அத்தியாயம் 16 :
“என்னைக் கொல்ல காத்திருக்கும் நபர் யார் மாமா?”
ராகவின் எதிர்பாராத இக்கேள்வியில் தான் கோபத்தில் வார்த்தைகளை தவற விட்டது பத்மநாபனுக்கு நினைவு வந்தது. அதிர்ந்து ராகவை நோக்கியவர், விழிகள் அங்குமிங்கும் சிதறி ஓட, நா தடுமாற… தொண்டைகுழி ஏறி இறங்க.. கைகளை பிசைந்துகொண்டு நின்றார்.
அவரின் பயந்த தோற்றமே நிச்சயம் இவர் தன்னிடம் எதையோ மறைக்கின்றாரென ராகவிற்கு காட்டிக்கொடுத்தது.
“சொல்லுங்க. யார் அது?”
ராகவ் விடுவதை போல் தெரியவில்லை.
தன் தடுமாற்றமே அவனுக்கு சந்தேகத்தை தோற்றுவிக்குமென்று கருதியவர் நொடியில் சுதாரித்து,
“எனக்கு எப்படி மாப்ள தெரியும், நீ தானே இரண்டு வாரத்திற்கு முன்பு உனக்கு நடந்த விபத்தை பற்றி சொன்ன. நூலிழையில் காரை திருப்பி தப்பித்தேன் என்றாயே, அதுக்குள்ள மறந்துட்டியா?” என்றவரிடம்…
“சாரி மாமா, கௌசி நினைவிலே உழன்றதால் எதுவும் ஞாபகமில்லை” எனக்கூறி அவரை வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்தான்.
‘ஷ்ஷ்ஷ்… தான் சொன்னதை பய அப்படியே நம்பிட்டான், நடக்காத ஒன்றை கூட உன்னாலதான் பத்மநாபா நடந்த மாதிரி காட்ட முடியும்.’ தன்னைத்தானே புகழ்ந்து கொண்டவர் அறிந்திருக்கவில்லை.. தன் மீது சந்தேகம் மட்டுமே கொண்டவன், இப்போது உறுதியே செய்துவிட்டானென்று.
“பதினெட்டு வருஷங்களா உடனிருந்தும் நீங்க இன்னும் இந்த ராகவைப்பற்றி சரியா தெரிந்து கொள்ளவில்லை மிஸ்டர்.பத்மநாபன்” என்று செல்லும் அவரின் முதுகைப் பார்த்துக் கூறியவன், தன் இரண்டு கண்ணையும் அவர் மீது பதித்துவிட்டான்.
தன்னை கொலை செய்ய துடிக்கும் நபர் யாரென பத்மநாபன் அறிந்திருக்கின்றாரென எண்ணினானேத் தவிர, அந்த நபரே அவராகத்தான் இருக்குமென்று அவன் நினைக்கவில்லை. உண்மை தெரிய வரும் வேளை ராகவின் நிலை என்னவாக இருக்கும்?.
கௌசியின் பெட்டிற்கு அருகே நாற்காலியை இழுத்துப் போட்டவன், அவளின் கரம் பற்றியவாறு.. சிறு அசைவேனும் தெரிகிறதாவென்று தன்னவளை கவனித்தபடி இரவை கடக்கத் தொடங்கினான்.
**********************
தன் போனி டெயில் அசைந்தாட, இடது கையால் வலது கையின் சிலீவை மடித்தவாறு, கூலர்ஸ் அணிந்த விழிகளால் அப்பகுதியை அலசியவாறு ஒரு பெண் புலியின் தோரணையில், அந்த பிரபலமான மற்றும் பிரமாண்டமான ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்குள், எம்.டி’யின் அறை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள் ரவுடி பேபி.
எம்.டி அறையில் கம்பீரமாக அமர்ந்திருந்த வினு, கம்ப்யூட்டருடன் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் மஹிரா வருவதைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
மஹிராவின் தோற்றத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அருகில் பார்க்கிறான். அவளின் தோற்றத்தில் தான் எத்தனை மாற்றம். தோற்றம் மட்டுமா மனமும் அல்லவா மாறியிருக்கிறது. தன் புருவம் உயர்த்தி மெச்சுதலாய் அவளை வினு பார்த்துக்கொண்டிருக்க,
அரக்க, பறக்க…. உடலில் வியர்வை வழிய வினுவின் அறைக்குள் ஓடிவந்தான் கிஷோர்.
