இரவு நேரம் உறக்கம் வராமல் தோட்டத்தில் உலவி கொண்டிருந்தான் ஆதர்ஷ். தனது நடையில் முன்னேறி சென்றவனை மஹியின் குரல் நிறுத்தியது.
“என்னடா தூக்கம் வரலையா?”
மஹியின் கேள்விக்கு பதிலளிக்காது மீண்டும் நடக்க ஆரம்பித்தான். ஓடிச்சென்று அவன் முன் நின்றாள்.
“எதுக்குடா பேசாம முகத்தை திருப்பிக்கிட்டு போற?”
“என்ன பேசனும்?”
“நான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லலன்னு கோபமா இருக்கியா?” அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.
ஒரு நொடி அவளின் குழந்தைத்தனமான முகத்தில் தடுமாறியவன்…
“அது உன்னுடைய விருப்பம், நான் அதை கேட்கல. பஸ் ஸ்டாப்ல எதுக்கு சண்டையிட்ட?” ஆதர்ஷின் குரல் கோபத்தில் ஒலித்தது.
“அதான் முடிஞ்சிருச்சே திரும்பவும் அதையே ஏன் பேசணும்” என்றவள், “நீ இப்படி பேய் மாதிரி இங்கயே நட, எனக்கு தூக்கம் வருது. நான் தூங்கப்போறேன்” என திரும்பி நடந்தவளிடம்,
“உனக்கு ஏன் விருப்பமில்லை?” எனக் கேட்டிருந்தான்.
ஆதர்ஷிற்கு தன் படிப்பு முடிவதற்குள் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை தான். ஆனால், தன்னவளின் மீது மலையளவு காதல் கொண்ட அவன் நெஞ்சமோ மஹியின் மறுப்பில் சுணங்கியது.
அவள் கண்களில் அவன் கண்ட காதல் அக்கேள்வியினை கேட்க செய்தது.
“நீயும்தான வேண்டாம்னு சொன்ன?”
எதிர் கேள்வி கேட்டவளிடம்,
“என் படிப்பு முடிந்து, என் விருப்பப்படி நான் பிசினஸ் ஸ்டார்ட் பண்ண இன்னும சில மன்த்ஸ்தான் இருக்கு. சோ, அதுக்காகத்தான் இப்போதைக்கு வேண்டாம் சொன்னேன்” என்றான்.
இப்போதைக்கு என்ற வார்த்தையில் அதிக அழுதத்தைக் கூட்டி கூறினான்.
இப்போதைக்கு மட்டுமே வேண்டாமே தவிர, நீ என் மனைவியாக வருவதில் தடையேதுமில்லை என்ற பொருள் மறைந்திருந்தது.
ஆனால், புரியவேண்டியவளுக்கோ புரியவில்லை.
நானும் அதே ரீசன் சொல்லலாமில்லையா… என வெளியில் கேட்டவள் மனமோ எனக்கு படிப்பு முடிய இன்னும் நான்கு வருடம் இருக்கிறது என்றது.
அவள் கூறிய பதிலில் அவன் மனம் அடைந்த நிம்மதி, அடுத்து அவள் கூறியதில் காணாமல் போனது.
இன்னும் நான்கு வருடப் படிப்பென அவள் சொல்லியது ஆதர்ஷை யோசிக்க வைத்தது.
ஆதர்ஷை நெருங்கி அவன் தோள் மீது கைபோட்டவள், “உன்னை எப்படிடா? எனக்கு ஹஸ்பண்ட் அப்படிங்கிற கண்ணோட்டத்தில் என்னால பார்க்க முடியும்? எனக்கு அப்பா இல்லை விஹூ, ஆனால் அப்பா இருந்திருந்தா உன்னை மாதிரி தான் என் மேல அன்பு, அக்கறை, வேண்டிய நேரத்தில் அறிவுரை வழங்கி, பாதுகாப்பா அரவணைச்சு உன்னைப்போலவே என் வாழ்வு நாலாயிருக்கணும்ன்னு எனக்காக யோசிச்சிருப்பாங்க நினைக்கிறேன். அப்படியிருக்கும் போது உன்னை நான் எப்படிடா மேரேஜ் பண்ணிக்கிறது? ஆனால், நீ என் லைஃப்ல கடைசிவரை என்னோட இருக்கணும்” எனக்கூறி அழகாய் புன்னகைத்தாள்.
