ தப்பிக்கும் எண்ணத்தில் லண்டனிற்கு பறந்து விட்டான். ஆனால், அவன் உண்மையில் லண்டன் தான் போயிருந்தானா என்பது அவன் மட்டுமே அறிந்தது.

போவதற்கு முன் வைஷூவிடம் சென்றவன், “என் ஃப்ரெண்ட் உயிருக்கு உயிரா உன்னை நேசிக்கிறான். அவன் உன்கிட்ட அவனோட காதலை வெளிப்படுத்தும் போது நீ உடனே நோ சொல்லிடாத. அதே சமயம் உனக்கு விருப்பமில்லைன்னா சரியும் சொல்லிடாத” எனக் கூறிச் சென்றான்.

கிஷோர் எப்படியும் சொல்ல மாட்டான், ஒருவேளை வைஷூ அவனை நிராகரித்துவிடுவாளென்ற பயத்தில் சொல்லாமல் இருக்கின்றானோ என நினைத்தே வைஷூவிடம் இவ்வாறு கூறினான் ஆதர்ஷ்.

ஆதர்ஷ் கிஷோரை மனதில் வைத்த பேச, அவளோ வினுவைப் பற்றி சொல்வதாக நினைத்துக்கொண்டாள்.

அனைத்தையும் சொல்லி முடித்த கிஷோர் மனம் லேசானதை போன்று உணர்ந்தான். இவ்வளவு நாள் மனதிலிருந்த பாரம் நீங்கிய உணர்வு.

கிஷோரை தாவி அணைத்துக்கொண்ட ஆது, “தான் நினைக்கும் பெண்ணை தனது நண்பனும் நினைக்கின்றான் அப்படின்னா அவனை விரோதியா பார்ப்பவர்கள் தான் அதிகம். இதில் நீ வித்தியாசமானவன் டா, உன்னை என் நண்பன் சொல்லிக்கவே பெருமையா இருக்கு” என்றான்.

“நீ எங்க மேல சத்தியம் வைத்து உன் மனத்தூய்மையை வினுவுக்கு புரிய வச்சியே, உன்மேல பெரிய மரியாதை உருவாகுதுடா. உன் அளவுக்கு நான் கூட இவ்வளவு பெருந்தன்மையா இருந்திருக்கமாட்டேன். நட்புக்கு இலக்கணம் என் கண்ணு முன்னாடி இருக்க நீ தான் மச்சான்.”

அளந்து பேசும் ஆதர்ஷே உணர்ச்சி மிகுதியால் அளவற்று பேசினான். மேலும் என்னவெல்லாம் பேசினானோ, அவனின் வாயில் கரம் வைத்து தடுத்திருந்தான் கிஷோர்.

கிஷோரின் கையை விலக்கிய ஆது,

“ஒண்ணு மட்டும் பேசிக்கிறேன்” எனத் தொடர்ந்தான்.

“உன் காதலை நான் குறை சொல்றதா நினைச்சிடாத மச்சான். வைஷூவும் வினுவும் காதலிக்கிறாங்க தெரிஞ்ச அப்புறம், உன் காதல் தோற்றுப்போனதை விட தன்னோட நண்பன் நேசிக்கும் பெண்ணை நானும் விரும்பிட்டனேன்னு தான் நீ அதிகமா ஃபீல் பண்ணியிருக்க. உன்னால அடுத்த நொடியே, வைஷூவை சகோதரியா நினைக்க முடிஞ்சுது. எங்க மனம் மாறிடுவியோன்னு தான் அவளை வார்த்தைக்கு வார்த்தை சிஸ்டர் சிஸ்டர்ன்னு சொல்லுற. அதுவே உன் மனதில் வைஷூவின் மீதிருந்த ஈர்ப்பையும் இடத்தையும் இல்லாமப் பண்ணிடுச்சு. நீ ஃபீல் பண்றது நண்பனின் காதலியை நாமளும் லவ் பண்ணிட்டமோன்னுதான். நண்பனுக்காக, வைஷூ மேல உனக்கிருந்த காதலை நொடியில் தூக்கியெறிஞ்ச உன்னால,  கிட்டத்தட்ட ஆறு வருஷமா உன்னை லவ் பண்ணிட்டிருக்க, மூணு வருஷமா உன்னையே சுற்றி வர பெண்ணை உனக்காக ஏன் காதலிக்க முடியாது?”

ஆது கூறுவதை மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்த கிஷோர், இறுதியில் அவன் சொல்லியதைக் கேட்டு ஆச்சரியமானான்.

