ரவுடி பேபி 17

அத்தியாயம் 17

“நீ தூங்கும் நேரம் உன் கன்னம் ஓரம்

உனை தீண்டும் என் தாபம்

உடைந்தே போகும்…….

என் இதயத்தில் யுத்தம் செய்யாதே!!”

இன்று முழுக்க எவ்வளவோ முயற்சித்தும் ஆதர்ஷிடம் பேச முடியாது போனதால் கோபத்துடன் தனது அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த மஹியின் போன் அழைப்பு வந்ததன் காரணமாக சத்தம் போட்டது.

எப்போதும் தன்னவளை நினைத்த நொடியில் ஆதர்ஷின் மனதில் முளைக்கும் பாடலின் கரோக்கி வெர்ஷனை தனது ரிங்டோனாக வைத்திருந்தாள் மஹி.

ஆதுவிற்கு இப்பாடல் உயிருக்கு இணையாக பிடிக்குமென்று அவளுக்குத் தெரியும். ஆனால், தன் மீது விளைந்த நேசத்தின் வெளிப்பாடாகவே இப்பாடலை அவன் பார்க்கின்றானென்று அவனை பிரிந்த நாளில் தான் புரிந்துகொண்டாள். அவனின் நினைவாகவே இவளுக்கும் இப்பாடல் மனதிற்கு நெருக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

“ஹலோ…”

புது எண்ணாக இருக்கவும் யாரெனக் கேட்க, அந்தப்பக்கம் அழைத்தது ஐஜி தயா எனத் தெரிந்த பின்னர் சகஜமாக பேச ஆரம்பித்தாள்.

கேசைப்பற்றி ஏதேனும் சொல்லுவாரென்று அவள் காத்திருக்க, “நாளை என்னை வந்து நேரில் பார்க்க முடியுமா?” எனக் கேட்டிருந்தார்.

“எனித்திங் சீரியஸ் சார்?”

“நத்திங் ம்மா… பட் நீ நேரில் வந்தால் நன்றாக இருக்கும்” என்றவரிடம் சரியெனக் கூறி காலினை கட் செய்தாள்.

அந்நாளின் இறுதியாக ஒருமுறை ஆதர்ஷிற்கு அழைத்தவள்… இத்தனை முறை தான் அழைத்தும் அட்டெண்ட் செய்யாதவனின் மீது கோபம் எழ… “உன் மேரேஜ் எப்படி நடக்கது பார்க்கிறேன்” என சவாலாகக் கூறியவள் உறங்க ஆயத்தமாகினாள்.

******************

“அத்தான்!”

படுக்கையில் வாடிய கொடி போல் வீற்றிருந்தவளின் அழைப்பில், யாருடனோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ராகவ் அவளருகில் ஓடி வந்தான்.

“என்னம்மா… என்னடா?”

அன்பு கலந்து பரிவுடன் ஒலித்த அவனின் குரலில் ஆனந்த கண்ணீர் துளிர்க்க, “எப்போ அத்தான் வீட்டுக்குப் போலாம்?” என வினவினாள்.

“இன்னும் ரெண்டு நாளாகும் அம்மு. உடம்பு முழுசா சரியானதும் வீட்டுக்கு போயிடலாம் டா…” குழந்தைக்கு சொல்வதை போல் எடுத்துக் கூறினான்.

“இன்னும் ரெண்டு நாளா” என்றவள்… “இங்கிருந்து நேரா என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடுங்க அத்தான்” என்றாள்.

விபத்து நேர்ந்ததில் பயந்திருக்கலாமென நினைத்த ராகவ்…

“சரி அம்மு அக்காகிட்டவும் உன் அப்பாகிட்டவும் சொல்லிட்டு நம் வீட்டுக்கே கூட்டிட்டுப் போறேன். நீயும் குணமாகும் வரை அங்க என்னோடவே இரு” என பதிலளிக்க, அவனை தீர்க்கமாகப் பார்த்தவள்,

“கொஞ்ச நாள் உங்களோட இருக்க கேட்கல அத்தான். மொத்தமா உங்களோட வாழ கேட்கிறேன். நான் ஹாஸ்பிட்டலை விட்டு வெளியேறும்போது உங்க மனைவியாகியிருக்கணும். உன் பொண்டாட்டியா என்னை உன் வீட்டிற்கு கூட்டிட்டு போவீயா அத்தான்.” உயிர் உருக்கும் குரலில் கேட்டிருந்தாள்.

