அத்தியாயம் 4
மஹி கை விரல்களை பிசைந்துகொண்டு என்ன நடக்க போகிறதோ என்ற பதட்டத்துடன் நின்றிருந்தாள்.
இருக்கையிலிருந்து எழுந்து கம்பீரமாக நின்ற நாதன்,
“வரும் வெள்ளி நம்ம குலதெய்வ கோவிலில் ஆதர்ஷுடன் உனக்குத் திருமணம். தயாரா இரு” என சொல்லி முடித்ததும் பட்டென்று பதிலளித்தாள்.
“முடியாதுன்னு சொன்னா?”
“என்னடி.. தாத்தாவை எதிர்த்து பேசிட்டு!” யமுனா மகளை அடக்கினார்.
கூட்டத்தில் நின்றிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி. நாதனை எதிர்த்து பேசுவது என்பது இதுவரை அவ்வீட்டில் நடந்ததில்லை. முதல் முறையாக நாதனை எதிர்த்து பேசுவது அதிர்ச்சியாகத் தானே இருக்கும்.
தனது அழுத்தமான பார்வையை மஹியின் மீது சில நொடிகள் பதித்தவர் நிதானத்துடன், “இந்த நொடியே உன் அடையாளத்தை விடுத்து வீட்டிலிருந்து வெளிய போகலாம். அப்படி வெளிய போன அந்த நொடி முதல் உனக்கும் இந்த வீட்டிற்கும் எந்தவொரு சம்மந்தமுமில்லை” என்றவர் கால் மேல் காலிட்டவாறு அமர்ந்து கொண்டார்.
ஒரு அடிப்பட்ட பார்வையை அவர் மீது வீசியவள், அதர்ஷை வெறுமையான பார்வையுடன் ஏறிட்டு, வீட்டை விட்டு வெளியே செல்ல நகர்ந்தாள்.
“இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டு இங்கயே இருடி.. தாத்தா உன் நல்லதுக்குதான சொல்றார்.” யமுனா மகளிடம் மன்றாடினார்.
ஜானகியும் தடுக்க முயல,
“அவள் உறவு வேணும்னு நினைக்கிறவங்க என்னை மறந்துடலாம்” என வார்த்தைகளை உறுதியாக வெளியிட்ட நாதன் அங்கிருந்த அறைக்குள் புகுந்துகொண்டார்.
வாசலைத் தாண்டி அடி வைத்தவளை “நில்லு மஹி” என்ற ஆதர்ஷ் நாதனை தேடிச்சென்றான்.
“தாத்தா…”
ஆதர்ஷின் விளிப்பில் திரும்பிய நாதனின் கண்கள் கலங்கியிருந்ததோ! ஆதர்ஷ் பதறியவனாக அவரின் கைகளை பிடித்து, “மஹியை விட நீங்கதான் அதிகம் வருந்துவீங்கன்னு தெரியும். அப்புறம் எதுக்கு இந்த முடிவு தாத்தா” என்றான்.
“எனக்கு வேண்டாதவளா இருந்தாலும் மஹியைத் தான் ரொம்ப பிடிக்கும்… எப்பவும் இறுக்கமா ஓடிட்டிருக்கும் நம்ம வீட்டு ஆளுங்களை சிரிக்க வைக்கிறதே அவளோட சேட்டைகள்தான், எல்லை மீறும் போது தான் வருத்தமா இருக்கும். இனியும் கண்டிக்காம விட்டால் அவள் வாழ்க்கை தடம் புரண்டுடும்.” கல்லுக்குள்ள ஈரம் போல் அவருக்குள்ளும் மஹியின் மீது அன்பிருக்கிறதென்று இன்று தான் ஆதர்ஷிற்கு தெரிந்தது.
“ஒரு வேகத்திலும், கோபத்திலும், வீட்டை விட்டு போன்னு சொல்லிட்டேன்… ஆனால், இப்போ போக வேண்டாம் சொன்னா அவளோட அடாவடித்தனம் அதிகரித்துவிடும்.”
நாதனின் கவலை உணர்ந்தவனாக,
“நீங்க வருத்தப்படாதீங்க தாத்தா நான் பார்த்துக்கிறேன்.” பெரியவருக்கு சிறியவன் நம்பிக்கையளித்தான்.
