ரவுடி பேபி 22 (நிறைவு)

அத்தியாயம் 22

மண்டபத்திலிருந்து, ஏதோ வேலையிருப்பதாக வெளியேறிய ஆதர்ஷ் மூன்று மணி நேரம் கடந்த பின்னரும் வீடு வந்து சேரவில்லை.

வினுவும், கிஷோரும் மாற்றி மாற்றி அவனது எண்ணிற்கு முயற்சித்தும் எந்தவொரும் பலனுமில்லை.

திருமணம் முடிந்த வீடு என்பதால் வீட்டினை அனைவரும் ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்க, கிஷோரும் சந்தோஷியும் நாதனுடன் அமர்ந்து பொதுவாக உரையாடிக்கொண்டிருந்தனர்.

மண்டபத்திலிருந்தபடியே வினு தனது மனைவி வைஷூவுடன் தன்னுடைய இல்லம் சென்றுவிட்டான்.

கிஷோர் பேச்சிற்கிடையே தன்னுடைய அப்பார்ட்மெண்டிற்கு செல்வதாகக் கூற, அவனின் மனமறிந்து விஷ்ணு மற்றும் ஜானகியுடன் கிஷோர் மற்றும் சந்தோஷியை நாதன் நல்ல நேரத்தில் அனுப்பி வைத்தார்.

சிறிதும் நேரம் கிஷோரின் அப்பார்ட்மெண்ட்டில் இருந்தவர்கள் புதுமணத் தம்பதியருக்கு தனிமையளித்து தங்களது இல்லம் திரும்பினர்.

விஷ்ணுவும் ஜானகியும் நாதன் இல்லம் நுழைந்த தருணம் வீடே பதட்டத்தில் காணப்பட்டது.

காரணம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த செய்தி.

மஹிக்கு தனது லட்சியம் நிறைவேறிவிட்ட சந்தோஷம் ஒரு பக்கமென்றால் அதற்கு முற்றும் முதலும் காரணமாக இருப்பது தன்னுடைய கணவனான ஆதர்ஷ் என்பதில் அவள் கொண்ட ஆனந்தத்திற்கு அளவேயில்லை.

சுமார் பதினெட்டு வருடங்களுக்கு முன்பு…

ஹை கோர்ட் பார் கவுன்சில் மிகவும் பிரபலமான வழக்கறிஞர் என்றால்… அவர் ராஜசேகர் தான். நாதனின் தங்கை மகன் மற்றும் விருப்பமான மருமகன். தாய் தந்தையில்லாதவரை தானே வளர்த்து அவரின் விருப்பப்படி சட்டக் படிக்க வைத்து தனது மகளான யமுனாவையும் மணம் முடித்து வைத்தார்.

நாளுக்கு நாள் ராஜசேகர் வாதாடுவதில் புலியென்றும்.. அவர் ஒரு வழக்கினை கையிலெடுத்தால் நிச்சயம் வெற்றி தானென்று மற்ற வழக்கறிஞர்களாலே பாராட்டுப் பெற்று மிகவும் பிரபலமானார்.

ராஜசேகரின் இத்தகைய வளர்ச்சி நம் மாநிலத்தின் முதலமைச்சரின் சொத்துக்களுக்கு தனிப்பட்ட வக்கீலாக மாற்றியது.

முதலமைச்சர் சேந்தன்… ராகவின் தந்தை.

அதுவரை கட்சிக்குள்ளாகவே நடந்து வந்த தனிப்பட்ட சொத்துகுவிப்பு மற்றும் கட்சியின் வளர்ச்சி நிதியென்று நடைபெற்று வந்த ஊழல்களை ராஜசேகர் கண்டுபிடிக்க அவர் சேந்தனிடத்தில் நெருக்கமாகினார். அந்த நெருக்கம் இருவருக்குமிடையேயான வயதையும் மீறி அவர்களுக்குள் நல்ல நட்பை தோற்றுவித்தது.

திடீரென்று ஒருவன் தன்னுடைய மாமாவுக்கு நெருக்கமாவது பிடிக்காத பத்மநாபன் இருவருக்குக்குமிடையே பல்வேறு பூசல்களை ஏற்படுத்த முயற்சித்து அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராக வீணாகியது.

பத்மநாபன் சேந்தனின் மருமகன். அவரின் கட்சியில் அடிமட்டத் தொண்டனாக சேர்ந்து பலவகையில் அவருக்கு உதவி புரிந்து நன்மதிப்பை பெற்று சூட்சமமாக அவரின் மகளையும் மணந்துகொண்டார். எல்லாம் முதலமைச்சரின் மருமகன் என்ற பட்டத்திற்காகவும், அவரின் சொத்துக்காவும் மட்டுமில்லாமல்… அடுத்து அவரின் கட்சி தலைவராகும் எண்ணத்திற்காகவும் தான்.

