அத்தியாயம் 9 :
“ஹலோ!”
“சொல்லும்மா!”
“என்ன பாஸ் உங்க பிரண்ட் வந்ததும் வருங்காலத்தை மறந்துட்டீங்க போல.”
வினுவின் காதலிக்கு சிறு உரிமை உணர்வு மேலெழுந்ததோ?
“ஹேய் அப்படியெல்லாம் இல்ல.”
“என் நினைவு மொத்தமும் கொள்ளைக் கொண்டவள் நீ!
என் உணர்வோடு உறைந்திட்ட
நினைவலைகளின் சுவடு நீ!”
“அடடா… கவுத, கவுத…. உனக்கு கவிதை எழுத வரும்ன்னு தெரியும். இந்தளவுக்கு எழுதுவன்னு இப்போ தான் தெரியுது.. பின்றியேடா மாமூ” என்றவள்,
“காதல் வந்துட்டா கற்பனையும் கவிதையும் தானா வந்துடும் போல” என்றாள்.
“என்ன நக்கலா? வந்தேன்னு வைய்யீ, அப்படியே.. என்ன கலாய்க்கிற அந்த வாய் இழுத்து வச்சு…”
“இழுத்து வச்சு…”
அவளின் வம்பான பேச்சுக்கு வினுவும் வம்பாகவே பதிலளித்தான். சென்சார் கருதி யாருக்கும் கேட்காத வகையில் அமைதி பேச்சாக கிசுகிசுத்துக் கொண்டனர்.
“சரி… இப்படி மொக்கை போடதான் போன் பண்ணியா?” வினு தான் கேட்ட கேள்விக்கு அவள் அளித்த பதிலில் அதிர்ந்தது ஒரு நொடி தான். சிறு யோசனைக்குப் பின்னர், தன் மனதில் தோன்றிய திட்டத்தை அவளிடம் சொல்ல, அவளும் எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக்கொள்ள, சில பல கொஞ்சல்களுடன் நீடித்த அவர்களின் இரவு பேச்சு சுவீட் நத்திங்காக தொடர்ந்தது.
படுக்கையில் விழுந்திருந்த ஆதர்ஷிற்கு நினைவுகள் முழுக்க மஹியிடமே, அவளின் குணமறிந்ததவனால் எப்படி அவளை தன்னிடம் கொண்டு வருவதென்று தெரியவில்லை. அதற்காக என்ன யோசித்தாலும் விடையென்னவோ பூஜ்ஜியமாகவே ஆதர்ஷ்க்கு தோன்றியது.
நடப்பது நடக்கட்டும்… அவளாக தன்னிடம் வந்து சேருவாள் என்கிற நம்பிக்கையும் ஆதர்ஷிற்கு சுத்தமாக கிடையாது.
நீண்ட பிரிவு… தன்னை பார்த்ததும் ஏக்கத்தில் ஓடிவந்து அணைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஒற்றை புன்னகைக்குக்கூட பஞ்சமாகி போனதில் மொத்தமாக அவனின் நம்பிக்கை வீழ்ந்தது.
‘அவளின் மனதில் உன் காதலை, லட்சியமல்லவா வேரூன்றி இருக்கிறது. அதில் உன் காதல் தோர்த்துப்போனதை அறிந்தால் என் செய்வாய் ஆதர்ஷ். நிச்சயம் உன்னால் மஹி இடத்தில் கோபம் கொள்ள முடியாதே, அப்படி கோபம் அவள் மீது உனக்கு வருமென்றால் ஐந்து வருடங்களுக்கு முந்தைய இரவிலேயே தீரா கோபம் அவள்மீது வந்திருக்குமே. நீ என்றுமே அவள் மீது கொண்ட காதலுக்கு அடிமை ஆதர்ஷ்.’ அந்தோ பரிதாபம் விதியின் குரல் ஆதர்ஷின் செவிகளைத் தீண்டவில்லையோ?
எவ்வளவு புரண்டும் மஞ்சத்தில் நித்திரை அவனை தழுவவில்லை. ஊரிலிருந்து தான் கொண்டுவந்திருந்த பெட்டி பிரிக்கப்படாமலிருக்க, அதனை திறந்து… அதிலிருந்த மிகச்சிறிய பெட்டி ஒன்றை எடுத்தவன் அதனை மெல்லத் திறந்தான். அதிலிருந்து சிறிய இதயம் எம்பி குதிக்க, மாமா என்ற மஹியின் அழைப்பு அவனின் காதுகளையும், அவ்வறையையும் நிறைத்தது.