அறையை விட்டு வெளியில் வந்தவன் மஹியை ஏறிடாதவனாக,
“அண்ணி அவளோட திங்க்ஸ் எல்லாம் கெஸ்ட் ஹவுசில் வைத்துடுங்க. அந்த எல்லையைத் தாண்டி அவள் இங்க வரக்கூடாது… நீங்களும் யாரும் அவளிருக்கும் பக்கம் செல்ல கூடாது. அவளோட தேவைகளை அவளே பார்த்துக்கணும். வீட்டிலிருப்போர் யாரிடமும் பேச முயற்சி செய்யக்கூடாது. கெஸ்ட் ஹவுசிற்குள் அவள் எப்படி வேணாலும் இருந்துக்கலாம். இதுக்கும் ஒத்து வரலன்னா தாராளம வீட்டை விட்டு போலாம்” என வினோதினியிடம் அறிவிப்பாகத் தெரிவித்தான்.
அவ்வளவு தான் என்பதை போல் அனைவரையும் சுற்றி பார்த்தவன்..
“போயிட்டு தூங்குங்க,
அண்ணி… நீங்க தூங்க போறதுக்கு முன் அவளை அங்கே ஷிஃப்ட் பண்ணிடுங்க” என்றவன் அதன் பிறகு அங்கு நிற்கவில்லை.
தைரியமான அடாவடிப் பெண்ணாக இருந்தாலும் “வெளிய போ!” என்று நாதன் கூறியதும், மஹிக்கு நிதர்சனம் புரிந்து உள்ளுக்குள் எங்கு செல்வதென்ற பயம் தோன்றத் தான் செய்தது. ஆதர்ஷ் இங்கு இருக்க மட்டுமே அனுமதி எனக் கூறியதும்… பாதுகாப்பாக தங்குவதற்காகவாவது அனுமதித்தார்களே என நிம்மதியாக உணர்ந்தாளே தவிர, இது தனக்கு வழங்கப்பட்ட தண்டனையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இனி தன் சுதந்திரத்திற்கு யாரும் குறுக்க வர முடியாது என நினைத்தவள் சந்தோஷமாகவே வீட்டிற்கு பின்புறம், தோட்டத்திற்கு சற்று தள்ளி அமைந்துள்ள கெஸ்ட் ஹவுசிற்கு சென்றாள்.
வீட்டிற்குள் சென்றவள் தான் உபயோகப்படுத்த ஒரு அறையை மட்டும் சுத்தம் செய்து தனக்கேற்றவாறு பொருட்களை மாற்றி வைத்தவள் மணி பார்க்க அதிகாலை நான்கு முப்பதாகியிருந்தது.. அன்று ஞாயிற்று கிழமை என்பதால் நிம்மதியாக பகல் முழுக்க தூங்கலாமென படுக்கையில் விழுந்தவள் சற்று நேரத்திற்கெல்லாம் உறங்கியும் போனாள்.
இரவு அந்நேரத்தில் மஹியை அங்கு அனுப்பிவிட்டு தனது அறைக்கு மாடியேறி வந்த ஆதர்ஷ் நேராக பால்கனியில் தான் சென்று நின்றான். அங்கிருந்து பார்த்தால் கெஸ்ட் ஹவுஸில் நடப்பது அனைத்தும் தெரியும். வீட்டினுள் சென்றவள் ஆதர்ஷின் அறைக்கு நேர் எதிரேயிருக்கும் அறையினுள் நுழைந்து, செய்வது அனைத்தையும் கண்ணாடி தடுப்பு சுவர் என்பதால் தெளிவாகவே அவனால் காண முடிந்தது.
மஹி லைட்டினை அணைக்கும் வரை நின்று பார்த்திருந்தவன், அவள் உறங்கியதும் தனது காலை நேர ஓட்டத்திற்கு தயாராகினான்.
ஜாக்கிங் செல்வதற்கு ஏற்றவாறு உடையணிந்து படியிறங்கி வந்தவன் நாதனின் அறையில் மின்விளக்கு ஒளிரவும் அங்கு சென்றான்.
