ரவுடி பேபி 8

அத்தியாயம் 8 :

“ரவுடி…”

பள்ளி முடிந்து ஓடி வந்த, சரத் ஸ்வேதாவின் எட்டு வயது மகன் ஆருத்ரனை பாசத்தோடு அணைத்துக்கொண்டாள் மஹி.

“எத்தனை தடவை சொல்றது அவளை அத்தைன்னு கூப்பிட்டு பழகு.” ஸ்வேதா ஆருத்ரனின் முதுகில் மெல்லமாக அடியொன்றை வைத்தாள்.

“அய்யோ அண்ணி இப்போ எதுக்கு அவனை அடிக்கிறீங்க…” மஹி சின்னவனுக்கு பரிந்து பேச,

“எல்லாம் நீ கொடுக்குற இடம் தான்”, ஸ்வேதா செல்லமாக முறைத்துக்கொண்டு ஆருத்ரனுக்கு உடை மாற்ற அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

“என்னம்மா எங்க செல்ல கிளம்பிட்டு இங்கவே உட்கார்ந்திருக்க?” தனக்கு அருகிலமர்ந்த சரத்தின் கேள்வியில் நிமிர்ந்து அமர்ந்தவள்,

“போகணுமா யோசிச்சிட்டு இருக்கேன் சார்” என்றாள்.

“ஏன்?”

“நான் இந்த மாதிரி இரவு நேர பார்ட்டிக்கெல்லாம் போறது பிடிக்காது.”

“யாருக்கு???”

———————

“ஒவ்வொரு முறையும் உன் தொழில் சம்மந்தமா இரவு நேரங்களில் இது போல பார்டிக்கு செல்ல நேரும்போது நீ தயங்குவதும், நான் ஏன் கேட்பதும், நீ சொல்லும் பதிலும் இன்றுவரை மாறவேயில்லை.

அந்த யார்… யாருன்னு மட்டும் எனக்கு இன்னும் தெரியல. எனக்கு தெரியாத பக்கங்களும் உன் வாழ்க்கையில் இருக்குன்னு நினைக்கிறேன். உன் பெயருக்கு பின்னால் வரும் பெயர் நிச்சயம் உன் தந்தையுடையதல்ல என்று மட்டும் நல்லாத் தெரியும்.”

சரத் உள்ளொன்று வைத்து பேசவும்…

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சார்” என்றவள், “நான் கிளம்புறேன்” எனக் கூறி எழுந்தாள்.

“லேட்டானால் கால் பண்ணு… பார்த்து போயிட்டு வா.” வழியனுப்பி வைத்தவன், இன்று காலை வந்த புது எண்ணிற்கு அழைப்பு விடுத்து சில நிமிடங்கள் பேசிவிட்டு தனது மகன் மனைவியை தேடிச்சென்றான்.

“டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு

யார்ரா நீ
அடங்கனும்யா
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா….”

ஆதர்ஷின் மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்த ஆதி…. மொபைல் ஒலிக்கவும் வேகமாக ஓடி வந்து ஆதர்ஷிடம் கொடுத்தான்.

குளித்து முடித்து கண்ணாடி முன் நின்று, ட்ரையரால் முடியை காய வைத்துக் கொண்டிருந்தவன், அலைபேசியை காதிலேற்றி,

“ஹலோ” என விளிக்க… எதிர்முனையிலிருந்து சரமாரியாக திட்டுக்கள் விழுந்தன.

“தொரைக்கு இப்போதான் இங்க வரனும்ன்னு தோணுச்சோ…. நாங்கெல்லாம் உயிரோடு தானிருக்கோம், இன்னைக்கு மட்டும் எதுக்கு சார் போன் அட்டெண்ட் பண்ணீங்க, வழக்கம் போல் கட் பண்ணியிருக்கலாமே… இந்த ஐந்து வருஷத்துல எத்தனை கால்ஸ், மெசேஜ், மெயில் ஒண்ணுக்கும் ரிப்ளை இல்லை. சார்க்கு எங்களை விட அவங்க மட்டும் தான் முக்கியம். அவங்களுக்காக எங்களையும் துறந்து வனவாசம் போயாச்சு. மூச்சு விடாமல் பொறிந்து தள்ளிய வினு, இப்போவாது எப்படி? வீட்டுக்கு வந்தா முகத்தை காட்டுவீங்களா இல்லை திரும்ப லண்டனுக்கு பார்சலாகிடுவீங்களா?” என நக்கலாகக் கேட்டான் வினு.

