ரவுடி பேபி 21

அத்தியாயம் 21

நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் அந்த பிரம்மாண்டமான திருமண மண்டபமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

காரணம் விடிந்ததும் நடைபெறவிருக்கும் மூன்று திருமணம்.

வந்திருப்போர் அனைவரும் எப்போதாவது இது போன்ற விழாக்களில் காண கிடைக்கும் உறவினர்களுடன் அமர்ந்து நினைவுகளை மலரச் செய்து கொண்டிருக்க, பல வண்ண விளக்குகள் முழுவதும் மண்டபத்தை அலங்கரிக்க.. அங்கே வண்ணத்துப்பூச்சியாய் சிறுவர் சிறுமியர் சிறகடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

பெரிய இடத்து திருமணம் என்பதால் கூட்டத்திற்கு குறைவில்லை.

பெண்ணழைப்பு முடிந்து நடைபெற வேண்டிய சடங்குகள் நிறைவடைந்ததும், வரவேற்பு திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்கு பிறகு என்பதால் மணமக்கள் தாம்தம் அறைகளில் முடங்கியிருந்தனர்.

சந்தோஷி, வைஷ்ணவி மட்டுமே பெண்ணழைப்பில் இடம் பெற்றிருந்தனர். நமது ரவுடி பேபி என்ன செய்ய காத்திருக்கின்றாளோ. ஆதர்ஷ் நினைப்பதைப் போன்று அவனின் காதல் மனதை குளிர்விப்பாளா அல்லது மேலும் வெம்மையை அதிகரிப்பாளோ.

விஷ்ணு, நாதனிற்கு படபடப்பு நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே இருந்தது. நடக்கும் எதற்கும் எனக்கு துளியும் சம்மதமில்லை என்பதை போல் ஒதுங்கி ஒதுங்கி செல்லும் ஆதர்ஷின் நிலை  மேலும் கலக்கம் கொள்ள செய்தது.

வினு வேலை விஷயமாக மாட்டிக்கொண்டதால்… பெண்ணழைப்பு முடிந்த பிறகே மண்டபத்திற்கு வருகை தந்தான். அவனின் பெற்றோர் அவனை கடிந்து கொண்டதோடு விஷ்ணுவுடன் பேச வேண்டுமெனக் கூற… சிறிது யோசித்தவன்,

“முதலில் என் மச்சானை நான் பார்த்துட்டு, பிறகு உங்களை அவனிடம் அழைத்துச் செல்கிறேன்” என்றவன் அவர்களிடமிருந்து நழுவினான்.

அறையின் பால்கனியில் நின்று கொண்டிருந்த கிஷோரின் மனம் முழுக்க நிறைந்திருந்தது.

இன்று நடந்த நல்ல விஷியங்கள் யாவற்றையும் மீண்டும் மீண்டும் நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றான். கிடைக்கவே கிடைக்காதென நினைத்த சொந்தமெல்லாம் கிடைத்துவிட்ட பூரிப்பு அவனிடத்தில்,

சந்தோஷி நடந்ததையெல்லாம் கூறிச் சென்ற பிறகு… இப்படியொரு நட்பு கிடைக்க ஏதோ ஒரு பிறவியில் நிச்சயம் புண்ணியம் செய்திருக்கிறேன் என்று நினைத்தவன்… அந்நொடியே ஆதர்ஷை பார்க்கத் துடிக்க, அவனுக்கு அழைப்பு விடுத்த நொடி வாயிலில் கேட்ட, “உள்ளே வரலாமா?” என்ற குரலில் திரும்பி பார்த்த கிஷோர்… விஷ்ணு மற்றும் ஜானகியை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

“வாங்க… உள்ள வாங்க…”

மரியாதையுடன் வரவேற்றவனை பாசமாக இருவரும் பார்க்க.. அவர்களின் பார்வையின் பொருள் புரியாது நின்றிருப்பவனிடம்..

“என்னடா… முதல்முறையா அப்பா அம்மா உன் வீட்டிற்கு வந்திருக்கோம். நீ அப்படியே சிலை மாதிரி நிக்கிற?” எனக் கேட்டார் ஜானகி.

ஜானகி கூறிய அப்பா அம்மா என்ற வார்த்தை அவனையும் அறியாது அவனின் கண்களிலிருந்து சரேலென கண்ணீரை வழிந்தோட செய்தது.

மகனின் கண்ணீரில் தாயாய் பதறிய ஜானகி… “எதுக்கு இந்த அழுகை, தனியாயிருந்தால் இப்படிதான் கண்டதை நினைக்கத் தோன்றும். வா நம் வீட்டிற்கு போகலாம்” என உரிமையோடு அழைத்தார்.

