ருத்ரனின் பனித்தீ 💖அத்தியாயம் 7

அத்தியாயம் 7

அன்றைய பொழுது முழுவதும் ருத்ரனை பல விதத்தில் கோபப்படுத்திய பனிவிழி உணவு இடைவேளையிலும் அவன் எதுவும் பேசாது அமைதியாக இருந்ததை எண்ணிக் கொண்டே அதன் பிறகு வால் தனத்தை சுருட்டிக் கொண்டு அமைதியாகவே இருந்தாள்.

 மறுநாள் காலை எப்பொழுதும் போல் பனி கனி மற்றும் ருத்ரவர்மன் அனைவரும் கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

 நேற்றைய பொழுதே ருத்ரன் தன்னை பயங்கரமாக திட்டுவான்…! என்று எண்ணிய பனி அவன் இறுதி வரையிலும் தன்னை பார்த்தும் கூட, எதுவும் பேசாது, கண்டும் காணாமல் அமைதியாக சென்றது ஏனோ அவளின் மனதிற்குள் நெருடலாக இருந்தது.

 அதன் பால் இன்றைய தினம் தன் அக்காவை அவளின் வகுப்பிற்குள் அனுப்பி வைத்துவிட்டு க்ரௌண்ட்டில் நேற்றைய தினம் அவள் அமர்திருந்த அதே கல்பெஞ்சில் சென்று அமர்ந்தாள்.

 ருத்ரன் வருவான், தன்னை பார்ப்பான், எப்படியும் ஏதேனும் கூறி திட்டுவான் என்று எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள். 

அப்பொழுது அவள் இருக்கும் இடத்திற்கு நேராக வந்த ருத்ரன் அவள் அங்கு அமர்ந்திருப்பதை பார்த்தும் கூட ஒன்றும் கூறாமல் தனது கேபினுக்குச் சென்று விட்டான். 

 அவன் எதுவும் கூறாது அமைதியாக சென்றது ஏனோ இவளுக்கு ஒரு மாதிரியாகவும் மனதிற்குள் அதனை குறித்து சில கேள்விகளையும் உண்டாக்கியது.

அதன் பிறகு யோசனையோடு வகுப்பறைக்கு சென்று விட்டாள்.

 வகுப்பிற்கு வந்த ருத்ரன் எப்பொழுதும் போல் வருகை பதிவேட்டில் மாணவர்களின் வருகையை பதிவு செய்தவன் புத்தகத்தை திறந்து அன்றைய பொழுதிற்கான பாடத்தை நடத்த ஆரம்பித்திருந்தான்.

 அப்பொழுதும் பனியின் புறம் தன் பார்வையை திருப்பாமல் மிக கவனமாக பாடத்தை நடத்திக் கொண்டிருந்த ருத்ரனையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதும், பின் அவன் பார்வை சிறிதும் தன் புறம் திரும்பாமல் இருப்பதையும் பார்த்து சோர்ந்த முகத்தோடு இருப்பதும், பின் சுமித்ராவின் கையை சுரண்டி ஏதேனும் பேசுவதுமாக இருந்தாள்.

“ஸ்டூடண்ட்ஸ் மண்டே ரெக்கார்ட் நோட் சப்மிட் பண்ணனும்… சோ எல்லாரும் இதுவரைக்கும் முடிச்ச யூனிட் எல்லாம் கம்ப்ளீட் பண்ணிட்டு வந்துருங்க.. நாளைக்கு வந்து என்கிட்ட எக்ஸ்க்யூஸ் கேட்க கூடாது…!” 

எப்பொழுதும் அவனுடன் இருக்கும் அந்த இறுக்கமான முகத்தோடு கட்டளையான குரலில் கூறியவன் தன்னுடைய நோட்பேடை எடுத்துக் கொண்டு வெளியேறி இருந்தான். 

