ரவுடி பேபி 5

அத்தியாயம் 5

யாருமற்ற வகுப்பறையினுள் மஹி நுழைந்ததும் கதவு உட்புறமாக தாளிடப்பட்டது. கதவு மூடப்படும் ஓசையில் திரும்பியவள், நக்கல் வழிய நின்றிருந்த சந்தோஷைக் கண்டு சிறு அதிர்வை கூட பிரதிபலிக்கவில்லை.

இயற்கையாகவே அந்நிய ஆணிடம் தோன்றும் பெண்ணுக்கு உரித்தான சிறு பயம் கூட அவளிடத்தில் இல்லை.

மார்பிற்கு குறுக்காக கைகளைக் கட்டி, மேசையின் மீது சாய்ந்து ஒய்யாரமாக நின்ற மஹியிடம் ஒருவித திமிர் காணப்பட்டது.

“நீ பயமில்லாத மாதிரி காட்டிக்கிட்டா, நான் இங்கிருந்து போய்டுவன்னு நினைக்கிறியா? அது நடக்காது. வந்த முதல் நாளே என் மேல் கை வச்சில்ல, அதுக்கு இப்போ தண்டனை கொடுக்கப்போறேன். எல்லாரும் அசம்பலி முடிந்து இங்க வரும்போது நீயும் நானும் பூட்டிய அறைக்குள்ளிருந்த வெளியப்போனா, அவங்க பார்வையில் நீ எப்படி மதிப்பிழப்பாய் தெரியுமா? மத்தவங்க முன்னாடி நீ அவமானப்பட்டு நிற்க வேண்டும்.. உனக்கு ஒண்ணுன்னா முன்னவந்து நிற்பானே ஒருத்தன்(ஆதர்ஷ்), அவனுக்கும் இதுதான் நான் கொடுக்கும் தண்டனை” என்றவன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து முன்னேறினான்.

அச்சமயம் மஹியைத் தேடி அங்கு வந்து சேர்ந்த வினு மற்றும் கிஷோர் ஜன்னல் வழியாகப் பார்க்க… மிடுக்குடன் நின்ற மஹியை சந்தோஷ் நெருங்கிக் கொண்டிருந்தான்.

“என்னா பொண்ணு மச்சான் இவ, இந்த நேரத்தில் கூட என்னை காப்பாத்துங்கன்னு குரல் கொடுக்காம இப்படி தைரியமா நிக்கிறா…!”

கிஷோர் அதிசயித்து சொல்ல, கதவினை எந்த வகையிலாவது திறக்க முடியுமாவென்று வினு ஆராய்ந்து கொண்டிருந்தான். ஓங்கி உயர்ந்து காணப்பட்ட மரக் கதவினை நிச்சயம் உதைத்து திறக்க முடியாதென்று வினு சிந்தித்துக் கொண்டிருக்க, ஜன்னல் வழியே… சந்தோஷை தன் பேச்சினால் தடுக்க முயற்சி செய்தான் கிஷோர்.

“டேய் வேணாம், எதுவும் பண்ணாத… எனக்கென்னவோ சேதாரம் உணக்குதான்னு தோணுது. சோ, கதவை திறந்துட்டு ஓடிடு.” சந்தோஷ், கிஷோரின் பேச்சினை லட்சியம் செய்யாமல் முன்னேறினான்.

“யார் பெத்த புள்ளையோ அடி வாங்கப் போறானே! அன்னைக்கு அத்தனை பேர் முன்னாலே துவச்சு காயப்போட்டவள். இப்போ தனியா மாட்டுனா சும்மா விட்ருவாளா.”

கிஷோர் தன்பாட்டிற்கு பேச… ஜன்னல் வழியே மஹி பார்த்த பார்வையில் கப்சிப் என்றானான்.

“இந்த ஆம்பள பையன் கையால இவனுக்கு இன்னைக்கு செமத்தயா இருக்குன்னு எழுதியிருக்கு போல.”

முனகியபடியே கிஷோர் வினுவைத் தேட, அவன் வெளியிலிருந்து கதவின் தாழ்ப்பாளிற்கு அழுத்தம் கொடுக்க மரக்கட்டையினை தேடிக் கொண்டிருந்தான்.