அவனின் வார்த்தைகள் கேலித்தனமாக இருந்தாலும் இத்தனை வருடங்கள் நண்பனை பிரிந்திருந்த ஏக்கம் அப்பட்டமாக அதில் தெரிந்தது.

லண்டனிலிருந்த ஐந்து வருடத்தில் ஆதர்ஷ்…  நவீன் மற்றும் அவனின் பிள்ளைகளைத் தவிர வேறு யாருடனும் பேசியதில்லையே. மஹியின் முடிவிற்கு தன் வீட்டு உறுப்பினர்களே முக்கிய காரணமென கருதியவன் அவர்களாக அழைத்தாலும் அழைப்பினை ஏற்பதில்லை.

லண்டனிற்கு சென்று ஓரிரு மாதங்கள் வினு மற்றும் கிஷோருடன் பேசிக்கொண்டு தான் இருந்தான். இருவரும் திரும்பி வர சொல்லி வற்புறுத்தவும் அவர்களுடன் பேசுவதையும் தவிர்த்திருந்தான். வினுவிற்கு அதனால் விளைந்த கோபமே இது.

” ஏன்டா, இந்த கத்து கத்துற. போனை வை.. ஐ வில் பீ தேர் இன் போர்ட்டி மினிட்ஸ்.” வினுவிற்கு பதிலளித்தவன் சொல்லியது போலவே சொல்லிய நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான்.

ஆடி காரிலிருந்து ஆடாது அசையாது அம்சமாய் கீழிறங்கிய ஆதர்ஷ், தான் அணிந்திருந்த வெண்மை நிற… வீ நெக் டீ சர்ட்டில், தனது நெஞ்சு பகுதியில் மாட்டி வைத்திருந்த ரெபான் கூலர்சை ஸ்டைலாக எடுத்து கண்களுக்கு அணிவித்து, ஹோட்டலினுள் தன் நீண்ட கால்களை எட்டி வைத்து கம்பீரமாக நடந்தான்.

தனது வாடிக்கையாளரின் விருந்திற்காக வினுவின் ஹோட்டலிற்கு வந்த மஹி, தனது காரினுள்ளே அமர்ந்தவாறு உள்ளே போலாமா வேண்டாமாவென தன் மனதோடு பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க, கிரீச்சென்ற சத்தத்துடன் தனது காருக்கு அருகே வந்து நின்ற காரின் சத்தத்தில் யாரென்று பார்க்க, ஆண்மையின் இலக்கணமாக அதிலிருந்து இறங்கிய தன்னவனைக் கண்டு இமைக்கவும் மறந்து ரசித்தாள்.

காலையில் தாசில்தார் அலுவலகத்தில் அவனைக் கண்டதுமே, அவன் பக்கம் தாவும் மனதை அடக்க படாதபாடுப்பட்டாள். அவனின் சோர்வானத் தோற்றமும், கலைந்த கேசமும் அப்போது தான் நீண்ட பயணத்தை முடித்திருக்கின்றானென பறைசாற்ற, இங்கு வந்ததும் தன்னவன் தன்னை காண தான் ஓடோடி வந்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டவளின் காதல் மனம் சிறகடித்தாலும், அன்றைய இரவின் நிகழ்வும், அதற்கடுத்து அவன் காணாமல் போனதும் நினைவு வந்து அவளின் மனதை இரும்பாக்கின.

இப்போதும் அந்நினைவுகளே அவளை காதலில் மூழ்கவிடாமல், கட்டுப்படுத்தின.

எப்படியும் உள்ளே சென்றால், ஒருவரையொருவர் பார்க்க நேரிடும்… வீண் மோதல் எதற்கு வீட்டிற்கு சென்றுவிடலாமா? என ஒரு மனம் சிந்திக்க,

மற்றொரு மனமோ… ‘அவனிருந்தா என்ன உன் வேலையை நீ பார்க்க போற… இப்போ ஓடி ஒளியுற மாதிரி தினமும் செய்வியா?’ என இடித்துரைத்ததில், வழக்கமான தன் வேக நடையுடன் பார்ட்டி நடைபெறும் ஆறாம் தளத்திற்கு செல்ல மின்தூக்கியினுள் நுழைந்தாள்.