அவன் எதற்கு இப்படி ஓடி வந்திருக்கின்றான் என்பதை அறிந்து கொண்ட வினு அவனாக சொல்லட்டுமென்று அமைதி காத்தான்.
வினுவிற்கு முன் மேசையில் வைக்கப்பட்டிருந்த நீரை முழுவதும் ஒரே மூச்சாக குடித்து முடித்து தன்னை ஆசுவாசப்படுத்தியவன்,
“டேய் மச்சான்! அந்த ஆம்பள பையன் உன்னைத் தேடி வர்றாள் டா…”
“என்னைத் தேடியில்ல, நம்மைத் தேடி…”
கிஷோரின் வார்த்தைகளைத் திருத்திய வினு… அவனின் அதிர்ந்த தோற்றத்தில் சத்தமாக சிரித்து…
“ஐந்து வருஷங்களாகியும் உனக்கு அவள் மீதான பயம் போகலயா?” எனக் கேட்டு மேலும் சத்தமாக சிரித்தான்.
“இவ்வளவு வருடம் வராதவள் இப்போ எதுக்குடா வர்றாள்.?” கிஷோர் வினவிய அதே சந்தேகம் தான் வினுவினிடத்திலும்.
“வந்தா தெரிஞ்சிடும்…”
வினு சொல்லிக்கொண்டிருக்கும் போதே… அதிரடியாக கதவைத் திறந்த மஹி, கிஷோர் நின்றிருந்த இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் கால் மேல் காலிட்டு மிடுக்குடன் அமர்ந்தாள்.
அவள் தோரணையான செயலில் விழி பிதுங்கிய கிஷோர்…
“இன்னைக்கு யாருக்கு சேதாரம்ன்னு தெரியலையே” என முணுமுணுத்தான்.
வினு மஹியையே ஆழ்ந்து பார்த்திருக்க,
“நான் விஹூவை மீட் பண்ணனும்” என்றாள் அதிக அழுத்தத்துடன்.
“விஹூ… அப்படி யாரையும் எனக்குத் தெரியாதே!”
வினு அளித்த பதிலில் மஹியின் பொறுமை எல்லை கடக்க காத்திருந்தது.
‘இந்த ஆம்பள பையன் இங்கு வந்து ரெண்டு நிமிஷமாகுது. இவ்வளவு நேரம் அமைதியா இருந்ததே பெரிய விஷயம், இவன் வேற அந்தப் பையன் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்காம, நல்லா வாங்கப் போறான். அப்போ இன்னைக்கு சேதாரம் உனக்குத் தான்டா வினு’ என மனதோடு பேசிய கிஷோர், ‘ஆண்டவா என் நண்பனை காப்பாத்து’ என்று உடனடியாக இறைவனுக்கு கோரிக்கை விடுத்தான்.
சில வினாடிகள் மட்டுமே வினுவைத் தீர்க்கமாகப் பார்த்தவள்… “ஓகே பைன்” எனக்கூறி இருக்கையிலிருந்து எழுந்தாள்.
வினு அப்போதும் அமைதியாக இருக்க,
வெளியே செல்ல நடந்தவள் கதவின் மீது கை வைத்த சமயம்,
“அஞ்சு வருஷங்களுக்கு அப்புறம் உன்னைப் பார்க்க தேடி வந்தவனை கண்டுக்காம இப்போ என்ன அவனைப் பார்க்கும் ஆவல்? ஒருவேளை, திடீர்னு அவன் மேல லவ் வந்திடுச்சோ”, என படு நக்கலாகவேக் கேட்டிருந்தான் வினு.
அவனின் கேள்வியில் மஹிராவின் கண்களில் தீப்பொறி பறந்தது.
அவளைப் பார்த்துக்கொண்டிருந்த கிஷோர் சட்டென மறுபுறம் திரும்பி நின்று… “சும்மா போன ஓணானை பிடித்து வெட்டிக்குள்ள விட்டுட்டானே” என்றான்.
“டேய் மாப்ள! மைண்ட் வாய்ஸ் மைண்ட்க்குள்ள பேசணும்…”
வினுவின் குரலில் மீண்டும் திரும்பி மஹியை பார்க்க, இப்போது அவளின் அனல் கக்கும் பார்வை கிஷோரின் மீது நிலைத்திருந்தது.
இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தவள்…
“தாலி கட்டின் கணவன் மீது காதல் வரலன்னாதான் தப்பு” என்றிருந்தாள்.
