ரவுடி பேபி 7

அத்தியாயம் 7

அமைதியான இரவு நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தை எதிர் நோக்கி மெத்தையில் விழுந்து கிடந்தான் ஆதர்ஷ். விழித்திருக்கின்றானா என்றால் நிச்சயமில்லை… சிறு அசைவிற்கு கூட எழுந்து விடும் அரை உறக்க நிலையிலிருந்தான்.

பால்கனி கம்பிகளை பிடித்து ஏறிய உருவம், அறை வாயிலில் குதித்ததுமே கண் விழித்துவிட்ட ஆதர்ஷ்… கண்களுக்கு மேல் வைத்திருந்த கையை சற்று அகற்றி பார்க்க, இருட்டில் ஒன்றும் தெரியாவிட்டாலும் மெல்லிய தேகமுடைய ஒரு கருப்பு உருவம் தன்னை நோக்கி வருவதை கண்டு கொண்டான்.

உருவத்தின் உயரத்தை வைத்து மஹிராவாக இருக்குமோவென ஆதர்ஷ் கணித்த வேளையில்… மேகக்கூட்டங்களுக்கு இடையில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த நிலவு தன் திரை நீங்கி வெளியில் வந்து ஒளி வீசி கண்ணாடி தடுப்புகளில் பட்டு மங்கலான வெளிச்சத்தை அறை முழுக்க வாரி இறைத்து தான் கணித்தது சரியென அவனுக்கு காட்டிக்கொடுத்தது.

“மேடம் ஏதோ திருட்டு வேலை பார்க்கப் போறாங்க…” அவன் மனம் கூறிய தருணம் மஹி ஆதர்ஷின் அருகில் மெத்தையில் அமர்ந்தாள். 

ஆதர்ஷிற்கு அவளின் நெருக்கம் புதியதல்ல. ஆனால், தான் காதலிப்பதாகக் கூறிய பின்னர் தன்னிடம் சற்று விலகல் காண்பிப்பாளென்று எதிர்பார்த்திருந்தவனுக்கு அவளின் வழமையான செயல் ஆச்சரியம் அளித்தது.

இரவு நேர அருகாமை காதல் கொண்ட அவனுக்குத்தான் உள்ளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. எழுந்து கொள்ளலாமென்று சிந்திக்க, இன்னும் அவள் எதற்கு வந்திருக்கிறாளென்று தெரியவில்லை சற்று பொருவென அவனின் மனம் அடக்கியது.

“வசீகரிக்கும் அவனின் முகத்தை ஆழ்ந்து ரசித்தாள்.” அவனை பார்த்துக்கொண்டிருப்பதே மனதிற்கு அவ்வளவு மகிழ்வினை கொடுத்தது. நெஞ்சமெங்கும் உவகைப் பொங்கியது.

அவனின் அன்பை அனுபவிக்கும் நொடியில் தானிருந்தாலும்… இக்கணம் அதனை ஏற்க முடியாத தனது நிலையை எண்ணி வருந்தினாள்.

“விஹூ… உன்னை எனக்கு இவ்வளவு தான் பிடிக்கும் அப்படின்னு அளவெல்லாம் இல்லை. உன்னை அப்படி பிடிக்கும்.”

மஹியின் அழுத்தமான வார்த்தைகள் வலித்துக்கொண்டிருந்த ஆதர்ஷின் இதயத்திற்கு இதமாக இருந்தது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆதர்ஷின் சிகைக்குள் கையினை அலைய விட்டவாறு அவனை பார்த்திருந்தவள், நேரமாவதை உணர்ந்து,

“நான் போறேன் விஹூ. இங்கிருந்தா என் லட்சியம் நிறைவேறாது. அதுக்குமேல நமக்கு மேரேஜ் பண்றதுலே குறியாக இருக்காங்க. தடுக்க எனக்கு வேறவழியில்லை. நான் போய்தான் ஆகணும்.”

மஹியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆதர்ஷின் இதயம் சுக்கு நூறாக நொறுங்கிக்கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கு முன் இதமளித்தவளே மரிக்கவும் செய்கிறாள். தன்னை மணக்க கூடாதென்பதற்காக வீட்டை விட்டு வெளியேறுகின்றாள் என்பதில் அவன் காதல் மொத்தமாக வீழ்ந்துவிட்டது.