“கூறுகெட்ட மனுஷா! உங்களுக்கு எங்காவது அறிவிருக்கா? வீட்டை விட்டு போன்னு சொன்னீரே, அதுக்கு முன்னாடி கொஞ்சமாவது யோசிச்சீரா… அவ என்ன ஆம்பள புள்ளையா, திருடி கூடம் பிழைச்சிகிறதுக்கு.” கோமளம் தனது கணவர் நாதனிடம் பொறிந்து தள்ளினார்.
“மன்னிச்சிடு கோமு… ஏதோ கோபத்தில் பேசிட்டேன்.. அதான் கொஞ்சம் சரி செய்துட்டேனே!”
“நீங்க சரி செஞ்சுங்கிளா? என் பேரன் தானே மஹியை விருந்தினர் வீட்டில் தங்க வைக்க ஐடியா கொடுத்தது?” எனக் கேட்டு கோமளம் நாதனின் மூக்கை உடைக்க, நாதன் அசடு வழிந்தார்.
அப்போது தான் அவர்களின் அறைக்குள் நுழைந்த ஆதர்ஷ் அங்கு இருவருக்கிமிடையே நடந்த உரையாடலைக் கேட்டு வாய்விட்டு சிரித்தான்.
இருவரும் ஆதர்ஷை உள்ளே அழைக்க, கோமளத்தின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான். நாதன் ஆதர்ஷின் காலினை தனது மடியில் வைத்துக்கொண்டார். காலினை விலக்க போனவனை தடுத்தவர்,
“எனக்கு மரியாதை கொடுத்தே ஒதுக்கி வச்சி இந்த மாதிரி சந்தோஷத்தையெல்லாம் அனுபவிக்க விடாமப் பண்ணிட்டீங்கடா. இங்கதான் யாருமில்லையே” எனக் கூறியவரின் குரலில் ஏக்கம் நிறைந்திருந்தது.
வெளியே அனைவரையும் அதட்டிக்கொண்டு கம்பீரமாக வலம் வந்தாலும், அவருக்குள்ளும் அன்பின் ஏக்கம் இருப்பதை ஆதர்ஷ் இரண்டாம் முறையாக நன்கு உணர்ந்துகொண்டான்.
அவரின் வருத்தத்தை மாற்றும் பொருட்டு… “எப்படி பாட்டி மஹியை கெஸ்ட் ஹவுஸில் தங்க வைப்பது என் ஐடியாவா இருக்கும் கண்டுபிடிச்சிங்க?” எனக் கேட்டான்.
“மொச பிடிக்கிற நாய் மூஞ்சி பார்த்தா தெரியாது… இவரு கூட ஐம்பது வருஷமா குப்பை கொட்டுறேனே இது கூடவா தெரியாது” என்று கோமளம் நொடித்துக்கொள்ள… “கோமு…” என இழுத்து அழைத்த நாதனின் முகத்தில் புன்னகை விரிந்திருந்தது.
“என்னை சரியாக் கணிக்க உன்னால மட்டுமே முடியும்” எனக்கூறிய நாதன்… “நான் உயிர்ப்புடன் இருக்க காரணமே உன் பாட்டி தான் ஆது… அவள் என்னை இந்த மாதிரி கேலி செய்தாதான் அன்றைய பொழுதே ஓடும்” என்று சிரித்தார்.
“அப்போ இது தினமும் நடக்கும் போலவே” என்று நகைத்த ஆதர்ஷ்… “உங்க ரொமான்ஸ் சீனை ஓடிட்டு வந்து பார்க்கிறேன்” எனக் கூறி வீட்டை விட்டு வெளியேறினான்.
“ஆதர்ஷ்க்கும் மஹிக்கும் கல்யாணம் முடிஞ்சிருச்சுன்னா நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேங்க.”
“கோமளா!” அவர் சொல்லி முடிப்பதற்குள் அதிர்ந்த நாதன்,
“உனக்கு அவ்வளவு சீக்கிரமா என்கிட்டேருந்து விடுதலை கொடுத்திடமாட்டேன். ஆதர்ஷின் மகனின் மகனையும் கொஞ்சிவிட்டு தான் நாம கண் மூடுவோம்” என்றபடி தன் மனைவியை தோளோடு அணைத்துக்கொண்டார்.
“மீசை நிறைச்சாலும் கிழவனுக்கு குசும்பு குறையலையே…” நாதனின் கன்னத்தில் குத்திய கோமளம் ” “சூரியன் உதிச்சாச்சு.. உங்க வேலையை பாருங்க” என்றவராய் குளியலறைக்குள் புகுந்துகொண்டார்.