அவளின் வார்த்தையில் இருவருமே ஸ்தம்பித்துவிட்டனர். இருவரும் ஒருவரையொருவர் அதிர்ந்து பார்த்துக்கொள்ள,
“என்னது… தாலிகட்டிய கணவனா?” கிஷோர் வாய்திறந்து கேட்டே விட்டான்.
“இது திடீர் காதலில்ல…. அவனை(விஹூ) திணற வைக்கும் காதல்!” என்றவள் திரும்பியும் பாராது சென்றுவிட்டாள்.
வாய் பிளந்து நின்றிருந்த கிஷோரின் வாயினை மூடச்செய்த வினு, “வாய்க்குள்ள அனகோண்டாவே போகும்போல” என்றான்.
ஹோட்டலை விட்டு வெளியில் வந்த மஹி காலை எழுந்தது முதல் இத்தோடு பதினேழாவது முறையாக ஆதுவிடம் பேசுவதற்காக மொபைலில் முயற்சித்து விட்டாள். அவன் எடுப்பதைப்போல் தெரியவில்லை, அவனைக் காண வீடுவரையெல்லாம் அவளால் செல்ல முடியாது. ஆதலால் வினு, கிஷோரின் மூலம் ஆதுவை சந்தித்து விடலாமென்று தான் இங்கு வந்தாள், இதுவும் பலனின்றி போனது.
இம்முறை அழைத்தும் ஆது கால் எடுக்காததும் கோபமாக கார் இருக்கையில் மொபைலைத் தூக்கிப்போட்டுவிட்டு, அவன் மீதிருக்கும் கோபத்தை கார் ஸ்டியரிங்கில் காண்பித்தாள்.
முக்கியமான வேலையிலிருந்த ஆது மஹியின் காலென்று தெரிந்தும் அட்டெண்ட் செய்யாது கடமையே கண்ணாக இருந்தான். தனது வேலை முடிந்து சோர்வாக கைகளை உயர்த்தி தலையை வேகமாக உதரியவனின் கண்கள் தூக்கத்திற்கு கெஞ்சின. இரவு பத்மநாபனின் வீட்டிற்கு சென்று வந்த பின்னர் உறங்க முயற்சித்தவனால் முடியாது போக, தான் அடுத்து என்ன செய்யவேண்டுமென தன் பணியை கவனிக்கலானான். அவனின் வேலை உள்ளுக்குள் இழுத்துக்கொள்ள, விடிந்தும் அதிலே மூழ்கியிருந்தவன்… மஹியின் காத்திருப்பு வெகுவிரைவில் முடிவுக்கு வரப்போகிறதென்ற முழு நம்பிக்கை வந்த பிறகே மடிகணினியை மூடி வைத்தான்.
மொபைலை எடுத்து பார்த்தவன் மஹியிடமிருந்து வந்திருந்த பல அழைப்புகள் அவனின் முகத்தில் புன்னகையை தோற்றுவித்தது. எதற்காக இந்தழைப்பென யூகித்தவன், ‘என்னைத் தவிக்க விட்டதற்கு கொஞ்ச நாள் நீயும் என் பின்னால் சுற்று’ என நினைத்தவனாக தனது அன்றாட பணிகளை செய்யத் துவங்கினான்.
உணவு உண்ணுவதற்காக கீழிறங்கி வந்தவனிடம், “திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்ய துவங்கிவிட்டோம் ஆது. உனக்கென்று ஏதேனும் விருப்பமிருக்கிறதா?” என்ற நாதனை உணவை சுவைத்தபடி பார்த்தவன்,
“உங்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படியே செய்ங்க” என எழுந்து சென்று விட்டான்.
“இவன் மனசில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்றே தெரியவில்லையே!” புலம்பிய ஜானகியின் தோளில் கரம் போட்ட விஷ்ணு, “அவனுக்கு பிடித்த மாதிரி தான் இந்த கல்யாணம் நடக்கும்” என்றார்.
“என்னவோ சொல்றீங்க. எனக்குத்தான் புரியல. ஆனால், ஆதுவுக்கு கல்யாணம் மஹியோடதான்னு எம்மனசு சொல்லுதுங்க.”
தன் மனைவி சொன்னதைக் கேட்டதும், ஆச்சரியமடைவதை போன்று பாவனை செய்த விஷ்ணு “அப்படியா!” என்க,
அவரின் விலாவில் யாரும் பார்த்திடாதவாறு தன் கைமுட்டிக்கொண்டு இடித்தார்.
