ரவுடி பேபி 20

அத்தியாயம் 20 :

“ஹாய்…”

ஆதர்ஷ் உண்மைகள் அனைத்தையும் ராகவிடம் தெரிவித்ததும் அவன் முதலில் செய்தது மஹியை சந்தித்தது.

எப்போதும் தன்னை கண்டாலே எரித்து விடுவதை போல் பார்ப்பவன்… இப்போது தனது அலுவலகத்திற்கே வந்திருப்பது மஹிக்கு ஆச்சரியத்தை அளித்தது. இருப்பினும் தனது ஆச்சரியத்தை வெளிக்காட்டாது ராகவை அமருமாறு இருக்கையை கை காண்பித்தாள்.

“தேங்க்ஸ்… எங்க உட்கார கூட சொல்லாம வெளிய துரத்திடுவியோ நினைத்தேன்” என்று காமெடியாகக் கூறி சூழ்நிலையின் இறுக்கத்தை சற்று தளர்த்தினான் ராகவ்.

இவனுக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியுமாயென்று ஷியாம் வாய் பிளந்து நிற்க,

“வந்ததற்கான காரணத்தை சொன்னா நான் என் வேலைகளை பார்ப்பேன்” என்றாள் மஹிரா.

மஹிராவின் மிடுக்கு அவளுக்கே உரித்தான ஒன்றென்று உள்ளுக்குள் வியந்தவன், பத்மநாபன் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதிலிருந்து.. “இத்தனை நாள் அவர் என்மேல வைத்திருந்த பாசம் பொய்யின்னு என்னால உணர முடியுது. அவருக்கு துணையா இருந்ததை நினைத்தால் அருவெறுப்பா இருக்கு. நீ ரீ ஓபன் செய்திருக்கும் கேஸிற்கு என்னால் உதவ முடியுமென்றால் நான் உதவி செய்கிறேன்” என்றான்.

ஆதர்ஷ் கூறிய ஒன்றை கூட ராகவ் மஹியிடத்தில் கூறவில்லை.

இவ்வளவு நாள் தன்னை எதிர்த்தவன் இன்று வந்து உதவுகின்றேன் என்று வந்தால் நம்ப முடியாது தான்… மஹியின் சந்தேகப் பார்வையில் ராகவ் பேசினான்.

அப்போதும் மஹி அமைதியாகவே அமர்ந்திருக்க, அவள் தன்னை நம்ப போவதில்லை என்பதை உணர்ந்த ராகவ்..

“ஓகே.. ஃபைன்… நீங்க என்னை நம்ப போவதில்லை, நான் வர்றேன்” எனக் கூறி கிளம்பினாள்.

கதவினை திறக்க ராகவ் கை உயர்த்திய நொடி, “யாருடைய உதவியும் இந்த மஹிராவிற்கு தேவைப்படாது” என்று அவளின் அழுத்தமான குரல் ஒலித்தது.

மஹியை அதே அழுத்தத்துடன் திரும்பி பார்த்தவன்,

“ஒவ்வொரு விஷியத்திலும் உனக்கே தெரியாது உதவி செய்து கொண்டிருக்கும் ஆதர்ஷின் அக்கறையை கூட நிராகரித்து விடுவாயா?” என்று தனது கூலர்சை மூக்கின் கீழ் சற்று இறங்கியவன் மேல் கண்ணால் வினவ… ராகவ் கேட்டதில் இவன் என்ன சொல்கிறான் என்பதை போல் பார்த்தாள் மஹிரா.

சில வினாடிகள் நின்றிருந்தவன் அவளிடமிருந்து எவ்வித பிரதிபலிப்பும் வர போவதில்லை என்பதால் அங்கிருந்து சென்றான்.

****************

“ஆதர்ஷ் நாளை மறுநாள் திருமணம் , நீ உன் இஷ்டத்துக்கு வர போற.. என்ன முடிவில் தான்டா நீயிருக்க.” விஷ்ணு தன் மகனிடம் சலித்தார்.

“எனக்கு இந்த திருமணம் நடக்குமான்னே கொஞ்சம் பயமாவே இருக்கு ஆது.”