தன் உயிரானவள் கேட்டது சந்தோஷமாக இருந்தாலும், இவ்வளவு அவசரமெதற்கு என்று சிந்தித்தவன்,

அவள் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றில் சரியெனக் கூறினான்.

இதுவரை தன்னிடம் எதுவும் கேட்டிடாதவள் இன்று முதல் முறையாக அவனின் மனைவியாக வேண்டுமெனக் கேட்பதை நிறைவேற்றுவதைத் தவிர அவனுக்கும் வேறு வழியிருக்கவில்லை.

இருப்பினும் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறதென்று தெரிந்த பத்மநாபன், ‘அவரின் மகளை எனக்கு மணம் முடிக்க சம்மதம் தெரிவிப்பாரா?’ யோசித்தவன் தன்னவளின் ஆசையை நிறைவேற்றிட தீர்மானித்தான்.

************************

“பிக் அப்… பிக் அப்…”

“கால் அட்டெண்ட் பண்ணுடி ராட்சசி!”

முழுதாக இரண்டு முறை ரிங் ஒலித்து அடங்கியும், அவள் போனை எடுக்காதது கிஷோருக்கு வருத்தமாக இருந்தது.

‘மூன்று வருடமாக அவளை தன் பின்னால் சுற்ற வைத்ததற்கு இப்போ பழி வாங்குகிறாளோ?’ சிந்தித்தவன், ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் இருக்காதென்று தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டான்.

கண் மூடி மெத்தையில் விழுந்தவனின் கண் முன் அன்று அழுத விழிகளுடன் ஹோட்டலிலிருந்து வெளியேறியவளின் கண்ணீர் முகம் தோன்றி இம்சித்தது. இந்த நொடியே அவளை பார்த்திட துடித்த மனதினை அடக்கும் வழியின்றி ஆதர்ஷிற்கு அழைத்திருந்தான்.

எதிர் முனையில் ஆது மொபைலினை எடுத்ததும்,

“மச்சி என் வாழ்க்கையே உன் கையில் தான்டா இருக்கு, அந்த அனாமிகாவை கொஞ்சம் போன் பண்ண சொல்லுடா. ரெண்டு நாளா அவள்கிட்ட இருந்து ஒரு போன், ஒரு மெசேஜ் இல்லடா. அவள் குரல் கூட கேட்காமா என்னவோ மாதிரி இருக்குடா.” மூச்சு விடாது புலம்பி தீர்த்துவிட்டான்.

லேசாக இதழில் புன்னகையை படர விட்ட ஆதர்ஷ்… “மச்சி நீயும் காதலிக்க ஆரம்பிச்சிட்டடா” என்று ஆர்ப்பரித்தான்.

ஆது கத்திய கத்தலில் மொபைலை நகர்த்தி காதினை தேய்த்துவிட்டவன், “டேய் மெதுவா பேசுடா காது வலிக்குது” என்றதோடு, “மச்சி… டேய் மாப்ள… ஆது” என குழைந்தான்.

“ஏதாவது ஒன்னு சொல்லி கூப்பிடுடா. சரி சரி எதுக்கு இப்போ லவ்வர்கிட்ட வழியுற மாதிரி வழியுற?” என்றான் ஆதர்ஷ்.

“அது வந்து டா…”

“அதான் வந்துட்டியே… என்னன்னு சொல்லுடா. எனக்கு நிறைய வேலையிருக்கு” ஆதர்ஷ் கடுப்பாகினான்.

“அப்படியென்ன நைட்டில் உனக்கு வேலை. என்னைவிட உனக்கு உன் வேலை ரொம்ப முக்கியமா போச்சா…” கிஷோர் முதல் முறையாக ஆதுவிடம் குரலுயர்த்தினான்.