கிஷோர் விஷ்ணுவை பார்க்க, அவரும் வாவென்பதை போன்று தலையசைத்து… “இவ்வளவு நாட்கள் உன்னை தனிமையில் இருக்க விட்டதற்கு சாரிப்பா” என்றார்.

எங்களது பிள்ளையின் உயிர் நண்பன் எங்களுக்கும் மகன் தான்.. உன் திருமணம் நம் வீட்டிலிருந்து நடப்பது தான் நன்றாகயிருக்கும் என்றவர்கள் கையோடு அவனை நாதன் இல்லத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.

திருமணத்தின் போது ஆதர்ஷிற்கு செய்த அனைத்தும் கிஷோருக்கும் அவர்கள் வீட்டு பிள்ளையாய் அனைத்தையும் செய்தனர்.

இதற்கெல்லாம் காரணமான ஆதர்ஷிடம் என்ன சொல்வதென்று தெரியாது, அவனை ஆரத் தழுவியவன்.. நிமிடங்கள் பல கடந்தும் ஆதர்ஷை விடுவதாய் தெரியவில்லை.

“சந்தோஷிக்கு தெரிந்தால் என்னை கொலை செய்தாலும் செய்துவிடுவாள்” என்ற ஆதர்ஷின் கேலியில் அவனை விட்டு பிரிந்த கிஷோர்… “ஐ லவ் யூ டா மச்சான்” எனக்கூறி ஆதர்ஷின் கன்னத்தில் முத்தம் ஒன்றையும் வைத்து.. “இதையும் அவளிடம் சேர்த்து சொல்” என்றவனாய் ஓடிவிட்டான்.

பல வருடங்களுக்கு பிறகு கிஷோரின் முகத்தில் உண்மையான சந்தோஷத்தை கண்ட ஆதர்ஷின் கண்களும் சந்தோஷத்தில் பனித்தன.

இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்த கிஷோரின் தோளில் கைகளை போட்டவாறு அவனருகில் வந்து நின்றான் வினேஷ்.

இந்நேரம் நடந்த யாவும் தங்கையின் வாயிலாக கிஷோர் அறிந்திருப்பானென தெரிந்த வினுவிற்கு அவனை பார்ப்பதே சங்கடமாக இருந்தது.

அதனை உணர்ந்தவன் போல்… வினுவிடத்தில் எதுவும் பேசாது, “தேங்க்ஸ்” என்ற ஒற்றை வார்த்தையோடு அவனை அணைத்து விடுவித்தான் கிஷோர்.

அந்த அணைப்பு சொல்லாமல் சொல்லியது… நமக்குள் எவ்வித சங்கடமுமில்லையென, வார்த்தைகளற்ற மௌனம் நடந்த யாவையும் மறக்கச் சொல்லியது. அவர்களிடத்தில் நட்பே வெற்றியடைந்தது.

அதன் பின்னர், வினு தனது பெற்றோருக்கு தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக கிஷோரை அறிமுகப்படுத்த பேச வேண்டிய எல்லாம் பேசி அரட்டைகளெல்லாம் முடிந்து வினுவும், கிஷோரும் அறைக்குள் நுழைந்த சமயம் ஆது நல்ல உறக்கத்திலிருந்தான்.

வினு அமைதியாக சென்று மற்றொரு படுக்கையில் விழுந்து உறக்கத்திற்கு செல்ல, உறங்கும் ஆதுவையே பார்த்திருந்த கிஷோருக்கு அவனின் முகத்தில் படர்ந்திருந்த மெல்லிய சோகம் நன்கு தெரிந்தது.

தனது வாழ்க்கையையே சந்தோஷமாக மாற்றியமைத்த தன் ஆதுவின் சோகத்தை களைந்திட நினைத்த கிஷோர் மஹியை சந்திக்க அந்நேரத்தில் புறப்பட்டான்.

***************

நாளை மாலை சிபிசிஐடி அலுவலகத்தில் தனது தந்தையின் கேஸ் தீர்ப்புக்கு வருகிறது… இதில் எப்படியும் வேந்தன் தப்பித்து விட கூடாதென்று நினைத்த மஹி… எந்தளவிற்கு உண்மையாக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டிருக்கும் என்பதை யோசித்தவளாய், பத்மநாபனின் நம்பிக்கைக்குரிய ஆளான ராகவின் தனிப்பட்ட அறையை சோதனையிட திட்டம் தீட்டி நள்ளிரவில் அங்கு செல்ல முடிவெடுத்து அதற்கு ஆயத்தமாகத் தொடங்கிய வேளையில் கிஷோர் வந்திருந்தான்.