ஒன்றிரு நாள்தான் என்றாயினும் கூட, தான் விளையாட்டாக ஏதேனும் காரியங்கள் செய்து அவனிடம் மாட்டிக் கொள்வதும், அவன் தன்னை சரமாரி திட்டுவதுமாக இருந்ததால், லோகநாதனிடம் அவனை மாட்டி விட முயன்றதை தெரிந்ததும், அவன் தன்னை இந்த விஷயத்தை வைத்து பெரிதாக பங்கம் செய்ய காத்திருப்பான் என்று எண்ணி சிறு அச்சத்தோடு இருந்தவள். அதனைக் குறித்து தன்னிடம் ஒரு வார்த்தையும் பேசாததற்கான காரணம் என்ன….? என்று அறிய எண்ணினாள். 

 உணவு இடைவேளையின் பொழுது சுமித்ரா தனது இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். 

 அப்பொழுது அவளின் அருகில் அமர்ந்து தன் அன்னை குடுத்தனுப்பிய உணவினை பார்த்து முகம் சுளித்து, ஸ்பூனை கொண்டு அந்த டிபன் பாக்ஸில் இருந்த உணவினை உண்ணாது கரண்டியின் முகப்பு பக்கத்தால் அதில் டொக்…! டொக்..! என்று குத்திக்கொண்டு ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தாள். 

 அவளின் திறந்து வைக்கப்பட்டிருந்த டிபன் பாக்ஸையும், அதனை சாப்பிடாமல் கன்னத்தில் கைதாங்கி விழிகளை வேறெங்கோ வைத்துக் கொண்டு யோசனையோடு இருக்கும் அவளின் முகத்தையும் கவனித்த சுமித்ராவோ,

“எத்தனை…?” ஒரு கரண்டி உணவை எடுத்து வாயில் வைத்து அவளின் முகத்தை பார்த்து கேட்டாள்.

“என்ன எத்தனை..?” அவளின் கேள்வியில் ஒன்றும் புரியாமல் முகத்தை சுருக்கி அவளிடம் கேட்டாள் பனி.

“இல்ல… நீ கோடிக்கணக்குல வாங்கி கடல்ல விட்ட கப்பல் எதுவும் கவுந்து போச்சோ… அதனால தான் இப்பிடி சாப்பாடை கூட சாப்பிடாம கன்னத்துல கை வச்சுட்டு யோசனையில உட்கார்ந்திருக்கியோன்னு தோணுச்சு… அதான் எத்தனைன்னு கேட்டேன்…!” வாயில் இருந்த உணவினை சாப்பிட்டுக்கொண்டே அவளை பார்த்து கேட்டாள் சுமித்ரா.

 அவர் அவ்வாறு கேட்டதும் அவளை முறைத்துவிட்டு கன்னத்தில் இருந்த கையை விளக்கி தனது டிபன் பாக்ஸை மூடி வைத்தவள், “சுமி வா கேண்டீன் போலாம்…” அவளின் கை பற்றி இழுத்தவாரு கூறினாள்.

 “கேண்டீனுக்கா எதுக்குடி..?”

 “எனக்கு இந்த சாப்பாடு பிடிக்கல… நேத்து கேண்டீன்ல சாப்ட்ட சாப்பாடு தான் சூப்பரா இருந்துச்சு.. அதான் வா அங்க போய் சாப்பிடலாம்…”

“ஏய் சும்மா இருடி… கேண்டீன்ல சாப்பாடு நல்லா இருக்கும்னு நினைச்சு தான் அங்க போய் சாப்பிட்டு, நேத்து எங்க அம்மா குடுத்து விட்ட சாப்பாட்டை சாப்பிடாம ரிட்டர்ன் வீட்டுக்கே கொண்டுட்டு போயிட்டேன்…. அதை குப்பையில கொட்டிட்டு விளக்க போடும்போது எங்க அம்மா பார்த்து, என்ன கண்ட மாதிரி திட்டிவிட்டுருச்சு… இன்னைக்கும் அப்படி பண்ணேன்னு வையி நான் அவ்வளவுதான்… டிபன்னும் கட்டு ஆத்தரம் அவசரத்துக்கு கேண்டீன் போய் சாப்பிடுறதுக்கு குடுக்குற பாக்கெட் மணியும் கட்டு… போறதுன்னா நீ மட்டும் போயிட்டு வா…”

“சரி நீ இதையே கொட்டிக்கிட்டு இரு… நான் போய் கேண்டீன்ல சாப்டு வரேன்…” என்று கூறியவள் தனது வகுப்பறையிலிருந்து கிளம்பி கேண்டீனுக்கு வந்து சேர்ந்திருந்தாள்.

