ரவுடி பேபி 15

அத்தியாயம் 15 :

மருத்துவமனையில்,

அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியில், கையில் தன் உயிரை பிடித்துக்கொண்டு… இதயத்தில் வடிந்துகொண்டிருந்த உதிரம், கண்ணீராக கண்களில் வழிய சுற்றுப்புறம் மறந்து, கண்ணாடி கதவின் வழியே தன் உயிர் உயிருக்கு போராடுவது வலியோடு பார்த்தபடி நின்றிருந்தான் ராகவ்.

அங்கு படுக்கையில் வீழ்ந்து கிடப்பது அவனின் உயிரே தான். மாலை இன்முகமாக வழியனுப்பி வைத்த தன்னவள் அடுத்த பத்து நிமிடங்களில் உயிருக்கு போராடும் நிலையில் காண்போமென்று அவன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.

மழை வருவதுபோல் வானம் காட்சியளிக்க, தனது காரில் கௌசியை வீட்டிற்கு அனுப்பி வைத்த ராகவ், தன்னவளின் புன்னகை முகம் மனதோடு தோன்ற… அவளின் நினைவாக தோட்டத்து மலர்களையெல்லாம் கௌசியாக எண்ணி காதல் கவிதைகள் வாசித்தவன், பத்து நிமிடம் கழித்து வீட்டிற்குள் நுழைய.. அவனின் மொபைல் அலறியது.

கௌசியின் எண்ணிலிருந்து அழைப்பு வரவும், “பத்து நிமிஷம் கூட அத்தானை விட்டு இருக்க முடியலயாடி” என்று இன்பமாக சலித்துக்கொண்டவன் அட்டெண்ட் செய்து காதில் வைக்க.. எதிர்புறம் பேசியதென்னவோ ஒரு ஆண்.

குரல் மாற்றத்திலேயே ராகவிற்கு தன்னவளுக்கு ஏதோ ஆகிவிட்டதென பரபரப்பு கூட, அந்தப் பக்கமிருந்த நபர்… “உங்க மனைவிக்கு விபத்து ஏற்பட்டு ரத்தம் வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடக்குறாங்க” என கூறிய தகவலில் சப்தநாடியும் அடங்க அப்படியே ஸ்தம்பித்து விட்டான்.

“ஹலோ… ஹலோ… சார், லைனில் இருக்கீங்களா?”

மறுமுனையில் அவர் கத்திய கத்தலில் தன்னை உடனடியாக அதிர்ச்சியிலிருந்து மீட்டவன்,

“ஆம்புலன்ஸ்க்கு சொல்லிட்டீங்களா? நான் உடனடியா அங்கு வர்றேன்” எனக் கூறி இணைப்பைத் துண்டித்தவன்.. புயலென விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்திருந்தான்.

காரில் ஓட்டுநர் தலையில் அடிபட்டு மயங்கி கிடக்க, சாலையில் ரத்தத்திற்கு நடுவே அழகாக துயில் கொண்டிருந்தாள் ராகவின் கௌசல்யா.

இன்னும் ஆம்புலன்ஸ் வந்து சேராததை உணர்ந்து… தன் மார்பில் சாய்த்து அழுதவன், தான் ஓட்டிவந்த வாகனத்தில் கௌசியையும், ட்ரைவரையும் கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதித்தான்.

இருவரையும் பரிசோதித்த மருத்துவர் ட்ரைவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து…

“கௌசல்யாவின் நிலை மிகவும் மோசமானது தான், காப்பாற்றுவது என்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு” என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் வெறியுடன் மருத்துவரின் கழுத்தினை அழுத்தி பிடித்த ராகவ்…

“டாக்டர் எனக்கு என் கௌசி திரும்ப வேணும். அவளுக்கு ஏதாவது ஆச்சு உங்க ஹாஸ்பிட்டலையே அழித்திடுவேன்” என்று மிரட்டி ஐசியூ அறைக்கு எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தான்.

மருத்துவர் ராகவிற்கு மிகவும் நெருங்கியவர் என்பதால், அவனின் செயலில் சினம் கொள்ளாமல்…

“இறைவன் மீது நம்பிக்கை வை ராகவ்” என்று மெல்லக் கூறி கௌசிக்கு சிகிச்சையளிக்கச் சென்றார்.

