அத்தியாயம் 6
“கம் அகெய்ன்.”
மஹி சொல்லியதும் ஆதர்ஷ் பேசியது அந்த வார்த்தைகள் தான். எங்கே தனக்குத் தான் தவறுதலாக கேட்டு விட்டதோவென மீண்டும் சொல்லுமாறு கூறினான்.
“நான் லா(law) படிக்க இருக்கேன்.”
அழுத்தமாகவும் தெளிவாகவும் கம்பீரமாகக் கூறினாள்.
அதிர்ச்சி மாறாமல் நின்றிருந்தவனை உலுக்கி…
“உன் காதில் சரியாக தான் விழுந்தது” என்றாள்.
“மஹி… ரா!”
“ப்ளீஸ் விஹூ தடங்கலா எதுவும் சொல்லிடாத. உன்கிட்ட சொல்லாம என் ஆசையை நிறைவேற்றிக்க எனக்கு விருப்பமில்லை, அதுவுமில்லாம உன்கிட்ட என்னால் எதுவும் மறைக்க முடியாது, அதான் சொன்னேன்.”
“அப்போ மேடம் என்கிட்ட பெர்மிஷன் கேட்கல, ஜஸ்ட் இன்போர்ம் பண்றீங்க அப்படித்தானே?”
சில வினாடிகள் கைகளை பிசைந்தவள், “நீ எப்படி வேணானாலும் எடுத்துக்கோ. பட், என் முடிவில் எந்த மாற்றமுமில்லை” எனக் கூறியவள், “நான் வர்றேன்” என்றவாறு திரும்ப…
“இன்னைக்கு தாத்தா உன்னை வீட்டுக்கு திரும்ப கூப்பிடலாம் இருக்காங்க” என்ற ஆதர்ஷின் வார்த்தைகளில் நின்று அவனை தீர்க்கமாகப் பார்த்தாள்.
“இப்பவும் நான் அதே மஹிரா தான்…” குரலில் கட்டுக்கடங்கா கோபம் தெறித்தது.
“மஹி காம் டவுன்… பீ கூல்… அவர் அன்னைக்கு ஏதோ அந்த நொடி உன் மீதான கோபத்தில் வீட்டைவிட்டு போக சொல்லிட்டாரேத் தவிர அதுக்காக வருந்தாத நாளில்லை மஹி. ப்ளீஸ் அன்டெர்ஸ்டாண்ட் தட்.” அவளுக்கு புரிய வைத்துவிட வேண்டுமென்ற வேகம் அவனிடத்தில் காணப்பட்டது.
“ஓகே ஃபைன்… கோபத்தில் சொல்லியிருந்தா அடுத்த நாளே என்னை கூப்பிட்டிருக்கலாமே, அவரை பொறுத்தவரை நான் பெண்ணில்லை.. ரவுடி! திருந்தாத கேஸ், அடங்காப்பிடாரி, உருப்படாதவள், அதான் நான் எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு அன்னைக்கு நடந்தது ஒரு காரணமா வைத்து என்னை வீட்டை விட்டு வெளியப்போக வச்சு தண்ணி தெளிச்சு விட்டார். மத்தவங்களும் அமைதியா ஏத்துக்கிட்டாச்சு. யாரும் என்னைப்பற்றி கொஞ்சமும் யோசிக்கல… நான் சுதந்திரமா என் இஷ்டத்துக்கு இருக்க நினைப்பவள் தான். ஆனால், நீங்க யாருமில்லாம இப்படி அனா…(தையாக)…” என அவள் வார்த்தைகளை முடிக்கவில்லை,
“மஹி” என்று ஆதர்ஷின் கரம் இடியென அவளின் கன்னத்தில் இறங்கியது.
தன் கரம் பற்றிய கன்னம் தீயாய் காய்ந்த பின்னரே ஆதர்ஷ் தன்னை அடித்தான் என்பது அவளுக்கு புரிந்தது.
