ரவுடி பேபி 3 (1)

அத்தியாயம் 3

ஆடிட்டோரியம் முழுவதும் மாணவர்களால் நிரம்பி வழிந்தது. அன்று முழுவதும் எந்தவொரு வகுப்புகளும் கிடையாது. சீனியர் மாணவர்கள் ஜூனியர்களை பற்றி தெரிந்துகொள்ளும் கொண்டாட்டமான நிகழ்வு.

மேடையேறிய ஆதர்ஷ் தன்னை அறிமுகப்படுத்தியதும்… மாணவர்களிடையே கரகோஷம் விண்ணைத் தொட்டது.

சிறு புன்னகையுடன் மேடையருகே இறங்கி நின்றுகொண்டான்.

ஒவ்வொருத்துறை மாணவர்களின் ரெப்ரசென்டேட்டிவ் மாணவன்/மாணவி தங்களது பிரிவு முதல் வருட புது மாணவர்களின் பெயரை வாசிக்க ஒவ்வொருவராகத் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களுக்கு தெரிந்த ஏதோ ஒன்றினை செய்து காண்பித்தனர். ஒரு சிலரிடம் சீனியர் மாணவர்கள் கேள்விகள் கேட்டும், தாங்கள் கூறுவதை செய்ய வைத்தும் கலாட்டா செய்தனர். அவை யாவும் மாணவர்களின் விளையாட்டு எல்லைக்குள்ளே இருந்தது.

அதிகபட்சமாக யாரையும் ஹர்ட் செய்யுமளவிற்கு எதுவும் கேட்கவோ, செய்யவோ கூடாதென்று ஆதர்ஷ் முன்பே சீனியர் மாணவர்களுக்கு கட்டளையிட்டுருந்தான்.

அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த முதல் வருட மாணவர்களின் அறிமுகப் படலம் முடிந்தது… இரண்டாம், மூன்றாம் ஆண்டின் பாதியில் சேர்ந்த மாணவர்களை மேடைக்கு அழைத்தனர்.

மஹியை அழைத்ததும் மேடையேறியவள், அவளின் பெயரை வாசித்தவனிடம், “கால் மீ மஹிரா. டோன்ட் ஷார்ட் மை நேம்” என்றாள்.

அவன், “இப்போது நான் என்ன பண்ணிட்டேன். ஏன் இந்த மொற மொறைச்சிட்டு போறா” என்க,

அவனருகில் நின்றிருந்த ஆதர்ஷ், “அவளுக்கு அவ நேம் ஷார்ட் பண்ணா பிடிக்காது” என்றான்.

“அவளுக்கு பிடிக்காதுன்னு உனக்கு எப்படி டா தெரியும்?”

“இந்த சந்தேகம் எங்களுக்கு ரெண்டு நாளைக்கு முன்பிருந்தே இருக்கு” என ஒரே குரலில் ஒரு சேர கூறிய கிஷோர் மற்றும் வினுவை ஆச்சரியமாகப் பார்த்தான்.

பின்பு ஆதர்ஷுடன் எப்போதும் சுற்றிக்கொண்டிருக்கும் அவர்களுக்கே தெரியவில்லையென்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும்.

மேடையில் நின்ற மஹி அனைவரையும் பார்த்து தனது பெயர் மற்றும் வகுப்பினைத் தெரிவித்து கீழிறங்க இருந்த வேளையில், “ஒரு பாட்டு பாடிட்டு போ!” என கூட்டத்தில் குரல் கேட்டது.

“நான் பாடிடுவேன் பட் அதுக்கு அப்புறம் இங்க ஒருத்தர் கூட இருக்க மாட்டீங்க” என்றாள். அவளின் பதிலிற்கு அரங்கமே ஹோ என்று கத்தியது.

“சரி.. டான்ஸ் பண்ணு…” 

“நான் ஆடுனா யார் பார்க்கிறது, நல்லா இருக்க உங்க கண்ணெல்லாம் என்னால் கேட்டு போக வேண்டாம்.”

“நாங்கலாம் உன்னை ரேக் செய்ய ட்ரை பண்ணா… நீ எல்லாரையும் கலாய்க்கிற” என்று கூட்டத்தில் ஒருவன் எழுந்து நின்று கேட்க….

“உங்களுக்கு இப்போதான் அது புரியவே செய்யுதா?” எனக் கேட்டுச் சிரித்தாள்.

