ரவுடி பேபி 18

அத்தியாயம் 18

“ஆதர்ஷ், நில்லு…”

நாதனின் குரல் சத்தமாக ஒலித்தது.

தனது நடையை நிறுத்தி மெல்ல திரும்பியவன்,
“என்ன தாத்தா?” என்று அமைதியாக வினவினான்.

“என்ன தான் நினைச்சிட்டு இருக்க? கல்யாணம் உனக்குத்தான்… எனக்கென்ற மாதிரி நான் முன்னாடி நின்னு எல்லா வேலையும் செஞ்சிட்டு இருக்கேன். நீ என்ன தான் செய்ற?”

“என்னது, உங்களுக்கு கல்யாணமா…?”

நாதனின் சங்கடமான வினாவில் போலியாக அதிர்ந்தவன்,
“அய்யோ அய்யோ! இந்த வயதில் போய் பாட்டிக்கு துரோகம் செய்றீங்களே… இது நியாயமா? இது அடுக்குமா…?”

வராத கண்ணீரை தன் கண்களில் துடைத்துக் கொண்டான்.

அவர்கள் இருவரின் சம்பாஷனையையும் கேட்டுக்கொண்டே வந்த பவளம்,
“யாருடா அது கிழவனுக்கு போயிட்டு பொண்ணு பார்க்குறது?” என்றார், தன் கணவனின் மீது பார்வை பதித்தவராய்.

“என்னடி சைடு கேப்பில் என்னை ‘கிழவன்’ன்னு சொல்லிட்ட?”

நாதன் அதிர்ச்சியாக வினவ,
“கொள்ளு பேரன், பேத்தி எடுத்து எட்டு வருஷமாச்சு…” என்று பவளம் அவரின் காலை வாரினார்.

ஆதர்ஷ் சத்தமாக சிரிக்க,
“என்னை கிண்டல் செய்வது உனக்கு குளுகுளுன்னு இருக்குமே?” என்று கேட்ட நாதன்,
“திருமணத்தன்றாவது எங்கும் வேலைன்னு வெளியே போயிட மாட்டாயே?” என்று தன் காரியத்தில் கண்ணாகக் கேட்டார்.

“நிச்சயமில்லை…” என்ற ஆதர்ஷ்,
“திருமணம் முடிந்த அடுத்த நிமிஷமே எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. அதற்காகவே இப்போ சுற்றிக்கொண்டிருக்கிறேன்,” என்றான்.

“அப்படி என்ன வேலையோ…” என்று சலிப்பாக கூறிய பவளம், தனது கணவனை அழைத்துக்கொண்டு தோட்டத்துப் பக்கம் சென்றுவிட்டார்.

இந்த வயதிலும் அவர்களுக்கிடையேயான அந்யோன்யம் ஆதர்ஷை பிரமிக்க வைத்தது.
இவர்களைப்போல் தானும் மஹியுடன் வாழ வேண்டுமென்று அவனின் காதல் மனம் ஆசை கொண்டது.

************

“லவ்வர்ஸ் கோவிலுக்கெல்லாம் போவாங்களா?”

கிஷோர் கேட்ட கேள்வியில், தின்றுகொண்டிருந்த பஞ்சுமிட்டாயை அப்படியே வாயில் வைத்தபடி அவனை கொலைவெறியில் முறைத்தவள்,

“லவ்வர்ஸ் போவாங்களா மாட்டாங்களா எனக்குத் தெரியாது. ஆனா, நாமொன்னும் லவ்வர்ஸ் கிடையாது… சோ, தாராளமா போகலாம்,” என்றவள் மீண்டும் பஞ்சுமிட்டாயை சுவைக்கத் தொடங்கினாள்.

அவன் வண்டியை செலுத்தாமல் அப்படியே நிற்க,
“என்ன?” என்றவளிடம்,

“எதுக்கு கோயிலுக்கு?” என்று வினவினான்.

“உனக்கு திருட்டுத்தனமா தாலி கட்டத்தான்.”

அவள் கூறிய பதிலில் அதிர்ந்து தலை சுற்றியவன்,
“கேர்ள்ஸ்க்குத்தானே தாலி கட்டுவாங்க… எனக்கு எப்படி நீ தாலி கட்ட முடியும்?”