அதில், “அய்யோ என் பொண்டாட்டி என்னை அடிக்கிறாளே” என்று அவர் போட்ட சத்தத்தில் அனைவரும் திரும்பிப் பார்க்க…
அவர்களுக்கெல்லாம் அசட்டுப் புன்னகை ஒன்றை வழங்கிய ஜானகி தனது கணவனை முறைத்துவிட்டு பூஜையறைக்குள் புகுந்துகொண்டார்.
பூஜை அறையில் இருந்தால்தான் நாதனின் கேள்விகளிலிருந்து தப்ப முடியுமென அங்கு சென்றார்.
*****************
“டேய் வினு…”
“ம்ம்ம்…”
“இந்த ஆம்பள பையன் சொல்லிட்டு போனது உண்மை தானாடா?”
தீவிரமாக கணினியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த வினுவை கூப்பிட்ட கிஷோர்… ஆயிரமாவது முறையாக இக்கேள்வியினைக் கேட்கின்றான். ஒவ்வொருமுறை கேட்கும்போதும் புதிதாக கேட்பதைப்போன்று அதே ஆச்சரியம் கலந்த மாடுலேஷனை சற்றும் மாற்றவில்லை.
“என்ன தான்டா உன் பிரச்சனை?” வினு அலுத்துக்கொண்டான்.
“அதான் மச்சி… இந்த ஆம்பள பையன் சொல்லிட்டு போனது உண்மை தானா?”
“டேய் என்னை கொலைகாரன் ஆக்கிடாதடா!” வினு கிஷோரை அடிக்க ஏதுவான பொருளை தன் டேபிளில் தேட…
“இதுவாடா தேடுற” என்று கிஷோரே தன்னை அடிக்க பேப்பர் வெயிட்டினை எடுத்து வினுவின் முன் நீட்டினான்.
“இதே தான் மச்சி” என்று பேப்பர் வெயிட்டினை கிஷோரிடமிருந்து வாங்கியவன் அவன் மீது தூக்கிப்போட, அதனை லாவகாமாக கேட்ச் செய்த கிஷோர்…
“தெரியாத விஷயத்தைக் கேட்டா பதில் சொல்ல பழகு, அதைவிட்டு என்னதிது சின்ன பிள்ளைத்தனமா பேப்பர் வெயிட் கொண்டு அடிப்பது” என்று வடிவேலு போல் பேசிக்காட்ட… வினு முறைத்த முறைப்பில்,
“நான் ஆதுவிடமே நேரடியாக் கேட்டுத் தெரிந்துக் கொள்கிறேன்” என்று கூறியவனாய் கதவினைத் திறக்க…
“என்கிட்ட என்ன கேட்கணும்” என்ற கேள்வியுடன் ஆதர்ஷ் நின்றிருந்தான்.
“ஒன்னுமில்லை மச்சி… மஹி வந்திருந்தாள், உன்னை பார்க்கணும் சொன்னாள். அதான் உங்களுக்குள்ள எல்லாம் சரியாகிடுச்சான்னு கேட்கணும் சொல்லிட்டு இருந்தான்” என்று தன் வாயில் வந்ததைக்கூறி சமாளித்து, “அதில்லைடா மச்சான்” என்று சொல்ல வந்த கிஷோரை பார்வையால் தடுத்தான் வினேஷ்.
அதை புரிந்துகொள்ளாத கிஷோர்…
“டேய் இவன் எதோ கண்ணாலே சொல்றான்டா, என்னன்னு சொல்லு” என ஆதுவிடமே கேட்க, வினு தலையில் கை வைத்துக்கொண்டான்.
நீ சொல்ல வரதை என்கிட்ட சொல்லக்கூடாதுன்னு ஜாடை காட்டுறான்” என ஆதர்ஷ் கூறினான்.
கிஷோர் விளக்கெண்ணெய் குடித்தது போல் வினுவை பார்த்து முழிக்க… “
“சரி, இப்போ சொல்லு என்ன கேட்கணும்?” என்றான் ஆதர்ஷ்.
“அது வந்து ஆது…”
“அதான் வந்துட்டனே, கேளுடா!”
கிஷோர் வினுவை பார்க்க,
“அதான் ஒன்னும் தெரியாதமாதிரி மூஞ்சி வச்சிக்கிட்டு என்னவோ இருக்குன்னு காட்டி கொடுத்துட்டியே அப்புறம் என்ன? என்ன கேட்கணுமோ கேட்டுத்தொலை” என்றான் வினேஷ்.