அன்று அடி வாங்கிய சந்தோஷ் எழுந்து… “இப்போ நான் சொல்றதை செய்தா மட்டுமே நீ இங்கிருந்து போக முடியும்” என்றான்.

சரி என்றவளிடம், “இவ்வளவு நேரம் செய்ய சொன்ன எல்லாத்துக்கும் காரணங்கள் கூறி சமாளித்த மாதிரி இல்லாம ஒழுங்கா செய்யணும்” என்றான்.

“சரி… சரி…. செஞ்சுட்டா போச்சு… முதலில் என்னன்னு சொல்லு” என்றாள் கெத்தாகவே.

“இங்கிருக்க ஒரு பையன்கிட்ட லவ் ப்ரொபோசல் பண்ணு.”

அவள் தடுமாறுவாள், பயப்படுவாள் அல்லது முடியாதென்று சொல்லுவாள்… அதை வைத்து மேலும் அவளை ரேக் செய்யலாமென சந்தோஷ் எதிர்பார்த்திருக்க,

மஹியோ சற்றும் அசராமல்… மேடைக்கு அருகில் நின்றிருந்த ஆதர்ஷிடம், முன்பு வந்து ஒரு காலை மடக்கி மண்டியிட்டவள், தன் கைகளை அகல விரித்து “வில் யூ மேரி மீ விஹூ” என்றாள். ஆடிட்டோரியமே மாணவர்களின் கூச்சலில் அதிர்ந்தது.

வினு… கிஷோரை, ‘நான் சொன்னேனா.. இல்லையா!’ எனும் விதமாகப் பார்த்தான்.

ஆதர்ஷ் ஸ்தம்பித்தான். அவளின் கண்களில் ஆதர்ஷே வியக்கும் வகையிலான காதல் அப்பட்டமாக தெரிந்தது. உண்மையிலே இவள் கேட்கிறாளா என்ற சந்தேகம் அவனுக்குத் தோன்ற, “மஹிரா… டோன்ட் பிலே வித் மீ” என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டான்.

அவள் தன் ஒற்றைக் கண்ணை அடித்து, “ஜஸ்ட் ஃபன் மச்சி” என்ற பிறகே அவனுக்கு மூச்சு வந்தது.

ஆதர்ஷ் அவளை நேசிக்கிறான் தான். ஆனால், இது போன்றொரு சூழ்நிலையில் தன் காதலை வெளிப்படுத்த அவனுக்கு விருப்பமில்லை.

அவள் அவர்கள் கூறியதற்காக சொல்லியிருந்தாலும், அவள் அவ்வாறு சொல்லிய நொடி மஹியின் கண்களில் வந்துபோன காதல் உண்மையென்று அவனின் மனம் அடித்து கூறியது. ஆனால், அவளே அதை இன்னும் உணரவில்லையென நினைத்தவன், மஹி உணர்ந்த பிறகே தன் காதலை வெளிப்படுத்த வேண்டுமென முடிவு செய்தான்.

சந்தோஷ்… “அதென்னா எல்லா பெண்களும் அவன் மேலயே போய் விழுறீங்க” என எரிச்சலுற்றான்.

“நீயும் அவன் வளையில விழுந்துட்டியா?” என நக்கலாகக் கேட்க, கோபம் வர வேண்டிய ஆதர்ஷ் அமைதியாக இருந்தான்.

மஹியோ, “யாரை என்னடா சொன்ன. அன்னைக்கு வாங்கினது பத்தலையா?” எனக் கேட்டுக்கொண்டே தன் சட்டைக் கையினை மடித்தபடி சந்தோஷை நோக்கி முன்னேறினாள்.

அவளின் துடுகுத்தனம் அறிந்த ஆதர்ஷ், “மஹி ஸ்டாப். மஹி… மஹி” என கூப்பிட, அவளோ அவனின் குரலை அசட்டை செய்தவளாய் சந்தோஷிடம் சென்றாள்.

அவள் என்ன செய்யப் போகிறாளென்று, மாணவர்கள் காத்திருக்க..

“இந்த ஆம்பளப் பையன் திரும்ப ஆரம்பிச்சிட்டான் டா வினு. இங்க கலாட்டாவாகப் போகுது. ப்ரின்சி இனி எந்த பங்க்ஷன்க்கும் அனுமதி தர போறதில்லை” என்று புலம்பினான் கிஷோர்.

அவனின் வார்த்தைகள் ஆதர்ஷிற்கும் நன்கு கேட்டது.