அவள் சிறிதளவேனும் ஆதர்ஷின் மீதான தன் காதலை வெளிப்படுத்தியிருக்க வேண்டுமோ? விதி யாரை விட்டது.

“நான் போகறேன்…”

தன்னருகிலிருந்து எழுந்தவளின் கரத்தினைப் பற்றி தடுத்தி நிறுத்தினான்.

அவன் விழித்து விட்டானே என்கிற பதட்டம் அவளிடத்தில் துளியுமில்லை.

*****************

ஐந்து வருடங்களுக்கு பிறகு,

பூட்ஸ் தரையில் தேயும் சத்தம் அந்த நீண்ட வராண்டாவில் எதிரொலித்தது. வலது புறம் அமைந்திருந்த பெரிய ஹாலின் இருக்கையில் அமர்ந்திருந்த அனைவரும் தங்களது சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 

அலட்சியமாக அமர்ந்திருந்த அனைவரும் உள்ளே நுழைந்தவளைக் கண்டு மரியாதையுடன்/பயத்துடன் எழுந்து நிற்க, ஒருவரையும் கண்டு கொள்ளாது கடந்து சென்றவள் முன்னிருக்கையில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் கால் மேல் காலிட்டு கம்பீரமாக அமர்ந்தாள். 

அவளது கம்பீரத் தோற்றம் கண்டு அங்கிருந்த ஆண்களே அதிசயத்தனர், ஒரு சிலர் வியந்த பார்வையை ஆச்சரியத்துடன் அவள் மீது வீசினர். ஆனால் அங்கிருந்த ஒருவனது பார்வை மட்டும் அவள் மீது வருத்தத்துடன் விழுந்தது. 

கடந்து (தடம் மாறி) போன அவளது வாழ்க்கையை நினைத்து அவனது இதயம் துடித்தது வலியில்.
 
கருப்பு நிற முரட்டு ஜீன்ஸ் மற்றும் பால் நிறத்தில் முழுக்கை காட்டன் சட்டை அணிந்து தோள் வரை இருந்த முடியினை போனி டெய்லாக போட்டிருந்தவளது முகம் பாறைக்கு நிகராக இறுகி இருந்தது. அவளது உதடுகள் அதை விட அழுத்தமாக மூடியிருந்தது. அதில் மருந்துக்கும் புன்னகை என்ற ஒன்றே சில வருடங்களாக நான் கண்டதில்லை என்ற கூற்று காணப்பட்டது. காலில் கருப்பு நிற பூட்ஸ் அணிந்திருந்தாள். 

இன்றைய அவளது தோற்றத்தை, தன் கரம் பிடித்து அவள் சுற்றித்திரிந்த போது இருந்த தோற்றத்துடன் ஒப்பிட்டு பார்த்தவனது மனம் ஊமையாக அழுதது. அதன் பின்னர் ஒரு நொடியும் கடக்காது அங்கிருந்து வெளியேறினான்.

வெளியேறியவன் விஹான் ஆதர்ஷ் சக்ரவர்த்தி.

என்று மஹி அவர்களது வீட்டைவிட்டு நள்ளிரவில் வெளியேறினாளோ அன்றே ஆதர்ஷும் தாயகம் மறந்து தனது மேற்படிப்பை காரணம் காட்டி அயல் நாட்டிற்கு சென்றுவிட்டான். படித்த எம்.பி.ஏ வை மீண்டும் படித்தான். ஏன் இப்படியெனக் கேட்ட வீட்டினருக்கு அவனின் அமைதியே பதிலாகக் கிடைத்தது.

ஐந்து வருடங்களுக்கு பிறகு இன்று தான் சென்னை வருகின்றான். விமான நிலையத்தில் கால் வைத்ததும், இப்போது மஹி எங்கிருப்பாளென்று தன் நண்பன் வினுவின் மூலம் அறிந்தே இவ்விடத்திற்கு வந்திருந்தான்.

வந்தவன் அவனவளிலிருந்து முற்றிலும் மாறிய மஹியைக் கண்டு, அங்கிருந்து மனவலியோடு சென்றான்.