“மச்சி நீ என்னைத் திட்டிட்டே கேளு சொன்னா, நானெப்படி கேட்கிறது. சிரிச்சிட்டே சொல்லுடா” என்ற கிஷோரை கொலை வெறியுடன் பார்த்த வினு மீண்டும் பேப்பர் வெயிட்டினைத் தேட, அவனின் நோக்கம் புரிந்த கிஷோர் ஆதுவின் முதுகிற்கு பின்னால் மறைந்துக் கொண்டான்.
“அய்யோ, உங்க விளையாட்டை அப்புறம் வச்சுக்கோங்க. என்கிட்ட என்ன கேட்கணும்?” மீண்டும் கேட்டவனாய் அங்கிருந்த நீண்ட கோச்சில் அமர்ந்தான்.
‘இதற்கு மேல் இவனிடமிருந்து தப்பிக்க முடியாது. நமக்கும் அந்த ரவுடி பேபி சொன்னது உண்மையா பொய்யான்னு தெரியணும். சோ, கேட்டுவிடுவோம்’ என நினைத்த கிஷோர் வினுவை பார்த்துக்கொண்டே,
“உனக்கும் அந்த ஆம்பள பையனுக்கும்…” என்று தொடங்கிட,
“ம்ம்ம்…” என ஆது முறைத்த முறைப்பில்,
தான் சொல்லிய ஆம்பள பையன் என்ற வார்த்தையை திருத்தி…
“அந்த ரவுடி பேபிக்கும் கல்யாணமாகிருச்சா?” என்று, ஒரு வழியாக தன் கேள்வியை கேட்டுவிட்டான்.
கிஷோரை கேட்டுவிடாதேயென தடுத்த வினு கூட ஆது என்ன கூறப்போகின்றானென்று ஆவலாக ஆதுவின் முகம் பார்த்திருக்க,
“அது ஆச்சு அஞ்சு வருஷத்துக்கு முன்னால்” என்றான் சர்வ சாதாரணமாக.
இருவரும் ஆதுவை அதிர்ச்சியாகப் பார்த்திருக்க,
“எதுக்குடா இவ்ளோ ஷாக்? அதான் இப்போ உங்க எல்லாருக்கும் தெரிந்த மாதிரி இன்னொருமுறை திருமணம் நடக்கப்போகுதே” என்ற ஆதர்ஷ்…
“மேரேஜ் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு… ரிசப்ஷன் வைக்க பார்ட்டி ஹால் வேணும் மச்சி?” எனக் கேட்டிருந்தான்.
“சரிடா! செவன்த் ஃப்ளோரில் இருக்க பார்ட்டி ஹாலில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லிடுறேன், அதுதான் ரொம்ப பெரிதா வசதியா இருக்கும்” என்றான் வினு.
சரியென்ற ஆது கிஷோரை பார்த்து… “இன்னும் என்ன கேட்கணுமோ கேளு?” என்றான்.
“உனக்கு எப்படித் தெரியும்?”
“அதான் உன் முழியே காட்டிக்கொடுக்குதே!”
“ஹோ… ரிசப்ஷன் திருமணத்திற்கு முந்தைய நாள் தானே இப்போலாம் வைக்கிறாங்க. நீ ஏன் மூணு நாளுக்கு அப்புறம் வைக்கிற. டபுள் வேலை” என்றான் கிஷோர்.
“எப்படியும் வைஷு பக்கத்தில் கணவனா நடிப்பதற்குன்னாலும் மூன்று நான்கு மணிநேரம் என்னால் நிற்க முடியாது. அது வைஷுவுக்கும் தர்ம சங்கடமா இருக்கும். அதான் மஹியோட மேரேஜ் முடிந்த பிறகு ரிசப்ஷன். அந்த மூன்று நாள் கேப்பில் அனைத்து விதமான பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டு வந்துடுவேன் நினைக்கிறேன்.”
ஆது கூறியது முழுமையாகப் புரியாவிட்டாலும், “நீ செய்தா சரியாத்தான் இருக்கும்” என்றான் கிஷோர்.
வினுவிற்குத் தான் ஆதுவிடம் வைஷூவின் காதலன் தான் தான் என்பதை மறைக்கின்றோமோ என்ற குற்றவுணர்வு எழுந்தது. இருப்பினும் எப்படி சொல்வதென்ற தயக்கம் ஏற்பட இப்போதும் சொல்லாமல் விட்டுவிட்டான்.