மஹி நவீனை மட்டும் அத்தான் என்பதை விளித்து, ஆதர்ஷினை பெயர் சொல்லி அழைப்பதை நாதன் அவளின் பதினைந்தாவது வயதில் கண்டிக்க, அவளுக்கு அப்போது தான் மனதில் ஒன்று தோன்றியது. நவீனை அக்கா கணவர் என்ற முறையில் அத்தான் என்று அழைப்பதால் ஆதர்ஷினை மாமா என்று அழைக்க நினைத்தாள். எவ்வளவு முயன்றும் ஆதர்ஷின் முன்னால் அழைக்க அவளின் குரல்வளை ஒத்துழைக்கவில்லை. ஆதலால் இதயம் அடங்கிய சிறு ரெக்கார்டர் பெட்டி ஒன்றை வாங்கி அதில் தான் முதன் முதலாக மாமா என்றழைத்து, தன் குரலை பதிவு செய்து ஆதர்ஷிடம் கொடுத்திருந்தாள்.
ஆதர்ஷ் உள்ளுக்குள் அவளின் முதல் அழைப்பைக் கேட்டு வானில் பறந்தாலும், வெளியே மஹியை கலாய்த்தது தனி கதை.
அப்பெட்டியை இன்றுவரை பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றான். ஆதர்ஷ் அதனை தூக்கிப் போட்டிருப்பானென்றே மஹியும் இன்றளவில் நினைத்திருக்கின்றாள்.
ஆனால், அவனுக்கு அவளின் அந்த ஒற்றை அழைப்பு ஓசை தான், வேதனைகளில் உயிர்த்தெழ செய்யும் மருந்தென்று அவளுக்கெங்கேனும் தெரிந்திருந்தால் தானே!
அவனின் காதல் ஆழத்தை தெரிந்தும் துறந்தவள் அவனுடன் அவ்வளவு எளிதில் சேர்ந்துவிடுவாளா? பலவாறு உழன்றவனின் மனதை என்றும்போல் இன்றும் அவளின் இனிமையான குரலோசை சாந்தப்படுத்த மெல்ல நித்திராதேவியை தழுவினான்.
அடுத்தநாள் பள்ளியில் தனது மக்களை விடுவதற்காக வந்த நவீன்… யாரையோ எதிர்பார்த்து பார்க்கிங் ஏரியாவில் காத்திருந்தான்.
அப்பா கிளம்புங்க….. தனது மகள் நித்திலாவின் குரலில், வாயிற்பக்கம் பதித்திருந்த பார்வையை அவள் மீது திருப்பினான்.
“என்னோட பிரண்ட் ஒருத்தங்களை மீட் பண்ணனும்மா, நீ கிளாசுக்கு போ.”
“பிரண்டா இல்லை என்னுடைய மேத்ஸ் மிஸ்ஸா?”, ஆதி.
“டேய் என்னடா சொல்ற?”
ஆதியின் சந்தேகமான கேள்வியில் நித்திலா அதிர்ச்சியாக,
நவீன்… “அச்சச்சோ இவன் என் குடும்ப வாழ்க்கையில் கும்மி அடிச்சிடுவான் போலிருக்கே!”
புலம்பியவன் தன் தலைக்கு மேல் கும்பிடுவதை போன்று கரத்தினை உயர்த்தி… “நான் சத்தியமா உன் கணக்கு டீச்சரை கணக்கு பண்ண வரலடா, வீட்டிலிருக்கும் ஒன்னையே சமாளிக்க முடியல. இதுல இது வேறையா” என்று அலுத்துக்கொண்டான்.
நவீனின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நித்திலா வாயை தன் கரம் பொத்தி சிரிக்க,
“என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கா?” என்றவன் உள்ளே நுழைந்த காரினைக் கண்டு வேகமாக தனது காரிலிருந்து கீழிறங்கினான்.
தன்னை பார்த்தவாறு காரிலிருந்து கீழிறங்கிய சரத்தை வரவேற்கும் விதமாக அணைத்து விடுவித்த நவீன்… ஆருத்ரனிடம் தன் கோட் பாக்கெட்டிலிருந்து பெரிய சாக்லெட் ஒன்றை எடுத்து நீட்டினான்.
தந்தையிடம் அனுமதி வேண்டி காத்திருந்த குருத்து, சரத்தின் சின்ன தலையசைப்பில் நவீனிடம் நன்றி தெரிவித்து வாங்கிக்கொண்டான்.
“சுவீட் பாய்.”
நவீன் ருத்ரனிடம் சிரித்தது, சுவீட் அளித்தது அவனை சுவீட் பாய் என்றதெல்லாம் மற்றோருவரின் காதில் புகையை வரவழைத்தது.
அது வேறு யாருமில்லை நித்திலா தான். ஆருத்ரனும் நித்திலாவும் ஒரே வகுப்பு. இருவருக்குமிடையே படிப்பிலிருந்து விளையாட்டு வரை நீயா நானா போட்டி தான்.