தான் உள்ளே நுழைந்த கணமே அவனை உணர்ந்து கொண்டவள் அவன் சென்றதை அறிந்தும் தன் நிலை மாறாமல் அசையாதிருந்தாள். 

அப்போது அந்தப் பகுதியின் தாசில்தாரர் வந்து அனைவருக்கும் நடுநாயகமாக அமர்ந்தார், தனக்கு முன்பு பெண் புலியின் மிடுக்குடன் அமர்ந்திருந்தவளை பார்த்து ஒரு நொடி அதிர்ந்து தான் போனார். பின் அவர் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மேம்பாலங்களையும் சீரமைக்கும் மற்றும் பழையதை புதிதாக கட்டுவதற்கான பணிக்காக தாக்கல் செய்திருந்த டெண்டர் தொகையை அறிவிக்க ஆயத்தமானர். அதற்கு வருகை புரிந்த பெரிய பெரிய கட்டிட நிறுவனத்தின் உரிமையாளர்கள் அதில் கவனமாகினர்.

இறுதியில் அந்த டெண்டர் அவள் நிறுவனத்திற்கே ஒப்பந்தம் ஆக, தனக்கு அருகில் நின்று கொண்டிருந்தவனை ஒரு பார்வை பார்த்தவள் அதற்கு மேல் ஒன்றுமில்லை என்பதைப்போல் எழுந்து சென்றாள். அவளின் பார்வையின் பொருளுணர்ந்தவன் ஒப்பந்தத்திற்கான அனைத்து ஃபார்மாலிடிஸ்களையும் செய்யத் தொடங்கினான். 

“இந்தம்மா வக்கீல் வேலைக்கு படிச்சிட்டு எதுக்கு கட்டிட நிறுவனம் நடத்துறாங்க.” புதிதாக இத்துறையில் கால் பதித்திருக்கும் ஒருவன் தனது சந்தேகத்தைக் கேட்க, “இந்தநிறுவனம் அவங்களுடையதில்ல. அந்தப் பெண்ணோட அண்ணனுடையது.”

“SS கன்ஸ்டரக்ஷன் கேள்வி பட்டிருக்கியா? இந்தியாவிலேயே நெம்பர் ஒன் கட்டிட நிறுவனம். அதன் எம்.டி மிஸ்டர். சுதிக்ஷ் சரத். அவருடைய நிறுவனம் வெளிநாடுகளிலும் மிகவும் பிரபலம். அவருடைய தங்கை தான் இந்தப் பொண்ணு. அதுமட்டுமில்லாம அவருக்கு லீகல் அட்வைஸர் கூட இந்த வக்கீல் பொண்ணுதான். தமிழ்நாட்டில் அரசாங்கம் நடத்தும் அனைத்து கட்டிட சம்பந்தப்பட்ட டென்டருக்கும் அக்கம்பெனி சார்பா இந்தம்மா வந்துடும். அதற்கான காரணம் இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால், இந்தப்பொண்ணு நம்ம தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் வேணும்னே போட்டிபோடுறதா பேசிக்கிறாங்க.

இப்போ இரண்டாவது இடத்துல இருந்து 10 ரூபாய் வித்தியாசத்தில் ss கன்ஸ்டரக்ஷனிடம் டெண்டரை இழந்ததே ஒரு நிறுவனம் அது முதலமைச்சருடைய மச்சானுடைய கம்பெனி. அவர் ஒரு டெண்டரில் கலந்துக்கிறார் அப்படின்னா நிச்சயம் அதில் ss கன்ஸ்டரக்ஷனுக்கே வெற்றி” என்றான்.

தனக்குத் தெரிந்த அனைத்தையும் மற்றொருவன் கூறி முடிக்க… கேள்வி கேட்டவன் வாய் பிளந்து அதிசயித்திருந்தான்.

“இந்த ரவுடி பேபி பேரு என்னங்க?”

“இதுக்கே ரவுடி பேபின்னு பேரு வச்சிட்டீயா? வெளிய எங்கயும் உளறிடாத. அந்தப்பொண்ணு பேரு மஹிரா.”