அவள் வீசிய அனல் பார்வையில் அமைதியாக வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

சிறிது தூரத்தில் ஒரு கோவில் வந்ததும், அவள் சொல்லியபடி நிறுத்தியவன்,
“நீ போய் கும்பிட்டு வா…” என்று சொல்லி, தான் வண்டியிலே கைக்கட்டி சாய்ந்து நின்றபடி வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.

சில வினாடிகள் இடுப்பில் கை வைத்தபடி அவனை முறைத்தவள், கைபிடித்து இழுத்து கோவிலுக்குள் சென்றாள்.

மதிய வேளை என்பதால் கோவிலில் அதிக கூட்டமில்லை.
அவள் கண்மூடி மனதார இறைவனை வணங்கிவிட்டு, கோவிலை மூன்று முறை சுற்றி வரும் வரை, அவளையே சைட் அடித்தபடி நின்றிருந்தான் கிஷோர்.

“வா… அங்க உட்கார்ந்து பேசலாம்…” என்றவள் ஒரு தூணருகில் அமர, சற்று இடைவெளி விட்டு கிஷோரும் அமர்ந்தான்.

“முகத்தை காட்டு…”

கோவிலை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த கிஷோர் திரும்ப, அவன் நெற்றியில் வழிந்த கேசத்தை ஒதுக்கி, சட்டென்று திருநீற்றை பூசிவிட்டாள்.

அவன் இமைக்காமல் அவளையே பார்த்திருக்க, சொடக்கிட்டு அவனை நிகழ்காலத்துக்கு மீட்டாள்.

கையோடு வாங்கி வந்திருந்த பிரசாதத்தில் ஒரு வாய் அவனுக்கு ஊட்டியவள், தன்னை மறந்து அவன் வாய்திறந்த வேகத்திலேயே தொண்ணையிலிருந்த பொங்கலை முழுவதும் அவனுக்கு ஊட்டி முடித்தாள். கை கழுவுவதற்காக எழுந்து செல்லும் அவளை, கண்களில் துளிர்த்த கண்ணீரோடு கிஷோர் பார்த்துக் கொண்டிருந்தான்.

இதுவரை யாரும் அவனுக்கு உணவு ஊட்டிவிட்டதே இல்லை. பல நாள் ஏங்கிய ஒன்று இன்று நடந்ததென அகம் மகிழ்ந்தான். அவளின் சிறு செயலில் தாய்மையை உணர்ந்தவன், அவள் வந்து அமர்ந்ததும் அவளின் முகத்தை நேருக்கு நேர் பார்த்து,
“நாம மேரேஜ் செய்துக்கலாமா?” என்றான்.

“வாழ்நாள் முழுவதும் உன் கையால் சாப்பிடணும் போலிருக்கு…” என்றான்.

அவன் கண்களில் வழிந்த காதலிலும், அவன் வார்த்தைகளின் உண்மையையும் உணர்ந்தவள், கிடைக்கவே கிடைக்காது என நினைத்த தன் காதல் ஈடேறிய தருணத்தை ஆழ்ந்து அனுபவித்தாள்.

உள்ளுக்குள் பல கிரகங்கள் தாண்டி பறந்தவள், வெளியில் சோகமான முகத்துடன்,
“சாரி கிஷோர்… நான் பல நாள் கேட்க ஏங்கிய வார்த்தைகள் நீ சொன்னதில் மகிழ்வதா எனக்குத் தெரியல…” என்றாள்.

“ஏன்?”

“எனக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க…”

அலுங்காமல் குலுங்காமல் அவன் தலையில் இடியை இறக்கினாள்.

இரண்டாவது முறையாக அவனின் இதயம் காதலால் உடைந்து நொறுங்கியது.

“நீ… நீ… பொய்தானே சொல்ற…?”

அவள் கூறியதை நம்பமாட்டாதவனாய் கேட்க, அவள் தன் கைப்பையிலிருந்து தன்னுடைய மேரேஜ் இன்விடேஷனை எடுத்து அவன் முன் நீட்டினாள்.