இடுப்பில் கை வைத்து ருத்ரனை முறைத்தவளை கண்டு சரத் சத்தமாக சிரித்தபடி, அவளின் உயரத்திற்கு மண்டியிட்டு, “மேடம் ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க?” எனக் கேட்டான்.
எவ்வளவு பெரிய தொழிலதிபன் சிறு பந்தா கூட இல்லாமல் தரையில் மண்டியிடுகிறானே என நவீன் வியந்தான். நிச்சயம் எதையும் பொருட்படுத்தாது தன்னால் இப்படி செய்ய முடியாதென்று அவனது மனமே அடித்துக் கூறியது. நவீனும் சரத்திற்கு இணையானவன் தான்… ஆனால், சரத் அளவிற்கு இயல்பாக அனைவருடனும் அவ்வளவு எளிதில் பழக்கம் கொள்ள மாட்டான்.
“ஹீ இஸ் மை எனிமி.”
“ஹோ…”
நித்திலா கூறியதில் வியந்த பாவனையைக் காட்டிய சரத், “அவனை ஏன் உன் எதிரின்னு சொல்ற?” என்றான்.
“லாஸ்ட் எக்ஸாமில் அவன் முதல் ரேங்க் எடுத்துட்டான். சோ , நான் செகண்ட். ஏன் பர்ஸ்ட் வரலன்னு அம்மா திட்டிடாங்க தெரியுமா?” என உதட்டை பிதுக்கி அவள் சொல்லிய அழகில் சரத் தான் யார் என்பதையே முற்றிலும் மறந்து அவளோடு ஒன்றிவிட்டான்.
இவர்களுடைய உரையாடலில் நவீனும் தான் யாருக்கு காத்திருந்தோம் என்பதை மறந்தான்.
“இவன் பர்ஸ்ட் ரேங்க் எடுத்ததால் தான் நான் செகண்ட் ஆகிட்டேன். அம்மாகிட்ட திட்டும் வாங்கிட்டேன். சோ அவன் என்னோட எனிமி தான்.”
“அப்படியா?”
“ஆமா.”
“அப்போ நெஸ்ட் எக்ஸாமில் ருத்ரனை அவங்க அம்மாகிட்ட திட்டு வாங்கி வச்சிடுவோம்.”
“எப்படி அங்கிள்?”
“நீ அவனை விட நிறைய மார்க் ஸ்கோர் பண்ணிடு… அவனை பர்ஸ்ட் மார்க் எடுக்க விடாதே சரியா?”
“சூப்பர் அங்கிள்.”
“அங்கிள் சொன்னதும் சரி சொல்லிட்டீங்களே… வெரி குட். அப்படியே அங்கிள் இன்னொன்னும் சொல்வேனாம், நீங்க கேட்டுப்பிங்களாம்.”
சரத்தின் சூழ்ச்சி தெரியாது நித்திலாவும் சரியெனத் தலையாட்டினாள்.
ஆதி இங்கு என்னடா நடக்கிறது எனும் விதமாக நின்றிருக்க, நவீன் ஒன்றை தெரிந்துகொள்ள எப்படி கேட்பதென்று யோசித்திருந்தான்.
ருத்ரனை அருகிலழைத்த சரத்… நித்திலாவை பார்த்து,
“இனி இவன் உனக்கு பிரண்ட். உங்களுக்குள்ள போட்டி இருக்கணுமே தவிர… எனிமி அப்படிங்கிற பகை இருக்கக்கூடாது ஓகே வா?” என்றான்.
அவளுக்கு என்ன புரிந்ததோ… ருத்ரன் உன்னுடைய பிரண்ட் என்றது மட்டும் புரிய, மூக்கை சுருக்கி “ஓகே அங்கிள். நீங்க சொல்றதால ருத்ரனை என் நண்பனா அக்ஸப்ட் பண்ணிக்கிறேன்” எனக் கூறியவள் ருத்ரனின் கரம் பற்றி குலுக்க.. இருவரும் ஒன்றாக வகுப்பிற்கு சென்றனர்.
“இந்த வயதில் அறிய வேண்டியது நட்புடன் கரம் கோர்க்கும் பழக்கம் மட்டும் தான், எதிரி என்கிறதற்கான அர்த்தமல்ல…” நித்திலாவிடம் தன் உரையாடலுக்கான காரணத்தை சொல்லியபடி சரத் திரும்ப,
நவீன் ஏதோ யோசனையில் இருந்தான்.
“என்ன சார், பலமான யோசனை?” என்ற சரத்திடம், அவன் தயங்கி இழுக்க…
“அங்கிள், லாயர் சித்தி வரலையா?” என ஆதி கேட்டிருந்தான்.