**********************
மருத்துவர் சொல்லிய நேரம் முடியவடைய இன்னும் பத்து நிமிடங்களே இருந்த வேளையில், பத்மநாபன், அம்சா, மற்றும் ராகவ் கௌசியின் பெட்டிற்கு அருகே அமர்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருக்க…
“பிளீஸ் எழுந்திருடி அம்மு!” என பல லட்சமாவது முறையாக அவ்வார்த்தைகளை மனதிற்குள் கூறினான் ராகவ்.
‘மருத்துவர் சொல்லிய நேரம் முடிய போகுதே… என் அம்மு என்னைவிட்டு போயிடுவாளா?’ என்கிற பயம் தோன்ற, எதற்கும் அஞ்சி நடுங்காதவன்.. தன்னவளின் நிலையெண்ணி அஞ்சியவனாய், நடுங்கும் கைகளால் அவளின் கன்னம் வருடி… ‘என்னை ஒருமுறை அத்தான்னு கூப்பிடு அம்மு’ என்றான்.
அவனின் கெஞ்சல் அவளின் ஆழ் மனதில் துடிப்பை ஏற்படுத்த மெல்ல கருமணிகளை அசைத்தவள், முயன்று தன் இமைகளை பிரித்து மங்கியப் பார்வையால் தன்னவனின் முகம் ரசித்து…. வறண்ட குரலினால் “அத்தான்” என்று அழைத்திருந்தாள்.
எங்கோ பிரிந்து சென்ற ஜீவன் தனக்குள் வந்துவிட்டதாக மகிழ்ந்துப்போன ராகவ்… கலங்கிய விழிகளுடன் தன்னவளின் முகம் ஏந்தியபடி…
“அக்கா கௌசி கண் முழிச்சிட்டாக்கா” என்று அம்சாவிடம் ஆர்ப்பரித்தான்.
சொர்க்கம் கை வந்து சேர்ந்திட்டதில்… வாழ்க்கையில் முதன் முறையாக உணர்ச்சிவசப்படும் தன் தம்பியையே பார்த்த அம்சா,
“இப்போவாவது இந்த தண்ணியை குடிப்பா” என்று அவன் முன் வாட்டர் பாட்டிலை நீட்டினார்.
“எனக்கு என் கௌசி கண் விழித்ததே போதும்” என்றவன், கௌசியின் கண்ணசைவில் தண்ணீரை வாங்கிப் பருகினான்.
“சொல்ல வேண்டியவங்க சொன்னால் தான் நீங்களாம் கேட்பீங்க” என்ற அம்சா தன் மகளின் கையை பிடித்துக்கொண்டு “வலிக்குதாடா” என்றார்.
அவரின் கேள்வியில் ராகவை பார்த்தவள் தனது வலியை மறைத்தவளாக, “ஊசி போட்டிருக்காங்களேம்மா, சோ பெயின் இல்லை” எனக் கூறினாள்.
வலியில்லையென்ற கௌசியின் வார்த்தையில் தான் இழுத்த மூச்சினை வெளிவிட்டான் ராகவ்.
பத்மநாபனும் தன் மகளை பரிவுடன் நலம் விசாரிக்க…
“நீங்க இங்கிருப்பது மீடியாவுக்கு தெரியுறதுக்கு முன்னாடி வீட்டுக்கு கிளம்புங்க” என்று அவரை மருத்துவமனையிலிருந்து அப்புறப்படுத்தினான் ராகவ்.
அவருக்கு அவன் நேற்று தன்னிடம் கேள்வி கேட்டதிலிருந்து தன்னை மாமாவென அழைக்கவில்லையே என்பதை கண்டு கொண்ட நாதன்… பய எதையும் கண்டு பிடிப்பதற்குள் இவன் கதையை முடிக்க வேண்டுமென்ற திட்டத்துடன் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்.
“நீ போய் குளிச்சிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு வாப்பா.”
அம்சா கூறியதற்கு மறுப்பு தெரிவித்தவன், பிடிவாதமாக கௌசியின் அருகிலே அமர்ந்துகொண்டான்.
தன்னவனின் அக்கறையும், கவனிப்பும் அவன் மீதான காதலை கௌசிக்கு மேலும் அதிகரிக்கச் செய்தது.
****************
அன்றைய நாளின் முடிவில் கிஷோர் அலைபேசியையே நொடிக்கு ஒருமுறை பார்த்திருந்தான்.