தளத்தின் எண்ணுக்குறிய பொத்தானை அழுத்திவிட்டு, மார்பிற்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு, தன் கால்களை சிறிது அகட்டி நின்றாள். மின்தூக்கி செயல்பட துவங்கிய நொடி, கதவிற்கு குறுக்கே நீண்ட கால் அழுத்தமாக பதிந்து அதன் இயக்கத்தை நிறுத்தியது.

லண்டனிலிருக்கும் போதே தன்னவளின் ஒவ்வொரு செய்கைகளையும் அணு அணுவாக கவனித்தவன் இப்போதா கவனிக்காமலிருப்பான்.

நவீன் கொடுத்துச் சென்ற எண்ணிற்கு அழைத்தவன், இன்று மஹிராவின் வேலைகளை தெரிந்துக் கொண்டே இங்கு வந்தான். மஹிரா கிளம்பி விட்டாளென்ற தகவல் அந்நபரிடமிருந்து வந்த பிறகே ஆதர்ஷ் கிளம்பினான்.

மஹியின் காரென்று தெரிந்தேதான் தனது காரை ஒட்டி நிறுத்தினான். மஹி சாதாரண மனநிலையில் இருந்திருந்தால் அந்நேரம் சண்டிராணியாய் மாறியிருப்பாள். அவள் ஏதோ குழப்பத்திலிருகின்றாள் என யூகித்தவன், மஹி தன்னை சைட் அடிப்பதை உள்ளுக்குள் ரசித்தவாறு சென்று விட்டான்.

லானில் மறைவாக இருந்தவன், மஹி மின்தூக்கியில் நுழையும் சமயம் சரியாக வந்தான்.

அங்கு மஹி சற்றும் ஆதர்ஷினை எதிர்ப்பார்க்கவில்லை. லேசாக அதிர்ந்த மனதை சமன்படுத்தி திமிராக நின்றவள் சிறிதும் அவனை தெரிந்ததை போல் காட்டிக்கொள்ளவில்லை.

‘ரவுடி பயங்கர கெத்தா தான் இருக்காள்’ என்றவன்…. சிறிதும் தயக்கமின்றி, பக்கவாட்டில் சாய்ந்து கால் மேல் காலிட்டு தோரணையாக நின்று தனது கூலர்சினை கழட்டி தன்னவளை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் வருடினான்.

அவனின் பார்வை அவளை இம்சித்த போதும்… அவள் தன் தோற்றத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

ஆதர்ஷ் உள் நுழைவதை மானிட்டரில் பார்த்த வினு… அவன் இவ்வளவு நேரமாகியும் உள்ளே வரமாலிருக்க மீண்டும் கணினித் திரையை பார்வையிட, அதில் தெரிந்த காட்சியைக் கண்டு ஆதர்ஷிற்கு அழைப்பு விடுத்தான்.

முதல் ரிங்கிலேயே எடுத்தவன்.. “சொல்லு மச்சி” என்க,

“நீ உண்மையில் என்னைத்தான் பார்க்க வந்தாயா?” எனக் கேட்டான் வினு.

“ஐ ஸ்வேர் டா மச்சான்… உண்மையில் உன்னை பார்க்கத்தான், உனக்காக, உனக்காக மட்டும் தான் இங்க வந்தேன்.”

ஆதர்ஷ் பேசியது என்னவோ மொபைலில் தான்… ஆனால், அவன் பார்வை விழுங்கி விடுவதைப்போல் நிலைத்திருந்தது அவனவளின் மீது.

திரையில் தெரிந்த அவனின் காதல் பார்வையை கண்டு கொண்ட வினு சிரித்துக்கொண்டே,

“ஒரு ரெண்டு நிமிஷம் எனக்கு அப்பாயின்ட்மெண்ட் குடுங்க சார்” எனக்கூறி இணைப்பைத் துண்டித்தான். கணினியில் கேமராவின் மற்றொரு பக்கத்தை ஆன் செய்துவிட்டு தனது முன்னிருந்த கோப்புகளை ஆராய்ந்தான்.

மின்தூக்கியின் இறுதியில் சாய்ந்து நின்றிருந்தவன் தனக்கு முன் நின்றுந்தவளை மனதில் திட்டிக் கொண்டிருந்தான்.