“இறைவன் மீது நம்பிக்கை வை ராகவ்.”

மீண்டும் மீண்டும் இவ்வார்த்தைகளே ராகவின் காதில் எதிரொலித்தது. என்ன செய்வதென்று புரியாது அறை வாயிலிலேயே தவம் கிடந்த ராகவின் வாய் கௌசி கௌசியென விடாமல் ஜெபிக்க… அவனின் மனமோ, என்னவளை மீட்டுக்கொடென இறைவனிடம் மன்றாடியது. தன் தந்தை இறந்தன்று, தனது பனிரெண்டு வயதில் அழுதது. அதன் பிறகு இன்று தான் தனது உயிரானவளுக்காக கண்ணீர் வடிக்கின்றான். தந்தை இறப்பில் கடவுள் மீதான முழு நம்பிக்கையையும் இழந்தவன், தன்னவளுக்காக தான் வெறுத்து ஒதுக்கிய இறைவனிடமே அவளை காப்பாற்றித் தரும்படி முறையிட்டுக் கொண்டிருக்கின்றான்.

விபத்து எப்படி நேர்ந்ததென்றெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. ஆனால், தனக்கு விரித்த வலையில் கௌசி மாட்டிக்கொண்டாளென்று மட்டும் நன்கு புரிந்தது. ஏற்கனவே தன்னை இரண்டு முறை கொலை செய்ய நினைத்த நபர் தான் இன்றும் தன் காருக்கு குறிவைத்துள்ளாரென்று கண்டு கொண்டான். ஆனால், ஏன்? எதற்கு? அவனிடம் விடையில்லை.

‘கௌசி அவளோட ஸ்கூட்டியில் போயிருந்தால் மழையில் தான் நனைந்து இருப்பாள். என் காரில் அனுப்பி வைத்து, இப்படி ரத்தத்தில் நனைய விட்டுவிட்டனே.. நானே அவளுக்கு எமனா மாறிப்போனனே’ என்று தன் மீதே ஆத்திரம் எழ… மருத்துவமனையென்றும் பாராமல் சுவற்றில் தன் கை விரல்களை மடக்கி ஓங்கி குத்தினான்.

ஒரு குத்துக்கே அவனின் கையில் தோல் கிழிந்து ரத்தம் கசிந்தது. இருப்பினும் விடாது தன் ஆத்திரம் அடங்கும் வழி தெரியாது மீண்டும் மீண்டும் குத்திக் கொண்டேயிருந்தான். சுவற்றில் அவனின் ரத்தம் வழிந்தது. தன் ரத்தம் தன்னவளின் ரத்த வெள்ளத்தை நினைவூட்ட, மேலும் சுவற்றில் அதிக வேகத்துடன் குத்த ஆரம்பித்தான்.

கௌசிக்கு சிகிச்சையளித்து முடித்து வெளியில் வந்த மருத்துவர் ராகவின் நிலை கண்டு கோபம் வர, அவனின் செயலை தடுத்து நிறுத்தினார்.

“ஆர் யூ மேட்? யூ இடியட். நீ இப்படி உன்னையே காயப்படுத்திக்கிட்டா மட்டும் உயிருக்கு போராடுறவ நிலை நொடியில் சரியாகிடுமா?” எனக் கத்தியவர் செவிலியை அழைத்து ராகவின் கைக்கு மருந்திடக் கூறினார்.

இது தானாக சரியாகிவிடுமென்று தன் கையை உதறியவன், “கௌசி இப்போ எப்படி இருக்காள்?” என்க, அவனின் வலி நிறைந்த கேள்வி மருத்துவருக்கு வேதனையளிக்க.. கண்களை அழுந்த மூடி திறந்தவர் மேல் நோக்கி கை காண்பித்தார்.

********************

“டேய் ஆது!”

“அமைதியா வாடா, இங்கு நாயெல்லாம் இருக்கு.”

இருட்டில் தட்டுத்தடுமாறி தான் வந்திருக்குமிடம் எதுவென்று தெரியாது… மதில் சுவரைத் தாண்டி ஆதுவுடன் உள் குதித்திருந்த கிஷோர் நாயென்றதும் அஞ்சியவனாக ஆதுவின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டான்.