“பாருடா காதல் வந்தா கூடவே கோபமும் சேர்ந்து வரும் போல.” கிஷோரை கலாய்த்த ஆது, “என் வேலை பற்றி தெரிந்த பிறகு நீ இப்படி பேசுவியான்னு தெரியல. இருக்கட்டும் இதை விடு நீ எதுக்கு கால் பண்ண அதை சொல்லு?” என விஷியத்திற்கு வந்திருந்தான்.

சற்று தயங்கினாலும் கேட்க நினைத்ததை கிஷோர் ஆதுவிடம் கேட்டு விட்டான்.

“அவள் வீடு எங்க மச்சான் இருக்கு. இப்பவே பார்க்கணும் போல இருக்குடா. விடியும் வரையெல்லாம் காத்திருக்க முடியும் தெரியல மச்சி.” கிஷோரின் முகத்தில் வழிந்த வெட்கத்தை ஆதுவால் பார்க்க முடியாது போனது.

“நீ மஹிக்கு கால் பண்ணி கேளுடா…”, ஆது கூறியது தான் தாமதம், உடனே கிஷோர் “என்னாது” என உச்சப்பட்ச அதிர்ச்சியினை குரலில் காட்டினான்.

கிஷோரின் அதிர்வை சிறிதும் கண்டு கொள்ளாத ஆது…

“உன் ஆளு மஹியோட க்ளோஸ் பிரண்ட் டா” என்றதுதான்,

“அப்போ நான் க்ளோஸ் ஆகிவிடுவேன் டா” எனக் கூறினான் கிஷோர்.

“அவங்க ரெண்டு பேரும் பிரண்ட் அப்படின்னு உனக்கு எப்படித்தெரியும்” என்ற கிஷோரிடம், “உன் ஆளைப்பற்றி என்கிட்ட சொன்னதே மஹி தான். அன்னைக்கு நான் ஹோட்டலிற்கு உன்னை வந்து அழைத்து செல்வதற்கு கொஞ்ச நேரம் முன்னாடி தானே உன் ஆளு நீ பேசியதில் இனி உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்னு போனாள்” எனக் கேட்க, சுரத்தேயில்லாமல் கிஷோர், “ஆமா” என்றான்.

அன்று அவளுடன் மஹியும் வந்திருந்தாள் ஆனால் ஹோட்டலிற்கு உள்ளே அவளுடன் செல்லாமல் பார்க்கிங் எரியாவிலேயே காரினுள் அமர்ந்திருந்தாள். கிஷோரிடம் பேசிவிட்டு வந்தவள்…

“நான் அவனுக்கு செட் ஆக மாட்டேன் மஹிக்கா” எனக் கூறி அழ, கிஷோரின் மீதெழுந்த கோபத்தையெல்லாம் ஆதுவிற்கு கால் செய்து கொட்டித் தீர்த்துவிட்டாள் மஹி.

“உலகத்துல என்னவோ அவன் மட்டும் தான் ரொம்ப நல்லவன்னு சீன் போடுறானா? ஆறு வருஷமா ஒருத்தி அவன் பின்னாடி சுத்துனா பெரிய இவன் அவன்னு நினைப்பா, லவ் பண்ண முடியலன்னாலும், பொம்பள பிள்ளைங்களை அழ வைக்காம இருக்க முடியாதா?” என பொரிந்துத் தள்ளிய மஹி தனது தோழியின் ஆறு வருடக் காதலினை மொத்தமாகக் கொட்டித் தீர்த்து, “உன் பிரண்டுக்கு லவ் பண்ண சொல்லிக்கொடு” எனக்கூறி ஆது பதிலளிப்பதற்கும் இடமளிக்காமல் வைத்துவிட்டாள்.

நடந்ததை கூறிய ஆது, “நீயாச்சு மஹியாச்சு” என்றபடி இணைப்பை துண்டித்து விட்டான்.

“அனாமிகா அந்த ஆம்பள பையன் பிரண்டா? இது தெரியாமப்போச்சே இம்புட்டு நாளா!”

‘ம்க்கும் அவளுடைய பெயரே உனக்குத் தெரியாது இதுல இது தெரிஞ்சிருந்தா மட்டும் என்ன செய்திருப்ப.’ நேரம் காலம் தெரியாமல் அவனின் மனம் அவனை நங்கென்று கொட்டியது.