வினு கீழே கிடந்த கட்டையினை குனிந்து எடுக்க… உள்ளே என்ன நடக்கிறதென்று பார்க்கிறேனென, மீண்டும் ஜன்னல் முன் நின்றான் கிஷோர்.

மஹி தனது இடைக்கு நேராக காலினை உயர்த்தி நீட்டும் தூரத்தில் சந்தோஷ் நெருங்கியதும்… அவன் நெஞ்சின் மீது தனது இடது காலை பதித்து உடலை ஒரு பக்கமாக சாய்த்து, தன்னுடைய இரு கைகளையும் பின்னுக்கு தள்ளி அதிக விசையுடன் அவனின் வயிற்றில் ஓங்கி குத்தியவாறு தள்ளிவிட… அவன் கதவின் மீது மோதிய வேகத்தில் தாழ்ப்பாள் விலக, நுழைவைத் தாண்டி  வெளியில் விழுந்தான் சந்தோஷ். வயிற்றில் விழுந்த குத்தினாலும், பின்புறமாக விழுந்ததால் முதுகில் ஏற்பட்ட வலியாலும் தரையில் சுருண்டான்.

மஹி காலினை சந்தோஷ் மீது வைத்ததுமே ஆவென்று வாய்பிளந்த கிஷோர், அவளின் அதிரடியான குத்திலும், பட்டென்று கதவு திறந்த சத்தத்தின் அதிர்ச்சியாலும் “அய்யய்யோ” என்ற சத்தத்துடன் மயங்கி தரையில் விழுந்தான்.

கட்டையை எடுத்துக்கொண்டு கதவருகே வந்த வினு, தனது காலடியில் சுருண்டு விழுந்தவனைக் கண்டு இரண்டடி பின்னால் நகர்ந்தான். அவனின் அதிர்ந்த பார்வை மஹியின் மீது நிலைத்தது.

பையினை தோளில் மாட்டியவள்… வினுவிடம் சென்று, என்னை தற்காத்துக்கொள்ள எனக்குத் தெரியுமென்று உங்கள் நண்பனிடம் சொல்லிவிடுங்கள் என்றவாறு அங்கிருந்து சென்றாள்.

மஹி சென்ற பிறகும் அசையாமல் நின்றிருந்த வினு… அசம்பலி முடிந்ததற்கான மணி அடித்த ஒலியில் சுயம் பெற்றான். அங்கு மயங்கி கிடந்த கிஷோரைப் பார்த்து தன் தலையில் தட்டிக்கொண்டவன், அவனின் முகத்தில் நீரடித்து எழுப்பினான்.

கண் திறந்தவன் முதலில் கூறியது…

“என்னாஆஆ குத்துடா சாமி. அவ, ஆம்பள பையன் இல்லடா. ரவுடி பேபி. சத்தியமா அவ அடிச்ச அடியில சந்தோஷுக்கு அடி வயிறு கலங்கச்சோ இல்லையோ எனக்கு மூளையே கலங்கிடுச்சுடா. அவள் போயிட்டாளா?” எனக் கேட்டவாறு திரும்பியவன் அங்கு அசையக்கூட முடியாமல் தரையில் கிடந்தவன் அருகில் சென்று, “ஒரு குத்துக்கே பஞ்சர் ஆகிட்டியே. எவ்ளோ  தூரம் சொன்னேன் கேட்டியா? இதுக்கு தான் மேதாவிங்க சொன்னா கேட்கணுங்கிறது. பட்டாதான் புரிஞ்சிப்பிங்க” என்றவன், வினுவின் தோளில் கைப்போட்டு, “என்னை கைத்தாங்கலா கூட்டிட்டு போய் கிளாசில் உட்கார வச்சிடு மச்சான். அப்படியே செட்டில் ஆகிடுறேன்” என்றான்.

கிஷோரின் பேச்சு வினுவிற்கு சிரிப்பை வரவழைத்தாலும், ஒரு ஆணுக்கு நிகரான தைரியத்துடன் மஹி செயல்பட்டதிலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை.

இதை எப்படி ஆதர்ஷிடம் சொல்வதென்று யோசித்தபடி நடந்தான்.

அசம்பலி முடியும் நேரத்தில் உள் நுழைந்த மஹியை தலை முதல் கால் வரை ஆராய்ந்தன ஆதர்ஷின் பார்வை. அவளுக்கு ஒன்றுமில்லையென்ற பிறகே அவனின் மனம் சமன்பட்டது.

