வெள்ளைப்பூவே நீ எந்தன் காதலடி 10

அத்தியாயம் 10 :

சிவாவின் மஞ்சள் நீராட்டு விழாவை விசேஷமாக செய்ய, அழகேசனும் பத்மாவும் விரும்ப அதற்கு பெரும் எதிர்ப்பு பாண்டியம்மாளிடமிருந்து கிளம்பியது.

அதனால் தங்களுக்குள்ளே ஐயர் வைத்து புண்ணியாதானம் செய்து சம்பிரதாயத்திற்கு பத்மா மட்டும் புட்டு மாவு சுற்றி சிவாவை வீட்டிற்குள் அழைத்து வந்தனர்.

நீண்ட பதினோரு ஜென்மங்களுக்கு பிறகு தன்னவளை காண்கிறான் நானிலன். ஆம் அவனை பொறுத்தவரை ஒரு நாள் ஒரு ஜென்மமாய் கழிந்தது சிவாவை காணாமல்.

“அவளை பாராமல் இருந்தால் தான் தன்னால் படிக்க முடியும்” என்று நினைத்தவன், “அவளின் குரலையாவது கேட்டால் தான் மனதை ஒருநிலை படுத்த முடியும்” என்ற நிலைக்கு வந்திருந்தான்.

அதற்காக இந்த 11 நாளாய் அவன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவின.

குட்டி போட்ட பூனையாய் நானி வீட்டின் பின் பக்கத்தையே சுற்றி வருவதைக் கண்ட அரசிக்கு சிரிப்புத்தான் வந்தது.

“அச்சோ அத்தை இப்போ அவளை பார்க்க விடுவீங்களா மாட்டீங்களா?” என்று நானி நேரடியாகக் கேட்டும் அரசி பத்மாவிற்கு பயந்து முடியாதென மறுத்துவிட்டார். அதன் பிறகு நானி அமைதியாகிவிட இன்று தான் அவளின் தரிசனம் கிடைத்தது.

முதல் முறையாக சிவாவை தாவணியில் காண்கிறான். குழந்தை முகம் மாறி குமரியாய் காட்சியளித்தவளின் கண்களிலிருந்து அவனது பார்வை வேறெங்கும் நகரவில்லை. இந்த கணமே அவளிடம் தன் காதலை தெரிவித்து அவளுடன் காதல் வீதியில் உலா போக நானியின் மனம் துடித்தது. ஆனால், அதற்கான நேரம் இதுவல்ல என உணர்ந்து முயன்று தன் காதல் தவிப்பை உள்ளுக்குள் அடக்கினான்.

தன்னை துளைத்தெடுக்கும் குறுகுறு பார்வையை உணர்ந்தவள் மெல்ல நிமிர்ந்து பார்க்க, சிவாவிற்கு நேரெதிரே சிறிதும் பயமின்றி நின்றிருந்த நானியின் விழுங்கும் பார்வையில் அவளின் இதயம் வேகமாக துடிக்க அவளின் நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது.

இருவரின் கண்களும் ஒன்றுக்குடன் ஒன்று மோதி நிற்க, பட்டென்று ஒற்றை கண்ணடித்தான். அதில் அரண்டவள் வேகமாக தலையை தாழ்த்திக்கொண்டாள்.

நானியின் காதல் விளையாட்டினை கண்டும் காணாததை போல் மற்றவர்கள் ஒதுங்கிவிட.. நானி தனது தங்கையிடம் நன்றாக மாட்டிக்கொண்டான்.

“என்னண்ணா நடக்குது இங்க”,
தன் முதுகுக்கு பின்னால் ஒலித்த தங்கையின் குரலில் திரும்பியவன், “ம்ம் காதல் காட்சி நடக்குது” சட்டென்று மொழிந்தான்.

அதில் நந்தினி வாய்பிளந்து, “அவள் ஸ்கூல் தான்டா அண்ணா படிக்கிறாள்” என்க, கூலாக “சோ வாட்?” எனக் கேட்டிருந்தான்.

“இரு உன்னை அப்பாவிடம் மாட்டிவிடுறேன்” என்று மிரட்டியவளை நக்கலுடன் பார்த்தவன் “எல்லாம் அவருக்கு தெரிஞ்சு தான் பண்றோம் உன் வாய் மூடிட்டு கிளம்பு” என கெத்தாக கூறி,
“நீ காலேஜ் போகும் போது என் பொண்டாட்டியை பத்திரமா ஸ்கூல்ல இறக்கி விடு” என்றான்.