“இப்போ அந்த ஆம்பள பையன் கிட்ட , லவ் பண்ணினாலும் பண்ணலனாலும் மாட்டிக்கிட்டு அவஸ்தை படப்போறது உறுதி” என்றவன், தன்னவளை காணத்துடித்த மனதை அடக்கிக்கொண்டு கட்டிலில் சுருண்டு படுத்துவிட்டான்.

****************

இரவு நேரக் குளிர் காற்றை மேனியில் தழுவியபடி காலாறத் தோட்டத்தில் நடைபயின்றுக் கொண்டிருந்த ஆதுவைத் தேடி நவீன் வந்திருந்தான்.

“என்னடா, வினு வீட்டிற்கு பேசப்போனீங்களே என்ன நடந்துச்சு?” எனக் கேட்க…

“வினு அப்பாதான் என் பையன் கல்யாணம் யாரும் எதிர்பாராத விதத்தில் நடக்கிறது சுத்தமா பிடிக்கலன்னு கொஞ்சம் அடம்பிடித்தார். பட் டாட் பேசி சரி பண்ணிட்டார். ஃபுல் கிரெடிட் கோஸ் டூ அவர் டாட்” என்ற ஆது,

“மஹி கையால் நான் எவ்வளவு வாங்கப்போறேன் தெரியல” எனக்கூறி சிரிக்க,

“அப்போ அன்னைக்கு எல்லாருக்கும் நல்ல கொண்டாட்டம் தான்” என்று சிறு புன்னகையுடன், “ஆல் தி பெஸ்ட்” தெரிவித்து நவீன் சென்றுவிட்டான்.

ஆதுவிற்கு மஹியை நினைத்து சிறு கலக்கம் இருக்கத்தான் செய்தது. அதை மறைக்க நன்கு கற்றிருந்தான்.

*******************

“டேய் வனகுரங்கே இப்போ சொல்லுவியா மாட்டியாடா?” ஸ்வேதாவின் குரல் அவ்வறை முழுவதும் சத்தமாக எதிரொலித்தது.

“நடு இரவில் ஏண்டி இப்படி கத்துற? காதுக்குள்ள ட்ரெயின் போன மாதிரி இருக்கு” என்ற சரத்,

“நீ மஹியை அவள் குடும்பத்தோடு சேர்த்து வைக்க மறைமுகமா எட்டப்பன் வேலை செய்றது எனக்கு எப்படித் தெரிந்தது தெரியுமா?” என்றான்.

ஸ்வேதா சரத்தின் முகத்தையே ஆர்வமாய் பார்த்திருக்க,

“இப்படி பார்த்தா சொல்ல வந்ததை விட்டுட்டு எனக்கு வேறென்னவோ பண்ணனும் தோணுதுடி குச்சி மிட்டாய்” என்று தன்னை நெருங்கியவனை தள்ளி விட்டவள்,

“முதலில் சொல்லு அப்புறம் மத்தது” என தனது காரியத்தில் கண்ணாக இருந்தாள்.

“நான் மஹிகிட்ட ஆதுவுக்கு மேரேஜ் சொல்லி அழைப்பிதழ் கொடுக்க, நான் அவள் முகத்தில் எதிர்பார்த்திருந்த அதிர்வு உன் முகத்தில் வந்துச்சு. அப்போ லைட்டா டவுட். உடனே மேடம் கிச்சனிற்கு போய் ஆதுக்கு கால் செய்து பேசியதை கேட்டுட்டேன் அப்போதான், மஹிக்கு இரண்டு மூன்று முறை பிரோப்ளேம் கிரியேட் ஆகும் சமயம் அங்கு சரியா ஆது எப்படி வந்தானென்பதும் விளங்குச்சு. நீ என்கிட்ட மறைக்கும் ஒரே விஷயமும் இது தான்னும் தெரிந்தது.