தந்தையின் தோளில் கரம் போட்டவன்… “நிச்சயம், திருமணம் நடக்கும் டாட். யூ டோன்ட் ஒர்ரி” எனக் கூறி தனது வழக்கமான வேக நடையுடன் தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான்.

ஆதுவிற்கு மஹியை நினைத்து சிறு கலக்கம் இருக்கத்தான் செய்கிறது. அவள் என்ன செய்து வைக்கப் போகின்றாளோ என்று நொடிக்கு ஒரு தடவை அவனின் மனம் தாறுமாறாக குதிக்கிறது. இருப்பினும் அவனுக்கு அவன் காதலின் மீது அதிக நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையே அவனை தைரியமாக வைத்துள்ளது.

திருமணம் முடிந்த உடனே ஆதர்ஷ் தனது வேலையை தொடங்க வேண்டும். திருமண நாள் தான் அவனின் உயர் அதிகாரி அவனுக்கு அளித்த பணியின் இறுதி நாள்.

அதற்காக முக்கிய கோப்புகளை அவன் சரி பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஆதுவின் மொபைல் சத்தமிட்டது.

“சொல்லும்மா…”

“அண்ணா, கிஷோருக்கு எத்தனை முறை போன் பண்ணாலும் கால் அட்டெண்ட் செய்ய மாட்டேங்கிறார்.. எனக்கென்னவோ பயமா இருக்கு.” எதிர்முனையிலிருந்தவள் படப்படத்தாள்.

“நேத்து அவனுக்கு நீ கொடுத்த அதிர்ச்சி அப்படிப்பட்டது. இன்னும் ரெண்டு நாள்ல எப்படியும் அவனோட சேரப்போற, அதற்கு முன்னோட்டமா இன்றே அவன் வீட்டுக்குப்போய் பார்த்துடு, அப்படியே உண்மையையும் சொல்லிடு,” ஆதர்ஷ் சாதரணமாக அவ்வளவு தான் என்பதை போல் கூறினான்.

ஆதர்ஷ் சொல்லுவதும் சரியெனவே பட்டது. நொடியும் தாமதியாது தன்னவனின் வீடு நோக்கி பயணப்பட்டாள்.

அவள் சொல்லாமல் கொள்ளாமல் போனை வைத்ததுமே, தான் சொல்லியதை செய்யப் போகிறாளென்பதை யூகித்த ஆதர்ஷ், இந்த புயலால் தனது நண்பனுக்கு எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடக் கூடாதென்று உள்ளுக்குள் வேண்டினான். நடக்க போவதை நினைத்து வெளியில் லேசாக சிரித்து வைத்தான்.

இரவு முழுக்க அழுகையில் கரைந்து, அதிகாலை நேரத்தில் தன்னையும் மீறி உறங்கியவன் முன்பகல் நேரத்தில் தான் கண்விழித்தான்.

இமை திறந்ததும் அவனின் பார்வை சென்ற இடம்… டீபாயின் மீது அவன் தூக்கியெறிந்த இன்விடேஷன் மீது தான். அதையே வெறித்தவாறு எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தானோ. அவளின் பெயரையாவது தெரிந்து கொள்ளலாமென்று இன்விடேஷனை கையில் எடுத்தவன், இனி உன் பெயர் எனக்குத் தெரிந்தால் என்ன தெரியாவிட்டால் என்னவென்று விசிறியடித்தான்.

சரியாக அந்நேரம் அவன் வீட்டு கதவினை திறந்து உள்ளே அடி வைத்த அவனவளின் பாதங்களில் சென்று விழுந்தது அந்த பத்திரிகை.

மெல்ல குனிந்து அதனை எடுத்தவள் கிஷோரை மெல்ல நெருங்க, அவனின் சிவந்த விழிகளும் ஓய்ந்த தோற்றமுமே எந்தளவிற்கு வேதனையை சுமந்து கொண்டிருக்கிறானென அவளுக்கு உணர்த்தியது.

“எதுக்கு இவ்வளவு கோபம், யார் மீது இந்த ஆத்திரம்… உங்களுக்கு என் மீது கோபமென்றால் நேரடியாக என்னிடமே காட்டுங்க” என்றாள் மென் குரலில்.