“ச்சீ… உன்னை போய் கூட்டிட்டு வந்தேன் பாரு, நாய்க்கெல்லாமா டா பயப்படுவாங்க… கையை எடுடா” என்று ஆது சலித்துக்கொண்டான்.

“நாய் கடிச்சா தெரியும்” என்ற கிஷோர், “இருட்ல நாய் எங்காவது தெரியுதா” என பார்வையால் அலசியபடி ஆதுவுடன் முன்னேறினான்.

பங்களா போன்றிருந்த அவ்வீட்டின் பக்கவாட்டில் பருத்து அடர்ந்து வளர்ந்திருந்த மரத்தின் மீது சரேலென்று கண்ணிமைக்கும் நொடியிலேறிய ஆது கிஷோரையும் ஏறும்படி கூற, அவன் ஆது குரங்குபோல் தாவி ஏறியதையே அதிசயித்து வாய்பிளந்து அதிர்ச்சி விலகாமல் நின்றிருந்தான்.

“டேய் வாடா!”

ஆதுவின் சத்தமில்லா கத்தலில் சுயம் பெற்று, மெல்ல தத்தி தாவி மூச்சு வாங்க ஏறியவன், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்குள்… ஆது மரத்தின் கிளை மீது நின்றபடி, அவ்வீட்டின் பால்கனியில் குதித்திருந்தான்.

“உண்மையிலே போன ஜென்மத்தில் குரங்கு கூட்ட தலைவனா இருந்திருப்பான் போல…” கிஷோர் புலம்பியவாறு ஆது செய்ததையே தானும் செய்தான்.

பால்கனியிலிருந்து மெல்ல கதவினை திறந்து அறையினுள் நுழைந்த ஆது… காலடி சத்தம் கூட எழாதவாறு நீண்ட அடிகள் வைத்து அறையை விட்டு வீட்டின் உள் பக்கம் வந்திருந்தான். ஆதுவின் பின்னோடு வந்த கிஷோர் வீட்டின் செழுமையைக் கண்டு…

“பெரிய கோடீஸ்வரன் வீட்டுல தான் திருட வந்திருக்கோம் போல” என சொல்லியவாறு திரும்பியவன்… ஒரு பக்க சுவர் முழுக்க ஆக்கிரமித்தவாறு மாட்டப்பட்டிருந்த பத்மநாபனின் புகைப்படத்தைக் கண்டதும், “அய்யய்யோ” என்று அலறினான்.

வீட்டில் யாருமில்லாததால் கிஷோரின் கத்தல் எவ்வித எதிர்வினையையும் ஏற்படுத்தவில்லை.

நிசப்தமான இரவு கிஷோரின் அலறலை கேட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் கவலாளியை எழுப்பிவிடப் போகிறதென அவனின் வாயை பொத்திய ஆது, “என்னடா உன் பிரச்சனை” எனக் கேட்டான்.

“மச்சி…. நாம யாரோ பெரிய பணக்காரர் வீடுன்னு நினைத்து, முதலமைச்சர் வீட்டுக்கே திருட வந்துட்டோம்” என்ற தனது நண்பனை ஏற இறங்க பார்த்த ஆது… “தெரிந்து தான் வந்தேன்” என்று கூறி,  அசால்ட்டாக தோளை குலுக்கியவாறு வீட்டினை நோட்டமிட்டான்.

தான் தேடி வந்தது இங்கு தானிருக்கு வேண்டுமென்று கணித்தவன்… அலுவலக அறை போன்று காட்சியளித்த ஒரு அறைக்குள் மின்னேலென உள் நுழைந்தான்.

ஆதுவின் தெரிந்து தான் வந்தேனென்ற வார்த்தையில் சிலையாகிய கிஷோர், நண்பனின் பரபரப்பில் அவன் பின்னோடு அவ்வறைக்குள் சென்றான்.

ஆது அவ்வறையிலுள்ள அடுக்குகளில் அடிக்கி வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கோப்புகளாக தேடிப்பார்க்க, அவனின் செயல் புரியாது கிஷோர் அமைதியாக நின்றிருந்தான்.