“ஆமா எனக்கொரு சந்தேகம்”, என மீண்டும் கேட்டவனை முறைத்துப் பார்த்த அந்நபர் கேளு என்பதைப்போல் பார்த்தார்.

“இந்த ரவுடி பேபி போட்டி போடுற ஆளு சி.எம் மச்சான் அப்படின்னா, இந்தக் கொட்டேஷன், டெண்டர் அப்படின்னு எதுவும் தேவையில்லையே, நேரடியா அவருக்கே எல்லாம் கிடைக்கிற மாதிரி சி.எம் செய்துடலாமே.”

அவனின் கேள்வியில் அவனை மேலும் கீழும் ஆராய்ச்சியாகப் பார்த்தவர், “அது தான் அரசியல் தந்திரம். தொடர்ந்து எல்லாம் அவங்களுக்கே கிடைத்தால் சி.எம் தான் தலையிட்டு இதில் லாபம் பார்க்கிறார்ன்னு மக்களிடையே ஒரு எண்ணம் பரவும், அப்படி பரவினால் அது சி.எம்’ன் அரசியலுக்கு சிறு கரும்புள்ளியா இருக்கும், அதனால் தான் இதிலெல்லாம் முதலமைச்சர் தலையிடுவதில்லை. தனது மச்சானாவே இருந்தாலும் நம் முதலமைச்சர் நியாயப்படி நடந்து கொள்கிறார்ன்னு நற்பெயர் கிடைக்குதே. அவ்வளவும் அவருக்கு ஓட்டு டா,” என விளக்கமாகக் கூறி இனி எதுவும் கேட்டு விடாதேயென அவனைப்பிடித்து இழுத்துச் சென்று விட்டார்.

வெளியில் வந்தவள் தன் கார் கதவினை திறக்கும் சமயம் தனக்கு அருகில் ஒலித்த குரலில் நிதானமாக அழுத்தமாக திரும்பிப் பார்த்தாள். பார்த்ததும் தனது வலது கையால் இடது கையின் சட்டை பகுதியை மடித்தவள் அந்தக் குரலுக்கு சொந்தக்காரனை ஓங்கி அறைந்திருந்தாள். அவன் கண்களில் பூச்சி பறந்தது. தனது கன்னத்தில் கை வைத்து பயந்து நின்றிருந்தவனது நெஞ்சில் கால் வைத்து தள்ளியவள் திரும்பியும் பாராது காரிலேறி சென்றுவிட்டாள்.

அவளின் கார் சென்று நின்ற இடம் அவளின் நண்பன் சரத்தின் இல்லம். இவர்களிருவரும் நண்பர்களானது ஒரு கோர விபத்தில்.

மஹிரா வீட்டை விட்டு வெளியேறிய அன்று…

அந்த நள்ளிரவு பொழுதில் எங்கு செல்வதென்று தெரியாமல் நகரத்தின் மையத்தில், தார் சாலைகளுக்கு நடுவில் ஓங்கி உயர்ந்திருந்த மின் கம்பத்தின் அடியில் அமர்ந்திருந்த வேளையில் அக்கம்பத்தின் மற்றொரு புறம் பலத்த சத்தத்துடன் மோதி நின்றது ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம்.

இடித்த வேகத்தில் கம்பம் ஆட்டம் காண பத்தடி தள்ளி புல் தரையில் விழுந்தாள் மஹி.

மெல்ல எழுந்து கைகளை தட்டிக்கொண்டு கார் அருகே பார்க்க… ஸ்டியரிங்கில் தலை கவிழ்ந்து, தலையில் பலத்த அடியுடன் சரத் ரத்த வெள்ளத்தில் மிதந்தான்.

ரத்தத்தைப் பார்த்ததும் மற்ற பெண்களாக இருந்திருந்தால், உடலில் சிறு நடுக்கமாவது ஏற்பட்டிருக்கும். ஆனால், மஹிராவுக்கு அப்படி எதுவும் தோன்றவில்லை.

சரத் கிடந்த ஓட்டுநர் இருக்கையிலிருந்து மெல்ல பக்கத்து இருக்கைக்கு அவனை மாற்றியவள், காரை அதிவேகத்துடன் செலுத்தி சரத்தை மருத்துவமனையில் அனுமதித்தாள். 