“யாரை பார்த்து என்னடா சொல்ற. மவனே, அன்னைக்கே உன்னை வகுந்திருக்கணும் வகுந்து” என்றவளின் கை சந்தோஷை அடிக்க ஓங்கிய வேளை, ஆதர்ஷின் கரம் இடியென இறங்கியது மஹியின் கன்னத்தில்.

கண்களில் நீர் தேங்கியிருக்க வலியை பிரதிபலிக்காமல் அமைதியாக ஆதர்ஷனை ஏறிட்டுப் பார்த்தாள்.

இப்போவா, அப்போவா என விழ துடிக்கும் கண்ணீரை இமை மூடி உள்ளிழுத்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக அரங்கை விட்டு வெளியேறினாள்.

மஹி சென்றதும் சந்தோஷைப் பார்த்து… “இனியொருமுறை அவகிட்ட வம்பு செய்றதை பார்த்தேன்” என தன் நாவை மடித்து, ஒரு விரல் நீட்டி எச்சரித்தான்.

அதன்பிறகு நிழ்ச்சி அமைதியாக நிறைவுபெற அனைவரும் கலைந்தனர்.

வீடு வந்து சேரும் வரை ஆதர்ஷ் மஹியிடம் தன் பார்வையை கூட திருப்பவில்லை. தன்னை அடித்துவிட்டு கோபமாக வேறு இருக்கின்றானா என்று மஹியும் அவனிடம் எதுவும் பேசவில்லை.

வழமைக்கு மாறாக, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு அமைதியாக வருபவளை யமுனா முதல் அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

ஆனால், ஒருவருக்கும் அவளிடம் சென்று என்னவென்று கேட்கும் தைரியமில்லை. காரணம், அவளிடம் வாய்க்கொடுத்து யார் மீள்வது.

இரவு உணவு வேலையின் போதும் ஆதர்ஷ் அவளை நிமிர்ந்து பார்த்தானில்லை. அவன் பேசாது மஹிக்கு உணவு உள்ளே செல்ல மறுத்தது.

கலகலப்பாக பேசும் ஆதர்ஷ் இன்று மௌனமாக இருக்கவும், மஹியின் தீடிர் அமைதியோடு இணைத்து பார்த்த நாதன், “என்னப்பா ஆது மேடம் எதாவது தப்பு செஞ்சுட்டாங்களா?” என்று மஹியின் மீது அர்த்தமான பார்வை ஒன்றை பதித்தபடி கேட்டார்.

“அதெல்லாமில்லை தாத்தா.”

அவ்வளவு தான் என்பதை போல் அங்கிருந்து சென்று விட்டான்.

நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்தவன் அரவம் உணர்ந்து எழுந்து அமர்ந்தான். எங்கிருந்து சத்தம் வருகிறதென்று கவனித்தவன், பால்கனி கதவருகே நிழலாடுவதை பார்த்தான். மெதுவாக சென்று கதவினை திறந்தவன், அங்கு அந்நேரத்தில் மஹியை கண்டதும் கோபமாக, “இங்க என்ன செய்ற?” என வினவினான்.

“பால்கனி கதவை திறந்தெல்லாம் வைக்கமாட்டியா? உன்னை நம்பி என் ரூம் பால்கனியிலிருந்து தாவி வந்தேன் பாரு, என்ன சொல்லணும்.”

ஆதர்ஷின் கேள்விக்கு பதிலளிக்காது, எதிர்கேள்வி கேட்டவள் அதற்கான பதிலையும் அறிந்துகொள்ளாமல் அறைக்குள் நுழைந்து மெத்தையில் அமர்ந்தாள்.

“இந்தநேரத்திற்கு என் ரூமுக்கு எதுக்கு வந்த? யாராவது பார்த்தால் அவ்ளோதான்.” தன் அறையின் வாயில் மீது கண்ணை வைத்தவாறே தெரிவித்தான்.

“ஒய் ஷுட் இக்னோரிங் மீ?”

“யாரு நானா?”

“ஆமா, நீ தான்… எல்லாரும் என் கிட்ட பேசாம இருந்தாலும் பரவாயில்லை.. பட் நீ பேசாத அரை நாள் கூட தாங்கிக்க முடியல. மொத்தமா எல்லாம் இழந்த மாதிரி…”

இதையெல்லாம் கண்ணீரோடு நம் நாயகி சொல்லியிருப்பாளென்று நீங்கள் நினைத்தால் தவறு.

