ரவுடி பேபி 19

அத்தியாயம் 19

“அண்ணா… போய்தான் ஆகணுமா?”

நூறு முறைக்கு மேல் இக்கேள்வியினை மஹி, சரத்திடம் கேட்டுவிட்டாள்.

“ஆமாம் மஹி… போய்தான் ஆகணும். உனக்குத்தான் நன்கு தெரியுமே என்னுடைய பேமிலி கொல்கத்தாவில் இருக்கிறது என்று. இங்கிருக்கும் பிஸ்னஸ்ஸை கவனித்துக்கொள்ளத்தான் இவ்வளவு நாள் இங்கிருந்தேன். இனியும் இங்கிருக்க முடியாதும்மா. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் அவர்களைப் பிரிந்து இருந்துவிட்டேன். இப்போ அங்கு வரச் சொல்லி ரொம்ப தொல்லை செய்கிறார்கள்… கட்டாயம் நான் போய்தான் ஆக வேண்டும்.”

தனது சூழ்நிலையை சரத் பொறுமையாக மஹிக்கு எடுத்துக் கூறினான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பே சரத் கொல்கத்தாவிற்கு செல்ல வேண்டியது. தனக்காகத்தான் அவனது குடும்பத்தைக் கூட பார்க்காமல் இங்கிருந்தான் என்பது புரிய… இம்முறை மறுப்பேதும் தெரிவிக்காமல், அவன் செல்வதை ஏற்றுக்கொண்டாள்.

“சரி, சார்…” என்றவள், அமைதியாக தனது அறைக்கு சென்று விட்டாள்.

அவளது “அண்ணா” என்றழைப்பு, “சார்” ஆகிவிட்டதை உணர்ந்தவனின் செவிகளில்,

“நான் யார் மீது அதிகம் பாசம் வைத்து உரிமை எடுத்துக் கொள்கின்றேனோ, அவர்கள் என்னுடன் இருக்க மாட்டார்கள்…”

என்றோ ஒரு நாள் மஹி சொல்லியது இன்று ஒலித்தது.

மஹியின் சோர்ந்த முகம் வருத்தத்தை ஏற்படுத்த,

“நாம் போகத்தான் வேண்டுமா?” என்று சரத், தன்னவளிடம் குறையாத வருத்தத்துடன் கேட்டிருந்தான்.

“அப்போ, கதை முடியும்வரை இங்கேயே இருக்கலாமா…?”

முகத்தில் கோபத்தை காட்டினாலும், ஸ்வேதாவின் குரலில் நக்கல் வழிந்தது.

“நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா…?”

ஸ்வேதாவின் அடுத்த கேள்வியில் சரத் புரியாமல் விழித்தான்.

“உன்னை மதிச்சு ‘கெஸ்ட் ரோல்’க்கு கூட்டிட்டு வந்தால், ஒரு நாலு எபிசோடு ஹீரோயினுக்கு நல்லது செய்யறதுக்காக வந்தோமா… அவளுக்கு பாதுகாப்பா இருந்தோமா… வந்த வேலை முடிஞ்சுதா கிளம்பணும்னு இல்லாமல், கதை முடியும் வரை இங்கேயே கும்மி அடிக்கலாம்னு பார்க்கிறாயா?”

————!

ஏதோ கூற வந்த சரத்தை தடுத்தவள்,

“ஆல்ரெடி நம்ம கதையோட ஆசிரியர் ரொம்ப பாவம் டா… கதைக்குள்ள நாலு ஜோடி வச்சிக்கிட்டு, அவங்களுக்கு தனித்தனியா ரொமான்ஸ் சீன் யோசிச்சு மண்டை காயறாங்க. இதுல நாம் வேற எதுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ்?”

“அது வந்து ஸ்வே… மஹியின் திருமணம் முடியும்வரையாவது நாம் இங்கிருக்கலாமே,” என்று சரத் தன் பிடிவாதத்தில் நிலையாக நின்றான்.

“எனக்கென்னவோ, மஹியின் வாழ்க்கையை நாம் தான் கெடுத்துக் கொண்டிருக்கிறோமோன்னு தோணுது, சரத்,” என்ற ஸ்வேதா.