சற்று நேரத்திற்கு முன் துளிர்த்த ஆனந்தக் கண்ணீர் வறண்டு, வலி நிரம்பிய உப்புநீர் அவன் கன்னத்தில் சரேலென்று வழிந்தது.

அதனை கண்டு அவள் மனம் துடித்தாலும்… இப்போது தானொன்றும் செய்ய முடியாதென அமைதியாக இருந்தாள்.

“மறக்காம கல்யாணத்திற்கு வந்துடுங்க…” என்றவள், அவன் கண்ணீர் நிறைந்த விழிகளை காண பிடிக்காமல் கிளம்பிவிட்டாள்.

கடவுள் மீது நம்பிக்கையே இல்லாதவன், தன் காதலுக்காகத்தான் இருமுறையும் கோவிலுக்குள் வந்திருக்கின்றான்.
அவனின் இரண்டு காதலுமே மரித்த இடம் கோவில் தான்.

கோபமாக இறைவனின் முன் சென்றவன்,
“இப்போ உனக்கு சந்தோஷமா…? ஒவ்வொரு முறையும் எனக்குள் ஆசையை விதைத்து, சருகாக்குவதே உன் வேலையாகிவிட்டதல்லவா…?”

என்று சொன்னவன், ஆட்டோ பிடித்து தன் வீடு வந்து சேர்ந்தான்.

இப்போது தோன்றும் வலி, முதல் முறையை விட அதிகமாக இருந்தது.
அந்த வலி அவனுக்கு உணர்த்தியது, தனது ஆழ்மனதின் அழுத்தமான காதல் இதுதானென்று.

முதல் தோல்வியின் போது கட்டுப்படுத்த முடிந்த கண்ணீரை, இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை.
இதயத்தை வேரோடு பிடுங்குவதைப் போலிருந்தது.
இந்த நொடியே உயிர் போனாலும் பரவாயில்லையெனத் தோன்றியது.

அழகாக கவர் செய்யப்பட்டிருந்த இன்விடேஷனையே பார்த்திருந்தவன், அதனை டீபாயின் மீது வீசிவிட்டு தன் படுக்கையில் கவிழ்ந்தான்.

ஆண்மகன் என்பதையும் மறந்து, அழுகையில் கரைந்தவன், தன்னையும் அறியாமல் அதிகாலை வேளையில் உறங்கிப்போனான்.

***************

மஹியின் அழைப்பை எதிர்பார்த்து காத்திருந்த ஆதர்ஷ், அவளிடமிருந்து அழைப்பு வந்ததும் முதல் ரிங்கிலேயே அட்டெண்ட் செய்திருந்தான்.

“நீ தான் அப்பாவுடைய கேஸை ரீ-ஓபன் செய்தியா?”

தோரணையான குரலில் கேட்டிருந்தாள்.

இதுக்கொன்றும் குறைச்சலில்லை என மனதோடு கூறியவன்… வெளியில் “ஆமா” என்றான்.

“யாரைக்கேட்டு நீ இதில் தலையிட்ட?”

“நான் யாரை கேட்க வேண்டும்?”

அவளுக்கு சற்றும் குறையாத சத்தமான குரலில் கேட்டிருந்தான்.

“உனக்கு என்ன உரிமை இருக்கிறது?”

அடுத்ததாக மஹி கேட்ட கேள்வியில் அவனின் காதல் மனம் அடிபட்டாலும், அதிக அழுத்தத்துடனும் உறுதியுடனும்,
“நான் உன் கணவன் என்ற உரிமையில்…” எனக் கூறினான்.

ஆதர்ஷின் பதிலில் பற்களை கடித்தவள்,
“ஆமா… அதான் வேறொருத்தியை கல்யாணம் செய்துக்க தயாரானீங்களோ…?” என்றாள் படு நக்கலாக.

மஹியின் நக்கலில் அவளின் காதலைக் கண்டுகொண்டவன், இதழோரம் துடித்த சிரிப்பை அடக்கியவனாய்,
“என் மனைவியின் நீண்ட நாள் லட்சியத்தை நிறைவேற்றும் பொறுப்பு ஒரு கணவனா எனக்கு இருக்கு… சோ, சில்லியா எந்தவொரு கேள்வியும் கேட்காம ஆளை விடு…”

என்றவன் இணைப்பை துண்டித்துவிட்டான்.