“நீ நான் சொல்றதை தடுத்திருந்தாலும் அதுதானே விஹூ உண்மை. நான் அந்தநிலையில் தானே இப்போ இருக்கேன். அன்னைக்கு நீயும் எல்லாரையும் மாதிரி அமைதியா இருந்திருந்தா இன்னைக்கு நான் ஏதோ ஒரு விடுதியில் தங்கியிருந்திருப்பேன். யாருமில்லாம.”
கண்களில் நீர் இறங்கவில்லை… ஆனால் மஹியின் குரல் தழுதழுத்தது.
அதற்கு மேலும் தாங்கமாட்டாதவனாய் இடம் பொருள் அசட்டை செய்தவனாய் மஹியை இழுத்து அணைத்திருந்தான். முடிந்தவரை தன்னோடு இறுக்கி, தன் நெஞ்சில் ஆழப் புதைத்தான்.
அவனின் அந்த அணைப்பில் உனக்கு நானிருக்கின்றேன் என்ற எண்ணத்தை அவளின் மனதில் பதிய வைத்துவிட வேண்டுமென்ற தீவிரமிருந்தது.
பேச்சற்ற மௌனத்திலும் அவனின் அணைப்பு அவளுள் தனக்காக தன்னுடைய விஹூ இருக்கின்றான் என ஆழப் பதிந்தது.
அருகில் யாரோ வாகனத்தை உயிர்ப்பிக்கும் சத்தத்தில் மெல்ல இருவரும் விலகினர்.
ஆதர்ஷின் மீது காதல் கொண்ட பிறகு அவனிடமிருந்து வந்த முதல் அணைப்பு. அவனின் முகம் நோக்க வெட்கியவளாக சுற்றுப்புறத்தை அவளின் பார்வை ஆராய மஹியின் செவிகளை நிறைத்தது ஆதர்ஷின் காதல் வார்த்தைகள்.
“இனி உனக்கு யாருமில்லைன்னு உன் வாயிலிருந்து வரவேக்கூடாது. உனக்கு எப்பவும் நானிருக்கேன். என்கிட்ட நீ நீயா இருக்கலாம், அது தான் எனக்கும் உன்கிட்ட பிடிக்கும்” என்றவன், “வில் யூ மேரி மீ மஹி” என தன் மனதில் உள்ளதை எவ்வித பூசலுமின்றி அழகாக எடுத்துரைத்தான்.
ஆதர்ஷின் அவ்வார்த்தைகளில் அவளின் மனம் குதியாட்டம் போட்டது. ஏற்கனவே ஒருமுறை ஆதர்ஷின் காதலை அவனின் வாய் மொழியாகவே கேட்டிருந்தாலும், இம்முறை அவளின் கண்களை நேருக்கு நேராக சந்தித்து அவன் சொல்லியதில் பேதையவள் சொக்கித் தான் போனாள். தனது கனவு லட்சியம் அனைத்தையும் மறந்து அவனிடத்தில் தஞ்சம் புகுந்திட துடித்த மனதை வலியோடு அடக்கியவள்,
“எனக்கு அப்படியொரு எண்ணமில்லை விஹூ.” வெகு சாதாரணமாகக் கூறினாள்.
“இப்படி நீ சொல்லிடக் கூடாதுங்கிறதுக்காகத்தான் என் ஆறு வருஷக் காதலை எனக்குள்ளே புதைத்து வைத்திருந்தேன். ஆனால், உன் மேல உயிரே வைத்திருக்கும் நானிருக்கும் போது நீ சொன்ன அனாதைங்கிற வார்த்தை தான்டி இப்போ உன்கிட்ட என் காதலை சொல்ல வைத்தது.
பிறந்ததிலிருந்து கண்ணீருன்னா என்னன்னே தெரியாத என்னையும் அழ வச்சுட்டல” என்று கண்களில் துளிர்த்த ஒற்றைத் துளி கண்ணீரை விரலால் சுண்டித் தள்ளினான்.
ஒருவரின் கண்ணீர் இன்பத்தை அளித்திடுமா… முடியும் என்பதை ஆதர்ஷின் கண்ணீர் அவளுக்கு உணர்த்தியது.