“அது ஏன் அப்படின்னு எப்போவாவது யோசித்து பார்த்திருக்கியா மஹி?” எப்படியாவது அவளின் காதல் மனதை அவளுக்கு புரிய வைத்து விடும் நோக்கில் முயற்சி செய்தான். அவளோ தன் கீழ் உதட்டை வளைத்து இல்லையென தலையசைத்தாள்.

“சரி… இனியாவது உன் அடாவடியெல்லாம் மூட்டை கட்டி வைச்சிட்டு படிப்பில் மட்டும் உன் கவனத்தை போகஸ் பண்ணு” என்றான்.

“நீ… இப்போ மாதிரி உன் மூஞ்சை இஞ்சி தின்ன அனுப்பிட மாட்டியே?”

அவன் சொன்னதை ஏற்றாலோ இல்லையோ தன் காரியத்தில் கண்ணாக இருந்தாள்.

ஆதர்ஷ்ம சிரித்துக்கொண்டே… “ஓகே” என்றான்.

மறுநாள் தங்களுக்கு காத்திருக்கும் செய்தி அறியாமல் இருவரும் துயில் கொள்ளத் தொடங்கினர்.

அன்று கல்லூரி கேண்டினில் அமர்ந்து தனது தோழிகளுடன் மஹி அரட்டை அடித்துக்கொண்டிருந்தாள். திடீரென ஒருத்தி ஓடி வந்து, “மஹிரா” என்று கத்தி அழைத்தாள்.

“பழைய கட்டிடம் டி… நீ கத்துன கத்துல இடிஞ்சி விழுந்துற போகுது.”

கத்தியவளை பார்த்து மஹி கேலி செய்ய, அதனை பொருட்படுத்தும் மனநிலையில் அவளில்லை.

“மஹி விளையாடும் நேரம் இது இல்லை. காலேஜ் பஸ் ஸ்டாப்பில் ஒருத்தன் நம்ம மதி துப்பட்டாவை பிடித்திழுத்து வம்பு பண்ணிட்டு இருக்கான்” என்று மூச்சு வாங்க கூறினாள்.

“என்ன சொல்ற வேணி?” என்ற மஹி பேருந்து நிலையத்தை நோக்கி விரைந்தாள்.

மஹியுடன் அமர்ந்திருந்த மற்றொரு தோழியான ரேமா,

“அவகிட்ட ஏன்டி சொன்ன? ஏற்கனவே ரவுடித்தனம் பண்ணிக்கிட்டு சுத்திட்டு இருக்காள். இதுல இது வேறையா?” என்று தனது தோழியிடம் பொறிந்தாள்.

“நீ உடனே போய் ஆதர்ஷ் அண்ணாவை கூட்டிட்டு வா, அவள் அங்க எந்த வில்லங்கமும் பண்றதுக்கு முன்ன அங்கபோய் அவளை தடுக்கப் பாக்குறேன்” என கூறியவள் வேகமாக ஓடினாள்.

வேணி கூறியதை கேட்டதும் பேருந்து நிலையத்திற்கு விரைந்த மஹி… அங்கு யார் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் பொருட்படுத்தாது மதியிடம் வம்பு செய்து கொண்டிருந்தவனை கன்னத்தில் அறைந்தது மட்டுமில்லாமல் தரையில் உருள விட்டு புரட்டி எடுத்து விட்டாள்.

மதியின் துப்பட்டாவை அவன் கழுத்தில் சுற்றியிருக்க, இரண்டு பக்கமும் துப்பட்டாவை பிடித்து இருக்கியவள், “இனி எந்த பொண்ணுகிட்டவாது வாலாட்டின கொன்னு புதைச்சிடுவேன்” என்றவளாக துப்பட்டாவை உருவி மதியின் கழுத்தில் போட்டவள், அவளையும் இழுத்துக்கொண்டு கல்லூரிக்குள் நுழைந்தாள்.

அவளின் செயலினை இரண்டு ஜோடி கண்கள் பார்த்திருந்ததை பாவம் அவள் அறியவில்லை.

வேணி ஆதர்ஷிடம் சொல்லியதும் எந்தவொரு உணர்வினையும் பிரதிபலிக்காமல் நின்றிருந்தவன்… அவள் பார்த்துப்பாள் என்றதோடு விட்டுவிட்டான்.