“மஹிக்கு துணையாக, ஆதரவாக நாம் இருப்பதால்தான், அவளுக்கு ஆதர்ஷின் தவிப்பு புரியலன்னு நினைக்கிறேன். தோள் சாய ஆளின்றி, தனிமையில் தவிக்கும் போது தான் அவளுக்கு ‘நமக்கென்று யாருமில்லை’ன்னு சிந்திக்க தோணும். அந்த சிந்தனை அவளை நேராக ஆதர்ஷிடம் அழைத்துச் செல்லும். சோ, கல்யாணத்துக்கு முன்பே நாம் இங்கிருந்து கிளம்பியிருக்கணும்,” என்றாள்.

அழுத்தமாகக் கூறிய ஸ்வேதா,

“இனியும் என்னால நம் குடும்பத்தை விடுத்து இங்க தனியா இருக்க முடியாது,” என்றவள்,

“இங்கிருக்கும் தொழில்களை யாராவது நம்பகமான ஒருவரிடம் ஒப்படைத்து, அங்கிருந்தே கணினி மூலம் பார்த்துக்க,” என்று கூறி சென்றுவிட்டாள். 

ஸ்வேதா சொல்வதும் ஒரு வகையில் சரியென்றே சரத்திற்கு தோன்றியது. நிச்சயம் தனிமை மஹியை ஆதர்ஷுடன் இணைத்து வைக்கும் என நம்பினான். ஏற்கனவே முடிவு செய்திருந்ததால், விடிந்ததும் அவர்கள் கொல்கத்தாவிற்கு செல்ல உள்ளனர். நம் கதையிலும் அவர்களின் பயணம் இனிதே முடிய, நாமும் வழியனுப்பி வைப்போம்.

அவர்கள் செல்வதற்கு முன்பு, ஆதர்ஷ் மற்றும் நவீன், சரத், ஸ்வேதாவை நேரில் சந்தித்து, இவ்வளவு நாள் மஹிக்கு உறுதுணையாக இருந்ததற்காக தங்களின் உள்ளார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

***************

கௌசியை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்த ராகவ், “எனக்கு முக்கியமான வேலை ஒன்றிருக்கிறது” என வெளியேற, அவனைத் தேடி வீட்டிற்கே வந்தான் ஆதர்ஷ்.

வீட்டிற்குள் நுழையும் புதிய நபர் யாரென்று ராகவ் தன் நெற்றியைச் சுருக்கி யோசிக்க, காரிலிருந்து இறங்கி ஸ்டைலாக நடந்து வந்த ஆதர்ஷ், தனது கூலர்ஸை கழற்றியபடி,

“ஹாய்… ஐயம் ஆதர்ஷ்,” என்று தன்னை அறிமுகப்படுத்தும் விதமாக ராகவின் முன் கை நீட்டினான்.

மரியாதை நிமித்தமாக ஆதர்ஷின் கரம் பற்றி குலுக்கிய ராகவ்,

“நீங்கள் யாரென்று தெரியவில்லையே… என்ன விஷயமா என்னை பார்க்க வந்திருக்கீங்க?” என நேரடியாக கேட்டான்.

“தோட்டத்தில் நடந்து கொண்டே பேசலாமா?”

ஆதர்ஷின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்த ராகவ், அவனுடன் இணைந்து நடக்க, எதற்காக ராகவை பார்க்க வந்தானோ, அதனை முழுவதுமாக சொல்லி முடித்தான்.

முதலில் அவற்றை நம்ப மறுத்த ராகவ், அடுத்து ஆதர்ஷ் கூறிய —

“மகன் போல் வளர்த்த உங்களையே கொலை செய்ய முயற்சிப்பவர், அதை செய்யாமல் இருப்பாரா?” — என்ற வார்த்தைகளில் சற்று சிந்தித்து,

“இதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?” என வினவினான்.

தன் மொபைலில் ஏற்றியிருந்த இரண்டு காணொளிகளில் ஒன்றை ஓடவிட்டான் ஆதர்ஷ். அதைப் பார்த்த ராகவ்,

“அப்போ… என் தந்தையை கொன்றது அந்த பத்மநாபன் தானா!” என்று கை முஷ்டியை மடக்கி அருகிலிருந்த மரத்தில் ஓங்கி குத்தினான்.