“உன்னை யார் இங்கு வர சொன்னது… நீ முதலில் வெளிய போடி…”

கிஷோர் கோபத்தில் வெடித்தான்.

அந்நிலையிலும் அவனின் உரிமையான போடி என்ற வார்த்தையில் மகிழ்ந்தவள்,

“சரி நான் போறேன், அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்.”

சிவந்த விழிகளால் அவளையே அவன் உருத்து பார்த்திருக்க,

கிஷோரின் முன் தன்னுடைய கையிலிருந்த இன்விடேஷனை நீட்டியவள், “வில் யூ, மேரி மீ?” எனக் கேட்டிருந்தாள்.

ஒரு நொடி அவள் கேட்டது புரியாது குழம்பியவன், அவளையும் அவள் நீட்டிய இன்விடேஷனையும் மாற்றி மாற்றி பார்த்தவன்… வேகமாக இன்விடேஷனை அவளிடமிருந்து பறித்து, முதல் பக்கத்தை திறக்க.. அதிலிருந்த மணமகள் மற்றும் மணமகன் பெயர்களை பார்த்தவனின் மனம் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து. மணமகன் இடத்தில் கிஷோரென்று அவனின் பெயரிருக்க, மணமகள் இடத்தில் “சந்தோஷி” என்ற பெயர் அழகாய் வீற்றிருந்தது.

சந்தோஷியென ஒரு நொடியில் பல முறை உச்சரித்தவன்… அப்பெயருக்கும் வலிக்குமோயென தன் விரலினால் மெல்ல வருடினான்.

அவன் முகத்தில் தோன்றிய உணர்ச்சி குவியல்களை கண்டு தன் மனதில் சேமித்தவள் மௌனமாய் நின்றிருந்தாள்.

இவ்வளவு நேரம் வலியில் துடித்த இதயம் சந்தோஷத்தில் துள்ளி குதிக்க… கண்களில் சுரந்து வழிந்த நீர் நொடியில் வற்றி மாயாகிப் போனது. மணமகன் இடத்தில் தன்னுடைய பெயர் இருக்கவுமே, மணமகளிடத்தில் இருக்கும் சந்தோஷி என்ற பெயர் நிச்சயம் அவளுடையது தானென்று அறிந்தவன்… வேண்டுமென்றே, “இந்த சந்தோஷி யார்?” என வினவி அவளை சீண்டினான்.

கிஷோரின் கேள்வியில் பற்களை அழுந்த கடித்தவள் கை முஷ்டிகளை மடக்கி ஆவென்று வெறி பிடித்தவள் போன்று கத்தியபடி அவனின் தோள்களிலே பல அடிகளை பரிசாக வழங்கினாள்.

அவளின் உரிமையான அடி கூட வருடல் போன்ற இன்பத்தை அளிக்க, சந்தோஷியின் கரம் பற்றி அவள் அடிப்பதை தடை செய்தவன்… அவள் என்னவென்று உணரும் முன்பு இழுத்து அணைத்திருந்தான்.

கிஷோர் தன்னை காதலிக்கின்றான் என்பது அவளுக்கு நன்கு தெரியும், இருப்பினும் அவனது வாய் வார்த்தையாக இன்னும் ஒருமுறை கூட கேட்டிடாது.. அவனின் அணைப்பை ஏற்க முடியாது தவித்தவள், அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.

தன்னவளின் விலகல் முயற்சியை புரிந்துகொண்டவன்… “ப்ளீஸ் டி, கொஞ்ச நேரம் இப்படியே இரு… மனசெல்லாம் லேசா மிதக்கிற மாதிரியிருக்கு” என்றான்.

அவனின் வார்த்தைகளுக்கு கட்டுண்டவளாய் அவளும் தனது விலகல் முயற்சியை கைவிடுத்து, தன்னவனின் முதல் அணைப்பினை ஆழ்ந்து அனுபவிக்கத் துவங்கினாள்.