அந்நிலையிலும் தான் எடுத்து வந்திருந்த பையினை கையோடு கொண்டு போனாள். அப்பையில் தானே அவளின் முக்கிய கோப்புகள் அடங்கியிருக்கின்றன. அவை இருந்தால்தானே, அவளால் மேற்கொண்டு படிக்க இயலும்.

சரத்தைப் பற்றி எதுவும் தெரியாததால் அவனின் உறவினர்களுக்கு தெரியப்படுத்த முடியாத நிலை. ஆகையால், தங்கையென்ற முறையில் மருத்துவமனை படிவங்களில் கையொப்பமிட்டு சிகிச்சை செய்ய வழி செய்தவள், சரத் கண் விழிக்கும் வரை அவனுடனிருந்தாள்.

மஹி மருந்து வாங்க பார்மஸி சென்ற சமயம் சரத் கண்விழிக்க, நானெப்படி இங்கெனக் கேட்டவனிடம், “உங்க தங்கை தான் சார் சேர்த்தாங்க” என்று செவிலியர் கூறவும் மஹி அறையின் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

தொழில் எதிரி ஒருவன் தன்னை கொல்ல முயற்சி செய்து, ஆள் வைத்து தன் காரினை லாரியின் மூலம் இடிக்க, அது மின்கம்பத்தில் முட்டி நின்றது. அப்போது ஒரு பெண் தன்னை தொட்டு வேறொரு இருக்கைக்கு மாற்றும்வரை சுய நினைவுடனிருந்த சரத்திற்கு… மஹியின் முகம் நினைவில்லையென்றாலும்.. தன் கண்களாலே அவளுக்கு நன்றி கூறினான்.

“யூ ஆர் பெர்பிக்ட்லி ஆல் ரைட் மிஸ்டர்…”

“சுதிக்ஷ் சரத்…”

மஹி அவனின் பெயரை தெரிந்து கொள்ளும் விதமாக வாக்கியத்தை இழுக்க, அவன் தன் பெயரை சொல்லியிருந்தான்.

“உங்க ரிலேட்டிவ் நெம்பர் கொடுத்தா அவங்களுக்கு தகவல் கொடுத்திடுவேன்” என்றவளிடம்… “என் மனைவி, இரண்டு வயது மகன்” எனக்கூறி, தன் மனைவியின் அலைபேசி எண்ணைக் கொடுத்தான்.

அடுத்த அரை மணி நேரத்தில் சரத்தின் மனைவி தனது மகனுடன் மருத்துவமனை வந்திருந்தாள்.

“ஷீ இஸ் மை பியூட்டிபுள் வைஃப் ஸ்வேதா” என்று அறிமுகப்படுத்தினான்.

ஸ்வேதா தன் உள்ளார்ந்த நன்றியை மஹியிடம் தெரிவிக்க… அதனை ஏற்றவள், அதிக தயக்கத்துடன்… சிகிச்சைக்காக தான் கட்டிய பணத்தொகையை திரும்பக் கேட்டிருந்தாள்.

என்னவென்று புரியாது பார்த்த ஸ்வேதாவிடம், 

“நான் இப்போதிருக்கும் சூழலுக்கு எனக்கு பணம் ரொம்பவே அவசியம். பணம் கட்டாம சிகிச்சையளிக்க முடியாதே! அதான் என் பணத்தை கட்டிட்டேன். சோ, என் பணத்தை மட்டும் எனக்குத் திருப்பிக் கொடுத்தா போதும்” என்றவளிடம்.. அவளைப் பற்றி விசாரிக்க, சரத்தை அண்ணனென்று கூறியதாலோ என்னவோ தன் வாழ்வில், கடந்த சில மாதங்களாக நடந்த நிகழ்வுகளை கூறினாள், ஒன்றைத் தவிர.