ஓட்ட பயிற்சிக்காக கடற்கரைக்கு வந்த ஆதர்ஷின் மனம் ஒரு நிலையிலில்லை… காலை நேர இளஞ்சூரியனை பார்த்தவாறு கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு நின்று விட்டான்.
அவன் மனம் முழுக்க மஹியே ஆக்கிரமித்திருந்தாள். அடுத்து அவளின் செயல் என்னவாக இருக்குமென்ற சிந்தனையே அவனுள்… அவளுக்கு எந்த வகையில் உதவுவது என்று தீவிரமாக யோசிக்கலானான்.
படுக்கையில் புரண்டு படுத்த மஹி… திரைச்சீலையினை கிழித்துக்கொண்டு முகத்தில் சுள்ளென்று அடித்த வெயிலில் மெல்ல உறக்கம் கலைந்தாள்.
பசி வயிற்றை கிள்ளவும்தான் நேரம் நண்பகலாகிறதென்பதை உணர்ந்து என்ன செய்ய வேண்டுமென உரைத்தது.
நேற்று அளித்த பாக்கெட் மணி இருக்கவும், அதனை வைத்து பிட்சா ஆர்டர் செய்தவள் உண்டு முடித்ததும்.. நாளை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள்.
சிந்தனையின் முடிவாக பகுதி நேர வேலைக்கு செல்ல திட்டமிட்டாள். முழுதாக ஒரு டிகிரி கூட முடிக்காத நிலையில் யார் வேலை தருவாங்க என்று யோசித்ததன் விளைவாக.. மறுநாள் மிகவும் பிரபலமான, சென்னையில் பல கிளைகளை கொண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உள்ள சிறு பிரிவான, காபி ஷாப் முன் நின்றிருந்தாள்.
மாலை நேரத்தில் பில்லிங் செக்ஷனில் வேலை செய்ய கம்ப்யூட்டர் பற்றி தெரிந்த இளம் வயதினர் வேண்டுமென செய்தித்தாளில் அவர்கள் அளித்திருந்த விளம்பரத்தை பார்த்தே இங்கு வந்திருக்கின்றாள்.
காபி ஷாப்பின் அலுவலக அறைக்கு முன்னே மஹி காத்திருக்க, அங்கு அவளை கண்ட வினு உடனடியாக தனது நண்பனுக்கு அழைத்து விஷயத்தை தெரியப்படுத்தினான்.
மிகப்பெரிய பிரபலமான அந்த நட்சத்திர விடுதியின் உரிமையாளர் வினுவின் தந்தை… அவருக்கு அடுத்து அதன் உரிமை வினுவுக்கே… ஆதலால் தந்தையின் கட்டளைக்காக இங்கு அடிக்கடி வருவான். தொழிலை கற்றுக்கொள்வதற்காக என்றால் நிச்சயமில்லை.
தந்தையின் திட்டிலிருந்து தப்பிப்பதற்காக இங்கு வந்து பொழுதை கழித்துவிட்டுச் செல்வான். அப்படி வரும் சமயம் தான் வேலைக்காக மஹி இங்கு வந்திருப்பதை அறிந்து கொண்டான்.
ஆதர்ஷிற்கு மஹி அங்கு எதற்காக வந்திருக்கிறாள் என்பது தெரிந்ததும்… “எப்படியாவது அவளுக்கு அங்க வேலை கிடைக்கும்படி செய்துடு மச்சான்” என்றான்.
“ஹேய்…. என்னடா, உங்க கம்பெனியில் வேலை செய்ய நான், நீயென போட்டி போடும் போது… மஹி இங்க வேலை செய்வதா?” எனக் கேட்டு வினு அதிர்ந்தான்.
நடந்தவற்றை தெரிவித்து மஹிக்கு இப்போது வேலையும், அதிலிருந்து கிடைக்கப்பெறும் பணமும் எவ்வளவு முக்கியம் என்பதை புரியவைக்க நேரமில்லை என்பதை உணர்ந்த ஆதர்ஷ், “அவளுக்கு அந்த வேலை உன்னால் கொடுக்க முடியுமா? முடியாதா?” என்று அழுத்தமாகக் கேட்டிருந்தான்.