தான் கேட்க நினைத்த கேள்வியை தன் மகன் கேட்டதும் நவீனுக்கு அப்பாடா என்றிருந்தது.
“லாயர் ஓகே… அதென்ன சித்தி?”
ஆதி ஏதோ கூற வர, அவனைத் தடுத்த நவீன், “கிளாஸுக்கு டைம் ஆச்சு நீ கிளம்பு” என விரட்டினான்.
ஆதி சென்றதும், “ஒருநாள் என் மனைவியை மஹி அக்கான்னு கூப்பிட்டாள். அதை வைத்து தான் சித்தின்னு சொல்றான்” என எதையோ கூறி சமாளித்தான். ஆனால், அதை சரத் நம்பினானா என்று தான் தெரியவில்லை.
ஆதியின் சித்தி கூட பரவாயில்லை… நவீனின் மஹி என்ற பெயர் சுருக்கமும், ஒருமை பேச்சும் தான் சரத்திற்கு ஏதோ ஒன்றிருக்கிறதென காட்டிக்கொடுத்தது. அதற்கு காரணம், நவீனும் ஸ்வேதாவும் நண்பர்கள். இருப்பினும் ஸ்வேதாவையே நவீன் பன்மையில் தான் விளிக்கின்றான்.
‘எங்கயோ இடிக்குதே… சீக்கிரம் கண்டுபிடிக்கணும்.’ மனதில் நினைத்துக்கொண்டான்.
நவீன் சரத்தின் முகத்தையே பார்த்திருக்க, “இன்னைக்கு கோர்ட்டில் முக்கியமான கேஸ் அதான் மஹி வரல” என்று ஆதி கேட்ட கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளும் எதிர்பார்ப்பு நவீனிடத்தில் கண்ட சரத் அதற்கான விடையளித்திருந்தான்.
“ஓகே பை நவீன்.” விடைபெற்ற சரத்திடம்,
“பெரிய ஆளுங்ககிட்டலாம் மோத வேணான்னு நீங்களாவது மஹியிடம் சொல்லலாமே” என்று நவீன் கூறியதில் சரத் என்ன கண்டுபிடித்தானோ, நவீனிடம் அர்த்தப்பார்வை ஒன்றை வீச,
“நேற்று நியூஸில் பார்த்தேன். அவன் சி.எம்’ன் மச்சான். நமெக்கெதுக்கு வம்பு” என எதையோ கூறி நவீன் சமாளித்து விடைபெற நினைக்க…
“என் தங்கையை பாதுகாக்க அவளுக்கு பாதுகாப்பா நானிருக்கேன்,” என அழுத்தமாகக் கூறிய சரத், “இருப்பினும் பார்த்து இருக்க சொல்றேன்” எனக் கூறிச்சென்றான்.
சரத்தின் வார்த்தைகளில் நவீனின் இதயம் குற்றவுணர்வில் தவித்தது.
“சரத் அளவுக்கு கூட என் வீட்டு பிள்ளைக்கு ஆதரவா நானிருக்கவில்லையே” என வருந்தினான்.
இரவு உணவு நேரத்தில் மஹியை கண்ட சரத், “உனக்கு நாதன் கம்பெனிஸ் ஒன் ஆப் தி எம்.டி நவீனைத் தெரியுமா?” என்று நேரடியாகக் கேட்டிருந்தான்.
நவீனென்ற பெயரில், உணவு உண்டுகொண்டிருந்தவள் விலுக்கென நிமிர்ந்தாலும்.. எதற்காக திடீரெனக் கேட்கிறானென்று யோசித்தவள்,
“அண்ணியோட பிரண்ட்… சோ, ருத்ராவை ஸ்கூலில் விடப் போகும்போது பார்த்திருக்கேன்” என்றாள்.
“அவ்வளவுதானா?”
சரத்தின் கூர்மையானப் பார்வையில் தடுமாறினாலும் அவ்வளவுதானென்று அழுத்தமாகக் கூறியவள், எதுவுமில்லையெனும் விதமாக உணவில் கவனத்தை பதித்தாள்.
அனாதையாக நின்றவளை, உடன் பிறந்தவளாக நினைத்து பாதுகாக்கும் சரத்திடம் பெரும் மதிப்பு அவளிற்கு உண்டு. ஆனாலும், அவனிடம் தான் ஒரு பெரிய விஷியத்தை மறைக்கின்றோம் என்கிற தவிப்பு முதன் முதலாக இந்நொடி மஹிக்கு தோன்றியது. இருப்பினும் அதனை அவளால் சொல்ல முடியாது சொல்லவும் மாட்டாள்.