‘எப்போ பாரு பசங்க மாதிரியே ட்ரெஸ் பண்ண வேண்டியது… பார்ட்டிக்கு போகும் போது கூட, இந்த பிளாக் ஜீன்ஸ், ஒயிட் சர்ட்டை மாத்தி வேற டிரஸ் போடக்கூடாதா’ என்றவனின் மனதில் நேரங்காலமில்லாமல் நாதனின் குரல் ஒலித்தது.

“அந்த குதிரைவால் மட்டுமில்லைன்னா பொண்ணுன்னு எவனும் ஒத்துக்கமாட்டான்.”

அவ்வரிகளில்… நிச்சயம் தாத்தா சொல்வது உண்மை தான் எனக் கூறிக் கொண்டவன் தன்னையும் அறியாமல் சத்தமாக சிரித்தான்.

ஆதர்ஷின் சிரிப்பில் அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தவள்… சிரிப்பொலி அடங்கியதும் முகத்தை வெட்டியவாறு திருப்பிக்கொண்டாள்.

மஹியின் சிலுப்பளில் அவளின் குதிரைவால் அசைந்தாட அப்போது தான் ஒன்றை கவனித்தான்… எப்போதும் தோளை உரசியவாறு மட்டுமிருக்கும் அவளின் குதிரைவால் இடைத்தாண்டி நீண்டு காணப்பட்டது.

அதன் மூலம் அவனறிந்த செய்தி துள்ளி குதிக்கத் தூண்டியது. அவனவள் நீண்ட கூந்தலை வளர்த்திருப்பது அவனுக்காக அல்லவா, மகிழ்ச்சி பொங்கத்தானே செய்யும்.

அதன் பிறகு அவளை ஆழமாக உற்று பார்த்தவனுக்கு அவளின் நெற்றியில் வீற்றிருந்த சிறு புள்ளி பொட்டும் ஆதர்ஷின் நெஞ்சத்தை குளிர்வித்தது.

ஒரு நாள் கல்லூரிக்கு இருவரும் கிளம்பிக்கொண்டிருக்கும் போது… மஹியின் அறைக்குச் சென்றவன், அவளின் குட்டை முடி அசைந்தாடிய போனி டெய்லை ஆட்டி,

“பெண்களுக்கு நீண்ட கூந்தல் தான் அழகு மஹி. உன் உயரத்துக்கு அது எக்ஸ்ட்ரா அழகா இருக்கும், உன் வட்ட முகத்துக்கு நெற்றியில் பொட்டு வைத்தால் இன்னும் நல்லாயிருக்கும்” என்றும் அவன் கூறியது அவளுக்கு வேடிக்கையாகவே அப்போது தெரிந்தது.

ஐந்து வருடங்களாக அவன் எங்கென்றே தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தவள் அவளுக்கே தெரியாமல் ஆதர்ஷிற்கு பிடித்த மாதிரி ஒரு சில மாற்றங்களை தனக்குள் கொண்டு வந்திருந்தாள்.

எங்கு மஹிக்கு தன் மீது காதலே இல்லையென நினைத்திருந்தவனுக்கு அவளின் இத்தகைய சின்ன செயல்கள் பெரும் நம்பிக்கையை அளித்தது.

நீண்ட பிரிவு அவளினுள்ளும் காதலை விதைத்திருக்கிறதென்பதை உணர்ந்தவன், உணர்ச்சி மிகுதியில் என்ன செய்கிறோமென்று அறியாது மஹியை இழுத்து அவள் உணருமுன் செவ்விதழ்களை சிறைபிடித்திருந்தான்.

ஆதர்ஷின் முத்தத்தை உணர்ந்து, அவனை தடுக்க அவள் செய்த முயற்சிகளையெல்லாம் தன் அணைப்பால் அடக்கினான்.

ஆதர்ஷ் முத்த யுத்தத்தில் தன்னவளை வீழ்த்த நினைக்க… அவளோ புள்ளி மானாய் கரைந்திடாமல், புலியாய் விழி விரித்தாள்.

அவளின் இதழ் சுவை மேலும் மேலும் அவனை ருசித்திட செய்ய, மஹியையும் அவளின் இதழ்களையும் விடுவிக்கும் எண்ணம் சிறிதுமின்றி முத்த வேட்கையில் ஈடுபட்டிருந்தவன், மின்தூக்கி நின்றதில் தன்னுணர்வு அடைந்து தன்னவளை தன்னிடமிருந்து மெல்ல பிரித்தெடுத்து…

“நீ பயங்கர காரம் டி… நெக்ஸ்ட் டைம் ஐ வான்ட் ஸ்வீட்” என்றவனாக வெளியேறினான்.