 பனிக்கு உணவு பிடிக்காமல் ஒன்றும் அவள் கேண்டீனுக்கு வரவில்லை, இந்த சமயம் கேண்டீனில் ருத்ரன் இருப்பான்… அங்கு சென்று அவன் முன்பு அங்குமிங்குமாக நடந்து திரிந்தால், அதனைப் பார்த்து கூட, தன்னை திட்டுவதற்காக தன்னிடம் வாய் திறந்து பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணியவளாக அங்கு வந்து சேர்ந்திருந்தாள்.

 ஆனால் பனி கேன்டீன் வருவதற்கும் ருத்ரன் சாப்பிட்டு முடித்துவிட்டு அங்கிருந்து செல்வதற்கும் சரியாக இருந்தது.

 ஆனால் இருவரும் எதிரெதிரே தான் கடந்து சென்றனர். அப்பொழுதும் கூட ருத்ரனின் பார்வை மேலோட்டமாக பனியை தழுவியதே தவிர, அவளை அர்த்தமான பார்வை பார்க்கவில்லை அவன். 

‘என்ன ஆச்சு இந்த சிடு மூஞ்சி வாத்திக்கு நம்ம பண்ண தப்புக்கு ஹெவியா பனிஷ்மெண்ட் குடுப்பாருன்னு நானும் ஆவலா எதிர்பார்க்குறேன்… ஆனா ஏன் இப்படி நடந்துக்குறாரு…?’

தன் நாடியில் ஒற்றை விரலை தட்டி யோசித்தாள். அவளின் அந்த யோசனையை கேட்டு தொபக்கடீரென்று குதித்து வெளிவந்த அவளின் மனசாட்சியோ, 

“ஏய் அறிவு கெட்டவளே இப்போ உனக்கு என்னதான்டி பிரச்சனை…? அந்தாளு தான் அன்னைக்கு எவ்வளவு பெரிய பனிஷ்மெண்ட் குடுத்து உன் இடுப்பை உடைச்சாருல்ல, அதுக்கப்பறமும் உனக்கு பனிஷ்மெண்ட் கேக்குதோ…?”

“இல்ல…. இருந்தாலும் நேத்து நான் அந்த சொட்டை மண்டையன் வைஸ் பிரின்ஸ்பால் கிட்ட இவரை மாட்டிவிடும் போது கூட, இந்த சிடு மூஞ்சி என்னை எந்த ஒரு வார்த்தையும் சொல்லலையே…! அதுக்கப்பறம் கூட எதுவுமே பேசாம இருக்கே… எனக்கு அதுதான் உறுத்தலா இருக்கு…”  

 

“ஊர் உலகத்துல உள்ள எல்லாரும் தன்னை யாருமே திட்டலைன்னா சந்தோஷப்படுவாங்க… திட்டுனா தான் அதை நினைச்சு வருத்தப்படுவாங்க… ஆனா நீ ஒருத்தி தான் ரொம்ப வித்தியாசமா உன்னை ஒருத்தர் திட்டலைன்னு நினைச்சு கவலைப்பட்டு உக்காந்துருக்க…! என்னதான் பிறவியோ நீயெல்லாம்…!” என்று சலித்துக் கொண்டே சென்றிருந்தது. 

 கேண்டீனுக்கு சென்றவள் அதன் உள்ளே கூட நுழையாது மீண்டும் தனது வகுப்பறைக்கே வந்து அங்கே மூடி வைத்து சென்ற தன்னுடைய டிபன் பாக்ஸை திறந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

அவள் உண்பதை பார்த்த சுமியோ,

“நீ தான் கேண்டீனுக்கு போனியே அங்க சாப்பிடல…?”

 “இல்ல எனக்கு கேண்டீன் சாப்பாடு பிடிக்கல…”

“என்னது கேண்டீன் சாப்பாடு பிடிக்கலையா…! நீ தானடி அந்த சாப்பாடு தான் நல்லா இருக்கும்னு சொல்லிட்டு போன…?” 