“இன்னும் மூன்று நாட்களில் இந்த கேஸ்க்கான தீர்ப்பு கிடைத்துவிடும். அதன் பின் செய்த குற்றத்திலிருந்து அந்த பத்மநாபன் தப்ப முடியாது,” என்ற ஆதர்ஷை நோக்கி நக்கலாக புன்னகைத்த ராகவ்,

“இதிலிருந்து அவன் சர்வ சாதாரணமாக வெளியே வந்துவிடுவான். அவனை என் கைகளால் கொன்றால் தான் என் ஆத்திரம் தீரும்!” என கர்ஜித்தான்.

“இப்போது நமக்கு பொறுமை ரொம்ப முக்கியம்,” என்ற ஆதர்ஷ்.

“நான் வந்ததற்கான காரணம் பத்மநாபனின் கைரேகை எனக்கு வேண்டும். அதை எடுத்து தர முடியுமா?” என்றான்.

“சரி,” என்று ஒப்புக்கொண்ட ராகவ்,

“மஹியிடம் நான் மன்னிப்பு கேட்டதாக சொல்லிடுங்க,” என்றதோடு,

“நீங்கள் கிரைம் பிராஞ்ச் போலீஸா?” என வினவ, சிறு புன்னகையுடன் சென்றுவிட்டான் ஆதர்ஷ்.

ராகவிற்கு பத்மநாபனை நினைக்க நினைக்க வெறி அதிகமாகியது. அவரின் இன்னொரு முகம் தனக்கே இத்தகைய அருவருப்பை கொடுக்கின்றதே… அக்காவிற்கு தெரிந்தால்? நினைத்த உடனேயே அவன் மனம் பதறியது.

இன்னும் மூன்று நாட்களுக்குள் எப்படியாவது உண்மையை அம்சாவிடம் மெல்ல எடுத்துக்கூறி, என்ன நடந்தாலும் தைரியமாக இருக்க, தன்னுடைய அக்காவை தயார்ப்படுத்த வேண்டும் என முடிவெடுத்தான்.

ராகவிடம் பேசிவிட்டு, ஆதர்ஷ் நேராக வந்தது தன்னவள் இருக்கும் இடத்திற்கே.

*******

சரத், ஸ்வேதா இல்லாததால், சற்று கவலையுடன் தனிமையில் வருத்தம் கொள்வாள் என நினைத்து ஆதரவாக வர, மஹியோ ஷியாமிடம் கத்திக்கொண்டிருந்தாள்.

“அந்த ஆபீசர் யாரென்று இன்னும் உன்னால் கண்டுபிடிக்க முடியலையா?”

பாவம், அவளிடம் ஷியாம் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கினான்.

முதலமைச்சர் மீதான வழக்கு என்பதால், சிபிசிஐடி-க்கு மாற்றி எங்காவது கேஸை திசைதிருப்பிவிடுவார்களோ என மஹி யோசித்தாள். எப்படியாவது பத்மநாபனுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என உள்ளுக்குள் கொதித்தாள்.

ஆதர்ஷின் வருகை அறிந்ததும், மஹியின் திட்டிலிருந்து தப்பித்தோம் என ஷியாம் வெளியேறிவிட, தன்னவளை நெருங்கி நின்ற ஆதர்ஷ்,

“இப்போதும் கூட உனக்கு என்னைத் தேடி வரவேண்டும் என்று தோன்றவில்லையா? காதலனாக விடு… உனக்கு கணவனாக கூட என் எண்ணம் உதிக்கவில்லையா?” எனக் கேட்டான்.

அவளின் அமைதியில் அவனது பொறுமை சிதறியது.

“இதுதான் உன்னை நான் தேடி வரும் கடைசி முறை. உனக்கு நான் வேண்டுமென்றால், வைஷூவின் கழுத்தில் நான் தாலி கட்டுவதற்கு முன் வந்துவிடு. இல்லையென்றால் நடக்கும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல,” என்றவன், தன் காதல் ஏதோ ஒரு மூலையில் மரித்துவிட்டதாக எண்ணி உள்ளம் கலங்கினான்.

ஆதர்ஷின் ஏக்கம் நிறைந்த முகம் “இப்போதே என்னை உன்னோடு அழைத்துச் செல்” என்று மனம் கூறினாலும், அதை கட்டுப்படுத்தியவள்,

“உன்னால் என்னைத் தவிர வேறொருத்தி கழுத்தில் தாலி கட்ட முடியாது,” என உள்ளுக்குள் சவாலிட்டாள்.