ஆது, வைஷூ திருமணத்திற்கு முன் அதே மேடையில் தனக்கும் கிஷோருக்கும் திருமணமென்று சந்தோஷி மூலம் தெரிந்திருந்த மஹி, இந்நேரத்தில் மண்டபத்தில் இல்லாமல் என்னை எதற்கு பார்க்க வந்திருக்கிறானென்று யோசிக்க…

இந்நேரத்தில் தூங்காது எங்கு செல்ல கிளம்புகிறாளென்று கிஷோர் அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.

“எங்கம்மா கிளம்பிட்ட இந்நேரத்தில்?”

மனதில் நினைத்ததை அவளிடம் கேட்டும் விட்டான்.

எப்போதும் ஆம்பள பையனாகத் தோன்றும் அவன் மனதில் சந்தோஷி சொல்லியதை கேட்ட பிறகு மஹியை தனது உடன் பிறப்பாக பார்க்கத் தொடங்கினான்.

கிஷோரின் கனிவான ம்மா என்ற விளிப்பு மஹியின் புருவத்தை தானாக உயர வைத்தாலும், நேரத்தை வீணாகக் கடத்தக் கூடாதென.. என்னுடன் வாவென்று அவனையும் இழுத்துக் கொண்டு சென்று பைக்கில் தனக்கு பின் அமர செய்தவள் மிகுந்த வேகத்தில் வண்டியை செலுத்தினாள்.

“மஹி…”

அவள் ஓட்டும் வேகம் பீதியை கிளப்ப, பயத்தில் அலறினான்.

“மஹிரா…” தனது பெயரை முழுதாக அழைக்குமாறு கூறியவள், வாய் மூடிக்கொண்டு வாவென அவனை அடக்கினாள்.

“இந்த ஆம்பள பையன் எப்பவும் மாறப் போவதில்லை” என அவன் நினைத்து முடிக்கும் முன்… பைக் அவனின் திருமணம் நடைபெறவிருக்கும் மண்டபத்தின் முன் நின்றது.

மண்டபத்தையும் அவனையும் பார்த்தவள், “உள்ள போ” எனக்கூறி அங்கிருந்து காற்றாய் பறந்துவிட்டாள்.

தன்னை பேச விடாது விட்டுச் சென்றவளின் மீது கிஷோருக்கு கோபம் கோபமாக வந்தது.

“எனக்கு இங்கு வரத் தெரியாதா…” முணுமுணுத்தவன் அதே கோபத்தோடு அறைக்குள் சென்று ஆதுவின் பக்கத்தில் படுத்துக் கொண்டான்.

கிஷோர் எதற்காக தன்னை இந்த நேரத்தில் சந்திக்க வந்திருக்கின்றானென நன்கு தெரிந்த மஹி, நிச்சயம் நாளை உன் நண்பனின் காதல் ஈடேறுமென கிஷோருக்கு மானசீகமாக பதிலனுப்பினாள்.

******************

“அம்முலு…”

தனது நெஞ்சத்தில் துயில் கொண்டிருப்பவளை மெல்ல எழுப்பிக் கொண்டிருந்தான் ராகவ்.

அவளிடம் சிறு அசைவு கூட இல்லை.

விபத்தினால் குன்றியிருந்த கௌசியின் உடல் நன்கு தேறி… இன்று காலை தான் மருத்துவரிடம் அனைத்து விதமான பரிசோதனையும் முடிந்து…

“ஷீ இஸ் பேர்பெக்ட்லி ஆல்ரைட்” என மருத்துவர் கூறிய பின்பு தான் ராகவிடம் பழைய துள்ளல் மீண்டது.

அவனின் துள்ளலிற்கான காரணம் தெரிந்த அவனின் மனையாளோ வெளிப்படையாகவே சிரித்துக் கொண்டாள்.

“என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கா? இவ்வளவு அழகான மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டு தொடாமல் கூட இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” அப்பாவியாகக் கூறியவன், “இவ்வளவு நாள் விரதம் இருந்ததற்கு ஒட்டு மொத்தமா இன்னைக்கு” எனக்கூறி அவளை அதிர வைத்தான்.

சொன்னது போலவே செய்து, நள்ளிரவு கடந்து தான் தன்னவளை உறங்கவே அனுமதித்திருந்தான். முதல் முறையாக அவன் கண்ட இன்பம், மீண்டும் வேண்டுமெனத் தோன்ற முதல் கூடலில் ஏற்பட்ட அசதியில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் கௌசியை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான்.