உன்னை என் அப்பாவின் உருவில் பார்க்கின்றேன் என சொல்லாமல் சொல்லியவளின் பதில் அவனின் காதலுக்கு அடியாக இருந்தாலும், தன் மீது இத்தகைய பாசம் கொண்ட மஹியின் மீது இன்னும் அதிகமாகவே காதல் ஊற்றெடுத்தது.
திருமணத்திற்கு பின் மனைவி எப்படி கணவனுக்கு இன்னொரு தாயாகின்றாளோ அவ்வாறே கணவனும் மனைவிக்கு தந்தையாகின்றான். தந்தையின் பாதுகாப்பையும், அரவணைப்பையும் மனைவியிடத்தில் உணரச்செய்பவனே சிறந்த கணவன். இக்கூற்று அவளுக்கு ஏனோ புரியவில்லை.
உன்னிடத்தில் தான் நான் பாதுகாப்பாய் உணர்கிறேன் எனக் கூறியவளுக்கு… இவ்வார்த்தைகள் யாவும் ஆதர்ஷின் மீது அவள் கொண்ட காதலின் வெளிப்பாடென்று மஹி உணரவில்லை.
உணரும் தருணம் இருவருக்கும் அவ்வளவு உவப்பனதாக அமைய போவதில்லை.
அதன்பின்னர் தன் காதல் மனதை எப்போதும் மஹிக்கு வெளிப்படுத்திவிடக் கூடாதென்று முடிவெடுத்தவனாக உறங்கச் சென்றான்.
தான் கூறியவற்றிற்கு எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் செல்பவனின் மனதில் என்ன இருக்கிறதென்பதை அவளும் அறிய முற்படவில்லை.
நாட்களும் தெளிந்த நீரோடை போன்று மெல்ல நகர்ந்தது.
ஒருநாள் இரவு மஹி ஆழ்ந்த உறக்கத்திலிருந்த சமயம் அவளின் மொபைல் அலறியது.
எடுத்து பார்த்தவள் அது தனது தோழி ரேமா என்றதும் உடனடியாக ஏற்று செவிமடுத்தாள்.
“ஹேய் மஹி இங்க கொஞ்சம் வர முடியுமா?” என்று அவளின் குரலில் என்னவோ ஏதோவென்று இரவு உடை கூட மாற்றாது, காவலாளிக்கு தெரியாமல் வீட்டின் சுவர் ஏறி குதித்து, அடித்துப்பிடித்து, ரேமா கூறிய இடத்திற்கு வந்து சேர்ந்தாள். அங்கு மஹிக்கு முன்பே அவளின் தோழிகள் வேணி, மதி, ரேமா காத்திருந்தனர்.
அது நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் பிளையோவர். நள்ளிரவென்பதால் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காட்சியளித்தது. இவர்களை தவிர்த்து வானில் நிலவு மட்டுமே உலா சென்று கொண்டிருந்தது.
மஹி வந்த போது மற்ற மூவரும் தங்களது அரட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
“நான் பதறி ஓடி வந்தா, நீங்க சிரித்து அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்களா?” கடுப்பில் கத்தினாள் மஹி.
“ஹே… ச்சில் பேபி. இன்னைக்கு சவிதா பிறந்தநாள் நினைவிருக்கா? அவளையும் இங்கு வர ஏற்பாடு பண்ணி. இன்னும் ஐந்து நிமிஷம் வந்துடுவாள். உன்கிட்ட இந்த ஏற்பாட்டை சொன்னா தாத்தா திட்டுவாங்க, ஆதர்ஷ் அண்ணா விடமாட்டாங்கன்னு காரணம் சொல்லுவ அதான் இப்படி வரவழைத்தோம்” என்று ரேமா விளக்கமளித்தாள்.