“உன்னை வேடிக்கை பார்க்க கூட்டிட்டு வரலை. வந்து தேடு…” தன்னை அழைத்த ஆதுவை அர்த்தப் பார்வை பார்த்த கிஷோர், “என்ன தேடுறதுன்னு சொன்னாதானே தேட முடியும்” என முணுமுணுத்தான்.

அமைதியான இருட்டில் கிஷோரின் வார்த்தைகள் ஆதுவிற்கு கேட்க, “நீ எதுவும் தேட வேண்டாம்… நான் களைத்து போடும் ஃபைல் எல்லாத்தையும் அடுக்கி வச்சிக்கிட்டே வா” என்ற ஆது தன்னுடைய தேடுதலை மட்டும் நிறுத்தவில்லை.

ஆது சொல்லியதை செய்தாலும் கிஷோரின் மனதில் கேள்விகள் எழுந்தன.

ஒருமணி நேரத்திற்கு மேல் தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லையேயென்று இடுப்பில் கை வைத்து நின்றபடி ஆது அவ்வறையை சுற்றி தன் பார்வையை சூழல விட…. கப்போர்டின் மேல் அடுக்கில் தெரிந்தும் தெரியாமலும் வெளியே நீட்டிக்கொண்டிருந்த நீல நிற கோப்பு அவனின் கவனத்தை ஈர்த்தது.

அனாயசமாக தரையில் நின்றபடியே கையுயர்த்தி நீல நிற கோப்பினையெடுத்த ஆதர்ஷ்…. மனதில் தோன்றிய சிறு பரபரப்புடன் அதனை திறக்க, முதல் பக்கத்திலேயே காட்சியளித்த புகைப்படத்தில் ஸ்தம்பித்தான்.

***********************

” தம்பி…”

தனது அக்காவின் அழுகை கலந்த விளிப்பில் அவரை ஏறிட்டுப் பார்த்த ராகவ் இருக்கையிலிருந்து மெல்ல எழுந்தான்.

மருத்துவர் தான் கேட்ட கௌசி எப்படியிருக்கின்றாள் என்ற கேள்விக்கு மேல்நோக்கி கை காண்பிக்கவும், ராகவின் இடது கண்ணிலிருந்து சரேலென்று கண்ணீர் துளி உருண்டு வழிந்தது.

மேலே கை காண்பித்தவர்… “எல்லாம் இறைவன் கையில்” என்றதோடு, “ஒரு மருத்துவரா என் சிகிச்சை முடிஞ்சிருச்சு. இனி இறைவன் தான் தன் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்” என்றவர், “குப்புற விழுந்ததால் இதயப்பகுதியில் நன்கு பலமாக அடிபட்டதில், இதயத்திற்கு அருகில் உள்ள வோல்கள் கார்டில் ரத்தம் உறைந்துவிட்டது. அது முற்றிலும் பாதுகாப்பாக நீக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் அவரின் இதயதுடிப்பின் அளவு நிமிடத்திற்கு 72 லிருந்து 52 ஆக குறைந்துவிட்டது. கௌசி கண் விழித்துவிட வாய்ப்புகள் பாதிக்கு பாதி என்ற நிலையில் உள்ளது. இன்னும் இருபது மணி நேரத்திற்குள் கௌசி கண் விழித்துவிட்டால் உயிருக்கு எவ்வித ஆபத்துமில்லை” எனக்கூறி நகர்ந்தார்.

மருத்துவர் சென்ற பிறகே வீட்டில் யாருக்கும் இன்னும் தகவலளிக்கவில்லை என்பது நினைவு வர, நள்ளிரவு கடந்துவிட்டது என்பதையும் பொருட்படுத்தாமல் தனது அக்காவிற்கு அழைத்திருந்தான்.

மகள் தனது அன்னை வீட்டிற்கு தானே சென்றிருக்கின்றாள் இன்று ஒரு நாள் பாட்டியுடன் தங்கிவிட்டு நாளை வந்துவிடுவாளென உறக்கத்திலிருந்த அம்சாவிற்கு தனது தம்பி கூறிய, கௌசிக்கு விபத்தாகிவிட்டதென்ற தகவல் தலையில் பேரிடியாக விழ…

“உன் மாமா ஏதோ மீட்டிங்கென்று டெல்லி சென்றிருக்கிறாரே. நான் என்ன செய்வேன்” என்று புலம்பினார்.