வயதின் காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவால் ஒவ்வொரு முறை அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போதும் இப்போது அவர் இறந்துவிடுவார், அவரின் மகன் ராகவ் சிறு வயது என்பதால்.. சேர்ந்தனின் மருமகன் என்ற அடிப்படையில் தான் தான் அவரது அரசியலின் அடுத்த வாரிசென பத்மநாபன் காணும் கனவெல்லாம் அவர் உடல்நிலை சுகம்பெற்று வீடு திரும்புகையில் தூள் தூளாகிவிடும்.

இப்படியே சென்று கொண்டிருந்தால் நிச்சயம் சாகும் வயதில் தான் அமைச்சராக முடியுமென்று நினைத்த பத்மநாபன் சேந்தனை கொலை செய்ய திட்டம் வகுத்தான்.

பத்மநாபனின் திட்டப்படி அன்றிரவே சேந்தனுக்கு உடல்நலன் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ராஜசேகர் விஷியமறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் ராஜசேகர் உள் நுழைந்த சமயம், எப்படியும் கட்சியின் அடுத்த தலைவர் நான் தானென்று யாரோ கொக்கரிக்கும் சத்தம் நன்கு கேட்டது. அச்சத்தம் எங்கிருந்து வருகிறதென்று சேகருக்கு தெரியவில்லையென்றாலும் அந்த குரலுக்கு சொந்தக்காரர் யாரென்று இனம் கண்டு கொண்டார்.

அப்போதே முடிவெடுத்தவராய், குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தும்போது அவர்களுக்கே தெரியாது அவர்கள் கூறும் கருத்துகளை சேகரிப்பதற்காக எப்போதும் தனது பாக்கெட்டில் வைத்திருக்கும் பென் காமிராவினை எடுத்து யாருக்கும் தெரியாது, சேந்தன் சிகிச்சை பெரும் அறை முழுவதும் பதிவாகும் வகையில் மறைத்து வைத்தார்.

தீவிர காவல் இருந்தும் சேந்தனிற்கு நடக்கக்கூடாத ஒன்று நடக்கவிருக்கிறதென்று ராஜசேகரின் உள்ளுணர்வு எச்சரித்தது.

ஆகையால் இரவாகியும் வீட்டிற்கு செல்லாது.. அழுகையில் கரையும் ராகவ், அம்சா மற்றும் சேந்தனின் மனைவிக்கு ஆதரவாக மருத்துவமனையிலேயே தங்கிவிட்டார்.

இவர்கள் இங்கிருக்கும்வரை தன் காரியம் ஈடேறாதென எண்ணிய பத்மநாபன் இரவு மிகவும் தாமதமாகிவிட்டதென நயமாக பேசி அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர்களுக்கு துணையாக செல்லுமாறு ராஜசேகரையும் அனுப்பினார். தன்னை அனுப்புவதற்கு பின்னால் காரணமிருக்கிறதென்று யூகித்த சேகர் விரைவில் இவர்களை இல்லத்தில் சேர்த்துவிட்டு தான் மீண்டும் மருத்துவமனை வந்துவிட வேண்டுமென்ற வேகத்துடன் சென்றார்.

அடுத்த அரை மணி நேரத்தில் சேகர் மருத்துவமனையில் கால் வைக்க, மருத்துவமனை கட்டிடமே தலைவர் இறந்து விட்டாரென்ற செய்தியில் நடுநடுங்கியது.

ராஜசேகருக்கு நன்கு தெரிந்துவிட்டது இதற்கு முழு காரணம் பத்மநாபன் தானென்று.

முதல்வர் இறந்துவிட்டாரென்ற செய்தி பரவத் தொடங்க, தொண்டர்கள் மருத்துவமனையை முற்றுகையிட தொடங்கியதாலும்… சேந்தன் இருந்த அறையில் யாரோ ஒருவர் உடனிருப்பதுமாக இருக்கவும் தான் வைத்த காமிராவினை எடுப்பதில் சற்று பொறுமை காத்தார்.

சேந்தனின் பிரேதம் மருத்துவமனையை விட்டு வெளியில் செல்வதற்குள்… பத்மநாபன் தனது பெயரோடு தலைவரின் பெயரையும் இணைத்து சேந்தன் பத்மநாபன் என அறிவித்து…

“தலைவர் நம் கட்சியை அவரது மகன் வளர்ந்து முழு அரசியல்வாதியாக மாறும் வரை என்னிடம் ஒப்படைத்துள்ளார். இனி தான் தான் நம் கட்சியின் தலைவரென்று” என்று அறிவித்துக்கொண்டான். அவனை எதிர்த்து குரலெழுப்பியவர்களை பணத்திற்கு அடிமையாக்கிவிட்டான். அதிலும் மாட்டாத சிலபேரை கட்சிக்கு எதிராக செயல்படுகிறார்களென்று சொல்லி கட்சியை விட்டே தள்ளி வைத்துவிட்டான்.

தனது அத்தையிடமும் நல்ல மருமகன் போன்று நடித்து.. ராகவ் இனி முழு என் பொறுப்பென்று கூறி அவர்களையும், அவர்களது சொத்துக்களையும் தனக்கு கீழ் கொண்டுவந்தான்.