கூட்டம் முடியும்வரை ஆதர்ஷின் பார்வை மஹியின் மீதே நிலைத்திருந்தது. அதை சிறிதும் அவள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இருப்பினும் அவள் மனம் முழுக்க ஆதர்ஷின் மீதான காதல் பரவி கிடந்தது. அதனை வெளிப்படுத்துவதில் அவளுக்கு தடையேதுமில்லை. ஆனால், அவள் கொண்ட லட்சியம்?

‘விரைவிலேயே தன் காதலை சொல்லும் தருணம் வரும் அதுவரை சற்று பொறுமை கொள் மனமே’ என தனக்குத்தானே கூறிக்கொண்டாள்.

வினுவின் மூலமாக நடந்ததை அறிந்த ஆதர்ஷ் உள்ளுக்குள் கொதித்தான். சந்தோஷை கொன்று புதைத்துவிடும் கோபம் அவனுள். மஹி தைரியமான பெண் என்பதால் சமாளித்துவிட்டாள். இதுவே பெண்ணின் குணத்தோடு மெல்லியவளாய் இருந்திருந்தால் என்னவாகியிருக்கும்? நினைத்துப் பார்க்கவே அஞ்சியவனாய் தன் தலையை உலுக்கினான்.

இதற்கு மேலும் சந்தோஷை விட்டு வைக்கக்கூடாதென்ற முடிவுடன் எழுந்தவனை வினுவின் வார்த்தைகள் தடை செய்தது.

“அவளை பார்த்துக்க அவளுக்குத் தெரியுமாம்!”

ஆதர்ஷ் தனது நண்பனை புரியாது பார்த்தான்.

“மஹி தான் உன்கிட்ட இதை சொல்ல சொன்னா” என்ற வினுவின் செய்தியில் ஆதுவின் கட்டுப்பாடு தன் வசமிழந்தது. தன்னை வேறு யாரோ போல் அவள் ஒதுக்கி வைப்பது அவனிற்குள் வலியை அதிகரித்தது.

நேராக முதல்வர் அறைக்கு சென்றான் அவரின் அனுமதியுடன், உள்ளே வந்தவனின் கோபத்தை அறிந்தவர் சந்தோஷின் இழிநிலை செயலைக் கேட்டு அதிர்ந்தார். அடுத்த நொடி ஆதர்ஷ் பேசுவதையும் கேட்காதவராய் தனது உதவியாளரை அழைத்து, “நான்காம் ஆண்டு பொறியியல் மாணவன் சந்தோஷிற்கு டிஸ்மிஸ் லெட்டர் ரெடி பண்ணுங்க” என உத்தரவிட்டார்.

“சார் இந்த விஷயம் கல்லூரியில் பரவாமலிருந்தா நன்றாகயிருக்கும், இதில் மஹி சம்பந்தப்பட்டிருக்காள்… மாணவர்கள் அவளை வேற விதமாக பார்க்க வாய்ப்பிருக்கு.” தன்மையாக மொழிந்தான்.

“நானும் சில நாளாக மாணவர்களின் நடத்தையை கவனித்துக் கொண்டுதானிருக்கேன் ஆதர்ஷ். அவன் மீது ஏகப்பட்ட கம்ப்லைன்ட் வருது. சோ, இந்த விஷயம் தான் காரணம்ன்னு தெரியாது” என்ற முதல்வர், உதவியாளர் கொண்டு வந்த கடிதத்தினை சரி பார்த்து கையொப்பமிட்டார்.

தகவல் பலகையில் போட்டிருந்த செய்தியை படித்த மஹி அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆதர்ஷின் முன் நின்றிருந்தாள்.

“இப்போ சேதாரம் யாருக்கு இருக்கும்.” கிஷோர் வினுவின் காதில் முணுமுணுத்தான்.

மஹி ஆதர்ஷினை முறைத்துப் பார்க்க, அவனோ தன்னவளை அருகில் ரசித்துப் பார்த்தான். அவனின் ரசனையான பார்வை அவளின் உள்ளத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்தியது. புதிதாக நெஞ்சம் படபடப்பை உணர்ந்தாள்.