உடல் குணமாகி ஓரிரு நாட்கள் தானாகின்றன, அதற்குள் படுத்தி எடுக்கின்றமோ என சிந்தித்தவன்… அவளை மெல்ல படுக்கையில் கிடத்திட்டு பால்கனியில் வந்து நின்று கொண்டான்.

கிஷோரை இறக்கி விட்டு ராகவின் வீட்டிற்கு வந்த மஹி சிறிது தொலைவிலேயே தனது வண்டியை நிறுத்திவிட்டு, ஏற்கனவே கண்காணித்திருந்தபடி நாய்கள் இல்லையென உறுதி செய்து கொண்டவள், காவலாளி அசந்த நேரம் நொடியும் தாமதியாது மதில் சுவரைத் தாண்டி உள்ளே தோட்டத்தில் குதித்திருந்தாள்.

வீட்டிற்குள்ளே எப்படி செல்வதென்று சுற்றி விழிகளை சுழற்றியவாறு, ஏதேனும் வழி தென்படுகிறதாவென்று கூர்ந்து நோக்கியவளை சட்டென்று திரும்பி பார்க்க வைத்தது அவளின் முதுகுப்புறம் ஒலித்த ராகவின் குரல்.

“வெல்கம் டூ மை ஸ்வீட் ஹோம்.”

பால்கனியில் நின்றிருந்த ராகவ், மஹி மதில் சுவற்றின் மீது ஏறி நின்றபோதே அவளை கண்டு கொண்டான். எப்படியும் வீட்டிற்குள் அவளால் வர முடியாதென்று எண்ணியவன் தானே தோட்டத்திற்கு வந்து அவளை வரவேற்றான்.

அந்நேரத்தில் ராகவ் விழித்திருப்பானென்று நினைத்திடாதவள், தன் அதிர்வை அவனுக்கு காட்டாமல் மிடுக்காகவே அவன் முன் நின்றாள்.

மஹியின் தைரியத்தை உள்ளுக்குள் மெச்சியவன், மீண்டுமொருமுறை அவளை உள்ளே அழைக்க, மஹி அசையாது நின்றிருந்தாள்.

மஹி எதற்காக இவ்வேளையில் இங்கு வந்திருப்பாளென்று யூகித்தவன்,

“நிச்சயம் நீ தேடி வந்த எந்தவொரு ஆதாரமும் என்னிடமில்லை.” அவன் கண்களில் தெரிந்த தீர்க்கமே அவன் பொய்யுரைக்கவில்லையென மஹிக்கு உணர்த்தியது.

இருப்பினும் மஹி ராகவினை கூர்ந்து நோக்க,

“உன்னை விட பல மடங்கு ஆத்திரம் பத்மநாபன் மீது எனக்கிருக்கு. இருந்தாலும் நான் ஏன் அமைதியா இருக்கேன் தெரியுமா?” என்றவன், இப்போது இவளிடத்தில் ஆதர்ஷின் பெயரை சொல்வது சரிவருமாயென சிந்தித்து, தான் சொல்ல வருவதை நிறுத்தினான்.

தான் கூற வருவதை கேட்பதற்கு தயாராக இருப்பவளிடம், “உனக்கான விடைகள் யாவும் நாளை தெரிந்துவிடும்” என்றான்.

இதற்குமேலும் இங்கிருப்பது வீணென கருதியவள் வந்த வழியே திரும்பி செல்ல நடக்க,

“சுவரேறி குதித்துதான் செல்ல வேண்டுமென்றில்லை… என் வீட்டிற்கு வாசலும் இருக்கு” என வீட்டு கேட்டினை கைக்காட்டி மஹியின் நடையை நிறுத்தினான்.

“எனக்கு எப்போதும் என் வழியில் செல்வது தான் விருப்பம்” என்றவள், ஒரே தாவலில் மதில் சுவர் மீது ஏறி நிற்க… “நான் வேண்டுமானா உன்னுடன் துணைக்கு வரவா?” எனக் கேட்டவனை முறைத்து பார்த்தவள்… “எப்போதும் யாரையும் நம்பி நானிருந்ததில்லை” என்றவளாக ராகவின் விழி வட்டத்திலிருந்து மறைந்தாள்.

அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தவளின் கண்ணில் பட்டது… ஆதர்ஷ் வைஷூ பெயர் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்.