நம் உயிருக்கு இணையானவரின் கண்கள் நமக்காக கண்ணீர் சிந்துகிறதென்றால் அதைவிட இன்பம் வேறெதுவுமில்லை என்பதை மஹி முதல் முறையாக அனுபவித்தாள்.
ஆதர்ஷ் தன்னை ஆறு வருடமாகக் காதலிக்கிறான் என்பது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. மற்ற பெண்களை அருகில் கூட சேர்க்காததற்கான காரணம் அவன் தன் மீது கொண்ட காதலே என்பதில் ஒரு பெண்ணாக கர்வமடைந்தாள்.
“இந்த செக் உன் குரல் தழுதழுத்த நொடி, என் மனசை உன்கிட்ட சொல்லணும் தோணுச்சு. உன் பதில் நான் எதிர்பார்த்ததுதான். உன்கிட்ட காதலை யாசகமா அடைய எனக்கு விருப்பமில்லை. உன் ஹஸ்பண்டா உனக்கு எல்லா விஷயத்திலும் ஆதரவாக இருக்க நினைச்சேன். அது முடியாதுங்கிற அப்போ உன் பிரெண்ட்டா வாழ்நாள் முழுக்க நீ எடுக்கும் எல்லா முடிவுக்கும் நான் துணை இருப்பேன்” என்றவன் மஹியின் கைகளை பிடித்து தன் கை அழுத்தத்தின் மூலம் நம்பிக்கையை அவளுள் விதைத்தான்.
“தேங்க்ஸ் விஹூ” என்றவள், ‘நீ சொல்லியதை விட, உணர்த்தியதை விட அழுத்தமா என் காதலை உன்கிட்ட நான் சேர்ப்பேன். அதுக்கு சில காலம் நாம் இருவருமே காத்திருக்க வேண்டும்” என மனதோடு சொல்லிக்கொண்டாள்.
“நீ என்கிட்ட நெருங்கி வர நான் ஆசைப்பட்டா… நீயோ வார்த்தையில் கூட என்னை அந்நியப் படுத்துற” என்றவன் தனது காரிலேறி அமர்ந்தான்.
அவன் அங்கிருந்து சென்ற பிறகே தான் கூறிய நன்றி என்ற வார்த்தை அவனை காயப்படுத்தியிருக்கிறது என்பதை உணர்ந்தாள். உணர்ந்தவள் தன்னைத் தானே தலையில் தட்டிக்கொண்டாள்.
இருவரும் சிறு வயது முதல் இதுவரை நன்றி மற்றும் மன்னிப்பு என்ற வார்த்தைகளுக்கு தங்களுக்குள் இடமளித்ததேயில்லை.
ஆனால், இன்று காதல் கொண்ட மனமாக இருந்தாலும், இந்த ஏழு மாத இடைவெளி ஆதர்ஷிடமிருந்து சற்று தள்ளியே நிற்க வைத்தது. ஆதலால், அவள் தன்னையும் அறியாது நன்றி தெரிவிக்க… அது ஆதர்ஷின் வலித்துக்கொண்டிருந்த மனதை மேலும் வலிக்குள்ளாக்கியது.
வீட்டு வளாகத்தினுள் முதலில் ஆதர்ஷின் கார் நுழைய… பின்னாலே மஹி தன்னுடைய ஸ்கூட்டியில் வந்திறங்கினாள்.
குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும்… இன்று ஆதர்ஷ் மஹியை வீட்டிற்குள் அழைத்து வந்து விடுவானென்று, இருவரும் கல்லூரி முடிந்து வரும் நேரம் ஆர்வமாக வாயிலில் காத்திருந்தனர்.
கேட்டினைத் தாண்டி உள்ளே நுழைந்தவள், வண்டியை அதனிடத்தில் நிறுத்திவிட்டு… போர்டிகோவில் நின்றிருக்கும் யாரையும் கவனியாது போன்று.. அனைவரையும் கடந்து அவுட் ஹவுசிற்கு சென்றாள்.
மஹி சென்ற பிறகே காரிலிருந்து மெல்ல கீழிறங்கினான் ஆதர்ஷ்… அனைவரையும் பார்த்து கசந்த முறுவல் ஒன்றை சிந்தியவன் எதுவும் பேசாமல் வீட்டினுள் புகுந்தான்.