அதில் நா தடுமாற, ” எதுக்கு இப்படி பண்ண? இதுக்கு நீ தான் காரணம் எனக்குத் தெரியும்.”

“தெரிஞ்சா வச்சுக்கோ. பட் உனக்காக செய்யல, உன்னை பார்த்துக்கிறது என் வேலையில்லை.”

மஹி வினுவிடம் கூறியதற்கு இப்போது நேரடியாக பதில் கொடுத்திருந்தான். ஆதர்ஷ் விஹான்.

இருவரும் முறைத்துக்கொண்டு நிற்க அங்கு வெறியுடன் வந்தான் சந்தோஷ். வந்தவன் மஹியை கனல் பார்வை பார்க்க, மஹியை மறைத்தவாறு அவளுக்கு முன் வந்து நின்றான் ஆதர்ஷ்.

“உன்னை சும்மா விடமாட்டேன்டா. யார்கிட்ட மோதியிருக்கத் தெரியுமா?” என்றவனாக சந்தோஷ் ஆதர்ஷின் சட்டையைப் பற்ற முயல தனக்கு முன்னிருந்த ஆதர்ஷின் இரு கால்களுக்கு இடையில் தனது வலது காலை நுழைத்து, ஆதர்ஷின் முன்பிருந்த சந்தோஷை ஒரு உதை உதைத்தாள்.

ஆதர்ஷ் “மஹி” என சத்தமாக அழைக்கவும் சந்தோஷ் வலியில் முணகியபடி அடிபட்ட இடத்தில் கை வைத்தவனாய் கீழே விழவும் சரியாக இருந்தது. ஆதர்ஷ் நெற்றியை ஒரு விரல் கொண்டு தேய்த்தவனாக அமைதியாகிவிட,

“இப்பவும் சேதாரம் இவனுக்குத்தான் மச்சான். இவனே வந்து ஆப்பு மேல ஏறி உட்கார்ரான்டா மச்சான்” எனக்கூறி கிஷோர் சிரிக்க.. வினுவும் நகைத்தான்.

அவர்களின் கேலிப்புன்னகையில் ஆத்திரம் அதிகரிக்க… “ஹேய்” எனக் கத்திய சந்தோஷ் வலியில் சுருண்டான்.

ஆதர்ஷை தனக்கு முன்னிருந்து விலக்கியவள், “யார் முன்னாடி யார் சட்டையை பிடிக்கப்போற, மொத்தமா போட்டுத் தள்ளிடுவேன். ஏதோ போனாபோகுதுன்னு எக்ஸாம் எழுதவாவது பெர்மிஷன் கிடைச்சிருக்கு. அதையும் கெடுத்துக்காத” என்றவள், “இனி எனக்காக எதுவும் நீ செய்ய வேணாம்” என ஆதர்ஷிடம் கூறினாள்.

“ஃபிரண்டுன்னு சொல்லிட்டு பக்கத்துலே நின்னுட்டு இருக்கிறது பெருசில்லை, அவன் சட்டையை பிடிக்க வர்றான் தடிமாடு மாதிரி நின்னுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க.” வினு மற்றும் கிஷோரை பார்த்து காட்டமாக மொழிந்தவள்… கிஷோரின் மீது பார்வை பதித்தவளாக, “இப்படியொரு தொடை நடுங்கி பிரண்ட் உனக்கு வேணுமா?” எனக் கேட்டாள்.

“நான் தொடை நடுங்கி கிடையாது.” கிஷோர் பாவம் போல் மொழிய, வினுவிற்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

கிஷோர் ஆதர்ஷிடம், “பாருடா மச்சான். இந்த ஆம்பள பையன் கூட சேர்ந்து இவனும் என்னை கிண்டல் பண்ற மாதிரி சிரிக்கிறான்” என முறையிட, ஆதர்ஷும் புன்னகையுடன், “மஹி சொல்றது உண்மைதானே” என்றவாறு, தரையில் காலை உதைத்து சிணுங்கிய கிஷோரை அணைத்துக்கொண்டான்.

அதன் பிறகு சந்தோஷின் மூலம் மஹிக்கு எவ்வித பிரச்சனையும் வந்து விடாமல் யாருக்கும் தெரியாமல் அவனை எச்சரித்து, “மஹி பக்கம் உன் நிழல் கூட விழக்கூடாது” என்று ஆதர்ஷ் எச்சரித்து வைத்தான்.