ராகவ் அன்று அவளின் அலுவலகத்தில் கூறிய… “எப்போதும் உனக்குத் தெரியாமலே எல்லாவித சந்தர்ப்பங்களிலும் உனக்கு உதவி செய்யும் ஆதுவின் உதவியை கூட மறுத்துவிடுவாயா?” என்ற வரிகளும், இப்போது அவனது வீட்டில் உனக்கான விடைகள் யாவும் நாளை தெரிந்துவிடும் என்பதிலும் எதுவோ புரிவது போலிருந்தது. ஆனால், என்னவென்று அவளால் யூகிக்க முடியவில்லை. இறுதியில் எல்லாம் ஆதர்ஷ் பார்த்துப்பானென்று அவளின் மனம் கூகுரலிட தனது கவனத்தை அழைப்பிதழின் மீது பதித்தாள்.

சிறிது நேரத்தில் அவளின் இதழ் புன்னகையில் விரிய, அவள் ஏதோ முடிவெடுத்து விட்டாளென்பது தெளிவாகியது.

காலை முதல் முகூர்தத்தில் கிஷோர் சந்தோஷி திருமணம் அனைவரது சந்தோஷமான ஆசீர்வாதத்துடன் இனிதே நடந்து முடிய, புதுமணத் தம்பதியர் பெரியவர்களின் காலில் விழுந்து தங்களது ஆசி பெற்றனர்.

கிஷோரின் புன்னகை ததும்பும் முகத்தையே பார்த்திருந்த ஆதுவின் அருகில் வந்த வினு,

“வைஷூ ரெடிடா, நீ போய் மணவறையில் உட்கார்” என்று துரித்தப்படுத்தினான். எந்நேரத்தில் வேண்டுமானாலும் மஹி இங்கு வருவாளென்பது அனைவரது எண்ணமாக இருந்தது.

ஒருமுறை நெகிழ்வுடன் வினுவை அணைத்து விடுவித்த ஆது மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு ஐயர் முன்பு சென்று அமர்ந்தான்.

சிறிது நேரத்தில் நடைபெறவிருக்கும் மற்றொரு திருமணத்திற்கு அனைவரும் ஆயத்தமாகினர்.

கெட்டிமேளச் சத்தமும்…..

நாதஸ்வரத்தின் இன்னிசையும்…

மிகப் பிரம்மாண்டமாய் மக்கள் கூட்டத்துடன் காட்சியளித்த அந்த மண்டபம் முழுவதும் எதிரொலித்தது.

மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட பொன் தாலியினை ஐயர் ஒரு பெண்ணிடம் கொடுத்து உறவினர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி வருமாறு கொடுத்து அனுப்பினார்.

மணமேடையில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை பையனான ஆதர்ஷ் தன் அருகில் அமர்ந்திருக்கும் வைஷூவைத் திரும்பி கூட பார்க்காது வாயிலையே பார்த்திருந்தான். அவன் கண்கள் மஹியை எதிர்பார்த்து நொடிக்கு ஒரு தரம் ஏமாந்து கொண்டிருந்தது.

ஐயர் கூறிய சடங்குகளை சரிவர செய்யாது  வாசலிலே கண் பதித்திருந்தவனின் செவியருகே குனிந்த அவனது தாத்தா சிரிப்புடனே, “நீ எதிர்பார்ப்பது நிச்சயம் நடக்காது. இங்கே உன் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாளே அவள் தான் உன் மனைவி. எங்களை மீறி நீ ஏதேனும் செய்ய நினைத்தால் நடக்கும் விபரீதத்துக்கு நான் பொறுப்பில்லை” என்றார்.

ஆனால் அவரின் மனம் வேறொன்று நடக்க வேண்டுமென்று இறைவனிடம் முறையிட்டார். அவரின் பேச்சு, அப்போ வினுவின் காதல் என்னால் பறிபோய்விடுமோ என்று பயந்தவன், இந்த பெரிசு நேற்றுவரை நமக்கு சப்போர்ட்டாகத் தானேயிருந்தது இன்று ஏன் வில்லன் போல் பேசுகிறதென்று சிந்தித்தான். அப்படி மஹி வரவில்லையென்றாலும் வினுவை அமர வைத்துவிட்டு கடைசி நேரத்தில் தான் எழுந்துக்கொள்ள வேண்டுமென்ற உறுதியுடன் அமர்ந்திருந்தான்.

மேலும், அவர் பேசுவதை கவனியாது வாயிலையே பார்த்திருந்தவனின் கண்களில் பரவசத்தைக் கண்டவர்… அவன் பார்வை சென்ற திசையை பார்க்க சந்தோஷத்தில் இன்பமாய் அதிர்ந்தார்.

அங்கே, ஒரு ஆணின் தோரணையில்… கருப்பு நிற முரட்டு ஜீன்ஸ் மற்றும் அதே நிறத்தில் முழுக்கை சட்டையும் அணிந்து.. இடது கையால் வலது கையின் ஸ்லீவை மடக்கியவாறு நடந்து வந்து கொண்டிருந்தாள் மஹிரா.