அவன் பின்னோடு வந்த நாதன்… அமைதியாக இருக்கையில் உட்கார, ஜானகி தான் ஆதர்ஷிடம் கேட்டார்.
“மஹி கிட்ட பேசிட்டியா ஆது. என்ன சொன்னா? இன்னும் நம்ம மேல கோவமாதானிருக்கிறாளா?”
அன்னையின் கேள்வியில் அவரை விலுக்கென நிமிர்ந்து பார்த்தவன்,
“எப்படிம்மா அவளுக்கு கோவம் போகும். இருக்கத்தானே செய்யும், அவள் நம்மை வெறுக்காம இருக்கான்னு சந்தோஷப்பட்டுக்கோங்க. அவ… அவள் சொல்றாம்மா, அனாதையா அவளை விட்டுட்டோமா. அவளுக்கு அப்படித்தான் ஃபீல் ஆகுதாம்மா” என
முதலில் வெடித்தவன், அடுத்துக் கூறும்போது தரையில் மண்டியிட்டு, தலையை இரு கைகளாலும் தாங்கி கண்ணீர் சிந்தினான்.
“அவள் அந்த வார்த்தை சொல்றதுக்குத்தான் நாம எல்லாரும் உயிரோட இருக்கோமா?” கோபமாக அனைவரையும் பார்த்து கேட்டவன் நாதனிடம் சென்று,
“இப்போ உங்களுக்கு சந்தோஷமா? சொல்லுங்க தாத்தா சந்தோஷமா? இந்த வயசுல தப்பு பண்ணாம வேறெந்த வயசுல தப்பு பண்ணறது. ஏன் நீங்க தப்பே பண்ணதில்லையா? அப்படி அவள் என்ன பண்ணிட்டாள், அவளுக்கு பிடிச்ச மாதிரி அவ வாழ ஆசைப்பட்டா! அவளை வீட்டை விட்டு வெளியேற்றி, மொத்தமா அவளுக்குள்ள சிறகை உடைச்சி இரும்பாக்கிட்டீங்களே. எல்லாரும் சந்தோஷமா இருங்க, நீங்க மட்டும் சந்தோஷமா இருந்தாபோதும்” என்றவன் அவரின் முகத்திற்கு அருகே குனிந்து, “நீங்க உங்க வயதுக்கு ஏத்த மாதிரி அவளோட கண்டிப்பில் நடந்துக்கல” என்க,
“ஆதர்ஷ், யாருகிட்ட என்ன பேசுற, தெரிந்து தான் பேசுறியா?” என விஷ்ணு தன் மகனை அதட்டினார்.
“ஹோ…. நல்லா தெரிஞ்சுதான் பேசுறேன். தன் பிள்ளைங்களில் ஒண்ணு தப்பு பண்ணுதுன்னா, தப்பு பண்ற பிள்ளை மேலதான் தனி கவனம் இருக்கணும். ஆனால், வீட்டை விட்டு வெளிய அனுப்பினாதான் திருந்தும்ன்னு தப்பா நினைச்சிருக்க வயசில் பெரியவரான உங்க அப்பாகிட்ட பேசுறேன்னு நல்லா தெரியுது” என்றான்.
“இப்போ அவளுக்காக நீ ஏன் எங்ககிட்ட சண்டைக்கு வர? அவளுக்கு இங்கு வர இஷ்டமில்லைன்னா அங்கவே இருந்துக்கட்டுமே! இப்போ என்னவாகிப்போச்சு?” என கேட்டது மஹியின் அன்னை யமுனா.
“இந்த கேள்வியை நான் கேட்கிறதுக்கு சாரி. உண்மையிலே நீங்கதான் மஹியை பெத்த அம்மாவா? அப்படியென்ன உங்களுக்கு பெத்த பெண்ணை விட தந்தை உறவு முக்கியமா போயிடுச்சு? ஒரு பெண், அவளாவே வாழ ஆசைப்படுறது குற்றமா? அப்படி வாழ நினைத்தால் இப்படித்தான் வீட்டை விட்டு வெளிய அனுப்புவீங்களா? அன்னைக்கு நானும் அமைதியாக இருந்திருந்தா அவளை மொத்தமா தலை மூழ்கியிருப்பீங்க அப்படித்தானே?”