ஆதர்ஷின் மிரட்டல் பார்வை ஒன்றே போதுமானதாக இருந்தது. ஆதர்ஷை எதிர்க்கும் துணிவற்று சந்தோஷ் அடங்கினான்.

ஒரு மாதம் சென்றிருக்க, அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொள்ளும் காலை வேளையில் வீட்டிற்குள் காலடி வைத்தாள் மஹி.

அவள் உள்ளே வந்ததும் வாண்டுகள் இருவரும் மஹியின் காலை கட்டிக்கொள்ள. உணர்ச்சிவசப்படும் மனதை முயன்று அடக்கினாள். நேராக நாதனின் முன் சென்றவள், அவருக்கு முன்பு ஏழாயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்தவள்…

“எனக்கு அவுட் ஹவுஸில் தங்க அனுமதியளித்து இன்றோடு ஒரு மாதமாகுது. நான் விசாரிச்சிட்டேன். இந்த ஏரியாவில் வீட்டு வாடகை ஏழாயிரம் தானாம், அதான் நான் தங்கியிருக்கிறதுக்கு ரெண்ட் கொடுக்க வந்தேன்” எனக் கூறியவள் முடிப்பதற்குள்,

“மஹிரா என்ன இது விளையாட்டு, ஒழுங்கா பணத்தை கையிலெடு” என கத்தியது யமுனா.

“யார் நீங்க? என்னை அதட்டும் உரிமை உங்களுக்கில்லை” எனக் காட்டமாகக் கேட்டிருந்தாள்.

அவளின் கேள்வியில் யமுனா அதிர்ந்து நிற்க,

“அம்மாவிடம் கேட்கும் கேள்வியா இது” என்று கடிந்தார் விஷ்ணு.

அதற்கு விரக்தி புன்னகை ஒன்றை சிந்தித்தவள்… “உங்க அப்பா என்னை வீட்டை விட்டு வெளிய போன்னு சொன்னப்போ எனக்காக ஓரிரு வார்த்தை அவர்கிட்ட வாதிட்டிருந்தா இன்னைக்கு என் அம்மா இவங்கதான்னு நினைவு எனக்கிருந்திருக்கும். முழுசா முப்பது நாட்கள் ஓடியாச்சு. தங்க இடமிருந்தா மட்டும் போதுமா? ஒரு பெண்ணா எனக்கு எவ்வளவு தேவைகள் இருக்கும் உங்களுக்குத் தெரியும்ல. அனைத்துக்கும் நான் என்ன செய்திருப்பேன் யோசிச்சீங்களா?அதை விடுங்க, நான் சாப்பிட்டேனா, சாப்பாட்டுக்கு என்ன செய்திருப்பேன், இந்த வீட்டில் இத்தனை பேர் இருக்கீங்களே, யாராவது ஒருத்தர் யோசிச்சீங்களா?இந்த வாண்டுங்க கூட நானிருக்கும் திசை பக்கம் வரலையே! உங்கள்ல எத்தனை பேர் தினமும் என்னை ஒருமுறையாவது பார்த்திருப்பீங்க, அப்போ யாராவது ஒருத்தர் நான் எப்படி இருக்கேன், என்ன பண்றேன், அட்லீஸ்ட் ஒரு சின்ன ஸ்மைல்… இப்போ எந்த உரிமையில் அதட்டுறீங்க?” என ஒரே மூச்சாக வெடித்திருந்தாள்.

நாதன் அவள் பேச்சு ஒவ்வொன்றிற்கும் உள்ளுக்குள் வருந்தினார். திருந்த தண்டனை அளிப்பதாக நினைத்து தன் பேத்தியை தானே கஷ்டப்பட வைத்துவிட்டேனே என்று மருகினார்.

கேள்வி கேட்டவாறு அனைவரையும் சுற்றி தனது பார்வையை சுழற்றியவள், ஆதர்ஷிடம் மட்டும் தலை குனிந்தாள். அவளுக்குத்தான் தெரியுமே இந்த ஒரு மாத காலமாக தனக்கு மறைமுகமாக எவ்வளவோ செய்கிறானென்று. அனைவரோடு அவனை அவளால் ஒப்பிட முடியவில்லை. இன்று, தான் இவ்வீட்டின் எல்லைக்குள் வசிப்பதற்கு காரணமும் ஆதர்ஷ் தானே!