அவரின் புலம்பலை தன் அதட்டலால் நிறுத்திய ராகவ்… “இந்தநேரத்தில் மாமாவுக்கு அழைத்து நீ எதுவும் சொல்ல வேண்டாம். அவர் நாளை திரும்பி வந்ததும் சொல்லிக்கலாம் இப்போ நீ டிரைவருடன் இங்கு வா” என மருத்துவமனையின் பெயரைக்கூறி இணைப்பை துண்டித்துவிட்டு நேராக அவன் சென்று நின்றது, மருத்துவமனை வளாகத்திலிருந்து சிறு பிள்ளையார் கோவிலில் தான்.

இரவு நேரத்திலும் தீபம் ஒளிர்ந்து கொண்டிருக்க சாந்தமாக காட்சியளித்த பிள்ளையாரை ஆழ்ந்து நோக்கியவன்… தன் வாழ்நாளிலேயே முதல் முறையாக கை கூப்பினான். தன் இத்தனை வருட வாழ்க்கையில் எவனுக்கும் அடிபணியாத ராகவ், தன்னவளுக்காக இறைவனின் முன்பு தலை வணங்கினான்.

“இதுவரை நீங்கெல்லாம் இருக்கும் இடத்தைக்கூட நான் நிமிர்ந்து பார்த்ததில்லை… இப்போ உன் முன் நான் கை கூப்பி நிற்க ஒரே காரணம் என் உயிரான, என் கௌசியை எனக்கு திருப்பி கொடுத்திடுங்க. என் வாழ்நாளில் பாதியை அவளுக்கு கொடுத்துங்க. என் மொத்த வாழ்நாளையும் அவளுக்கு கொடுங்கன்னு என்னால் சொல்ல முடியும், ஆனால்… அவளின்றி இப்போது நான் அனுபவிக்கும் வலியை, நானின்றி அவள் அனுபவிக்கக் கூடாது. அவளோட நான் சந்தோஷமா கொஞ்ச நாளாவது வாழ வேண்டும்” என்றவன் மௌனமாக சில நிமிடங்களை இறைவனின் முன் கழித்துவிட்டு மீண்டும் ஐசியூ அறைக்கு முன்னாலிருக்கும் இருக்கையில் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த போதுதான் அம்சா தம்பியென கதறலுடன் அழைத்திருந்தார்.

“என்னப்பா ஆச்சு?” ராகவிடம் கேட்டுக்கொண்டே அம்சா கண்ணாடி கதவின் வழியே தன் மகளைக் கண்டு மயக்கமாகினார்.

அதிர்ச்சியினால் வந்த மயக்கமென செவிலி சொல்ல… அம்சாவை மற்றொரு அறையில் படுக்க வைத்த ராகவ் மீண்டும் கௌசியிருக்கும் அறை நோக்கி செல்ல… பத்மநாபன் புயலென அவனை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

****************

ஆதர்ஷின் திருமண பத்திரிக்கையை சரத்திடமிருந்து வாங்கிய மஹி சிறு அதிர்வினை கூட காட்டாது. தொழில்முறை நண்பரென்பதால் நீங்கள் மட்டும் திருமணத்துக்கு சென்று வாருங்களெனக் கூறி தன்னறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

மஹியின் இத்தகைய அமைதி நிலை சரத்திற்கு தான் குழப்பத்தை ஏற்படுத்தியது. தன் கணவனுக்கு தனது தங்கையுடன் திருமணமென்றால் சாதாரணமாக ஏற்படும் கோபம் கூட அவளிடத்தில் இல்லையேயென சிந்தித்த சரத்…

‘ஆதர்ஷ் உன் நிலை மிகவும் கவலைக்கிடம் தான்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.

அறைக்குள் வந்த மஹி அழைப்பிதழையே உற்று நோக்கினாள். ஆதர்ஷிற்கு அருகிலிருந்த வைஷ்ணவி என்ற பெயர் தங்கையுடையதாக இருந்தாலும்… தன்னுடைய விஹுவிற்கு அருகிலிருப்பது சொல்லன்னா கோபத்தை ஏற்படுத்த… மேசை மீதிருந்த பேனாவை எடுத்து வைஷூ என்ற பெயர் தெரியாதளவிற்கு அப்பெயரின் மீது கிறுக்கினாள்.