பதினைந்து வயது நிரம்பிய ராகவிற்கு அந்நிலையில் தன் குடும்பத்தை பாதுகாத்த கடவுளாகவே பத்மநாபனை பார்த்தான்.

அம்சாவும் தன்னுடைய கணவர் எது செய்தாலும் அது யாவும் தன் குடும்ப நன்மைக்காக மட்டுமே இருக்குமென்று கருதி பத்மநாபனுக்கு துணை நின்றார்.

இவை அனைத்தும் அடங்கி சூழ்நிலை சரியாக, பத்மநாபன் அடுத்த முதல்வராக பிரகடனம் செய்யப்பட்டார்.

அமைதியான சூழல் ஏற்படும் வரை காத்திருந்த ராஜசேகர்… நாதன் எவ்வளவோ வலியுறுத்தியும்.. கெட்டவர்களின் பகை நமக்கு வேண்டாமென்று மன்றாடியும் சேந்தனின் மரணத்திலிருக்கும் சதியை கண்டறியாது விடமாட்டேனென்று கூறி மருத்துவமனைக்கு சென்று யாருக்கும் தெரியாது தான் வைத்திருந்த பென் காமிராவினை எடுத்து வந்தார்.

தனது அலுவலகத்தில் தன்னுடைய பெர்சனல் மடிகணினியில் காமிராவினை பொருத்தி ஓடவிட்டு பார்த்த ராஜசேகர் அதிர்ந்தே விட்டார்.

சேந்தனை கொலை செய்ய எண்ணி பத்மநாபன் உள் நுழைந்த சமயம் அவர் விழித்துவிட்டார். இருப்பினும் தான் உருவாக்கிய சந்தர்ப்பத்தை விட்டுவிட நினைத்திடாத பத்மநாபன் முதலில் அவருக்கு சென்றுகொண்டிருந்த பிராண வாயு குழாயினை தடை செய்தான். அவர் குரல் தடைபடை ஏதோ பேச முயல்கையில், சாகப்போற நேரத்தில் இப்படி தர்க்கம் செய்யக்கூடாதென்றவன், அந்நிலையிலும் கையெடுத்து வணங்கி தன்னை விட்டுவிடுமாறு மன்றாடிய சேந்தனின் குரல்வளையை நெறித்து தன் கைகளாலே அவரது உயிரை பிரித்தெடுத்தான்.

பதவிக்காக கொலையும் செய்வார்கள் என்பதை ராஜசேகர் இப்போது தான் கண் கூடாக பார்க்கிறார். அதிர்ந்து உறைநிலைக்கு சென்றவரை பத்மநாபனின் குரல் மீட்டது.

“என்ன படம் நல்ல தெளிவா பதிவாகியிருக்கா…. எச்டி பிரிண்ட் போட்டால் நல்லா ஓடும் போலிருக்கே…”

“இப்போதே இந்த வீடியோவை கோர்ட்டில் ஒப்படைத்து எதற்காக ஒரு நல்ல மனிதரை கொலை செய்தாயோ அந்த அரசியல் வாழ்க்கை, பதவி யாவும் உனக்கு கிடைக்காது செய்கிறேன்” என்ற ராஜசேகரை பார்த்து கோணல் சிரிப்பு சிரித்த பத்மநாபன்…

“நல்ல வேளை, வேலை முடிஞ்சிருச்சுன்னு நினைக்காம அந்த மருத்துவமனையில் என் ஆள் ஒருவனை வைத்திருந்தது எனக்கு சாதகமாக அமைந்துவிட்டது. இல்லையென்றால் என்னவாகியிருக்கும், இப்போ நீ சொன்னது நடந்திருக்கும்.

ஆனால், இப்போ நடக்க போவதே வேறு” என்ற பத்மநாபன்… ராஜசேகரை ஆள் அரவமற்ற சாலை பகுதிக்கு தன் அடியாட்களுடன் இழுத்துச் சென்றான். அங்கு, ராஜசேகரின் கை, கால்களை கட்டி சாலையின் மையத்தில் படுக்க வைத்தவன்,

“நான் செய்த கொலையை வீடியோ எடுத்தாய் இல்லையா, இப்போ நீ சாகப்போறதை நான் பதிவு செய்யப் போறேன். ஆனால், என்ன அதை பார்க்க நீதான் உயிரோடு இருக்க மாட்ட” என்று வெடி சிரிப்பு சிரித்தான்.

மெல்ல தனது சிரிப்பை நிறுத்தியவன் தன் அடியாட்களில் ஒருவனை நடப்பதை வீடியோ எடுக்க சொல்லிவிட்டு, தனது கைகளாலே காரினை இயக்கி ராஜசேகரின் மீது மீண்டும் மீண்டும் இடித்து, தார் சாலையில் சக்கரங்களுக்கிடையே இழுத்துச் சென்று அவரை கொன்றான். அதனை சாலை விபத்து போல் மாற்றியமைத்தான்.