கோபத்தில் கார் கண்ணாடியில் குத்தியவள்,
“இந்த கேஸை டீல் செய்யும் ஆபிசர் யாரென்று கண்டுபிடி…” என்று ஷியாமிடம் கூறினாள்.

மஹி சொல்லியதில் அதிர்ந்து, தொண்டைக்குழியில் எச்சிலை கூட்டி விழுங்கியவன்,
“அது அவ்வளவு எளிதல்ல மஹி… இருந்தாலும் உனக்காக முயற்சி செய்றேன்…” என்றான்.

ஷியாமிடம் முதல் நாள் ஆதர்ஷ் பேசிய போதே அவனுள் சிறு சந்தேகம் முளைத்தது, ஆதர்ஷ் யாரென்று… இன்று அந்த கேஸை ரீ-ஓபன் செய்திருப்பது ஆதர்ஷ் என்பது தெரிந்ததும், தன் கணிப்பு ஒருவேளை உண்மையாக இருக்குமோ என நினைத்தான்.

அதனால் தான், மஹி அந்த ஆபிசரை கண்டுபிடி என்றதும் அவன் தயங்கினான்.

*****************

“இப்போ சொல்லு அம்மு… இந்த அவசரக் கல்யாணத்திற்கு பின்னிருக்கும் காரணம் என்ன?”

ராகவ் கேட்ட கேள்வியில், என்ன கூறுவது எனத் தெரியாமல் விழித்தவள், தடுமாறிய நாவை சரிசெய்து ஏதோ கூற வருகையில்…

“என்னிடம் நீ உண்மையை மட்டும் தான் சொல்வன்னு நினைக்கிறேன்…” என்றான்.

அவன் சொன்ன அந்த வார்த்தைகளில்,
‘பொய் எனக்குத் தேவையில்லை’ என்ற பொருள் தெளிவாக மறைந்திருந்தது.

“நீ நூறு வருஷத்துக்கு நல்லா இருக்கணும், அத்தான்…
நீ இருக்கும் வரை நானும் உன்னோட சந்தோஷமா வாழணும்…”

தான் ஒன்று கேட்க, இவள் வேறொன்றை கூறுகிறாளேயென நினைத்த ராகவ்,
“நீ சொல்வதற்கும்… நம் கல்யாணம் நடந்ததற்கும் என்ன சம்பந்தம்?” எனக் கேட்டிருந்தான்.

அவளை நேருக்கு நேர் சந்தித்த அவனின் அழுத்தமான பார்வையே, ‘எனக்கு நேரடியான பதில் வேண்டும்’ எனக் கூறியது.
அதை உணர்ந்தவள், உள்ளதை உள்ளபடி சொல்லத் தொடங்கினாள்.

நேற்று காலை வேளையில், தனது அறை பால்கனியில் நின்றபடி தன்னுடைய நீண்ட கார்குழலை உலர்த்திக்கொண்டிருந்தாள் கௌசல்யா.

அப்போது, தனது தந்தை பத்மநாபன் தோட்டத்தில் யாரோ ஒரு முரட்டு தடியனிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டவளின் மனதில், அந்த தடியனின் முகம் நன்கு பதிந்தது.
இருவரின் நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள்.

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது கேட்கவில்லை என்றாலும்…பத்மநாபனின் முகத்தில் தெரிந்த ரௌத்திரமும், தடியனின் முகத்தில் இருந்த உறுதியும் ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்பதைக் கூறியது.

கத்தைப் பணத்தை பத்மநாபன் தடியனின் கையில் திணிக்க, ஏதோ அரசியல் காரியமாக இருக்கும் என புறந்தள்ளியவள், தன் வேலையில் மூழ்கிப்போனாள்.
ஆனால், அந்த நிகழ்வை மறந்தபோதும் தடியனின் முகத்தை மனதிலிருந்து அகற்ற முடியவில்லை.

மாலை, ராகவ் வீட்டிலிருந்து ராகவின் காரில் புறப்பட்ட கௌசி, வெளியைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது டிரைவரின் திடீர் பேச்சில் அவன் பக்கம் கவனம் திரும்பியது.