வந்தவள் மாப்பிள்ளை மற்றும் நாதனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே முன்னிருக்கையில் கால் மேல் காலிட்டவாறு அமர்ந்தாள்.

மாப்பிள்ளையின் அம்மாவிற்கு இக்கல்யாணம் நடக்குமா என்ற சந்தேகம் தோன்றியது.

‘வந்திருக்கா பாரு, ஆம்பள மாதிரி.. டாம் பாய்..’ செல்லமாக அவளைத் திட்டினான்.

அதுவரை அவளை எதிர்பார்த்து ஏக்கத்துடன் வேண்டா வெறுப்பாக ஐயர் கூறியதை செய்து கொண்டிருந்தவன் அவள் வந்ததும் கரும சிரத்தையாக சடங்குகளை செய்து அவளை வெறுப்பேற்றினான்.

வெளியில் காட்டிக்கொள்ளா விட்டாலும் அவனது சந்தோஷமான முகம் அவளுக்கு எரிச்சலை உண்டாக்கியது.

மணப்பெண்ணை ஒரு முறை கூட திரும்பிப் பார்த்திடாதவன் வந்தவளை சோதிப்பதற்காகவே மணப்பெண்ணை நெருங்கி அமர்ந்து அவள் காதில் ஏதோ கிசுகிசுத்தான். அதில் அப்பெண் வெட்கம் கொண்டவளாக தலை கவிழ்ந்தாள்.

அதில் மஹியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அதனை கண்டு சிரித்தவன், ‘இப்போ நீயே என் பக்கத்தில் வருவடி’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

ஐயர்.. தாலியை எடுத்து மாப்பிள்ளையின் கையில் கொடுக்க… அதை கையில் வாங்கியவன் தனக்கு முன்பாக தன்னை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தவளை பார்த்து நக்கலாக சிரித்து தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் பெண்ணின் கழுத்தை நோக்கி தாலியைக் கொண்டு சென்றான்.

‘கட்டிடாதடா…’ என்று அவளும்..

‘என் கிட்ட வந்து எழுந்துருடா சொல்லுடி…’ என்று அவனும்..

ஒரே நேரத்தில் உள்ளுக்குள் கூறிக்கொள்ள…

அவன் மணப்பெண்ணின் கழுத்தில் தாலியை வைத்துக்கொண்டு முடிச்சிடாமல் அமர்ந்திருக்க…

அவளோ… இதுக்கும் தனக்கும் சம்மந்தம் ஏதுமில்லை என்ற ரீதியில் திமிராக அமர்ந்திருந்தாள்.

‘ராட்சஸி படுத்துறா…. இதுவரைக்கும் வந்துட்டா… அப்புறம் என்ன.. வந்து என் சட்டையை பிடிச்சி என்ன விட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணுவியாட அப்படின்னு ஒரு நாலு அரை விடரத விட்டு கல்யாணத்துக்கு வந்த விருந்தாளி மாதிரி ஆசீர்வதிக்க தயாரா உட்காந்திருக்கா…’ உள்ளுக்குள் அவளை வருத்தெடுத்தான்.

உறவினர்கள் அனைவரும் அவன் தாலி கட்டுவதற்காக காத்திருக்க… வீட்டு உறுப்பினர்கள் எங்கு தவறாக ஏதேனும் நடந்துவிடுமோவென்று கலக்கத்துடன் பார்த்திருக்க… அவளோ யாருக்கு வந்த விருந்தோ என்று அதே திமிருடன் அவனை பார்த்திருந்தாள்… மீண்டும் ஒருமுறை அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு, 
தாலி கட்ட கொண்டு சென்ற  கையை பின்னுக்கு இழுத்து எழுந்து நின்றவன்.. கீழே இருக்கையில் அமர்ந்திருப்பவளை பார்த்தபடி மணமேடையை விட்டு கீழிறங்கினான்.

குடும்ப உறுப்பினர்கள் தவிர திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அவனது செயலில் அதிர்ந்து உறை நிலைக்கே சென்றனர்.

அவனது தாத்தா உள்ளுக்குள் குதியாட்டம் போட்டார்.

நேரே அவளிடம் வந்து… “இப்போ உனக்கு சந்தோஷமா” என்று ஆத்திரமுடன் கேட்டவனை முறைத்துப் பார்த்தவள்.. அவன் கையிலிருந்த தாலியின் மீது கண் வைத்தவாறே.. “என் கழுத்தில் தாலி கட்டிய கையால் இன்னொருத்தி கழுத்தில் உன்னால் கட்டிட முடியாது” என்று திமிராக கூறியவளிடம்,

“போடி…” என்றவன் வேகமாக சென்று அறைக்குள் புகுந்துகொண்டான்.