எடுத்த வீடியோவை ரசித்து பார்த்தவன், “எனக்கு எதிரி ஒருவன் முளைத்தால் அவனின் நிலை இதுதான்” என்று கொக்கரித்தான்.

ஆனால், பின்னாளில் தனது இத்தகைய செயலே தனக்கு ஆப்பாக அமையுமென்று அவன் நினைக்கவில்லை. தானெடுக்க சொல்லிய காணொளி பதிவே அவனுக்கு எமனாக மாறப்போகிறது.

ராஜசேகர் விபத்தில் இறந்து விட்டாரென்று வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு பதறியடித்து ஓடிவர, பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுவிட்டதென்றும் உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னர் உடல் தங்கள் கையில் ஒப்படைக்கப்படுமென்றும் கூறியதால் அனைவரும் கண்ணீருடன் அமர்ந்திருக்க, எட்டு வயது நிரம்பிய மஹி தனது தந்தையை பார்க்க வேண்டுமென்று செய்த கலாட்டாவில் அவள் மட்டும் ராஜசேகரின் உடலிருக்கும் அறைக்கு அழைத்து செல்லப்பட்டாள்.

உடலினை அறுக்கும் வேலை செய்பவர், மஹியை அறைக்குள் நீ சென்று பாரென்று சொல்லிவிட்டு.. தன் பணியில் இறங்குவதற்கு முன் அருவெறுப்பு ஏற்படாமலிருக்க தனக்குள் மதுவை சரித்துக்கொள்ள சென்றுவிட்டார்.

இருட்டான அவ்வறையின் மையத்தில் சிறு மேடை ஒன்றிருக்க, அதற்கு மேலாக மட்டும் வெளிச்சம் பரவும் வகையில் சிறு மின் விளக்கு ஒளிர்ந்துகொண்டிருக்க, அம்மேடையில் ராஜசேகரின் உடல் கிடந்தது.

பயமேதுமின்றி தன் தந்தையின் அருகே சென்ற மஹி… “அப்பா” என்றழைக்க, அதுவரை இறக்காமல் தன் உயிரை கையில் பிடித்து மயக்கத்தில் வீழ்ந்திருந்த ராஜசேகர் மெல்ல தன் விழி மலர்த்தினார்.

அவர் தனது மகளின் கரம் பற்ற,

“அப்பா உனக்கு உயிர் இருக்குப்பா இரு நான் தாத்தாவை கூட்டிட்டு வர்றேன்” என்றவளை தடுத்து நிறுத்தினார்.

திக்கித்திணறி, காற்றாகிப் போன குரலில்… “நீ அவங்களை அழைத்து வருவதற்குள் நான் இறந்துவிடுவேன்” என்றவர்… எங்கு தான் சொல்ல வருவதை சொல்லி முடிப்பதற்குள் தன் உயிர் பிரிந்து விடுமோயென்ற பயத்தில்.. மூச்சினை இழுத்து பிடித்து படபடவென்று தன் மகளிடம் கூறினார்.

“உன் அப்பாவோட மரணம் விபத்தல்ல… பத்…ம… நாபன். நீ என்னை மாதிரி பெரிய வக்கீலாக வேண்டும். இன்று கிடைக்காத என் மரணத்திற்கான தீர்ப்பு நாளை உன் கைகளால் வழங்கப்பட வேண்டும், பின்னாளில் அவன் எத்தகைய பெரிய பதவி வகித்தாலும்.. நீ தைரியமான பெண்ணாக வளர வேண்டும்.. ஆணுக்கு நிகராக அதை விட மேலாக நீ உயர வேண்டும்.. எனக்கு சத்தியம் செய்து கொடு” என்றவர் தன் மகளின் முன் தனது உள்ளங்கையை நீட்டியவாறு தனது உயிர் நீத்தார்.

எட்டு வயது சிறுமிக்கு தன்னுடைய தந்தை தன்னிடம் என்ன கூறினாரென்று புரியவில்லையென்றாலும், அவரின் வார்த்தைகள் யாவும் ஒன்றுவிடாது பசுமரத்தாணி போன்று மஹியின் இதயத்தில் கல்வெட்டாய் பதிய அவள் வளர வளர தந்தையின் வார்த்தைகளுக்கான அர்த்தம் புரிந்தது. அதற்கேற்றவாறே அவளும் வளர்ந்தாள்.

வக்கீல் தொழில் மூலம் தன் மருமகன் சம்பாதித்த எதிரிகளின் பலனாகத்தான் ராஜசேகர் இறந்தாரென்று யூகித்த நாதன், இனி யாரும் அவ்வழியில் சென்று இன்னொரு உயிர் பலியை தாங்கிக்கொள்ள முடியாதென்பதற்காகவே மஹியை சட்டம் படிக்கக் கூடாதென்று தடுத்தார். அவளும் தன் தந்தையின் இறுதி வேண்டுதலை நிறைவேற்றாமல் விட்டுவிடக் கூடாதென்பதற்காக, அதனை நிறைவேற்றும் பொருட்டு.. நாதனின் கோபத்தை தனக்கு சாதகமாக உபயோகித்து வீட்டை விட்டு வெளியேறினாள்.