மஹி கோபத்தில், செல்லும் அவனை கொலைவெறியுடன் பார்த்திருந்தாள்.

வெளியே மின்தூக்கிக்காக காத்திருந்த கிஷோர்… கதவு திறந்ததும் தெரிந்த காட்சியில் அரண்டு சிலையாகினான்.

தன் தோளில் பதிந்த ஆதர்ஷின் கரத்தால் உணர்வு பெற்றவன்…

“மச்சான் உண்மையிலே உங்களுக்குள்ள எந்த சண்டையும் இல்லைல?” என்க,

“எங்களுக்குள்ளா? இங்க நீ நான் மட்டும் தானே இருக்கோம், நீ வேற யாரை கேட்கிற?” என எதிர்கேள்வி கேட்டவனை முறைத்தவன்,

“நான் ஒன்னும் பார்க்கல அப்படித்தானே?” என்று வினவ,

“நீ தான்டா என் நண்பன்” என கிஷோரை அணைத்து விடுவித்த ஆதர்ஷ், வினுவின் அறை நோக்கி அவனைத் தள்ளிக்கொண்டு சென்றான்.

******************

நாதன் தோட்டத்தில் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். கோமளம் என்னவாக இருக்குமென்று கணித்திருந்தாலும் அமைதியாகவே அவருடன் அமர்ந்திருந்தார்.

இருவரின் நிலையையும் நீண்ட நேரம் கவனித்த விஷ்ணு…

“இந்த நேரம் குளிர் காற்றில் இங்க ஏன் உட்கார்ந்திருக்கீங்க, உள்ள போலாமே” என்றவாறு அவர்களிடம் வந்தார்.

“விஷ்ணு நான் கண்ணை மூடுறதுக்குள்ள, ஆதர்ஷ் மணக்கோலத்தை கண்ணால பார்த்திடனும்.” தன் மனதில் உள்ளதை தான் சொல்லாமலே சொல்லும் மனைவியின் மீது தள்ளாடும் வயதிலும் நாதனிற்கு காதல் ஊற்றெடுத்தது.

சிறிது யோசித்த விஷ்ணு…

“அப்போ, நான் மஹியை நேர்ல பார்த்து பேசிடுறேன்” என்க, நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்த நாதன்,

“என் பேரனை ரெண்டு முறை வேண்டாம்னு மறுத்தவளிடம் திரும்ப யாசகம் கேட்கணுமா? அதுமட்டுமில்லாம, நாம யாரும் வேண்டாம்னு உதறி தள்ளியவளை நான் மறந்து பல வருஷமாச்சு” என சினந்தார்.

வெளியில் சினந்தாலும் அவரின் மனம் வேறு கணக்குப் போட்டது.

“நீங்கள் வேணும்னா மஹியை மறந்திருக்கலாம் அப்பா. ஆதர்ஷ்?” என இடைவெளி விட்டு, “ஆதர்ஷ் மனசில் இப்பவும் மஹி தானிருக்காள். அதுக்கு அடையாளம் அவன் வந்ததும் அவளைத் தேடிப்போய் பார்த்தது” என்றார்.

விஷ்ணு சொல்லியதும் அவரை முறைத்த நாதன்…

“அவள் மீது அவனுக்கு இருக்கும் நட்புதான் காரணம்” என்றார்.

“சரிங்கப்பா!” விஷ்ணு தன் தந்தையின் கூற்றை ஆமோதித்தாலும், தன் மகனின் காதல் என்னவாகுமோ என்று கவலைப்பட்டார்.

“அப்போ உங்கள் தொழில்முறை நண்பர் சங்கரனின் பேத்தியை பார்க்கலாமாப்பா?” என்ற விஷ்ணுவை.. இந்த வயதிலும் தன் பேச்சிற்கு மதிப்பளிக்கும் மகனை பெருமை பொங்கப் பார்த்த நாதன், வேண்டாமென்று தலையசைத்து “பெண்ணெல்லாம் ரெடி” என்றார்.

யாரெனக் கோமளம் வினவ,

தெரிந்துகொண்டே கேட்பவளை அர்த்தத்துடன் பார்த்தவர்…

“நம்ம வைஷ்ணவி தான்” என்றார்.