அதன் பிறகு சரத் மற்றும் ஸ்வேதா மஹிராவிற்கு நட்பு கரம் நீட்ட.. முதலில் யோசித்தாலும் பின்னர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

ஒரு அண்ணனாக முன்னின்று மஹிராவிற்கு அனைத்தும் செய்தான். நுழைவுத் தேர்வில் தமிழ் நாட்டிலேயே முதல் மாணவியாக தேர்ச்சிப்பெற்றாள். அவளின் வேண்டுகோளுக்கு இணங்க செய்திகளில் தனது புகைப்படம் வருவதை சரத்தின் பண பலத்தை வைத்து தவிர்த்திருந்தாள். அட்மிஷனில் கூட அண்ணன் என்ற உறவு முறையில் சரத்தே கையொப்பமிட்டான்.

சென்னை சட்டக்கல்லூரியில் படிக்க சொல்லியதற்கு மறுத்து…. கோவை சட்டக் கல்லூரியில் சேர்ந்தாள். 

அங்கேயே இருந்தால் தன் குடும்பத்தாரை பார்க்க ஏங்கும் மனம், ஒரு நாளில்லை ஒரு நாள் வீடு தேடிச் செல்லும் என்பதாலேயே.. சென்னையிலிருந்து கோவைக்கு வந்து சேர்ந்தாள்.

அங்கும் பகுதி நேர வேலை பார்த்து, தன்னுடைய தேவைகளை அவளே பூர்த்தி செய்து கொண்டாள். சரத்தை எதற்கும் தொல்லை செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள். சரத்தும் ஒரு பாதுகாவலனாக மஹியை இந்நாள் வரை பாதுகாக்கின்றான்.

கோவையிலிருந்த நாட்களில் உறவுகளிடம் ஒதுங்கியிருக்க தன் மனதை திடப்படுத்திக் கொண்டாள். 

படிப்பை முடித்த வருடம்… சென்னை திரும்பியவள், ஸ்வேதாவின் பிடிவாதத்தால் அவர்களுடனே வசிக்க ஒப்புக்கொண்டாள். 

நகரத்தின் பிரபலமான, மற்ற வக்கீல்கள் அஞ்சும், வக்கீல் சூரஜிடம் எவ்வித சிபாரி்சுமின்றி இன்டெர்ன்ஷிப் சேர்ந்தவள் அவரிடமே ஜூனியராகவும் பணி புரிந்தாள். ஆறு மாதத்திலேயே அவளது திறமையை கண்டு கொண்ட சூரஜ், அரசியல்வாதி சம்பந்தப்பட்ட ஒரு கொலை கேஸை அவளிடம் கொடுத்து ஹேண்டில் செய்ய சொல்ல… முதல் கேசிலேயே அரசியல்வாதியிடம் மோதி வெற்றி பெற நகரத்தில் மிகவும் பிரபலமானாள். அவள் ஒரு வழக்கை ஏற்கிறாள் என்றால் நிச்சயம் அது வெற்றி தான்.

ஒவ்வொரு முறையும் சரத்தின் இல்லத்திற்குள் மஹிரா நுழையும் போது இவை அனைத்தையும் தன் மனதில் ஒரு முறை ஓட்டி பார்த்திடுவாள்.

அன்றைய இரவிலிருந்து நினைத்துப் பார்ப்பவள்… ஒரு முறை கூட, அன்றைய இரவு ஆதர்ஷின் அறையில் நடந்ததை நினைத்துப் பார்த்ததில்லை. நினைவு வரும் நேரம் முயன்று வேலையில் மூழ்கி விடுவாள்.

பெண் சிங்கம் போல் வீட்டினுள் நுழைந்தவளை, “வாங்க ரவுடி பேபி” என வரவேற்ற ஸ்வேதா கையில் பழச்சாறு அடங்கிய குவளையை கோபத்துடன் நீட்ட, அதனை புரிந்துகொண்ட மஹி,

“அண்ணி என்மேல தப்பு கிடையாது. அவன் தான்” என்று விளக்கம் கொடுக்க முயல்கையில்,

“முதல்ல ஜூஸை குடி” என்று பின்னால் கேட்ட குரலில் மடமடவென குவளையை காலி செய்தாள்.

அதில் நமட்டு சிரிப்பு சிரித்த ஸ்வேதா… “சரி இப்போ சொல்லு. எதுக்கு அவனை அடிச்ச?” என வினவினாள்.