“தனியாக இருந்து நீ எதை அனுபவிக்கப் போகிறாய்?” என்றவன்,

“ஒரு ஜடத்திடம் எப்படி என் மனம் சாய்ந்தது?” என மனதில் அரற்றி,

“நீ எப்படியிருந்தாலும் என் மனம் உன்னை மட்டுமே தேடுது, மஹி,” எனக் கூறி சென்றுவிட்டான்.

தன்னைப் பற்றி சிந்திக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றிய அனைவரின் மீதுள்ள கோபம், தன் காதலுக்கு எமனாகிவிட்டதோ என முதல் முறையாக சிந்தித்தாள். அந்த வீட்டில் மீண்டும் அடியெடுத்து வைக்கக்கூடாதென்ற வைராக்கியம் தான் ஆதர்ஷிடம் சேராமல் தடுக்கிறதென புரிந்தவளின் மனம், ஐந்து வருடங்களுக்கு முந்தைய இரவை நோக்கிப் பயணித்தது.

காரை சீரான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்த ஆதர்ஷின் மனமும், அன்றைய இரவை நினைத்து அலைந்தது.

வீட்டிற்கு அழைத்தும் மஹி வர மறுத்ததாலும், மேற்கொண்டு அவள் லா படிப்பதாக சொல்லவும், அடுத்த முகூர்த்தத்திலேயே ஆதர்ஷுடன் உனக்கு திருமணம் என நாதன் கூறிவிட, அவர்களிடம் மஹியின் மறுப்பு எடுபடவில்லை.

ஆதலால், வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாத இடத்திற்குச் செல்ல வேண்டும் என முடிவெடுத்தவள், அன்றைய இரவே தனது முடிவை செயல்படுத்தினாள்.

அமைதியான இரவு நேரத்தில், ஆழ்ந்த உறக்கத்தை எதிர்நோக்கி மெத்தையில் விழுந்து கிடந்தான் ஆதர்ஷ். விழித்திருக்கிறானா என்பது கூட நிச்சயமில்லை. சிறு அசைவிற்கே எழுந்துவிடும் அரை உறக்க நிலையில் இருந்தான்.

பால்கனி கம்பிகளைப் பிடித்து ஏறிய உருவம், அறை வாயிலில் குதித்ததுமே கண் விழித்துவிட்ட ஆதர்ஷ், கண்களுக்கு மேல் வைத்திருந்த கையை சற்று அகற்றி பார்த்தான்.

இருட்டில் ஒன்றும் தெளிவாகத் தெரியாவிட்டாலும், மெல்லிய தேகமுடைய கருப்பு உருவம் தன்னை நோக்கி வருவதை உணர்ந்தான்.

உருவத்தின் உயரத்தை வைத்து மஹிராவாக இருக்குமோ என கணித்த வேளையில், மேகங்களுக்கு இடையில் சிக்கியிருந்த நிலவு வெளியில் வந்து ஒளி வீசி, கண்ணாடி தடுப்புகளில் பட்டு மங்கலான வெளிச்சத்தை அறை முழுக்க பரப்பியது. அவன் கணிப்பு சரி என்பதை உறுதிப்படுத்தியது.

“மேடம் ஏதோ திருட்டு வேலை பார்க்க போறாங்க…”

அவன் மனம் கூறிய தருணத்தில், மஹி ஆதர்ஷின் அருகில் மெத்தையில் அமர்ந்தாள்.

ஆதர்ஷிற்கு அவளின் நெருக்கம் புதியதல்ல. ஆனால், தான் காதலிப்பதாக கூறிய பின்னர் தன்னிடம் சற்று விலகல் காண்பிப்பாளென்று எதிர்பார்த்திருந்தவனுக்கு, அவளின் வழமையான செயல் ஆச்சரியம் அளித்தது.

இரவு நேர அருகாமை, காதல் கொண்ட அவனுக்குத்தான் உள்ளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. எழுந்து கொள்ளலாமென சிந்தித்தான். ஆனால் இன்னும் அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்பது தெரியாததால், சற்று பொறுமையாக இருக்க அவனின் மனம் அவனை அடக்கியது.