காரணமானவனே உலகறியச் செய்ய வேண்டுமென்ற எண்ணம் பெண்ணவளுக்கு. ஆணவன் தயார் நிலையிலிருப்பினும், பெண்ணவள் ஏற்கும் நிலையில் இல்லையே. கோமகனும் என்ன தான் செய்வான்?
உணவினை முடித்தவள் மொட்டை மாடிக்குச் சென்று தூரத்து இருள் வானை வெறித்தாள்.
தன் முதுகில் கரமொன்று படிய திரும்பியவள், சரத் என்பதை அறிந்து… முதன் முறையாக உரிமையுடன் அவனின் தோள் சாய்ந்து கண்ணீர் சிந்தினாள்.
ஆடை தாண்டிய விழி நீரின் ஈரத்தில், மஹியின் கையை ஆதரவாக அழுத்திப் பிடித்தவன்,
“நீ எதையும் என்கிட்ட சொல்லணுமில்லை, என்ன செய்தாலும் உனக்கு உறுதுணையா நானிருக்கேன்” என்று நம்பிக்கையை தன் வார்த்தைகளால் அளித்தான்.
சரத்தின் வார்த்தைகள் ஆதர்ஷின் நினைவினை அதிகரிக்க…
“என்மேல அதிக அக்கறை, பாசம் வைக்கிறவங்கலாம் சீக்கிரம் என்னைவிட்டு பிரிஞ்சிடுவாங்க அண்… சார்” என்றாள்.
அண்ணாவென்று அழைக்க வந்து சாரென்று மாற்றுவது மஹிக்கும் புதிதல்ல, கேட்கும் அவனுக்கும் புதிதல்ல. எவ்வளவு நெருக்கமான அன்பு இருவருக்குமிடையே இருந்தாலும் ஓரடி அவள் தள்ளி நிற்பதற்கு, மேலே அவள் கூறியதே காரணமாக இருக்குமென்று புரிந்துகொண்டவன் அவளின் கண்ணீரை நிறுத்தும் பொருட்டு பேசினான்.
“உன் லட்சியம் எதை நோக்கி, எதுக்காக பெரிய ஆளுன்னு தெரிந்தும் துணிந்து மோதுற எனக்குத் தெரியாது. ஆனால், நீ இப்படி கண்ணீர் சிந்தி பலவீனமானா உன் எண்ணம் ஈடேறாமல் போயிடும்.”
சரத்தின் வார்த்தைகளில் மஹியின் கண்ணீர் பட்டென்று நின்றது. சற்று இளகிய மனம் மரத்து இரும்பாகியது. மனதில் தீவிரம் குடி கொண்டது. ஆதர்ஷின் வரவும் அவனின் குறையாத காதலுமே தன்னை இளகச் செய்கிறது என்பதை கண்டுகொண்டவள், ஆதர்ஷினை பார்ப்பதை தவிர்க்க முடிவு செய்தாள்.
கீற்று போல் புன்னகைத்து,
“***.மஹிரா *** **** ********’யாகிய நான் இனி எந்தவொரு சூழ்நிலையிலும் சாதாரண பெண்ணைப்போல் தடுமாற மாட்டேன்” என்று சரத்திற்கு உறுதியளித்தாள்.
வாழ்த்தும் விதமாக மஹியின் கரம் பற்றியவன், “உன் வாழ்வோட முக்கிய நிகழ்வு நடந்திருச்சு தெரியும். ஆனால் காரணமானவர் தான் யாருன்னு தெரியல” என்றான்.
சிறு சிரிப்போடு பேசியவனை ஆழ்ந்துப் பார்த்தவள், “உங்களுக்கு கண்டுபிடிப்பது கடினமானதில்லையே” என்றாள்.
“நீயே சொல்லணும் காத்திருக்கேன்.”
சரத்தின் பதிலில் மெச்சுதலாய் அவனை நோக்கியவள், “சீக்கிரமே சொல்றேன். இப்போ தூங்கப் போகலாம். குட் நைட் சார்” என்று விடைபெற்றாள்.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஆதர்ஷின் மொபைல் சத்தம் எழுப்பியது. முதல் ரிங்கிலேயே அட்டெண்ட் செய்தவனை ஆச்சரியமாக எண்ணிய மறுமுனை நபர்.. தான் கால் செய்ததற்கான காரணத்தை கூறுவிட்டு ஜாக்கிரதை என்ற எச்சரிக்கையுடன் இணைப்பைத் துண்டித்தது.