சற்று அமைதி காத்தவள்…

“என்னை பொறுத்தவரை உங்களுக்கும் எனக்குமான உறவு, உங்க வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஒரு டெனண்ட் நான். வீட்டின் உரிமையாளர் நீங்க, அவ்வளவுதான்.” அழுத்தம் திருத்தமாகக் கூறியவள் அங்கிருந்து வெளியேறினாள்.

அனைவருக்கும் தங்களது தவறு புரிந்தது. யமுனாவிற்கு, தானொரு அன்னையாக அவளிடம் நடந்து கொள்ளவில்லையோ என்ற எண்ணம் குற்றவுணர்வை உண்டாக்கியது.

மஹி வைத்துவிட்டுச் சென்ற பணம் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தது.

அவளது வருத்தம் நிறைந்த வார்த்தைகள் குழந்தைகளுக்கு புரிந்ததோ என்னவோ, அன்றிலிருந்து மஹி வீட்டிலிருந்தால் வாண்டுகள் இருவரும் அங்கு அவளுடன் தானிருப்பர். பெரியவர்களிடம் காட்டும் கோபத்தை அவளால் குழந்தைகளிடம் காட்ட முடியவில்லை. குற்ற உணர்வினால் மற்றவர்களால் அவளிடம் சென்று பேச இயலவில்லை.

பாசம், உணர்வுகள் என்றாலே தள்ளி இருப்பவளின் மனதை, அவர்களின் ஒதுக்கநிலை மேலும் இரும்பாக்கியது.

தன் போக்கில் சில விதிகளுடன் தனது வாழ்க்கையை வாழத் துவங்கினாள். அதற்குள் ஆதர்ஷிற்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால், அவனுக்கு வழங்கப்பட்ட அனுமதி அவனுக்கேத் தெரியாது. அனுமதி வழங்கியவளோ அதனை தெரியப்படுத்த நினைக்கவில்லை.

ஒவ்வொரு மாதமும் அவ்வீட்டிற்குள் செல்ல வேண்டாமென நினைத்த மஹி… வாடகைத் தொகையினை ஆதர்ஷிடம் கல்லூரியில் கொடுத்துவிடுவாள். ஆதர்ஷ் வாங்க மறுத்தால் அவனின் பையிலோ அல்லது கையிலோ திணித்துவிட்டு வந்துவிடுவாள்.

ஆதர்ஷிற்கு அவளிடம் எப்படி நெருங்குவதென்றே புரியவில்லை. ஆனால், இரவில் அவளோடு உரையாடுவதை மட்டும் அவன் நிறுத்தினானில்லை.

காலம் யாருக்கும் நிற்பதில்லை என்பதற்கேற்றவாறு விரைந்து சென்றது.

ஆதர்ஷ் முதுகலையிலும், மஹி இளங்கலையிலும் இறுதி கட்டத்தில் இருந்தனர்.

“இன்னும் எத்தனை நாளுக்குத்தான் மஹி அங்க யாருமில்லாம யாரோ மாதிரி தனியா இருக்கிறது.” கோமளம் நாதனிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

“எனக்கும் மஹி இல்லாத வீடு உயிர்ப்பா தெரியல, அவளோட தேர்வு முடியட்டும். மஹியை இங்கு வர சொல்லிடலாம்” என்ற நாதனிடம், “அவள் இங்குவர ஒத்துக்கொள்வாளா?” என்றார் கோமளம்.

“எனக்கும் அந்த பயம் கொஞ்சமிருக்கு கோமளா, ஆனால் ஆதர்ஷ் பேச்சை மஹி மீறமாட்டாள். சோ, யூ டோன்ட் ஒர்ரி அபௌட் திஸ்… எல்லாம் ஆதர்ஷ் பார்த்துப்பான்” எனத் தனக்கும் சேர்த்துக் கூறிக்கொண்டார்.

இவர்கள் ஒன்று நினைக்க விதி வேறொன்றல்லவா நினைத்திருக்கிறது. அவ்வளவு சீக்கிரத்தில் மஹி இவ்வீட்டிற்குள் மீண்டும் நுழைய போவதில்லை என்பதை யாரும் அறியவில்லை.