வசீகரிக்கும் அவனின் முகத்தை ஆழ்ந்து ரசித்தாள் மஹி. அவனை பார்த்துக்கொண்டிருப்பதே அவளின் மனதிற்கு அளவில்லா மகிழ்வை கொடுத்தது. நெஞ்சமெங்கும் உவகை பொங்கியது.

அவனின் அன்பை அனுபவிக்கும் அந்த நொடியில் இருந்தாலும், இக்கணம் அதனை ஏற்க முடியாத தனது நிலையை எண்ணி வருந்தினாள்.

“விஹூ…”

“உன்னை எனக்கு இவ்வளவு தான் பிடிக்கும் என்று அளவு கூறத் தெரியாது… உன்னை அப்படியே பிடிக்கும்…”

மஹியின் அழுத்தமான வார்த்தைகள், திருமணம் வேண்டாமென்று அவள் கூறிய மறுப்பால் வலித்துக் கொண்டிருந்த ஆதர்ஷின் இதயத்திற்கு இதமாக இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, ஆதர்ஷின் சிகையில் கையினை அலையவிட்டவாறு அவனை பார்த்திருந்தவள், நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து,

“நான் போறேன் விஹூ… இங்கிருந்தால் என் லட்சியம் நிறைவேறாது. அதற்குமேல், நம்மிருவருக்கும் திருமணம் செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். அந்த திருமணத்தை தடுக்க எனக்கு வேறு வழியில்லை… நான் போய்தான் ஆக வேண்டும்,” என்றாள்.

மஹியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆதர்ஷின் இதயம் சுக்கு நூறாக நொறுங்கியது.

சற்று நேரத்திற்கு முன் இதமளித்தவளே, இப்போது அவனை நொறுக்கிக் கொண்டிருந்தாள்.

தன்னை மணக்க கூடாதென்பதற்காக அவள் வீட்டை விட்டு வெளியேறுகிறாள் என்பதில், அவன் காதல் மொத்தமாக வீழ்ந்தது.

அவள் சிறிதளவேனும் ஆதர்ஷின் மீதான தன் காதலை வெளிப்படுத்தியிருக்க வேண்டுமோ… விதி யாரை விட்டது?

“நான் போகிறேன்…”

தன்னருகிலிருந்து எழுந்தவளின் கரத்தைப் பற்றித் தடுத்து நிறுத்தினான் ஆதர்ஷ்.

அவன் விழித்துவிட்டானே என்ற பதட்டம் அவளிடம் துளியுமில்லை.

அவன் கரத்தினுள் சிறைப்பட்டிருந்த தன் கரத்தை மீட்க வேண்டும் என்ற எண்ணமின்றி, அவனின் கண்களை நேராக நோக்கி நின்றாள் மஹிரா.

“ஒரு நொடி கூட என் மீது உனக்கு காதல் வரவில்லையா, மஹி…?”

உயிரை உருக்கும் அவனின் குரல், அப்போதே அவன் நெஞ்சத்தில் சாய்ந்துவிடச் சொல்லியது. ஆனால் மனம் சொல்வதை கேட்டுவிட்டால், அவள் மஹிரா அல்லவே…

“யெஸ்… ஐம் மேட்லி இன் லவ் வித் யூ, விஹூ… பட் ஐ கான்ட் லவ் அண்ட் லிவ் வித் யூ,” என்றாள் குரலில் அப்படியொரு உறுதி.

“உன்னை அளவுக்கு அதிகமாக காதலிக்கிறேன்… ஆனாலும் உன்னுடன் வாழ முடியாது” என்பவளை என்ன சொல்லுவது என்று ஆதர்ஷிற்கே தெரியவில்லை.

சில நொடிகள் மௌனத்திற்கு பின், தன் பிடியிலிருந்த மஹியின் கரத்தை விடுவித்தவன், சுவரை நோக்கி,

“சரி… போ,” என்றான்.

அவன் “போ” என்றதில், மஹியின் மனதிற்குள் எழுந்த உணர்விற்கு பெயர் அவளுக்கே தெரியவில்லை.

தன்னை எப்படியும் ஆதர்ஷ் தடுத்துவிடுவான் என எதிர்பார்த்தாளோ…?