“நான் இங்க பதினைந்து வருஷமா வேலை பார்க்கிறேன், ம்மா… ஆனா, தம்பி முகத்தில் இப்படி ஒரு சந்தோஷத்தை இன்றைக்குத்தான் பார்க்கிறேன். அதுக்கு காரணம் நீ தாம்மா… நீங்களும் தம்பியும் ரொம்ப நாள் இப்படி சந்தோஷமா வாழணும்…”

என்று மனதார வாழ்த்தியவர், சாலையில் கண்களை பதித்தபடி இருந்தார்.

அந்த நேரத்தில், தங்களை நோக்கி அதிவேகத்தில் ஒரு லாரி வருவதைக் கண்டு கொண்டார்.

இன்னும் சில நொடிகளில் அந்த லாரி காரின் மீது மோதப் போகிறது என்பதை உணர்ந்த டிரைவர்,
காரின் லாக்கை ரிலீஸ் செய்து கௌசியை வெளியே தள்ளுவதற்கும், லாரி காரில் மோதுவதற்கும் நேரம் சரியாகி விட்டது.

அவர் தள்ளிய வேகத்தில் சாலையில் குப்புற விழுந்த கௌசியின் பார்வையில், லாரி ஓட்டியவனின் முகம் தெளிவாக பதிந்தது.

மயக்கத்தில் சுயநினைவை இழக்கும் தருணத்தில், அவள் நினைவில் நின்ற ஒரே உண்மை.
காலை தன் தந்தையிடம் பணம் வாங்கிய தடியனும், இந்த லாரியை ஓட்டியவனும் ஒருவனே…

இந்த விபத்திற்கு காரணம் தன் தந்தை தான்… இது ராகவிற்காக வைத்த குறி.

அந்த நிலையிலும் அதை உணர்ந்தாள்.

அனைத்தையும் கூறியவள்,
“அப்பா உன்னை கொலை செய்ய ஏன் முயற்சிக்கிறார், அத்தான்? அவர் உன்மேல் கொண்ட பாசமெல்லாம் வேஷமா…?” என்றாள்.

“அதை நான் கண்டுபிடித்துக்கிறேன்… நீ அமைதியா ஓய்வெடு…” என்ற ராகவ்,
“எங்க உன் அப்பா என்னை மீண்டும் கொலை செய்ய முயற்சி செய்வாரோ பயந்து, அவசரமா என்னைத் தாலி கட்ட வைத்துட்ட சரியா…” என்றான்.

அதற்கு ஆமென்பதைப்போல் கௌசி மௌனமாக தலை குனிந்தாள்.

“பொண்ணோட தாலியை காப்பாற்றும் அளவிற்கு உன் அப்பா நல்லவர்னு நினைச்சியா, கௌசி…?” என்றான்.

“உன் அப்பா அரசியலில் எவ்வளவு பெரிய கிரிமினல் எனக்குத் தெரியும்… என்னை கொன்றுவிட்டு உனக்கு வேறு கல்யாணம் பண்ண நினைப்பாரே தவிர… என்னை கொலை செய்ய நினைத்ததை மட்டும் விட்டுவிட மாட்டார்…”

என்று உறுதியாகக் கூறினான்.

“அத்தான்…”

அதிர்ந்து அழைத்தவளை, தன் பார்வையால் சமன் செய்தவன், அவளுக்கு வலி ஏற்படாதவாறு தனது உணர்வுகளை உள்ளுக்குள் புதைத்துக்கொண்டான்.

இருவருக்கும் மதிய உணவு கொண்டு வந்த அம்சா, அனைத்தையும் கேட்டு விட்டார்.
தான் வந்த தடமின்றி திரும்பிச் சென்றுவிட்டார்.

***************

“கொஞ்சம் நில்லு, மஹி… உன்னிடம் பேசணும்…”

என்ற சரத்தை அர்த்தமாய் பார்த்தவள்,
“சொல்லுங்கண்ணா…” என்றவாறு அவனருகில் அமர்ந்தாள்.

“உண்மையிலே உனக்கு வருத்தமில்லையா, மஹி…?”

“எதற்கு…?”