“வன குரங்கு.”

ஆதர்ஷை திட்டியவள், “என் தங்கச்சி கூட கல்யாணம்ன்னு பத்திரிக்கை அடிக்கிற வரை நீயென்ன சும்மா இருந்தியா? அவ கூட கல்யாணத்தை வச்சிக்கிட்டு தான் எனக்கு முத்தம் கொடுத்தியா?” என்று தனது மொபைலிலிருந்த ஆதர்ஷின் படத்தை பார்த்துக் கேள்வி கேட்டாள்.

பதில் சொல்ல வேண்டியவனோ, தான் கையில் வைத்திருந்த கோப்புடன் சிலையென நின்றிருந்தான்.

அவனைத்தொட்டு உலுக்கிய கிஷோர், ஆதுவின் கண்ணில் துளிர்த்திருந்த ஒரு சொட்டு நீரில் பதறினான்.

“ஆது என்னடா?”

“நத்திங் டா… போகலாம்” என்ற ஆதர்ஷ் தன் கையிலிருந்த கோப்பினை மூடி தன் சட்டைக்குள் ஒளித்துக்கொண்டான்.

ஆது கோப்பினை மூடுவதற்குள் தெரிந்த புகைப்படம் கிஷோருக்கும் அதிர்ச்சியைத் தான் கொடுத்தது. அதிலிருப்போர் யாரென்று தெரியாவிட்டாலும், அவர்களிருந்த நிலை வருத்ததை அளித்தது.

வந்த வழியே வெளியில் வந்தவர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த காமிராவில் தங்கள் முகம் பதியாதவாறு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து, மறைத்து நிறுத்தப்பட்டிருந்த பைக்கினைக் கிளப்பி வீட்டை நோக்கிப் பயணித்தனர்.

கிஷோரின் அப்பார்ட்மெண்டில் அவனை ட்ராப் செய்த ஆது பைக்கினை யூ டர்ன் எடுக்க…

“ஆதர்ஷ்…” என்ற நண்பனின் அழுத்தமான அழைப்பில் வண்டியை ஸ்டாண்ட் செய்தான்.

“நீ யாரு?”

அடுத்து கிஷோர் கேட்ட கேள்வியில் ஆது தனது நெஞ்சை நிமிர்த்தி அமைதியாக நிற்க,

“முதலமைச்சர் வீட்டுக்கே தைரியமா போய், அவர் சம்பந்தப்பட்ட கோப்புகளை அலசுறன்னா நீ நிச்சயம் பழைய ஆதுவா இருக்க முடியாது. உண்மையிலே நீ என்ன செய்ற, இந்த ஐந்து வருஷமும் லண்டன்தான் போயிருந்தியா?” என தனக்குத் தோன்றிய கேள்விகளை கிஷோர் ஆதுவிடம் கேட்டாலும் அதற்கான பதிலினை கிஷோர் எதிர்பார்க்கவில்லை.

“நீ எங்ககிட்ட கூட மறைகிறன்னா, முக்கிய காரணமிருக்கும்” என்றவன், “உனக்கு எப்பவும் உன்னோட துணையா நானிருக்கேன் மச்சான்” என்க, தன் நண்பனை ஆரத் தழுவிக் கொண்டான் ஆது.

இன்று தாங்கள் சென்று வந்த இடத்தை வைத்தே, ஆது மோதுமிடம் சாதரணமில்லையென யூகித்த கிஷோர்.. இதுபோல் எங்கேனும் போக வேண்டுமென்றால் என்னையும் உடன் அழைத்துச் செல், தனித்து செல்லாதேயெனக் கேட்டுக்கொண்டான்.

கிஷோர் தன் மீது வைத்துள்ள அக்கறையை உணர்ந்த ஆதர்ஷ்…

“என்னைப்பற்றி எதுவும் யோசிக்காம உன் காதலை அவள்கிட்ட சொல்லும் வழியைப்பார்” எனக்கூறி கிஷோரிடமிருந்து விடைபெற்றான் ஆதர்ஷ்.