மஹியின் பின்னால் ஒலித்த குரலுக்கான சொந்தக்காரனான சரத்… அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து மஹியை கூர்ந்து நோக்கினான்.

அவனின் பார்வையிலேயே காரணம் தெரிந்துக் கொண்டாரெனக் கண்டு கொண்டவள்,

தன் இரு காதுகளையும் மன்னிப்பு வேண்டுவதைப்போல் பிடித்து.. இனி இவ்வாறு செய்யமாட்டேனென்று உறுதியளித்தாள்.

“நீ செய்ததில் எனக்கு பெருமை தான். நானாக இருந்திருந்தா, நம்மகிட்ட வேலை செய்துகிட்டு எதிராளிக்கு விசுவாசமா இருந்ததுக்கு அவனை கொன்னு புதைத்திருப்பேன்.” சரத் மிகவும் ஜாலியான பேர்வழி… ஆனால் நம்பிக்கை துரோகம் செய்பவர்களை சும்மா விட்டுவிடமாட்டான்.

“ஆனால்… மஹி, நாம் நம் கோபத்தைக் காட்ட இடம் பொருள் எல்லாத்தையும் கருத்தில் வச்சு செயல்படணும்” என்றான்.

சரத்தின் அறிவுரைக்கு சரியென மஹி தலையாட்டினாள். ஆம் தன் வாழ்வில் மஹி கட்டுப்பட்டு தலையாட்டுவது இரு நபருக்குத் தான்… அப்போது ஆதர்ஷ், இப்போது சரத். இருவருமே அவளின் வாழ்வில் உறுதுணையாக இருப்பவர்கள்.

“ஆஹா! ரொம்ப நல்லாயிருக்குங்க உங்க அட்வைஸ். இப்போவே அவனவன் வெளிய இவளை ரவுடி பேபின்னு  சொல்றாங்க, இதுல நீங்க இன்னும் அவளை ஏத்தி விடுங்க” என்ற ஸ்வேதா… “முதல்ல பெண்ணா லட்சணமா ட்ரெஸ் போடு” என்றவளாக அடுக்கலைக்குள் புகுந்தாள்.

“அண்ணி என்மேல ரொம்ப கோபமா இருக்காங்க சார்.” அப்பாவியாக முகம் வைத்துக்கொண்டு பேசியவளை ஆதுரமாக பார்த்த சரத்…

“அவள் உன் மேல வைத்துள்ள பாசம் கோபமாக வெளிப்படுது. கல்லூரி நாளில் அவள் உன்னை விட பயங்கர அராத்து. சோ, யூ டோன்ட் வொர்ரி. ஐ வில் ஹேண்டில் ஹெர்” என்றவன், “இப்போ குச்சி மிட்டாய் வாங்கணுமா”, என மனதில் இன்பமாக சலித்துக்கொண்டான்.

ஆம், ஸ்வேதாவை சமாதானம் செய்ய ஒரு குச்சி மிட்டாய் போதும்.

அந்த ரகசியமறிந்த மஹிராவும் புன்னகையுடன் தனது அறைக்குச் சென்றாள்.

********************

விமான நிலையத்திலிருந்து மஹிராவைக் காணச் சென்றவன், அவள் தன்னை பார்த்ததும்… குறைந்தப்பட்சம் அவளின் முகத்தில் ஆர்வமான பார்வையாவது தோன்றுமென எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தன் ஏமாற்றத்தை மனதில் புதைத்தவன்… தன்னை திடப்படுத்தி, விழிகள் வழியாக தன்னவளை இதயத்தில் முழுவதுமாக நிரப்பிக்கொண்டு அங்கிருந்து வெளியேறியிருந்தான்.

ஆதர்ஷை விமான நிலையத்திற்கு அழைக்கச் சென்ற நவீன் மட்டும் தனித்து வருவதைக் கண்ட நாதன்…

“என்னடா வந்திறங்கினதும் அந்த ரவுடியை பார்க்கப் போயிட்டானா?” என்று தனது மூத்த பேரனிடம் கோபமாக வினவினார்.