கிஷோரின் அருகாமை தந்த மகிழ்வில் மூழ்கிக்கொண்டிருந்தவளின், முன் நெற்றியில் வழிந்த கற்றை கூந்தலை காதோரம் ஒதுக்கியவன், அவளின் காது மடலில் தனது இதழ் உரசியவாறு… மனதிலிருந்து ஆழ்ந்து அனுபவித்து, “என் வாழ்வின் சந்தோஷத்தை அளித்திட எனக்கு வரமாய் வந்த சந்தோஷி நீ” என்றவன் சிறு அமைதிக்கு பின் “ஐ லவ் யூ” எனக் கூறினான்.

தன்னவனின் வார்த்தைகளை ஆழ்ந்து மனம் முழுக்க நிரப்பியவள், “ஐ லவ் யூ டூ” என்று பதில் வழங்கினாள்.

அவள் பதிலில் சிலிர்த்து அடங்கியவன்… அவளை ஒரு கரத்தால் அணைத்தவாறு மற்றொரு கரத்தினில் வீற்றிருந்த இன்விடேஷனை பிரித்து.. தனது பெயரும் தன் மனதில் வாசம் செய்பவளின் பெயரையும் சில கணங்கள் உற்று பார்த்து ரசித்தவன்… அதிலிருக்கும் சாராம்சத்தை படிக்க படிக்க தானெப்படி உணர்கின்றோமென்று அவனுக்கேத் தெரியவில்லை.

உள்ளம் முழுக்க காதல் ஈடேறிவிட்ட மகிழ்வையும் தாண்டி ஏதோ இனம் புரியா சந்தோஷம் கிஷோரை ஆட்கொண்டது.

அவனின் சந்தோஷத்தை உடலால் உணர்ந்தவள், கிஷோரிடமிருந்து பிரிந்து என்னவென்று வினவ, அவனோ.. தன் கையிலிருந்த அழைப்பிதழை சுட்டிக்காட்டினான்.

ஆனந்தத்தின் உச்சபட்சமாய் கிஷோரின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

காரணம்…. கிஷோரின் தாய் தந்தை இடத்தில் ஆதர்ஷின் பெற்றோரின் பெயர் அச்சிடப்பட்டிருந்தது. தனக்கு தன் நண்பன் நட்பின் எல்லையை குடும்பம் என்ற வட்டத்திற்குள் இடம் மாற்றி விட்டான் என்பதை உணர்ந்தவனின் மனதில் ஆதர்ஷின் மீதான நண்பன் என்ற அன்பு, நட்பு என்பதையும் தாண்டியும் பல படிகள் உயர்ந்து நின்றது.

ஆதர்ஷ் எவ்வித இடற்பாடான சூழலிலும் தனக்கொரு நண்பனாக முன் நிற்பான் என்று நினைத்திருந்தவனுக்கு ஆதர்ஷின் சகோதர உரிமை ஆச்சரியத்துடன் ஆனந்தத்தையே அளித்தது. இத்தகைய நட்பினை பெறுவதற்கு தான் கொடுத்து வைத்திருப்பதாகவே எண்ணினான்.

அழைப்பிதழின் அடுத்த பக்கம் கிஷோருக்கு அதிர்வை ஏற்படுத்தியது.

தனது உடலில் பரவிய அதிர்வு, சிறிதும் குறையாது, “நீ… நீ… வினு தங்கையா?” எனக் கேட்டிருந்தான்.

சந்தோஷி சிறு தயக்கத்துடன் ஆமென்பதை போல் மெல்ல தலையசைக்க,

“நோ…” என்று வீடே எதிரொலிக்க கத்தியவன், கோச்சில் தொப்பென்று அமர்ந்தான்.

ஏதோ தன் நண்பனுக்கு தான் துரோகம் இழைத்துவிட்டதாக உள்ளுக்குள் குமுறினான்.

அவனின் அதிர்வு, மனகுன்றல் இதெல்லாம் எதற்கு என்று அறிந்தவள் அவனை நெருங்கி அமர்ந்து, அவனின் கரத்தோடு தன் கரம் கோர்த்து…

“நீங்க யாருக்கும் துரோகம் செய்யல. வினு சம்மதமின்றி எனக்குள் உங்க மீதான காதல் தோன்றியிருக்கலாம். ஆனால், அவனுக்கு தெரியாம நான் உங்களை காதலிக்கவில்லை. நான் உங்களை நேசிப்பது உங்களுக்கு முன்பே, மஹிக்கும் வினுவிற்கும் தெரியும்” என்க, கிஷோரின் அதிர்ச்சி அதிகரித்தது.