‘இவர் டெல்லியில் இருந்தாரே! அக்காவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்தானே தகவல் அளித்தோம். அக்கா மாமாவிடம் சொல்லியிருந்தாலும் இவ்வளவு விரைவில் எப்படி இங்கு வர முடியும்?’ சிந்தித்துக்கொண்டிருந்த ராகவை நோக்கி புயலென வந்த பத்பநாபன் பளாரென ராகவின் கன்னத்தில் அறைந்தார்.

தனது மாமாவா தன்னை அடித்தது என்ற அதிர்ச்சியிலிருந்தவனை.. பத்மநாபன் பேசிய வார்த்தைகள் முதல்முறையாக அவரை சந்தேகிக்கத் தூண்டியது.

“எதுக்குடா எம் மகளை உன் காரில் அனுப்பி வச்ச. உன்னைத் தான் கொலை செய்ய ஒருத்தன் காத்திருக்கிறானே, அது தெரிந்தும் ஏன்டா அவளை உன் காரில் அனுப்பி வச்ச? இப்போ பாரு நீயிருக்க வேண்டிய நிலையில் என் மகள் இருக்கா!” என்றவர், கௌசியின் நிலையை கேட்டறிய மருத்துவரின் அறைக்குச் சென்றார்.

குழப்பத்துடன் பத்மநாபனின் முதுகையே அவர் மறையும் வரை பார்த்திருந்தவன்,

“என்னை கொல்ல ஒருவன் காதிருக்கிறானா? அதெப்படி இவருக்குத் தெரியும்? என்னை இருமுறை கொலை செய்ய பார்த்ததும் இவருக்கு தெரிந்திருக்கு. அப்படியிருந்தும் என்கிட்ட கவனமா இருக்கச்சொல்லி ஒரு வார்த்தை கூட சொல்லலயே, ஏன்?” வினாவை கண்டுபிடித்தவனுக்கு விடையில்லை.

தன் கண்ணுக்குத் தெரியாத எதிரி மாமாவின் கண்ணுக்குத் தெரிந்திருக்கிறான். அப்படின்னா என்னைக் கொல்லும் சதி திட்டத்தில் இவருக்கும் பங்கு இருக்கா?” சரியான பாதையில் ராகவின் மனம் சிந்திக்க ஆரம்பித்த வேளையில் செவிலியின் அழைப்பைக் கேட்டு கௌசியின் மருத்துவ அறைக்குள் ஓடினான்.

**************

வீட்டிற்கு வந்து தனது அறைக்குள் நுழைந்த ஆதர்ஷ் பத்மநாபனின் வீட்டிலிருந்து தான் கொண்டுவந்திருந்த கோப்பினை முழுவதும் அலசினான். அதிலிருந்த செய்தி ஆதர்ஷ் அறிந்ததுதான் என்றாலும், ஆதாரத்துடன்… நிழற்படங்களாய் காட்சிகள் கண் முன்னே விரிய அதிலிருந்த நபர் அனுபவித்த வேதனை இன்றும் அவனுக்கு வலியை கொடுத்தது.

“உங்க இறப்பிற்கான நியாயம் வழங்கும் நேரம் வந்துவிட்டது” என்றவன், அக்கோப்பின் இறுதி பக்கத்தில் பவுச் போன்று இருக்க, அதிலிருந்த சிறு பெண்ட்ரைவை எடுத்து தனது மடிகணினியில் பொருத்தி ஓபன் செய்தான். அதில் இரண்டு வீடியோக்கள் மட்டுமே இருந்தன.

ஒன்று ராகவின் தந்தை கொலை செய்யப்பட்டக் காட்சி. மற்றொன்று ஆதுவின் மாமா அதாவது மஹியின் தந்தை கொலை செய்யப்பட்டக் காட்சி.

மஹியின் தந்தை ராஜசேகரின் மரணம் தற்கொலையென போலீசாரால் மூடப்பட்டிருக்க, இன்று பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு அவரின் இறப்பு தற்கொலையல்ல கொலை தான் என்று இக்கேசினை தான் மஹி தயாவிடம் ரீ ஓபன் செய்யுமாறு புகார் அளித்தாள்.