“ஆமா போனேன்… ஆனா இப்போ புடிக்கல வந்துட்டேன்… இப்ப என்ன அதுக்கு…?”

ருத்ரனின் மீதான யோசனையில் இருந்ததால் சற்றே எரிச்சலாக வெளிவந்தது பனியின் வார்த்தைகள்.

அவள் மாறி மாறி பேசுவதை கேட்டு, “என்னமோ பண்ணித் தொலை போ…!” என்றவள் தன்னுடைய வேலையில் கவனமானாள் அதுதாங்க சாப்பிடற வேலை.

 மாலை வேலையில் கல்லூரி முடிந்து அனைத்து மாணவர்களும் தாம் தம் வீடுகளுக்கு கிளம்பியிருந்த வேலையில், கனியுடன் சேர்ந்து ருத்ரனின் நினைவில் நடந்து கொண்டிருந்த பனி தன் அக்காவை ஓரிடத்தில் இருக்க கூறிவிட்டு ருத்ரனின் கேபின் நோக்கி ஓடினாள். 

ருத்ரனின் எதிரில் அமர்ந்திருந்த ரித்விக்கோ, “நீ என்ன வேணாலும் சொல்லு, ஆனா நாளைக்கு நீ வீட்டுக்கு வர்றதா நான் சுஜா கிட்ட சொல்லிட்டேன்… இப்போ வந்துட்டு நான் வர முடியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்…? ஒழுங்கு மரியாதையா நாளைக்கு காலையில கிளம்பி வீடு வந்து சேர்ற… இல்லன்னு வையேன் நீயாச்சு உன் தங்கச்சியாச்சு…”

ஞாயிற்றுக் கிழமை வருவேன் என்று கூறியிருந்தவன் இப்பொழுது வர மாட்டேன் என்றும் கூறியதும் கோபத்தில் அவனிடம் அதட்டலாக கட்டளையிட்டுக் கொண்டிருந்தான் ரித்விக்.

 “டேய் ரித்து புரிஞ்சுக்கோடா… என் மைண்ட் சரியில்ல… நான் டோட்டலி அப்செட்… இந்த நேரத்துல நான் அங்க வந்து என்னோட இந்த நிலைமையால உங்க யாரையும் கஷ்டப்படுத்த நான் விரும்பலடா…” 

 “ஏய் என்னடா பேசிட்டு இருக்க நீ…? நாளைக்கு நீ வீட்டுக்கு வர்ற… ஃபுல் டேய் வர்ஷி கூட விளையாடுற… உன்னோட இந்த ஸ்ட்ரெஸ் எல்லாத்தையும் போக்கிக்கிற… அவ்வளவுதான் சொல்லிட்டேன்…” கட்டளையாக கூறியவன் தனது இருக்கையில் இருந்து எழுந்து அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

 தன் நண்பனின் இந்த அன்பு கட்டளையை கேட்டு, ‘தான் கூறவதை அவன் காது குடுத்து கேட்க மாட்டாங்குறானே…!’ என்கின்ற யோசனையோடே ஒரு நீண்ட பெருமூச்சினை இழுத்து வெளியிட்டவன் எழுதிக் கொண்டிருந்த குறிப்பேட்டை மூடி தனது பேக்கில் அடுக்கிக் கொண்டிருந்தான் ருத்ரன். 

 நண்பர்களின் இந்த உரையாடலை கேபின் வெளியில் இருந்து ஒட்டுக் கேட்ட பனியோ, 

‘அப்படி மன அழுத்தம் ஆகுற அளவுக்கு இந்த சிடு மூஞ்சிக்கு என்ன கவலையாம்…? இன்னும் சொல்லப்போனா இந்த சிடு மூஞ்சியால இந்த காலேஜ்ல இருக்கிறவங்க எல்லாம் தான் அழுத்தத்துல திரியிறோம்… 

காலேஜ்க்கு லீவ் போட முடியல… கிரௌண்ட்ல ஜாலியா சுத்த கூட முடியல… அப்பிடி இருக்க இவருக்கு என்ன அழுத்தம் வந்துருச்சாம்…?’ யோசனையோடு நின்றிருந்தவள் நண்பர்கள் இருவரும் கேபினில் இருந்து வெளியில் வருவதை பார்த்து தன் அக்கா இருக்கும் இடத்தை நோக்கி ஓடி இருந்தாள்.