“அதுக்குள்ள பொண்டாட்டியா?!” அதிர்ச்சியான நந்து, “எனக்கே ஆர்டர் போடுறீயா, அவ மொக்கு பாப்பா இல்லை அவளுக்கு தனியா போய்க்க தெரியும், இவங்க லவ் பண்றதுக்கு நாங்க பாடிகார்டு வேலை பக்கணுமாம்” முகவாயில் இடித்துக்கொண்டவள் அவனிடமிருந்து ஓடிவிட்டாள்.

தங்கையின் செயலில் சிரித்தவன் சிவாவை மீண்டும் சைட் அடிக்கத் தொடங்கிவிட்டான்.

ஒரு வாரம் கடந்த நிலையில் தான் நானிக்கு ஒன்று நினைவு வந்தது. அது சிவா சில நாட்களாகவே தன்னிடம் சரியாக பேசுவதில்லையென, இன்று எப்படியும் அதற்கான காரணத்தை கேட்டுவிட வேண்டுமென்று காத்திருந்தான்.

சிவா தனியாக தோட்டத்துப்பக்கம் செல்வதை கண்டவன், இதுதான் சமயமென அவளை பின்தொடர்ந்தான். மல்லிகை செடிகளுக்கு நடுவில் அவள் சென்றதும், இவ்விடம் மறைவாக யாருக்கும் தெரியதெனக் கருதியவன் “சிவா” என்று அழைத்தான்.

திடீரெனக் கேட்ட அழைப்பில், தூக்கிவாறி போட.. கையில் வைத்திருந்த பூ நிறைந்த கிண்ணம் தரையில் விழுந்து சிதற திரும்பியவளின் மருண்ட விழிகளில் மீண்டும் மீண்டும் தெரிந்தே தொலைந்தான்.

எங்கே தன் மனதிற்குள்ளிருக்கும் காதல் அவளிற்கு தெரிந்துவிடுமோவென்று அவசரமாக தனது பார்வை உடல்மொழி அனைத்தையும் மாற்றியவன்.. “ஏன் என்னிடம் சரிவர நீ பேசுவதில்லை” நேரடியாகக் கேட்டிருந்தான்.

நானி இப்படி நேராக கேட்பான் என்று எதிர்பார்த்திடாதவள் என்ன கூறுவதென்று தெரியாமல் தயங்கி நிற்க, நானிக்கு பின்னால் கண்கள் சிவக்க வந்து நின்றார் பாண்டியம்மாள். அவர் விட்ட சூடான மூச்சிக்காற்றினில் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டாள் சிவரஞ்சனி.

சிவா எதற்கு ஒடுகிறாளென்று தெரியாதவன் அவளின் பார்வை தனக்கு பின்னால் சென்றதை வைத்து திரும்பியவன் தனது அப்பாத்தாவைக் கண்டு சாதாரணமாக என்ன என்றான்.

“ஏன் ராசா உனக்கு அந்த சிரிக்கி மேல எதுவும் ஆசையெல்லாம் இல்லையே! அப்படிலாம் ஆசை வளத்துக்காத ராசா, இவளுங்கள்லாம் இப்படி தான் வயசுக்கு வந்ததும் எவன மயக்கலாம்ன்னு திரிவாளுவ, அவ வலையில் விழுந்துடாத ராசா” என்றார்.

சிவா பெரிய மனுஷி ஆனதிலிருந்து பாண்டியம்மாளும் தனது பேரனின் நடவடிக்கையை கவனித்துக் கொண்டுதானே இருக்கின்றார். எங்கே தனது பேரன் சிவாவை திருமணம் செய்துகொள்ள வேண்டுமெனக் கூறிவிடுவானோ என்று, பாண்டியம்மாள் பேசக்கூடாதவற்றையெல்லாம் நானியிடம் பேசினார்.

அவர் மேலும் ஏதோ கூற வர,

“அப்பத்தா கொஞ்சம் உன் வயதிற்கு தகுந்த மாதிரி… இந்த ஊரே மதிக்கிற பெரிய மனுஷிங்ற கௌரவத்திற்கு ஏற்றமாதிரி பேசு”, காட்டமாக மொழிந்த நானி, “எனக்கு உன் பேச்சின் மூலமே சிவாவின் மீது ஈடுபாடு வரவைத்துவிடுவாய் போலிருக்கிறது” என்றவனாக அவரை முறைத்துவிட்டு சென்றான்.