ஆழ்ந்த உறக்கத்திலிருப்பவன் முதல் ஒலியிலேயே மொபைலினை ஏற்றது, எந்நேரமும் அவனின் மனமும் மூளையும் விழித்துக் கொண்டிருப்பதால் தான். காரணம் ஆதர்ஷின் வேலை அப்படிப்பட்டது. (என்ன வேலையாக இருக்கும் யோசிச்சிட்டே இருங்க, பட் இப்போ சொல்ல மாட்டேன்.)
இணைப்புத் துண்டிக்கப்பட்டதும் வீட்டை விட்டு தன் பைக்கிலேறி அதி விரைவில் வெளியேறிவன் சாலையில் சீறிப்பாய்ந்தான்.
இருபது நிமிட பயணத்திற்கு பிறகு ஆதர்ஷின் இருசக்கர வாகனம், நகரத்தின் மையத்தில் மிகப்பெரிய கட்டிடத்தின் முன் நின்றது. அதன் நுழைவு வாயிலில் ச.மு.க.. சமூக முன்னேற்ற கழகமென்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்தது. அது ஆளுங்கட்சியின் தலைமை அலுவலகக் கட்டிடம்.
ஒருமுறை சாலையோரம் இருமங்கிலும் சுற்றிப் பார்த்தவன், தனது வண்டியினையும் அங்கு ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டரையும் மறைவாக கட்டிடத்தின் பின்புறம் நிறுத்தினான்.
சுவற்றுடன் ஏதேனும் மின்சார ஒலி அழைப்புகள் பொறுத்தப் பட்டிருக்கின்றதாவென கூர்ந்து கவனித்தவன், அப்படி எதுவுமில்லையென அறிந்ததும் ஒரே தாவலில் மதில் சுவற்றிற்கு உட்புறமாக குதித்திருந்தான்.
கட்டிடத்தின் வலதுபுற சன்னல் வழியாக உள்ளே இறங்கியவன், அலுவலக அறை எதுவென நோட்டமிட… ஓர் அறையிலிருந்து மங்கிய டார்ச் லைட்டின் வெளிச்சம் கண்ணாடி கதவுகளில் பிரதிபலித்தது.
நிச்சயம் அது மஹியாகத் தானிருக்குமென்று யூகித்தவன், அவ்வறைக்குள் சத்தமின்றி நுழைந்தான்.
மஹி அங்கிருக்கும் மேசை அடுக்குகள், அலமாறிகளென்று அனைத்திலிருக்கும் கோப்புகளையும் தீவிரமாக அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.
அங்கிருந்த ஒற்றை இருக்கையில் கால் மேல் காலிட்டவாறு அமர்ந்தவன், பாக்கெட்டிலிருந்த பெரிய சினிக்கர்ஸை நிதானமாக பிரித்து ரசித்து மென்றான்.
ஆதர்ஷ் உள் நுழைந்ததும் பத்து நிமிடங்களுக்கு மேல் எதையோ தேடிக்கொண்டிருந்தவள்… மெல்ல நிமிர, “தேடினது கிடைச்சுதா?” எனக் கேட்டான்.
“கிடைக்கல.” தன்னையும் அறியாமல் பதில் கூறியவள், அதிர்ச்சியுடன் யாரென்று பார்க்க… சாக்லேட்டினை சுவைத்தபடி அமர்ந்திருந்த ஆதர்ஷை கண்டு, “நீ எப்படி இங்க?” எனக் கேட்க வந்தவள், அவனை பாராது அவ்வறையிலிருந்து வெளியேறினாள்.
“ஆவூன்னா வர கோபத்துக்கு ஒன்னும் குறைச்சலில்லை.” செல்லமாக அலுத்துக்கொண்டவன் அவள் பின்னூடு இனிப்பை மென்றவாறு சென்றான்.
ஓரிடத்தில் நின்றவள், வந்ததற்கு பலனாக ஒன்றும் கிடைக்கவில்லையே என்கிற விரக்தியில்… வியர்த்து வழிந்து நனைந்திருந்த டி சர்ட்டின் கழுத்து பகுதியை கைகளால் இழுத்து காற்றை ஊதினாள்.
“இந்த நேரத்தில் கூட கழுத்தை இறுக்குமளவுக்கு டிரஸ் பண்ணா இப்படித்தான் ஸ்வெட் ஆகும்” என்ற பேச்சிலும், தன் கன்னத்தைத் தீண்டிய வருடல் காற்றிலும் ஆதர்ஷினை முறைத்துப் பார்த்தாள்.
“எதுக்கு இப்போ பேய் மாதிரி பார்த்து பயமுறுத்துற?”
“உனக்கு வியர்த்ததுன்னு ஊதினேன்” என்றான்.