“அப்பா நிச்சயம் இதற்கு என்னால் ஒப்புக்கொள்ள முடியாது” என்ற விஷ்ணுவிடம் எந்த விளக்கமும் கேட்காமல், “நான் சொல்லியது தான் முடிவு. இது தான் நடக்கணும்” என கட்டளையாக மொழிந்தவர் அவ்வளவுதான் என்பதை போல் சென்று விட்டார்.

கணவனோடு கோமளமும் சென்றுவிட, விஷ்ணு தலையை பிடித்துக்கொண்டார்.

இங்கு அவர் முன் இரண்டு காதல் அல்லவா மரிக்கும் நிலையிலிருக்கிறது. காதல் மணம் செய்து கொண்டவருக்கு தன் வீட்டு பிள்ளைகளின் காதலை சேர்த்து வைக்க முடியவில்லையே என்கிற வருத்தம் மேலோங்கியது.

தன் வீட்டில் வைஷ்ணவி இருக்கும்போதே அவர் வேறு வீட்டு பெண்ணை பார்க்கலாமென்று கூறியதற்கு காரணம்… தன் தங்கை மகளின் காதல் தெரிந்ததாலே. ஆம் வைஷ்ணவி ஒரு பையனை மிகவும் நேசிக்கின்றாள். இது மூத்த தம்பதியர் இருவரைத் தவிர வீட்டிலுள்ள அனைவருக்கும் தெரியும்.

நாதன் மற்றும் கோமளத்திற்கு தெரியாதென்று அவர்களாகவே நினைத்துக்கொண்டனரோ?!

வைஷ்ணவி காதலிக்கும் பையன் மிகவும் நல்ல குணம் கொண்டவன் என்பதால் ஆதர்ஷின் திருமணம் முடிந்ததும் இவளின் காதலைப்பற்றி நாதனிடம் பேசி மணம் முடிக்கலாமென்று இருக்கையில் நாதனின் முடிவு விஷ்ணுவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

“இது அவர்களின் காதல். அவர்களின் காதலுக்காக, அவர்கள் தான் போராட வேண்டும். நாம் இதில் தலையிடுவதற்கு ஒன்றுமில்லை, தன் தந்தையை எதிர்த்து தன்னால் எதுவும் பேச முடியாது.” இந்த வயதிலும் தந்தை சொல்லே மந்திரம் எனும் விதமாக முடிவெடுத்தார் விஷ்ணு.

“எவ்வளவு தைரியம் அவனுக்கு. என்கிட்டவே அப்படி நடந்துக்கிறான். என்னைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கான்… ஐந்து வருஷத்தில் என்னைப்பற்றி, நானெப்படின்னு மறந்துட்டானா?”

“யாரு? எப்படி?”

“யாரைத் திட்டுற?”

ஆதர்ஷ் செய்த செயலில், பார்ட்டிக்கு செல்லாமலே வீடு வந்து சேர்ந்தவள், வரும் வழியெல்லாம் ஆதர்ஷை திட்டியது பத்தாதென வீட்டிற்குள் நுழைந்தும் யாரையும் கருத்தில் கொள்ளாது அவனை அவலாக உருட்டித் தள்ளினாள்.

அடுத்தடுத்து கேட்ட இரண்டு குரலில் அமைதியாகிவள்….

“ம்ம்ம்ம்… என்னை பிடிச்ச வன குரங்கு.” பதிலளித்தவள் வேகமாக அறைக்குள் சென்று மறைந்தாள்.

மஹியின் செயலை வித்தியாசமாக பார்த்த ஸ்வேதா… “இவள் நம்ம கிட்ட ஏதோ மறைக்கிறாள்” என்க,

“நீ என்கிட்ட மறைக்கிற மாதிரியா கேண்டி” எனக் கேட்டிருந்தான் சரத்.

“நா…நானா!” ஸ்வேதாவின் நா தடுமாறியது.

“எஸ்… யூ… யூ… நீயே தான்.”

“அப்படிலாம் எதுவுமில்லை. உங்ககிட்ட மறைக்கிற அளவுக்கு என்கிட்ட எந்த ரகசியமுமில்லை.”

“அப்படியா?” எனக் கேட்டவன், கீழ் கண்ணால் அவளை பார்த்தவாறே மெல்ல அடி வைத்து தன் மனைவியை நோக்கி முன்னேறினான்.