ஆதர்ஷின் வார்தைகளிலிருந்த அழுத்தமே வினுவை சரியென சொல்ல வைத்தது.
மேனஜரிடம் கூறி… பகுதி நேரமாக, மாலை நான்கு முதல் இரவு பத்து மணி வரை, காபி ஷாப் பில்லிங் செக்ஷனில் வேலை கொடுக்குமாறு உத்தரவிட்டான்.
முதலாளியே கூறிய பிறகு மறுத்து பேச எதுவுமில்லாமல் மேனஜர் மஹியை வேலையில் அமர்த்திக்கொண்டார்.
வேலை கிடைத்ததும் மிகப்பெரிய பாரம் நீங்கியதை போல் மஹி உணர்ந்தாள்.
அதற்கு அடுத்த நாள் முதல், காலை கல்லூரி, மாலை காபி ஷாப் என மஹியின் நேரம் இறக்கை கட்டி பறந்தது.
இதற்கிடையில் ஆதர்ஷிடம் பேசாமல் இருப்பது நரக வேதனையை அளித்தது. ஒரே கல்லூரியில் அவனை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மறைந்திருந்து பார்ப்பாளேத் தவிர நேரில் சென்று பேசமாட்டாள்.
மஹி வேலைக்கு செல்வதை அறிந்து வீட்டிலுள்ளோர் அனைவரும் கவலை அடைந்தனர். மற்றவர்களைப்போல் நாதனும் விஷயம் தெரிந்து வருந்த,
“அவள் பொறுப்பா நடக்கணும் நீங்கதானே நினைச்சீங்க? அதன் முதல் படி இதுன்னு சந்தோஷப்படுங்க. உண்மையிலே அவளை வீட்டைவிட்டு வெளியனுப்பி நன்மை தான் செய்திருக்கீங்க. சோ, வருத்தமா நினைக்க ஒன்றுமில்லை” எனக் கூறித்தேற்றினான் ஆதர்ஷ்.
ஆதர்ஷின் கூற்றிலும் உண்மையிருப்பதை உணர்ந்த குடும்பத்தார் அமைதி அடைந்தனர்.
அனைவருக்கும் ஆறுதல் அளித்தாலும்… மஹி தனித்திருப்பது ஆதர்ஷிற்கு வருத்தமே. இத்தனிமையே அவளை செம்மைப்படுத்துமென தன்னையும் ஆறுதல் படுத்திக்கொண்டான்.
ஆதர்ஷ் மஹியின் நடவடிக்கைகளை அடியடியாக கவனித்து மறைமுகமாக அவளை பாதுகாத்தான். இரவில் வேலை முடித்து தனியாக வருகின்றாள் என்பதற்காகவே அவளின் பாதுகாப்பிற்கு ஒரு ஆளினை நியமித்திருந்தான்.
மஹி பத்திரமாக வீடு வந்துவிட்டாளென அந்நபரிடமிருந்து அழைப்பு வரும்வரை ஆதர்ஷின் மனம் நிலைகொள்ளாது தவிக்கும். பலமுறை அவளிடம் பேச துடிக்கும் இதயத்தை முயன்று கட்டுப்படுத்துவான். இரவில் மஹி உறங்கியதும் யாருக்கும் தெரியாமல் விருந்தினர் இல்லத்திற்கு சென்று சிறிது நேரம் தன்னவளை ரசித்துவிட்டு வருவான்.
அப்படி ஒருநாள் மஹியை காண அவன் சென்ற சமயம்…
கம்பிகளற்ற கண்ணாடி ஜன்னலினை திறந்து உள் நுழைந்தான் ஆதர்ஷ். குளிர்காலம் என்பதால் குளிரூட்டியை நிறுத்திவிட்டு படுத்திருந்தவளின் மேனியை தீண்டியது ஜன்னலின் வழியே வீசிய குளிர்க்காற்று.
வாடை காற்றின் இதத்தில் உறக்கம் கலைந்தவள்… தனக்கு அருகே யாரோ அமரும் அரவம் உணர்ந்து, அரை விழி திறந்து பார்த்தாள்.