எங்கே , தான் அப்படியொரு எண்ணம் இருக்கிறதென்று கூறிவிட்டால், அவர் சிவாவை திட்டிவிடுவாரென்று பயந்தே, சிவாவின் மீது எந்தவொரு எண்ணமும் இல்லை என்பதை போல் பேசிவிட்டு வந்தான். அதற்கு காரணம் சிவா பிறந்ததிலிருந்து பாண்டியம்மாள் அவளிடம் பேசும் வார்த்தைகள் யாவும் வசவு வார்த்தைகளே, அதற்கான காரணம் இதுநாள் வரை நானிக்கு தெரியாது.

இருப்பினும் சிவா பாண்டியம்மாளிடம் திட்டு வாங்கும்போது நானி அங்கிருந்தால் எப்படியாவது அவளை காப்பாற்றிவிடுவான்.

‘தேவையில்லாம நாம தான் பேசிபுட்டோமோ’ என நினைத்த பாண்டியம்மாள் இனி நானியின் முன்னால் சிவாவைப்பற்றி எதுவும் பேசக்கூடாதென்று நினைத்தார்.

இரவு மாடியிலுள்ள அவனது அறையில் நானி படித்துக்கொண்டிருந்தான்.

அந்நேரம் அவனிற்கு பத்மா பால் கொண்டு வர, “பால் அருந்தினால் உறக்கம் வந்துவிடும் டீ கொண்டு வாங்க” என திருப்பி அனுப்பிவிட்டான்.

மீண்டும் தன்னால் படியேறி செல்ல முடியாத பத்மா நந்துவை நானியிடம் தேநீர் கொடுத்துவிட்டு வருமாறு பணிக்க,

“நான் போனா அவன் என்னை எதாவது வம்புக்கு இழுப்பான்” என மறுத்துவிட, வேறு வழியின்றி சிவாவிடம் கோப்பையை அளித்து கொடுத்துவிட்டு வர சொன்னார்.

பாண்டியம்மாளை நினைத்து பயந்தாலும், தன் அத்தைக்காக எடுத்துச் சென்றாள். (எப்போ பாரு இந்த பத்மாவிற்கு இந்த புள்ள கையால் அவனுக்கு டீ கொடுத்து அனுப்பறதே வேலையா இருக்கும் போல😂)

அறை திறந்து இருந்த போதிலும் கதவினை தட்டிவிட்டு நானியின் அனுமதிக்காக அறை வாயிலிலேயே சிவா காத்திருந்தாள்.

அம்மாவாக இருந்திருந்தால் அனுமதி கேட்காமல் வந்திருப்பாரென எண்ணிய நானி மெல்ல எட்டி திரைசீலைக்கிடையே பார்க்க கண்களில் தயக்கத்துடன் கைகளிலுள்ள தம்ளர் நடுங்க பதுமை போல் நின்றிருந்த தன்னவளை கண்டதும் மனம் குத்தாட்டம் போட அவளை ரசித்தவன் அமைதியாக படிப்பதை போல் பாவனை செய்தவாறு வாங்கம்மா என்றான்.

உள்ளே நுழைந்தவளை புத்தகத்தை பார்ப்பதைப்போன்று கீழ் கண்ணால் நோட்டமிட்டவன், “அங்கே மேசையில் வைத்துடுங்கம்மா” எனக் கூறினான்.

“நான் சிவா!”

அவளின் மென்குரல் செவி நுழைந்ததும் படாரென்று நிமிர்ந்தவன் அப்போது தான் அவளை பார்ப்பதைப்போல் பார்த்து,

“நீங்க என்கிட்டலாம் பேசுவீங்களா?” என்று கேட்டிருந்தான்.

இமைகள் படபடக்க “அது… அது.. வந்து… அத்..அத்தை… ட்..ட்…டீ…டீ கொடுத்தாங்க,” திக்கித்தினறினாள்.
அவளின் திணறல் மொழி கூட அவனை ரசிக்க வைத்தது.

“உன்னை யாராவது என்கிட்ட பேசக்கூடாது சொல்லிட்டாங்களா?”

“அய்யோ இல்லை,” பட்டென மொழிந்தாலும், குரலில் என்னவோ காற்று தான் வந்தது.