கிஷோரும் அவளும் ஹோட்டலில் நேற்று மாலை சந்தித்ததற்கு பிறகு அவளிடமிருந்து வழக்கமாக வரும், குட் நைட், குட் மார்னிங், சாப்டியா? என்ற குருந்தகவல்கள் கூட வரவில்லை.
“ரொம்ப ஓவராத்தான் ஹர்ட் பண்ணிட்டோமோ?” தனக்குத்தானே கேட்டுக்கொண்ட கிஷோர், “இல்லையே இதுக்கு முன்னால் இதைவிட நிறைய ஹர்ட் பண்ணியிருக்கோமே அப்போவெல்லாம் என் பின்னால் தானே சுற்றிக்கொண்டிருந்தாள். இப்போ மட்டுமென்ன?” என்றுக் கேட்டுக்கொண்டவனிற்கு அவனின் மனம் பதிலளித்தது.
‘ஒரு பெண் தன்னைவிட்டு எந்தவொரு சூழலிலும் பிரிந்து செல்லமாட்டாள் என்கிற உண்மை தெரியும் நொடியிலிருந்து ஒரு ஆணின் அலட்சியம் தொடங்குகிறது.’
தன் மனம் கொட்டிய கொட்டலில் அதிகமாகவே வலிக்க… அவளின் மொபைல் எண் அறிந்திட்ட இந்த மூன்று வருட காலத்தில் முதல் முறையாகத் தானே அவளுக்கு அழைத்தான்.
**********************
“சொல்லு வினு!”
தனக்கு கால் செய்திருந்த தன்னவனின் அழைப்பை ஏற்ற வைஷூ என்னவெனக் கேட்க, ஒன்றுமில்லையென்றவன்…
“நான் தான் உன்னோட லவ்வர்ன்னு ஆதுகிட்ட சொல்லிட்டியா?” என்றான்.
“நீ சொல்ல வேண்டாம் சொல்லியிருக்க. அப்புறம் நானெப்படி சொல்வேன் வினு. வெட்டிங் அன்னைக்குத்தான் தெரியும் நினைக்கிறேன்” என்றாள்.
“ஹோ… அப்போ என் வீட்டில் யார் வந்து பேசப்போறாங்க.”
“ஐ தின்க், நாதன் தாத்தா.”
……………………….
“ஏன் வினு அமைதியாயிருக்க?”
எனக்கு ஆதுவிடம் சொல்லிடலான்னு தோணுது” என்ற வினுவை,
“நீ ஆது மாமாவுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதா நினைச்சிக்கோ வினு” என சமாதானப்படுத்தினாள் வைஷூ.
“ஆதுவிடம் உண்மையை சொல்லிடலாம் தான். ஆனால் நடிப்புக்காகக் கூட உன் பக்கத்துல கணவனாக நிற்க தயங்குபவன், நண்பனின் காதலின்னு தெரிந்தா ஒப்புக்கொள்ளவே மாட்டான். அப்புறம் எப்படி மஹியை ஆதுவைத் தேடி வர வைப்பது” என்பதற்காகவே வினு ஆதுவிடம் சொல்ல தடுமாறுகின்றான்.
ஆனால் வினு அறிந்திடாத ஒன்று… அத்தை மகளான வைஷூவின் அருகில் நிற்பது ஆதுவிற்கு எவ்வித தயக்கத்தையும் அளிக்காது. தன் நண்பனின் காதலியென தெரிந்தபிறகே வைஷூவின் அருகில் எப்படி நான்கு மணிநேரத்திற்கும் மேல் நிற்பதென தயங்கியே ரிசப்ஷனை திருமணத்திற்கு பின் வைத்திருக்கின்றான் என்பது.
“எப்படியும் நம்ம திருமணம் நடக்கும்போது தெரியத்தானே போகுது” என்ற வைஷூவிடம்…
“ஐ லவ் யூ வைஷூ” எனக்கூறி தன் மனதை சமன்படுத்த முயன்றான்.
இவர்கள் இருவரும் ஆதுவிற்கு தெரியாதென்று பேசிக்கொண்டிருக்க, அவர்களின் பேச்சுக்கு காரணமானவனோ வினுவின் பெற்றோர் முன்பு தனது தந்தையுடன் அமர்ந்திருந்தான்.