தனது மொத்தக் கோபத்தையும் அனைவரின் முன்னிலையிலும் இன்று கொட்டினான் விஹான் ஆதர்ஷ் சக்ரவர்த்தி.
தனக்கே தகப்பானாக நின்று பாடமெடுக்கும் தன் பேரனை பரவசத்துடன் பார்த்திருந்த நாதன்… “இப்போ நான் என்னப்பா செய்யணும்?” எனக் கேட்டிருந்தார்.
“என்கிட்ட ஏன் கேட்கிறீங்க? நீங்க வயசில் ரொம்ப மூத்தவர், உங்களுக்குத் தான் எல்லாம் தெரியுமே!” எனக் கூறியவன் விடுவடுவென மாடிக்கு சென்று தன்னறை கதவை அறைந்து சாற்றினான்.
அனைவருக்கும் ஆதர்ஷின் பேச்சு நெஞ்சத்தை சுட்டது.
சரியென நினைத்து தவறு செய்து விட்டமோ என சிந்தித்த நாதன், அவுட் ஹௌசை நோக்கி செல்ல.. எல்லோரும் அவர் பின் சென்றனர்.
ஏழு மாத காலம் அவளென்ன செய்கிறாளென்று கூட அறிந்திடாது இருந்துவிட்டு, இப்போ எப்படி மஹியிடம் பேசுவதென அவுட் ஹவுசின் வாயிலில் கைகளை பிசைந்து கொண்டு நாதன் நின்றிருக்க… கதவு தானாக திறக்கப்பட்டது.
கையில் ஏதோ காகித்துடன் வெளியில் வந்த மஹி, வரவேற்கும் விதமாக அனைவரையும் உள்ளே வருமாறு அழைத்து வரவேற்பறை இருக்கைகளில் அமரச்செய்தாள்.
கண்ணாடி தம்ளர்களில் பழச்சாறு நிரப்பி எடுத்துக்கொள்ளுமாறு சொல்ல, அவர்கள் எடுக்காது அவளையே குற்றவுணர்வுடன் கண்டிருக்க, டீபாயில் ட்ரேயினை வைத்தவள், “என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?” என நேரடியாகக் கேட்டாள்.
என்னை பொறுத்தவரையில் நீங்கள் அனைவரும் என் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகளென சொல்லாமல் தன் செயலால் உணர்த்தியதை உணர்ந்ததும் நாதனுக்கு தான் செய்த தவற்றின் வீரியம் புரிந்தது.
“என்னை மன்னிச்சிடும்மா. உன்னைத் திருத்துவதா நினைத்து நான் தப்பு பண்ணிட்டேன்” என்றவரை,
தீர்க்கமாக அமைதியாக ஒரு நொடி ஆழ்ந்து பார்த்த மஹி….
“நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை, என்னை வீட்டை விட்டு போகச்சொல்லி எனக்கு நல்லதுதான் செய்திருக்கீங்க. இப்போதான் நான் நானா இருக்கேன். உங்களை மன்னிக்குமளவுக்கு நீங்க எந்த தப்பும் செய்துடல” எனக் கூறினாள்.
“என்னடி பெரிய இவ மாதிரி பேசுற, ஒரு பெரிய மனுஷன் தன் தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார் அதை மதிக்காம திமிரா பதில் கொடுத்துட்டு இருக்க. ஒழுங்கா வீட்டுக்கு வாடி” என மஹியின் கையினை யமுனா பிடித்து இழுக்க,
“நீ கொஞ்சம் பொறுமையா இரு” என்று ஜானகி அவரைத் தடுத்தார்.