“சரி அப்போ நீயா தான் பேசாம இருக்கியா?”என்றவனின் கேள்விக்கு ஆமென்பதை போன்று மெல்ல தலை கவிழ்ந்தவள் டீ என்றவாறு தம்ளரை நானியின் முன் நீட்ட, “எனக்குத் தேவையில்லை” எனக் கூறியவன் வெளியே செல்லுமாறு வாயிலை நோக்கி கை காண்பித்தான்.

அவனின் அச்செயல் இதயத்தின் ஓரம் வலியை கிளப்ப, அதற்கான காரணம் தான் பெண்ணவளுக்கு விளங்கவில்லை.

செல்லும்போது திரும்பி பார்த்தவாறு சோர்ந்த முகத்துடன் சென்றவளை இழுத்து அணைக்க துடித்த கைகளை அடக்கியவன், அவள் இவ்வாறு தன்னுடன் ஒதுங்கி இருப்பது தான் தன் படிப்பிற்கு நல்லதென நினைத்தான். அவளின் வயதிற்கும் நல்லதென கருதினான்.

‘அவளாக ஒதுங்கியிருப்பது தான் வலியை கொடுக்கிறது. சோ, இனி நானாக விலகியிருக்கிறேன். இது மனதிற்கு ஆறுதலாக இருக்கும்’ என்று எண்ணி, இனி அவளிடமிருந்து தள்ளியிருக்க வேண்டுமென்று உறுதியெடுத்து அதன்படி நடக்கவும் செய்தான்.

சிவாவின் மீது கொள்ளை கொள்ளையாய் காதலிருந்த போதும் விலகியிருந்தான். எங்கும் எப்போதும் அவளுக்குத் தெரிந்து அவளை பார்ப்பதை கூட தவிர்த்தான்.

தான் விலகி சென்றபோது வலிக்காதது அவனது விலகளில் வலியை கொடுத்தது. ஏதோ மனதை அழுத்துவதை போன்று உணர்ந்தாள். சடங்கு முடிந்து சிவா வீட்டிற்குள் வந்த போது அவன் பார்த்த பார்வைக்காக சிவாவின் மனம் ஏங்கியது. நானி ஒரு வார்த்தை பேசிவிட மாட்டானா என்று தவியாய் தவித்தாள். சிவா இருக்கும் பக்கம் கூட நானி செல்வதில்லை.

அதன் பிறகு நானிக்கு பதிலாக சிவா அவனை தேடத் தொடங்கினாள். அவளின் தேடலுக்கான காரணம் காதலென்று அந்த வயதில் அவளுக்கு புரியவில்லை.

பாண்டியம்மாளுக்கு பயந்து நானியிடம் பேசுவதை தவிர்த்தவள், நானி பேசுவதை நிறுத்தியதும்… ‘பாண்டியம்மாள் என்ன திட்டினாலும் பரவாயில்லை நானியிடம் பேசி எப்போதும் போல்… நந்தினி உட்பட மூன்று பேரும் ஒன்றாக இருக்க வேண்டும்’ என்று நினைத்தாள்.

சிவா முடிவெடுத்த மறுநாள் காலை நானி சீக்கிரம் கல்லூரிக்கு சென்றதால் அவனிடம் சிவாவால் பேச முடியாமல் போனது.

அந்த வருத்தத்தில் உம்மென்று இருந்தவளை நந்து என்னவென்று கேட்க..

“நானி மாமா என்கிட்ட பேசுவதில்லை, பேசாமலிருப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு, எப்பவும் அவங்க நினைப்பாவே இருக்கு, எங்கயாவது அவங்களை பார்த்தால் நேரா பார்க்க முடியாம திருட்டுத்தனமா பார்க்கத் தோணுது” அனைத்து விதமான உணர்வுகளையும் நந்துவிடம் பகிர்ந்துகொண்டாள்.

இதற்கான பதில் என்னவென்று ஓரளவு வயதில் மூத்தவளான நந்துவிற்கு புரிய, “நீ அண்ணாவை லவ் பண்றீயா ரஞ்சி” கேட்டே விட்டாள் நந்தினி.

முதலில் அதிர்ந்தாலும், சிறிது யோசனைக்குப்பின்.. “இது தான் காதலா அப்படியெல்லாம் தெரியலண்ணி, ஆனால்..  மாமா என் கிட்ட முதல் மாதிரி சாதாரணமா பேசணும், என்னோட இருக்கணும் தோணுது..” நந்தினியிடம் தனக்கு தோன்றும் உணர்வுகளை மறைக்காது கூறினாள்.