நிலவின் ஒளியில் வசீகரித்த ஆதர்ஷின் முகத்தினைக் கண்டு முதல் முறையாக தடுமாறினாலும், உடனடியாக கருவிழிகளை அசைக்காது இமை மூடிக்கொண்டாள். அவனின் நிலவொளி முகம் இதயத்தில் பசைப்போல் ஒட்டிக்கொண்டது.
மஹி விழி மலர்த்தாமல் படுத்திருக்க, அவள் ஆழ்ந்த உறக்கம் கொண்டுள்ளாள் என எண்ணியவன் தினமும் செய்வதைப்போன்று தன் மனம் திறந்து பேசத் தொடங்கினான். ஆம், இரவில் அவளுக்குத் தெரியாமலே பார்த்துவிட்டுச் செல்பவன்… எப்போதும்போல அன்று நடந்த அனைத்தையும் தூங்கும் மஹியிடம் சொல்லிவிட்டே செல்வான்.
அதுபோல இன்றும் அவன் பேசத் தொடங்க… மஹி தன் செவியை கூர்மையாக்கினாள்.
மஹியின் முகத்திற்கருகே இருக்கையை ஓசையின்றி இழுத்துப்போட்டு அமர்ந்தவன், தன்னவளின் கரத்தினை தன் கைகளுக்குள் பொத்திக்கொண்டான்.
மூடிய அவளின் விழிகளையே பார்த்திருந்தவன்…. “நீயா வந்து என்கிட்ட பேசமாட்டியா மஹி’ம்மா….” அப்போதும் அவனின் மஹி என்றழைப்பில் கடுப்பானவள்… ‘கால் மீ மஹிரா’ என மனதிற்குள் கத்தினாள்.
அவளின் கத்தல் அவனுக்கு கேட்டதோ… “மஹி சொன்னா உனக்கு பிடிக்காதுல… சாரி” என்றவன், “இனி சொல்லமாட்டேன்” என சிறு குழந்தையிடம் பேசுவதைப்போல் பேசிக்கொண்டிருந்தான்.
எப்போதும் அழுத்தத்துடனும், ஒரு வித கம்பீரத்துடனும் பேசுபவன் இன்று இப்படி மென்மையாக பேசுவது மஹிக்கு ஆச்சரியமாக இருந்தது.
தன் ஆச்சரியத்தை புறம் தள்ளியவள், மேலும் அவன் பேசுவதை கவனிக்கலானான்.
“இப்போ நான் நினைக்கிற மாதிரி, நானே வந்து உன் கிட்ட பேசணும்னு நீயும் எதிர்பார்த்திருக்கலாம்ல… பட் என்னால முடியாது. அன்னைக்கு உனக்கு துணையா நான் உன் பக்கம் நின்னிருக்கணும். உன்னை தாத்தா வீட்டைவிட்டு போ சொல்லும்போது அமைதியாதானே இருந்தேன். அந்தக் குற்றவுணர்வு எனக்கு இந்த நொடி வரை இருக்கு. அப்படி நான் ஒதுங்கியிருந்ததற்கும் காரணமிருக்குடா… நீ எல்லாரும் விரும்புவதைப்போல் இந்த அடாவடித்தனத்தையெல்லாம் விட்டுட்டு ஒரு பொண்ணா குணத்திலும், உணர்விலும் மாறனும். அதுக்கு உனக்கு இந்த தனிமை ரொம்ப அவசியம்” என்றவன் மஹியின் முகத்தையே சில நிமிடங்கள் ஆழ்ந்துப் பார்த்தான்.
உறக்கத்தில் எப்படியோ, ஆனால் உறக்கம் கலைந்து சிலைபோல் அசையாது நீண்ட நேரம் படுத்திருப்பது கஷ்டமாக இருக்க.. தூக்கத்தில் புரள்வதைப்போன்று சிறிது அசைந்து படுத்தாள்.
மஹியிடம் அசைவு தென்படவும் இருக்கையிலிருந்து எழுந்து சற்று விலகி நின்றவன் அவளின் உறக்கம் கலையவில்லையென்ற பிறகே மூச்சினை வெளியேற்றினான்.