“எங்கமேல கோபமில்லைன்னா நம்ம வீட்டுக்கு வரலாமே! என் இறுதி காலத்தில் என்னை குற்றவுணர்வில் தவிக்க செய்திடாத மஹி.” நாதன் தன் ஆளுமை, கம்பீரம், வயது, அனைத்தும் மறந்தவராய் தன் பேத்தியிடம் மன்றாடினார். அவரோடு சேர்ந்து வீட்டு உறுப்பினர்களும் வருமாறு கண்களால் கெஞ்சினர்.
இரு வாண்டுகளும், “வா மஹி, எங்களோட விளையாட யாருமேயில்லை” என்று அழுகுரலில் அழைத்தனர்.
தந்தையில்லா தன்னை பொத்தி வளர்த்த குடும்பம் தன்னிடம் இரைஞ்சுவது பிடிக்காமல்,
“நான் அங்கு வரணுன்னா நானெடுத்திருக்க முடிவை நீங்க ஏத்துக்கணும்.” நாதனை உருத்து விழித்தவாறு கூறினாள்.
“என்னம்மா எங்ககிட்டவே டீல் பேசுறியா?” எனக் கேட்ட விஷ்ணுவிடம்…
“உங்களுக்கு அப்படித் தெரிந்தால் அப்படியே வைத்துக்கோங்க மாமா.” கெத்தாகவே பதில் கொடுத்தாள்.
தன் பேத்தி ஏதோ தனக்கு பிடிக்காத ஒன்றை சொல்ல போகிறாளென்று நாதன் சிந்திக்க துவங்கும் முன்,
“சரிடிம்மா, நீ என்ன செஞ்சாலும் அதுல எங்களுக்கு சம்மதம் தான். நீயில்லாம வீடு வீடாவேயில்லை, நீ வீட்டுக்கு வந்தா போதும்” என கோமளம் கேட்டுக்கொண்டார்.
“ஓகே… பைன், எல்லாருக்கும் சம்மதம்தானே. நான் சொன்ன அப்புறம் யாரும் மறுப்பு சொல்லக்கூடாது” என நாதனின் முன்பு தன் கையிலிருக்கும் ஃபார்மை அளித்து, “நான் லா படிக்கப்போறேன். அதுக்கு இதில் சைன் பண்ணுங்க” என்றாள் மஹிரா.
அவள் சொல்லிய லா என்ற வார்த்தை மொத்த குடும்பத்தையுமே அசைத்து பார்த்தது. நாதன் சர்வமும் நடுங்கி இருக்கையில் தொப்பென்று அமர்ந்தார்.
யமுனா அதிர்விலிருந்து மீண்டு, “அந்தத் தொழிலால் ஒரு உயிர் போனது பத்தாதா? உனக்கு ஏன்டி இந்த ஆசை? உனக்கு அந்த படிப்பு வேணாம் மஹி” என தன் மகளிடம் கெஞ்சினார்.
விஷ்ணுவும், “அந்த வக்கீல் தொழிலால் நான் என் நண்பனை இழந்திருக்கேன். நம்ம எல்லார் மீதும் உயிரே வைத்திருந்த ஒருத்தனை நாம் இழந்திருக்கோம். உன்னையும் நாங்க இழக்க வேண்டுமா?” என வேதனையுடன் கேட்க,
“தீ அப்படின்னு சொல்றதுக்கே சுடுமா என்ன? நான் லா படிக்கத் தான் போறேன். விருப்பமிருந்தா கார்டியன் அப்படிங்கிற இடத்தில் கையெழுத்து போடுங்க. இல்லைன்னா யாருமில்லாத அனாதை சொல்லி என்னால் நுழைவுத் தேர்வு எழுத முடியும்” என்றாள்.
“திரும்ப திரும்ப அனாதைங்கிற வார்த்தையை சொல்லி எங்களை தண்டிக்காத மஹிம்மா. எங்களைவிட உனக்கு இழப்போட வலி அதிகம் தான? அத்தை சொல்றதை கேளுடி மஹி. நீ என்ன பண்ணணுமோ பண்ணு. உன் இஷ்டம் போல இரு. யாரும் எதுவும் கேட்கமாட்டோம். உனக்கு அந்த படிப்பு வேண்டாம் டா கண்ணு.” ஜானகியும் தன் பங்கிற்கு மஹியிடம் மன்றாடினார்.