தன்னிடம் வம்பு வளர்க்கவே இப்படி பேசுகின்றானென்று கண்டு கொண்டவள் அமைதியாக, இங்கு ஒன்றும் கிடைக்க போவதில்லையென வந்த வழியே வெளியேற நினைக்கையில் அவள் கையிலிருந்த விளக்கினை பிடுங்கி அணைத்தவன் மஹியையும் இழுத்துக்கொண்டு, படிகளுக்கும் அதனை ஒட்டியவாறு வைக்கப்பட்டிருந்த அலங்கார மேசைக்கும் இடையில் சென்று ஒளிந்து கொண்டான்.
“ஹேய்… என்ன பண்ற? இப்போ எதுக்கு இடுக்கில் மாட்டிய எலி மாதிரி உட்கார வச்சிருக்க?” என்றவாறு எழப்போன மஹி, ஆதர்ஷ் இழுத்ததில் அவன் மடிமீதே விழுந்தாள்.
சரியாக அந்நேரம் இரண்டு தடியர்கள் கதவை திறந்து உள் நுழைந்த சத்தத்தில் மஹி அமைதியாகினாள்.
“சத்தம் போடாத!” என்ற ஆதர்ஷின் இதழ் அவளின் கன்னம் தீண்டியது. சிறிது அசைந்தாலும் மேசை ஆடுமென்று அறிந்தவள் அவனின் சுகமான அவஸ்த்தையை இன்பமாக அனுபவித்தவாறு அமர்ந்திருந்தாள்.
மொத்தமாக தனக்குள் அடங்கியிருக்கும் தன்னவளை அவ்வேளையிலும் ஆதர்ஷின் காதல் மனம் ரசித்தது.
ஆதர்ஷின் முகம் உரசிய அவளின் கூந்தல் வாசத்தை நுரையீரல் முழுக்க சேமித்தான்.
தன் கழுத்து பகுதியில் வீசிய சூடான மூச்சுக்காற்றில் கிறங்கிய மஹி தன்னை முற்றிலும் மறந்தவளாய் தன்னவனை மேலும் ஒண்டினாள்.
“ராட்சசிக்கு காதல் மூட் வர நேரத்தை பாரு, தள்ளியிருந்தே கொல்லுவா. இப்போ இவ்வளவு நெருக்கத்தில் அவளா ஒண்டியும் எதுவும் செய்ய முடியல” என தனது நிலையை மனதிற்குள்ளே சபித்தான்.
“யாரது?”
தீடிரென நாரசாமாய் ஒலித்த தடியர்களின் சத்தத்தில்… ஆதர்ஷின் நெருக்கத்தில் உருகிய மனமும், உடலும் விறைக்க பதறி விலகினாள்.
மஹியின் விலகளில்… தூண் போன்று நின்றிருந்த உருளை மேசையின் மீதிருந்த பூந்தொட்டி கீழே விழுந்தது.
விளக்கு வெளிச்சத்தில் உள்ளே யாரோ இருக்கின்றனரென்று… காவலுக்கு இருந்த தடியர்கள் உள்ளே வந்து பார்த்தனர்.
சில நிமிடங்கள் தேடியவர்கள் யாருமில்லையென வெளியே செல்லத் திரும்பிய நேரம், பூந்தொட்டி கீழே விழ… கேட்ட சத்தத்தில் படிகளை நெருங்க, முகத்தினை தான் வைத்திருந்த கைகுட்டைக்கொண்டு மூடியவாறு மறைவிலிருந்து வெளியில் வந்தான் ஆதர்ஷ்.
மஹி வெளியில் வர முயற்சி செய்ய… கண் காட்டி தடுத்தவன், இமைக்கும் நேரத்தில் இரண்டு தடியர்களையும் அடித்து வீழ்த்தியிருந்தான்.
தரையில் இரண்டு மாமிச மலைகளும் வீழ்ந்து மயங்கி கிடக்க… மஹியை அழைத்துக்கொண்டு விரைந்து வெளியேறினான்.
“இந்த நேரத்தில் இந்த மாதிரி இடத்துக்குலாம் நீ வரது இதுவே கடைசியா இருக்கட்டும். கொஞ்சம் கூட அறிவில்லை, ஆனால் ஊருக்குள்ள பெரிய லாயரு. ஏன்டி, சண்டிராணி நான் வராம போயிருந்தா அவனுங்கக்கிட்ட மாட்டியிருப்ப. இந்நேரம் உன்னை கட்டிவச்சு உதைச்சிருப்பானுங்க.”
ஆதர்ஷ் எச்சரித்த போது அமைதியாகக் கேட்டுக் கொண்டவள்… அவன் இறுதியாக கூறியதில் சிலிர்த்தாள்.
“என்னை காப்பாத்திக்க எனக்குத் தெரியும்.”