சிவா உணர்ச்சிவசப்படும் மற்றும் அடுத்து என்ன செய்வதென்று புரியாது குழம்பும் தருணங்களில் மட்டுமே நெகிழ்வுடன் அண்ணியென அழைப்பாள்.

இப்போது அவளது அண்ணி என்ற விளிப்பு நந்தினிக்கு சிவாவின் மனதை எடுத்துக்காட்டியது. ஆனால், சிவா இருக்கும் நிலையில் தான் எதை கூறினாலும் நன்றாகயிருக்காதென்று எண்ணிய நந்து மாலை எப்படியாவது தன்னுடைய அண்ணனிடம் இதைப்பற்றி பேசவேண்டுமென நினைத்தாள்.

“வீணா மனசை போட்டு குழப்பிக்காதே ரஞ்சி, நீ பேசாமலிருப்பதால் அண்ணனும் ஒதுங்கியிருக்கலாம் அல்லவா, அண்ணா வேண்டுமென்றெல்லாம் உன்னை தவிர்க்காது.
இதையே நினைத்துக்கொண்டு இல்லாமல் பள்ளி செல்லும் வழியை பார். இன்று ஒருநாள் மட்டும் நான் உன்னை பள்ளியில் ட்ராப் செய்றேன்” வாவென அழைத்தாள்.

“இப்போ உங்களோடு வந்துட்டா, மாலை பேருந்தில் வருவதைப்போல் ஆகிவிடும்.. நான் மிதிவண்டியிலேயே செல்கிறேன்”, என சிவா நந்துவின் அழைப்பை மறுத்துவிட்டாள்.

நந்துவும் எதைப்பற்றியும் சிந்திக்காதே என நூறு முறைக்குமேல் கூறிவிட்டு கல்லூரிக்கு கிளம்பிவிட்டாள்.

ஒருவேளை நந்து சொல்லிய மாதிரி தான் பேசாததால் தான் நானியும் தன்னிடம் பேசவில்லையென மனதை சமாதானம் செய்து பள்ளிக்குச் சென்றாள். மாலையே தன் காதல் வார்த்தையை நானியிடம் சொல்லப்போகிறோம் என்பதை அறியாமல்.

குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு ஏதோ தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தார் பாண்டியம்மாள். யாருக்கான சதிதிட்டமோ தெரியவில்லை.

நானி சிவாவின் மீது அப்படியொரு எண்ணமெல்லாம் இல்லையெனக் கூறிய போது அமைதியான அவரின் மனம் மீண்டும் மீண்டும் அதனை நம்ப முடியாமல் தவித்தது.

“என் ஆசைக்கு பெரும் எமனா இந்த சிவா வந்து நிற்பாள் போலவே,” சிந்தித்தவரின் மனம் விரைவில் ஒரு திட்டத்தை வகுத்தது. இப்போது அதனை செயல்படுத்த நினைத்தால் தனது மகனே அதற்கு முட்டுக்கட்டை போடுவானென்று அறிந்தவர், சிவா பள்ளி படிப்பை முடிக்கவிருக்கும் ஒரு வருட காலத்திற்கு காத்திருக்கத் தொடங்கினார்.

பாண்டியம்மாளின் இத்திட்டமே, நானிக்கும் சிவாவிற்கும் திருமணம் நடக்க காரணமாக இருக்கப்போகிறதென்று தெரிந்திருந்தால் இந்த யோசனையை இந்நொடியே மறந்திருப்பாரோ!

மாலை பள்ளி முடிந்து மிதிவண்டியினை மெல்ல ஓட்டியவாறு சாலையின் இருமங்கிலுமிருக்கும் பச்சைபசேலென்றிருக்கும் வயல்வெளிகளை ரசித்தவாறு வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தவளை இடையிட்டது அவளின் பள்ளித்தோழன் ஒருவனின் அழைப்பு.

“வாடா… கணேஷ்” என்றவள், “உங்க வீட்டுக்கு அந்தப்பக்கம் போகணுமே.. நீ ஏன் இந்தப்பக்கம் வர” என்றுக் கேட்டாள்.

“நான், மேலத்தெரு வழியா ஒரு சந்து வருமில்ல அப்படியே குறுக்க புகுந்து எங்க வீட்டுக்கு போயிக்கிறேன்” எனக் கூறியவன் நடந்து பேசிக்கொண்டே செல்லலாமென்று சொல்ல, அதற்கு சரியென சிவாவும் தலையசைக்க.. இருவரும் மிதிவண்டியை தள்ளியவாறு நடக்கத் தொடங்கினர்.