யார் சொல்வதையும் நான் கேட்க போவதில்லையென்ற ஒருவித திமிருடன் ரவுடி பேபி நின்றிருக்க, இருக்கையை விட்டெழுந்த நாதன்…
“நீ இங்கயே இருந்துக்கோ. ஆனால், உன்னோட தங்குறதுக்கு ஆதுவும் இங்க வருவான். உன் தோழனாவோ, மாமன் மகனாவோ இல்லை. உன் புருஷனா!”
நாதனின் வார்த்தையில் இப்போது அதிரும் முறை மஹியுடையதாயிற்று.
“இன்னும் ஒரு வாரத்தில் திருமணம்.”
அனைவருக்கும் அறிவிப்பு போல் தெரிவித்தவர், “தலைக்கு மேல கல்யாண வேலை இருக்கு. இங்கவே நிக்காம ஆக வேண்டியதை கவனிப்போம்” என எல்லோரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியவர்,
“கெட் ரெடி டூ யூர் மேரேஜ்” என சிறு புன்னகையுடன் மஹியின் தோளில் தட்டிச் சென்றார்.
மஹிக்கு ஒன்றும் புரியவில்லை. தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டாள். ஒரு நொடி ஜானகி சொன்னது நினைவில் உதித்தது.
“இழப்பின் வலி உனக்கு அதிகம்.”
ஆம் மற்றவர்களை விட அவளுக்குத் தானே அந்த இழப்போட வலி அதிகம். அதை நினைத்தவள் தனது லட்சியத்தை விடுத்து திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்து விடலாமென்று யோசித்த மறுநொடி வெறி கொண்டவள் போல் வீடே அலற கத்தினாள்.
“ஏன் சுய நலமா யோசிக்கிறேன். நான் பண்ண சத்தியம்!? என்னால எப்படி அவரை ஏமாற்ற முடியும்” என அரற்றியவள், புலம்பலுடனே சோபாவில் சுருண்டு உறங்கி விட்டாள்.
எல்லோரிடமும் கோபமாக பேசிவிட்டு தனது அறைக்குள் வந்த ஆதர்ஷ் உடை கூட மாற்றாது இரு கால்களும் தரையிலிருக்குமாறு கட்டிலில் மல்லாக்க படுத்து விட்டத்தை வெறித்தான். அவன் கண்களில் கோடென இறங்கிய கண்ணீர் அவனின் செவிமடலை நனைத்தது. இறுதி வரை தன் காதலை தன்னவள் உணராமலே இருந்து விடுவாளோ என்ற பயம் ஆதர்ஷின் மனதினை கொஞ்சம் கொஞ்சமாக கவ்வியது.
உன்மீது எனக்கு அப்படியொரு நினைப்பு இதுவரை வந்ததில்லையென அவள் நேரடியாகக் கூறிய பின்னர் அவளிடம் மீண்டும் காதலை உணர்த்த அவன் மனம் இடமளிக்கவில்லை.
“அவள் மேல நான் கொண்ட காதல் ஆத்மார்த்தமானது அப்படிங்கிறப்போ, என் உணர்வுகள் அவளைத்தீண்டி, என் காதலை உயிர்பிக்கும். அதுவரை எவ்வளவு காலமானாலும் அவளுக்காக நான் காத்திருப்பேன்” எனத் தனக்குத்தானே கூறிக்கொண்டவன், இனி எந்தவொரு சூழ்நிலையிலும் தாமாக தன்னுடைய காதலை வெளிப்படுத்தக் கூடாதென்று முடிவெடுத்தான்.
இவ்வளவு காலம் தனிமையில் கழித்த அவனுடைய அறையே அவனுக்கு அந்நியமாகத் தெரிந்தது. எங்கெங்கோ அலைந்து திரியும் மனம் கடைசியில் அவளிடமே வந்து நிற்பதை அவனால் தடுக்க முடியவில்லை.
எங்கும் அவள் பிம்பமே…
இருவரும் காதலில் மூழ்கும் போது நினைவுகள் சுகமானது… ஒருவர் மட்டும் காதலில் தவிக்கும் போது நினைவுகள் வலி நிறைந்தது.