ஏன் ஸ்வே நம்ம மஹிக்கு ஒரு நல்லது நடக்குதுன்னா நான் அதை தடுக்கவா நினைப்பேன்? இதை ஏன் மறைச்ச?” இத்தனை வருஷக் குடும்ப வாழ்வில் தன் காதல் மனைவி தன்னை புரிந்துகொள்ளவில்லையே என்ற வேதனை அவனின் முகத்தில் பிரதிபலித்தது.

“நீ மஹிக்கு தான் எப்பவும் சப்போர்ட் அதான் உன்கிட்ட சொல்லல” என்ற ஸ்வேதா தப்புக்கு தண்டனையாக அவன் வேண்டுவதை கொடுத்தும், அவன் அளிப்பதை பெற்றும் தன்னவனை சமாதானம் செய்தாள்.

***********

பொழுது புலர்ந்ததும் அந்நாளின் முதல் கடமையான, ருத்ரனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற மஹி, ஷ்யாமையும் அழைத்துக்கொண்டு ஐஜி அலுவலகம் வந்து சேர்ந்தாள்.

ஷியாம் தாங்கள் ஐஜி அலுவலகம் வந்திருப்பதை குறுந்தகவல் மூலம் ஆதுவிற்கு தெரிவித்தான்.

ஐஜி தான் மஹியை வரவழைத்திருப்பார், அது எதற்காக இருக்குமென்றும் யூகித்தவன் மஹியின் அழைப்பினை எதிர்பார்த்து காத்திருக்கத் தொடங்கினான்.

ஐஜியின் அறைக்குள் அவரின் அனுமதியுடன் உள் நுழைய, ஷியாமை அவர் யாரென பார்வையாலே வினவ..

“என் பிரண்ட்” என பதிலளித்தாள் மஹி. அவள் பிரண்ட் என்ற வார்த்தைக்கு அளித்த அழுத்தமே இவன் முன்பு மறைக்க எதுவமில்லை என்ற பொருளை சொல்லாமல் சொல்லியது.

“இந்த கேஸ் அல்ரெடி சிபிசிஐடி இன்வெஸ்டிகேஷன் போயிட்டு இருக்குமா.” எவ்வித ஒளிவு மறைவுமின்றி கூறியவர்,

“மூன்று மாதங்களுக்கு முன்பே கிரைம் பிராஞ்சுக்கு இந்த வழக்கு போயிருக்கு. இந்த கேஸ் யார் டீல் பண்றாங்கன்னு ரகசியமா வச்சிருக்காங்க” என்றார்.

இதற்குமேல் வேறொன்றும் எனக்குத் தெரியாது என்ற பொருளை அவரின் பார்வையாலே புரிந்து கொண்டவள்,

“நெருங்கிய உறவுகளைத் தவிர ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்கினை மற்றவர்கள் யாராலும் ரீ ஓபன் செய்ய முடியாதே!” என்று தன் கேள்வியை முன் வைத்தாள்.

“நிச்சயமா உன் அப்பாவுக்கு நெருங்கிய உறவுள்ள ஒருத்தர் தான் இக்கேசினை மீண்டும் விசாரணை நடத்தக்கோரி புகார் அளித்திருக்க வேண்டும்.” ஐஜியிடமிருந்து விடைபெற்று காரிலேறிய மஹி ஐந்து நிமிடங்கள் கடந்த நிலையில் ஆதுவிற்கு கால் செய்தாள்.

*******************

நேற்று மாலை அவ்வளவு அவசரமாக தன்னை இங்கிருந்து அனுப்பியவன், இன்று ஏன் இவ்வளவு சீக்கிரம் இங்கு வரவழைத்திருக்கின்றான். பத்மநாபன் யோசனையோடு கௌசியின் பெட்டிற்கு அருகில் அமர்ந்திருந்தார்.

அம்சா தனது மகளுக்கு உணவு ஊட்டிக்கொண்டிருக்க, ராகவ் வீல் சேரினை தள்ளியபடி.. தனது தாயினை அழைத்து வந்தான்.

தனது பேத்தியின் நலம் விசாரித்தவர், தான் கொண்டு வந்திருந்த சிறு பையிலிருந்து தங்களது பரம்பரை தாலியை எடுத்து ராகவின் கையில் கொடுத்தார்.