“நீங்கதான் அவளை ரவுடின்னு சொல்றீங்க. ஆனால், மத்தவங்க வாதாடுவதில் புலின்னு அவளுக்கு பயப்படுறாங்க” என நவீன் கூறும் போதே,

“புலிக்கு பிறந்தது பூனையாகுமா?” என்றபடி உள் நுழைந்தான் ஆதர்ஷ்…

ஐந்து வருடங்களுக்குப்பிறகு தனது ஆசை பேரனை பார்ப்பதால், சற்று முன் துடங்கிய பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தவராய், ஆதர்ஷை நெருங்கிய நாதன் அணைத்து விடுவித்தார்.

அதன் பின்னர் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் அவனின் நலம் விசாரித்து, தங்களது பாசத்தினை வெளிப்படுத்தினர்.

ஆதியும், நித்திலாவும் நன்கு வளர்ந்துவிட்டிருந்தனர். தினமும் வீடியோ சேட் செய்பவர்கள் தான் ஆனால் நேரில் பார்க்கும் போது அதிக வித்தியாசங்கள் தெரிந்தன. தனது அண்ணனின் பிள்ளைகளை அணைத்து நெற்றியில் இதழ் பதித்தவன், அவர்களுக்காக வாங்கி வந்த விளையாட்டுப் பொருட்களை அவர்களிடம் அளித்தான்.

“நீண்ட நேர பயணம். ஜெட்லாக் இருக்கும். நீ ஓய்வெடு” என கோமளம் உரைக்க,

“இந்த ஜூஸ் குடிச்சிட்டு போ கண்ணா” என்றபடி ஆதர்ஷின் முன் திரவம் அடங்கிய கண்ணாடி தம்ளரை நீட்டினார் ஜானகி.

தன் அன்னையின் கையால் செய்யப்பட்ட பழச்சாற்றினை நீண்ட வருடங்களுக்குப் பிறகு குடிப்பதால் ரசித்து ருசித்து அருந்தினான்.

ஆதர்ஷின் அறை எப்போதும் போல் படு சுத்தமாக அவனுக்குப் பிடித்த விதமாக இன்றும் காணப்பட்டது.

ஆதர்ஷின் பின்னோடு அவனின் உடைமைகளை வைக்க வந்த நவீன்…

“என்னடா, எப்படியிருக்காள் உன் ஆள்” என்றான் உதட்டில் ஒளிந்த சிரிப்புடன்.

“ஏன், உனக்குத் தெரியாத?”

ஆதர்ஷ் திருப்பிக்கேட்டதில், சரண்டர் எனும் விதமாக கை உயர்த்திய நவீன், “நீ இங்க வராம அங்கயே இருந்துடுவியோன்னு பயந்துட்டேன்” எனக்கூறி தன்னை அணைத்துக்கொண்ட தன் அண்ணனை இறுக்கி அணைத்த ஆதர்ஷ்,

“அதுதான், அவள் கனவு படி, படித்து பெரிய லாயரும் ஆகிட்டாளே… இனியும் நான் அங்க உட்கார்ந்திருந்தா, சாமியாரா போக வேண்டியதுதான். தூங்கி எழுந்ததும் அந்த சண்டிராணியை அடக்க வழி யோசிக்கணும்” எனக்கூறி சத்தமாக நகைத்தான்.

தன் தம்பியின் நகைப்பில் இணைந்துகொண்ட நவீன்… “யூ டேக் ரெஸ்ட்” எனக்கூறி வெளியேற,

“மஹிக்கு எதுவும் தெரியாதில்லையா நவீன்?” எனக் கேட்டான் ஆதர்ஷ்.

இமை மூடி ஆம் என்றவன், ஒருவரின் மொபைல் எண்ணை அளித்துவிட்டுச் சென்றான்.

மாலை வினுவின் ஹோட்டலிற்கு தனது நண்பர்களைக் காணச்சென்றான் ஆதர்ஷ்.
அங்கு, தனது முக்கிய கிளைன்ட் ஒருவர் அளிக்கும் விருந்துக்கு மஹியும் வந்திருந்தாள்.

இரு துருவமும் முட்டிக்கொள்ளுமா அல்லது ஒன்று சேருமா?

error: Content is protected !!
Scroll to Top