 வீட்டிற்குள் நுழைந்த பனிவிழி எப்பொழுதும் விட இன்று மிகவும் அமைதியாகவும் யோசனை கலந்த முகத்தோடும் இருப்பதை கவனித்த கனியோ,

“என்னடி நானும் ஈவ்னிங்ல இருந்து பார்க்குறேன், உன் மூஞ்சியே சரியில்லயே…. எதைப் பத்தி யோசிச்சுட்டு இருக்க…? என்ன ஆச்சு…? வழக்கம் போல ருத்ரன் சார் கிட்ட மாட்டி அதிகமான டோசேஜ் வாங்கிட்டியா…? அதனால ஹெவியா பனிஷ்மெண்ட் குடுத்துட்டாரா…?”

 அமைதியான முகத்தோடு சோஃபாவில் அமர்ந்து, வெறுமனே டிவியில் கண்கள் பதித்தவாறு அமர்ந்திருந்த பனியின் அருகில் வந்து அமர்ந்தவாரே கேட்டாள் கனி.

 “அட அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா….!” என்று சலித்துக் கொண்டே கூறியவள் எழுந்து செல்ல போக, அவளின் கரம் பிடித்து இழுத்து அருகில் அமர்த்திய கனிமொழியோ, “என்ன நடந்தது..?” என்று கேட்டாள்.

 ஒரு அக்காவாக தன் தங்கையின் குணம் அறிந்தவள் அவளின் இந்த அமைதியை ஏற்க முடியாமல் அவ்வாறு கேட்டிருந்தாள். 

 அதற்கு நேற்றும் இன்றும் நடந்த நிகழ்வை எடுத்துக் கூறியவள், இன்று தான் எதிர்பார்த்த விஷயம் நடக்காமல் போனதையும் குறித்து கூறினாள் பனி.

 அதனைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்ட கனியோ “என்னடி பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்க…?”

“இல்லக்கா இருந்தாலும் ஒரே ஒரு வார்த்தை என்னை திட்டியிருக்கலாம்ல…”

அதனை கேட்டு தலையில் அடித்துக் கொண்டவள் “என்னமோ பண்ணி தொலை போ…” என்று கூறிவிட்டு எழுந்து சென்றிருந்தாள். 

‘சிடு மூஞ்சி இவ்வளவு அமைதியா இருக்குறதுக்கு என்ன காரணமா இருக்கும்… ? அதான் ரித்விக் சார் தான் கூப்பிடுறாருள்ள… என் வீட்டுக்கு வாடான்னு… அங்க கூட போக மாட்டேன்னு சொல்லுது … அவ்வளவு இறுக்கமா… 

என்னை கூட ஒரு வார்த்தை சொல்லி திட்டவே இல்லையே… ஒரே ஒரு வார்த்தை நம்ம செஞ்ச காரியத்துக்கு நம்மளை திட்டி இருந்தா… நான் இப்போ இந்த சிடுமூஞ்சியை பத்தியெல்லாம் யோசிச்சிருக்க மாட்டேனே… சிடுமூஞ்சி முகமே சரியில்ல… என்ன காரணமா இருக்கும்..? அவர் வீட்ல உள்ளவங்க இதெல்லாம் கவனிக்க மாட்டாங்களா…! 

ஐயோ நாளைக்கு வேற சண்டேவாச்சே…! சிடுமூஞ்சி வீடு வேற தெரியாதே… அவர் இருக்குற இடத்தை எப்பிடி தெரிஞ்சுகிறது… அப்படியே தெரிஞ்சுக்கிட்டு அங்க போனாலும் அவர் நம்மளை என்ன நினைப்பாரு…?’ என்று ஆழ்ந்த யோசனையில் இறங்கி இருந்தாள் பனிவிழி.

(பனித்தீ தொடரும்💝💝💝)

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top