“கௌசி… கௌசல்யா பத்மநாபனிலிருந்து, கௌசல்யா ராகவாகப்போறாள்” எனக் கூறியவன், பத்மநாபனிற்கு அவன் சொல்லியது புரிந்து ஏதோ கூற வருவதற்குள் தன்னவளின் கழுத்தில் தாலியை அணிவித்திருந்தான்.

அம்சாவிற்கு இது எதிர்பாராத ஒன்றுதான் இருப்பினும் இந்நேரத்தில் தான் கூறுவது தடங்கலாக அமையக் கூடாதென்று இருவரையும் மனமார வாழ்த்தினார்.

பத்மநாபனுக்கு கோபம் எல்லை மீறியது. உன்னை அழிப்பதற்கு நான் திட்டம் போட்டால், எனக்கே நீ மருமகனாக வந்து சவால் விடுகின்றாயா? எண்ணி ஒரு வாரத்தில் உன் கதையை முடித்துவிட்டு, என் மகளுக்கு ஊர் மெச்ச திருமணம் நடத்தி வைக்கின்றேனென்று உள்ளுக்குள் கொதித்தார்.

தந்தையின் கொதிப்பினை மகள் உணர்ந்து கொண்டாலோ,

“என்னுடைய வற்புறுத்தலுக்காகத் தான் அத்தான் என் கழுத்தில் இந்த நிலையில் தாலி கட்டினாங்க” என அவசரமாகக் கூறினாள்.

“நடந்ததில் எனக்கும் மகிழ்ச்சி” என்று வெளியில் சிரித்து வைத்தவர் உள்ளுக்குள் ராகவை தீர்த்துக் கட்டுவதற்கான திட்டத்தை தீட்டினார்.

இரண்டு நாட்களாகவே தன்னை யாரோ கண் காணிப்பதை போன்று உணர்ந்த பத்மநாபன், தன் அரசியல் பலத்தை மீறி யார் என்ன செய்துவிட முடியுமென்ற இறுமாப்புடன் அதனை அசட்டை செய்தார்.

“அந்த வக்கீல் பொண்ணு என்னப்பா சொல்றாள்?” மஹியைப் பற்றி பத்மநாபன் கேட்ட பிறகே அவளின் நினைவு வந்த ராகவ், “உங்களை காப்பாற்றுவது என் கடமை” எனக்கூறி “தப்பு செய்யலன்னா நீங்க ஏன் மாமா அவளுக்கு பயப்படனும்” என்றான் சந்தேகத்துடன்.

“பயமில்லை மாப்பிள்ளை, நம்மை எதிர்த்து எவனும் நிற்க கூடாதென்கிற முன்னெச்சரிக்கை” என சொல்லி சமாளித்தவர் கட்சியில் கூட்டமிருப்பதாக சென்று விட்டார்.

தனது தாயின் உடல்நிலை கருதி அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்த ராகவ்,

“நீயும் வீட்டுக்கு அம்மாவோட போயிட்டு ஈவினிங் வா” என்று சொல்ல, தம்பி பேச்சு தட்டாது அந்த சகோதரியும் சரியென்றார்.

இருவரையும் காரில் பத்திரமாக அனுப்பி வைத்தவன், கௌசியிருந்த அறைக்குள் நுழைந்து அவளருகில் அமர்ந்து அவளின் கண்களையே சந்தித்திருந்தான்.

“இப்போ சொல்லு அம்மு இந்த அவசரக் கல்யாணத்திற்கு பின்னிருக்கும் காரணத்தை” என்றான்.

இப்படி நேரடியாக, அதிரடியாக கேட்பானென்று எதிர்பார்த்திடாத கௌசி என்ன சொல்வதெனத் தெரியாமல் திருத்திருத்தாள்.

*************************

கிஷோர் எவ்வளவோ முயன்றும் அவளிடம் பேசமுடியவில்லை. நேரமாக ஆக அவன் தன் கட்டுப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருந்தான். வேலையில் கவனமில்லாது தப்பு தப்பாக அனைத்தையும் செய்தான். மாலை தங்களது ஹோட்டலில் நடைபெறவிருக்கும் பெரிய அளவிலான இவெண்ட் ஒன்றிற்கு அலங்காரத்திற்கான மொத்த செலவின் டீடெயிலினை வினு கேட்டிருக்க… எவ்வளவு சரி பார்த்தும் கணக்கு டேலி ஆகாது விழி பிதுங்கினான் கிஷோர்.