சேந்தன் மற்றும் ராஜசேகரின் கொலையின் போது எடுக்கப்பட்ட காணொளி காட்சிகள் நொடிக்கு ஒருதரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு.. பத்மநாபனின் பதவி பறிக்கப்பட்டு அவனது பெயரை நார்நாராக கிழித்துக்கொண்டிருந்தன.

“பதினெட்டு வருடங்களுக்கு முன்பு.. முன்னால் அமைச்சரையும், அவரது ஆஸ்தான வக்கீலையும் பதவிக்காக கொலை செய்த தற்போதைய முதல்வர் பத்மநாபன் இன்று இரண்டு மணியளவில்.. உயர் நீதிமன்ற நீதிபதிகள், கவர்னர் மற்றும் இந்த வழக்கை விசாரணை செய்த சிபிசிஐடி விஹான் ஆதர்ஷ் மற்றும் ஐஜி அவர்களின் முன்னிலையில் அவரது வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்குடன் பத்மநாபன் அரசியலில் செய்து வந்த அனைத்துவிதமான ஊழல்களுக்கான ஆதாரமும் நிறுப்பிக்கப்பட்டட்டுள்ளது. இதனால், பத்மநாபனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படலாமென்று கருதப்படுகிறது.”

இச்செய்தியே அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

செய்தியை அறிந்த வினு மற்றும் கிஷோரும் தாம்தம் மனைவியுடன் நாதன் இல்லம் வந்து சேர்ந்துவிட்டனர்.

“ஆது சிஐடி ஆபீசரா?” நவீன் ஆச்சரியமாக வினவ.. அதே ஆச்சரியம் தான் தங்களுக்குமென்று மஹியை தவிர அனைவரது முகமும் பிரதிபலித்தது.

மஹிக்கு இன்று காலையில் தான் ஆது க்ரைம் ப்ராஞ்ச் ஆபீசர் என்பது ஷியாமின் வாயிலாக தெரிந்திருந்தது.

காலை மஹி மண்டபத்திற்கு வருவதற்கு முன்.. அந்த ஆபீசர் யாராக இருக்குமென்று யோசித்துக்கொண்டிருந்த சமயம்.. இந்த வழக்கிற்கு ஒரு முடிவு தெரியாமல் மஹி மண்டபத்திற்கு செல்ல மாட்டாள்.. இவள் செல்லாது ஆதுவின் நிலையை யோசித்த ஷ்யாம், மஹியிடம் சென்று..

“அன்னைக்கு ஆது என்னிடம் பேசியதிலிருந்து அவர் ஒரு காவல்துறை அதிகாரியாக இருக்க வேண்டுமென்ற சந்தேகம் எனக்கிருந்தது. இப்போது அந்த ஆபீசர் யாரென்று விசாரித்தவரை கிரைம் ப்ரான்ச் வட்டாரத்தை பொறுத்தவரை அவர் வி.ஆ (V.A) என்றழைக்கப்படுகிறார். அதுமட்டுமில்லாது இந்த வழக்கிற்காக நீ செல்லும் அனைத்து இடத்திற்கும் உன் பாதுகாப்பை காரணம் காட்டி அங்கு வந்து நிற்பது ஆதர்ஷ் தான்… சோ, ஒன்றும் ஒன்றும் இரண்டும் என்பதைப்போல் அனைத்தையும் சேர்த்து பார்க்கும்போது ஆது தான் அந்த ஆபீசர்” என்றான்.

மஹிக்கே இப்போது ஒரு தெளிவு பிறந்தது. ராகவ் சொல்லியது, இப்போது ஷியாம் சொல்வதென அனைத்தும் ஆதுவுடன் சம்மந்தப்பட.. இனி அனைத்தையும் தனது விஹூ பார்த்துக்கொள்வான் என்கிற அவன் மீதான நம்பிக்கையில் தான் காலை மண்டபத்திற்கே வந்தாள்.

ஏற்கனவே அறிந்த செய்தி தானென்றாலும் இன்று செய்தி வாயிலாக காணொளியை பார்க்கையில் ராகவின் ரத்தம் கொதித்தது. தனது தந்தையின் செயலை நினைத்து வேதனை கொண்டவளாக கௌசி ராகவிடம் மன்னிப்பு வேண்ட…

“நீ என் மனைவி, என் அக்காவின் மகள். அவ்ளோதான். அவர் யாரோ?” என்றதோடு அவளின் கண்ணீரையும் துடைத்து தானொரு நல்ல கணவனென்று நிரூபித்தான்.

ஆதுவிற்கு நன்றி தெரிவித்துவிட்டு வருவதாகவும், அப்படியே அம்சாவை தன்னுடன் அழைத்து வந்துவிடுவதாகக் கூறி ராகவ் நாதன் இல்லம் புறப்பட்டான்.

ராகவ் அங்கு செல்வதற்கு முன்பே சட்ட ரீதியாக தனது வேலைகளை முடித்து ஆது வீடு திரும்பியிருந்தான்.