சரத்தின் ஒவ்வொரு அடிக்கும்… அவள் பின் செல்ல, சோஃபா இடித்து நின்றவள், அவனின் மற்றுமொரு அடிக்கு சோஃபாவிலே சரிந்தாள்.

அவளை சிறைபிடித்தவாறு இரண்டு பக்கமும் கரத்தினை அரணாக சோஃபாவில் வைத்தவன்… தன்னவளை நோக்கி குனிந்தான்.

அவளின் கண்களில் நாணம் தெறிக்க… அவனின் கண்களிலோ குறும்பு எட்டிப்பார்த்தது.

“நான் கிட்ட வரவே இப்படி டெம்ப்ட் ஆகுறியே குச்சி மிட்டாய்.” அவனின் கிண்டலில் நாணம் அறுபட்டவள்… “போடா எப்போ பாரு இதே வேலையாப்போச்சு” என சரத்தை உதறி தள்ளிவிட்டு எழுந்தவள் புன்னகையுடன் ஆவனிடமிருந்து தப்பித்து செல்ல…

“ஓடிட்டியா… சரி விடு, நீ என்ன மறைக்கன்னு சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன் கேண்டி” என்றான்.

சரத்தின் சவாலான குரல் ஸ்வேதாவை பின் துரத்தியது.

**************

கரையை துரத்தும் அலைகளுக்குள் இறங்கி நின்றிருந்த ஆதர்ஷினை பின்னிருந்து அணைத்திருந்தான் வினு.

வினுவின் அணைப்பில் அவன் நட்பின் பிரிவு துயரை உணர்ந்த ஆதர்ஷ்… அவனின் கரங்களுக்குள்ளே திரும்பியவாறு அணைத்துக்கொண்டான்.

“இவன் வெளிநாடு போயிட்டு வந்ததிலிருந்து ஒரு மார்க்கமாகத்தான் இருக்கான். யாரும் இல்லனா, ஒன்னு கிஸ் அடிக்கிறான், இல்லை இப்படி கட்டி பிடிக்கிறான்.” புலம்பியது வேறு யாருமில்லை நம் கிஷோர் தான்.

தனிமைக்காக மூவரும் கடற்கரைக்கு வந்திருந்தனர்.

அவர்கள் இருவரின் நீண்ட அணைப்பில் என்ன உணர்ந்தானோ… “போங்கடா நான் போறேன், நீங்க ரெண்டு பேரும் மட்டும் கட்டிபிடிச்சிட்டு நில்லுங்க” என செல்லக்கோபம்  கொண்டு அங்கிருந்து நகர்ந்த கிஷோரை ஆதர்ஷ் மற்றும் வினு இழுத்து தங்களது அணைப்பிற்குள் இணைத்துக் கொண்டனர்.

“லவ் யூ டா மச்சான்ஸ்ஸ்.”

“இவனை பாருடா ஆது, இன்னமும் நமக்கே லவ் யூ சொல்லிட்டு இருக்கான்.”

“எப்படிடா, நீ சிஸ்டர் கிட்ட சொல்ற மாதிரி நானும் ஏதாவது பொண்ணுகிட்ட சொல்லணுமா?”

வினு கிஷோரை கலாய்க்க, கிஷோர் வினுவின் காதலை ஆதர்ஷிடம் போட்டுக் கொடுத்திருந்தான்.

“மச்சான்” என்றவாறு வினுவை ஏறிட்ட ஆதர்ஷ், “சொல்லவேயில்லை” என்க, வினு முறைத்த முறைப்பில் ஆதர்ஷ் அடக்கி வாசித்தான்.

“சாரி! இத்தனை வருஷம் உங்களிடம் பேசாதிருந்தது தப்புதான்.”

ஆதர்ஷின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக, “விடுடா மச்சான் பிரிஞ்சிருந்தாதான்டா உறவு ஆழமாகும்” என்ற கிஷோர் வினு முறைத்த முறைப்பில் அமைதியாகினான்.

“மச்சி… வினு சொல்ற மாதிரி சீக்கிரம் நீ லவ் பண்ணிடுடா!”

ஆதர்ஷ் கூறிய வார்த்தைகளில் வினு அட்டகாசமாக சிரிக்க, புரியாது விழித்த கிஷோர், “ஏன்டா சிரிக்கிற?” என அப்பாவியாக வினவினான்.