சிவா பாடப்புத்தகத்திலிருக்கும் சிலவற்றைப் பற்றி பேசிக்கொண்டே வர, அதற்கு ம் கொட்டியபடி வந்தவன் திடீரென அவள் முன் நான்காக மடிக்கப்பட்ட காகிதத்தாளொன்றை நீட்டினான்.

வாங்கிப்பிரித்து படித்தவள், மீண்டும் அதேபோல் மடித்து அவன் முன் நீட்டி… “நான் என் மாமாவை காதலிக்கிறேன் கணேஷ், எனக்குள் என் மாமாவின் மீதிருக்கும் உணர்வுக்கு பெயர் தான் காதலென்று இந்த நொடி, பேப்பரில் நீ எழுதியிருந்த உன் வார்த்தைகள் எனக்கு தெளிவுபடுத்திடுச்சு… அதற்கு ரொம்ப ரொம்ப தான்க்ஸ்” என்றவள் உற்சாகமாக மிதிவண்டியிலேறி வேகமாக ஓட்டியபடி வெகு விரைவிலேயே வீடு வந்து சேர்ந்தாள்.

கணேஷ் தன் காதலை வெளிப்படுத்தும் விதமாக எழுதியிருந்த வார்த்தைகள் எல்லாம்.. நானியின் குரலாகவே சிவாவின் மனதில் பதிந்தது.

அந்நேரம் அவளுக்கு கணவனாக நானியின் முகம் மனக்கண்ணில் தோன்ற இன்பமாக அதிர்ந்தவள் நிச்சயம் இதுதான் காதலென்று தெரிந்துகொண்டாள். அந்தநொடி அவள் யாரைப்பற்றியும் சிந்திக்கவில்லை, பாண்டியம்மாளின் மீதான பயம் கூட பின்னுக்கு ஓடிவிட்டது. அவள் மனம் முழுக்க நிறைந்திருந்தது நானியின் மீதான காதல் தான். அன்று அவன் பார்த்த பார்வைக்கு அர்த்தம் இன்று புரிந்தது. அவனருகில் சென்றாலே இதயம் படப்படப்பதின் பொருள் இப்போது விளங்கிற்று. உற்சாகமாக மிதிவண்டியிலிருந்து கீழிறங்கியவள், அதனை சரியாக நிறுத்தாது.. பள்ளி பையினை கூட மிதிவண்டியிலேயே விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

எதிரே வந்த தன்னுடைய அத்தையை கூட கண்டுகொள்ளாது மாடியேறியவள், இரட்டை பின்னலுடன்.. பள்ளி சீருடையிலேயே நானியின் அறைக்குள் அதிரடியாக புகுந்தாள்.

அப்போது தான் கல்லூரியிலிருந்து வந்தவன் உடைமாற்றுவதற்காக மேல்ச்சட்டையை கலைந்து கொண்டிருந்தான். வேகமாகத் திறக்கப்பட்ட கதவின் ஓசையில் தனது செயலை அப்படியே நிறுத்தியவன் யாரெனத் திரும்பி பார்க்க அவனவள் சிவந்த முகத்துடன் அவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள்.

அவளின் கண்களில் வழிந்த காதலில் நானியின் மனம் உவகைக் கொண்டாலும், அவனின் மூளை விழித்துக்கொண்டது.

“குட்டச்சி ஏதோ சொல்லப்போறாள்.. நானி நீ தப்பிக்கிறது ரொம்ப கஷ்டம்.”

தனக்குத்தானே கூறிக்கொண்டவன் அவளையே வைத்த கண் வாங்காமல் அமைதியாக பார்த்திருந்தான்.

தன்னவனின் பார்வை வீச்சு தாங்காது, நானியின் முகத்திலிருந்து மெல்ல தனது பார்வையை கீழிறக்கியவள், முதல் இரண்டு பொத்தான்கள் கழண்டிருந்த நிலையில் அவனின் உறமேரிய நெஞ்சுப்பகுதி பரந்து விரிந்து காட்சியளித்துக் கொண்டிருந்ததில் மொத்தமாக வீழ்ந்தாள். அவனின் நெஞ்சம் தனக்கு மட்டுமே சொந்தமென்கிற எண்ணம் ஆழ வேரூன்றியது அவளின் மனதில், இப்போதே ஓடிச்சென்று அந்த பரந்த மார்பில் முகம் புதைக்க வேண்டுமென்ற பேராவல் கரை புரண்டது.