மஹியை அடக்குவது ஆதர்ஷால் மட்டுமே முடியும் என்றதாலே வேணி அவனைத் தேடி ஓடி வந்தாள். ஆனால் ஆதர்ஷின் அமைதி அவளுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அங்கு மஹி அம்மாணவனை என்ன பாடுபடுத்துகிறாளோ என்று நினைத்த வேணி பேருந்து நிலையத்திற்கு ஓட.. அவளுக்கு எதிராக மதியை ஆறுதல் படுத்தியவாறு மஹியும், ரேமாவும் வந்துகொண்டிருந்தனர்.

அம்மாணவனின் நிலை என்னவாகியிருக்குமென்று நினைத்த வேணிக்கு அடுத்து என்ன நடக்குமென்ற பயம் எழுந்தது.

மஹிக்கு முரணாக வேணியிடம் ஆதர்ஷ் எதுவும் கூறவில்லையென்றாலும், அவன் மனதில் கோபம் கனன்றது.

‘எவ்வளவு எடுத்து சொன்னாலும் புரிஞ்சிக்கமாட்டேங்கிறாளே!’ என ஆயாசமாக இருந்தது.

ஒரு ரவுடியை போல் அவள் சண்டையிடுவதை தன்னால் பார்க்க முடியாது என்பதாலேயே ஆதர்ஷ் மஹியை தடுக்க செல்லவில்லை. தான் சென்றிருந்தால் நிச்சயம் அவளை கடிய நேர்ந்திருக்கும். போகாததே நன்று என நினைத்தவன் தன் அடுத்த கட்ட வேலையை கவனிக்கச் சென்றான்.

இரவு வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்திருந்த சமயம்… 
நாதன் தெரிவித்த செய்தி யாருக்கு அதிர்வாக இருந்ததோ இல்லையோ யமுனாவிற்கு பேரதிர்வாக இருந்தது.

அவர் கூறிய செய்தி இதுதான்…

“மஹிரா, ஆதர்ஷ் திருமணம் செய்யலான்னு முடிவு செய்திருக்கேன்.”

அவர் கூறியதே இதில் யாருக்கும் மறுப்பு இருக்கக்கூடாது என்ற அழுத்தம் அதில் மறைந்திருந்தது.

யமுனா தான் தன் தந்தையை எதிர்த்து பேசினார்.

“அப்பா.. ஆதர்ஷை கல்யாணம் பண்ணிக்கிட்டா, என் பொண்ணு வேணும்னா சந்தோஷமா இருப்பாள். ஆனால், ஆதர்ஷ்?” என்ற கேள்வியுடன் யமுனா தன் பேச்சினை நிறுத்த…

“நிச்சயம் மஹிராவை மணப்பதால் ஆதர்ஷ் சந்தோஷமாவே இருப்பான்” என தன்னுடைய பேரனின் மனம் அறிந்திட்டவராக நாதன் கூறினார்.

நாதன் விஷ்ணுவை ஒரு பார்வை பார்க்க தனக்கு இதில் சம்மதமென கண் மூடி திறந்தார்.

யமுனா தன் மருமகன் மீது கொண்ட அன்பால்… ஆண் பிள்ளை போல் சுற்றித் திரிபவள் நம் ஆதர்ஷிற்கு வேண்டாம் என மீண்டும் வாதிட,

“உன் மகள் நிம்மதியா வாழ உனக்கு விருப்பமில்லையோ?” எனக் கேட்டு தன் தங்கையின் வாயினை அடைத்தார் விஷ்ணு.

இங்கு நடக்கும் யாதொன்றிற்கும் தனக்கும் சம்மதமில்லை என்பதை போல் ஆதர்ஷ், ஆதி மற்றும் நித்திலாவுடன் விளையாடிக்கொண்டிருந்தான்.

உணவு மேசையில் அமர்ந்து… சாப்பாட்டினை வாய்க்குள் தள்ளிக்கொண்டிருந்த மஹிராவிற்கு அவர்கள் பேசுவது செவிகளில் கேட்க கூடவில்லை.

ஜானகி தான் தன் மகனின் அருகில் சென்று… “உனக்கு இதில் சம்மதமா ஆது?” எனக் கேட்டார்.