மஹி அவ்வாறு சொல்லியதும்,
அவளின் இரு கன்னத்தையும் தன் ஒற்றை கரத்தால் அழுத்தி பிடித்தவன்… தன் கண்கள் சிவக்க.. பற்களுக்கிடையே வார்த்தைகளை துப்பினான்.
“உன்னை காப்பாத்திக்க உனக்குத் தெரியும்ன்னா, நான் எதுக்குடி இருக்கேன். ஐந்து வருஷத்துக்கு முன்னாடியும் இதேதான் சொன்ன. இப்பவும் இதே தான் சொல்ற.
என்னை உயிரோட கொல்லுற உன் வார்த்தைகளில் இதுவும் ஒன்று” என கனத்த மனதோடு கூறியவன்,
“எப்பவும் உனக்காக நான் ஒருத்தன் இருக்கேங்கிற நினைவே உனக்கு வராதுல” என்றான்.
ஆதர்ஷின் குரலில் வலி, ஏக்கம், துக்கம், சோகம், வேதனை அனைத்தும் ஒருங்கே காணப்பட்டது.
அதனை அவளும் உணர்ந்தாளோ… ஏதோ கூற முயல்கையில் கை நீட்டி தடுத்தவன்,
“ரொம்ப நேரம் இங்க நிற்பது ஆபத்தானது. வீட்டுக்கு கிளம்பலாம்” என்க அவளின் தலை தானாக சரியென ஆடியது.
இபோதாவது என் பேச்சை கேட்டாயே என்றவாறு தன் வண்டியினை உயிர்பிக்கும் வேளையில் தான் தெருவிளக்கின் ஒளியில் ஆதர்ஷ் ஒன்றை கவனித்தான்.
அவளின் கால் முட்டியில் ரத்தம் கசிந்து காய்ந்திருந்தது.
அவனின் பார்வை நிலைத்த இடத்தை கவனித்தவள், “அது உள்ள நுழையும் போது எதுலன்னு தெரியல… இடிச்சிக்கிட்டேன்” என்றாள்.
சாதரணமாகக் கூறியவள் தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய, வண்டியிலிருந்து வெடுக்கென சாவியை பறித்தான்.
“விஹூ…”
அவளின் கத்தலை அசட்டை செய்தவன்… சாலையில் மண்டியிட்டு, அவளின் கால்சட்டையை உயர்த்தி முட்டியை ஆராய்ந்தான். காயம் ஆழப் பதிந்திருந்தது. எத்தனையோ ரத்த காயங்களையும், விபத்துக்களையும் நேரில் பார்த்திருந்தவனால் தன்னவளின் சிறு காயத்தை ஏறிட முடியவில்லை.
தன் டி சர்ட்டின் நுனி பிடித்து அவளின் காயத்தை சுத்தம் செய்தவன்… எங்கு அவளுக்கு எரிகிறதோவென மெல்ல ஊதினான். தன் விரல் கொண்டு வருடியவாறு… “வலிக்கலையா மஹி?” என்றான்.
“உன் கண்ணுல எனக்கான கண்ணீரை பார்க்கும்போதுதான் வலியே தெரியுது விஹூ.”
அவளின் வார்த்தைகளின் நிமிர்ந்து முகம் நோக்கியவனின் கண்கள் கண்ணீரில் மூழ்கியிருந்தது.
தன்னவளின் முகத்தில் கண்ட வலியில், எழுந்து நின்றவன் சாவியை கொடுத்து கிளம்பச் சொன்னான்.
வண்டியை உயிர்பித்தவள், “ரொம்ப பிடிச்சிருக்கு விஹூ….இந்த சின்ன காயத்துக்கே எனக்காக நீ அழுதது” என்று நெகிழ்வுடன் கூறினாள்.
“அன்னைக்கும் நான் உனக்காகத் தான் அழுதேன் மஹிரா!” ஏதோ நினைவில் கண்களை மூடி அழுத்தமாகக் கூறினான்.
சற்று நேரத்திற்கு முன் மஹி என்றிருந்த அவனின் அழைப்பு மஹிரா ஆனதில் அவளின் மனம் சுருங்கியது. (இந்த புள்ளைக்கு பெயரை சுருக்கினால் பிடிக்காது தானே🤔🤔)
அன்று அவன் சொல்லியதெல்லாம் இன்று பிடித்தமாக மாறியிருக்க… மன்னவன் எதையும் மறக்கவில்லையென மங்கையவள் புரிந்து கொண்டாள்.
வீடு வரை அவளுக்கு துணையாகச் சென்றவன்… வீட்டின் உள்ளே மஹி நுழைந்த பிறகே தன் வீட்டை நோக்கி தனக்கு விடிந்ததும் காத்திருக்கும் செய்தி அறியாமல் பயணித்தான்.