இங்கோ, ஆதர்ஷிற்கு இது சுகமான வலி.
அடுத்து என்ன செய்வதென்ற குழப்பம் அவனுள். சிந்திக்க மறந்தான். தான் யார் என்பதை மறந்தான். எல்லாம் மறந்தான். அவனை மொத்தமாக சிறைபிடித்தாள் மஹிரா. இப்படியே இருந்தால் அவள் முற்றும் முழுமையாக தன்னை களவாடி விடுவாளென்று எண்ணியவன் தனது உடற்பயிற்சி கூடத்திற்குள் புகுந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தரையில் ஒற்றை கை ஊன்றி புஷ் அப் செய்தவன், ட்ரெட் மில்லில் அதி வேகத்தில் ஓடத் துவங்கினான். அவனின் ஓட்டம் எவ்வளவு நேரம் நீடித்ததோ, உடலில் வியர்வை ஊற்றென பெருகி ஓடியது. இதயத்தின் ஓட்டம் அதிகரிப்பதை உணர்ந்த பின்னரே அதிலிருந்து இறங்கினான். சில வினாடி கூட நிற்காது குத்து பையிடம் சென்றவன் தன் மொத்த மனத்தாங்கலையும் அதனிடம் காண்பித்தான். குத்துப்பை இரண்டாக கிழிந்த பின்னரே அடங்கினான். எதன் மீது இந்த ஆவேசமென்று அவனுக்கேத் தெரியவில்லை. ஆனால், அவ்வறையிலிருந்து வெளியே வந்தபோது அவனின் மனம் சமன்பட்டிருந்தது. தன் மூளை தெளிவாக இருப்பதை உணர்ந்தான்.
மணியை பார்க்க, இரவு பத்து எனக் காட்டியது சுவர் கோழி. மெதுவாக குளித்து முடித்து கீழே வந்தவன் இன்னும் உறங்காது தனக்காக உணவு மேசையில் அமர்ந்திருக்கும் அன்னையிடம் மன்னிப்பு வேண்டி, பால் மட்டும் போதுமென்றான்.
ஆதர்ஷ் பாலினை முழுவதும் அருந்தும் வரை பொறுமை காத்த ஜானகி மாலை அவுட் ஹவுஸில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி, “உனக்கு மஹியை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா கண்ணா?” எனக் கேட்டிருந்தார்.
இதழோரத்தில் சிறு முறுவல் பூத்தவன்… “என் விருப்பம் தெரிஞ்சு ஒன்னும் ஆகப்போறதில்லைம்மா. நான் சம்மதம் சொன்னாலும் இந்த கல்யாணம் நடக்கப் போறதில்லை. சோ, லீவ் இட் ம்மா” என்றவன் தளர்ந்த நடையுடன் தன் அறைக்குச் சென்றான்.
ஆதர்ஷ் பேசிச்சென்ற வார்த்தைகள் சுத்தமாக புரியவில்லையென ஜானகியின் குழம்பிய முகத்தோற்றமே காட்டியது.
சரி… நடப்பது நடக்கட்டும் என நினைத்தவர், இறைவனிடம் பாரத்தை போட்டுவிட்டு படுக்கையில் விழுந்தார்.
தன்னறை பால்கனியில் நின்று அவுட் ஹவுசையே பார்த்திருந்தவன் நிலவு உச்சிக்கு வந்த நேரம் உறங்க ஆயத்தமாகினான். அவன் கண் அயர்ந்த நேரம் ஒரு உருவம் பால்கனி வழியாக ஆதர்ஷின் அறையினுள் குதித்திருந்தது.
இப்போது தான் அனுபவிக்கும் வலியோடு சேர்ந்து… மற்றுமொரு பெரும் வலியை ஆதர்ஷ் அனுபவிக்க போகிறான். அதற்கு காரணமாகவே, அந்த உருவம் வந்துள்ளது.
அது யாராக இருக்கும்? மனம் கவர்ந்தவள் அளிக்கும் வலி தானே பெரும் வலியாக இருக்கக் கூடும்.