நிமிடங்கள் கடந்தன. ஆதர்ஷ் திரும்பிப் பார்க்கப்போவதில்லை என்பதை உணர்ந்த மஹி, வந்த வழியே செல்ல முயன்றாள்.

“மஹி…”

ஆதர்ஷின் காதல் சொட்டும் அழைப்பு அவளை அங்கேயே நிறுத்தியது.

இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று மோதி நின்றன. அவன் கண்களில் வழிந்த காதலில் பேதையவள் உறைந்து நின்றாள்.

ஆதர்ஷ் மெதுவாக அவளை நெருங்கினான். அவனின் சூடான மூச்சுக் காற்று அவளின் முகத்தைத் தொட்டது. அவன் கண்களுக்குள்ளே புதைந்து போனவளாக நின்ற மஹி,

“ஐ நீட் யூ…” என்ற அவனின் வார்த்தையில் மயங்கி, விழிகளை மூடி தனது சம்மதத்தை தெரிவித்தாள்.

தாலி கட்டுவதற்கு முன்பே, கணவன் என்கிற அங்கீகாரம் அளித்து தன்னையே கொடுக்க சம்மதித்தவளின் காதல் ஆதர்ஷை பிரம்மிக்க வைத்தது.

அவளின் காதலை முழுமையாக அனுபவித்திட, அவளை தன்னுடன் நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மஹி அவன் மனதில் குடியேறிய அன்றே வாங்கி வைத்திருந்த தாலி செயினை எடுத்தான்.

இரவின் சாட்சி, சந்திரனின் சாட்சி, குளிர்ந்த தென்றலின் சாட்சி அவளின் கழுத்தில் அதை அணிவித்தான்.

ஆதர்ஷின் முத்தத்தை எதிர்பார்த்து விழி மூடியிருந்தவள், கழுத்தைத் தீண்டிய அவனின் விரல் சபரிசத்தில் சிலிர்த்து கண் திறந்தாள்.

நெஞ்சை உரசியபடி தன் கழுத்தில் தொங்கிய தாலியை கண்டவளின் கண்கள் தீப்பொறி பொழிந்தன.

அடுத்த நொடி —

ஆதர்ஷின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விழுந்தது.

“நீயும் சராசரி ஆணைப் போல நடந்து கொண்டாயே…!”

மஹி அடித்த அதிர்ச்சியிலேயே நின்றிருந்தவன், அடுத்து அவள் கூறியதில் உள்ளுக்குள் மரித்துவிட்டான்.

தன்னை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டு பேசுகிறாளா…?

அவனின் உள்ளம் மீண்டும் மீண்டும் இதையே அரற்றியது.

“உன்னை என்னுடன் வைத்துக்கொள்ள எனக்கு வேறு வழி தெரியவில்லை,” என்ற ஆதர்ஷை கோபக் கண்களால் பார்த்தவள்,

“என் கழுத்தில் தாலி அணிவித்துவிட்டாலே நான் உன்னுடன் இந்த வீட்டில் வாழ்வேன் என்று எப்படி நினைத்தாய்?”

கோபம் குறையாமல் காட்டமாகக் கேட்டவள்,

“இனி என் முகத்திலேயே முழிக்காதே!” என்று கூறி திரும்பி நடந்தாள்.

அவளை வேகமாக இழுத்து, தனக்குள் புதைத்துக் கொண்டவனின் அணைப்பு — அவளை விடக்கூடாதென்ற பிடிவாதத்தில் மேலும் இறுகியது.

அந்த அணைப்பு, எலும்பே உடையும் அளவுக்கு வலியை அவளுக்கு அளித்தது.

அந்த வலி… ஆதர்ஷின் காதலை அவளுக்கு உணர்த்தியது.

இப்போது அந்த காதலில் கட்டுண்டுவிட்டால், நாதன் நினைத்தது நிச்சயம் நடக்கும். தன் கனவு — சட்டம் படித்து, தந்தையைப் போல சிறந்த வக்கீலாக ஆக வேண்டும் என்ற வாக்கு — சிதைந்து போய்விடும்…

அந்த எண்ணமே அவளை அவன் அணைப்பிலிருந்து தப்பிக்கத் திமிறச் செய்தது.