“பின்ன என்னடா பொண்ணுங்க கிட்ட காதல்ல சொல்ற டயலாக் எல்லாம் எங்ககிட்ட சொல்ற…” என்று ஆதர்ஷ் விளக்கிய பின்பே அவனுக்கு புரிந்தது.

அசடு வழிந்தவன், “நமக்குள்ளும் காதலிருக்கு மச்சி” எனக்கூறி சமாளிக்க, கிஷோரை மற்ற இருவரும் மொத்தி எடுத்தனர்.

கலகலப்பாக இருக்கும் நேரத்தில்… கடந்து சென்றதை பற்றி பேசி ஆதர்ஷின் வருத்தத்தை அதிகரிக்க வேண்டாமென்று எண்ணிய வினு அதைப்பற்றி அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை.

வினுவே கேட்காதபோது அவன் ஏன் எங்களையெல்லாம் விட்டு இவ்வளவு தூரம் சென்றானென்று கிஷோரும் கேட்டுக்கொள்ளவில்லை.

நீண்ட நாள் தொலைத்திருந்த நட்பில் மூழ்கியவர்கள்… நேரம் செல்வதை உணராது பேசியும் சிரித்தும் மகிழ்ந்தனர்.

வினுவின் அலைபேசி தொல்லையாய் சிணுங்கவே, நேரத்தை கவனித்தவன்…

“ஓகே பாய் டா, கிஷோரை ட்ராப் பண்ணிடு ஆது” என்றவனாய் அவசரமாக அவர்களிடமிருந்து விடைபெற்றான்.

அவனின் அவசரம் சந்தேகத்தை ஏற்படுத்த ஆது அர்த்தத்துடன் கிஷோரை நோக்கினான்.

“சிஸ்டரா இருக்கும்டா! அதான் பய, இவ்வளவு அவசரமா ஓடுறான்.”

“ஹோ… பிரண்டோட லவ்வர் அப்டிங்கிறதால சிஸ்டர்ன்னு மரியாதையா சொல்றீயா?” ஆதர்ஷ் என்னவோ கேலியாகத் தான் கேட்டான். ஆனால், அது நம் கிஷோர்க்கே கோபத்தை வர வைத்தது.

“போடா நீ வேற…. அவன் ஏழு வருஷமா லவ் பண்ணுறான் டா!”

கிஷோர் கூறியதில் ஆதர்ஷ் அதிர்ந்தே விட்டான்.

“என்னடா சொல்ற?”

“ஹம்ம்ம்… அவன் ஏழு வருஷமா காதலிக்கிறான்னு சொல்றேன். எனக்கே மூணு வருஷத்துக்கு முன்னாடிதான் தெரிந்தது. அவன் போன் அடிச்சிட்டே இருக்குன்னு எடுத்து பார்த்தால், பெட்டர்ஹாப் அப்படின்னு வந்த நெம்பரை சேவ் பண்ணி வச்சிருக்கான். விடாம கேட்கவும் ரெண்டு நாளுக்கு அப்புறம் ஆமாம் லவ் பண்றேன்னு ஒத்துக்கிட்டான். இன்னும் எனக்கு அவங்க பெயர் கூட தெரியாது. அதான் சிஸ்டர் சிஸ்டர் சொல்லி சமாளிச்சிட்டு இருக்கேன். ஏன் மச்சான் அவன் காதலிக்கும் பொண்ணு பேர் கூட நான் தெரிஞ்சிக்கக்கூடாதா?”

கோபத்தோடு பட்டாசாய் வெடித்தவன்.. இறுதியில் வருத்தத்தோடு முடித்தான்.

“சரி விடுடா… நம்மகிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப்போறான். வா கிளம்புவோம்.”

ஆதர்ஷ் கிஷோருக்கு ஆறுதலாக பேசினாலும்… வினு ஏன் மறைக்கின்றான்? காரணம் என்னவாக இருக்கும்? அந்த பெண் யாராக இருக்கும்? அவனின் மனம் கேள்விகளை எழுப்பியது.

வினு காதலிக்கும் பெண் யார்?

ஸ்வேதா சரத்திடம் மறைக்கும் விஷயம் என்னவாக இருக்கும்???

நாதனின் திருமணத் திட்டம் இம்முறையாவது ஈடேறுமா?

error: Content is protected !!
Scroll to Top