“வினுவிற்கு தெரிந்து தான் தன்னை காதலித்தாளா? ஆனால், இத்தனை வருடத்தில் ஒருமுறை கூட என்னிடம் அவன் ஏன் இதைப்பற்றி பேசவில்லை. அன்னைக்கு நம்ம இருவரையும் ஒன்றாக ஹோட்டலில் பார்த்த போது இருவருமே ஒருவருக்கொருவர் தெரியாத மாதிரி இருந்தீங்களே!” தனது சந்தேகங்களையெல்லாம் அவன் கேள்விகளாய் அடுக்கினான்.

“நான் வினு தங்கை தெரிந்தால்… எங்க என்னை காதலிக்க மறுத்துவிடுவீங்களோன்னு, நான் தான் சொல்ல வேண்டாமென்று வினுவைத் தடுத்திருந்தேன். அதுமட்டுமில்லாம, ஏற்கனவே உங்களுக்கு துரோகம்…” என எதையோ சொல்ல வந்தவள் பாதியிலேயே நிறுத்தி விட, தனக்கு தெரியாமல் இன்னும் என்னவெல்லாம் நடந்திருக்கின்றதோ என்று யோசித்தவன் அவள் நிறுத்திய பாதியை கவனிக்ககிவில்லை.

இருப்பினும் இனியும் இவனிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லையென எண்ணியவள்.. அவனது முகம் பார்க்க, “இன்னும் என்னிடம் என்னவெல்லாம் மறைத்திருக்கீங்க” என வினவினான்.

அவனது தீர்க்கமான பார்வையே, இனியும் நீ என்னிடம் எதையும் மறைக்கக்கூடாதென்று சொல்லாமல் சொல்லியது.

எப்படியும் சொல்லித்தானாக வேண்டுமென நினைத்தவள் கிஷோர் அறிந்திடாதவற்றை மெல்லக் கூறினாள்.

ஏழு வருடங்களுக்கு முன்பு…. கடற்கரையில் கிஷோர் குடித்துவிட்டு அழுது புலம்பிய அன்று… அவனை கண்டு அவனது அழுகையில் காதல் கொண்ட சந்தோஷி, கிஷோரை அப்படியே விட்டு செல்ல மனமின்றி தன்னுடன் வந்திருந்த தோழிகள் அழைத்தும் அவர்களுடன் வீடு செல்ல மறுத்துவிட்டாள்.

நேரம் செல்ல செல்ல…. கடற்கரையில் ஆள் நடமாட்டம் குறைய ஆரம்பித்தது. இனி இங்கிருப்பது ஆபத்தென எண்ணியவள், என்ன செய்யலாமென யோசித்த நொடி… இன்னும் தங்கை வீட்டிற்கு வந்து சேரவில்லையென கவலைகொண்ட வினு சந்தோஷிக்கு அழைக்க… தான் கடற்கரையில் இருப்பதாகவும், தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு மட்டும் கூறியவள் கிஷோரைப் பற்றி எதுவும் சொல்லாது மொபைலை வைத்துவிட்டாள்.

இந்நேரத்தில் அவள் கடற்கரையில் என்ன செய்கிறாளென்று ஒரு அண்ணனாக பதறியவன் விரைந்து அங்கு செல்ல, சந்தோஷி தானமர்ந்திருப்பதாக சொல்லிய சிறு படகருகே சென்றபோது அவன் கண்ட காட்சி இது தான்.

மணலில் சுயமிழந்து கண்ணீரோடு பிதற்றியபடி கிஷோர் விழுந்து கிடக்க, அந்நிலையிலும் அவனை ரசித்தவாறு, அவனருகே… கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள் வினுவின் தங்கை.

கிஷோரை அந்நிலையில் கண்டதும், நெஞ்சம் துடிக்க… “டேய் கிஷோர்” என்று அவனருகில் வினு மண்டியிட்டு கிஷோரின் கன்னம் தட்ட,

“மச்சி வந்துட்டீயா டா? என்னை நீ மன்னிப்பியாடா?” என்று உளறினான்.