காணொளியை பார்த்த ஆதர்ஷ்…

“மஹி உன் தேடலுக்கான விடை கிடைச்சிடுச்சு” எனக்கூற, அவன் கண் முன்னே தன்னை சிறு வயதில் தோளில் தூக்கியபடி விளையாட்டுக்காட்டும் ராஜசேகரின் சிரித்த முகம் தோன்றி வேதனையை அளித்தது.

இதுவரை அழுதே பழக்கப்பட்டிடாத ஆது… இரண்டாவது முறையாக தனது மாமாவின் இறப்பின் நிகழ்வினைக் கண்டு கண்ணீர் வடித்தான். கணத்த மனதுடன் உறங்கியும் போனான்.

*****************

கௌசியின் அறைக்குள் வேகமாக ஓடிய ராகவ் என்னவென்று பார்க்க, கௌசியின் இதயத் துடிப்பின் அளவு மானிட்டரில் குறைந்துக் கொண்டே இருந்தது.

ராகவை கௌசியிடம் ஏதேனும் பேச்சுக் கொடுங்களென்ற செவிலி மருத்துவரை அழைத்துவர ஓட்டமாய் ஓடினார்.

“அம்மு…”

காதல் நிறைந்த ராகவின் அழைப்பு கௌசியின் உயிர் வரை சென்று தீண்ட… அதுவரை வெட்டியிழுத்துக் கொண்டிருந்த அவளின் உடல் சீராகியது. இருப்பினும் இதய துடிப்பு சீராகவில்லை.

ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த கையினை மெல்ல தன் கை மீது வைத்தவன், தன்னவளின் கையினை வருடியவாறு..

“அம்மு… எழுந்திருடி, நீயில்லாம என்னால இங்கு வாழ முடியாது. நீ பொம்மை மாதிரி படுத்திருப்பதே எனக்கு உயிர் வலிக்கிற மாதிரி இருக்கு. ப்ளீஸ் அம்மு எழுந்து வாடி. அத்தான்னு ஒருமுறை சொல்லுடி,” தன்னவளிடத்தில் அவளின் உயிருக்காக மன்றாடினான்.

“ராகவ்.”

செவிலி சென்று கௌசியின் நிலையை சொல்லியதும் விரைந்து வந்த மருத்துவர் பதட்டத்துடன் ராகவ் என்றழைக்க,

தன் உள்ளம் முழுக்க நிரம்பியிருப்பவனின், பெயரை உணர்ந்ததாலோ என்னவோ, சீரற்று இறங்கிக்கொண்டிருந்த அவளின் இதய துடிப்பு ஒரு புள்ளி அதிகமாகியது.

மருத்துவரின் பின்னோடு வந்த பத்மநாபன்… இக்காட்சியைக் கண்டு, “நாம் ஒன்று நினைத்தால் நடப்பது வேறொன்றா இருக்கிறதே” என்று சலித்தார்.

மருத்துவர் மீண்டும் மீண்டும் ராகவ் ராகவென்று சத்தமாக உச்சரிக்க, கௌசியின் இதய துடிப்பு மெல்ல மெல்ல சீரானது. இருப்பினும் 52லிருந்து கொஞ்சம் கொஞ்சமாக 70 ஆக உயர்ந்ததே தவிர, முற்றிலும் சீராகவில்லை.

இப்போதைக்கு இதுவே போதுமென்று நிம்மதியடைந்த மருத்துவர்,

“கௌசி வெகுவிரைவா கண் விழித்திடுவாள். யூ டோன்ட் ஒர்ரி” எனக்கூறி, “உங்க குரல் கௌசியின் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும்படி பேசிக்கொண்டேயிருங்க” என்றவாறு வெளியேறினார்.

ராகவ் கௌசியிடம் தன் காதலை வார்த்தைகள் மூலம் தெரியப்படுத்திக் கொண்டிருக்க, வெளியில் சென்று அமரலாமென்று திரும்பி நடந்த பத்மநாபனை ராகவின் குரல் தடுத்து நிறுத்தியது.

“என்னை கொலை செய்ய காத்திருக்கும் நபர் யார் மாமா?”

error: Content is protected !!
Scroll to Top