எங்கே அவள் எழுந்து விடுவாளோ என அஞ்சியவன்… தன்னவளின் நெற்றியில் மெல்லிய முத்தம் பதித்து.. “நீ எப்படியிருந்தாலும் எனக்கு பிடிக்கும் டி ராட்சசி. எப்போ உன்னை இவ்வளவு பிடிக்க ஆரம்பிச்சிதுன்னு தெரியல. எல்லார்கிட்டவும் மிடுக்கோட நடக்குற நான் உன்கிட்ட மட்டும் மென்மையா நடந்துக்கிறேன். ஏன்னுதான் தெரியல, உனக்கும் எனக்கும் மேரேஜ் சொன்னதும் சிறகே இல்லாம பறக்குற மாதிரி ஃபீல் பண்ணேன். ஆனால், என்னைப்போல உனக்கு அப்படி எந்தவொரு உணர்வுமில்லைன்னு தெரிஞ்ச அப்புறம் உன்கிட்டேர்ந்து விலகியிருக்க முடிவு பண்ணேன். உன்னை பக்கத்துல வச்சிக்கிட்டு என்னால் விலகியிருக்க முடியாது. அதனாலதான், நானும் நீ என்மேல கோபத்துடன் இருக்கிறதை விரும்பியே ஏத்துக்கிட்டேன். எனக்கான காதலை உன் கண்களில் நான் பார்த்திருக்கேன். நான் ஃபீல் பண்ணதை நீயும் உணர்ந்து என்னைத்தேடி வரும்வரை காத்திருக்கேன். லவ் யூ டி ரவுடி” எனக் கூறியவன் கண்களில் துளிர்த்த நீரை துடைத்தவனாய், அங்கிருந்து நொடியில் வெளியேறினான்.
முதல் முறையாக தன் காதலை வெளிப்படுத்தி மனதில் உள்ளதையெல்லாம் தன்னவளிடம் சொல்லியதாலோ என்னவோ மனம் லேசாக உணர்ந்தான். ஆனால், அவனின் மனதினை முழுதாக அறிந்திட்ட மஹிக்கு தான் மனதில் பாரமேறிய உணர்வு.
ஆதர்ஷ் சென்ற பிறகு படுக்கையில் எழுந்தமர்ந்தவள் மொத்தமாக உடைந்து போயிருந்தாள்.
“விஹூ என்னை காதலிக்கிறானா?!” வினாவும், ஆச்சரியமும் அவளின் மனதில் ஒருங்கே போட்டிபோட்டன.
“எப்படி இவ்வளவு நாள் இதை உணராமப்போனேன்” என சிந்தித்தவளின் இதயத்தில் இனிய படபடப்பை உணர்ந்தாள். இறுதியாக அவன் செல்ல திரும்பிய போது கண் திறந்தவள், அவன் கண்ணீரை துடைப்பதை பார்த்திருந்தவளினுள் சிறு வலியை ஏற்படுத்தியிருந்தது. அந்தவலி அவன் மீதான காதலை அவளுக்கு உணர்த்தியது.
“நீ எப்படியிருந்தாலும் எனக்கு பிடிக்கும்டி ராட்சசி” என அவன் கூறிய வார்த்தைகள் மஹியின் மனதில் ஆதர்ஷின் மீதான காதலை பலபடி மேலேற்றியது.
நமக்குப் பிடித்தவர், நீ எப்படியிருந்தாலும் எனக்கு உன்னை பிடிக்குமென கூறுவது வரமல்லவா! அந்த வரத்தினை பெற்றவளாக தன்னை நினைக்கும்போதே அவளின் உள்ளத்தில் உவகை ஊற்றெடுத்தது. தானாக இதழில் புன்னகை மலர்ந்தது. இவ்வளவு நாள் தந்தையின் பாதுகாப்பை உணர்ந்தவள், இன்று முதன் முறையாக ஆதர்ஷ் உதிர்த்த வார்த்தைகளில் காதலனின் அன்பையும் அரவணைப்பையும் உணர்ந்தாள்.
நேசிப்பதைவிட நேசிக்கப்படுவது எத்தகைய மகிழ்வினை அளிக்கும் என்பதை அந்த நொடி அனுபவித்தாள். ஆனால் தன் காதலை ஆதர்ஷிடம் தெரிவிப்பதற்கு முன் தன் கனவினை நிறைவேற்றி வாழ்வில் முன்னேறியிருக்க வேண்டுமென முடிவு செய்தாள். காதலை கூறிய பின்னர், ஆதர்ஷிடம் கோபத்துடன் நடந்த கொள்ள முடியாதென்பதால் காதலை இப்போதைக்கு வெளிப்படுத்தக்கூடாதென எண்ணினாள். தன் முடிவின்படி விலகளை அதிகரித்தாள்.