“அவளுக்கெப்படி அதெல்லாம் இருக்கும்? பொண்ணா லட்சணமா இருந்தா, தனக்காக ஒருத்தன் காத்திருக்கிறானேன்னு எப்பவோ அவனைத் தேடி போயிருப்பாள்…
மனசுல காதல் மட்டும் இருந்தா என்ன பயன்? அவன் மேல கொஞ்சம் கூட அக்கறை இல்லையே…”

ஸ்வேதா தன் கோபத்தை வார்த்தைகளால் கொட்டி தீர்த்து அங்கிருந்து சென்றுவிட்டாள்.

“இப்போ அண்ணி எதுக்கு இவ்வளவு கோவமா பேசிட்டு போறாங்க?” என்றாள் மஹிரா, ஒன்றும் தெரியாதவளாய்.

“உண்மையிலே உனக்குத் தெரியலையா, மஹி…? இன்னும் இரண்டு நாள்ல ஆதர்ஷ்க்கு கல்யாணம்… உனக்குள் துளி வருத்தம் கூட இல்லையே… ஏன் ஒரு சிறு கலக்கம்கூட இல்லையே…? உனக்கு ஆதர்ஷுடன் வாழ விருப்பமில்லையா…?”

சரத் கேட்டான், பயத்தோடு.

“எனக்கு விஹு காதல் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது…”

என்றவள், அவன் மேலும் பேசுவதற்குள் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

மஹி அவனைப் பார்த்த முதல் நாளிலிருந்து இன்று வரை, ஒரு புரியாத புதிர்.
“எல்லாம் ஆதர்ஷ் பார்த்துக்குவான்…” என தன்னை சமாதானப்படுத்திக்கொண்டான் சரத்.

*************

“வினு… உன் பிரண்ட் ஆதர்ஷின் தந்தை வந்திருந்தார். அவர் சொல்லியதில் எங்களுக்கு உடன்பாடில்லையென்றாலும், ஆதர்ஷின் வாழ்க்கை இதனால் நேராகும் என்பதால் சரியென ஒப்புக்கொண்டேன்…”

வினுவின் தந்தை சத்யன், தான் வந்ததை வினுவிடம் சொல்ல வேண்டாமென்று கேட்டுக் கொண்டதால், விஷ்ணு வந்ததாக மட்டும் தெரிவித்து, அவனின் காதல் திருமணத்திற்கு தன் சம்மதத்தை வழங்கினார்.

“தேங்க்ஸ், டாட்…”

சத்யனை அணைத்துக் கொண்ட வினு, தன் தாயை பார்த்து,
“லவ் யூ, மாம்…” என்றான்.

“பட்… எனக்கொரு ஆசை, வினு… உன் தங்கைக்கும் அன்றே திருமணம் நடந்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்று விஷ்ணுவிடம் சொன்னேன்… அவரும் ஒத்துக்கிட்டு, உடனடியா இன்விடேஷன் ரெடி பண்ணி அனுப்பிட்டார்…”

“ரொம்ப நல்லவங்களா தெரியிறாங்க… அந்த வீட்டுப் பெண் எனக்கு மருமகளா வர்றதுல ரொம்ப சந்தோஷம்…” என்றார்.

தந்தையின் இந்த செய்தி புதிதாக இருந்ததால், அவரை ஆச்சரியமாக பார்த்தான் வினு.

“தங்கச்சி வீட்டில இருக்கும்போது உனக்கு எப்படி கல்யாணம் பண்ண முடியும்? அதான் அவளுக்கும் ஏற்பாடு பண்ணிட்டோம்…”

என்று வினுவின் தாயார் மீனாட்சி தெரிவித்தார்.

“ஆனா டாட்… தங்கச்சி…”

என்று சொல்ல முடியாமல் இழுத்தான் வினு.

“அவளோட காதலும் எங்களுக்கு தெரியும், பா… நீ முதல்ல இன்விடேஷன் பார்…”

என்று அவனின் கையில் திணித்தார்.

ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று கல்யாணம் என்பதால், மூன்று திருமணங்களின் அழைப்பிதழும் ஒரே இன்விடேஷனில் அச்சடிக்கப்பட்டிருந்தது.