அவன் பின்னே சென்று அறைக்குள் நுழைந்தவள், அறையின் கதவினை மூடி தாழிட்டுக்கொண்டாள்.

“எதுக்குடி என் பின்னாடியே வந்திருக்க, அதான் நான் வேண்டான்னு போனவள் தானே…” முதல்முறையாக தன் மஹியிடத்தில் கோபம் காட்டினான்.

தன்னவனின் முதல் கோபத்தை ரசித்தவள்… “உன்னை விட்டு போனவள் தான், ஆனால் எப்போதும் நீ வேண்டான்னு நினைச்சதில்லை” என்றாள்.

அவளின் குரல் தழுதழுத்ததோ… இல்லை அவனுக்குத்தான் அப்படித் தோன்றியது. ஆது அவளை ஆச்சரியமாக திரும்பி பார்ப்பதற்குள் மஹி தன்னை நிலைப்படுத்தியிருந்தாள்.

“வினுவும் வைஷூவும் விரும்புகிறது எனக்குத் தெரியும்.. என்ன தான் தாத்தாவின் வற்புறுத்தலுக்காக நீயும் வைஷூவும் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாலும் ஒருபோதும் வினுவிற்கு நீ துரோகம் இழைக்க மாட்டன்னு தெரியும்… இருந்தும் நீ இறுதி நொடி வரை மணமேடையில் அமர்ந்திருந்த காரணம் என்னை உன்கிட்ட வரவைக்கன்னும் எனக்குத் தெரியும்.”

“எல்லாம் தெரிந்துதான் மேடம் தெனாவட்டா போஸ் கொடுத்து அமர்ந்திருந்தீங்களோ…” அவனின் குரலில் நக்கல் வழிந்தது.

“உன் காதல் மேலிருந்த நம்பிக்கையில்… தெனாவட்டா இல்லை கர்வமா” என்று பதிலளித்தாள்.

“அப்பாவிற்கு நான் கொடுத்த வாக்கு எங்கே உன் காதலில் மறந்துவிடுவேனோ என்று தான் உன்னை விட்டு தள்ளியிருக்க முடிவு செய்து வீட்டைவிட்டு போனேன்.” மஹி சொல்வது அவனும் அறிந்ததே.

“மாமாவுக்கு நீ செய்து கொடுத்த சத்தியம் என்னவென்று சொன்னா அதற்கு நானும் துணையாக உன்னுடன் நின்றிருப்பேனென்று உனக்கு என் மீது நம்பிக்கையில்லைல…” ஆதுவின் குரலில் தன்னவள் தன்னை புரிந்து கொல்லவில்லையே என்ற வருத்தம் மேலோங்கியிருந்தது.

நானே என் முயற்சியால் அப்பாவின் சத்தியத்தை நிறைவேற்ற வேண்டுமென நினைத்தேன்… மஹியின் பதிலில் நெளிந்த புன்னகை மட்டுமே அவனிடத்தில்,

எல்லாம் புரிந்தும் வேண்டுமென்று விவாதம் செய்பவனை எப்படி சமாளிப்பதென்று சிந்தித்தவள், அதற்கான தீர்வு தன் காதல் தானென்று கண்டுகொண்டாள்.

அடுத்த விநாடி… அவனை பேசவிடாது அவனின் உதட்டில் அழுந்து தன் இதழ் பதித்தாள். அவனுக்கு தன் காதலை ஒற்றை இதழ் முத்தத்தில் காட்டிட நினைத்தாள். அவளின் முத்தத்திலேயே அதிர்ந்தவன், அவளின் வேகத்தில் முற்றிலும் தன்னை மறந்தான். தன்னவளாக தனக்களிக்கும் முதல் முத்தம், அவனை அவளிடத்தில் கிறங்கச் செய்தது. தன்னை முற்றிலும் அவளிடத்தில் வீழ்ந்துபோக அடிபணிந்தது. காதலை உணர்த்திட நினைத்தவள் தன்னை மறந்து, முதல் முறையாக தான் பெண் என்பதை உணர்ந்திட்டாள் அவனின் ஸ்பரிசத்தில். இருவரும் தங்களது தனியுலகினில் சஞ்சரிக்க, முதலில் சுதாரித்தது ஆது தான். தன்னாலே தன் நண்பனின் திருமணம் நின்றுவிடுமோவென எண்ணியவன் தன்னவளை தன்னிடமிருந்து பிரித்தான்.