அவளின் முயற்சிகளை அடக்கி, மேலும் இறுக்கமாக அணைத்தவனின் குரல் நடுங்கியது.

“ப்ளீஸ் மஹி… என்னைவிட்டு போய்விடாதே… நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது…

யூ ஆர் த ப்ரீத் ஆஃப் மை லைஃப்…

என்னை விட்டு எங்கும் போகாதே…

நான் உன்னோடு தான் உயிரோடிருக்கிறேன்…

யூ ஆர் மை ப்ரையாரிட்டி… மை நீட்…”

தானொரு ஆண் என்பதையும் மறந்து,

அவன் கெஞ்சினான்… பிதற்றினான்… அழுதான்…

ஆனால் அவன் வார்த்தைகள் அவளின் செவியிலே விழவில்லை.

அவளின் மனமும், மூளையும் — தந்தைக்கு கொடுத்த வாக்கினால் நிரம்பியிருந்தது.

இவ்வளவு சொல்லியும் தன்னை விட்டு விலக முயலும் அவளை, மெதுவாக விடுவித்தான் ஆதர்ஷ்.

அவன் கண்களில் முழு காதலும் உருகிக் கசிய, அவளை நோக்கி நின்றான்.

அந்த காதல் பார்வையில் முழுவதுமாக உருகி, தன்னையும் அறியாமல் அவனிடம் கவிழ்ந்தவள்,

அவனின் கன்னத்தை இரு கரங்களால் தாங்கி, அவனை தன்னருகே இழுத்து

அவனின் இதழ்களில் தன் இதழ்களை பதித்தாள்.

விரும்பியே அந்த முத்தத்தில் தொலைந்தவன்…

அவளின் மூச்சு தடுமாறி விலகியதும்,

சிறு பிள்ளையின் ஏக்கத்தோடு அவளின் இதழ்களைப் பார்த்தான்.

ஆனால்,

அவளின் கண்களில் முதன்முறையாக சிந்திய காதலை கவனிக்கத் தவறிவிட்டான்.

ஒரு நொடி…

தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட மஹி,

“நான் கிளம்புறேன்…” என்றாள்.

அவன் ஏதோ சொல்ல முனைந்ததும், தடுத்து,

“என்னை பின்தொடர்ந்தோ… அல்லது நான் சென்ற பிறகு தேடி வந்தோ சந்திக்க முயற்சித்தால்

அது எனக்கு கடைசி நாள்…”

அவனின் அதிர்ந்த முகத்தை மனதில் பதித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

மஹி சென்ற பின்,

எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தானோ தெரியாது.

விடியற்காலையில், தாயார் கொண்டு வந்த தேநீரின் மணத்தில் தான் சுயம் திரும்பினான்.

அதன்பின், மஹி எங்கோ சென்றுவிட்டாளென்று வீட்டில் அனைவரும் தேட முயன்றனர்.

ஆனால் — ஆதர்ஷ் தடுத்துவிட்டான்.

“அவள் பெண் பிள்ளையடா… இந்த உலகத்தில் எப்படி தனியாக வாழ்வாள்?” என்ற நாதனின் கவலையில்,

வெறுமையாக பார்த்தவன் 

“அவள் பெண் என்று இப்போது தான் உங்களுக்கு தெரிகிறதா?”

சிங்கம்போல் கர்ஜித்தான்.

“என் மூச்சு இருக்கும் வரை அவளுக்கு எதுவும் ஆகாது.

அவளைப் பற்றிய அக்கறை காட்டுவது போல நடிக்க வேண்டாம்.

அவளை எப்போது… எப்படி… என்னிடம் வரவழைக்க வேண்டும் என எனக்குத் தெரியும்!”

அனைவரும் மௌனமாய் நின்றனர்.

“நான் இன்று மாலையே லண்டன் கிளம்புகிறேன்,” என்றவன்,

அறிவிப்பு போல கூறிவிட்டு சென்றான்.

ஐந்து ஆண்டுகள்…

அவன் எங்கே சென்றான்… என்ன செய்தான்…

அவனுக்கே தெரியும்.