‘இவன் எதற்கு என்னிடம் மன்னிப்பு கேட்கிறான்…’ யோசித்த வினு தங்கையிடம் திரும்பி கிஷோரை எப்படி உனக்குத் தெரியுமென்றான்.

தன்னை அழைக்க வந்த தனது அண்ணன், இங்கு வந்ததும் தன்னை கண்டுகொள்ளாது.. விழுந்து கிடப்பவனை தட்டி எழுப்புவதை ஆச்சரியமாகப் பார்த்தவள்… வினு தன்னிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காது…

“டேய் அண்ணா நீ லவ் பண்றியா டா?” எனக் கேட்டாள்.

ஒரு நொடி தங்கையின் கேள்வியில் குழம்பியவன்… உனக்கெப்படித் தெரியுமென்க,

“ஏன்டா அண்ணா பிரண்ட்ஸ் அப்படின்னா… எல்லாம் ஷார் பண்ணிப்பாங்கன்னு தெரியும் அதுக்காக ஒரே பொண்ணையா டா ரெண்டு பேரும் லவ் பண்ணுவீங்க?”

அவள் கேட்டதில் வினுவின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

ஹேய்… என்ன உளர்ற?”

வினு தன் தங்கையிடம் கடிந்துக் கொண்ட சமயம்,

“சாரிடா மச்சான்… வைஷூ நீ காதலிக்கும் பெண்ணென்று எனக்குத் தெரியாதுடா… தெரிந்திருந்தால் நான் அவளை பார்த்திருக்கக் கூட மாட்டேன்” என்று கிஷோர் பிதற்றினான்.

அவனின் வார்த்தைகளில் அனைத்தும் புரிந்துவிட, மணலில் மண்டியிட்டு அமர்ந்த வினு முகத்தை கை கொண்டு மறைத்தவனாய் தன்னையே நிந்தித்தான்.

ஒருவருக்கொருவர் வருந்துவதை கண்ட சந்தோஷி அவர்களுக்கிடையே எத்தகைய ஆழமான நட்பிருக்க வேண்டுமென புரிந்து கொண்டாள்.

தன் அண்ணனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் சந்தோஷி நின்றிருக்க,

“இந்நேரத்தில் இங்கு என்ன பண்றீங்க?” என்று திடீரென ஒலித்த குரலில் வினுவும், சந்தோஷியும் நிமிர்ந்து பார்க்க அங்கு மஹி நின்று கொண்டிருந்தாள்.

வழக்கம்போல் இரவு நேர பைக் பயணத்திற்காக, வீட்டில் யாருக்கும் தெரியாது ஊர் சுற்ற கடற்கரைக்கு வந்த மஹியின் கண்களில் இவர்கள் மாட்டிக்கொண்டனர்.

வினு என்ன சொல்வதென்று தெரியாது விழிக்க….

அலையை கிழித்துக்கொண்டு மஹி ஓட்டி வந்த ஸ்போர்ட்ஸ் ரக பைக் நின்றுகொண்டிருப்பதை பார்த்த சந்தோஷி, “அக்கா இதை நீங்களா ஓட்டி வந்தீங்க” என வாய் பிளக்க, சிறு புன்னகையில் ஆமென பதிலளித்த மஹி மீண்டும் வினுவின் பக்கம் திரும்ப அப்போதுதான் அவள் கிஷோர் மணலில் கிடப்பதை பார்த்தாள்.

“என்ன சரக்கா…” மஹி கேட்டிருக்க,

“சாரிடா மச்சான் வைஷூ நீ காதலிக்கும் பெண்ணென்று எனக்குத் தெரியாதுடா… தெரிந்திருந்தால் நான் அவளை பார்த்திருக்கக் கூட மாட்டேன்” என்று கிஷோர் மீண்டும் தன் வார்த்தகளை மாற்றாது பிதற்றினான்.

ஓரளவிற்கு மஹிக்கு அனைத்தும் புரிந்தது.