ஆதுவிடமிருந்து பிரிந்தாலும் தன்னை முழுதாக நிலைப்படுத்த மஹிக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

என்னவொரு ஆச்சரியம் மஹி முதல்முறையாக தனக்கேற்பட்ட நாணத்தால் ஆதுவின் முகம் பார்க்க முடியாது தலை கவிழ்ந்து நின்றாள்.

தன்னவளின் வெட்கத்தை மொத்தமாய் ரசித்தவன், அவளை தன் கை வளைவில் கொண்டு வந்து… “முதல்ல வினு திருமணத்தை முடித்துவிட்டு நம்ம கச்சேரியை வைத்துக்கொள்ளலாம்” என்றான். அதற்கு அவளையும் அறியாது அவளின் தலை சம்மதமாக ஆடியது.

ஆதுவிற்கு அவள் மீதிருந்த வருத்தம் முற்றிலும் போகவில்லை தான்.. இருப்பினும் என்றும் அவளை அவளாகவே ஏற்கத் தயாராக இருப்பவன்.. இன்றும் அப்படியே அவளை ஏற்றுக்கொண்டான்.

கதவினை திறக்கச் சென்றவனிடத்தில் அவனறிந்து முதல்முறை தன் மனதை வெளிப்படுத்தினாள்.

“ஐ லவ் யூ சோ மச் விஹூ…”

காதில் விழுந்த வார்த்தைகள் நம்பமாட்டாது திரும்பியவனிடத்தில் மீண்டும் தன் காதல் வார்த்தைகளை கூறினாள்.

“லவ் யூ விஹூ… லவ் யூ சோ மச் ஃபிரம் பாட்டோம் ஆஃப் மை ஹார்ட்..”

அதில் நெகிழ்ந்தவன்.. கண்கள் பனிக்க “தேங்க்ஸ் பேபி” என்றான்.

சில நிமிடங்களில் இருவரும் வெளியில்வர…. மண்டபத்தில் வீற்றிருந்த அனைவரின் பார்வையும் மூடிய அறையின் மீதே நிலைத்திருந்தது.

அனைவர் மீதும் சங்கடமான பார்வை ஒன்றை வீசிய ஆது மஹியுடன் சேர்ந்து மேடையில் தனது குடும்பத்துடன் நின்றுக்கொண்டான்.

ஆதுவின் முகத்தில் தென்பட்ட பூரிப்பே அவர்களிடத்தில் எல்லாம் சரியாகிவிட்டதெனக் கூற அனைவரும் அடுத்து நடக்கவிருக்கும் திருமணத்தில் கவனம் கொண்டனர்.

வைஷூவின் அருகில் வினு அமர ஐயர் மந்திரம் ஓத… அவர்களின் திருமணமும் சுபமாக முடிந்தது.

நாதன் அடுத்து ஆதுவையும், மஹியையும் அமர சொல்ல…. தன் சட்டைக்கு உள்ளிருந்த தாலியை எடுத்து வெளியே காண்பித்தவள்,

“எனக்கும் ஆதுவிற்கும் ஐந்து வருடங்களுக்கு முன்னரே திருமணம் நடந்துவிட்டது” எனக்கூறி… ஆதுவுடன் சேர்ந்து நாதன் மற்றும் கோமளம் காலில் விழுந்தனர்.

அவள் கூறியது அவர்களுக்கு அதிர்ச்சியாகத் தானிருந்தது.. இருப்பினும் ஒன்று சேரவே மாட்டார்களாயென்று நினைத்தவர்கள் ஒன்று சேர்ந்ததில் வீட்டு பெரியவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அனைவரும் சந்தோஷத்துடனே ஆதுவையும் மஹியையும் ஆசிர்வதித்தனர்.

நாதன் மஹியிடம் முன்பு நடந்தவற்றிற்கு தனிமையில் மன்னிப்பு வேண்ட, அவற்றையெல்லாம் நான் மறந்துவிட்டேனென்றுக் கூறி பெரிய மனம் கொண்டவளாக நடந்துகொண்டாள்.

உறவினர்கள் அனைவரும் சென்றுவிட, இளம் ஜோடிகள் ஆறு பேரையும் வீட்டு உறுப்பினர்கள் கிண்டல் செய்வதாக ஒரு வழி செய்துகொண்டிருந்தனர்.

தன் கைகடிகாரத்தில் மணியை பார்த்த ஆது…. அனைவரும் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து முக்கியமான வேலையிருப்பதாகக் கூறி வெளியேறினான்.

அப்படி என்ன வேலையென்று யார் கேட்டதற்கும் விடையளிக்கவில்லை.

error: Content is protected !!
Scroll to Top