வீட்டிற்கு வந்த ஆதுவை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு கண்ணீரின் மூலம் தங்களது உணர்வுகளை பிரதிபலித்தனர். யமுனா தன் கணவனின் இறப்பிற்கு நியாயம் செய்திட்ட ஆதுவிற்கு நன்றி தெரிவிக்க… இது கடமை என்றதோடு தனது அத்தையை அணைத்துக் கொண்டான்.

“உள்ளே வரலாமா?” எனக் கேட்ட குரலில் அனைவரும் திரும்பிப் பார்க்க ராகவ் நின்றிருந்தான்.

அனைவரும் அவன் யாரென்று பார்க்க, மஹி தான் ராகவை வரவேற்று… சேந்தனின் மகனென்று அறிமுகப்படுத்தினாள்.

ராகவிற்கு எல்லோரும் ஆறுதல் அளிக்கும் விதமாக பேச, ஆது மட்டும் அமைதியாக நின்றிருந்தான். ஒரு மணி நேரத்திற்கு முன்பு நடந்த செய்தி இவனுக்கு தெரியுமா தெரியாதாயென்று எண்ணிய ஆதர்ஷ், ராகவை பார்த்துக்கொண்டே, அனைவரிடத்திலும் பத்மநாபன் இறந்துவிட்டாரென்று தகவலளித்தான். அத்தோடு அவரை கொன்றதற்காக அம்சா கைது செய்யப்பட்டதாக கூற ராகவ் அதிர்ந்தான்.

“வாட்?”

“இட்ஸ் ட்ரூ…. நீ எங்க உன் அப்பாவின் அரசியல் வாரிசா வந்துடுவாயோயென்ற பயத்தில் உன்னை கொலை செய்ய பல்வேறு வகையில் அவர் திட்டம் தீட்ட, அதுமட்டுமில்லாமல் உங்களது தந்தையை பதவி மோகத்திற்காக கொன்றதும் பத்மநாபன் தான் என்பதை தெரிந்து கொண்ட உன்னோட அக்கா… கணவன் என்பதையும் தாண்டி, நாங்க பத்மநாபனை கைது செய்யப்போகும் முன்பு அவர் உண்ட மதிய உணவில் விஷம் வைத்துள்ளார்.

நாங்கள் நேரடியாக கோர்டிற்கு அழைத்து செல்லும் வழியிலேயே வாயில் ரத்தம் வழிந்து பத்மநாபன் இறந்து விட்டார்.

நாங்கள் பரிசோதனைகள் முடித்து அவர் இறந்துவிட்டாரென்று உறுதி செய்து உடலை உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவிட்டு மீண்டும் அலுவலகம் செல்வதற்குள் திருமதி அம்சா அவர்கள் தானே குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்து விட்டார் என்பதால் தன்னால் ஒன்றும் செய்ய இயலாது போனது” என்பதை வருத்தத்துடன் கூறினான்.

தன் அக்காவை நினைத்து ராகவிற்கு பெருமையாக இருந்தது. அதே சமயம் அந்த நஞ்சு நிறைந்த பாம்பினை தன்னால் கொலை செய்யாமல் போனதே என்று வருந்தினான்.

அவனின் வருத்தம் உணர்ந்த ஆதர்ஷ், “இனி எல்லாம் சரியாகிவிட்டது. உன் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ். அம்சா, குற்றத்தை தானே ஒப்புக்கொண்டதால் நிச்சயம் அவருக்கு ஜாமீன் வழங்கப்படும்.. சோ, டோன்ட் ஒர்ரி அபௌட் தட்” என்று ராகவிற்கு ஆறுதல் அளித்தான்.

ராகவும் தனது அக்காவை பார்க்க போவதாக உரைத்திட்டு அனைவரிடமும் அங்கிருந்து விடைபெற்றான். ஆதர்ஷ் கூறியது போலவே அம்சாவிற்கு ஜாமீன் வழங்கப்பட, அடுத்த இரண்டு மணி நேரத்தில் தனது சகோதரியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.

நாதன் இல்லமே பேரமைதியில் மூழ்கியிருந்தது. அனைவரும் ஒருவரது ஒருவர் முகத்தை பார்ப்பதும் மௌனமாய் தலை குனிவதுமாய் இருக்க, அங்கு நிலவிய அமைதியை நாதன் கலைத்தார்.

“டேய் விஷ்ணு.. இப்போ என்ன நடந்ததுன்னு இவ்வளவு அமைதியா உட்கார்ந்திருக்கீங்க. நன்மை தானே நடந்திருக்கு, ஆக வேண்டிய காரியத்தை பாருங்க” என்று தனது மகனை விரட்டினார்.

விஷ்ணு என்னவென்று புரியாது விழிக்க,

நாதன் தன் தலையில் தட்டிக் கொண்டவராய், “மூன்று ஜோடிக்கும் இங்கே முதலிரவுக்கு ஏற்பாடு செய்டா” என்றவராக தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்று விட்டார்.