சேட்டைக்காரியான மஹி ஆதர்ஷிற்கு கட்டுப்பட்டே இரவு நேரங்களில் சுற்றுவதை குறைத்திருந்தாள். இரவு நேரத்தில் ஐஸ் கிரீம் சாப்பிடுவது… கடலில் நடப்பது… பிளையோவார் மீது அதிவேகத்துடன் பைக் ஓட்டுவது மஹிக்கு பிடித்த ஒன்று. இதனை அறிந்த ஆதர்ஷ் இது தொடரக்கூடாதென கட்டளையாகவே சொல்லியிருக்க, அடங்கியிருந்தவள் நீண்ட நாட்களிற்கு பிறகான இரவு நேர சுற்றலை ரசிக்கத் தொடங்கினாள்.
சவிதா வந்ததும் அவளுக்கு இன்ப அதிர்வாக கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கூறி கொண்டாடியவர்கள் உற்சாகமாக கத்தியும் ஆட்டம் போட்டும் பிளையோவரை அதிர செய்தனர்.
அந்நேரம் இரவு நேர ரோந்து பணிக்காக அந்த பக்கம் வந்த பேட்ரோல் காவல் அதிகாரி இவர்களின் சேட்டையை கவனித்து.. “இந்தநேரத்தில் இங்கென்ன வேலை?” எனக் கேட்க, கொண்டாட்ட மனநிலையிலிருந்தவர்கள் அவரை எதிர்த்து வாதிட, அப்பகுதி மகளிர் காவல் அதிகாரியை வரவழைத்து அரெஸ்ட் செய்யுமாறு கூறியவர். காவல் அதிகாரியிடம் முறை தவறி நடந்து கொண்டதாக கேஸ் பைல் செய்ய வைத்தார்.
இதுமட்டும் நாதனிற்கு தெரிந்தால் மஹியின் நிலை?
காவல் நிலையத்திற்கு செல்வதற்கு முன்பே.. மஹி தனது மொபைலிலிருந்து ஆதர்ஷிற்கு குறுந்தகவல் அனுப்பி வைத்தாள்.
அந்த வருட ப்ரொஜெக்ட் சம்மந்தமாக மடிகணினியில் மூழ்கியிருந்தவன் மஹியிடமிருந்து வந்த தகவலை அறிந்ததும்… தன் தந்தை விஷ்ணுவை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றான்.
விஷ்ணு யாரென்று அறிந்த காவல் அதிகாரியும் மறுப்பு எதுவும் தெரிவிக்காது அவர்கள் ஐவரையும் வெளியே விட்டார்.
கேஸ் பைல் செய்த காகிதத்தையும் ஒன்றுமில்லாமல் செய்து… இதைப்பற்றி எந்தவொரு செய்தியும் வெளியில் வர கூடாதென்று எச்சரித்து சென்றார் விஷ்ணு.
மஹியின் மீதிருந்து கோபத்தில் விஷ்ணு அவளை கண்டு கொள்ளாது காரிலேறி அமர்ந்து.. ஆதர்ஷிடம் மற்ற நால்வரையும் பத்திரமாக வீடு சேர்த்து வா எனக் கூறி.. காரினை செலுத்தினார்.
விஷ்ணு கூறியபடி அவர்களை தத்தம் வீடுகளில் சேர்ப்பித்தவன்.. மஹி எடுத்து வந்திருந்த அவனது பைக்கில் வீடு வந்து சேர்ந்தனர்.
கும்மிருட்டாக காட்சியளித்த வீடு.. ஆதர்ஷும், மஹியும் உள் நுழைந்ததும் பளிச்சென விளக்குகள் ஒளிர்ந்து இருட்டினை விரட்டின.
கூடத்தில் நடுநாயகமாக அமர்ந்திருந்த நாதனின் ருத்ரமூர்த்தி அவதாரம் மஹியை குளிரூட்டியது.
மெல்ல ஆதர்ஷை விழி உயர்த்தி பார்க்க… அவனோ, இதில் தான் உதவ முடியாது எனும் விதமாக நகர்ந்து சென்று குடும்பத்தாருடன் நின்று கொண்டான்.
வாழ்க்கையில் முதல் முறையாக பயம் என்பதை உணர்ந்தாள்.
“மகிழ்வில் தனது என்ற சுயம் நிரம்பிவிட்டால், தன்னை சார்ந்தோருக்கு வலி நிறைந்ததாகிவிடும்.”