“நீயும், வைஷூவும் லவ் பண்றீங்க தெரியும். மேடம் ஈவ்னிங் தான் என்கிட்ட சொன்னாள். பட் கிஷோர் எப்படி?” மஹி யோசித்தாள்.

“ஹேய் ஆம்பள பையா.. வா… வா…. வா…” அந்த நிலையிலும் கிஷோர் மஹியைக் கண்டு கொண்டு அழைக்க, முதல் முறையாக மஹி கிஷோரிடம் கோபம் கொள்ளாது தன்மையாக “எதற்கு?” என்றாள்.

தனக்கருகிலேயே அமர்ந்திருக்கும் மற்றும் நின்றிருக்கும் வினு, சந்தோஷியை இடித்தபடி… மஹியின் கரம் பற்றி இழுத்து, தானும் எழுந்தமர்ந்து தனக்கு எதிரே மஹியையும் அமர வைத்த கிஷோர்…

“ஷ் ஷ் ஷ்…” தன் வாயில் ஒற்றை விரல் வைத்து ஷ் என்ற பெரும் சப்தத்துடன், சுற்றி பார்வையை சுழற்றி, “உனக்கொரு சீக்ரெட் சொல்லட்டுமா?” என்க, மஹியும் தன் வாழ் நாளிலே அன்று தான் பொறுமை என்பதை அறிந்து கொண்டவளாக சொல் என்றாள்.

“எல்லாம் போச்சு… வாழ்க்கையே போச்சு…” உதட்டினை பிதுக்கி, இரண்டு கை விரல்களையும் ஒன்றுமில்லையென அகல விரித்துக் கூறினான்.

அவனின் அச்செயல் சந்தோஷிக்கு உள்ளுக்குள் வலியை ஏற்படுத்த, வினு தன்னால் தானென்று மருகினான்.

“எனக்குன்னு சொந்தம் சொல்லிக்க யாருமேயில்லை தெரியுமா?” சிறு பிள்ளையெனக் கேட்டபவனிடத்தில், எமோஷனல் என்றாலே என்னவென்று அறிந்திடாத மஹிக்கும் இரக்கம் தோன்றியது.

“எனக்குன்னு வர போறவள் தான்… எல்லாமே… எல்லாமே, ஏன் இந்த உலகமே அவள் தான், நான் பார்த்திடாத சொந்தத்தையெல்லாம் அவள் ஒருத்தியிடத்தில் அனுபவித்திட நினைத்த என் ஆசையெல்லாம் மண்ணா போச்சு…” துடித்து பிதற்றுபவனை தேற்றும் வழியின்றி வினு கலங்கி நிற்க… எதையும் யோசியாது, கிஷோரை தன் தோளில் சாய்த்த மஹி…

“இப்போ உனக்கு யாரும் இல்லையென்பது தானே உன் பிரோப்ளேம், நீ என்னை உன் சிஸ்டரா நினைத்துக்கோ…” எந்தவொரு உறவிலும் சிக்கிக்கொள்ளக் கூடாதென்று பீலிங்ஸ் எமோஷனல் ஆகியவற்றிலிருந்து தள்ளியிருந்தவள் தன்னையுமாறியாது கிஷோருக்கு உறவாகினாள்.

மஹியின் வார்த்தைகள் வினுவிற்கே அதிசயமாகத் தானிருந்தது.

மஹி சொல்லியது கிஷோருக்கு எப்படிப்பட்ட உணர்வினைத் தோற்றுவித்ததோ தெரியவில்லை… ஆனால், மஹியின் முகத்தை மதுவின் போதை நிறைந்த தன் விழிகளால் உற்று பார்த்தவன்…

“நீ என் தம்பிடா!” எனக் கூறி அணைத்துக் கொள்ள… அடுத்து என்ன செய்வதென்று தெரியாது தடுமாறிய மஹியும் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, அவனின் முதுகை ஆதரவாய் தடவி கொடுத்தாள்.

முதல் முறை அன்பின் அரவணைப்பை உணர்ந்ததாலோ என்னவோ, போதையினூடே கண்கள் சொருக அடுத்த கணமே உறங்கியும் போனான்.