சிவாவின் பார்வை செல்லும் இடத்தை கவனித்தவன், சட்டென்று தனது பொத்தான்களை மாட்டிக்கொண்டான். அதில் அவளின் முகம் சுருங்க தாங்கமாட்டாதவனாய் என்னவென்று கேட்டிருந்தான்.

நானி என்ன எனக் கேட்ட பிறகே தானெதற்கு வந்தோம் என்பதை நினைவு கூர்ந்தவள், மனதில் சொல்லத்துடிக்கும் வார்த்தைகள் வெளிவராது தனது கீழ் உதட்டினை பற்கள் பதிய அழுந்த கடித்து தயக்கத்துடன் அவனை ஏறிட்டாள்.

சிவாவின் பற்களுக்கிடையே சிக்கித் தவிக்கும் இதழுக்கு தன் விரல்கொண்டு விடுதலையளிக்க வேண்டுமெனத் தோன்றிய எண்ணத்தில் பதறியவன், ‘இன்னும் கொஞ்ச நேரம் தனியாக என் முன்னால் இந்த குட்டச்சி நின்றாளென்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலம்’ என்று கருதி.. “மாடிக்கு போ நான் வரர்றேன்” என அனுப்பி வைத்தான்.

அவள் மாடிக்கு சென்ற பின், தன் மனதை சமன்படுத்தி.. ரெபிரஷ் செய்து கொண்டு தானும் மொட்டைமாடிக்குச் சென்றான்.

நானி சென்ற சமயம், பூனைக்குட்டி ஒன்றுடன் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்க.. அவளின் குழந்தைத்தனமான செயலை ஆசையாய் பார்த்தவன்,

“ஒரு சின்ன பிள்ளையை போய் லவ் பண்றியோ!” எனக் கேட்ட மனதை அடக்கி… “இன்னும் ஒரு வருஷத்துல வளந்துடுவா அப்போ வந்து பேசு” என்று திருப்பி அனுப்பினான்.

அவள் ஓடிப்பிடித்து விளையாடும் அழகை பார்த்தவாறு நானி நின்றுவிட, பூனையை துரத்தியபடி ஓடிவந்தவள் அவன் மீதே மோதி நின்றாள்.

முதல் முறையாக நானியின் ஸ்பரிசம் உணர்ந்தவளின் முகம் அந்திவானமாய் சிவந்தது.

அந்த மாலை நேர சூரியனுக்கே போட்டியாய் காட்சியளித்த தன்னவளின் முகத்தை கைகளில் ஏந்திட துடித்தான். தன் மனகட்டுப்பாடு மறந்து அவளை நோக்கி முன்னேறியவன் பூனையின் சத்தத்தில் தன்னிலைக்குத் திரும்பினான்.

மனதிற்குள் தன்னையே நிந்தித்தவன், வெளியில் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு
“இப்போ சொல்லு என்ன பேச வேண்டும்” என்றான்.

அவள் தயங்கினாள்,

அவளின் தயக்கமும் அவனுக்கு ரசிப்பதற்குரியதாய் தான் இருந்தது.

மௌனத்திலேயே நிமிடங்கள் பல கழிய, “சரி நான் வர்றேன்”, என்று திரும்பி நடந்தவன் சிவா கூறிய,
“நான் உங்களை காதலிக்கிறேன் மாமா”.. என்ற வார்த்தைகளில் இனிய அதிர்வுடன் பட்டென்று நின்றான்.

“இப்போ நீ என்ன சொன்ன?”, மீண்டும் அவளின் வாய்மொழியாக கேட்டிட நினைத்தானோ.!

இம்முறை மிகுந்த அழுத்தத்துடன் “அம் இன் லவ் வித் யூ மாமா” என்றாள்.

அவளின் குரலில் தெரிந்த உறுதியான காதலில் கரைந்தவன், மனதிற்குள் சிறகில்லாமலே பறந்தான். அவளின் தற்போதைய பள்ளி மாணவித் தோற்றம் கண்ணில் பட நொடியில் சுதாரித்தான்.

மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அழுத்தமாக சிவாவை பார்த்தவன், “இப்போ உனக்கு என்ன வயசாகுது, அதற்குள் காதலென்ற பேச்செல்லாம் எங்கு கற்றுக்கொண்டாய்?” எனக் காட்டமாகக் கேட்டான்.