“என்னை போட்டு பாடா படுத்துறாளே… ராட்சசி” என்று முணகியவன், அவளிடமிருந்து ஏதேனும் மெசேஜ் வருகிறதாவென நொடிக்கு ஒருமுறை தனது மொபைலினை எடுத்து பார்த்துக்கொண்டே இருந்தான்.

கிஷோரின் நடவடிக்கைகளை கண்காணித்த வினு அவனுக்குத் தெரியாமல் யாருக்கோ கால் செய்து பேசிவிட்டு நிமிடத்தில் கட் செய்ய, கிஷோரின் மொபைலிற்கு அவளிடமிருந்து தகவல் வந்திருந்தது.

“இன்னும் அரை மணி நேரத்தில் உன் ஹோட்டலிற்கு முன்பு நானிருப்பேன்.. நீ வந்துடு.”

அதனை படித்ததும் முகமெல்லாம் வசீகரிக்க.. வினுவிடம் “இந்த வேலையை நீயே பார்த்துக்கோ மச்சி” என்றவன்,

ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்ட தங்களின் தனி அறைக்கு ஓடியவன் அன்று இரண்டாவதாக ஒரு குளியலை போட்டுவிட்டு, பிஸ்தா கிரீனில் கருப்பு நிறத்தில் பெரிய பெரிய கட்டம் போட்ட செக்டு ஷர்ட் மற்றும் அதற்கு மேட்சாக, அதே டிசைனில் வெண்மை நிற பேண்ட் அணிந்து, என்றும் படிய வாறிவிடும் சிகையை கைகளால் கோதி விட்டு கண்ணுக்கு கூலர்ஸ் அணிந்து ஆணழகனாய் அறையை விட்டு வெளியில் வந்தான்.

வினுவிடம் சென்றவன், அவனின் ஆச்சர்யப் பார்வையை கவனத்தில் கொள்ளாது, “மச்சி உன் கார் கீ கொடு” என அவனின் அனுமதியின்றியே மேசை மீதிருந்ததை எடுத்துக்கொண்டு திரும்பி நடந்தவனை வினுவின் குரல் தடை செய்தது.

“டேய் மச்சி…”

அவன் ஒரு பக்கமாக நின்று தலையை மட்டும் திருப்பிப் பார்க்க,

“ஒரே ஒரு ஸ்டில் மச்சி”, என்றவன், கிஷோரை புகைப்படம் எடுத்துக்கொண்டான்.

“இதெல்லாம் பார்க்க கிடைப்பது ரொம்ப அரிதுடா மச்சான். அதான்,” சிரியாமல் கூறிய அவனின் வார்த்தைகளில் அடிக்க போன கிஷோரை இடையிட்டது அவளிடமிருந்து வந்த அழைப்பு.

“உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்” என்றவன், காலினை அட்டெண்ட் செய்து, “இதோ வெளியில் தான் வந்துட்டிருக்கேன்” எனக்கூறி கட் செய்தான்.

வினுவிடம் கண்களினால் விடை பெற்றவன், அவன் கூறிய “செம அழகா இருக்க மச்சி” என்ற வார்த்தையால் முகத்தில் தோன்றிய நாணத்தை மறைத்தவனாய் வெளியேறினான்.

ஹோட்டல் லானில் கிஷோருக்காகக் காத்திருந்தவள், ஒரு பக்க பேண்ட் பாக்கெட்டில் கை விட்டபடி.. நெற்றியில் விழும் கேசத்தை மற்றொரு கையால் ஒத்துக்கியபடி ஸ்டைலாக நடந்து வருபவனை விழிகள் தெறித்து வெளியே விழுந்து விடுமளவிற்கு அதிசயித்து பார்த்தாள். அவனின் இத்தோற்றம் அவளுக்கு புதிது. எப்போதும் பார்மலாக இருப்பவன் இன்று கேசுவல் லுக்கில் படு ஸ்மார்ட்டாகத் தெரிந்தான்.