“ஷ்ஷ்ஷ்…”

நாதன் சென்ற பிறகு கிஷோர் பெரு மூச்சு விட்டவனாக வினுவை பார்க்க… இவர்களின் சம்பாஷனையை புரிந்து கொண்ட ஆது சத்தமாக சிரித்து வைத்தான்.

அவனின் சிரிப்பொலியில் அனைவரும் கிஷோர் மற்றும் வினுவை பார்க்க.. இருவரும் நன்கு அசடு வழிந்தனர்.

அவர்களுக்குள் ஏதோ சொல்லி நகைத்துக்கொள்வதாக நினைத்த பெரியவர்கள் நாதன் கூறி சென்றதற்கான ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றனர்.

ஆது இன்னும் சிரித்துக் கொண்டே இருக்க, அவனின் இருபக்கமும் வந்து நின்ற வினுவும், கிஷோரும் அவனை நன்கு மொத்தினர்.

“ஏன்டா… நடந்து முடிந்த நிகழ்வில் எங்க எங்களுக்கு ஆப்பு அடித்து விடுவாங்களோன்னு நாங்க பயந்தால் உனக்கு அது சிரிப்பாயிருக்கா?” என்று மேலும் நாலு குத்து குத்தினர்.

வைஷூ மற்றும் சந்தோஷி மானமே போகுதென்று தலையில் தட்டிக்கொள்ள, நாம் அறைக்குள் சென்று நன்றாகத் தட்டிக்கொள்ளலாமென வினு, கிஷோர் தத்தம் மனைவிகளை அழைக்க,

“அதெல்லாம் இரவாகும் வரை அவர்கள் என்னுடன் தானிருப்பார்கள்” என்று முதுகுக்கு பின்னால் ஒலித்த யமுனாவின் வார்த்தையில் இருவரும் பதறியவர்களாய் ஒன்றும் பேசாது தனித்தனியாக அறைக்குள் சென்றனர்.

அவர்களின் முகத்தை பார்த்து மற்ற நால்வரும் நன்கு நகைத்தனர்.

இரவு ஒன்பது மணி…..

வினுவும், கிஷோரும் தங்களின் வாழ்க்கையின் முதல் படியை தொடங்கி ஜெட் வேகத்தில் முன்னேறி கொண்டிருக்க..

ஆது தனது நாயகிக்காக பல கனவுகளுடன் தன்னறையில் காத்திருந்தான்.

முதல் முறையாக புடவை அணிந்து, மலர் சூடி.. நெற்றி நிறைய குங்குமமிட்டு, தான் அணிவித்த தாலியோடு தன் மனைவியாகி முழு பெண்ணாக வரும் மஹியை எதிர்பார்த்து ஆதுவின் கண்கள் நொடிக்கு ஒரு தரம் மூடிய கதவினை தொட்டு மீண்டது.

அடுத்த பத்து நிமிடத்தில் ஆது எதிர்பார்த்த மாதிரியே பெண்ணின் குணத்தோடு மொத்தமாய் அறையினுள் நுழைந்தவள்.. கதவினை சாற்றிவிட்டு கையிலிருந்த பால் தம்ளரை மேசையின் மீது வைத்துவிட்டு வேகாமாக தன் உடலை சுற்றியிருந்த புடவையை கலையத் தொடங்கினாள்.

புடவையில் தேவதை போல் ஜொலித்தவளை முழுதாய் ரசிப்பதற்குள், அவள் செய்து கொண்டிருக்கும் காரியம் பதறவைக்க.. கணவனாக அவளை பார்த்தாலும்… அடித்த நொடி கண்களை மூடியவனாக, “என்னடி பண்ற?” என அலறினான்.

“ஏன்டா கத்தற.. நீ கத்தற கத்தலில் நான் ஏதோ உன்னை பண்றதா நினைக்க போறாங்க” என்றவள்… கண்ணாடி முன் நின்று தனது தலை அலங்காரத்தையும், நகைகளையும் அவிழ்த்துக் கொண்டிருந்தாள்.

மஹி ஆதுவை பார்த்து கேட்ட கேள்வியில் அதிர்ந்து கண்களை திறந்தவன், அவள் நின்றிருந்த கோலம் கண்டு இமைக்கவும் மறந்து சிலையாகினான்.

தன் கணவன் தன்னை ரசனையோடு தாப பார்வையால் விழுங்கிக்கொண்டிருக்கின்றான் என்பதை கண்டு கொள்ளாதவளாய் வார்ட்ரோப் திறந்து அவனின் ஷார்ட்ஸ் மற்றும் டி ஷர்ட் ஒன்றை எடுத்து உடை மாற்றும் அறைக்குள் சென்றவள் அடுத்த ஐந்தாவது நிமிடம் அவனுடையில் அவன் முன் நின்றாள்.

இதுலையும் செமயாத்தான் இருக்கிறாளென அவன் உள்மனம் தனது கற்பனையை மறந்து மீண்டும் அவளை அவளாகவே ஏற்றுக்கொண்டது.