அவனின் கோபத்தில் பயந்தவள், “காதல் எப்போ எப்படி யார்மேல் வருமென்றெல்லாம் யாராலும் சொல்ல முடியாது.” மிகவும் மெல்லியக் குரலில் கூறினாள்.

அவளின் பதில் அவனுக்கு பிடித்துதான் இருந்தது.

‘குட்டச்சி இதிலெல்லாம் நல்ல தெளிவாத்தான் இருக்கிறாள்.’

மனதிற்குள் செல்லமாக வைதவன், “அதான் இப்போவே காதல்ன்னு வந்து நிற்கிற?” என்றான்.

அவனின் வார்த்தை காதலில் மூழ்கியிருந்தவளுக்கு கோபத்தை கிளப்ப, “நானொன்றும் யாரையோ ரோட்டுல போறவன காதலிக்கிறேன்னு சொல்லலை…
உரிமையிருக்கிற என் மாமாவை காதலிக்கிறேனென்று தான் சொல்றேன். நான் சொன்னதுக்கு உங்க பதில் மட்டும் சொல்லுங்க.”

எனக்கு உன் பதில் தான் தேவை எதற்கு இந்த வீண் பேச்சென்று சொல்லாமல் அவள் சொல்லியதில் நானி வாயடைத்தான். அதிலும் அவள் கூறிய உரிமையிருக்கிற என் மாமா என்ற வரி அவனுடைய காதலுக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்தான்.

“இன்னும் என்ன அமைதியா நின்னுட்டு இருக்கீங்க, நான் உங்களை லவ் பண்றேன் உங்களுக்கு சம்மதமா இல்லையா?” வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக வினவினாள்.

‘அடியேய் குட்டச்சி மனுஷனை லவ் பண்றே பண்றேன்னு சொல்லியே சாகடிக்குறீயே!’

‘உனக்கு இவ்வளவு பேசத் தெரியும்ன்னு இப்போதாண்டி தெரியுது. ஆமா நானும் உன்னை விட அதிகமா உன்னை லவ் பண்ணுகிறேன்’ என்று மனதில் கூறியவன், வெளியில் “லவ் செய்வதற்கான சரியான வயதோ பக்குவமோ உன்னிடத்தில் இல்லை. அதுவும் இது சரியான தருணமுமில்லை. நீ முதல்ல நன்றாக படித்து உன் பள்ளி படிப்பை முடி அப்புறம் என்னுடைய பதிலை சொல்றேன்” என்றான்.

அவனை வாடிய முகத்துடன் பார்த்தவள், “நிஜமா நான் ஸ்கூல் முடிச்சிட்டா என்னை லவ் பண்ணுவீங்களா?” என்று அப்பாவியாகக் கேட்டாள்.

அவளின் அத்தகைய குழந்தை உள்ளத்தை ரசித்தவன், “இனி நீ இந்த காதல் என்ற ஒன்றைப்பற்றி யோசிக்கவே கூடாது. உன் கவனம் முழுக்க படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும். என்னை பார்த்தால் கூட இன்று இப்போது நீ என்னிடத்தில் பேசிய எதுவும் உனக்கு ஞாபகம் வர கூடாது. நன்றாக படி, உன் பள்ளி படிப்பு முடிந்தும் உனக்கு இதேபோல் ஏதேனும் என்மீது எண்ணம் தோன்றினால் அப்போ வந்து சொல்லு, நான் என் பதிலை சொல்றேன்.”

பொறுமையாக மிகத் தெளிவாக எடுத்துக் கூறியவன் மனம் முழுக்க பரவிக்கிடந்த சந்தோஷத்துடன் கீழே சென்றான்.

அவன் பேசியவை புரிந்ததோ இல்லையோ… அவனின் பதிலுக்காக பள்ளி படிப்பு முடியும் வரை காத்திருக்க வேண்டுமென்பது மட்டும் தெளிவாகப்புரிந்தது.

அந்நொடி முதல் எப்போது தனது பள்ளி படிப்பு முடியுமென்று காத்திருக்கத் தொடங்கினாள்.

ஒரு வருட முடிவினை எதிர்பார்த்து பாண்டியம்மாள் மற்றும் சிவா காத்திருக்க, காலம் இவர்களுக்கு என்ன வைத்து காத்திருக்கின்றதோ?

error: Content is protected !!
Scroll to Top