நடப்பது எதுவும் புரியாது விழித்தபடி நின்றிருந்த வினுவை பார்த்த மஹி… “நீ இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை, வைஷூ உன்னைத் தான் விரும்புறாள். சோ, நீ உன் நண்பனுக்காக வருந்துவதை நிறுத்து. கிஷோர் உளருவதிலே அவன் இதிலிருந்து வெளியேறிடுவான் உனக்குத் தெரியவில்லையா?” எனக் கேட்ட மஹி சந்தோஷியை நோக்கி அர்த்தமான பார்வை ஒன்றை வீச,

மஹியின் பார்வையில் என்ன உணர்ந்து கொண்டாளோ… தன் அண்ணனை நேருக்கு நேராக பார்த்து, “அண்ணா நான் கிஷோரை நேசிக்கத் தொடங்கிட்டேன்” என்றாள்.

சிறு பெண் என்பதையும் தாண்டி சந்தோஷியின் வார்த்தையிலிருந்த தெளிவும், அழுத்தமும்… எப்படி, எதனால் என்ற வினாக்களை கடந்து தன் தங்கை சொல்லியதை எவ்வித மறுப்புமின்றி ஏற்க வைத்தது.

அதன் பிறகு தன் அண்ணனிடமிருந்தே கிஷோரின் எண்ணை பெற்றுக்கொண்டாள்.

வினு எல்லாம் சரியாகிவிடுமென்ற நம்பிக்கையில் கிஷோரை அவனது அறையில் தான் விட்டுவிட்டு வருவதாகக் கூறியவன், சந்தோஷியை ட்ராப் செய்யுமாறு மஹியிடம் கேட்டுக்கொண்டான்.

பைக்கில் செல்லும்போது, “எப்படிக்கா கண்டுபிடித்தீங்க?” என்ற சந்தோஷிக்கு, “அதான் நீ அவனை பார்த்துக்கொண்டிருந்த பார்வையே காட்டிக்கொடுத்ததே… அப்பட்டமா சைட் அடிக்கிற” எனக் கூறி சிரித்த மஹி… “உன் படிப்பு முடியும்வரை நீ அமைதியாதான் இருக்க வேண்டும். கிஷோருக்கும் இதிலிருந்து வெளிவர நாட்களாகும்” என்று வலியுறுத்தினாள்.

அன்றிலிருந்து மஹிக்கு சந்தோஷி தோழியானாள்.

நடந்ததை சொல்லி முடித்ததும் என்ன சொல்ல போகின்றானென சிறு பயத்துடன் சந்தோஷி கிஷோரின் முகத்தை பார்த்திருக்க…

“அந்த ஆம்பள பையன்கிட்ட நான் இவ்வளவு உரிமையா பேசினேனா… எனக்கு நினைவில்லையே” என்றவன் யோசிக்கும் பொருட்டு தன் நெற்றியை தேய்த்துக்கொண்டான்.

“தான் யார் என்பதையே மறக்குமளவிற்கு குடித்திருந்தவருக்கு.. மற்றவர்களெப்படி நினைவிலிருக்க முடியும்?” என்ற சந்தோஷியின் முணுமுணுப்பு நன்றாகவே கிஷோரின் செவி நுழைந்தது.

தன்னவளை முறைத்தவன், “இருடி உன்னை கல்யாணம் முடிந்ததும் கவனித்துக்கொள்கிறேன்” என்க…

“மக்கும் காதலை சொல்வதற்கே திணறிய ஆளு, அப்படியென்ன செஞ்சிடப் போறீங்க” என்று நொடித்தவளாய்.. தன் வாய் பேச்சிற்கு அவன் என்ன வேண்டுமானாலும் செய்வானென்று நினைத்தவள் மாலை மண்டபத்தில் சந்திக்கலாமென்று ஓடியே விட்டாள்.

தனக்கு உறவென்று யாருமில்லையென தான் வருந்தியதெல்லாம் வீணென்று நினைத்த கிஷோர்.. அந்த நிமிட தன் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள ஆதர்ஷிற்கு அழைப்பு விடுத்த தருணம் அவனின் வீட்டு வாயிலில் விஷ்ணு மற்றும் ஜானகி நின்றிருந்தனர்.

error: Content is protected !!
Scroll to Top