எங்கிருந்தாலும் தன் நண்பன் தன்மீது ஒரு கண் வைத்திருக்கின்றான். தனக்கு நல்லது நடக்க வேண்டுமென அக்கறை அதில் உள்ளது என்பது புரிந்து,

“லவ் யூ டா மச்சான்” எனக் கூறி நெகிழ்ந்தான் கிஷோர்.

“அவள்கிட்ட காதலை சொல்ல சொன்னா எனக்கு சொல்ற, போய் உன்னையே சுத்தி சுத்தி வர்றாளே அவகிட்ட சொல்லுடா” என்றான் ஆதர்ஷ்.

“எனக்கு அவளை ரொம்பவே பிடிச்சிருக்கு ஆது. ஆனால் என் முதல் அனுபவம் அவகிட்ட இருந்து விலகி இருன்னு சொல்லுது. நான் என்ன செய்யட்டும்?”

சிறு பிள்ளை போல் கேட்டவனை முறைத்த ஆது…

“அது ஆறு வருஷத்துக்கு முன்னவே முடிஞ்சிடுச்சு. வைஷூ அந்த நொடியே உன் மனசிலிருந்து காதலியா முழுசா நீங்கிட்டா(ள்). இப்போ அவள் மேல உனக்கிருக்க உணர்வெல்லாம் தன்னோட பிரெண்ட் லவ்வர் அப்படிங்கிறது தான். அதோட சிஸ்டர் சிஸ்டர்ன்னு எனக்குள்ள சொல்லி சொல்லியே அவளுக்கு நீ அண்ணனாகிட்ட. சகோதரியை எந்த அண்ணனும் நேசிச்சதில்லையா? எல்லாமே அன்பு தான். நம்ம மனசு அவங்களை வைத்து பார்க்கும் உறவில் மட்டுமே எல்லாம் மாறுபடுது. சோ, மனசை போட்டு குழப்பிக்காத… அவளை உனக்கு பிடிச்சிருக்குன்னு நீ அழுத்தமா சொல்லும்போதே, அவள் உன் மனதில் நுழைஞ்சிட்டான்னு உனக்கு புரியலையா?” என்றான்.

ஆது இறுதியாக கேட்டதில் தன் மனமே தனக்கு தெளிவாகப் புரிய,

“எல்லாமே உனக்கு தெரிஞ்சிருக்குல மச்சான். அவள் பெயர் என்னடா?” எனக் கேட்டான்.

கிஷோரை வெட்டவா குத்தவா என்கிற ரீதியில் பார்த்த ஆதர்ஷ்,

“ஏன்டா ஒரு பொண்ணு உன்னையே பல வருஷமா சுத்தி வராளேன்னு கூடவாடா அவள் பெயரை தெரிஞ்சுக்கணும் நினைக்கல. போ நீயே தெரிஞ்சிக்க” என கோபமாகக் கூறினான்.

அப்பாவியாக பார்த்த கிஷோரை மேலும் அதிகமாக முறைத்த ஆது,

“சரி வா டைம் ஆகிடுச்சு. இப்போ போனாதான் திருட வசதியா இருக்கும்” என கிஷோரை இழுத்துக்கொண்டு சென்றான்.

“திருடப்போறோம் சொன்னது சும்மான்னு நினைச்சேன் டா, எங்கடா திருடப்போறோம்? என்ன திருடப்போறோம்? எனக்கு பயமா இருக்குடா, நான் வேற இப்போ தான்டா காதலிக்க ஆரம்பிச்சிருக்கேன். இப்போ எனக்காக என் அனாமிகா வேற இருக்கா(ள்)டா, ப்ளீஸ் என்னை இறக்கி விட்டுடு.”

கிஷோர் பேசிய எதுவும் காதில் விழாதவாறு சென்று கொண்டிருந்த ஆது பைக்கை நிறுத்தி,

“அனாமிகா?” என கிஷோரை பார்த்து யோசிப்பதைப்போல் பாவனை செய்ய,

“என் ஆளு பெயர் தெரியலையே மச்சான். அதான் அனாமிகான்னு சொன்னேன்” என்று கிஷோர் விளக்கமளித்தான்.

இப்படியுமாடா ஒருத்தன் இருப்பானென்று தலையில் தட்டிக்கொண்ட ஆது மீண்டும் வண்டியை இயக்கினான்.

(அனாமிகா என்பதற்கு பெயர் தெரியவில்லை என்கின்ற ஒரு பொருளும் உள்ளது.)

error: Content is protected !!
Scroll to Top