கல்லூரியில் அன்று வாரத்திற்கு ஒருமுறை அனைத்து மாணவர்களுக்கும் நடைபெறும் பொதுக்கூட்டம். இதில் மாணவர்களுக்கு உபயோகமான அனைத்து விதமான நிகழ்ச்சிகளும் இடம்பெறும். மாணவர்கள் அனைவரும் ஆடிட்டோரியத்தில் குழுமினர். கூட்டத்தினை கட் செய்யும் மாணவர்களையும் மற்றும் நிகழ்ச்சியினை கவனியாது பேசுபவர்களையும் கண்காணிப்பது செனட் மாணவர்களின் கடமை.
காலையிலிருந்து மஹியை காணாததால் தவித்திருந்த ஆதர்ஷின் விழிகள் மஹியை எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால், இறுதிவரை அங்கு அவள் வரவேயில்லை. அன்று அந்த வருடத்திற்கான நிகழ்ச்சி நிரல்களை கல்லூரி முதல்வர் மாணவர்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தார். மாணவர்களின் தலைவன் என்ற முறையில் மேடையில் அமர்ந்திருந்ததால் மஹியை தேடி அவனால் செல்ல முடியவில்லை.
ஆடிட்டோரியத்தின் முகப்பு வாயிலில் கிஷோர் நின்றிருந்ததால், யாருக்கும் அறியா வண்ணம் மஹியை சென்று காணுமாறு குறுந்தகவல் அனுப்பினான்.
மொபைலை பார்த்துக்கொண்டு கிஷோர் திருதிருவென விழிக்க, அதை கண்ட வினு அவனருகில் வந்து என்னவெனக் கேட்டான்.
“அந்த ஆம்பள பையன் கிட்ட திரும்ப இவன் என்னை கோத்துவிடறான் டா மச்சான்” எனக் கூறிய கிஷோர் வராத கண்ணீரை துடைத்துக் கொண்டான்.
கிஷோர் கூறியதை கருத்தில் கொள்ளாத வினு, ஆதர்ஷ் என்ன மெசேஜ் அனுப்பியிருக்கின்றானென்று பார்த்தவன், மஹி வந்திருக்கிறாளா என வேதியியல் துறை மாணவர்கள் அமருமிடத்தை நோட்டமிட்டான். அங்கு மஹியின் தோழிகள் மட்டுமே அமர்ந்திருக்க, வினு கிஷோரையும் இழுத்துக்கொண்டு அவளின் துறையிருக்கும் கட்டிடத்தை நோக்கி சென்றான்.
கூட்டத்திற்கான மணி அடித்ததும் மஹியின் தோழிகள் ஆடிட்டோரியம் செல்ல கிளம்ப, வாஷ்ரூம் சென்று வருவதாக கூறிய மஹி, லேட்டாக சென்றால் அடையாள அட்டையினை பறிப்பர் என்பதால் அவர்களை செல்லுமாறு கூறிவிட்டாள்.
மஹியின் ரவுடித்தனம் அறிந்த அவர்களுக்கு அவளை தனித்து செல்கிறோமென்ற பயமில்லை.
வாஷ்ரூம் சென்றுவிட்டு… தனது உடைமைகளை எடுக்க வகுப்பினை நோக்கி மஹி வரும்போது, ஆளரவமற்று அப்பகுதியே அமைதியாக காட்சியளித்தது.
வகுப்பிற்குள் மஹி நுழைந்த அடுத்த நொடி கதவு சாற்றப்பட்டது. யாரென பார்த்தவள், அங்கு நின்றிருந்த சந்தோஷைக் கண்டு கொஞ்சமும் அஞ்சினாளில்லை. மார்பிற்கு குறுக்காக கையினைக் கட்டிக்கொண்டு திமிராக நின்றிருக்க, அவளை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்து நெருங்கினான் சந்தோஷ்.
மஹியை தேடி வந்த கிஷோர் மற்றும் வினு, அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்தனர். வினு தன்னை ஓரளவிற்கு திடப்படுத்தி நிற்க, கிஷோர் மயங்கி சரிந்தான்.