நித்திலாவை தன் கால்களில் நிற்க வைத்து விளையாடிக்கொண்டிருந்த ஆதர்ஷ் தீர்க்கமாக தன் அன்னையின் கண்களை சந்தித்து…

“எனக்கு மஹி மனைவியா வரதில் சந்தோஷம் தான்… ஆனால், என் படிப்பு முடிஞ்ச அப்புறம் வைத்துக்கலாம் என்பது என் கருத்து” எனத் தெரிவித்தான்.

அந்நேரத்தில் தான் சாப்பாட்டிலிருந்து தன் கவனத்தை குடும்பத்தாரின் பக்கம் திருப்பிய மஹி… ‘கொள்ளை கூட்டத் தலைவர் (அதாங்க நம் நாதன்) ஏதோ பெருசா திட்டம் போட்டிருக்காரு போலவே, என்னன்னு போயி பாப்போம்’ என்று நினைத்து அங்கு வந்து சேர்ந்தாள்.

அவள் வந்ததும்…

யமுனா, “உனக்கு இதில் சம்மதமாடி” எனக் கேட்க,

‘அய்யய்யோ… இவங்க என்ன பேசீனாங்கன்னு கவனிக்கலையே! இப்போ என்னான்னு கேட்டால் அதுக்கும் சேர்த்து கத்துவாங்க’ என்று மனதிற்குள் புலம்பியவள்.

மெல்ல ஆதர்ஷின் பக்கம் நகர்ந்து, யாருக்கும் கேட்காத வகையில், ” “என்னடா பேசுனீங்க. இப்போ நான் யமு கேட்டதுக்கு எஸ் சொல்லணுமா, நோ சொல்லணுமா?” என்றாள்.

ஆதர்ஷ் ஒன்றும் தெரியாதவன் போல் “சரி சொல்லு” என்றான்.

இவளும் மண்டையை சரியென உருட்ட ரெடியாகிய நொடி,

“அவள் சம்மதம் இல்லைன்னாலும் ஆதர்ஷோட அவளுக்கு திருமணம் நிச்சயம் நடக்கும்” என்ற நாதன்,

“இனியாவது பொம்பளை பிள்ளையா லட்சணமாக நடந்துக்க சொல்லு. பொறு** மாதிரி பஸ் ஸ்டாப்பில் ஒருத்தனை போட்டு அடிச்சிட்டு இருக்காள். இனியும் விட்டு வைத்தாள் குடும்ப மானத்தை ஃபிளைட்டில் ஏற்றிடுவாள். அந்தக் குதிரை வால் மட்டும் இல்லைன்னா,” என அவளது முடியை சுட்டிக்காட்டியவர், “யாரும் அவளை பொண்ணுன்னு ஏத்துக்கவே மாட்டாங்க” என்றார்.

“இதுக்கு அப்புறம் உங்க பெயர் கெடும்படி எதுவும் செய்யமாட்டேன். இந்த கல்யாணம் வேண்டாமே.” கெஞ்சும் குரலில் மன்றாடினாள்.

‘உனக்கு நடிப்பு கூட நல்லா வருதுடி.’ அவளின் கண்களில் ஒளிரும் குறும்பை கண்டுகொண்ட ஆதர்ஷ் மனதில் கூறிக்கொண்டான்.

“என்னை கட்டுப்படுத்த விஹூ வாழ்க்கையை என் கையில விளையாட கொடுத்துடாதீங்க” என்ற மஹியின் கூற்றை,

“அவள் சொல்வதும் நியாயம் தானே” என ஏற்று யமுனா சொல்லி முடிக்கவில்லை,

“சரி அவளுக்கு நான் ஒரு வாய்ப்பு தர்றேன். இனி எதாவது வம்பு வளர்த்துட்டு வந்தா, அடுத்த நொடியே அவள் திருமணத்தை நடத்த என்ன செய்யணுமோ தொடங்கிடுவேன்” என உறுதியாக கூறி தன் அறைக்குள் சென்று விட்டார் நாதன்.

“எப்புடி!”

தன் சட்டை காலரை உயர்த்தியபடி மஹி ஆதர்ஷனை பார்க்க… அவனோ வெறுமையான பார்வையை அவள் மீது வீசிச் சென்றான்.

அவன் பார்வை அவளுக்குள் ஏதோ கூறுவதை போலிருந்தது.

அது என்னவென்றுதான் அவளுக்கு புரியவில்லை.

“சொல்லாத காதலும்… புரிந்துகொள்ளாத அன்பும்… வலியை நோக்கியே பயணிக்கின்றன.”

error: Content is protected !!
Scroll to Top