வினு மற்றும் ஆதர்ஷிற்கு இளையவளான வினுவின் தங்கையின் திருமண அறிவிப்பு முதல் பக்கத்தில்…
மஹியின் வரவு எத்தகையதாக இருக்கும் என்பது தெரியாததால், இரண்டாம் பக்கத்தில் வினு மற்றும் வைஷ்ணவியின் திருமண அறிவிப்பு…
இறுதி பக்கத்தில் ஆதர்ஷ் மற்றும் மஹியின் திருமண அறிவிப்பு இடம்பெற்றிருந்தது.

தன் தங்கையின் திருமண அறிவிப்பை பார்த்தவுடன்…
ஆதர்ஷ்க்கு தன் காதலும் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைத்த வினுவின் மனதில், ஆதர்ஷ் பல படிகள் உயர்ந்து நின்றான்.

“உன்னை நண்பனாக அடைய நான் கொடுத்து வைத்திருக்கணும்…” என்றான்.

தான் சொல்லாமலேயே ஆதர்ஷை மகன் புரிந்துகொண்டான் என்பதை உணர்ந்த சத்யன்,
“உண்மையிலே ஆதர்ஷ் ரொம்ப நல்ல பையன்…” என்று சான்றிதழ் வழங்கினார்.

உடனடியாக ஆதர்ஷை அழைத்த வினு, இதுவரை தன் காதலை மறைத்ததற்காக மன்னிப்பு கேட்டான்.

“அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை… நீ எனக்கு செய்யும் உதவிக்கு முன்னால் இதெல்லாம் சாதாரணம்…”

என்றவன்,
“கல்யாண மாப்பிள்ளையா வைஷுவிடம் ரொமான்ஸ் பண்ணும் வேலையை மட்டும் பார்டா…”

என்று கிண்டலாகச் சொன்னான்.

ஒரு வழியாக அனைத்தும் நல்லபடியாக நடந்துகொண்டிருப்பது ஆதர்ஷிற்கு மன அமைதியை அளித்தது. கிஷோருக்கும் அவன் காதல் ஈடேறி விட்டால் போதுமென்று நல்லதாகவே நினைத்தான்.

ஆனால்… ஆதர்ஷின் நினைவிற்கு சொந்தக்காரனோ…
உறக்கத்திலும் கூட தன் காதல் ஈடேறாது என்பதை எண்ணி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்.

*******************

தன்னை கொலை செய்யுமளவிற்கு அவருக்கு என்ன காரணம் இருக்குமென யோசித்த ராகவிற்கு ஒன்றும் புரியவில்லை.

அப்போது தான் மஹி யார் என்பதை அறிய அவன் வைத்திருந்த டிடெக்டிவ், அவளின் குடும்ப பின்னணியை கூற…
அவள் ராஜசேகரின் மகள் என்பதை அறிந்ததும் அதிர்ந்து விட்டான்.

ராஜசேகர்…

ராகவின் தந்தை சூரியநாராயணனின் தொழில்முறை வக்கீல்… மேலும் வயதை தாண்டிய நெருங்கிய நட்பு.

மகன் வயதில் இருந்தவரிடம் நாராயணனுக்கு இவ்வளவு நெருக்கமாக பழகியது ராகவின் தாய்க்கே ஆச்சரியம்தான்.

நாராயணனைப் பற்றிய பல விஷயங்கள், வேந்தனைவிட ராஜசேகருக்கு நன்கு தெரியும்.

இப்போது மஹிக்கு வேந்தன் பயப்படுவதை பார்த்தால்…
அதற்கான காரணம் பதினெட்டு வருடங்களுக்கு முன்பே விதைக்கப்பட்டிருக்க வேண்டும் என சரியாக கணித்தான்.

மஹியுடன் பேசினால், தன்னை கொல்ல நினைப்பதற்கான காரணமும் தெரிய வரலாம் என எண்ணியவன், அடுத்த நாள் அவளைச் சந்திக்க முடிவு செய்தான்.

ஆனால்…

ராகவ் மஹியைச் சந்திப்பதற்கு முன்னரே… ஆதர்ஷ், ராகவைத் தேடி வந்திருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top