*******************
“அடியேய் குச்சிமிட்டாய்… என்னடி பண்ணிட்டு இருக்க, கண்ணு எரியுதுடி. தண்ணியை திறந்துவிடு.” மாலை வேலை முடிந்து வந்த சரத் குளியலறைக்குள் நுழைந்ததும்… அவன் முகத்திற்கு சோப்பு போடும் நேரத்தை கணித்து, குளியலறை குழாய்க்கு வரும் தண்ணீரை தடை செய்திருந்தாள் ஸ்வேதா.
சரத் கத்தும் சத்தம் நன்கு தனது செவிகளில் விழுந்தும், அசையாது மெத்தையில் அமர்ந்திருந்தவள் குச்சிமிட்டாயினை வாயில் வைத்து ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தாள்.
தான் இவ்வளவு கத்தியும் தண்ணீர் வரவில்லையென்று துவாலையால் முகத்தினை துடைத்துக் கொண்டு.. இடுப்பில் துவாலையை சுற்றிக்கொண்டு குளியலறையிலிருந்து வெளிவந்தவன், அவள் குச்சிமிட்டாயினை வாயில் வைத்து சுவைக்கும் அழகில் தன்னை மறந்தான். தான் நிற்கும் கோலம் மறந்தான்.
நொடியில் அவளருகில் சென்றவன், அவளின் கன்னம் பற்றி இதழை சிறை செய்திருந்தான். குச்சிமிட்டாயின் சுவையோடு அவனின் இதழ் சுவையும் போதையேற்ற கணவனின் கைகளில் மெழுகாய் உருகினாள்.
அவளின் நிலையறிந்து மஞ்சத்தில் கிடத்தியவன், தானும் அவளுடன் சாய்ந்து… அவளிடம் தன்னைத் தொலைத்தவனாய், மொத்தமும் அவளுள் மூழ்கிப்போனான். நல்ல மனைவியாக கணவனின் செயலுக்கு இசைந்து கொடுத்தவள் தானும் விரும்பியே அவனுள் புதைந்து போனாள். இனிய கூடல் முடிந்து அவள் மேலிருந்தவன் சரிந்து மெத்தையில் விழுந்தான். தன்னவளை இழுத்து தன் மார்பில் போட்டுகொண்டு கண் மூடினான். சற்று நேரத்திற்கு முன் அரங்கேறிய கூடலின் சுகத்தை தனக்குள் ரசித்திருந்தான்.
“உன் மேல சோப்பு ஸ்மெல் டா… முதல்ல குளிச்சிவட்டு வா!” அவனின் நெஞ்சத்தில் கன்னம் வைத்திருந்தவள் கூற,
“இவ்வளவு நேரம் இந்த சோப்பு ஸ்மெல் உனக்கு தெரியலையாடி குச்சிமிட்டாய்” என்றான் இதழில் வழிந்த ரகசியப் புன்னகையுடன்.
“போடா!” என்றவள் எழுந்துக்கொள்ள, அவன் மீண்டும் அவளை தன் மேல் போட்டுக்கொண்டான்.
“டேய் விடு. நீதான் என் மேல கோபமா இருந்தியே! அப்புறம் எதுக்குடா என்னை இப்படி பண்ண?” அவள் தாங்கள் இருந்த நிலையை சுட்டிக்காட்டி வினவினாள்.
“எனக்கு ஸ்வேதா மேல தான் கோபம். இப்போ என் பக்கத்துல இருக்கிறது என்னோட குச்சிமிட்டாய் டி” என்றான்.
“நான் உன்கிட்ட பேசாம கோபமா இருந்தேன்னுதான் தண்ணியை நிறுத்துனியா?” என்று சரத் கேட்க ஆமென்று தலையசைத்தவள் அவனின் மார்பிலேயே தன் பல் பதியுமளவிற்கு கடித்து வைத்து, “என்மேல இன்னைக்கு முழுக்க கோபமா இருந்தததுக்கு தண்டனை” எனக் கூறினாள்.
அவன் அமைதியாகவே இருக்க,
“சரி நான் உன்கிட்ட மறைச்ச விஷயத்தை எப்படி நீ கண்டுபிடிச்ச?” எனக் கேட்டாள்.
இன்று முழுக்க அவன் அவளிடம் பேசமாலிருந்ததற்கு காரணம்… “இவ்ளோ நாளா நீ என்கிட்ட எதையோ மறைக்கிற, அதை நான் சீக்கிரம் கண்டு பிடிச்சிடுவேன்” எனக் கூறிக்கொண்டிருந்த சரத், நேற்றிரவு அது என்ன என்பதை கண்டறிந்துவிட்டான்.
அது என்னவாக இருக்கும்?