அவளின் ரசனையான பார்வையில் உள்ளுக்குள் குதியாட்டம் போட்டவன், வெளியில் ஒன்றுமில்லாததைப் போன்று அவளை நெருங்கி வந்தான்.

அருகில் வந்து அவன் நின்றது கூட உணராது அவனின் முகத்திலேயே லயித்திருந்தவள், அவனின் சொடக்கு ஒலியில் நிகழ்காலம் திரும்பினாள்.

அவனை நேருக்கு நேராக பார்க்க லஜ்ஜையுற்றவள், போகலாம் என்ற வார்த்தையோடு வெளியில் சென்றாள். அவளை பின் தொடர்ந்தவன், அவள் ஸ்கூட்டியில் அமர்ந்ததும் அதிர்வுடன் நோக்கினான்.

என்ன என்றவளிடம்… “காரில் போகலாமே” என்க, அவள் பார்த்த பார்வையில் வாயினை மூடிக்கொண்டான். பார்க்கிங் காவலாளியிடம் வினுவிடம் கொடுத்துவிடுமாறு அவனின் கார் கீயினை அளித்தவன், ஒன்றும் பேசாது அவளின் பின்புறம் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தான்.

நார்மல் ஸ்பீடில் அவள் வண்டியினை செலுத்திக்கொண்டிருக்க, அடிக்கின்ற வெயிலில் சென்னையின் தார் சாலை ஆழகை ரசித்தவாறு இருந்தான் கிஷோர்.

பின்னலிடப்படாத அவளின் கூந்தல் காற்றில் கிஷோரின் முகத்தில் வண்ணக்கோலமிட, அதனை ஒதுக்கிட மனமின்றி.. அவளின் கூந்தல் வாசத்தினை ஆழ்ந்து சுவாசித்தான்.

ஓரிடத்தில் சட்டென்று அவள் வண்டியினை பிரேக் போட, அதனை எதிர்பாராதவன் அவளின் முதுகோடு உரசி விலகினான். அந்த ஒரு நொடி தீண்டல் மின்சாரத்தை அவனுள் பாய்த்தது.

கண் மூடி ஆழ்ந்து அனுபவித்தவனை.. “என்ன பகலிலே கனவா? இறங்கு” என்றால். அவளின் குரலில் பட்டென்று கண்களை திறந்து கீழிறங்கினான்.

வண்டியை ஸ்டேண்ட் செய்தவள்.. சாலையோரம் விற்றுக்கொண்டிருந்த பஞ்சு மிட்டாய் கடையருகில் சென்றாள். இவள் எங்கு செல்கிறாளென்று அவளையே பார்த்திருந்தவனிடம் கடையிலிருந்தபடி உனக்கும் வேண்டுமா என சைகையால் கேட்க கிஷோர் வேண்டாமென்று தலையசைத்தான்.

கிஷோர் வேண்டாமென்றதும் தனக்கு மட்டும், குச்சியில் சுற்றப்பட்ட பெரிய பஞ்சு மிட்டாய் ஒன்றை வாங்கியவள் அதனை சுவைத்தபடி அவனருகில் வந்தாள்.

அவள் ருசித்து சாப்பிட, இவனோ அவளை ரசித்திருந்தான்.

“என்ன அப்படி பார்த்துக்கிட்டே இருக்க, எனக்கு வயிறு வலி வரும். சீக்கிரம் வண்டியை எடு” என்றாள்.

அவள் சொல்படி வண்டியை ஸ்டார்ட் செய்தவன், பின்னால் அவள் அமர்ந்ததும் எங்கு போக வேண்டுமென்க…

“இப்படியே நேரா போய்கிட்டே இரு.. எங்காவது பெரிய கோயிலா வந்ததும் நிறுத்து” என்றாள்.

“காபி ஷாப் ஆர் மால் போகலாமே. கோவிலுக்கு எதுக்கு?” எனக் கேட்டவனுக்கு அவள் கூறிய பதிலில் தலை சுற்றியது.

error: Content is protected !!
Scroll to Top