தேர்வு நேரம் என்பதால் மஹி தனது வேலைக்கு விடுப்பு எடுத்திருந்தாள். இறுதித் தேர்வில் நன்மதிப்புடன் தேர்ச்சி பெற விரும்பியதால் முழு கவனத்துடன் படித்தாள். அத்தோடு தான் நினைத்த படிப்பிற்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்கும் தன்னை தயார்ப்படுத்தத் துவங்கியிருந்தாள்.

தினமும் இரவில் ஆதர்ஷின் வருகைக்காகவே விரைவில் விளக்குகளை அணைத்துவிட்டு உறங்காமல் காத்திருப்பாள். அவன் வரும் நேரம் தூங்குவதைப்போன்று பாசாங்கு செய்வாள். நெற்றியில் பட்டும் படாமல் அவனளிக்கும் இதழ் ஒற்றலுக்கு மஹி அடிமையாகினாள். தினமும் அம்முத்தத்தை அவனிடமிருந்து எதிர்பார்த்தாள்.

மஹிக்கு தெரியாமல் அனைத்து உதவிகளையும் ஆதர்ஷ் அவளுக்காக செய்தான். தேர்வு கட்டணம் ஆதர்ஷ் தனக்கும் சேர்த்து கட்டியுள்ளான் என்பதை அறிந்தவள், அப்பணத்தை அப்படியே அவனிடம் திருப்பிக் கொடுத்தாள்.

ஆதர்ஷின் ஏனென்ற கேள்வி பார்வையை சந்திக்க இயலாது தயங்கியவள், அவன் முகத்தை நேருக்கு நேராக சந்தித்து, “என்னை பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்” என மீண்டும் கூறினாள்.”

கைமுஷ்டி இறுக நின்றவன், “தயவுசெய்து என் முன்னாடியிருந்து போ” என கர்ஜித்தான்.

அவனின் கர்ஜனை மஹிக்கே சிறு உதறலை ஏற்படுத்தியது. மேலும் அவனை கோபப்படுத்த வேண்டாமென்று அவனிடமிருந்து விடைபெற்றாள், வலித்த மனதை சரி செய்தபடி.

தேர்விற்கு சந்தோஷ் வருவான்… அவனால் மஹிக்கு மீண்டும் ஏதேனும் ஆபத்து வருமோவென்று ஆதர்ஷிற்கு சிறு அச்சம் உண்டானது. ஆனால், அந்த அச்சம் தேவையில்லாதது என்றாகியது.

தேர்வின் பொழுது அவன் கல்லூரிக்கு வருவதும் போவதும் கூட யாரும் அறியவில்லை. மஹியிடம் அப்படியொரு உதை வாங்கிய பிறகு அவளிடம் தானாக சென்று அடி வாங்கிக்கொள்ள அவன் விரும்பவில்லை. ஆதர்ஷின் கோபத்திற்கு மீண்டும் ஆளாக முடியாதென்று மஹியிடமிருந்து மொத்தமாக ஒதுங்கினான் சந்தோஷ்.

அன்று இறுதி தேர்வு முடித்துவிட்டு மஹி ஆதர்ஷிற்காக அவனது கார் அருகே காத்திருந்தாள்.

ஆதர்ஷும் தேர்வினை முடித்துவிட்டு உல்லாசமாக அறையை விட்டு வெளியில் வந்தான். அவனின் உற்சாகத்தைக் கண்ட வினு காரணம் கேட்க, “மஹியை இன்னைக்கு தாத்தா வீட்டுக்கு கூப்பிடப்போறார்” என மகிழ்ச்சியுடன் கூறினான்.

ஆதர்ஷ் வினுவிடம் மட்டுமே மஹி யாரென்பதை பற்றியும் வீட்டில் நடந்தவற்றையும் சொல்லியிருந்தான். அதுவும் மஹி வேலைக்காக சென்றபோது வினு ஓரளவிற்கு அவள் யாரென யூகித்துக் கேட்க ஆதர்ஷ் மறைக்க முடியாமல் அனைத்தும் கூறியிருந்தான். மஹியின் சம்பளத்துடன் அவளுக்கென ஆதர்ஷ் அளிக்கும் பணத்தையும் சேர்த்து கொடுக்கும் வகையில் வினு ஏற்பாடு செய்திருந்தான். இதனால் வினுவிடம் மட்டும் ஆதர்ஷால் மறைக்க முடியாமல் போனது.