இப்போது,

அன்றைய நாளை நினைத்து பார்த்த இருவரும் நிகழ் காலம் திரும்ப, தான் இதுவரை யாருக்கும் தெரியாமல் கழுத்தில் மறைத்து வைத்திருக்கும் தன் தாலியை மஹி கைகளில் தொட்டு ஏந்த, அன்று காரில் அவளைத் தள்ளி ஆதர்ஷ் அவள் மீது படர்ந்த போது அவனின் இதயத்தை பதம் பார்த்த தாலி இன்னும் அவள் கழுத்திலிருப்பதை, தான் தெரிந்து கொண்ட தருணத்தை நினைத்துக்கொண்டிருந்தான்.

தன் மீது அவளிருக்கும் கோபத்திற்கு நிச்சயம் தான் அணிவித்த தாலியை அவள் கழட்டி எறிந்திருப்பாளென்று நினைத்திருந்தவனுக்கு அவள் இன்னும் அதனை அணிவித்திருக்கின்றாள் என்பதே தானெடுத்த திருமண திட்டத்தில் உறுதியாக நிற்க வைத்தது.

ஆதர்ஷ் மஹியைக் கண்ட முதல் நாளே, அவளின் கழுத்தை தான் ஆராய்ந்தான்.. ஆனால், அவளணியும் க்ளோஸ் நெக் ஷர்ட் அவனறிய நினைத்த விஷியத்திற்கு தடையாக இருந்தது.

இருவருக்குமிடையில் அளப்பரிய காதல் பொங்கி வழிகிறது. ஆனால் சேரும் தடமின்றி தவிக்கின்றனர். ஆதர்ஷின் திட்டம் ஈடேறினால் பெண்ணவளின் நிலை என்னவாக இருக்கும்.

தாலியை கரங்களில் எந்தியவளின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது. அந்நேரம் உள்ளே வந்த ஷியாம் மஹியின் கழுத்திலிருந்த தாலியை கண்டு அதிரவெல்லாம் இல்லை. ஆதர்ஷ் ஷியாமிடம் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டதே மஹியின் கணவனென்று தான்… அதனால் அவன் தான் கண்டதை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டான்.

எதற்குமே மஹி கண்ணீர் சிந்தி பார்த்திடாத ஷியாமிற்கு… இன்று முதன் முறையாக அவளின் கண்கள் சிந்திய கண்ணீரில் ஆதர்ஷ் மீது அவள் கொண்டுள்ள காதலை புரிந்து கொண்டான். பாஸ் மஹி உங்களுடன் சேரும் நாள் தூரமில்லை என்று மனதோடு ஆதர்ஷிடம் கூறிக்கொண்டவன்… மஹி என்றழைத்து அவளை நினைவுக்கு மீட்டான்.

எதுவும் நடவாது போன்று பொறுமையாக தாலியை சட்டைக்குள் போட்டவள், கண்களை அழுந்த துடைத்து… என்ன என்பதை போன்று ஷியாமை பார்த்தாள்.

“மஹி…”

ஷியாம் அழைத்தான்.

அவள் அமைதியாக கண்ணீரை துடைத்துக் கொண்டு திரும்பினாள்.

“சரத் சார்… இங்கிருக்கும் தொழில்களை உன் பெயரில் மாற்றியிருக்கார். கையெழுத்து போடணும்,” என்றான்.

ஒரு வார்த்தையும் பேசாமல்,

ஒவ்வொரு பக்கத்திலும் கையொப்பமிட்டாள்:

“மஹிரா விஹான் ஆதர்ஷ்”

அதை பார்த்த ஷியாம் நின்றுவிட்டான்.

“உண்மையிலேயே இந்த பெயரின் அர்த்தம் உனக்கு தெரிகிறதா, மஹி…?

அதன் அர்த்தம் தெரிந்திருந்தால்

, நீ இப்போ ஆதர்ஷோட இருந்திருப்ப…”

மஹி அதிர்ந்து பார்த்தாள்.

“வாழ்க்கையை விட்டு…

அவனுடைய காதலை விட்டு…

பெயரை மட்டும் வைத்துக்கொண்டு நீ என்ன சாதிக்கப் போகிறாய்?”

அந்த வார்த்தைகள்,

மஹியின் உள்ளத்தை உடைத்தன.

உண்மை புரிந்தது.

“என்னால்… என்னவனை யாருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது…”

அவளுக்கே தெரியாமல் உதடுகள் உரைத்தன.

error: Content is protected !!
Scroll to Top