ஒரு ஐந்து நிமிடம் அந்த புடவையை சுற்றிக்கொண்டு நிற்க முடியவில்லை என்றவள் ஆதுவை நெருங்கி அவன் கால் மீது ஏறி நிற்க…

கொலைகாரி ஏதோ செய்யப்போகிறாளென்று அவனின் மனம் கற்பனை குதிரையில் பறக்க… அவளோ, “தேங்க்ஸ் விஹூ” என்றாள்.

அவளுரைத்த நன்றியில் பொங்கிய உணர்வுகள் அனைத்தும் வடிந்துவிட அவளைவிட்டு விலகி நின்றவன் எதற்கு எனக் கேட்க, அவள் எல்லாவற்றிற்குமென்று பதிலளித்தாள்.

தன்னை இன்னும் தன்னவனாக ஏற்காது நன்றி சொல்பவளை பார்க்க பிடிக்காது திரும்பி நின்றவன்…

“என் மனைவியோட சத்தியத்தை ஒரு கணவனா நிறைவேற்றியதற்கு எனகெதற்கு நன்றி” என ஆது சொல்லி முடிக்கவில்லை மஹி காதலாக தன்னவனை பின்னாலிருந்தபடி இறுக அணைத்துக்கொண்டாள்.

“நீ எப்படியிருந்தாலும் எனக்கு பிடிக்கும்டி” என்றவனிடம்… “ஒரே ஒரு கேள்வி” என்றவளை கேள் என்பதை போல் பார்த்தான்.

“நீ எப்படி எப்போ சிபிசிஐடி ஆன?”

“இந்தநேரத்தில் இக்கேள்வி ரொம்ப முக்கியமா?” சலிப்பாகக் கேட்டவனிடம் ஆமாமென்றாள் பிடிவாதமாக..

“நான் க்ரைம் பிராஞ்சில் சேர்ந்து இரண்டு வருடமாகிவிட்டது. அனைவரும் நினைத்ததை போல் நான் லண்டன் செல்லவில்லை, டெல்லி சென்று.. சிபிஐ ஆவதற்கான அனைத்தும் செய்து அங்கேயே இரண்டு வருடம் பணியில் இருந்தேன். நீ பெரிய வக்கீலாகிவிட்டாயென்று அறிந்த பின்.. நீ எப்படியும் இனியும் தாமதிக்காம மாமா கேஸ் ரீ ஓபன் செய்வன்னு கணித்து, அதற்கு முன்பாக அந்த வழக்கினை நான் என் கையில் ஏற்றிருக்க வேண்டுமென்று சென்னைக்கு மாற்றல் கேட்டு உடனடியாக வந்தேன்” என்று கூறினான்.

“எல்லாம் எனக்காகவா…?” அவள் கேட்டதற்கு ஆமென்று இமை மூடி திறந்தவனை ஆரத் தழுவியவள், தன் அணைப்பை இறுக்கியவளாய்.. “ஐ லவ் யூ விஹூ” என்று மூச்சு விடாது மந்திரம் போல் ஜெபித்தாள்.

அவளின் காதல் மொழியில் சுகமாய் கரைந்தவன்.. தன்னவளின் மென்மையின் மேன்மையை உணர்ந்தவனாய்… “பேபி இதற்கு மேலும் என்னால் விரதமிருக்க முடியாது” என்று அவளின் காதுகளில் கிசுகிசுக்க, தன்னவனின் மீசை ஏற்படுத்திய குருகுறுப்பில் அவனின் நெஞ்சத்தில் புதைந்தவள் சரியென தலையசைக்க.. தனது வேட்டியை மடித்து கட்டியவன்.. தன்னை பசைபோல் ஒட்டி நிற்பவளை கைகளில் பூக்குவியலென அள்ளி தன் வாழ்க்கை பயணத்தின் புது அத்தியாயத்தை தொடங்க மஞ்சத்தை நோக்கி நகர்ந்தான்.

நாமும் நாகரீகம் கருதி அவர்களுக்கு தனிமையளித்து மூடிய கதவுக்கு பின்னாலிருந்து அவர்களின் இல்லறம் சிறக்க வாழ்த்துவோம்.

ஒர் ஆண் எப்படியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பெண்கள் இங்கு அதிகம்.

ஆனால், ஒரு பெண் தன் நிலையிலிருந்து சிறிது மாறுபட்டாலும் அவள் சமூகத்திடமிருந்து விலக்கி வைக்கப்படுவாள்.

அத்தகைய சமூகத்தில் ஒரு பெண்ணை அவளது விருப்பப்படியே, அவள் எப்படியிருந்தாலும் அவளை அவளாகவே ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு மனமார்ந்த நன்றி.

முற்றும்…

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இக்கதையோடு என்னுடன் பயணித்த அனைத்து வாசக நண்பர்களுக்கும் நன்றிகள் பல பல. மீண்டும் மற்றொரு கதை மூலம் உங்களை சந்திக்கின்றேன்.
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

error: Content is protected !!
Scroll to Top