“மஹியை தாத்தா அழைத்து வர சொன்னார்” என்பதை கேட்ட கிஷோர், “உன் லவ் மேட்டரை வீட்டிலே சொல்லிட்டியா? நீங்க ரெண்டு பேரும் பேசாம இருந்ததால உனக்கும் அவளுக்கும் இடையில் எதுவுமில்லைன்னு நினைச்சேனே. கடைசியா சொல்றேன் மச்சான் அந்த ஆம்பள பையன் உனக்கு வேண்டாம்” என்றான்.

அப்போதுதான் மஹி யாரென்றே கிஷோர்க்கு தெரியாது என்பதை உணர்ந்த ஆதர்ஷ் மற்றும் வினு பலமாக சிரித்தனர்.

“இப்போ எதுக்குடா சிரிக்கிறீங்க?” என்ற கிஷோரிடம்… ஆதர்ஷ் “அவள் என்னோட ரவுடி பேபி டா, எனக்கு அவள்தான் வேணும். அப்புறம் ஒரு விஷயம் மஹி வேற யாரோ இல்லை… என்னுடைய அத்தை பெத்த ரத்தினம்” என்க,

ஆவென்று வாய்பிளந்த கிஷோர், “உன் தலையெழுத்து அவ்வளவுதான்னா நான் என்ன மச்சான் செய்ய முடியும், நீ அந்த ஆம்பள பையன்கிட்ட மாட்டிக்கிட்டு நல்லா அனுபவி” என்று ஆசீர்வதித்தான்.

வினு கிஷோரிடம் மற்ற சம்பவங்கள் அனைத்தும் கூறியபடி பார்க்கிங் எரியாவிற்கு மூவரும் வந்து சேர்ந்தனர்.

“எவ்ளோ விஷயம் என்கிட்ட மறைச்சிருக்கீங்க?” எனக் கேட்ட கிஷோர், ஆதர்ஷின் பைக் அருகே நின்றிருந்த மஹியைக் கண்டதும்,

“எனக்கு அந்த ஆம்பள பையனக் கண்டாலே பயமாயிருக்குடா, நீ போய் வண்டி எடுத்துட்டு வா. நான் கேட் கிட்ட நிக்கிறேன்” என்றவனாக ஓடிவிட்டான்.

மஹி ஆதர்ஷிடம் பேசுவதற்காகத் தான் நிற்கிறாள் என்பதை உணர்ந்துகொண்ட வினு அங்கு நிற்காமல் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.

மஹி தயக்கத்துடன் நிற்க,

“என்ன சொல்லணும் மஹி” எனக் கேட்டிருந்தான் ஆதர்ஷ்.

“அது வந்து… விஹூ, நான்…”

“நீ…?”

நீண்ட நாட்களாக அவன் கேட்க நினைத்த அவளின் பிரத்யேகமான அழைப்பு அவனுள் சில்லென்று இறங்கியது.

“எதுவாயிருந்தாலும் தயங்காம சொல்லு மஹி.”

“கால் மீ மஹிரா.”

(முதல் முறை அவன் மஹியென்ற போது கவனிக்கவில்லையோ?)

“ஓகே ஓகே மஹிர…” அவனின் இதழோரம் நக்கல் வழிந்ததோ,

“விஹுஊ” என பற்களுக்கிடையில் அவனின் பெயரை மென்றாள்.

“சரி, நீ சொல்ல வந்ததை சொல்லு.”

“அது, நீ எனக்கு சப்போர்ட் பண்ணுவல?”

“முதல்ல என்னன்னு சொல்லு. நீ சொல்றது எனக்கு சரின்னுபட்டா, உனக்கு என் முழு சப்போர்ட் உண்டு.”

அவனளித்த நம்பிக்கையில் தான் செய்யவிருப்பதை மஹி சிறிதும் தயக்கமின்றி ஆதர்ஷிடம் தெரிவிக்க… முதல் முறையாக விஹான் ஆதர்ஷ் சக்கரவர்த்தி தன் தாத்தாவை நினைத்து பயந்தான்.

error: Content is protected !!
Scroll to Top